இந்தியாவில் நிலவும் அரசியல் தேக்க நிலைக்கு தீர்வு காணுவதற்காக, முட்டுக்கட்டை நிலைக்கு முடிவுகட்டுவதற்காக இந்த ஆண்டின் துவக்கத்தில் தொழிற்கட்சி அரசாங்கம் அமைச்சரவைத் தூதுக்குழுவை இந்தியாவுக்கு அனுப்பிவைத்தது. ஓர் அரசியல் நிர்ணயசபை மூலம் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் ஒரு திட்டத்தை இத்தூதுக்குழு முன்வைத்தது.

ambedkhar 350மாகாண சட்டமன்ற உறுப்பினர்களால் ஒற்றை மாற்று வாக்குரிமை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளைக் கொண்டதாக இந்த அரசியல் நிர்ணய சபை அமைந்திருக்கும். அரசியல் நிர்ணய சபையை அமைக்கும் நோக்கத்துக்காக மாகாண சட்டமன்ற உறுப்பினர்களை அமைச்சரவைத் தூதுக்குழுத் திட்டம் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கிறது.

அவை வருமாறு: (1) முஸ்லீம்கள், (2) சீக்கியர்கள், (3) பொதுப் பிரிவினர்கள். இந்தப் பிரிவுகள் ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. ஒவ்வொரு பிரிவினரும் தங்களுக்கெனத் தனிப்பட்ட வாக்காளர்களைக் கொண்டிருப்பர். இதன் பிரகாரம், அரசியல் நிர்ணய சபைக்கான முஸ்லீம் பிரதிநிதிகள் மாகாண சட்டமன்ற முஸ்லீம் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவர்.

இதேபோன்று சீக்கியப் பிரதிநிதிகள் சீக்கிய உறுப்பினர்களாலும், பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள் ஏனையோராலும் தேர்ந்தெடுக்கப்படுவர். ‘பொதுப் பிரிவினர்’ எனப்படுவோரில் 1)இந்துக்கள் 2)தாழ்த்தப்பட்ட வகுப்பினர் 3)இந்தியக் கிறித்தவர்கள் மற்றும் 4) ஆங்கிலோ-இந்தியர்கள் முதலானோர் அடங்குவர்.

2. இந்துக்களோடு தங்களையும் சேர்த்திருப்பதை அறிந்த இந்திய தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பெரிதும் வியப்புக்குள்ளானார்கள். இந்திய தேசிய நீரோட்டத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பினரை ஒரு தனி சக்தியாக அங்கீகரிப்பதாக பன்முறை திரும்பத் திரும்ப ஓர் அரசியலமைப்புச் சட்டமும் திணிக்கப்பட மாட்டாது எனவும் மன்னர்பிரான் அரசு உறுதி அளித்திருந்தது. அமைச்சரவைத் தூதுக்குழு முஸ்லீம்களையும் சீக்கியர்களையும் தனி சக்திகளாக ஏன் அங்கீகரித்திருக்கிறது. அதே தகுதி ஏன் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு மறுக்கப்பட்டது என்று கேட்கப்படுகிறது.

அமைச்சரவைத் தூதுக்குழுவின் யோசனைகள் மீதான விவாதம் ஜூலை 18-ஆம் நாள் சட்டமன்றத்தில் நடைபெற்றது; அப்போது சர்.ஸ்டாபோர்டு கிரிப்ஸ், திரு.அலெக்சாண்டர் மற்றும் பெதிக்-லாரன்ஸ் பிரபு ஆகியோர் இந்த விமர்சனத்திற்கு எதிராக பின்வரும் இரு வகைப்பட்ட வாதங்களை எடுத்து வைத்தனர்.

1) கடந்த பிப்ரவரியில் சட்டமன்றத்திற்கு நடந்த தேர்தலில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்காக ஒதுக்கப்பட்ட இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது. இது தாழ்த்தப்பட்ட வகுப்பினர் காங்கிரசுடன் இருப்பதையும், தங்களுடைய கதிப்போக்கை காங்கிரசிடம் அதாவது இந்துக்களிடம் ஒப்படைத்து விட்டதையும் காட்டுகிறது. இவ்வாறு இருக்கும்போது அவர்களைத் தனியாகப் பிரிப்பதற்கான முகாந்திரம் ஏதுமில்லை.

2) சிறுபான்மையினர் சம்பந்தமான ஓர் ஆலோசனைக் குழு அமைக்கப்படும். அதில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படும். அவர்கள் தங்களுக்குத் தேவையான பாதுகாப்புகளை வகுத்துக் கொள்வது சம்பந்தமான கருத்துகளைத் தெரிவிக்க உரிமை பெற்றிருப்பார்கள்.

இதில் இரண்டாவது வாதம் பயனற்றது மட்டுமல்ல மிக மோசமானதும் கூட. இதன் காரணங்கள் மிகத் தெளிவானவை. ஆலோசனைக் குழுவின் தகுதியும் அதிகாரங்களும் நிர்ணயிக்கப்படவில்லை. தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான பிரதிநிதித்துவம் எவ்வளவு என்பது குறிப்பிடப்படவில்லை. ஆலோசனைக் குழுவின் முடிவுகள் ஒரு சாதாரணப் பெரும்பான்மையினாலேயே நிறைவேற்றப்படும்.

கடைசியாக, அந்தக் குழு அரசியல் நிர்ணய சபையின் வெறும் பிரதிபலிப்பாக இருக்குமே அன்றி வேறல்ல. அரசியல் நிர்ணய சபையில் இடம்பெறும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதிகள் அனைவரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருப்பர். அவர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதிகள் அல்லர். ஆகவே அவர்கள் காங்கிரஸ் கட்சியின் கட்டளைக்குக் கட்டுப்பட்டவர்கள் ஆவர். ஆலோசனைக் குழுவில் அமர்த்தப்படுவோரும் அதே கட்சிக் கட்டளைக்கு உட்பட்டவர்கள். அவர்கள் அரசியல் நிர்ணய சபையிலும் சரி அல்லது ஆலோசனைக் குழுவிலும் சரி, தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் உண்மையான கருத்தை எடுத்துக் கூறுமுடியாது.

தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு தனியான சுதந்திரமான பிரதிநிதித்துவத்தை தாங்கள் தவறியதை நியாயப்படுத்துவதற்கு அமைச்சரவைத் தூதுக்குழு எடுத்தளித்த பிரதானவாதம் கடந்த தேர்தலில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான இடங்களை காங்கிரஸ் தான் வென்றது என்பதேயாகும். இந்த வாதம் கூட தாக்குப்பிடித்து நிற்க முடியாது. இறுதித் தேர்தலில் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் இடங்களில் காங்கிரஸ் வென்றது என்பது உண்மையே. ஆனால் பல காரணங்களுக்காக இத்தேர்தல் முறைகளை ஒரு அளவுகோலாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

முதலாவதாக, பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் ஒத்துழைத்த தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் கட்சி போன்ற கட்சிகள் இதன் காரணமாக மக்களிடையே செல்வாக்கு இழந்து போயிருந்தன.

இரண்டாவதாக, தேர்தல் சமயத்தில் நடைபெற்ற இந்திய தேசிய ராணுவ விசாரணை காங்கிரசுக்கு அனுகூலமாகவும் ஏனைய கட்சிகளுக்குப் பிரதிகூலமாகவும் அமைந்துவிட்டது. தேர்தல் நேரத்தில் இந்திய தேசிய ராணுவ விசாரணை நடைபெற்றிருக்கவில்லை என்றால், காங்கிரஸ் படுதோல்வியடைந்திருக்கும். அந்த அளவுக்கு அதன் செல்வாக்கு வீழ்ச்சியடைந்திருந்தது.

இந்தத் தேர்தல் முடிவுகளை ஒரு அளவுகோலாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதற்கு இந்த இரண்டு காரணங்களை தவிர, இதுபோல் தாழ்த்தப்பட்ட வகுப்பினரைக் காங்கிரஸ் பிரதிநிதித்துவப்படுத்துகிறதா இல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்கு இத்தேர்தல் முடிவுகளை ஓர் அளவுகோலாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதற்கும் ஒரு விசேடக் காரணம் இருக்கிறது. அந்தக் காரணம் என்ன? தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் தேர்தல்களை இறுதியாக முடிவு செய்யும் விஷயத்தில் இந்துக்களும் வாக்களிக்கக்கூடிய ஒரு கூட்டு வாக்காளர் முறை இருந்து வருவதுதான் அந்தக் காரணம்.

இந்துக்களின் வாக்குகள் மிக முக்கியமானவையாதலால் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான இடங்களில் போட்டியிடும் தாழ்த்தப்பட்ட வகுப்பு வேட்பாளரை முற்றிலும் இந்து வாக்குகளைக் கொண்டு தேர்ந்தெடுப்பது காங்கிரசுக்குச் சுலபமாகி விடுகிறது. ஆகவே மாகாண சட்டசபைக்களுக்கு காங்கிரசின் சார்பாக நிற்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த வேட்பாளர்கள் முற்றிலும் இந்துக்களின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்களேயன்றி தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் வாக்குகளால் அல்ல என்பதை அமைச்சரவைத் தூதுக்குழு மறுக்க முடியாது.

இறுதி சுற்றுத் தேர்தலுக்கு முன் நடக்கும் பூர்வாங்கத் தேர்தல் முடிவுகள்தான் காங்கிரஸ் தாழ்த்தப்பட்ட வகுப்பினரைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறதா என்பதை நிர்ணயிக்கும் உண்மையான அளவுகோலாகும். ஏனெனில் பூர்வாங்கத் தேர்தலில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்குத் தனி வாக்காளர் தொகுதி உள்ளது. அதில் வாக்களிக்க இந்துக்களுக்கு உரிமை கிடையாது. ஆகவே பூர்வாங்க தேர்தல்கள்தான் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் உண்மையான உணர்வுகளைப் பிரதிபலிக்கக் கூடியவை. அவ்வாறு பார்க்கும்போது பூர்வாங்கத் தேர்தல் முடிவுகள் எதைக் காட்டுகின்றன? தாழ்த்தப்பட்ட வகுப்பினர் காங்கிரசுடன் இருக்கின்றனர் என்பதை அவைக் காட்டுகின்றனவா?

மாகாண சட்டசபைகளில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 151 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. சிந்து மற்றும் வடமேற்கு எல்லைப்புற மாகாணங்களைத் தவிர ஏனைய பல்வேறு மாகாணங்களில் அவை பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தன. பூர்வாங்கத் தேர்தல்கள் என்பவை கட்டாயமல்ல. ஆனால் ஒரு இடத்திற்கு நான்கு வேட்பாளர்களுக்கு மேல் போட்டியிட்டால் அப்போது பூர்வாங்கத் தேர்தல்கள் நடத்துவது அவசியமாகிறது.

கடந்த இறுதிச் சுற்றுத் தேர்தலுக்கு முந்தைய பூர்வாங்கத் தேர்தலில், மொத்தம் 151 தொகுதிகளில் 40 தொகுதிகளில் பூர்வாங்கத் தேர்தல் நடத்துவது கட்டாயமாக்கப்பட்டது. அவை பின்வருமாறு பகிர்ந்தளிக்கப்பட்டன:

மெட்ராஸ்            -     10

பம்பாய்               -     3

வங்காளம்            -     12

ஐக்கிய மாகாணங்கள்  -     3

மத்திய மாகாணங்கள் -     5

பஞ்சாப்               -     7

பீகார் மற்றும் ஒரிஸ்ஸா மாகாணங்களில் பூர்வாங்கச் சுற்றுத் தேர்தல்கள் இல்லை.

40 தொகுதிகளின் துவக்கச் சுற்றுத் தேர்தல் முடிவுகள் இவ்வறிக்கையின் இணைப்பில் பட்டியலிடப்பட்டுள்ளன அம்முடிவுகள் நிரூபிப்பதாவது:

1) தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு மொத்தம் இருந்த 283 இடங்களில் 46 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் தனது வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது (பார்க்க:அட்டவணை 1). வெற்றி பெற்ற மொத்த வேட்பாளர்கள் 168 பேரில் காங்கிரஸ் வேட்பாளர்கள் 38 பேர் மட்டுமே. (பார்க்க: அட்டவணை 5)

2) பூர்வாங்கச் சுற்றுத் தேர்தலில் ஒரு கட்சி நுழைவதன் நோக்கமே, அது தன் கட்சியின் சார்பாக நான்கு வேட்பாளர்களை நிறுத்தி அதன் மூலம் மற்ற எதிர்க்கட்சிகளை வெளியேற்றிவிட்டு இறுதிச் சுற்றுத் தேர்தலுக்கு வருவதுதான். ஒரு கட்சி தன் சார்பாக நான்கு வேட்பாளர்களை நிறுத்த முடியுமா என்பது தன் கட்சிக்கு வாக்காளர்கள் எந்த அளவுக்கு வாக்களிப்பார்கள் என்று அது கொண்டுள்ள நம்பிக்கையைப் பொறுத்துள்ளது. காங்கிரஸ் ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு வேட்பாளருக்கு மேல் நிறுத்த முயன்றதே இல்லை.

தாழ்த்தப்பட்ட வகுப்பினர் தங்களுக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை இல்லாததே காங்கிரசின் இந்தச் செயலுக்குக் காரணம் என்பது தெளிவு. தான் போட்டியிடும் ஒவ்வொரு தொகுதியிலும் நான்கு வேட்பாளர்களை நிறுத்த ஒரு கட்சியினால் முடிந்ததென்றால் அது தாழ்த்தப்பட்ட வகுப்பினர் சம்மேளனம்தான். (பார்க்க: அட்டவணை 2, பகுதிகள் 1, 5 பத்திகள் 3 மற்றும் 4)

3) காங்கிரஸ் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் பூர்வாங்கச் சுற்றுத் தேர்தல்களின் மொத்த வாக்குப் பதிவில் அது பெற்றது 28 சதவீதமே என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. (பார்க்க: அட்டவணை IV)

4) இறுதிச் சுற்றுத் தேர்தலில் இந்துக்களின் வாக்குகள் உதவியுடனாவது தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற ஆசை மட்டும் இல்லையென்றால், சுயேச்சை வேட்பாளர்கள் அனைவரும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் சம்மேளனத்தின் உறுப்பினர்களாக இருப்பார்கள். அவ்வகையில் பார்த்தால் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் சம்மேளனம்தான் அச்சாதியினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே கட்சி என்பதும், காங்கிரஸ் அல்லாத 72 சதவீத வாக்களிப்பும் அவர்களையே சேரும் என்பதும் ஏற்கக் கூடியதாகும். (பார்க்க: அட்டவணை IV).

டாக்டர் அம்பேத்கரைப் பின்பற்றுபவர்கள் பம்பாய் மற்றும் மத்திய மாகாணங்களில் உள்ள தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மட்டுமே என்று அமைச்சரவைத் தூதுக் குழுவினர் வாதிட்டனர்.

இந்தக் கூற்றுக்கு எத்தகைய அடிப்படையும் இல்லை. தாழ்த்தப்பட்ட வகுப்பினர் சம்மேளனம் பம்பாய் மற்றும் மத்திய மாகாணங்களைப் போல் குறிப்பிடத்தக்க தேர்தல் வெற்றிகளை ஏனைய மாகாணங்களிலும் பெற்றுள்ளது. சம்மேளனம் மற்ற மாகாணங்களிலும் இயங்கி வருகிறது. இவ்வறிக்கையை அளித்த தூதுக்குழுவினர் அரசியல் நிர்ணய சபைக்கு நடைபெற்ற தேர்தலில் டாக்டர் அம்பேத்கர் பெற்ற மகத்தான வெற்றியைக் கணக்கிலெடுத்துக் கொள்ளத் தவறிவிட்டனர்.

அவர் வங்காள சட்டசபையிலிருந்து ஒரு வேட்பாளராகப் போட்டியிட்டார். அவர் அதில் 7 முதன்மை வாக்குகளைப் பெற்றதோடல்லாமல் காங்கிரஸ் கட்சித் தலைவரான திரு.சரத் சந்திரபோசையே தோற்கடித்து பொது இடத்துக்கான வாக்களிப்பில் முன்னணியில் நின்றார். டாக்டர் அம்பேத்கருக்கு பம்பாய் மற்றும் மத்திய மாகாணங்களுக்கு வெளியே செல்வாக்கு இல்லையென்றால் அவரால் எப்படி வங்காளத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட முடிந்தது? வங்க மாகாண சட்டசபையில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 30 இடங்கள் உள்ளன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இவற்றில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 28 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அம்பேத்கர் கட்சியைச் சேர்ந்த மீதம் இருவரில் ஒருவர் தேர்தல் நாளன்று உடல்நலமின்றி வாக்களிக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் சார்பாக நின்று தேர்ந்தெடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட வகுப்பு உறுப்பினர்கள் 6 பேர் காங்கிரஸ் கட்டளையை மீறி டாக்டர் அம்பேத்கருக்கு வாக்களித்துள்ளனர் என்பது தெளிவாகிறது. இதிலிருந்து காங்கிரசைச் சார்ந்த தாழ்த்தப்பட்ட வகுப்பு உறுப்பினர்கள் கூட அவரை தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளனர் என்று தெரிகிறது. ஆகவே இது தூதுக்குழுவின் அறிக்கை முற்றிலும் தவறு என்பதை நிரூபிக்கிறது.

அமைச்சரவைத் தூதுக்குழுவின் சரணாகதியால் மிகவும் ஊக்கம் பெற்ற காங்கிரஸ் அக்குழுவுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் சிறுபான்மையினர் அல்ல என்று கூறும் அளவிற்கு சென்றுவிட்டது. இது எதைக் குறிக்கிறது? மற்ற சிறுபான்மை சமூகத்திற்கு அளிக்கப்படும் பாதுகாப்பினைக் கூட தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு காங்கிரஸ் அளிக்கத் தயாராய் இல்லை என்பதையே குறிக்கிறது. காங்கிரசின் இந்தக் கூற்றை அமைச்சரவைத் தூதுக்குழு மறுக்கவில்லை. இங்குதான் ஒரு பெரிய ஆபத்து மறைந்திருக்கிறது. ஆகவே விவாதத்தின்பொழுது தூதுக்குழுவை மடக்கி, அது தாழ்த்தப்பட்ட வகுப்பினரைச் சிறுபான்மைச் சமூகத்தைச் சார்ந்தவர்களா இல்லையா என்பதைக் கூறும்படிக் கட்டாயப்படுத்துவது அவசியமாகிறது.

இறையாண்மை மாற்றப்படுவதற்கு முன் எல்லாச் சிறுபான்மையினரும் போதுமான பாதுகாப்புப் பெற்றுள்ளார்கள் என்ற மனநிறைவு நாடாளுமன்றத்திற்கு ஏற்பட வேண்டும் என்று தூதுக் குழுவினர் தங்கள் பிரேரணைகளில் தெரிவித்துள்ளனர். ஆனால் இப்பாதுகாப்பினைப் பெறுவதற்கான எந்த வழிமுறைகளையும் குழுவினர் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. சிறுபான்மையினரின் பாதுகாப்பினை ஆராய நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் சேர்ந்த ஒரு கூட்டுக் குழு ஏற்படுத்தப்படுமா என்பதும் தெளிவாக்கப்படவில்லை.

பாதுகாப்புகள் போதுமானவையா என்ற முடிவுக்கு வருவதில் மன்னர்பிரான் அரசு தனது சொந்த மதிப்பீட்டை மேற்கொள்ளும் என்று கூட குழு கூறவில்லை. இந்த விஷயங்கள் திட்டவட்டமாக்கப்படுவது அவசியம். ஏனென்றால் இது தூதுக் குழுவுக்கு பின்னால் தோன்றிய யோசனையாகும். அதன் ஆரம்ப திட்டங்களில் இது இடம்பெறவில்லை. சிறுபான்மையினரை மயக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட ஓர் உந்தி என்றே இதனை எண்ணத் தோன்றுகிறது. 

 (பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் தொகுதி 19)

Pin It