I
1870 ஆம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியாவின் குடிமதிப்பு புள்ளி விவர அறிக்கைகளை (சென்சஸ்) குடிமதிப்பு ஆணையர் வெளியிட்டுவருகிறார். இந்திய மக்களின் சமூக, சமய வாழ்க்கை பற்றிய ஏராளமான விவரங்கள், வேறு எங்கும் பெற முடியாத தகவல்கள் இந்த அறிக்கைகளில் அடங்கியுள்ளன. 1910 ஆம் வருட குடிமதிப்புக் கணக்குக்கு முன்னர் சென்சஸ் ஆணையர் “மத அடிப்படையில் மக்கட்தொகை” என்னும் ஒரு பத்தியை வெளியிட்டு வந்தார். இந்தத் தலைப்பில் மக்கட்தொகை பின்வருமாறு பிரிக்கப்பட்டிருந்தது: 1.முஸ்லீம்கள் 2.இந்துக்கள் 3.கிறித்தவர்கள் மற்றும் பிறர். ஆனால் 1910ஆம் வருட சென்சஸ் அறிக்கை அதுவரை பின்பற்றப்பட்டுவந்த நடைமுறையிலிருந்து மாறுபட்டதாக இருந்தது. முதல் தடவையாக இந்துக்கள் மூன்று தனி வகையினராகப் பிரிக்கப்பட்டிருந்தனர்: i. இந்துக்கள் ii. ஆவி உலகக் கோட்பாட்டாளர்களும் பழங்குடியினரும் iii. தாழ்த்தப்பட்ட மக்கள் அல்லது தீண்டப்படாதவர்கள். அப்போது முதல் இந்தப் புதிய வகைபாடு முறையே பின்பற்றப்பட்டுவருகிறது.
II
முந்தைய சென்சஸ் ஆணையர்கள் பின்பற்றி வந்ததிலிருந்து மாறுபட்ட இந்த நடைமுறை மூன்று கேள்விகளை எழுப்புகிறது. முதல் கேள்வி 1910 ஆம் வருடச் சென்சஸ் ஆணையர் இந்தப் புதிய வகைப்பாட்டை செயல்படுத்தியதற்குக் காரணம் என்ன? இரண்டாவது கேள்வி இந்தப் புதிய வகைப்பாட்டுக்கு அடிப்படையாகக் கொள்ளப்பட்ட மூலவிதி யாது? மூன்றாவது கேள்வி மேலே குறிப்பிட்டவாறு இந்துக்களை மூன்று தனிப்பிரிவினராகப் பிரிப்பதை நியாயப்படுத்தும் சில நடைமுறைகள் தோன்றியதற்குக் காரணங்கள் என்ன?
முதல் கேள்விக்கான பதிலை மேன்மை தங்கிய ஆககான் அப்போதைய வைசிராயான மின்டோ பிரபுவிடம் முஸ்லீம் சமூகத்தின் சார்பில் சமர்பித்த விண்ணப்பத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம். சட்டமன்றத்திலும், நிர்வாகத்திலும், பொதுப்பணிகளிலும் முஸ்லீம் சமூகத்திற்கு போதிய தனிப்பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று அந்த விண்ணப்பத்தில் கோரப்பட்டிருந்தது.
மேற்கண்ட விண்ணப்பத்தில் பின்கண்ட பகுதி இடம் பெற்றிருந்தது:
“1901 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட குடிமதிப்புக் கணக்கின் படி இந்தியாவில் முகமதியர்களின் எண்ணிக்கை 6 கோடி 20 லட்சமாகும் அல்லது மன்னர் பிரானின் இந்திய டொமினியன் பிரதேசங்களின் மொத்த மக்கட் தொகையில் ஐந்தில் ஒரு பங்குக்கும் நான்கில் ஒரு பங்குக்கும் இடைப்பட்டதாகும். ஆவி உலகக் கோட்பாளர்கள் மற்றும் இதர சிறு சமயத்தினர் என்ற தலைப்புகளில் கணக்கிடப்பட்டுள்ள நாகரிகமற்ற சமூகத்தினரையும், மற்றும் சாதாரணமாக இந்துக்கள் என்று வகைப் பிரிக்கப்பட்டுள்ள ஆனால் உண்மையில் இந்துக்களே அல்லாதவர்களையும் கழித்துவிட்டுப் பார்த்தால் இந்துப் பெரும்பான்மையினருடன் ஒப்பிடும்போது முகமதியர்கள் வீதாசாரம் இன்னும் அதிகமாகும். (இந்த விண்ணப்பத்தின் முழு வாசகத்தையும் பாகிஸ்தான் என்னும் எனது தொகுதியில் பார்க்க. பக்கம் 431) எனவே, ரஷ்யா நீங்கலாக வேறு எந்த முதல்தர ஐரோப்பிய நாட்டின் மொத்த மக்கட்தொகையை விடவும் அதிக எண்ணிக்கையுள்ள ஒரு சமூகத்திற்கு விரிவடைந்த அல்லது கட்டுப்படுத்தப்பட்ட எந்த ஒரு பிரதிநிதித்துவ அமைப்பிலும் நாட்டின் ஒரு முக்கியமான சக்தி என்ற முறையில் போதிய அங்கீகாரம் கோருவதற்கு நியாயமுண்டு என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.
“மாட்சிமை தங்கிய மன்னர் பிரானின் அனுமதியோடு மேலும் ஓரடி முன்னே செல்லத் துணிகிறோம்; நேரடியான அல்லது மறைமுகமான எவ்வகையான பிரதிநிதித்துவத்திலும், எங்களது படிநிலை மற்றும் செல்வாக்கு சம்பந்தப்பட்ட இதர எல்லா விஷயங்களிலும் முகமதிய சமுதாயத்துக்கு அளிக்கப்படும் அந்தஸ்து அவர்களது வெறும் எண்ணிக்கைப் பலத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டிராமல், அவர்களது அரசியல் முக்கியத்துவத்தையும் சாம்ராஜ்யத்தின் பாதுகாப்புக்காக அவர்கள் ஆற்றியுள்ள பங்கையும் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்த விரும்புகிறோம். மேலும், இந்தியாவில் ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்கு முன்னர் நாங்கள் வகித்துவந்த நிலையையும், அதேபோன்று பழம் பாரம்பரியங்கள் எங்கள் மனத்திலிருந்து அகன்றுவிடவில்லை என்பதையும் மன்னர்பிரான் உரிய முறையில் கருத்திலெடுத்துக் கொள்வார் என்றும் நாங்கள் நம்புகிறோம்.”
மேலே உள்ள விண்ணப்பத்தில் இத்தாலிக் (மூலத்தில் இத்தாலிக் எழுத்துப்படிவம் பயன்படுத்தப்படவில்லை.) எழுத்துப் படிவத்தில் அச்சாகியிருக்கும் பகுதி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முஸ்லீம்களின் மக்கட்தொகைப் பலத்தை இந்துக்களின் மக்கட்தொகைப் பலத்துடன் ஒப்பிடும்போது, ஆவி உலகக் கோட்பாட்டாளர்கள், பழங்குடி மக்கள், தீண்டப்படாதவர்கள் போன்றோரின் எண்ணிக்கையை இந்துக்களின் மொத்த மக்கட்தொகை எண்ணிக்கையிலிருந்து நீக்கிவிட வேண்டும் என்பதை வலியுறுத்தும் பொருட்டே இந்தப் பகுதி மேலே கூறிய விண்ணப்பத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது. 1910ல் சென்சஸ் ஆணையர் ‘இந்துக்களை’ இவ்விதம் புதிய முறையில் வகைப்பிரித்ததற்கு முஸ்லீம் சமூகத்திற்கு தனிப் பிரதிநிதித்துவத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற இந்தக் கோரிக்கையே காரணமாகும். இது எப்படியிருந்த போதிலும் இந்தக் கோரிக்கையை இந்துக்கள் இவ்வாறுதான் புரிந்து கொண்டிருந்தனர். (1909 ஆம் ஆண்டில் முஸ்லீம் சமுகத்தினர் மின்டோ பிரபுவிடம் விண்ணப்பம் சமர்ப்பித்த சிறிது காலத்திலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. முஸ்லீம் சமூகத்திற்குப் போதிய அளவுதனிப் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்று அந்த விண்ணப்பத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது.இந்தக் கோரிக்கையில் ஏதோ சூது இருக்கிறது என்று இந்துக்கள் ஐயம் கொண்டனர். இதுபற்றி சென்சஸ் ஆணையர் பின்கண்டவாறு கூறினார்:
“தற்செயலாக, இந்த விசாரணை ஓரளவு உணர்ச்சி வேகத்தைக் கிளர்த்தி விட்டுள்ளது. சட்ட மேலவைகளில் இந்துக்கள், முஸ்லீம்களின் பிரதிநிதித்துவம் பற்றிய கோரிக்கைகள் எழுப்பப்பட்டு அவை சம்பந்தமாக காரசாரமான வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்று வந்த வேளையில் துரதிருஷ்டவசமாக இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டதே இதற்குக் காரணம். இந்துக்களிலிருந்து சில வகைப் பிரிவினரைப் பிரிப்பதற்கு இது இட்டுச் செல்லும் என்றும், இதனால் இந்துக்களின் அரசியல் முக்கியத்துவத்துக்குப் பாதிப்பு ஏற்படும் என்றும் இந்துக்களில் ஒரு பகுதியினர் அச்சம் கொண்டனர்.” பகுதி I பக்.116)
இங்கு சுவையான விஷயம் என்னவென்றால், வகைப்பிரிப்புமுறையை சென்சஸ் அணையர் ஏன் மாற்றினார் என்ற முதல் கேள்வி இரண்டாவது கேள்வியைவிட முக்கியத்துவம் குறைந்ததாகி விடுகிறது என்பதுதான். இந்துக்களை 1.நூறு சதவிகித இந்துக்கள் என்றும், 2. அவ்வாறு இல்லாதவர்கள் என்றும் வகைப் பிரிப்பதற்கு சென்சஸ் ஆணையர் எந்த ஆதார அடிப்படையை மேற்கொண்டார் என்பதை அறிவது இங்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இவ்வாறு வகைப் பிரிப்பதற்கு சென்சஸ் ஆணையர் கைக்கொண்ட அடிப்படையை அவர் வெளியிட்ட ஒரு சுற்றறிக்கையில் காணலாம். இந்த இரு வகைப்பிரிவினரை வேறுபடுத்திக் காண்பதற்கு அவர் சில சோதனைகளை வகுத்துத் தந்திருந்தார். நூறு சதவிகித இந்துக்களல்லாதவர்களில் கீழ்க்கண்ட சாதியினரும் குலமரபு குலத்தினரும் அடங்குவர்.
- பார்ப்பனர்களின் மேலாதிக்கத்தை ஏற்க மறுப்பவர்கள்.
- பார்ப்பனனிடமிருந்தோ அல்லது வேறு எந்த அங்கீகரிக்கப்பட்ட இந்து குருவிடமிருந்தோ மந்திரம் பெறாதவர்கள்.
- வேதங்களின் அதிகாரத்தை மறுதலிப்பவர்கள்.
- இந்து தெய்வங்களை வழிபடாதவர்கள்.
- நல்ல பார்ப்பனர்களை குடும்ப மதக்குருக்களாக பெற்றிராதவர்கள்.
- எந்தப் பார்ப்பன மதக்குருக்களையுமே ஏற்காதவர்கள்.
- இந்து ஆலயங்களில் பிரவேசிக்க அனுமதிக்கப்படாதவர்கள்.
- (அ) தொட்டாலோ அல்லது (ஆ) குறிப்பிட்ட தூரத்தில் இருந்தாலோ தீட்டு உண்டு பண்ணக்கூடியவர்கள்.
- தங்களில் இறந்தவர்களைப் புதைப்பவர்கள்
- மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் மற்றும் பசுவைப் பூசித்துப் போற்றாதவர்கள்.
இந்தப் பத்து சோதனைகளில் சில சோதனைகள் இந்துக்களை ஆவி உலகக் கோட்பாளர்களிடமிருந்தும் பழங்குடிகளிடமிருந்தும் வேறுபடுத்திக் காட்டுகின்றன. மற்றவை இந்துக்களை தீண்டப்படாதோரிடமிருந்து பிரித்துக் காட்டுகின்றன. தீண்டப்படாதவர்களை இந்துக்களிடமிருந்து பிரித்துக்காட்டுபவை (2) , (5), (6), (7) மற்றும் (10) ஆகும். பிரச்சினையைத் தெளிவாகப் புரிந்து கொள்ளும் பொருட்டு, இந்த சோதனைகளை இரு பகுதிகளாகப் பிரித்துத் தனித்தனியாக ஆராய்வோம். 2,5,6 ஆகியவற்றை ஆராய்வதற்கே இந்த இயல் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
2,5,6 ஆகிய சோதனைகளில் அடங்கியுள்ள கேள்விகளுக்கு சென்சஸ் (இந்தியாவின் சென்சஸைப் (1911) பார்க்க, பகுதி I, பக். 117.) ஆணையருக்குக் கிடைத்த பதில்கள் 1.பார்ப்பனனிடமிருந்து எந்த மந்திரத்தையும் தீண்டப்படாதவர்கள் பெறுவதில்லை என்பதையும் 2. எந்தப் பார்ப்பன மதகுருக்களையும் தங்கள் சமயவினைமுறைகளைச் செய்வதற்கு அழைப்பதில்லை என்பதையும் 3. தீண்டப்படாதவர்கள் தங்களிடமிருந்து தங்கள் சொந்த பூசாரிகளை உருவாக்கிக் கொள்கிறார்கள் என்பதையும் புலப்படுத்துகின்றன. இது விஷயத்தில் எல்லா மாகாணங்களையும் சேர்ந்த சென்சஸ் ஆணையர்கள் ஒருமித்த கருத்துக் கொண்டுள்ளனர். (அஸ்ஸாமுக்கான 1911 ஆம் வருட சென்சஸைப் பார்க்க, பக்.40; வங்கம், பீகார், ஒரிசாவுக்கு பக்.282; மத்திய மாகாணங்கள் பக்.73; சென்னை பக்கம் 51, பஞ்சாப் பக்.109, ஐ.மா.பக்.121, பரோடா பக்.55, மைசூர் பக்.53, ராஜபுத்தானா, பக். 94-105, திருவாங்கூர் பக்.198)
நாம் ஆரம்பத்தில் குறிப்பிட்ட மூன்று கேள்விகளில் மூன்றாவது கேள்வி மிக முக்கியமானது. துரதிருஷ்டவசமாக சென்சஸ் ஆணையர் இதனை உணர்ந்ததாகத் தெரியவில்லை. ஏனென்றால் அவர் தமது விசாரணையில் பிரச்சினையின் அடிமூலத்திற்குச் சென்று பின்கண்டவற்றை அறிய தவறிவிட்டார். பார்ப்பனனிடமிருந்து தீண்டப்படாதவர்கள் ஏன் மந்திரங்களைப் பெறுவதில்லை? பார்ப்பனர்கள் அவர்களது குடும்ப மதகுருக்களாக ஏன் செயல்படுவதில்லை? தீண்டப்படாதவர்கள் தங்கள் சொந்தப் பூசாரிகளை உருவாக்கிக் கொள்ள ஏன் விரும்புகிறார்கள்? இந்த மெய்ந்நிகழ்வுகளை விட இவை ‘ஏன்’ என்பதுதான் மிகமுக்கியமானது. இந்த ‘ஏன்’ என்பதைப் பற்றித்தான் நாம் ஆராயவேண்டும். ஏனென்றால் தீண்டாமையின் அடிமூலம் எது என்னும் புதிருக்கான விடை இதன் பின்னால்தான் மறைந்திருக்கிறது.
இந்த ஆய்வில் நாம் இறங்குவதற்கு முன்னர் சென்சஸ் ஆணையரின் ஆய்வுகள் ஒருவகையில் ஒருதலைபட்சமானவை என்பதை நாம் சுட்டிக்காட்ட வேண்டும். பார்ப்பனர்கள் தீண்டப்படாதவர்களை வெறுத்தொதுக்கினர் என்பதை அவை காட்டின. இதே போன்று, தீண்டப்படாதவர்களும் பார்ப்பனர்களைத் தவிர்த்தொதுக்கினர் என்பதை அவை வெளிப்படுத்தவில்லை. இது எவ்வாறிருந்தபோதிலும், இது உண்மை என்பதில் ஐயமில்லை. பார்ப்பனன் தீண்டப்படாதவர்களைவிட மேலானவன் என்றும், தீண்டப்படாதவர்களே தங்களை இழிந்தவர்கள் என்பதை ஏற்றுக் கொண்டுவிட்டார்கள் என்றும் நினைக்க மக்கள் பெரிதும் பழகிப்போய் விட்டனர். ஆனால் உண்மையில் தீண்டப்படாதவர்கள் பார்ப்பனனை ஒரு தூய்மையற்ற பிறவி என்றே கருதுகிறார்கள் என்று கூறினால் இது அவர்களுக்கு மிகவும் வியப்பாக இருக்கக்கூடும். தீண்டப்படாதவர்களின் சமூகப் பழக்க வழக்கங்களை நன்கு ஆராய்ந்த பல எழுத்தாளர்கள் இந்த உண்மையைக் காண தவறவில்லை. இது குறித்து எவருக்கேனும் ஐயம் இருக்குமாயின் அவர்களது ஐயத்தை அகற்றுவதற்குப் பின்கண்ட பகுதிகளை இங்கே தந்துள்ளோம்.
இந்த உண்மையைக் கண்டறிந்தவர்களில் ஒருவரான அப்பே துபாய் கூறியதாவது: (இந்து பழக்க வழக்கங்கள் (3வது பதிப்பு) பக்.61)
“இன்றளவும்கூட, கிராமத்திலுள்ள ஒரு பார்ப்பன தெருவின் வழியாக ஒரு பறையன் செல்வதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் நகரங்களில் அப்படியில்லை. அங்கு பார்ப்பனர் வீடுகள் பக்கமாக அவன் செல்லுவதை யாரும் தடுக்க முடியாது. தடுப்பதும் இல்லை. இதே சமயம் பறையர்களும் எந்தச் சூழ்நிலைகளிலும் ஒரு பார்ப்பனனைத் தங்கள் பறைச்சேரிகள் பக்கம் செல்ல அனுமதிப்பதில்லை. தங்கள் நாசத்துக்கு இது வழிவகுக்கும் என்று அவர்கள் திடமாக நம்புவதே இதற்குக் காரணம்.”
தஞ்சாவூர் மாவட்ட கெஜட்டீர் ஆசிரியரான திரு.ஹெமிங்ஸ்வே கூறுவதாவது:
“ஒரு பார்ப்பனன் தங்கள் குடியிருப்பு வட்டாரங்களில் நுழைவதை இந்தச் சாதியினர் (தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பறையர்கள், பள்ளர்கள், சக்கிலியர்கள்) வன்மையாக எதிர்க்கின்றனர்; இதனால் தங்களுக்கு தீங்கு நேரிடும் என்று அவர்கள் அஞ்சுவதே இதற்குக் காரணம்.” (தஞ்சாவூர் மாவட்ட கெஜட்டீர், (1906) பக்.80)
மைசூரின் ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்த ஹோலியர்களைப் பற்றி காப்டன் ஜே.எஸ்.எப்.மாக்ன்ஸி கூறுவதாவது:
“ஒவ்வொரு கிராமத்தின் எல்லைகளிலும் ஹோலிகிரி என்னும் சேரிகள் இருக்கின்றன. ஹோலியர்கள் எனும் முன்னாள் பண்ணை அடிமைகள் வாழும் பகுதிகள் இவை. இவர்கள் தூய்மையற்ற இனத்தைச் சேர்ந்தவர்கள், இவர்களை தொடுவதால் தீட்டு உண்டாகும் என்று கருதப்படுவதால்தான் இவர் கிராமத்திற்கு வெளியே வசிக்கிறார்கள் என்று கருதுகிறேன்.” (இந்தியன் ஆன்டிகுவரி, 1873 II 65)
ஒரு ஹோலியரின் கைகளிலிருந்து நேரடியாக எதையும் வாங்க பார்ப்பனர்கள் மறுப்பதற்கு இதுதான் காரணம். அதே சமயம் எந்தத் தொந்தரவுக்கும் உள்ளாகாமல் ஹோலிகிரிக்குள் நுழைந்து வெளியே வந்தால் தங்களுக்குப் பெரும் அதிருஷ்டம் கிட்டும் என்பது பார்ப்பனர்களது நம்பிக்கை. ஆனால் ஹோலியர்கள் இதனைக் கடுமையாக எதிர்க்கின்றனர். அப்படியே மீறி யாரேனும் ஒரு பார்ப்பனன் தங்கள் குடியிருப்பு வட்டாரத்திற்குள் பிரவேசிக்க முயன்றால் ஹோலியர்கள் அனைவரும் அங்கு ஒரே மனிதன் போல் கூடிவிடுவார்கள்; அவனைச் செருப்பால் அடிப்பார்கள். பழைய காலத்தில் அவனுக்கு மரணம்கூடச் சம்பவிப்பது உண்டு. ஏனைய சாதிகளைச் சேர்ந்தவர்கள் வீட்டு வாசல் வரை வரலாம். தற்செயலாக யாரேனும் ஒருவர் வீட்டிற்குள் நுழைந்துவிட்டால், வீட்டுச்சொந்தக்காரர் அவரது ஆடையைக் கிழித்து அதன் ஒரு மூலையில் சிறிது உப்பைக் கட்டிவிடுகிறார். இவ்வாறு செய்தால் அழையாது நுழைபவருக்கு அதிருஷ்டம் கிட்டுவதைத் தடுப்பதோடு, வீட்டுச் சொந்தக்காரருக்கு எத்தகைய தீங்கும் நேருவதைத் தவிர்த்துவிடும் என்பது அந்த மக்களின் நம்பிக்கை.
இத்தகைய ஒரு விந்தையான நிகழ்வுப்போக்குக்கு என்ன விளக்கம் தர முடியும்? ஆரம்பகாலத்தில் தீண்டப்படாதவர்கள் தீண்டப்படாதவர்களாக அல்லாமல், சிதறுண்ட மக்களாக மட்டுமே இருந்தபோது இருந்த நிலைமைக்கு இந்த விளக்கம் பொருந்துவதாக இருக்கக்கூடும். சிதறுண்ட மக்களின் சமயச் சடங்குகளை நடத்துவதற்கு பார்ப்பனர்கள் மறுத்தது ஏன்? இந்த சடங்குகளைச் செய்வதற்குப் பார்ப்பனர்களே மறுத்தார்களா? அல்லது சிதறுண்ட மக்கள்தான் அவர்களை அழைப்பதற்கு மறுத்தார்களா? சிதறுண்ட மக்களைத் தூய்மையற்றவர்கள் என்று பார்ப்பனர்கள் ஏன் கருத வேண்டும்? அதேபோன்று சிதறுண்ட மக்களும் பார்ப்பனர்களை தூய்மையற்றவர்கள் என்று எதற்காகக் கருதவேண்டும்? இந்தப் பரஸ்பர வெறுப்பு உணர்வுக்கு அடிப்படை என்ன?
இந்த வெறுப்பு உணர்வுக்கு அடிப்படைக் காரணமாக ஓர் ஊகத்தைக் கூறலாம். சிதறுண்ட மக்கள் பௌத்தர்களாக இருந்தனர் என்பதுதான் அந்த ஊகம். இதனால் அவர்கள் பார்ப்பனர்களை உயர்வாக மதிக்கவில்லை; தங்களுடைய மத குருக்களாக அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை; அவர்களைத் தூய்மையற்றவர்களாகவே அவர்கள் கருதினர். அதே சமயம் பார்ப்பனர்களும் சிதறுண்ட மக்களை வெறுத்தனர். அவர்கள் பௌத்தர்களாக இருந்ததே இதற்குக் காரணம். அவர்களுக்கு எதிராக விஷமத்தனமான பிரசாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டனர். வெறுப்பையும் துவேஷத்தையும் உமிழ்ந்தனர். அவர்களை அவமதித்தனர், ஏளனம் செய்தனர். இதன் விளைவாக, சிதறுண்ட மக்கள் தீண்டப்படாதவர்களாகக் கருதப்படலாயினர்.
இந்த சிதறுண்ட மக்கள் புத்தமதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்கு நேரடியான சான்று ஏதும் இல்லை. பெரும்பாலான இந்துக்கள் பௌத்தர்களாக இருந்த நிலைமையில் இத்தகைய சான்று ஏதும் தேவையில்லை. எனவே சிதறுண்ட மக்கள் பௌத்தர்கள்தான் என்று ஏற்றுக்கொள்வதில் சிரமம் ஏதும் இருக்க முடியாது.
பௌத்தர்களுக்கு எதிராக இந்துக்கள் மனத்தில் பெரும் வெறுப்பும் பகைமையும் குடிகொண்டிருந்தன. அவர்கள் மனத்தில் இந்த நச்சை ஊட்டியவர்கள் பார்ப்பனர்கள்தான் என்பதற்கு ஆதாரம் இல்லாமல் இல்லை.
நீலகண்ட் தமது பிராயசித் மயூகாவில் (பதிப்பாசிரியர் கார்புரே, பக்.95) மனுவிலிருந்து பின்கண்ட சுலோகத்தை மேற்கோள் காட்டுகிறார்:
“ஒருவன் ஒரு பௌத்தனையோ அல்லது பசுபத் மலரையோ, லோகாதனையோ, நாத்திகனையோ, மகாபாதகியையோ தொட்டால் நீராடி தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.”
அபரார்கரும் தமது ஸ்மிருதியில் (ஸ்மிருதி சம்முச்சயா, பக்.118) இதே சித்தாந்தத்தையே உபதேசித்தார். விரத ஹரித் இன்னும் ஒருபடி மேலே சென்று, பௌத்த விகாரத்தில் நுழைவதையே ஒரு பாவமாகப் பிரகடனம் செய்கிறார். தூய்மைப்படுத்தும் சடங்காகக் குளித்து இந்தத் தீட்டைப் போக்கிக் கொள்ள வேண்டும் என்று உபதேசம் செய்கிறார்.
புத்தரைப் பின்பற்றியவர்களுக்கு எதிராக வெறுப்பும் துவேஷமும் கோபாவேசமும் எந்த அளவுக்கு உக்கிரமாக வளர்ந்திருந்தன என்பதை சமஸ்கிருத நாடகங்களில் இடம்பெற்றிருந்த காட்சிகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம். பௌத்தர்களுக்கு எதிராக இந்தப்போக்கு எந்த அளவுக்கு உச்சக்கட்டத்தை அடைந்திருந்தது என்பது மிருச்சகடிகம் எனும் சமஸ்கிருத நாடகத்தில் தெள்ளத்தெளிவாகக் காணமுடியும். இந்த நாடகத்தின் காட்சி VIIல், கதாநாயகன் சாருதத்தனும் அவனுடைய நண்பன் மைத்ரேயனும் நகரத்திற்கு வெளியே உள்ள பூங்காவில் வசந்த சேனைக்காகக் காத்திருப்பதாகக் காட்டப்படுகிறது. வசந்த சேனை அங்கு வரத் தவறிவிடுகிறாள். அப்போது சாருதத்தன் பூங்காவை விட்டு வெளியேற முடிவு செய்கிறான். அவர்கள் அங்கிருந்து வெளியேறும்போது சம்வாஹாகர் என்ற பௌத்த பிட்சு வருவதைப் பார்க்கிறார்கள். அவரைக் கண்டதும் சாருதத்தன் பின்வருமாறு கூறுகிறான்:
“நண்பா மைத்ரேயா, நான் வசந்தசேனையைச் சந்திக்க மிகுந்த ஆவலோடு இருக்கிறேன். வா, நாம் போவோம். (சிறிது தூரம் நடந்தபிறகு) ஆ! எவ்வளவு அபசகுணம், ஒரு பௌத்தபிட்சு நம்மை நோக்கி வருகிறான். (சிறிது நேரம் யோசித்தபிறகு) நல்லது அவன் இந்த வழியாக வரட்டும், நாம் அதோ அந்த வழியாகச் செல்வோம். (வெளியே போகிறார்கள்)
அடுத்து, காட்சி VIIIக்கு வருவோம். மன்னனின் மைத்துனனான சகரனின் பூங்கா அது. அங்குள்ள ஒரு தடாகத்தில் ஒரு பௌத்த பிட்சு தனது துணிகளைத் துவைத்துக் கொண்டிருக்கிறார். சகரன் விதனுடன் அங்கு வருகிறான். பிட்சுவைக் கொல்லப்போவதாக அச்சுறுத்துகிறான். அப்போது அவர்களிடையே பின்கண்டவாறு உரையாடல் நடைபெறுகிறது:
“சகரன் – ஏ கேடுகெட்ட பிட்சுவே அப்படியே நில்!
பிட்சு – ஓ, இவர் மன்னரின் மைத்துனரல்லவா! யாரோ பிட்சு இவர் மனத்தைப் புண்படுத்திவிட்டார் போலிருக்கிறது! அதனால்தான் எந்தப் பிட்சுவைச் சந்தித்தாலும் அவரை அடித்துத் துவைக்கிறார் போலிருக்கிறது!
சகரன் - அப்படியே நில், உணவு விடுதியில் முள்ளங்கிக் கிழங்கை நறுக்குவதுபோல் இப்போது உம் மண்டையைப் பிளக்கப் போகிறேன் (அவரை அடிக்கிறான்)
விதன் - நண்பனே, இந்த உலகை வெறுத்து காவி உடைதரித்த ஒரு சந்நியாசியை அடிப்பது முறையல்ல.
பிட்சு - (வரவேற்கிறார்) திருவுளங்கொள்ளுங்கள், இலௌகீக சகோதரரே.
சகரன் - நண்பா, இவன் என்னை நிந்தனை செய்கிறான், பார்.
விதன் - அப்படி அவர் என்ன சொல்லிவிட்டார்?
சகரன் - என்னை இலௌகீக சகோதரன் (உபாசகன்) என்று திட்டுகிறான். நான் என்ன ஒரு நாவிதனா?
விதன் - ஓ! புத்தரின் பக்தன் என்று உண்மையில் அவர் உன்னைப் புகழ்கிறார்.
சகரன் - அவன் ஏன் இங்கு வந்திருக்கிறான்?
பிட்சு - இந்தத் துணிகளைத் துவைப்பதற்காக.
சகரன் - ஆ! துஷ்டபிட்சுவே, நானே கூட இந்தத் தடாகத்தில் குளிப்பதில்லை. ஒரே அடியில் உன்னைக் கொல்லுகிறேன் பார்.”
மிகவும் அடித்து இம்சித்தபிறகு பிட்சு அங்கிருந்து செல்ல அனுமதிக்கப்படுகிறார். இந்துக்களின் கூட்டத்தினரிடையே சிக்கிக் கொண்டு பெரிதும் அவதிப்படும் ஒரு பௌத்த பிட்சுவின் பரிதாப நிலையை இங்கு காண்கிறோம். அவர் வெறுத்தொதுக்கப்படுகிறார், தவிர்க்கப்படுகிறார். அவர் செல்லும் பாதையைக் கூட வெறுத்தொதுக்கும் அளவுக்கு மக்களின் சீற்றம் உச்சநிலையை அடைகிறது. புத்த பிட்சுவை கண்ட மாத்திரத்திலேயே மக்கள் அங்கிருந்து வெளியேறும் அளவுக்கு மக்களின் வெறுப்பு எல்லை மீறுகிறது. ஒரு பௌத்த பிட்சு பார்ப்பனனுக்கு சமமானவர். பார்ப்பனனுக்கு மரண தண்டனையிலிருந்து விதிவிலக்கு உண்டு. கசையடி போன்ற தண்டனையிலிருந்தும் அவன் தப்பமுடியும். ஆனால் இங்கோ ஒரு பௌத்த பிட்சு நையப்புடைக்கப்படுகிறார். இதில் தவறேதும் இல்லை என்பது போல் அவர் ஈவு இரக்கமின்றி, மனச்சான்றின் உறுத்தலின்றி குரூரமாக அடிக்கப்படுகிறார்.
சிதறுண்ட மக்கள் புத்தமதத்தின் ஆதரவாளர்கள் பௌத்தத்தின் மீது பிராமணீயம் வெற்றிக்கொண்ட போது கூட அவர்கள் பிராமணீயத்துக்குத் திரும்புவதில் அணுவளவும் அக்கறை காட்டவில்லை என்பதை நாம் ஏற்றுக் கொள்வோமானால் ஆரம்பத்தில் நாம் குறிப்பிட்ட இரண்டு கேள்விகளுக்கும் விடை கண்டவர்களாகிறோம். சிதறுண்ட மக்கள் தீண்டப்படாதோராக ஏன் கருதப்பட்டார்கள் என்பதற்கும் விளக்கம் பெறுகிறோம். பார்ப்பனர்கள் புத்த மதத்தின் பகைவர்களாக இருந்ததால் சிதறுண்ட மக்கள் பார்ப்பனர்களை வெறுத்தார்கள்; சிதறுண்ட மக்கள் புத்த மதத்திலிருந்து வெளியேற மறுத்ததால் பார்ப்பனர்கள் அவர்கள் மீது தீண்டாமையைத் திணித்தார்கள். இதை வைத்துப் பார்க்கும்போது, பௌத்தர்களுக்கு எதிராக பார்ப்பனர்கள் தூண்டிவிட்ட பகைமையும் வெறுப்பும் தீண்டாமையின் ஆணிவேர்களில் ஒன்று என்ற முடிவுக்கு வருவது சாத்தியமாகிறது.
சிதறுண்ட மக்கள் ஏன் தீண்டப்படாதோர் ஆனார்கள் என்பதற்குப் புத்த மதத்திற்கும் பிராமணீயத்துக்கும் இடையே நிலவிய பகைமை ஒன்றே காரணமாக இருக்கக்கூடுமா? அவ்வாறு இருக்க முடியாது என்பது தெளிவு. ஏனென்றால் பார்ப்பனர்கள் ஏவிவிட்ட பகைமையும் வெறுப்பும் பொதுவாக பௌத்தர்களுக்கு எதிரானதேயன்றி, குறிப்பாக சிதறுண்ட மக்களை மட்டும் இலக்காக வைத்து உசிப்பி விடப்பட்டதன்று. சிதறுண்ட மக்களை மட்டுமே தீண்டாமை ஒட்டிக் கொண்டிருப்பதால் அவர்கள் மீது தீண்டாமை முத்திரையைக் குத்துவதற்கு வேறு ஏதேனும் சர்ந்தர்ப்ப சூழ்நிலைகள் இதில் அவற்றின் பங்கை ஆற்றியிருக்கக் கூடும். அப்படியானால் அந்த சந்தர்ப்ப சூழ்நிலைகள் என்னவாக இருக்கும்? அவற்றை நிர்ணயிப்பதில் அடுத்து நமது முயற்சியைத் திருப்ப வேண்டும்.
(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 14, இயல் 9)