பண்டைய சமுதாயத்தை எடுத்துக்கொண்டால் தீட்டு பற்றி அச்சமுதாயத்தில் நிலவிவந்த கருத்து பூர்வீக சமுதாயத்தில் நிலவி வந்த கருத்துடன் அடிப்படையில் மாறுபட்டதாக இருக்கவில்லை என்பதைக் காணலாம். தீட்டுக்கான மூல காரணங்கள் குறித்து வேறுபாடு இருந்தது. தூய்மைப்படுத்தும் சடங்குகள் குறித்து வேறுபாடு இருந்தது. தூய்மைப்படுத்தும் சடங்குகள் குறித்து வேறுபாடு இருந்தது. ஆனால் இந்த வேறுபாடுகள் தவிர பூர்வீக சமுதாயத்திலும் சரி, பண்டைய சமுதாயத்திலும் சரி தீட்டின் பாணியும், தூய்மைப்படுத்தும் முறையும் ஒன்றுபோலவே இருந்தன.

ambedkar 216எகிப்திய தீட்டுப்படும் முறையை பூர்வீக அமைப்பில் நடைமுறையிலிருந்த தீட்டுப்படும் முறையுடன் ஒப்பிட்டால் எகிப்தில் அது மிகப் பரந்த அளவில் மேற்கொள்ளப்பட்டது என்பதைத் தவிர முக்கிய வேறுபாடு வேறு எதுவும் இல்லை.

கொலைப்பழி, ஆவி நடமாட்டம், மரணம் சம்பவித்தல், உடலுறவு கொள்ளுதல், குழந்தைப் பிறப்பு, பிணத்தை அப்புறப்படுத்தல், பட்டாணி சூப், பாலடைக்கட்டி, வெள்ளைப்பூண்டு போன்ற சிலவகை உணவுப் பொருள்களை உட்கொள்ளுதல், உரிமையில்லாதவர்கள் புனித இடங்களில் பிரவேசித்தல், சில சமயங்களில் அருவருக்கத்தக்க பேச்சு, சண்டை சச்சரவு போன்றவை, தூய்மைக்கேடுகளாகக் கிரேக்கர்களால் கருதப்பட்டன. இந்தத் தூய்மைக்கேடுகளை அகற்றிப் புனிதப்படுத்தும் சடங்குகளை கிரேக்கர்கள் கவோபய்யா எனக் குறிப்பிட்டனர். புனித தீர்த்தம், சூடம், வெங்காயம், ஆவிபிடித்தல், நறுமணப்புகை, அக்னி வளர்த்தல், சிலவகை மரக்கிளைகள், நிலக்கீல், கம்பளி, சில குறிப்பிட்ட ரகத்தைச் சேர்ந்த மணிக் கற்கள், தாயத்துகள், சூரியஒளி, பொன்போன்ற பிரகாசமான பொருள்கள், பலியிடப்பட்ட விலங்குகள், அதிலும் முக்கியமாக பன்றிகள், குறிப்பாக அவற்றின் இரத்தம், தோல் போன்றவை இந்தச் சடங்குப் பொருள்களில் அடங்கும். இவையன்றி, சில குறிப்பிட்ட விழாக்களும், விழாச் சடங்குகளும் நடத்தப்படுகின்றன; சாபமிடுவதையும் தீட்டுக்கான பழியை சிலர் மீது சுமத்துவதையும் இதற்கு உதாரணமாகக் கூறலாம். தீட்டுக்குரியவர்கள் சில சமயங்களில் சமூகத்திலிருந்து விலக்கி வைக்கப்படுவதும் உண்டு. இதல்லாமல் ஓர் அசாதாரண முறையும் கைக்கொள்ளப்பட்டது; தீட்டுப்பட்டவரின் முடி வெட்டப்படுவதையும் அல்லது அவரை தேவதைக்குப் பலியிடுவதையும் இவ்வகையில் குறிப்பிடலாம்.

தனி நபர்கள் மட்டுமன்றி ஒரு முழுப் பிரதேசமும், சமூகமும் தீட்டுப்படுவதிலும், அந்தத் தீட்டை அகற்றுவதிலும் ரோமாபுரியினர் நம்பிக்கை கொண்டிருந்தனர். வினைமுறைச் சடங்குகள் செய்து வீட்டைத் தூய்மைப்படுத்துவதை லஸ்ட்ராடியோ என அவர்கள் அழைத்தனர். இது போன்றே ஒரு வட்டாரத்தை (பாகி) குறிப்பிட்ட காலங்களில் தூய்மைப்படுத்தும் நடைமுறையும் கைக்கொள்ளப்பட்டது; லஸ்ட்ராடியோபாகி என இது வழங்கப்பட்டது. சம்பந்தப்பட்ட வட்டாரத்தின் எல்லைகளைச் சுற்றிலும் ஒரு சமய ஊர்வலம் நடைபெற்று, கழுவாய் பலிகொடுப்பது இந்தச் சடங்குமுறையில் அடங்கும். பண்டை நாட்களில் நகரத்தின் கோட்டை மதில்களைச் சுற்றிலும் இதே போன்ற ஊர்வலம் நடைபெற்றதாகத் தோன்றுகிறது; இது அம்புர்பியம் எனக் கூறப்பட்டது. வரலாற்றுக் காலங்களில் ஏதேனும் பேரிடர் நேரிடும் போது நகரம் முழுவதையும் தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படுவது உண்டு; இரண்டாவது பூனிக் யுத்தம் விளைவித்த கொடிய நாசங்களுக்குப் பிறகு இவ்வாறுதான் நகரம் முழுவதுமே தூய்மைப்படுத்தப்பட்டது. தேவதைகளைச் சாந்தப்படுத்துவதே இத்தகைய பிராயச்சித்தங்கள் அனைத்தின் குறிக்கோளாகும். அந்நாட்களில் ஒரு குடியேற்றத்தைத் தொடங்கும்போது சுத்திகரிப்புச் சடங்கு மேற்கொள்ளப்படுவது வழக்கம், எல்லைகளைப் பாதுகாக்கும் தெர்மினாலியா சடங்கும், நகரத்தெருக்களைப் பாதுகாக்கும் காம்பிடாலியா சடங்கும் அநேகமாக தூய்மைப்படுத்தலை அடிப்படையாகக் கொண்டவையேயாகும். மிகப்பிந்திய காலம்வரை, லூபெர்சி எனப்படும் சமயக்குருக்கள் ஆதிகால ரோமாபுரியின் எல்லைகளில் வாழ்ந்துவந்தனர். அந்த ஆதிகால நகரின் மிகவும் தொன்மை வாய்ந்த பிரதேசத்தில் இதற்கு முன்னர் ஒரு புனிதச் சடங்கு நடைபெற்றது. ஆர்வல் எனப்படும் தொன்மை மிக்க சமய குருமார் அமைப்பு இதனை முன்னின்று நடத்தியது. இந்தச் சடங்கு அம்ப்ரவாலியா என அழைக்கப்பட்டது; இது கழுவாய் தேடுவதையே பிரதானமாக அடிப்படையாகக் கொண்டிருந்தது. ரோமாபுரியின் எல்லைகள் விரிவடைந்தபோது, அதற்கேற்ப இந்தச் சடங்கு முறைகள் விரிவடைந்ததாகத் தெரியவில்லை. இந்தப் பிராய்ச்சித்த சடங்குகள் இத்தாலிக்குள்ளேயும் வெளியேயும், முக்கியமாக கிரீசிலும் ஒரே மாதிரியானவையாக இருந்தன. இந்த சடங்குகளின்போது பயபக்தியுடன், நாக்குளறாமல் உச்சரிக்கப்படும் தொன்மைமிக்க மந்திரங்களும் பிரார்த்தனைகளும் ஒருவித மாய சக்தியை, வியக்கத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருந்தன. இவற்றின் உச்சரிப்பில் சில தவறு ஏற்பட்டாலும் அது செம்மை செய்யப்பட்டாக வேண்டும்; இல்லையேல் ஆரம்பக்கால ரோமாபுரி சட்டத்தில் ஒரு சொல்லை சற்றுத் தவறாக உச்சரித்தாலும், வழக்கு தோற்றுவிடுவது போன்ற அவலநிலையே ஏற்படும்.

பண்டைக்காலத்திய இதர பல விசித்திரமான சடங்குகளும் கழுவாய் தேடுவது சம்பந்தப்பட்டவையே ஆகும். ரோமர்களின் போர்த் தெய்வமான மார்சை வழிபடும் சாலீ எனப்படும் பண்டைக்கால மதக்குருக்கள் ஒரு சமயம் நகரின் பல்வேறு பகுதிகளைச் சுற்றிப் பார்த்தனர்; ஆயுதங்களையும் எக்காளங்களையும் ‘தூய்மைப்படுத்தும்’ பணியை அவர்கள் மேற்கொண்டனர்; படைத்துறையின் ஆயுதங்கள் வலிமைமிக்கவையாக இருக்க வேண்டுமானால் அவை தூய்மைப்படுத்தப்படுவது அவசியம் என்ற பண்டைக்காலக் கருத்தை இது பிரதிபலிப்பதாக இருந்தது. ஐந்தாண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தத் தூய்மைப்படுத்தும் சடங்கு சாராம்சத்தில் ராணுவத்தன்மை கொண்டதாகவே இருந்தது; ஏனென்றால் அது சிவில் உடையிலிருந்த கமிட்டியா சென்சூரியட்டா எனும் படையுடன் சம்பந்தப்பட்டதாக இருந்தது. படைப் பிரிவுகள் போர்க் களத்தில் இருக்கும்போது தூய்மைப்படுத்தும் சடங்கு அடிக்கடி மேற்கொள்ளப்பட்டது; சில சமயங்களில் மூடநம்பிக்கைகளின் விளைவாக ஏற்படும் அச்சத்தை அகற்றுவதற்கும், வேறு சில சமயங்களில் வெறும் தடுப்பு நடவடிக்கையாகவும் இந்தச் சுத்திகரிப்பு கடைப்பிடிக்கப்பட்டது.

எல்லாப் பூர்வீக மக்களைப் போன்றே எபிரேயர்களும் தீட்டு சம்பந்தப்பட்ட கருத்தைக் கொண்டிருந்தனர். துப்புரவற்ற விலங்குகளின் பிணத்தைத் தொடுவதோ அல்லது அதை உண்பதோ ஊர்ந்து செல்லும் பிராணிகளைத் தொடுவதோ அல்லது அவற்றைத் தின்பதோ, நான்கு கால் பிராணிகள் யாவற்றிலும் பிளந்த பாதங்கள் கொண்டிராத, அசை போடுபவை அல்லாத பிளவுபட்ட குளம்புகள் கொண்ட, தனது பாதங்களால் நடந்து செல்லக்கூடிய விலங்குகளைத் தொடுவதே தூய்மைக்கேடானது என்று அவர்கள் நம்பினர். துப்புரவற்ற எந்த ஒரு நபரைத் தொடுவதையும் கூட எபிரேயர்கள் ஒரு தீட்டாகக் கருதினர். தூய்மைக் கேடானது குறித்த எபிரேயர்களின் கண்ணோட்டத்தில் பொதிந்துள்ள வேறு இரண்டு விசேட அம்சங்களையும் இங்கு குறிப்பிட வேண்டும். உருவ வழிபாடு நடைமுறைகளைப் பின்பற்றுவதால் மக்களுக்கும், சீர்கேடான பாலுறவு கொண்டுள்ள மக்களால் நாட்டுக்கும் தூய்மைகேடு ஏற்படும் என்று எபிரேயர்கள் நம்பினர்.

இந்த ஆய்வின் அடிப்படையில் பார்க்கும்போது, தீட்டு குறித்த கருத்து கொண்டிராத எந்த பூர்வீக மக்களும், பண்டைக்கால மக்களும் இல்லை என்ற முடிவுக்கே வர வேண்டியுள்ளது.

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 14)

Pin It