உலக தட்பவெப்ப நிலைகளில் மனிதன் அசைக்க முடியாத தெளிவான தாக்கத்தை ஏற்படுத்துகிறான் என்பது வெப்பநிலை ஆராய்ச்சியாளர்களின் கருத்து. தற்போது அதிகரித்துக் கொண்டுள்ள வெப்பநிலைக்கு தெரிந்தோ தெரியாமலோ மனிதனும் மனிதச் செயல்களும் காரணமாகிவிட்டன என்பதே உறுதியான உண்மை.

இத்தட்பவெப்பநிலை மாற்றங்களினால் பலவகை விலங்குகளும் செடிகளும் மறைந்து கொண்டு வருகின்றன. புவிவெப்பமடைதலே இம்மாற்றங்களுக்கு ஆணிவேராகக் கருதப்படுகின்றது. உலக தட்பவெப்ப மாற்றங்களுக்கு காரணம் பசுங்கூட (Green House) விளைவேயாகும். பசுங்ககூட விளைவு என்பது இயற்கையாக நிகழக்கூடிய ஒரு நிகழ்வு. இவ்விளைவினால் பூமியிலிருந்து பிரதிபலிக்கும் புற ஊதாக் கதிர்களும் அகச் சிவப்புக் கதிர்களும் வளி மண்டலத்தில் உள்ள பசுங்கூட வாயுக்களால் விழுங்கப்பட்டு மீண்டும் பூமிக்கு திரும்பவும் அனுப்பப்படுகின்றன. இதன் காரணமாக பூமி அதிக வெப்பமடைகிறது.

முன்பிருந்த தொழிற்சாலை கழிவுநீர்களில் இருந்து தற்கால தொழிற்சாலை கழிவுகளின் தன்மைகள் வேறாக மாறியுள்ளன. இதனால் ஒட்டுமொத்த ஹாலோ கார்பன் என்பவற்றின் அளவு அதிகரித்துள்ளது. இதன் விளைவாக புவி வெப்பமடைதல் ஒரு சதுர மீட்டருக்கு 2.450 சென்டிகிரேடு வெப்பம் என்ற விகிதத்தில் அதிகரித்துக் கொண்டேயுள்ளது. கரியமிலவாயு, மீத்தேன், குளோரா புளோரோ கார்பன், ப்ரியான், ஹாலஜன்ஸ், ஏரோசால் பிரப்பலெட்ஸ் போன்று பலவகையான குளிர் சாதனப் பெட்டிகளிலிருந்து வெளிவருகின்ற வாயுக்களே இந்த பசுங்கூட விளைவுக்கு காரணமாகின்றன. அறிவியல் அறிஞர்களின் கருத்துப்படி புவி 2.50 பாரன் ஹீட் வரை வெப்பமாகிக் கொண்டேயுள்ளது.

இது தொடர்ந்தால் இன்னும் நூறு ஆண்டுகளில்:
 கடல் வெப்பமடைந்து கடல் நீர்மட்டம் உயரும்;
 பனிமலைகள் உருகி மேலும் கடல் மட்டம் உயரும். இதனால் 21 ஆம் நூற்றாண்டிற்குள் கடல் மட்டம் 9 செ.மீ.இலிருந்து 88 சென்டி மீட்டருக்கு உயரும் என்பது ஆய்வாளர்கள் கருத்து.
 பருவகாலங்கள் மாறலாம்
 வெப்பம் அதிகரிப்பதால் நீராவி அதிகரித்து மழை அதிகரிக்கலாம். இதனால் உலகின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் வரலாம்.
 இயற்கை சீற்றங்கள் புயல், சூறாவளி ஆகியன பல்வேறு பகுதிகளில் அதிகரிக்கலாம். அண்மையில் 2004 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் 562 முறை சூறாவளி வந்ததாக சான்றுகள் பல உள்ளன.
 உலகின் பல இடங்கள் பாலைவனங்களாய் மாறலாம்.
 பல்வேறு வகையான செடிகொடிகள் மற்றும் விலங்கினங்கள் கூட அழிந்து விடலாம்.
 பருவகால மாற்றத்தினால் விவசாயத்தில் பல மாற்றங்கள் ஏற்படும்.
 மலேரியா, டெங்குகாய்ச்சல், மஞ்சள் காய்ச்சல் போன்ற வெப்ப மண்டல நோய்கள் குளிர்பிரதேசங்களுக்கும், காலரா, வயிற்றுப் போக்கு போன்ற தண்ணீரால் வரும் நோய்கள் வெப்ப மண்டலங்களுக்கும் இடம் மாறும்.
 கடல் மட்டம் உயர்வதால் நிலப்பரப்பு குறைந்து மக்கள் நெருக்கம் அதிகரிக்கும்.
 பல வகையான காடுகள் குறிப்பாக அலையாத்திக் காடுகள் அழியக்கூடும்.

இவை, உயிரிகளிடத்தே ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் மனித இனம் எதிர்பாராத ஒன்றாய் இருக்கும் என்பதில் துளிகூட அய்யமில்லை. 1970களில் அமெரிக்கா மட்டுமே சுமார் 2,00,000 டன்னுக்கும் மேல் ஹாலோ கார்பன்களை வெளியேற்றியது. இதனை எதிர்த்து அய்க்கிய நாடுகள் அவை பல்வேறு ஒப்பந்தங்களைக் கொண்டு வந்தது.

நார்வே, ஸ்வீடன், கனடா போன்ற நாடுகளாலும் ஹாலோ கார்பன் வெளியேற்றம் தடை செய்யப்பட்டது. மேலும் நச்சுப் பொருள்களின் தடை ஆணையின் படி இவற்றின் உற்பத்தியும் பயன்பாடும் தடை செய்யப்பட்டன. அமெரிக்க வானியல் ஆராய்ச்சி மய்யமான ‘நாசா' 13.7.2004 அன்று பூமி வெப்பமடைதல் பற்றி ஆய்வு செய்ய செயற்கைக்கோள் ஒன்றை அனுப்பியது.

அமெரிக்காவில் மட்டும் இருந்து 25 சதவிகிதம் கரியமில வாயு (கார்பன் டை ஆக்சைடு) வெளியேறுவதால் அமெரிக்க அதிபர் புஷ், தம் நாட்டு மக்கள் இதன் பயன்பாட்டை குறைக்க நடவடிக்கை எடுப்பதாகவும், தாம் இது குறித்து தீவிர முடிவுகள் மேற்கொள்ளப் போவதாகவும் கூறியிருந்தார். இது போன்ற முடிவுகள் பிரிட்டனின் முதல் அமைச்சரான டோனி ப்ளேராலும் மேற்கொள்ளப்பட்டன.

‘நாசா'வின் கருத்துப்படி பனிப்பிரதேசங்களில், பனிமலைகளும், பனிப்பாறைகளும் பத்தாண்டுகளுக்கு 9 சதவிகிதம் எனும் அடிப்படையில் உருகி வருகின்றன. இதனால் 40 சதவிகித பனிப்பாறைகள் குறைந்துள்ளன. மேலும் வளிமண்டலத்தில் வெளியேற்றப்பட்ட கரியமிலவாயுவில் 50% கடல் நீரில் கரைந்து, கடல் நீரின் அமிலத்தன்மையை அதிகரிக்கச் செய்துள்ளது. இதனால் பவழப் பாறைகள் பெருமளவில் குறைந்தபடி உள்ளன. பல கடல் உயிரிகளும் அழிந்த வண்ணம் உள்ளன.

இத்தகைய மாற்றங்களையும், பேரழிவுகளையும் கண்டு நாம் அஞ்சினால், நமது இனம் மண்ணில் நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை இருந்தால் நடைமுறையில் நாம் சில மாற்றங்களைக் கொண்டு வந்தாக வேண்டும். புவி வெப்பமடைதலை முழுவதுமாய் குறைக்க முடியாவிட்டாலும் நம்மால் இயன்றவரை அதன் வேகத்தையும் அளவையுமாவது கட்டுப்படுத்தலாம் அல்லவா? அதற்கு தனி மனிதர்களின் தனிப்பட்ட பல்வேறு பயன்பாடுகளை தவிர்த்தல் வேண்டும்.

அவசர அவசிய தேவைகளுக்கே தனியார் வாகனங்களைப் பயன்படுத்த வேண்டும். பிற நேரங்களில் பொது போக்குவரத்து வாகனங்களை நாடுவது அதிக அளவில் வெளியேறும் CO2, N2O ஆகியவற்றை குறைக்க வழி வகை செய்கிறது.

எரிவாயுவிற்கும் மின்சாரத்திற்கும் பதிலாக சூரியனில் இருந்து கிடைக்கும் சூரியச் சக்தி, காற்றுசக்தி, நீர் சக்தி போன்று பலவற்றை நாம் பயன்படுத்தலாம். மேலும் கிராமப்புறங்களில் மிகுதியாகக் கிடைக்கும் சாண எரிவாயு மற்றும் அழுகிய பொருள்களிலிருந்து கிடைக்கும் எரிவாயுவை நாம் பயன்படுத்தலாம்.

பசுங்கூட விளைவினை ஏற்படுத்தக்கூடிய வாயுக்களை வெளியேற்றும் பொருள்களை பயன்படுத்துவதைத் தவிர்த்தல் அல்லது குறைத்தல் வேண்டும்.

இவை பற்றிய விழிப்புணர்வினை உலகின் பட்டி தொட்டிகளுக்கும் சென்றடைய நாம் பல முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இன்றைய நிலையில் தீவிரவாதத்தைவிட அதிதீவிரமான பிரச்சினை புவி வெப்பமடைதல் ஆகும். இவற்றை எல்லோரும் உணரும் வகையில் செய்து பூமியில் ஏற்படும் மாற்றங்களை குறைக்க வழி வகுப்போம். இயற்கை அன்னையை காப்பாற்றுவோம்.

(கட்டுரையாளர், விழுப்புரம் இ.எஸ். மெட்ரிகுலேசன் பள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கிறார்.)

(நன்றி : தலித் முரசு மே 2008)

Pin It