I

            இந்துக்களில் பல்வேறு வகுப்பினரின் உணவுப் பழக்கவழக்கங்கள் அவர்களது சமயக் கோட்பாடுகளைப் போன்றே நிர்ணயமானவையாகவும் வெவ்வேறு வகைப் பிரிவுகளைக் கொண்டவையாகவும் இருந்து வந்திருக்கின்றன. இந்துக்களை அவர்களது சமயக் கோட்பாடுகளின் அடிப்படையில் வகைபிரிப்பது போலவே அவர்களது உணவுப் பழக்க வழக்கங்களின் அடிப்படையிலும் வகை பிரிக்கலாம். சமயக்கோட்பாடுகளின் அடிப்படையில் இந்துக்கள் சைவர்களாகவோ (சிவனை வழிபடுபவர்கள்), அல்லது வைஷ்ணவர்களாகவோ (விஷ்ணுவை வழிபடுபவர்கள்) இருக்கிறார்கள். இதே போன்று இந்துக்கள் மாம்சஹரிகளாகவோ (புலால் உண்பவர்கள்) அல்லது சாகஹரிகளாகவோ (காய்கறி உண்பவர்கள்) இருக்கின்றனர்.

ambedkar 620

     பொதுவாக இந்துக்களை மாம்சஹரி, சாகஹரி என இரு பிரிவுகளாகப் பிரிப்பது போதுமானதாக இருக்கக்கூடும். ஆனால் இப்பிரிவினையை முற்றமுழுமையானதாகவோ அல்லது இந்து சமுதாயத்தைச் சேர்ந்த எல்லா வகுப்பினர்களையும் கணக்கிலெடுத்துக் கொள்ளப்பட்டதாகவோ கூறமுடியாது. இந்த வகைப் பிரிவு முழுமையானதாக இருக்கவேண்டுமென்றால் மாம்சஹரி என அழைக்கப்படும் இந்து சமுதாயப் பிரிவினரை (i) மாமிசம் சாப்பிடுபவர்கள், ஆனால் மாட்டிறைச்சி சாப்பிடாதவர்கள் என்றும், (ii) பசு இறைச்சி உட்பட மாமிசம் சாப்பிடுபவர்கள் என்றும் இரு உப பிரிவுகளாகப் பிரிக்கவேண்டும்; வேறுவிதமாகச் சொன்னால் உணவுப் பழக்க வழக்கங்களின் அடிப்படையில் இந்து சமுதாயத்தைப் பின்கண்ட மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்: (i) காய்கறி உணவு உண்பவர்கள், (ii) மாமிசம் சாப்பிடுபவர்கள், ஆனால் மாட்டிறைச்சி சாப்பிடாதவர்கள் (iii) மாட்டிறைச்சி உட்பட மாமிசம் சாப்பிடுபவர்கள். இந்த வகைப்பிரிவை அனுசரித்து இந்து சமுதாயத்தில் மூன்று வகுப்பினர்கள் இருப்பதைப் பார்க்கிறோம். (i) பார்ப்பனர்கள் (ii) பார்ப்பனரல்லாதவர்கள்; (iii) தீண்டப்படாதவர்கள். இந்து சமுதாயத்தை சதுர்வருணம் என நான்கு வகைகளாகப் பிரிக்கும் கோட்பாட்டுக்கு இந்தப் பிரிவினை இசைந்ததாக இல்லை என்றாலும், நடப்பு நிலவரத்திற்கு இது முற்றிலும் உடன்பாடானதாக இருக்கிறது. ஏனென்றால் பார்ப்பனர்களில் (இந்தியாவின் பார்ப்பனர்களில் (1) பஞ்ச திராவிடர்கள் என்றும் (2) பஞ்ச கௌடாக்கள் என்றும் இரு பிரிவினர் உள்ளனர். முன்னர் குறிப்பிட்டவர்கள் காய்கறி உணவு உண்பவர்கள், பிந்தியவர்கள் அப்படியல்ல.) காய்கறி உணவு உண்ணும் ஒரு பிரிவினரையும், பார்ப்பனரல்லாதோரில் மாமிசம் சாப்பிடும் ஆனால் மாட்டிறைச்சி சாப்பிடாத ஒரு பிரிவினரையும், பசு இறைச்சி உட்பட மாமிசம் சாப்பிடும் தீண்டப்படாதோர் எனும் ஒரு பிரிவினரையும் காண்கிறோம்.

     எனவே, இந்த மூவகை பிரிவினைதான் அடிப்படையானதும் உண்மை நிலவரங்களுக்கும் ஒத்ததுமாகும். இவ்வகைப் பிரிவுகளைச் சிந்தித்துப் பார்க்கும் எவரும் பார்ப்பனரல்லாதோரின் நிலைகண்டு வியப்படையாமல் இருக்கமாட்டார்கள். சைவ உணவு என்பதை ஒருவர் புரிந்துகொள்ள முடியும். அசைவ உணவு என்பதையும் ஒருவர் புரிந்துகொள்ள முடியும். ஆனால் மாமிசம் சாப்பிடுபவர் மாட்டிறைச்சி சாப்பிடுவதை மட்டும் ஏன் ஆட்சேபிக்கிறார் என்பதைப் புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது. இந்த முரண்பாட்டுக்கு விளக்கம் தேவை. பார்ப்பனரல்லாதோர் மாட்டிறைச்சி சாப்பிடுவதை ஏன் கைவிட்டார்கள்? இதனைத் தெரிந்து கொள்வதற்கு இது சம்பந்தப்பட்ட விதிமுறைகளை ஆராய்வது அவசியம். இது குறித்து சட்டங்களை அசோகர் ஆட்சியின் சட்டமுறைமைகளிலோ அல்லது மனுதர்ம சாஸ்திரத்திலோதான் காணவேண்டும்.    

II

      முதலில் அசோகரை எடுத்துக்கொள்வோம். அசோகரது சாசனங்களில், இந்த விஷயம் குறித்த சாசனங்கள் வருமாறு: கற்பாறை கல்வெட்டு சாசனம் எண் I, தூபிகல்வெட்டு சாசனங்கள் எண் II மற்றும் V. கற்பாறை சாசனம் I கூறுவதாவது:

“புனிதமானவரும் கருணை உள்ளம் கொண்டவருமான மாட்சிமை தங்கிய மன்னரின் ஆணையின்படி இந்த மதிப்பு மிக்க சாசனம் எழுதப்பட்டிருக்கிறது. இங்கு (தலைநகரில்) எந்த விலங்கும் உயிர்ப்பலியிடக்கூடாது; விழா விருந்துகள் நடத்தப்படக்கூடாது; ஏனென்றால் சில இடங்களில் விழா விருந்துகள் நேர்த்தியானமுறையில் நடைபெற்றிருப்பதை மாட்சிமை தங்கிய மன்னர் பார்த்திருந்தபோதிலும் கூட இப்போது இந்த விருந்துகளில் மிகுந்த குற்றம் காண்கிறார்.

முன்னரெல்லாம் மாட்சிமை தங்கிய மன்னரின் சமையற்கூடத்தில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான உயிர்ப்பிராணிகள் கொல்லப்பட்டன. ஆனால் இப்போது, இந்த புனித சாசனம் எழுதப்படும்போது சமையலுக்கு தினமும் மூன்று பிராணிகள்தான் அதாவது இரண்டு மயில்களும் ஒரு கருப்பு மானும்தான் கொல்லப்படுகின்றன; எனினும் இவற்றில் மான் முக்கியமானதல்ல. இந்த மூன்று உயிர்ப்பிராணிகளும் கூட இனிமேல் கொல்லப்படமாட்டா.”

தூபி சாசனம் II பின்கண்டவாறு அமைந்துள்ளது:

“புனிதமும் கருனையும்மிக்க மன்னர் பின்வருமாறு கூறி அருளினார்:

“நன்னடத்தை விதிகள் மிக உன்னதமானவை. ஆனால் இந்த நன்னடத்தை விதிகள் எவற்றில் அடங்கியுள்ளன? அவை பின்கண்டவற்றில் அடங்கியுள்ளன; அதாவது கடமை உணர்வு, பல நல்ல காரியங்களைச் செய்தல், இரக்கம், பெருந்தன்மை, வாய்மை, தூய்மை ஆகியவற்றில் அவை பொதிந்துள்ளன.

“ஆன்மீக நுண்ணறிவுத் திறத்தின் மூலம் நான் பெற்ற அருட்கொடையை பல வழிகளில் பயன்படுத்தி இருக்கிறேன்; இருகால், நான்குகால் ஜீவன்களுக்கும், பறவைகளுக்கும், நீர்வாழ் பிராணிகளுக்கும் பல்வேறு அனுகூலங்கள் செய்திருக்கிறேன்; அவற்றின் வாழ்வு அருள்நலம் பெறச் செய்திருக்கிறேன். இன்னும் எத்தனை எத்தனையோ நற்செயல்களைப் புரிந்திருக்கிறேன்.

“இந்த நோக்கத்துக்காகவே இந்த சாசனத்தை எழுதச் செய்திருக்கிறேன். மக்கள் அதன் போதனையைப் பின்பற்றி நடக்க வேண்டும். அது நீடித்து நிலைத்திருக்கும்; அதன் வழிநடப்பவர்கள் நல்ல நிலையை அடைவார்கள்.”

தூபி கல்வெட்டு சாசனம் V கூறுவதாவது:

“புனிதமும் கருணையும் மிக்க மாட்சிமை தங்கிய மன்னர் பின்வருமாறு கூறினார்:

நான் இருபத்தாறு ஆண்டுகாலப் புனித பணிகளைச் செய்வதில் ஈடுபட்டிருக்கிறேன். பின்வரும் உயிர் பிராணிகளைக் கொல்லக்கூடாது என்று தடைசெய்திருக்கிறேன். அந்தப் பிராணிகள் வருமாறு:

கிளிகள், ஸ்டார்லிங்குகள், பெருநாரைகள், வீட்டு வாத்துகள், குதிரைகள், பண்டிமுஹாக்கள், கெலாடாக்கள், வௌவால்கள், பெண் எறும்புகள், பெண் ஆமைகள், முதுகெலும்பில்லாத மீன்கள், வேதவேயாக்கள், கங்காபுபுதாக்கள், கடல் மீன்கள், (நதி) ஆமைகள், முள்ளம்பன்றிகள், மர அணில்கள், பரசிங்க கலைமான்கள், வீட்டுக்காளைகள், குரங்குகள், காண்டாமிருகங்கள், காட்டுப் புறாக்கள், கிராமப்புற மாடப் புறாக்கள், பயன்படாத அல்லது உண்பதற்கு அருகதையற்ற எல்லா நான்கு கால் விலங்குகள்.

குட்டிகளுடனுள்ள அல்லது பால் சுரக்கிற பெண் வெள்ளாடுகள், கடாரி ஆடுகள், பசுக்கள் முதலியவையும் பிறந்து ஆறு மாதம் வரையிலான அவற்றின் குட்டிகளும் கொல்லப்படுவதினின்று விதிவிலக்கு அளிக்கப்படுகிறது.

சேவல்கள் விதையடிக்கப்படக் கூடாது.

வைக்கோல் அதிலுள்ள உயிர்ராசிகளுடன் எரிக்கப்படக் கூடாது.

திட்டமிட்ட முறையிலோ அல்லது உயிர்ப் பிராணிகளை அழிக்கும் நோக்கத்துடனோ காடுகளைச் சுட்டெரிக்கக் கூடாது.

ஓர் உயிருள்ள ஜீவன் வாழ்வதற்காக இன்னொரு உயிருள்ள ஜீவனை அழிக்கக்கூடாது. மூன்று பருவகாலப் பௌர்ணமிகளில் ஒவ்வொன்றிலும் திஷ்ய (டிசம்பர் – ஜனவரி) மாதத்தின் பௌர்ணமியிலும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மூன்று நாட்களில் அதாவது முதல் பட்சத்தின் பதினான்காவது, பதினைந்தாவது நாட்களிலும், இரண்டாவது பட்சத்தின் முதல்நாளிலும், அதேபோன்று ஆண்டு முழுவதும் முதல் நாட்களிலும் மீன்களைக் கொல்வதோ, விற்பனை செய்வதோ கூடாது.

இதே நாட்களில் யானைக் காப்பிடங்களையோ, மீன் வளர்ப்புக் குளங்களையோ, இதர விலங்கு வகைகளின் காப்பிடங்களையோ நாசம் செய்யக்கூடாது.

ஒவ்வொரு பட்சத்திலும் எட்டாவது, பதினான்காவது பதினைந்தாவது நாட்களிலும், அவ்வாறே திஷ்ய, புனர்வச தினங்களிலும், விழாநாட்களிலும் காளைகளுக்கு விதையடிப்பு நடைபெறக்கூடாது; அதேபோன்று ஆண் வெள்ளாடுகள், செம்மறியாடுகள், ஆண் பன்றிகள், மற்றும் விதையடிப்புக்குரிய இதர விலங்குகளுக்கு இந்த நாட்களில் விதையடிப்பு மேற்கொள்ளப்படலாகாது.

திஷ்ய, புனர்வச நாட்களிலும், பௌர்ணமி நாட்களிலும், பௌர்ணமியைத் தொடர்ந்த இரு வாரங்களிலும் குதிரைகளுக்கோ, எருதுகளுக்கோ சூடுபோடக்கூடாது.

புனிதப்பணிகளுக்கென என்னை அர்ப்பணித்துக் கொண்ட இருபத்தாறாம் ஆண்டுவிழாவரை இருபத்தைந்து முறை சிறைக் கைதிகளை விடுதலை செய்திருக்கிறேன்.”

அசோகரது சட்டங்கள் இத்தகையவை.

III

     இனி மனுவுக்கு வருவோம். இறைச்சி உண்பது சம்பந்தமாக அவருடைய சட்டங்களில் பின்கண்டவை அடங்கியுள்ளன:

V.11. கீழ்கண்டவற்றைத் தவர்க்க வேண்டும்: மாமிச பட்சிணிகளான சகலவகையான பறவைகள், கிராமபுறங்களில் வாழும் பறவைகள், உண்பதற்கு விசேடமாக அனுமதிக்கப்படாத ஒன்றைக்குளம்பு கொண்ட விலங்குகள், டித்பா (பர்ரா), ஜகானா.

V.12. சிட்டுக்குருவி, பிலாவா, அன்னம், வீட்டு வாத்து, கிராமத்து சேவல், சரசா நாரை, ராக்குதல், மரங்கொத்தி, கிளி, ஸ்டார்லிங்.

V.13. அலகுகளால் கொத்தி இரை உண்பவை, தோலிழைகள் நகங்கள் கொண்ட பறவைகள், கோயஸ்தி, உகிர் நகங்களைப் பயன்படுத்திப் பிராண்டுபவை, மேலிருந்து பாய்ந்து மீனைக் கொத்தித் தின்பவை, இறைச்சிக் கொட்டிலிலிருந்து வாங்கப்பட்ட மாமிசம், உலர்த்தப்பட்ட இறைச்சி.

V.14. பாகா மற்றும் பலாகா கொக்கு, அண்டங்காக்கை, மீன் உண்ணும் காங்கர்தகா (விலங்குகள்), கிராமப்புறப் பன்றிகள், எல்லா வகையான மீன்கள்.

V.15. எந்த விலங்குகளின் இறைச்சியையும் சாப்பிடுபவன். அந்தக் குறிப்பிட்ட உயிரினத்தின் இறைச்சியை உண்பவன் என அழைக்கப்படுவான்; ஆனால் மீன் சாப்பிடுபவனோ எல்லா வகையான இறைச்சியையும் சாப்பிடுபவனாகிறான்; எனவே அவன் மீனைத் தவிர்க்க வேண்டும்.

V.16. எனினும் தெய்வங்களுக்கோ, மூதாதையர்களுக்கோ திருப்படையல் செய்யப்பட்ட பாதைன் என்னும் மீனையும், ரோஹிதா எனப்படும் மீனையும் சாப்பிடலாம்; இவ்விதமே ரகிவாஸ், சிம்ஹதுந்தாஸ், சாசல்காஸ் ஆகிய மீன்களை எல்லாச் சந்தர்ப்பங்களிலும் உண்ணலாம்.

V.17. சாப்பிடக்கூடிய பிராணிகள் என்ற வகையைச் சேர்ந்தவையாயினும் கூட்டமாக வாழாத அல்லது இனம் தெரியாத விலங்குகளையும் பறவைகளையும், ஐந்து விரல்களை கொண்ட விலங்குகளையும் உண்ணலாகாது.

V.18. முள்ளம்பன்றி, முள்ளேலி, உடும்பு, காண்டாமிருகம், ஆமை, முயல் போன்றவை சாப்பிடுதற்குரியவை; இதே போன்று ஒட்டகங்கள் தவிர வீட்டில் வைத்து வளர்க்கப்படுபவையும் ஒரு தாடையில் பற்கள் கொண்டவையுமான விலங்குகளை உண்ணலாம்.”

IV

     இவைதாம் விலங்குகள் படுகொலை செய்வது குறித்த அசோகரதும் மனுவினதும் சட்டங்கள். எனினும் இங்கு நமது புராதன அக்கறைக்குரிய ஜீவன் பசு. இதுகுறித்த அசோகரின் சட்டங்களைப் பரிசீலித்துப் பார்க்கும்போது ஒரு கேள்வி எழுகிறது: பசு கொல்லப்படுவதை அவர் தடைசெய்தாரா? இந்த பிரச்சினையில் கருத்துவேறுபாடு நிலவுவதாகத் தோன்றுகிறது. பசு படுகொலை செய்யப்படுவதை அசோகர் தடைசெய்யவில்லை என்று பேராசிரியர் வின்சென்ட் ஸ்மித் அபிப்பிராயம் தெரிவித்து இருக்கிறார். இந்த விஷயத்தில் அசோகரின் சட்டம் பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில் பேராசிரியர் ஸ்மித் கூறுவதாவது:

“பசுவதையை அசோகரின் சட்டங்கள் தடைசெய்யவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அது சட்டபூர்வமானதாக தொடர்ந்து நடைமுறையில் இருந்து வந்தது தெளிவாகிறது.”

     ஆனால் பேராசிரியர் ராதாகுமுத் முகர்ஜி இது விஷயத்தில் பேராசிரியர் ஸ்மித்தின் கருத்திலிருந்து மாறுபடுகிறார். பசுவதையை அசோகர் தடைசெய்தார் என்று அவர் திட்டவட்டமாகக் கூறுகிறார் (ஸ்மித் – அசோகர், பக். 58). தூபிகல்வெட்டு Vஐ இதற்கு அவர் ஆதாரமாகக் கொள்கிறார்; கொல்லப்படுவதிலிருந்து எல்லா நான்குகால் பிராணிகளுக்கும் விதிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கும் விதியைச் சுட்டிக்காட்டி, இந்த விதியின் பிரகாரம் கொல்லப்படுவதிலிருந்து பசுவுக்கும் விதிவிலக்கு அளிக்கப்பட்டிருப்பதாக வாதிடுகிறார். ஆனால் கல்வெட்டிலுள்ள வாசகத்தை இது சரியானபடி புரிந்துகொண்டதாக ஆகாது. ஏனென்றால் கல்வெட்டிலுள்ள வாசகம் ஒரு வரையறைக்குட்பட்ட பொருளுடைய வாசகமாகும். அது எல்லா நான்குகால் பிராணிகளையும் குறிப்பிடவில்லை; மாறாக, ‘பயன்படாத அல்லது உண்பதற்கு அருகதையற்ற’ நான்குகால் பிராணிகளையே அது குறிப்பிடுகிறது. அவ்வகையில் பார்க்கும்போது பசுவை பயன்படாத அல்லது உண்பதற்கு அருகதையற்ற நான்குகால் பிராணி என்று கூறமுடியாது. எனவே, பசுவதையை அசோகர் தடைசெய்யவில்லை என்று பேராசிரியர் வின்சென்ட் ஸ்மித் கூறுவது சரியானது என்றே தோன்றுகிறது. அசோகர் காலத்தில் பசு இறைச்சி சாப்பிடப்படவில்லை. எனவே அசோகரின் தடைக்கு இதுவும் உள்ளாகிறது என்று கூறி இந்த இக்கட்டிலிருந்து மீளப் பேராசிரியர் முகர்ஜி முயல்கிறார். அவரது இந்தக் கருத்து முற்றிலும் பொருளற்றது. ஏனென்றால் அச்சமயம் சகல வகுப்பினர்களாலும் விரும்பி சாப்பிடப்பட்ட பிராணி பசு என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

     பேராசிரியர் முகர்ஜி செய்திருப்பது போன்று, இந்தக் கல்வெட்டின் வாசகத்துக்கு வலிந்துபொருள்கொள்வதும், பசுவதையைத் தடைசெய்வது தமது கடமை என்கிற ரீதியில் அசோகர் அதைத் தடைசெய்திருப்பதாகப் படம்பிடித்துக் காட்ட முயல்வதும் முற்றிலும் அவசியமற்றதாகும். பசுவிடம் அசோகருக்குக் குறிப்பிட்ட அக்கறை ஏதும் இல்லை; படுகொலையிலிருந்து அதனைப் பாதுகாக்க அவர் எவ்வகையிலும் கடமைப்பட்டிருக்கவும் இல்லை. எல்லா மனித ஜீவன்களின், அதேபோன்று சகல உயிர்ப்பிராணிகளின் வாழ்வின் புனிதத்தில் அசோகர் அக்கறை கொண்டிருந்தார். அவசியமில்லாமல் எந்த உயிரையும் பறிப்பதைத் தடைசெய்வது தமது கடமை என அசோகர் உணர்ந்திருந்தார். எனவேதான் வேள்விகளில் உயிர்ப்பலியிடுவதை அவர் தடைசெய்தார்; இது அவசியமற்றது என்று கருதினார்; இதேபோன்று பயன்படாத, சாப்பிடுவதற்கு அருகதையற்ற விலங்குகளைக் கொல்வதையும் அவர் தடைசெய்தார்: ஏனென்றால் இதனைக் காரணமற்றதாகவும் அவசியமற்றதாகவும் எண்ணினார். அவர் குறிப்பாக பசுவதையைத் தடை செய்யவில்லை என்பதைக் கொண்டு புத்த மதத்தை அவர் எப்படி ஆதரிக்கமுடியும் என்று குற்றம் சாட்ட முடியாது.

     அடுத்து, இனி மனு விஷயத்துக்கு வருவோம். பசு கொல்லப்படுவதை அவரும் தடை செய்யவில்லை. மாறாக, சில சந்தர்ப்பங்களில் பசுவின் இறைச்சியைச் சாப்பிடுவது அவசியம் என்று வலியுறுத்தினார்.

     அப்படியானால் பார்ப்பனரல்லாதோர் மாட்டிறைச்சி சாப்பிடுவதை ஏன் கைவிட்டார்கள்? அவர்கள் இவ்வாறு செய்வதற்கு வெளிப்படையான காரணம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. எனினும் இதற்கு ஏதேனும் காரணம் இருந்தாக வேண்டும். இது விஷயத்தில் பார்ப்பனர்களைப் பின்பற்றவேண்டும் என்ற ஆர்வமே மாட்டிறைச்சி சாப்பிடுவதைப் பார்ப்பனரல்லாதோர் கைவிட்டதற்குக் காரணம் என எனக்குத் தோன்றுகிறது. இது ஒரு புதுமையான கோட்பாடாகத் தோன்றக்கூடும். ஆனால் இது காரியசாத்தியமற்ற கோட்பாடல்ல. பிரஞ்சு ஆசிரியர் காபிரியேல் டார்டே குறிப்பிட்டதுபோல் மேல்தட்டு வகுப்பினரின் பழக்கவழக்கங்களை கீழ்த்தட்டு வகுப்பினர் பின்பற்றுவதன் மூலமே ஒரு சமுதாயத்தில் கலாசாரம் பரவுகிறது. இந்தப் போலி செய்யும் பழக்கம் ஓர் இயற்கை விதி யாந்திரிகமாக செயல்படுவது போன்று அத்தனை சர்வசாதாரணமாக நடைபெறுகிறது. காபிரியேல் டார்டே போலி செய்யும் நடைமுறைகளைப் பற்றி இங்கு விவரிக்கிறார். கீழே உள்ள வகுப்பினர் எப்போதுமே மேலே உள்ள வகுப்பினரைப் பின்பற்றுவது இந்த நடைமுறைகளில் ஒன்று. இது மிக சர்வசாதாரணமாக நடைபெறுவதால், இந்த முறைமை சரிதானா என்று எவரும் ஆட்சேபம் எழுப்புவதில்லை.

     தங்களைவிட உயர்ந்தவர்கள் எனக் கருதும் பார்ப்பனர்களைப் பல விஷயங்களில் பின்பற்றும் பார்ப்பனரல்லாதோரின் பழக்கமே பசுவழிபாடு பரவுவதற்கும், மாட்டிறைச்சி உண்பதை அவர்கள் நிறுத்துவதற்கும் காரணமாக இருந்திருப்பதைக் காண்கிறோம். மேலும் பசு ஆராதனைக்கு ஆதரவாக பார்ப்பனர்கள் விரிவான பிரசாரம் மேற்கொண்டதும் ஒரு காரணமாகும். காயத்ரி புராணம் என்பது இத்தகைய பிரசார சாதனங்களில் ஒன்று. எனினும் மற்றவர்களைப் போலிசெய்யும், பின்பற்றும் இயல்பே ஆரம்பத்தில் இதற்குக் காரணமாக இருந்தது என்பதை மறுக்கமுடியாது. இது இங்கு மற்றொரு கேள்வியை எழுப்புகிறது: பார்ப்பனர்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவதை ஏன் நிறுத்தினார்கள்?

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 14, இயல் 12)

Pin It