சுற்றுச்சூழல் சீர்கேட்டின் எதிர்விளைவுகள், புவி வெப்பமடைதல் போன்ற பாதிப்புகளைத் தொடர்ந்து நுகர்வு பண்பாட்டின் தாயகங்களான மேற்கு நாடுகளில் வாழும் மக்கள் சமீபகாலமாக விழிப்புணர்வு பெற்று வருகின்றனர். ஒட்டுமொத்தமாக அனைவரும் சுற்றுச்சூழல் உணர்வு பெற்றுவிடுவார்கள் என்று சொல்வதற்கில்லை. இருந்தபோதும் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டு வருகிறது.
மக்கள்தொகை பெருமளவு அதிகரித்து விட்டதாலும், மனப்பான்மை மாற்றங்கள் மெதுவாகத்தான் ஏற்படும் என்பதாலும், சுற்றுச்சூழல் சீர்கேடுகளை உடனே தடுத்து நிறுத்துவது கடினம். அறிவியல் எவ்வளவோ வளர்ந்துவிட்ட போதிலும், அறிவியல் தந்த அனைத்து வசதிகளையும் அனுபவித்து வரும்போதும் மூடநம்பிக்கைகளின் ஆட்சி கடுமையாகவே உள்ளது. அறிவியல் பூர்வமாக சிந்திப்பது, பகுத்தறிவு போன்றவை இன்னும் ஆழ வேரோடவில்லை.
இந்நிலையில் புவிவெப்பமடைதல் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்கவும், புவிவெப்பமடைதலை குறைப்பதற்கான மாற்று முயற்சிகளும் அதிரித்து வருகின்றன. ஒவ்வோர் ஆண்டும் லண்டனில் ஒரு வாரத்துக்கு கார் பயன்பாட்டை குறைக்கும் பிரச்சாரம் நடத்தப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் கார் பயன்படுத்தாத நாட்கள் அனுசரிக்கப்படுகின்றன. எரிபொருள் பயன்பாட்டை குறைப்பது, மாசை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் இந்த பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பிட்ட சில மணி நேரங்களுக்கு நகரம் முழுவதும் மின்விளக்குகளை அணைத்துவிடும் விழிப்புணர்வு பிரசாரம் உலகெங்கும் பிரபலமடைந்து வருகிறது.
இங்கிலாந்து தலைநகர் லண்டன், பிரான்ஸ் தலைநகர் பாரிஸ், இந்தியாவில் மும்பை நகரங்களில் மின்விளைக்கை நிறுத்தும் பிரசாரம் நடந்துள்ளது. ஆஸ்திரேலிய துறைமுக நகரான சிட்னியில் இந்த பிரசாரம் நடைபெற்ற போது நகரின் பாதி மக்கள் பங்கேற்றது உலகை திரும்பிப் பார்க்கச் செய்தது.
இந்தப் பிரசாரத்தில் பங்கேற்க மின் சாதனங்களான விளக்குகள், மின்விசிறி, குளிர்சாதனப் பெட்டிகள் உள்ளிட்ட அனைத்து மின் சாதனங்களையும் ஒரு மணி நேரம் இயக்காமல் இருக்க வேண்டும். இந்தப் போராட்டம் அனைவருக்கும் வெளிப்படையாகத் தெரிய வேண்டும் என்பதால், இரவு நேரம் தேர்ந்தெடுக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பிரசாரத்தின்போது ஈபில் கோபுரம், சிட்னி ஓபரா ஹவுஸ், பக்கிங்ஹாம் அரண்மனை போன்ற முக்கிய கட்டடங்கள் மின் பயன்பாட்டை நிறுத்தின. மும்பையில் மேயர் வீடு, ஆளுநர் மாளிகை போன்றவை பிரசாரத்தில் பங்கேற்றன.
சிட்னியில் கடந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி புவி நேரம் என்ற பெயரில் நடத்தப்பட்ட பிரசாரத்தின்போது நகரின் 57 சதவிகித மக்கள் பங்கேற்றனர். ஒரு நாளின் 10 சதவிகித மின்செலவு குறைந்தது. லண்டனில் 20 லட்சம் விளக்குகள் அணைக்கப்பட்டு, 750 மெகாவாட் மின்செலவு குறைந்தது. பிரான்சில் நாடு முழுவதும் ஐந்து நிமிடங்களுக்கு மின்பயன்பாடு நிறுத்தப்பட்டதன் மூலம் 800 மெகாவாட் மின் பயன்பாடு குறைந்தது. பிரான்சின் ஒரு நாள் மின்தேவையில் இது ஒரு சதவிகிதம். மும்பையில் டிசம்பர் மாதம் நடந்த 'பட்டி பந்த்' பிரசாரத்தில் 105 மெகாவாட் மின்சாரம் சேமிக்கப்பட்டு, ஒரு நாள் மின்தேவையில் 5 சதவிகிதம் குறைந்தது.
சென்னையில் எக்ஸ்னோரா, 200 அமைப்புகளுடன் இணைந்து இந்த பிரச்சாரத்தை மே 1ம் தேதி நடத்த ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. அன்று மாலை 7 மணி முதல் 8 மணி வரை மின் பயன்பாட்டை முழுமையாக நிறுத்த வேண்டும் என்பதே பிரச்சாரத்தின் நோக்கம்.
இப்படிச் செய்வதால் என்ன பயன் ஏற்படுகிறது என்ற கேள்வி எழுலாம். தினசரி நாம் பயன்படுத்தும், விரயமாக்கும் மின்சாரத்துடன் ஒப்பிட்டால், ஒரு மணி நேரம் மட்டும் மின்பயன்பாட்டை நிறுத்துவதால் பெருமளவு மின்சாரம் சேமிக்கப்படுவதில்லை என்பது உண்மைதான். ஆனால் வெகுமக்களிடையே சில கோரிக்கைகளை முன்வைத்து பிரசாரம் நடத்தும்போது, இப்படிப்பட்ட அடையாள பிரசாரங்கள் அவசியத் தேவையாகின்றன.
இந்த பிரசாரம் மக்களிடையே ஒருமித்த உணர்வையும், சுற்றுச்சூழல் விழிப்புணர்வை தூண்டிவிட்டு சூழல் உணர்வுடன் செயல்படத் தூண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரசாரத்தின் அடுத்த கட்ட நோக்கம் மின்விரயத்தை குறைப்பது, இயன்றவரை மின்சாதனங்களின் பயன்பாட்டை குறைப்பது, தேவையற்ற மின்தேவைகளை கட்டுப்படுத்துவதாக இருக்க வேண்டும். அதற்கான தொடக்கமாக இந்த பிரசாரத்தை பயன்படுத்த வேண்டும்.
மின்விரயம் தொடர்பான விழிப்புணர்வு செய்திகள், நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிப்பதால் ஏற்படும் புவி வெப்பமடைதல் விளைவு, தனியார் தொழில் நிறுவனங்களில் ஏற்படும் மின்விரயங்கள், மின்விரயம் செய்யாத சிறு புளூரசென்ட் விளக்குகள் (காம்பேக்ட் புளூரசன்ட் பல்ப்) உள்ளிட்ட செய்திகளை பரப்ப வேண்டும். எடுத்துக்காட்டாக, சென்னை கடற்கரை சாலையில் உள்ள தலைவர்களின் சிலைக்கு யாரும் வராத இரவு நேரங்களில்கூட விளக்குகள் பிரகாசிக்கின்றன. யாருக்காக இந்த விளக்குகள் எரிகின்றன. இரவு முழுக்க எரிவதால் யாருக்கு என்ன லாபம்?
அதேபோல விளம்பர பலகைகள், தனியார் நிறுவனங்களின் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும். அல்லது தனியார் மின்பயன்பாட்டுக்கு தனி வரி விதிக்க வேண்டும். மக்கள் பணத்தில் அமைக்கப்படும் மின்நிலையங்களில் இருந்து குறைந்த விலையில் தனியார் நிறுவனங்கள் மின்சாரத்தை பெறுவதை அனுமதிக்கக்கூடாது.
புவி வெப்பமடைவதற்கு மேற்கு நாடுகளில் வாழும் அதிகமாக நுகரும் மக்கள்தான் முக்கிய காரணம். அதற்காக நாம் சும்மா இருக்க முடியாது. இந்தியாவில் 60 கோடி மக்களுக்கு மின் வசதியில்லை. அவர்களுக்கு மின் வசதி கொடுக்க வேண்டியது அவசியம். மின்சாரத்தை பயன்படுத்தும் வசதியைப் பெற்ற மேட்டுக்குடிகள், நடுத்தர வர்க்கத்தினர் அதிகமாக நுகர்கின்றனர், விரயம் செய்கின்றனர். இதை விடுத்து, எதையும் தேவைக்கு மட்டும் பயன்படுத்தும் நமது பாரம்பரிய பண்புக்குத் திரும்ப வேண்டும். அமெரிக்காவை பிரதி செய்வதை கைவிடத் தொடங்க வேண்டும்.
- ஆதி