கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: சுற்றுச்சூழல்
நமது உடலில் தோலையும் தசையையும் நீக்கிவிட்டால் மிஞ்சுவது எலும்புக்கூடுமட்டுமே. எலும்புக்கூட்டிற்கு எலும்புச் சட்டம் என்று பெயர்.
உடலுக்கு ஆதாரமாகவும் தசை நரம்புகளுக்கு பற்றுக்கோடாகவும் இருப்பது எலும்புக்கூடுதான். மூளை, கண், இதயம், நுரையீரல் போன்ற மென்மையான உறுப்புகளுக்கு பாதுகாப்பாக இருப்பதும் இந்த எலும்புச் சட்டம்தான். எலும்பில் 50% நீரும், 33% உப்புக்களும், 17% மற்ற பொருட்களும் உள்ளன. எலும்பில் கால்சியம் பாஸ்பேட் போன்ற அமிலத்தில் கரையக்கூடிய தாதுப்பொருள் மற்றும் தீயில் எரிந்துபோகும் கரிமப்பொருளும் உள்ளன. நமது உடல் நலத்திற்கு வேண்டிய கால்சியம் எனும் இரசாயனப்பொருட்கள் எலும்புகளில்தான் சேமித்து வைக்கப்படுகிறது.
எலும்புகள் ஒன்றுடன் ஒன்று பொருந்தி இருந்தால்தான் சீரான முறையில் அவைகள் செயல்பட முடியும். அவ்வாறு பொருந்தும் இடங்களுக்கு மூட்டுகள் என்று பெயர்.மூட்டுகள் இரண்டு தன்மைகள் உடையனவாக இருக்கின்றன. முதலாவது அசையும் மூட்டு. இரண்டாவது அசையா மூட்டு. இடுப்பிலும் மண்டையிலும் காணப்படும் எலும்புகள் அசையாத மூட்டுகள். அசையும் மூட்டுகளில் நான்கு வகைகள் உள்ளன. பந்துக்கிண்ண மூட்டு, கீல் மூட்டு, வழுக்கு மூட்டு, செக்கு மூட்டு என்று அவைகளுக்குப்பெயர்.
அசையும் மூட்டுகள் இயங்கும்போது அதிர்ச்சியோ தேய்வோ ஏற்படாமல் இருப்பதற்காக, எலும்புகளின் முனைகள் குருத்தெலும்புகளால்மூடப்பட்டு, அதன் உட்புறத்தில் ஒரு மெல்லிய திசுப்படலம் இருக்குமாறும் அதில் ஒரு வழுவழுப்பான திரவம் சுரக்குமாறும் அமைக்கப்பட்டுள்ளது. மூட்டுகள் அசையும்போது எலும்புகள் நழுவக்கூடும். அவ்வாறு நழுவாமல் இருக்க மூட்டுகள் உறுதியான தசைநார்களால் கட்டப்பட்டுள்ளன.
தகவல்: மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: சுற்றுச்சூழல்
இந்தியாவிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் இணையத்தை பயன்படுத்துவோர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. மத்திய தரைக்கடலில் துண்டிக்கப்பட்டிருந்த கேபிள் இணைப்புகள் கடந்த வாரம் சரிசெய்யப்பட்டுவிட்டன. உலகம் முழுவதும் கடலுக்கடியில் கேபிள்கள் பதிக்கப்பட்டிருந்தாலும், மத்திய தரைக்கடலுக்கடியில் பதிக்கப்பட்டுள்ள கேபிள்கள் முக்கியமானவை. ஏனெனில் ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா, ஆசியா ஆகிய கண்டங்களை இணைக்கும் கேபிள்கள் இந்த நெருக்கடி நிறைந்த பகுதியில் பதிக்கப்பட்டுள்ளன.
2008 ஜனவரி 30 ஆம் தேதியன்று கிழக்கு மத்திய தரைக்கடலில் அலெக்ஸாண்டிரியா மற்றும் எகிப்துக்கு அருகில் மூன்று கேபிள்களில் இரண்டு துண்டிக்கப்பட்டன. இதனால் இந்தியாவிற்கும் ஐரோப்பாவிற்கு இடையேயான தகவல் பரிமாற்றத்தில் 75 சதவீதம் பாதிக்கப்பட்டது. சில வாரங்களுக்குள் பழுது சரி செய்யப்பட்டுவிட்டது. ஆனால் டிசம்பர் 19 ஆம் தேதியன்று மூன்று கேபிள்களில் இரண்டு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. சிசிலிக்கும் டுனீஷியாவுக்கும் இடையில் அந்த மூன்றாவது கேபிளும் சேதமடைந்திருந்தது.
எகிப்து முழுவதும் இதனால் இணையதள சேவை பாதிக்கப்பட்டது. குரல்சேவை 50 சதவீதம் குறைந்துபோனது. மேலும் மத்தியக் கிழக்கு நாடுகளிலும் இந்தியாவிலும் அலைக்கற்றையின் அளவில் குறைவு ஏற்பட்டது. சேதத்தின் காரணம் முழுமையாக அறியப்படவில்லை. சூயஸ் கால்வாய் வழியாகச்சென்ற கப்பலின் நங்கூரம் ஒன்று கேபிளை துண்டித்திருக்கலாம் என்ற கருத்து வெளியானபோது எகிப்திய அதிகாரிகள் அதை மறுத்தனர். இதற்கு முன்பாக நீருக்கடியில் ஏற்பட்ட நிலநடுக்கங்களின் விளைவாக கேபிள்கள் சேதமடைந்தது உண்டு. இப்போதும்கூட அதுவே காரணமாக இருந்திருக்கலாம். மத்திய தரைக்கடல் பகுதி நகரும் தட்டுகளுக்கு இடையே இருப்பதால் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பிரிட்டிஷ் நிலவியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
இந்தப்பிரதேசத்தில் நில நடுக்கத்தின் அளவு இதற்கு முன்பாக ரிக்டர் அளவுகோளில் 8.0 ஆக உணரப்பட்டுள்ளது. இந்த அளவு நிலநடுக்கம் கேபிள்களில் சேதத்தை ஏற்படுத்த போதுமானது. தரைவழியாக கேபிள் அமைத்தால் நிரந்தரத்தீர்வு கிடைக்கும் ஆனால் அதில் அரசியல் சிக்கல் இருக்கிறது. ஐரோப்பாவில் இருந்து துருக்கி, ஈரான், ஈராக், செளதி அரேபியா வழியாக கேபிள்களைப் போடலாம். இதற்கு ஈராக், ஈரான், துருக்கி ஆகிய நாடுகளின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. தடையில்லாத கேபிள் இணைப்பு தேவை என்றால் நாம் இன்னும் கொஞ்ச காலம் காத்திருக்க வேண்டும் போலிருக்கிறது.
- மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: சுற்றுச்சூழல்
நாக்கின் சுவையறியும் உணர்வு மழுங்கிப் போவதுதான் காரணம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். சரியான அளவில் சர்க்கரை சேர்க்கப்பட்ட இரண்டு காப்பிக்கோப்பைகளை ஒரு பருமனான மனிதருக்கும், ஒரு மெலிந்தவருக்கும் கொடுத்து குடிக்கச் சொன்னால், மெலிந்தவர் அதை விருப்பத்துடன் குடிக்கத்தொடங்குவார். பருமனானவர் சர்க்கரை போதுமானதாக இல்லை என்று கூறி மேலும் ஒரு கரண்டி சர்க்கரையை சேர்த்துக் கொள்வார். இனிப்புச் சுவையை உணரும் தன்மையை நாக்கு இழக்கும்போது நீங்கள் அதிகமான இனிப்பை தேடத் தொடங்குகிறீர்கள்.
குண்டானவர்கள் அதிகமாக இனிப்பை விரும்புகிறார்கள் என்பது ஏற்கனவே அறிந்த ஒன்றுதான். ஆனால் குண்டானவர்களுக்கும், மெலிந்தவர்களுக்கும் இனிப்புச் சுவையறியும் தன்மையில் என்ன வேறுபாடு இருக்கிறது என்பதை அறிவதில் இந்த ஆய்வு முக்கியமானது. பென்ஸில்வேனியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஹாஜ்நால் மற்றும் பீட்டர் கோவாக்ஸ் ஆகிய இருவரும் OLETF மற்றும் LETO வகை எலிகளைப் பயன்படுத்தி இந்த ஆய்வுகளைச் செய்தனர். குண்டானவர்களின் பண்புகளை OLETF எலிகள் வெளிப்படுத்தின. தொடக்கத்தில் சாதாரணமான உடல் எடைகொண்டிருந்த இந்த எலிகள் உணவில் திருப்தியடையாததால் மேலும் மேலும் சாப்பிட்டு குண்டாகிப் போயின; அதனால் நீரிழிவு நோய்க்கும் ஆளாகிப் போயின. OLETF எலிகள் மட்டும் அதிகமான இனிப்பை கேட்டு வாங்கிச் சாப்பிட்டன.உடல் பருமன் அதிகமாகிப்போகும் போது, அதிகமாகச் சாப்பிட வேண்டாம் என்றும், அதிக கலோரி உணவை தவிர்க்கவும் என்றெல்லாம் மூளை அறிவுரை கூறும். ஆனால் குண்டானவர்களின் மூளை இவ்வாறு அறிவுரை கூறும் திறனை இழந்து விடுகிறது என்கிறார் விஞ்ஞானி ஹாஜ்நால். உப்புச்சுவை, புளிப்புச்சுவை, சாதாரண நீர், ஆறுவகையான அடர்த்தி கொண்ட சர்க்கரை ஆகியவற்றை எலிகளின் நாக்கு உணரும்போது அவற்றின் மூளையின் நரம்பணுக்களின் தூண்டலை அறிய மின்வாய்கள் பொருத்தப்பட்டன. நாவின் மேற்பரப்பிற்குரிய செய்திகளை உணரும் மூளையின் பகுதிக்கு pontine parabrachial nucleus (PBN) என்று பெயர். இனிப்புச்சுவையை நாவிற்கு அறிமுகப்படுத்துபோது LETO வகை எலிகள் 100 தூண்டல்களை PBN பகுதிக்கு கொண்டு சென்றன. OLETF வகை எலிகள் 5 தூண்டல்களை மட்டுமே மூளைக்கு கொண்டு சென்றன. இதிலிருந்து OLETF வகை எலிகள் இனிப்பை உணரும் தன்மையை குறைவாகப் பெற்றிருந்தன என்பது தெரிய வந்தது. ஆனால் உப்புருசியை அறியும் தன்மையில் இரண்டுவகை எலிகளும் ஒன்றுபோல் இருந்தது.
டின்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சேர்க்கப்படும் சர்க்கரை மற்றும் கொழுப்பு ஆகியவற்றின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருவதை பேராசிரியர் ஹாஜ்நால் சுட்டிக்காட்டுகிறார்.
இதன் விளைவாக நடப்பது என்ன? குறைவாக சாப்பிடவேண்டிய குண்டான மனிதன் மேலும் ஒரு கரண்டி சர்க்கரையை காப்பியில் சேர்த்துக் கொள்வான்!
தகவல்: மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: சுற்றுச்சூழல்
பரிணாம வளர்ச்சியில் நீரில் வாழ்ந்த மீன் எவ்வாறு நிலத்தில் வாழ்வதற்கேற்ற உடலமைப்பிற்கு மாறியது என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். 375 மில்லியன் ஆண்டுகள் பழமையான ஒரு மீனின் கற்படிமம் (fossil) 2004 ஆம் ஆண்டு கனடாவின் எல்லஸ்மரே தீவில் கண்டிபிடிக்கப்பட்டது. இந்த கற்படிமத்தின் பெயர் Tiktaalik roseae . இந்த மீன் படிமத்தின் தலை எலும்பை ஆராய்ச்சி செய்ததில் பல உண்மைகள் வெளியாகி உள்ளன. மீன்களின் முன்னிரு துடுப்புகளும் கால்களாக மாறி, பின்னர் நான்கு கால் உயிரினம் எப்படி தோன்றியிருக்கும் என்பதை Tiktaalik roseae ன் கற்படிமங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன.
Tiktaalik roseae ஒரு நீர்வாழ் உயிரினம். தட்டையான தலையையும் உடலையும் கொண்டது. கற்படிமத்தில் இருந்த இந்த உயிரினத்தின் உடலமைப்பை ஆராய்ந்தபோது ஆழமற்ற நீர்நிலைகளின் அடிப்பரப்பில் இவை வாழ்ந்திருக்க வேண்டும் என்றும் அடிக்கடி நீர்ப்பரப்பிற்கு வந்து போயிருக்கவேண்டும் என்றும் கருதப்படுகிறது.
Tiktaalik roseae ன் உடலமைப்பில் மண்டையோடு, கழுத்து, விலா எலும்புகள் ஆகியவை காணப்படுகின்றன. ஆரம்பகால நகரும் உறுப்புகளும் இவைகளின் எலும்புக்கூட்டில் இருந்தன. மீனுக்குரிய செதில்களும் துடுப்புகளும் காணப்பட்டன. நீந்தும், நடக்கும் பண்புகள் ஒருமித்துக் காணப்பட்ட இந்த Tiktaalik roseae ன் படிமம் ஆய்வாளர்களுக்கு உயிரிகளின் பரிணாமத்தை விளக்கும் ஒரு பாடப்புத்தகமாக இருக்கிறது.
Tiktaalik roseae ன் கபாலம், மேலண்ணம், செவுள்கள் இவற்றையெல்லாம் ஆராயும்போது நிலத்தில் வாழும் உயிரியின் கூறுகளும், ஆழமற்ற நீர்நிலைகளில் வாழும் உயிரியின் கூறுகளும் ஒரு சேர காணப்பட்டன.
கால்கள் தோன்றுவதற்கு முன்பாகவே Tiktaalik roseae மீன் ஒரு நான்குகால் உயிரினமாக பரிணமித்திருக்கிறது. இந்த காலகட்டத்தில் Tiktaalik roseae ன் தலைப்பகுதி உடலை சாராமல் திருப்பக் கூடியதாக மாறியுள்ளது. இதே காலகட்டத்தில் மண்டையோடு தட்டையாக மாறி, மூக்குப்பகுதி நீண்டு போயுள்ளது. தலையை மட்டும் வேண்டும் திசையில் திருப்பி இரையைப் பிடிக்க உதவியாக இந்த உயிரியின் உடல் அமைப்பு இருப்பதாக கண்டறிந்துள்ளனர்.
வேறு எந்த இடைப்பட்ட உயிரினமும் இதுவரை அறியப்படாததால், இந்த உருமாற்றம் மிகக் குறைந்த கால இடைவெளியில் நடைபெற்றிருக்க வேண்டும் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து.
தகவல்: மு.குருமூர்த்தி
- வேளாண்மையின் பகைவன்
- டிஜிட்டல் படுதாக்களில் ஜிலுஜிலுக்கும் சீமான்கள்
- நிலை குலைந்துவரும் மலைத் தொடர்கள்
- என்ன சொல்லப் போகிறோம் யானைகளுக்கு?
- தாவரங்களின் இனப்பெருக்கம்
- சுவையறிய உதவும் வாயில் வாழும் பாக்டீரியாக்கள்
- பூச்சிகளை விழுங்கும் தாவரம்
- பூமி வெப்பம் அடைவது ஏன்?
- தாவரங்களின் தோள் கொடுக்கும் தோழர்கள்
- 'அப்பன் குதிருக்குள் இல்லை' பாதிப்புகளை மறைக்கும் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள்
- டாடா நானோ கார்: சின்னஞ்சிறு பயங்கரம்
- 'விளக்குகளை அணைப்போம்' - கவனம் பெறும் புதிய சூழல் விழிப்புணர்வு பிரச்சாரம்
- கடத்தலால் அழியும் காட்டுயிர்கள்
- பாயத் துடிக்கும் பன்னிரண்டு நோய்கள்
- சி.எஃப்.எல். பல்புகளோடு போராடும் குமிழ் பல்புகள்
- சூழலைக் காக்கும் பீமா மூங்கில்
- கரியமில வாயுவை கட்டுப்படுத்தும் வழிகள்
- வீட்டிற்குள்ளே சூழல் பாதுகாப்பு
- வானிலையை மாற்றும் காற்றாலைகள்
- கரியமில வாயுவை சேமித்து வைக்க முடியுமா?