இன்றைய தமிழக வேளாண் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலை மகிழத்தக்கதாக இல்லை. பாசனநீர்ப் பற்றாக்குறை, பருவமழை பொய்த்துப் போதல் போன்ற பல்வேறு சவால்களை எதிர் கொண்டு அவர்கள் வேளாண் தொழிலைச் செய்ய வேண்டியிருக்கின்றது. தற்போது அவர்கள் புதிதாக எதிர்கொண்டுள்ள முக்கிய சவால் வேலிக்காத்தான் என்னும் முள் மரமாகும்.

dangerபயிர்களுக்கு வேலியாகவும் சமையலுக்கு விறகாகவும் பயன்படும் என்ற நம்பிக்கையில், 1950களில் ஆஸ்திரேலியாவில் இருந்து சிறிதளவு விதையாக இது கொண்டுவரப்பட்டது. இந்த அறுபது ஆண்டுகளில் வளர்ந்து பெருகிப் பரவி இன்று தமிழகம் முழுவதையுமே ஆக்கிரமித்து விட்டது. Prosopis Juliflora எனும் அறிவியல் பெயர் சூட்டப் பெற்ற இந்த முள்மரம், அமெரிக்கா போன்ற பல வளர்ந்த நாடுகளில் வேளாண்மைக்கு எதிரான ஆபத்தான விஷத் தாவரமாக அறிவிக்கப்பட்டு வேளாண் கண்காட்சியில் மட்டும் வைக்கப்படுவதாகத் தெரிய வருகிறது.

வேலிக்காத்தானுக்கு இந்த மண்ணில் இடமில்லை என்பதை நமது அண்டை மாநிலமான கேரளம் அறிவிக்கப்படாத வேளாண் கொள்கையாகவே கடைப்பிடித்து வருகின்றது. எங்காவது வேலிக்காத்தான் தென்பட்டால் அதை முதலில் பிடுங்கி எறிந்துவிட்டே மறுவேலையைப் பார்க்கிறார்கள் அம்மண்ணின் மக்கள். ஏனெனில் வேலிக்காத்தான் தழைக்கின்ற இடத்தில் வேறு எதுவும் தழைக்காது என்பதை அறிவியல்பூர்வமாக அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

ஆனால் நமது தமிழக மண்ணில் வேளாண்மைக்கு உகந்த பகுதிகளில் இருபத்தைந்து விழுக்காட்டுக்கு மேல் வேலிக்காத்தான் வளர்ந்து மண்டிக் கிடக்கின்றது. நிழல் மரமாகவோ, கனி மரமாகவோ, கதவு சன்னல் என்று பயன்பாட்டிற்குரிய பொருள்களைச் செய்வதற்கோ எவ்வளவு பசுமையான தழையாக இருந்தாலும் அடியுரமாக இடுவதற்கோ, குறைந்தபட்சம் பறவைகளாவது அமர்ந்து கூடு கட்டுவதற்கோ வேலிக்காத்தான் பயன்படுவதில்லை.

எந்த நோயினாலும் பூச்சிகளாலும் தாக்க முடியாத, எந்த இடத்திலும் மற்ற தாவரங்களை அழித்துவிட்டு தான் மட்டும் செழித்துப் படருகின்ற தன்மை வேலிக்காத்தானுக்கு மட்டுமே உண்டு. பல்லாயிரம் பறவைகளின் சரணாலயமாகத் திகழும் வேடந்தாங்கல் ஏரியிலேயே செழித்து வளர்ந்த வேலிக்காத்தான், பருவ காலத்திற்கு வந்து அந்த ஏரியில் நீந்த முனைந்த வெளிநாட்டுப் பறவைகளையெல்லாம் குத்திக் கிழித்துக் கொன்றதும், பின்பு வனத்துறையின் முயற்சியால் அந்த மரங்கள் பிடுங்கி எறியப்பட்டதும் ஒருமுறை நிகழ்ந்தது. அதன் முள் குத்தி இறந்துபோன விவசாயிகள் நிறையபேர்.

வேளாண்மைக்குப் பயன்படுத்தப்படாத இடம் வேலிக் காத்தானுக்குச் சொந்தம் என்றாகிவிட்டதால் பாசனப் பற்றாக்குறையால் தரிசாகப் போடப்பட்டுவிட்ட மண் பரப்புகளில் எல்லாம் இப்போது வேலிக்காத்தான் செடிகள் வேகமாக வளர்ந்து வருவதைக் காணலாம். அந்தச் செடி வேரூன்றிவிட்டால் அதை அகற்றுவது கடினம் என்பதோடு அதை அகற்றும் பணிக்குப் பணமும் செலவாகின்றது. பலமான பக்க வேர்களைக் கொண்டு வளருவதால் அந்தச் செடிகள் மழைநீரை நிலத்தடிக்குச் செலுத்துவதில்லை.

கிராமப்புற மக்களுக்கான விறகுத் தேவையைப் பூர்த்தி செய்வது மட்டுமே அம்மரத்தால் கிட்டுகிற ஒரே பயன். ஆனால் அரிசியைப் பறிகொடுத்துவிட்டு அதை வேக வைக்கும் விறகை மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்வது?

வளமான வேளாண்மைக்கு எல்லா வகையிலும் தடையாக இருக்கின்ற வேலிக்காத்தானை முற்றிலுமாக நமது மண் பரப்புகளில் இருந்து வேரோடும் வேரடி மண்ணோடும் அப்புறப்படுத்துவதில்தான் வேளாண்மையின் எதிர்காலம் அடங்கியிருக்கின்றது. வேலிக்காத்தானிடமிருந்து மீட்கப்படும் வேளாண் நிலம் நமது இயல்பான வளத்திற்குத் திரும்ப ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்தை எடுத்துக்கொள்ளும் என்பது இன்னொரு வேதனையாகும்.

அறிவொளித் திட்டம் நடைமுறைக்கு வந்தபோது நூறு விழுக்காடு எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று ஒவ்வொரு மாவட்டத்திலும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. வேலிக்காத்தானை ஒழிப்பதற்கும் அப்படியொரு திட்டம் இன்றைய தமிழகத்திற்கு அவசியத் தேவை. நமது மாநில அரசும், மாவட்ட நிர்வாகங்களும், வேளாண் நலன் விரும்பும் அமைப்புக்களும் இதைக் கருத்திற்கொள்வது நல்லது.

- ஜெயபாஸ்கரன்

Pin It