ஆமாம்... காற்று மண்டலத்தில் வாயு உருவத்தில் இருக்கும் அளவுக்கு அதிகமான கார்பன் டை ஆக்சைடை சிறைப்பிடித்து ஓர் இடத்தில் அடைத்து விட்டால் புவியின் வெப்பநிலையை குறைக்க முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

நிலக்கரியும், கச்சா எண்ணையும் பூமியின் ஆழத்தில் இருக்கும் படுகையில் கிடைக்கிறது. கார்பன் டை ஆக்சைடு வாயுவை இந்த எண்ணெய் படுகைக்குள் செலுத்தி சேமிப்பது சாத்தியமே என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். எண்ணெய் படுகைக்குள் குழாய்கள் மூலம் கார்பன் டை ஆக்சைடு வாயுவை செலுத்தும்போது, எண்ணெய்க் கிணற்றில் இருந்து வெளியேறும் எண்ணையின் அளவு அதிகரிப்பதால் எண்ணையின் உற்பத்தி செலவு குறைகிறது. கார்பன் டை ஆக்சைடு வாயுவை சிறை பிடிப்பதற்கான செலவு இதனால் ஈடுசெய்யப்படுகிறது.

கடலுக்கடியிலும் கார்பன் டை ஆக்சைடு வாயுவை செலுத்தி சேமிக்கமுடியுமாம். ஆனால் கார்பன் டை ஆக்சைடு கடல்நீரில் கரையும்போது அடர்த்தி மிகுதியால் கடலுக்கடியில் கார்பன் டை ஆக்சைடு ஏரியாக உருவெடுக்கும் வாய்ப்பு இருக்கிறது. கடல் நீரின் அமிலத்தன்மை மிகுந்து கடல் உயிரினங்கள் அழிந்து போகவும் வாய்ப்பு இருக்கிறது. மூன்றாவதாக, சில தாது உப்புக்களுடன் கார்பன் டை ஆக்சைடை வினைபுரியச் செய்து உலோக ஆக்சைடுகளாக மாற்றியும் சேமிக்கலாம் என்கிறார்கள். ஆனால் இந்த வினை மெதுவாக நடைபெறக்கூடியது. வினையை விரைவுபடுத்த வேண்டுமென்றால் கூடுதலாக செலவு செய்ய வேண்டியிருக்கும். இதன் விளைவாக கச்சா எண்ணையின் விலை 180 சதவீதம் அதிகரிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

பூமி வெப்பமடைவதை தடுக்க வேண்டுமென்றால் எந்த விலையும் கொடுக்கத்தானே வேண்டும்!

- மு.குருமூர்த்தி

Pin It