சுற்றுப்புற சூழலில் மாசுபாடு என்றதுமே நாம் பொதுவாக வெளி உலகத்தை மட்டுமே கருத்தில் கொண்டு புரிந்து கொள்கிறோம். அதாவது நமது வீட்டிற்கு வெளியே உள்ள இடம், நமது தெரு, நமது ஊர் என்று. ஆனால் சுற்றுச்சூழல் என்பது நாம் வசிக்கின்ற வீட்டுக்குள்ளேயும் இருக்கிறது. அதில் மாசுக்குறைவு ஏற்பட்டால் விபரீத விளைவுகள் உண்டாகும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். இந்த உணர்வு ஏற்படாத காரணத்தினால் வீட்டுக்குள்ளே இருக்கின்ற காற்று மாசுபட்டு அதனால் பலவிதமான நோய்த் தொல்லைகள் ஏற்படுகின்றன.

வீட்டுக்குள்ளே இருக்கின்ற காற்று மாசடைந்தால் கண் எரிச்சல், மூச்சு விடுவதில் சிரமம், உடலில் எரிச்சல், மயக்கம், வாந்தி, கண்பஞ்சடைதல் போன்றவை ஏற்படும். கட்டை, கரி, மண்ணெண்ணெய் ஆகியவற்றை சமையலுக்குப் பயன்படுத்துகின்ற கிராமத்து மக்கள் காற்று மாசுபாடு குறித்து அறிந்து கொள்ளவேண்டும். புகையும், கரியும் வெளியே செல்ல போதுமான ஜன்னல் வசதிகள் வீட்டில் இருக்க வேண்டும். இல்லை என்றால் அடுப்பில் இருந்து வெளிப்படும் புகை மூச்சடைப்பு, இருமல், கண் எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும். நாளடைவில் ஆஸ்துமா, நுரையீரல் நோய்கள் ஆகியவை தோன்றும். எனவே இந்த விஷயத்தை அலட்சியப்படுத்தாமல், போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்வது அவசியம்.

நாம் வீட்டிற்குள்ளே இருக்கும் போது மிகவும் சுகமாக இருக்கிறோம், பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற உணர்வில் சிறிய மாறுதல்களை கவனிக்காமல் இருப்பது வழக்கம். ஆனால் முன்னெச்சரிக்கையோடு சில மாறுதல்களை கவனிக்க நாம் பழகிக் கொள்ள வேண்டும். இதன் மூலமாக பெரிய ஆபத்துக்களை தடுக்க முடியும். உதாரணமாக வீட்டிற்குள்ளே நாம் சுவாசிக்கும் காற்று அசுத்தம் அடைந்து உடலுக்கு தீங்கு விளைவிப்பதை உடனுக்குடன் அறிந்து கொள்ள சில எச்சரிக்கைகள் தேவை.

அவையாவன

1. வழக்கத்திற்கு மாறான, குறிப்பிடத்தக்க நாற்றம்
2. அழுகிய வாடை, அல்லது காற்றின் அடர்த்தி
3. காற்றின் சுற்றோட்டக்குறைவு
4. பழுதுபட்ட குளிர்பதனப் பெட்டி, குளிர்சாதன இயந்திரங்களின் இயக்கம்.
5. புகைபோக்கியில் ஓட்டை பெட்ரோல், டீசலை எரிக்கும் போது போதுமான அளவிற்கு காற்றோட்டம் இருந்து புகை வெளியே செல்லுகிறதா என்பதை கவனிப்பது.
6. வீட்டிற்குள்ளே இருக்கின்ற காற்றில் அதிக அளவு ஈரப்பதம்
7. வெளிச்சமோ அல்லது காற்றோ வராமல் கட்டப்பட்ட வீடுகள்
8. வீட்டில் எங்காவது பூஞ்சைக்காளான் மற்றும் ஸ்போர்கள் இருப்பது
9. புதுப்பிக்கப்பட்ட வீட்டிற்கோ அல்லது புதிய வீட்டிற்கோ சென்ற உடன் உடலில் ஏற்படும் மாறுதல்கள்.
10. வீட்டு உபயோகப் பொருட்களுக்கு புதிய வண்ணம் பூசிய உடன் அடிக்கடி ஏற்படும் தும்மல், கண் எரிச்சல்.
11. வீட்டிற்குள்ளே இருப்பதை விட வெளியே இருக்கும் போது உடல் ஆரோக்கியமாக இருத்தல்

இவற்றை சரியாக கவனிப்பதன் மூலமாக வீட்டிற்குள்ளே உண்டாகும் காற்றுமாசை கட்டுப்படுத்தவும், நமக்கு நோய் வராமல் தடுக்கவும் முடியும். நம்மைச் சுற்றியுள்ள இயற்கைச்சூழல் நமக்கு பலவிதமான நன்மைகளைச் செய்து வருகிறது. மரங்களும், செடிகொடிகளும் நாம் வெளிவிடும் ஏராளமான கரியமில வாயுவை கிரகித்துக்கொண்டு, பிராணவாயுவை வெளியிடுகின்றன. இதன் காரணமாக நம்மைச் சுற்றி உள்ள காற்று மண்டலத்தில் கரியமிலவாயுவின் அளவு பெருகுவது தடைசெய்யப்படுகிறது. சராசரி வெப்ப நிலை உயர்வு, சூழல் வெப்பநிலை உயர்வு போன்ற விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படுவது தாவரங்களின் சேவையினால் தடுத்து நிறுத்தப்படுகிறது.

சூரியனில் இருந்து வெளிப்படும் புறஊதாக் கதிர்கள் நமக்கு புற்றுநோயை ஏற்படுத்தும். இவ்வாறு நடக்காமல் காற்றுவெளியில் உள்ள ஓசோன் படலம் ஒரு கவசமாக இருந்து, புறஊதாக் கதிர்களை வடிகட்டி பூமிக்கு அனுப்பி வைக்கிறது. மண்புழுக்கள், சாணவண்டுகள், இன்னும் பெயர் தெரியாத நூற்றுக் கணக்கான உயிரினங்கள் மண்ணில் உள்ள கழிவுப்பொருட்களை உரமாக மாற்றுகின்றன. இதன் காரணமாக விவசாய நிலத்தின் சத்துக்கள் அதிகமாகின்றன. உற்பத்தி பெருகுகிறது.

பறவைகள், விலங்குகள், வண்டுகள், பூச்சிகள் ஆகிய உயிரினங்களைக் கொண்ட ஆரோக்கியமான சூழல், மனித வாழ்க்கைக்கு மிகவும் அவசியம். தாவரங்களில் மகரந்த சேர்க்கை ஏற்பட வண்டுகளும், பூச்சிகளும் உதவுகின்றன. பயிர்களை நாசம் செய்யும் வெட்டுக்கிளி, போன்ற பூச்சிகளை அழிக்க பறவைகள் பயன்படுகின்றன.

எரிபொருட்கள், கடல் உணவு, காட்டு விலங்குகள், கயிறுகள், ஆகியவற்றை காடுகள் மற்றும் கடல்கள் நமக்கு அளிக்கின்றன. இவை மட்டும் அல்லாமல், இயற்கையாக ஏற்படும் கழிவுகள், மனிதனால் ஏற்படும் குப்பைகள், கழிவுகள் ஆகியவற்றை அழிப்பதிலும் இயற்கை பெரும்பங்கு ஆற்றுகிறது. இவைகளை மனதில் கொண்டு நாம் சுற்றுச்சூழல் மாசுபடுவதை எல்லாவகையிலும் முழுமுயற்சி செய்து தடுப்பது அவசியம். 

- வேணு சீனிவாசன்

Pin It