சென்சஸ் ஆணையர் வெளியிட்ட சுற்றறிக்கையில் காணப்படும் 10 ஆவது சோதனையை இப்போது நாம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வோம். இதுபற்றி ஏற்கெனவே முந்தைய அத்தியாயத்தில் குறிப்பிட்டிருக்கிறோம். இந்த சோதனை மாட்டிறைச்சி உண்பதைக் குறிக்கிறது.

     ambedkar 240தீண்டப்படாதவர்கள் என்று பொதுவாக வகைப்படுத்தப்படும் வகுப்பினரின் உணவில் இறந்துபோன பசுவின் இறைச்சி பிரதான இடம் வகிக்கிறது என்று சென்சஸ் அறிக்கைகள் கூறுகின்றன. எந்த இந்து சமூகமும் அது எவ்வளவு கீழானதாக இருந்தாலும் பசுவின் இறைச்சியைத் தொடுவதில்லை. மறுபுறம் செத்தப் பசுவுடன் ஏதேனும் ஒருவகையில் சம்பந்தப்படாத தீண்டப்படாத சமூகம் எதுவுமே இல்லை எனலாம். சிலர் பசுவின் இறைச்சியை உட்கொள்கின்றனர். சிலர் அதன் தோலை உரிக்கின்றனர். சிலர் அதன் தோலிலிருந்தும் எலும்புகளிலிருந்தும் ஏதேனும் பொருள்களைத் தயாரிக்கின்றனர்.

     தீண்டப்படாதவர்கள் மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள் என்பதைச் சென்சஸ் ஆணையரின் ஆய்வு நிலைநாட்டியுள்ளது. எனினும் இங்கு ஒரு கேள்வி எழுகிறது. தீண்டாமையின் தோற்றத்திற்கும் மாட்டிறைச்சி உண்பதற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? அல்லது தீண்டப்படாதோரின் பொருளாதார வாழ்க்கையில் இது ஒரு வெறும் தற்செயல் நிகழ்ச்சியா? தீண்டப்படாதவர்கள் மாட்டிறைச்சி உண்கிறார்கள் என்ற காரணத்தினாலேயே சிதறுண்ட மக்கள் தீண்டப்படாதவர்களாகக் கருதப்பட்டார்கள் என்று நம்மால் கூறமுடியுமா? இந்தக் கேள்விக்கு ‘ஆம்’ என்று பதிலளிப்பதற்கு எத்தகைய தயக்கமும் காட்டவேண்டியதில்லை. நமக்குத் தெரியவந்துள்ள விவரங்களைக் கொண்டுபார்க்கும்போது வேறு எந்தப் பதிலும் உடன்பாடானதாக இருக்கமுடியாது.

     முதலாவதாக, தீண்டப்படாதவர்கள் அல்லது அவர்களைக் கொண்ட பிரதான சமூகத்தினர் இறந்த பசுவை உண்கின்றனர். இவ்வாறு இறந்த பசுவை உண்பவர்கள் தீண்டாமைக்கு ஆளாகின்றனர் என்ற உண்மை நம் முன்னே இருக்கிறது. தீண்டாமைக்கும் இறந்த பசுவைப் பயன்படுத்துவதற்கும் இடையேயான தொடர்பு பெரிய அளவிலும் மிக நெருக்கமாகவும் அமைந்திருக்கிறது. இதனால் இது தீண்டாமைக்கான மூலகாரணங்களில் ஒன்று என்ற கோட்பாடு மறுக்கமுடியாததாகத் தோன்றுகிறது. இரண்டாவதாக, தீண்டப்படாதவர்களை இந்துக்களிடமிருந்து ஏதேனும் பிரிக்கிறது என்றால் அது மாட்டிறைச்சி சாப்பிடுவதாகத்தான் இருக்கமுடியும். இந்துக்களின் உணவுக் கட்டுப்பாடுகளை மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் கூட பிரிக்கும் இயல்புகொண்ட இரண்டு கட்டுப்பாடுகள் இருப்பது தெரியவரும். புலால் உணவு கூடாது என்று ஒரு தடை இருக்கிறது. இது இந்துக்களைச் சைவ உணவு உண்பவர்கள், புலால் உண்பவர்கள் என்று இரு பிரிவுகளாகப் பிரிக்கிறது. இது தவிர மற்றொரு கட்டுப்பாடும் இருக்கிறது. அதுதான் பசு இறைச்சி உண்ணக்கூடாது என்ற தடை. இது இந்துக்களைப் பசு இறைச்சி உண்பவர்கள் என்றும், உண்ணாதவர்கள் என்றும் பிரிக்கிறது. தீண்டாமைக் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது முதல் பிளவு முக்கியத்துவம் வாய்ந்ததல்ல என்பது புலனாகும். ஆனால் இரண்டாவது பிளவு அப்படியல்ல. அது தீண்டத்தக்கவர்களைத் தீண்டத்தகாதவர்களிடமிருந்து முற்றிலுமாகப் பிரித்துக் காட்டுகிறது. தீண்டத்தக்கவர்கள் அவர்கள் சைவ உணவு உண்பவர்களாக இருந்தாலும் அல்லது புலால் உண்பவர்களாக இருந்தாலும் பசு மாமிசம் உண்ணப்படுவதைக் கடுமையாக எதிர்ப்பதில் ஒன்றுபட்டு நிற்கின்றனர். தீண்டப்படாதவர்கள் இதற்கு நேர்மறையான நிலையில் இருக்கின்றனர். அவர்கள் பசு மாமிசத்தை எத்தகைய மன உறுத்தலுமின்றிச் சாப்பிடுகின்றனர். இன்னும் சொல்லப்போனால் அதனை அறவே இயல்பானதாகவும், ஒரு பழக்கமாகவும் கொண்டிருக்கின்றனர். (பசு மாமிசத்தை சாப்பிடுபவர்கள் என்று இந்துக்கள் கூறும் குற்றச்சாட்டைத் தீண்டப்படாதவர்களால் மறுக்க முடியவில்லை. இந்தப் பழக்கத்தைக் கைவிடுவதற்குப் பதிலாக, இறந்த பசுவின் இறைச்சியைச் சாப்பிடுவதை நியாயப்படுத்தும் ஒரு சித்தாந்தத்தைத் தீண்டப்படாதவர்கள் கண்டுபிடித்தனர். இறந்த பசுவின் இறைச்சியைச் சாப்பிடுவது அதன் உடலை வெளியே வீசியெறிந்து அழுக விடுவதைவிட பசுவுக்குச் செய்யும் சிறந்த மரியாதையாகும் என்பதே இந்தச் சித்தாந்தத்தின் உள்ளுறை சாரம்.)

     இத்தகைய சூழ்நிலையில், பசு இறைச்சி உண்ணும் வழக்கத்தை அருவருப்போடு பார்ப்பவர்கள் பசுமாமிசம் சாப்பிடுபவர்களை தீண்டத்தகாதவர்களாக நடத்துகின்றனர் என்று கூறப்படுவது வலிந்து பெறப்பட்ட கருத்தொன்று மல்ல.

     பசு இறைச்சி உண்பது தீண்டாமை தோன்றுவதற்குப் பிரதான காரணமாக இருந்ததா, இல்லை என்ற எத்தகைய ஊகத்திலும் இறங்குவதற்கு உண்மையிலேயே அவசியம் ஏதுமில்லை. இந்தப் புதிய கோட்பாட்டுக்கு இந்து சாஸ்திரங்களே ஆதரவளிக்கின்றன. வேத வியாச ஸ்மிருதியில் இடம் பெற்றிருக்கும் பின்வரும் சுலோகம் அந்த்யஜாக்கள் வரிசையில் இடம்பெற்றுள்ள வகுப்பினர்களைக் குறிப்பிட்டுக் கூறுவதோடு, இவ்வாறு அவர்கள் ஏன் சேர்க்கப்பட்டார்கள் என்பதற்கான காரணங்களையும் விளக்குகிறது. (கானேயின் தர்ம சாஸ்திர வரலாற்றிலிருந்து எடுத்துக் கையாளப்பட்ட மேற்கோள் தொகுதி II,பாகம் I, பக்.71)

     12-13 “சார்மகர்கள் (செருப்புத் தைப்பவர்கள்), பாட்டர் (படைவீரன்), பில்லா, இரசகர், (சலவையாளர்), புஸ்கரர், நடார், (நடிகர்), விரடா, மேதர், சண்டாளர், தாசர், சுவபாகர், கோலிகர் – இவர்களும் பசு இறைச்சி உண்ணும் ஏனையோறும் அந்த்யஜாக்கள் எனப்படுவர்”

     பொதுவான ஸ்மிருதிகர்த்தாக்கள் தங்கள் சித்தாந்தங்களுக்கு ஏன், எப்படி என்றெல்லாம் விளக்கம் தரமாட்டார்கள். ஆனால் இங்கு ஒரு விதிவிலக்கைக் காண்கிறோம். ஏனென்றால் வேதவியாச ஸ்மிருதி தீண்டாமைக்கான காரணத்தை விளக்குகிறது. “பசு மாமிசம் சாப்பிடும் மற்றவர்களும்” என்னும் வாசகம் இங்கு மிக முக்கியமானது. தீண்டாமைக்கான மூல காரணத்தை பசு மாமிசம் சாப்பிடுவதில் காணவேண்டும் என்பதை ஸ்மிருதிகர்த்தாக்கள் அறிந்திருந்தார்கள் என்பதையே இது காட்டுகிறது. இந்த ஸ்மிருதியின் கருத்து எல்லா வாதங்களுக்கும் முடிவு கட்டுகிறது. சொல்லப்போனால் மூலத்திலிருந்தே இது நமக்கு நேரடியாகக் கிட்டியிருக்கிறது. மேலும் அது யுக்திக்குப் பொருத்தமாகவும் இருக்கிறது; ஏனென்றால் நமக்குத் தெரிந்துள்ள விவரங்களுக்கு அது உடன்பாடானதாகவும் இருக்கிறது.

     தீண்டாமைக்கான ஆணிவேர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் நாம் மேற்கொண்டிருக்கும் புதிய அணுகுமுறை தீண்டாமையின் அடிமூலங்களுக்கான இரண்டு ஆதாரங்களை வெளிக் கொணர்ந்திருக்கிறது. இவற்றில் ஒன்று பௌத்தர்களுக்கு எதிராக பார்ப்பனர்கள் பரப்பிவந்த இகழ்ச்சியும், ஏளனமும், அவமதிப்புமிக்க சூழ்நிலை. மற்றொன்று சிதறுண்ட மக்கள் தொடர்ந்து கடைப்பிடித்துவந்த பசுமாமிசம் சாப்பிடும் பழக்கம். ஏற்கெனவே நாம் குறிப்பிட்டது போல், சிதறுண்ட மக்களைத் தீண்டாமை எனும் கறை, இழுக்கு பீடிப்பதற்கு முதலாவது குறிப்பிட்ட சூழ்நிலை போதிய காரணமாக இருக்கமுடியாது. ஏனென்றால் பௌத்தர்களுக்கு எதிராக பார்ப்பனர்கள் கட்டவிழ்த்து விட்டப் பகைமைப் பிரசாரம், விஷமப் பிரசாரம் மிகவும் பொதுப்படையாக இருந்தது மட்டுமன்றி, சிதறுண்ட மக்களை மட்டுமல்லாமல் எல்லாப் பௌத்தர்களையுமே பாதிப்பதாக இருந்தது. அப்படியானால் சிதறுண்ட மக்கள் மட்டும் ஏன் தீண்டத்தகாதவர்கள் ஆனார்கள் என்று இங்கு வினவலாம்; இதற்கு காரணம் இருந்தது; சிதறுண்ட மக்கள் பௌத்தர்களாக இருந்தது மட்டுமன்றி, பசு இறைச்சி சாப்பிடும் பழக்கத்தை அவர்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வரவும் செய்தனர்; பசுவின்மீது பற்றுதலையும் பயபக்தியையும் புதிதாக வளர்த்துக் கொண்டிருந்த பார்ப்பனர்களுக்கு இதன் மூலம் ஒரு புதிய ஆயுதம் கிடைத்தது; அதைக் கொண்டு, அவர்கள் தங்கள் தாக்குதலைத் தீவிரப்படுத்தினர். எனவே, சிதறுண்ட மக்கள் ஏளனத்துக்கும் இகழ்ச்சிக்கும் உள்ளானதற்கு அவர்கள் பௌத்தர்களாக இருந்ததும், அவர்கள் தீண்டாமையின் கொடுமைக்கு ஆளானதற்குப் பிரதான காரணம் பசுவின் இறைச்சியை அவர்கள் சாப்பிட்டு வந்ததும் தான் என்று நாம் முடிவுக்கு வரலாம்.

     ஆனால் பசு இறைச்சி சாப்பிடுவது தீண்டாமைக்குக் காரணம் என்ற கோட்பாடு இங்கு பல கேள்விகளை இயல்பாகவே எழுப்புகிறது. விமர்சகர்கள் நிச்சயமாகப் பின்வருமாறு கேட்பார்கள். பசுஇறைச்சி சாப்பிடுவதை இந்துக்கள் வெறுப்பதற்குக் காரணம் என்ன? பசு மாமிசம் சாப்பிடுவதை இந்துக்கள் எப்போதுமே எதிர்த்துவந்திருக்கிறார்களா? அப்படியில்லை என்றால் அதன் மீது அவர்கள் இவ்விதம் அருவருப்பு காட்டுவது ஏன்? தீண்டப்படாதவர்கள் ஆரம்பம் முதலே பசு இறைச்சி சாப்பிடும் பழக்கத்தைக் கைக்கொண்டு வந்தார்களா? இந்தப் பழக்கத்தை இந்துக்கள் கைவிட்டபோது இவர்கள் மட்டும் ஏன் கைவிடவில்லை? தீண்டப்படாதவர்கள் எப்போதுமே தீண்டப்படாதவர்களாக இருந்து வருகின்றனரா? பசுஇறைச்சி சாப்பிட்டபோதிலும் கூட தீண்டப்படாதவர்கள் தீண்டப்படாதவர்களாக இல்லாத ஒரு காலம் இருந்தது என்றால், பசுஇறைச்சி உண்பது பிற்காலத்தில் தீண்டாமைக்கு ஏன் வழி வகுத்தது? இந்துக்களும் பசு மாமிசம் சாப்பிட்டு வந்தார்கள் என்றால் எப்போது அதை அவர்கள் கைவிட்டார்கள்? பசு மாமிசம் சாப்பிடும் பழக்கத்தின்பால் இந்துக்கள் கொண்டுள்ள அருவருப்பின் விளைவே தீண்டாமை என்றால், பசு இறைச்சி சாப்பிடுவது இந்துக்கள் கைவிட்டபிறகு எவ்வளவு காலம் கழித்து தீண்டாமை தோன்றிற்று? இந்தக் கேள்விகளுக்குப் பதில் கிடைத்தாக வேண்டும். இக்கேள்விக்குப் பதில் கிடைக்கவில்லை என்றால் இக்கோட்பாடு ஐயுறக்குரியதாகவே இருக்கும். அது வெளித்தோற்றத்துக்கு நம்பத்தக்கதாக இருந்தாலும், முற்றமுடிவான ஒன்றாக ஏற்றுக்கொள்வதற்கில்லை. இந்தக் கோட்பாட்டை முன்வைத்தவன் என்ற முறையில் இக்கேள்விகளுக்குப் பதிலளிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். பின்கண்ட தலைப்புகளில் இப்பிரச்சினையை ஆராய உத்தேசித்திருக்கிறேன்.

  • இந்துக்கள் ஒருபோதும் மாட்டு இறைச்சி சாப்பிட்டதில்லையா?
  • மாட்டு இறைச்சி சாப்பிடுவதை இந்துக்கள் கைவிடுவதற்குக் காரணம் என்ன?
  • பார்ப்பனர்கள் சைவ உணவு சாப்பிடுபவர்களாக ஏன் ஆனார்கள்?
  • மாட்டிறைச்சி சாப்பிடுவது ஏன் தீண்டாமைக்கு வழி வகுத்தது?
  • தீண்டாமை எப்போது தோன்றிற்று?

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 14, இயல் 10)

Pin It