Beema Moongilஓசூர் 'குரோ மோர் பயோடெக்' நிறுவனத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றும் திரு என்.பாரதி என்பவர் குளோனிங் முறையில் வாழை, கரும்பு, மூங்கில், சவுக்கு, சோற்றுக்கற்றாழை, சீனித்துளசி போன்றவற்றை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளார். தமிழக அரசுக்கு மூங்கில் வளர்ப்பது தொடர்பான ஆலோசகர் அவர்.

இவர் கண்டுபிடித்துள்ள பீமா மூங்கில் அடர்த்தியானது. அதனால் இயற்கையிலேயே வலிமையானது. சுற்றுப்புறத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடை இழுத்துக் கொள்ளும் ஆற்றல் பீமா மூங்கிலுக்கு நான்கு மடங்கு அதிகம். ஓர் ஏக்கரில் உள்ள மற்ற மரங்கள் 15 டன் கார்பன் டை ஆக்சைடை எடுத்துக் கொள்வதாகக் கொண்டால் ஓர் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள பீமா மூங்கில் 70 டன் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சுகிறதாம்.

இப்போது உலகம் வெப்பமடைவதற்குக் காரணம் அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி போன்ற தொழில்வள நாடுகள்தான். உலகின் சுற்றுச்சூழலைக் கெடுக்கும் இதுபோன்ற நாடுகள் அவை வெளியிடும் கார்பன் டை ஆக்சைடின் அளவிற்கு ஏற்ப மரங்களை வளர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டபோது அமெரிக்கா தவிர பிற நாடுகள் ஒப்புக்கொண்டன. அதன்படி உலகின் எந்த மூலையில் மரங்களை வளர்த்தாலும் அதற்கான செலவினத்தை மேலே சொன்ன நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

பீமா மூங்கிலை இந்தியாவில் பயிர் செய்தால் பெருமளவு அன்னிய உதவி நமக்குக் கிடைக்கும் என்கிறார் திரு என். பாரதி. பீமா மூங்கிலின் அளப்பரிய பயன்களை பட்டியல் போடுகிறார் திரு. என். பாரதி.

அனல் மின்சாரநிலையங்களில் பயன்படும் நிலக்கரி ஒரு டன் ஆறாயிரம் ரூபாய். அனல் மின்சார நிலையங்களில் பீமா மூங்கிலைப் பயன்படுத்தினால் ஒரு டன் இரண்டாயிரம் ரூபாய். நிலக்கரியை எரிப்பதால் காற்றுமண்டலத்தில் கலக்கும் கார்பனின் அளவைவிட இருபது மடங்கு குறைவான கார்பன் மட்டும்தான் மூங்கிலை எரிப்பதால் வெளியாகிறது.

பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும்போது மூலப்பொருட்களுடன் பாதியளவு மூங்கில் இழைகளைக் கலந்து தயாரிக்கலாம் என்று பெங்களூரில் உள்ள ' இந்தியன் வுட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்' கண்டுபிடித்துள்ளது. இதனால் பெட்ரோலின் உபயோகம் குறையும். மூங்கிலில் இருந்து பஞ்சு தயாரிக்க முடியுமாம். ஒரு ஏக்கர் பருத்தியில் 500 கிலோ பஞ்சு கிடைக்குமானால் ஒரு ஏக்கர் மூங்கிலில் 10 ஆயிரம் கிலோ பஞ்சு கிடைக்குமாம்.

பெரிய நிறுவனங்கள் செயற்கை இழைகள் தயாரிக்க யூகலிப்டஸ் மரங்களை வளர்க்கின்றன. பூமியின் நீராதாரத்தை வற்றச் செய்யும் பகாசுரன்கள் இவை. ஆனால் மூங்கில் மரங்கள் நீர் வளத்தை அழிப்பதில்லை. அரசு மூங்கில் வளர்ப்பதற்கு மானியம் தருகிறது. மானியத்தைப் பயன்படுத்தி மூங்கில் வளர்ப்பதற்கு தமிழக விவசாயிகள் முன்வர வேண்டுமென்கிறார் இந்தத் தமிழர்.

நன்றி: தினமணி கதிர்/07.09.2008 

- மு.குருமூர்த்தி

Pin It