கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: விண்வெளி
விண்வெளியில் ஒரு எரிவாயு நிலையம் உருவாகும் காலம் வெகுதொலைவில் இல்லை. புவி சுற்றுவட்டப் பாதையில் விண்வெளிக் குப்பைகளில் இருந்து ராக்கெட் எரிபொருள் தயாரிக்கப்படவுள்ளது. ஆபத்தான விண் குப்பைகலில் இருந்து எரிபொருள் தயாரிக்கும் திட்டத்தில் ஆஸ்திரேலிய நிறுவனம் ஒன்றும் சேர்ந்துள்ளது. பூமியின் சுற்றுவட்டப் பாதைக்கு அருகில் இருக்கும் பொருட்களை கணினி உருவாக்கிய பிம்பங்களைப் பயன்படுத்தி எளிதில் அடையாளம் காணத் திட்டமிடப்பட்டுள்ளது.
சுற்றுவட்டப் பாதையில் இருக்கும் பழைய பயனற்றுப் போன விண்கலங்கள், மரணமடைந்த செயற்கைக் கோள்கள் மற்றும் ராக்கெட் பகுதிப் பொருட்கள் விண்ணில் மணிக்கு 28,000 கி.மீ வேகத்தில் சுற்றி வருகின்றன. இவை வானில் வலம் வரும் தொலைத்தகவல் தொடர்பு செயற்கைக் கோள்கள் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றன.
அசுர வேகத்தில் சுற்றும்போது இவற்றில் ஏதேனும் ஒரு திருகு/ஒரு சிறு கோளாறு ஏற்பட்டால் கூட அது சர்வதேச விண்வெளி நிலையத்திற்கும், அதில் பயணம் செய்யும் மனிதர்களுக்கும் பேராபத்தை ஏற்படுத்தும். சுற்றி வரும் நுண்பொருட்கள் ஒன்றுடன் ஒன்று மோதும் ஆபத்தும் உள்ளது. இது கெஸ்லர் விளைவு (Kessler effect) என்று அழைக்கப்படுகிறது. இக்குப்பைகள் அவை சுற்றி வரும் வட்டப் பாதைகளில் இருந்து அகற்றப்பட்டால் மட்டுமே அவை அங்கிருந்து வெளியேறும். அதுவரை இவை அதே பாதையில் தொடர்ந்து சுற்றும். தெற்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நியூமேன் ஸ்பேஸ் (Neumann space) என்ற நிறுவனம் குறைவான உயரமுள்ள சுற்றுவட்டப் பாதைகளில் விண்கலத் திட்டங்கள், செயற்கைக் கோள்களை நகர்த்துதல், சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளது. இப்போது இந்த நிறுவனம் வேறு மூன்று நிறுவனங்களுடன் இணைந்து விண்வெளிக் கழிவுகளில் இருந்து எரிபொருள் தயாரிக்கும் முயற்சியைத் தொடங்கியுள்ளது.
ஜப்பானைச் சேர்ந்த ஆஸ்ட்ரோ ஸ்கேல் (Astroscale) என்ற நிறுவனம் செயற்கைக் கோள்களின் உதவியுடன் வான் கழிவுகளை எவ்வாறு வெற்றிகரமாக கைப்பற்றுவது என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளது.
அமெரிக்காவின் நானோ ராக்ஸ் (Nanorocks) என்ற நிறுவனம் நவீன ரோபோட்டிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கழிவுகளை வட்டப்பாதையில் சுற்றிக் கொண்டிருக்கும்போதே வெட்டி எடுப்பதற்குரிய நூதன வழிகளைக் கண்டுபிடித்துள்ளது.
மற்றொரு அமெரிக்க நிறுவனம் சிஸ்லூனார் (Cislunar) கழிவுகளை கம்பிகளாக மாற்றும் வழியைக் கண்டுபிடித்துள்ளது. இவற்றை நியூமேன் ஸ்பேஸ் நிறுவனம் எரிபொருளாக மாற்றத் திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனம் கழிவுகளில் உள்ள இரும்பை அயனியாக்கி இதன் மூலம் கிடைக்கும் ஆற்றலைப் பயன்படுத்தி வட்டப்பாதையில் சுற்றி வரும் பொருட்களை நகர்த்த முடியும் என்று நம்புகிறது.
கழிவுகளில் இருந்து உலோகங்களை உருக்கும் முயற்சிக்காக நாசா நிதியுதவி செய்துள்ளது என்று நியூமேன் ஸ்பேஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ஹெர்வ் அஸ்டியர் (Herve Astier) கூறியுள்ளார். சுற்றும் கழிவைப் பிடித்து அதை வெட்டி உருக்கினால் எரி ஆற்றலாக மாற்ற முடியும் என்று அவர் கூறுகிறார். பொருட்கள் ஒரு முறை வட்டப்பாதைகளுக்கு ஏவப்பட்டு விட்டால் அவை தானாகவே பாதையை விட்டு விலகிச் சென்றால் மட்டுமே, காற்று மண்டலத்திற்குள் நுழையும்போது எரிந்து சாம்பலாகலாம் அல்லது பூமியில் அரிதாக விழலாம்.
நாளுக்கு நாள் விண்வெளியில் குப்பைகளின் அளவு அதிகமாகிறது. இதை சமாளிக்க உதவும் வழிமுறைகளை உருவாக்குவதில் சர்வதேச நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. சிறிய திருகாணி முதல் பெரிய பொருட்கள் வரை விண்வெளியில் சுழலும் அனைத்துமே ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவை. சேபர் அஸ்ட்ரநாட்டிக்ஸ் (Saber aStronautics) என்ற நிறுவனம் காலாவதியாகும் விண்கலனை பிடித்திழுத்து மீட்கும் திட்டத்திற்காக நாசாவின் நிதியுதவியைப் பெற்றுள்ளது.
சிட்னியைச் சேர்ந்த எலக்டோ ஆப்டிக்ஸ் சிஸ்டம்ஸ் (Elecro Optic systems) கேன்பரா பல்கலைக்கழகத்துடன் இணைந்து இதுபோன்ற கழிவுகள் ஒன்றுடன் ஒன்று மோதாமல், காற்று மண்டலத்திற்குள் நுழைவதைத் தடுக்க உதவும் லேசர் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. விண்வெளியில் வலம் வரும் குப்பைகளை அடையாளம் கண்டுபிடிக்கும் முறையை மேம்படுத்த ஆஸ்திரேலிய இயந்திரக் கற்றல் ஆய்வுக் கழகம் (Institute of machine learning) ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.
விண்வெளிக் குப்பைகளை கைப்பற்றுவதை, அழிப்பதைக் காட்டிலும் அவற்றை மறுசுழற்சி செய்வதே சிறந்தது என்று ஹெர்வ் அஸ்டியர் கூறுகிறார். வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு குப்பைகளை கைப்பற்றி அவற்றை மறுபடி பயன்படுத்தினால் அது நாளைய விண்வெளித் திட்டங்களுக்கு ஆகும் செலவைக் குறைக்க பெரிதும் உதவும். மாசுகளாலும், குப்பைகளாலும் ஏற்கனவே பூமி மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும்போது ஒவ்வொரு நாளும் அதிகரிக்கும் விண்வெளிக் குப்பைகள் மனித குலத்திற்கு மேலும் அழிவையே ஏற்படுத்தும். இந்நிலையில் விண்வெளியில் இப்பொருட்களை மறுபயன்பாட்டிற்குக் கொண்டு வரும் காலம் விரைவில் வரும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். அப்போது பூமியில் இன்று ஆங்காங்கே பெட்ரோல் நிலையங்கள் இருப்பது போல விண்வெளியில் எரிவாயு ஆற்றல் நிலையங்கள் உருவாகும்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: விண்வெளி
வானில் கண்ணுக்கு விருந்தளிக்கும் காட்சிகளில் ஒன்று வால் நட்சத்திரங்கள். பிரகாசிக்கும் ஒரு தலையுடன் துடைப்பம் போல ஒரு நீண்ட வாலுமாக வானில் வலம் வரும் இவை அரிதாக பூமிக்கு விஜயம் செய்கின்றன. சூரியனுக்கு அருகில் செல்லும்போதுதான் இவற்றிற்கு நீண்ட வால் உருவாகிறது. இது இவற்றை அடையாளம் காண உதவுகிறது. பொதுவாக இவை வால் நட்சத்திரங்கள் என அழைக்கப்பட இதுவே காரணம்.
வால் நட்சத்திரங்கள் என்றால் என்ன?
இலத்தீன் மொழியில் நீளமான முடி என்று பொருள்படும் காமட்டே என்ற சொல்லில் இருந்துதான் காமட் (comet) என்ற ஆங்கிலச் சொல் பிறந்தது. இவற்றின் தலையின் நீளம் 2 முதல் 20 கி மீ வரை இருக்கும். புளூட்டோ கோளிற்கு அப்பால் 8 இலட்சம் கிலோமீட்டர் பரப்பில் அமைந்திருக்கும் ஊர்ட் மேகத்திரள் பகுதியில் இருந்து இவை கிளம்பி வருகின்றன. இப்பகுதியில் கோடிக்கணக்கான கோளவடிவ வான் பொருட்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன. இங்கு ஏதேனும் மோதல்கள் நிகழும்போது பாதை மாறி சூரிய மண்டலத்திற்குள் பனிக்கட்டைகளாக இவை நுழைகின்றன.
அமைப்பும் தோற்றமும்
கோள்கள், குட்டிக் கோள்களுடன் ஒப்பிடும்போது வால் நட்சத்திரங்கள் திடநிலையில் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. இவற்றின் அமைப்பில் 70% பனிக்கட்டி வடிவத்தில் அமைந்த பொருட்களே உள்லன. இரும்பு, நிக்கல் துகள்கள், திடவடிவ அம்மோனியா, மீத்தேன், பலதரப்பட்ட சிலிகேட்டுகள், ஹைடிரஜன், கார்பன், நைட்ரஜன், ஆக்சிஜன் போன்ற வாயுக்கள் இவற்றில் அதிகம் காணப்படுகின்றன.பயணத்தில் சூரியனுக்கு அருகில் வரும்போது பனிக்கட்டிகள் சூரிய ஒளி பட்டு ஆவியாகிறது. சூரிய ஈர்ப்புவிசையால் பின்புறம் நீண்டு சூரியனின் எதிர்திசையில் பல கோடி கிலோமீட்டர்கள் நீண்ட வால் உருவாகிறது. ஒரு பிரம்மாண்ட வால் நட்சத்திரத்திற்கு சூரியனிடம் இருந்து சுமார் 306 கோடி கிலோமீட்டர் தூரத்தில் வால் உருவாகத் தொடங்கும். தூரம் குறையும்போது வாலின் அளவும், நீளமும் அதிகரிக்கும்.
வால் நட்சத்திரங்களின் விஞ்ஞானம்
கெப்லர் என்ற விஞ்ஞானி சூரியனிடம் இருந்து வெளியிடப்படும் பரவலான அழுத்தத்தின் பலனாக இவற்றிற்கு வால் உண்டாகிறது என்று கண்டுபிடித்தார். சில வால் நட்சத்திரங்களின் வாலின் நீளம் சூரியனிற்கும், பூமிக்கும் இடையில் உள்ள தொலைவின் இரு மடங்கிற்கு சமமாக உள்ளது. 30 கோடி கிலோமீட்டர் நீளம் உள்ள வால் நட்சத்திரங்களையும் மனிதர்கள் கண்டுபிடித்துள்லனர்.
தூசுக்களால் உண்டான வால் வெண்மை அல்லது இளம் மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது. வால் தூரிகை போன்ற அமைப்பை உடைய மற்றும் அயனிகள் நிறைந்த வாயுக்களால் நிறைந்த பிளாஸ்மா வால் என இருவகைப்படும். நீலம் அல்லது நீலம் கலந்த பச்சை நிறத்தில் இது காணப்படுகிறது. சூரியனிடம் இருந்து தொலைவில் இருக்கும்போது இவற்றிற்கு வால் இருப்பதில்லை.
வால் நட்சத்திரங்களின் கண்டுபிடிப்பு
இவை சூரியனுக்கு அருகில் வரும்போது வால் உருவாகி அதன் மீது சூரிய ஒளி படும்போது பூமியில் இருந்து புலனாகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஐம்பதிற்கும் குறையாமல் வால் நட்சத்திரங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கின்றனர். இவற்றில் பலவும் பூமியில் இருந்து பார்க்க முடியாதவை. சாதாரணமாக சூரிய உதயத்திற்கு முன்னும், மறைவிற்குப் பிறகும் இவற்றைக் காணலாம். என்றாலும் அபூர்வமாக பகல் நேரத்திலும் நள்ளிரவிலும் தென்படக்கூடிய வால் நட்சத்திரங்களும் உண்டு.
ஒவ்வொரு வால் நட்சத்திரத்தின் சுற்றுவட்ட காலமும் வெவ்வேறானது. மூன்றேகால் ஆண்டு முதல் இலட்சக்கணக்கான ஆண்டுகள் வரை இது வேறுபடுகிறது. ஒரு முறை மட்டுமே தோன்றி என்றென்றைக்கும் மறையும் வால் நட்சத்திரங்களும் பிரபஞ்சத்தில் உள்ளன. சுற்றுவட்ட காலம் இருநூறு ஆண்டுகளுக்குக் குறைவாக உள்ளவை குருங்கால வால் நட்சத்திரங்கள் என்றும், இதற்கு மேல் உள்லவற்றை நீண்டகால வால் நட்சத்திரங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
இவை சூரியக் குடும்பத்தில் உள்ல கோள்கள் போல சுற்றுவட்ட காலம் கொண்டவை அல்ல. சூரியனுக்கு அருகில் வரும்போது சில பல இலட்சக்கணக்கான கிலோமீட்டர்கள் வேகத்தில் பயணிக்கின்றன. இவை ஒவ்வொரு முறையும் சூரியனுக்கு அருகில் வரும்போது இவற்றின் தூசுப்படலங்களும், வாயுக்களும் நஷ்டமடைகின்றன. நூற்றிற்கு மேற்பட்ட முறை சூரியனை சுற்றும் வால் நட்சத்திரங்கள் குறைவாகவே உள்ளன.
காணாமல் போகும் வால் நட்சத்திரங்கள்
சில வால் நட்சத்திரங்கள் அவற்றின் பயணத்தின்போது கோள்களுக்கு அருகில் வருகின்றன. அப்போது கோள்களின் ஈர்ப்புவிசையால் அவற்றின் மீது மோதி சின்னாபின்னமாகின்றன. 1994 ஜூலையில் ஷூமேக்கர் லெவி9 என்ற வால் நட்சத்திரம் வியாழன் கோளிற்கு அருகில் சென்றபோது இருபதுக்கும் மேற்பட்ட துண்டுகளாக உடைந்து அவை ஒன்றன்பின் ஒன்றாக வியாழனில் விழுந்து பெரிய வெடிப்புகளுக்குக் காரணமானது.
வால் நட்சத்திரங்களால் பல நேரங்களில் எரிகல் பொழிவு (meteor shower) சம்பவிப்பதுண்டு. இவை சூரியனை வலம் வந்து கடந்து செல்லும்போது அவற்றின் சில பகுதிகள் கழன்று தனியாக இருக்கும். அவற்றின் சுற்றும் பாதையின் குறுக்கே பூமி கடந்து செல்லும்போது தூசுக்களும், பாறைத் துண்டுகளும் பூமியின் வாயு மண்டலத்தில் நுழைந்து உராய்வினால் ஏற்படும் வெப்பத்தினால் எரிந்து சாம்பலாகின்றன. இவை எரிகற்கள் என்று அழைக்கப்படுகின்றன.
சில வால் நட்சத்திரங்களைப் பொறுத்தமட்டும் இந்நிகழ்வு ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒழுங்குடன் மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன. எடுத்துக்காட்டு ஆண்டுதோறும் ஆகஸ்ட் 9-13 தேதிகளுக்கு இடையில் நிகழும் பெர்சீட் எரிகல் பொழிவு. இதன் உறைவிடம் 2007 ஆகஸ்ட்டில் வந்து சென்ற சஃப்ட் டக்கிள் என்ற வால் நட்சத்திரம். இவை பூமியுடன் மோதுவதற்குரிய வாய்ப்பு மிகக் குறைவு. இதற்குக் காரணம் இவற்றின் சுற்றுவட்டப் பாதையின் தளம் பூமியில் இருந்து வேறுபட்டது.
ஒரு சில மட்டுமே பூமியின் பாதைக்குக் குறுக்கே செல்கின்றன. இவ்வாரு நிகழ்ந்தாலும் இவை பூமியில் வந்து விழுவதில்லை. இத்தகைய சம்பவங்களின் சில அடையாளங்கள் மட்டுமே பூமியில் உள்ளன. 1908 ஜூன் 30 அன்று சைபீரியாவில் துங்கிஷ்கா என்ற வனப்பகுதியில் ஒரு குட்டி வால் நட்சத்திரம் விழுந்ததன் அடையாளம் இன்றும் உள்ளது. 8 கி மீ உயரத்தில் இருந்து அது உடைந்து தெறித்து விழுந்து 10 மெகா டன் டி என் டி வெடிபொருள் வெடிப்பிற்கு சமமான வெப்ப ஆற்றலை வெளியிட்டது.
இது பல்லாயிரக்கணக்கான ஹிரோஷிமா அணுகுண்டுகளுக்கு சமமான ஆற்றல். இதன் அதிர்ச்சி அலைகள் பல கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள வனப்பகுதியை அழித்தது. வால் நட்சத்திரங்களின் அளவு ஒரு கிலோமீட்டருக்கும் கூடுதலாக இருந்தால் அவை பல இலட்சம் மெகா டன் வெப்ப ஆற்றலை வெளியிடும். இது உலகளவில் பேரழிவிற்கும் காரணமாகலாம்.
பூமியில் இருந்து உயரும் தூசுக்களும், எரிதல் மூலம் ஏர்படும் புகையும் நீண்டகாலம் சூரிய ஒளியை தடை செய்யும். இது புவியின் காலநிலையில் பெரும் அழிவை ஏற்படுத்தும் மாற்றங்களுக்குக் காரணமாகும். ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன் டைனசோர்களின் அழிவிற்குக் காரணமானது தென்னமெரிக்காவில் விழுந்த இத்தகைய ஒரு வால் நட்சத்திரமே என்று கருதப்படுகிறது. அரிதாக ஒரு சில இலட்சம் ஆண்டுகளுக்கு ஒரு முறை இவ்வாறு நிகழ சாத்தியம் உண்டு. இதைத் தடுக்க உதவும் ஏவுகணைத் தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
வால் நட்சத்திரங்களில் சூப்பர் ஸ்டார்
பிரபல வால் நட்சத்திரங்களின் வரிசையில் முதலிடம் பெருவது ஹேலி வால் நட்சத்திரமே. இதுவே முதலில் கண்டறியப்பட்ட குறுகிய கால வால் நட்சத்திரம். பிரிட்டிஷ் வானியல் அரிஞர் எட்மண்ட் ஹேலி இது ஒரு சில ஆண்டுகள் இடைவேளையில் பூமிக்கு விஜயம் செய்யும் வால் நட்சத்திரம், இந்த இடைவேளை 75 ஆண்டுகள் என்று அவர் கண்டுபிடித்தார். இதன் வரலாறை ஆராய்ந்த அவர் கி மு 140, கி பி 1456, 1531, 1607, 1682 ஆகிய ஆண்டுகளில் தென்பட்ட இது ஒரே வால் நட்சத்திரமே என்று கண்டுபிடித்தார்.
1759ல் இது மீண்டும் பூமிக்கு வரும் என்று அவர் கூறினார். அதைக் காண அவர் உயிருடன் இல்லை என்றாலும் வால் நட்சத்திரம் தென்பட்டது. பொதுவாக இவை குறித்து அக்காலத்தில் உலக மக்களிடையில் நிலவி வந்த பீதியை, மூடநம்பிக்கைகளை மாற்ற இக்கண்டுபிடிப்பு பெரிதும் உதவியது. 1910, 1986 ஆகிய ஆண்டுகளில் மீண்டும் தோன்றிய ஹேலி வால் நட்சத்திரம் 2061-62 காலத்தில் மீண்டும் தோன்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெயர் சூடும் வால் நட்சத்திரங்கள்
வெறும் கண்களால் இந்த வால் நட்சத்திரத்தைப் பார்க்கலாம். ஒரு மனித ஆயுளில் மீண்டும் தோன்றும் வால் நட்சத்திரம் என்ற பெருமையும் ஹேலி வால் நட்சத்திரத்திற்கு உண்டு. முதலில் 16ம் நூற்றாண்டில் வானில் தோன்றும் இந்த தீக்குளிக்கும் அதிசயங்களுக்கு பெயர் வைக்கும் முறை தொடங்கியது. முதலில் இவை தோன்றும் ஆண்டு மற்றும் கண்டறியும் முறையைக் குறிப்பிடும் வகையில் ஆங்கில அரிச்சுவடியில் சிறிய எழுத்துக்களை சேர்த்து எழுதும் முறை ஏற்பட்டது.
பிறகு தோன்றும் ஆண்டுடன் சேர்த்து ரோமன் எழுத்துக்கள் எழுதும் முறை வந்தது. சர்வதேச வானியல் கழகம் 1995 முதல் பெயரிடும் முறையில் மாற்றம் ஏற்படுத்தியது. என்றாலும் பல வால் நட்சத்திரங்கள் அவற்றைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகளின் பெயராலேயே அழைக்கப்படுகின்றன. உதாரணம்-எங்கே, டொனாட்டி, இக்கயாசிக்கி. இந்திய விஞ்ஞானி ஒருவரின் பெயரால் அழைக்கப்படும் ஒரு வால் நட்சத்திரம் உள்ளது.
உலகப் புகழ் பெற்ற வானியல் அறிஞர் வைனு பாபுவின் பெயரில் அந்த வால் நட்சத்திரம் அழைக்கப்படுகிறது. ஹார்வோர்டு விண்வெளியியல் பள்ளியில் (School of astronomy) அவர் 22 வயது மாணவராக இருந்தபோது தன் ஆசிரியர் பாப் மற்றும் சக மாணவர் மியூக்கிர் ஆகியோருடன் சேர்ந்து ஒரு வால் நட்சத்திரத்தைக் கண்டுபிடித்தார். பாபு-பாப்-மியூக்கிர் வால்நட்சத்திரம் என்று அது அழைக்கப்படுகிறது.
இக்கண்டுபிடிப்பிற்கு பசுபிக் விண்வெளியியல் கழகத்தின் டோம் ஹோ பதக்கம் வழங்கப்பட்டது. இவரின் பங்களிப்பிபை அங்கீகரிக்கும் வகையில் சர்வதேச விண்வெளியியல் கழகம் 2596 என்ற குட்டிக் கோளிற்கு வைனு பாபு என்று பெயரிட்டுள்லது. வால் நட்சத்திரங்களை ஆராயும் பிரிவு வால் நட்சத்திரவியல் (commetology) எனப்படுகிறது. 1985 முதல் விண்வெளி ஆய்வுக்கலன்களின் உதவியுடன் வால் நட்சத்திரங்கள் பற்றிய ஆய்வுகள் பெரும் வளர்ச்சி கண்டு வருகிறது.
இதற்காக முதலில் அனுப்பப்பட்ட ஆய்வுக்கலன் சர்வதேச சூரிய ஆய்வுக்கலன் (International Sun Explorer). சின்னர் என்ற வால் நட்சத்திரத்தின் வால் வழியாகக் கடந்து சென்ற இந்த கலன் வாலின் அமைப்பு, மற்ற சிறப்புகள் பற்றி பல தகவல்களைத் தந்தது. ஹேலி வால் நட்சத்திரத்தைக் குறித்து ஆராய அனுப்பப்பட்ட லியோட்டோ ஆய்வுக்கலன் 1986ல் அதன் அருகில் சென்று ஆயிரக்கணக்கான படங்களை பூமிக்கு அனுப்பியது. இதன் மூலம் ஹேலியின் நியூகிலியஸ் முன்பு கருதியிருந்ததைக் காட்டிலும் பெரியது என்று தெரிய வந்தது.
மேலும் நியூகிலியசின் வெளிப்புறத்தில் 10% மட்டுமே சூரியனுக்கு அருகில் செல்லும்போது செயல்திறனைப் பெருகிறது என்றும் அறியப்பட்டது. இதன் மூலம் முன்பு நினைத்துக் கொண்டிருந்ததில் இருந்து வித்தியாசமாக வால் நட்சத்திரங்களின் முக்கிய அகப்பொருள் பனிக்கட்டிகளே என்பதை அறிய முடிந்தது. 1990களில் நடந்த ஆய்வுகளில் இருந்து இவை எக்ஸ் கதிர்களை வெளியிடுகின்றன என்று கண்டுபிடிக்கப்பட்டது.
இவற்றிற்கும் சூரிய மண்டலத்தில் காணப்படும் வாயுக்களுக்கும் இடையில் நடைபெறும் வேதிவினைகளால் இவ்வாறு நிகழ்கிறது என்று கருதப்படுகிறது. லியோட்டோ ஆய்வுக்கலனின் கண்டுபிடிப்புகள் இந்த வானியல் அற்புதங்கள் பற்றி நன்கறிய மனிதகுலத்திற்கு உதவியது. நாசாவின் டீப் ஸ்பேஸ், ஸ்டார் டஸ்ட், டீப் இம்பேக்ட் போன்றவை இவை பற்றி ஆராயும் முக்கிய ஆய்வுக்கலன்கள். சூரியனை வலம் வரும் சோகோ கண்காணிப்பு நிலையம் இன்று அதிக அளவில் வால் நட்சத்திரங்களைக் கண்டுபிடிக்கிறது.
2005ம் ஆண்டிற்குள் சுமார் ஆயிரம் வால் நட்சத்திரங்களை இந்த நிலையம் கண்டுபிடித்தது. இவற்றில் பெரும்பாலானவை சூரியனுக்கு மிக அருகில் பயணம் செய்பவை. சாமான்ய மனிதர்களுக்கும் வானியலில் ஆர்வம் ஏற்பட வால் நட்சத்திரங்கள் பெரிதும் உதவியுள்ளன. இவற்றின் பன்முகத் தன்மை, ஆச்சரியம் தரும் அமைப்பு, புதிர் நிறைந்த இவற்றின் போக்குவரவு மனிதனில் என்றும் இயற்கை என்னும் மகத்தான சக்தியின் அற்புதங்களாக எஞ்சி நிற்கின்றன!
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- பாண்டி
- பிரிவு: விண்வெளி
நமது சூரிய குடும்பத்தில் பல மில்லியன் கணக்கான சிறிய கற்கள் வடிவிலான கோள்கள் (asteroid) சுற்றி வருகின்றன. அதில் ஒன்றுதான் bennu என்று விஞ்ஞானிகளால் அழைக்கப்படும் ஒரு சிறிய சுழலும் சிறுகோளில் (Spinning rock) நாசாவின் விண்கலம் தரை இறங்கி இருக்கிறது.
இது நமது பூமியிலிருந்து சுமார் 200 மில்லியன் மைல்கள் தொலைவில் இருக்கிறது. அதோடு நம் சூரிய குடும்பத்தில் மிக அருகில் இருக்கும் Ryugu என்ற சிறுகோளுக்கு அடுத்து (177 மில்லியன் மைல்கள்) இருப்பது இதுவே ஆகும்.
கடந்த அக்டோபர் மாதம் 19ஆம் தேதி இந்த விண்கலம் 'OSIRIS-REx' (asteroid sample return mission) தரை இறங்கியதை அமெரிக்காவில் உள்ள கொலராடோ மாகாணத்தில் இருக்கும் கட்டுப்பாட்டு மையம் Lockheed Martin Space Systems Facility in Littleton, Colorado, இதனை உறுதிப்படுத்தியது.
அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் 'touchdown' என்று கூறி மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். 'touchdown' என்பதற்கு இன்னொரு பொருளும் இருக்கிறது, அமெரிக்காவின் புகழ்பெற்ற விளையாட்டான அமெரிக்கன் ஃபுட்பால் விளையாட்டில் எதிரணியினரின் கோல் கம்பத்தின் பக்கம் பந்தை தரையில் வைத்துவிட்டால் நமக்கு ஆறு புள்ளிகள் கிடைக்கும். அதன் பெயர்தான் touchdown.
இந்த சிறு கோளில் தரையிறங்கிய விண்கலமானது அங்கிருந்து சிறிய அளவிலான கற்கள், தூசு, தாதுக்கள் பொருட்களை (Samples) பூமிக்கு எடுத்து வர உள்ளது. நாம் நினைப்பது போல அதிக நேரம் விண்கலம் அங்கு நிற்காது. குறைந்தது ஐந்து அல்லது பத்து வினாடிகள் மட்டுமே நிற்கும் பின்னர் சில காலம் அதனைச் சுற்றியே வட்டமிடும்.
இந்த சிறிய கால அளவுகளே அங்கிருந்து samples -களை எடுப்பதற்கு போதுமானது என்கிறார்கள். விண்கலம் சேகரித்த samples களின் அளவு எவ்வளவு தெரியுமா? வெறும் தோராயமாக 60 கிராம் மட்டுமே.
மொத்தமாக 2 கிலோகிராம் தூசிகளை கொண்டுவரும் படியாக விண்கலம் வடிவமைக்கப்பட்டது. ஆனால், அங்கிருந்து எடுத்து வருவது மிகவும் சவாலான காரியம் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும் இந்த அளவு samples போதுமானது என்கிறது நாசா.
இதே போன்று ஒரு ஆய்வினை ஜப்பானிய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் asteroid Ryugu -க்கு ஒரு விண்கலத்தை 2003 ஆம் ஆண்டில் அனுப்பியது. மிக நீண்ட பயணத்திற்கு பிறகு 2018ல் Ryugu சிறுகோளை சுற்றிவந்தது. எனினும் 2019 ஏப்ரல் மாதத்தில் தான் அது தரையிறங்கியது.
இதுதான் பூமியில் இருந்து astroid -க்கு செலுத்தப்படும் முதல் முயற்சி ஆகும். ஆனால், அதிலிருந்து சில மில்லி கிராம் அளவிலான samples மட்டுமே எடுக்க முடிந்தது. அந்த விண்கலம் இப்போது பூமிக்கு திரும்பி கொண்டிருக்கிறது.
இந்த ஆண்டு 2020, வரும் டிசம்பர் மாதத்தில் அது ஆஸ்திரேலியா பகுதியில் தரையிறங்கும். ஆராய்ச்சியாளர்கள் அதற்காக காத்துக் கொண்டு இருக்கிறார்கள். நமது பூகோளமும் எப்படி உருவானது என்று நாமும் காத்துக் கொண்டு இருப்போம்.
bennu என்ற சிறுகோள் பார்ப்பதற்கு பெரிய அளவில் இருக்காது. ஒரு பெரிய கட்டிடத்தின் உயரம் அளவில் (Empire State building) தான் இருக்கும், கரடுமுரடான பாறைகளைக் கொண்ட வட்ட வடிவில் இருக்கும்.
இது நம்முடைய பூமியைத் தாக்குவதற்கு சாத்தியக் கூறுகள் இருக்கலாம் என்றாலும், 2700 சாத்தியக் கூறுகளில் ஒரு அளவு மட்டுமே பூமியை நோக்கி வரலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அந்த வாய்ப்பும் கூட இன்னும் 150 ஆண்டுகளுக்கு இல்லை.
எதற்காக இந்த ஆய்வுகள்:
"பால்வழி அண்டம் உருவாக்கியதில் இருக்கும் மிச்சம் மீதி உள்ள கற்கள் தான் இந்த சிறு கோள்கள். இவைகள் பல பில்லியன் ஆண்டுகளாக நம்முடைய சூரிய குடும்பத்தில் சுற்றி வந்து கொண்டிருக்கின்றன. இவ்வகை கோள்களில் இருக்கும் மூலக் கூறுகளே ஆரம்ப காலத்தில் பிற கோள்கள் உருவாகுவதற்கு மூலத் காரணமாக கூட இருந்திருக்கலாம்" என்கிறார் Lori Glaze, director of NASA's planetary science division.
நமது சூரிய குடும்பம் எவ்வாறு உருவாகியது என்பதைக் கண்டறிய சிறு கோள்களின் மூலம் பெறப்படும் மூலக்கூறுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
OSIRIS-REX என்ற பெயரில் அழைக்கப்பட்ட நாசாவின் விண்கலம் 2016ம் ஆண்டில் தனது பயணத்தை தொடங்கியது. அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தின் அறிவியலாளர் Mike Darke இவரின் முயற்சியால் bennu என்ற சிறு கோள்களைப் பற்றிய ஆய்வு தொடங்கியது.
பலகட்ட ஆய்வுகளுக்குப் பின்னர் 2011ல் நாசா இதற்கு ஒப்புதல் அளித்தது. இது சோகமான ஒரு சம்பவம் என்னவென்றால் நாசா ஒப்புதல் அளித்து சில மாதங்கள் கழித்து அவர் காலமாகிவிட்டார்.
இது மிகப்பெரிய விண்கலம் என்று நாம் கூறி விட முடியாது பார்ப்பதற்கு 15 வேன்கள் வரிசையில் நின்றால் எப்படி இருக்குமோ அதே அளவில் தான் இருக்கும்.
2018 ஆம் ஆண்டே இந்த விண்கலம் bennu -வை நெருங்கிவிட்டது என்றாலும் சரியான இடத்தில் samples சேகரிக்கும் இடத்தை இத்தனை நாட்களாக தேடிக்கொண்டு இருந்தது. தரையிறங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக விஞ்ஞானிகளை மிகுந்த அழுத்தத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது. ஏனென்றால் அதில் மிக மோசமான தடிமனான பாறைகள் இருந்தன என்பதை விண்கலத்தில் உள்ள 3D புகைப்படங்கள் மூலம் கண்டறிந்தார்கள்.
ஆமாம் சரியாக தரை இறங்க வில்லை என்றால் இதன் நோக்கமே வீணாகிவிடும். அதிலிருந்து samples -களை விண்கலத்தில் பொருத்தப்பட்டிருந்த probe மூலமாக நைட்ரஜன் வாயுவை செலுத்தி பாறைகளை உடைத்த பின்னர் வெளிவந்த வாயுக்கள், தூசுகள் விண்கலத்திற்கு உள்ளே செல்வதாக வடிவமைக்கப்பட்டிருந்தது. இதில் இருந்து எடுக்கப்பட்ட sample -களை கணக்கிட எந்த ஒரு கருவியும் இல்லாததால் தோராயமாக 60கிராம் இருக்கும் என மதிப்பிட்டுள்ளனர்.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை இந்த விண்கலம் அங்கேயே சுற்றி வரும் பின்னர் அங்கிருந்து பூமிக்கு மீண்டும் திரும்பி விடும். 2023 செப்டம்பர் மாதத்தில் அமெரிக்காவின் யூட்டா மாகாணத்தில் தரை இறங்குவதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பூமியில் தரையிறங்கும் போது அது பேராஷூட் வடிவில் இருக்கும்.
சூரியனையும், பூமியையும், நிலவையும் கடவுள்தான் படைத்தார் என்று பல மதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது அவர்களின் நம்பிக்கைக்கு உரிய விடயம் அதில் நாம் தலையிடுவதில்லை. ஆனால் நம் பூகோளம் சூரிய குடும்பம் இவையெல்லாம் எவ்வாறு உருவாகியது என்று ஆராய்ச்சியாளர்கள் தேடிக் கொண்டே இருக்கிறார்கள்.
பதினேழாம் நூற்றாண்டில் விண்வெளி அறிஞர் கலிலியோ பூமி தட்டையாக இல்லை அது உருண்டையாக இருக்கிறது என்று கூறினார். அப்போது ஐரோப்பியாவில் உள்ள கத்தோலிக்க மதத்தினர் அவரை கடுமையாக எதிர்த்தார்கள்.
பின்னாட்களில் பூமி உருண்டையாக தான் இருக்கிறது என்பதை கண்டறிந்த பின்னர் கத்தோலிக்க மதத்தினர் அதற்காக வருத்தமும் தெரிவித்துக் கொண்டார்கள். இந்த வரலாறு முக்கியமானது. (Source:https://www.theguardian.com/science/the-h-word/2016/jan/21/flat-earthers-myths-science-religion-galileo)
இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக தான் சூரிய குடும்பம் உருவாக்கியதில் இருந்து மிச்சமிருக்கும் சிறு கற்கள், கோள்களின் மேற்பரப்பில் இருக்கும் மூலக் கூறுகளை வைத்து பால் அண்டம் எப்படி உருவானது என்று ஆராய்ச்சியாளர்களால் கண்டறிய முடியும். ஜப்பானிய விண்கலமும் நாசாவின் விண்கலம் பூமிக்கு தரை இறங்கிய பின் அதற்கான தடயங்கள் நமக்கு கிடைக்கும். அதுவரைக்கும் காத்திருப்போம்.
- பாண்டி
- விவரங்கள்
- பாண்டி
- பிரிவு: விண்வெளி
உலகில் இரண்டாவது மிகப்பெரிய தொலைநோக்கியாகக் கருதப்படும் 'The Arecibo Observatory' என்ற தொலைநோக்கியை, தாங்கிப் பிடித்து மேலே செல்லும் 3 அங்குல கேபிள் ஒன்று அறுந்து விழுந்ததில், அதன் வட்ட வடிவ Dish -ல் நூறு அடி அளவுக்கு ஓட்டை விழுந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி காலை 2:45 மணி அளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
ஒரு மாத காலமாக சேதமடைந்த நிலையில் விண்வெளியில் இருந்து தகவல்களை பெற முடியாமல் இருக்கிறது. இதனால் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள், அறிவியலாளர்கள், விஞ்ஞானிகள் எனும் அறிவியல் உலகமே வருத்தத்தில் இருக்கிறது.
ஏனென்றால், இந்த ஆண்டு செவ்வாய் கிரகம் பூமிக்கு மிக அருகில் வருவதாக இருந்தது. தொலைநோக்கி பழுதடைந்த நிலையில் இருப்பதால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொலைநோக்கியின் முழு கட்டுப்பாடுகளும் அமெரிக்காவில் உள்ள தேசிய அறிவியல் மையமும், ஃப்ளோரிடா பல்கலைக்கழகம் National Science foundation and University of Central Florida -ன் கட்டுப்பாட்டில் உள்ளது.
அதேவேளையில் நாசா விண்வெளி நிலையமும் இங்கிருந்து தகவல்களை பெற்றுக் கொள்கிறது. 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை 'The Arecibo Observatory' தொலைநோக்கி தான் உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியாக கருதப்பட்டது.
சரி, அதென்ன 2016 செப்டம்பர் வரை உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியாக இதை கருதினார்கள்? ஆம் 2016ஆம் ஆண்டு சீனா மிகப்பெரிய தொலைநோக்கி ஒன்றை கட்டிமுடித்து செயல்பாட்டுக்கு வந்தது, அன்று முதல் உலகின் மிகப்பெரிய தொலைநோக்கி என்ற பெயரை அது எடுத்துக் கொண்டது. அந்த தொலைநோக்கியின் பெயர் The Five-hundred-meter Aperture Spherical Telescope, அல்லது FAST என்று அழைக்கப்படுகிறது. அதாவது 500 மீட்டர் சுற்றளவில் ஒரு வட்ட வடிவில் காணப்படுவதால் இதனை அவ்வாறு அழைக்கிறார்கள். FAST தொலைநோக்கி இதனை பற்றி கடைசியில் பார்ப்போம்.
The Arecibo Observatory இந்த தொலைநோக்கி அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் கரீபியன் தீவுகளில் இருக்கும் 'Puerto Rico' என்ற நாட்டில் (நாடு என்று கூறுவதைவிட அமெரிக்காவின் ஒரு பிராந்திய பகுதி என்று கூறுவதே சரியானதாக இருக்கும். ஏனென்றால், அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாகவே இது கருதப்படுகிறது, நமது கிரிக்கெட் மொழியில் கூறுவதென்றால் 'மேற்கிந்திய தீவுகள்' அமைந்திருக்கும் பகுதி என்று அழைக்கலாம்) இருக்கிறது. Puerto Rico நாட்டில் இருக்கும் இந்த தொலைநோக்கியை மக்கள் தங்களது கலாச்சாரமாகவே பார்க்கிறார்கள்.
இதனை பூமியில் இருக்கும் லூனா (Luna என்றால் ஸ்பானிய மொழியில் நிலவு என்று பொருள்) என்கிறார்கள் அங்குள்ள மக்கள். நாட்டின் தலைநகரான 'San Juan' நகர வீதிகளில் ஆங்காங்கே தொலைநோக்கியின் படத்தை வரைந்து வைத்திருக்கிறார்கள். 1963ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டு விண்வெளி ஆராய்ச்சியில் பயன்பாட்டுக்கு வந்தது. குறிப்பாக இங்கு Active Search for Extraterrestrial Intelligence or SETI என்று அழைக்கப்படும் Radio signal களை விண்வெளியில் அனுப்பி மீண்டும் இதே தொலைநோக்கில் வரவழைத்து ஆராய்ச்சி செய்வது. அதாவது Radio Signals for aliens civilization இதனை Arecibo messages என்றும் அழைக்கின்றனர்.
மேலும் இதன் வேறொரு சிறப்பு என்னவென்றால், பூமியை நோக்கி வரும் எரிகற்கள் அல்லது வேறு ஏதாவது கண்களுக்கு புலப்படாத பொருட்கள் எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்பதை இந்த தொலைநோக்கியின் மூலம் கணக்கிட்டு வந்தார்கள், செய்திகளிலும் தெரிவித்தார்கள். அதாவது இந்த தொலைநோக்கியில் இருந்து தொடர்ச்சியாக செல்லப்படும் ரேடார் சிக்னல்கள் எதிரில் வரும் ஆப்ஜெக்டில் மோதி திரும்பி வரும் சிக்னல்களை வைத்து மதிப்பிடப்படுகிறது.
இந்த தொலைநோக்கி ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து மிக முக்கியமான வேறு ஒரு பணியையும் செய்து வருகிறது. புதிய பல்சர்ஸ், (Pulsars) சூரிய குடும்பத்தைப் போலிருக்கும் பிற நட்சத்திர கூட்டமைப்புகளை கண்டறிவது. பல்சர்ஸ் எனப்படுவது அதிகப்படியான மின்காந்தப் புலத்தை கொண்ட நட்சத்திரங்கள் சுற்றி வருவது ஆகும், highly magnetized neutron stars. இந்த நட்சத்திர அமைப்புக்களை கண்டறிவதற்கு இங்கிருந்து Radio waves களை அனுப்பி ஆராயப்பட்டது. (தரவுகள்; https://www.naic.edu/ao/node/750)
பொதுவாக எல்லா தொலைநோக்கி சொல்லும் ரேடியோ சிக்னல்களை அனுப்ப இயலாது. அவர்கள் ரேடியோ சிக்னல்களை தன்னுள் இருப்பதாகவே வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால், Arecibo Observatory இந்த தொலைநோக்கி ரேடியோ சிக்னல்களை அனுப்பும் முடியும் அதை வேளையில் விண்வெளியிலிருந்து சிக்னல்களை பெறவும் முடியும் என்பதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் இதன் சிறப்பம்சம்.
பூமியில் இருந்து 35 மில்லியன் மைல்கள் தொலைவில் இருக்கும் செவ்வாய் கிரகம் நமக்கு தெளிவாக தெரியும் காலம் எதுவென்றால் அது ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் ஆகும். கடந்த 2018ஆம் ஆண்டில் ஜூலை மாதம் 31ஆம் தேதி பூமிக்கு மிகவும் அருகில் வந்து இருக்கிறது அந்த சமயத்தில் கூட இந்த தொலைநோக்கியில் இருந்து பல தகவல்களை பெற்று இருக்கிறார்கள் (நாசா செய்திக் குறிப்பு).
இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் செவ்வாய் கிரகம் நமக்கு அருகில் வருவதாக இருந்தது. இப்போது தொலைநோக்கி பழுதாகி இருப்பதால் ரேடார் மூலம் தகவல்கள் எதுவும் பெற முடியாத நிலையில் இருக்கிறது. இந்த முறையை நாம் தவறவிட்டால் அடுத்து 2067ல் தான் பூமிக்கு அருகில் செவ்வாய் கிரகம் வரும். 2020 ஆம் ஆண்டை நாம் தவறிவிட்டோம் என்றே ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
2017ஆம் ஆண்டு இதே தீவில் மரியா சூறாவளி மிகக் கொடூரமாக தாக்கியது. அப்போதுகூட இந்த தொலைநோக்கி அமைந்திருக்கும் இடமும் சேதமடைந்தது. இருந்தாலும் அந்த பகுதியை நீக்கி கடந்த ஆண்டு விண்வெளி ஆய்வுக்கு அது திரும்பியது. இப்போது மீண்டும் இதே தொலைநோக்கி பழுதடைந்து இருப்பதால் அறிவியல் உலகில் பெருத்த சோகத்தை ஏற்படுத்துகிறது.
முன்னரே நாம் கூறியதுபோல 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சீனாவின் பிங்டாங் பகுதியில் கட்டிமுடிக்கப்பட்ட FAST என்ற தொலைநோக்கி உலகில் மிகப்பெரிய தொலைநோக்கியாகக் கருதப்படுகிறது. இதன் மதிப்பு சுமார் 180 மில்லியன் டாலர்கள் ஆகும். 500 மீட்டர் பரப்பளவு தொலைவில் அமைந்திருக்கிறது.
இரண்டாவது பெரிய தொலைநோக்கியை விட 195 மீட்டர் அளவுக்கும் பெரிதாக அமைந்துள்ளது. இதனை சுற்றி அமைந்துள்ள 6 கிலோமீட்டர் அளவில் குடியிருப்புகளை அகற்றி 8000 மக்களை அந்தப் பகுதியிலிருந்து வெளியேறிக் இருக்கிறது சீன அரசு. ஏனெனில் இந்த தொலைநோக்கி சுற்றி மூன்று மைல்கள் அளவுக்கு அதன் ரேடியேஷன் தாக்குதல் இருக்குமாம்.
இங்கு முக்கியமாக பல்சர்ஸ்களை ஆர்யாசி செய்கிறது (Studying interstellar communication signals) இந்த தொலைநோக்கி. 1351 சூரிய ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் பல்சர்ஸ்களை கண்டுபிடிக்க இது உதவும் என்கிறார்கள் இங்குள்ள ஆய்வாளர்கள். இது மிகவும் துல்லியமாக அளக்கும் கருவியாக செயல்படுகிறது. நமது சூரிய குடும்பங்களைப் போல பிற கேலக்ஸிகளில் இருந்து வெளியேறும் ஹைட்ரஜன்களை அளவிட முடியும்.
அதனை அடிப்படையாகக் கொண்டு அதன் நகரும் வேகத்தை அளவிட முடியும் என்கிறார்கள். இங்கிருந்து செவ்வாய் கிரகம் பற்றிய தகவல்களை பெற முடியுமா? என்ற தகவல்கள் எதுவும் இல்லை.
சீனாவில் கட்டிமுடிக்கப்பட்ட உலகின் பெரிய தொலைநோக்கிக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தார்களா? என்பது தெரியாது. ஆனால், அமெரிக்காவின் ஹவாய் மாகானத்தில் புதிதாக கட்டத் திட்டமிட்டிருக்கும் ஒரு தொலைநோக்கிக்கு இப்போதே அங்குள்ள பழங்குடி மக்களிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்ப ஆரம்பித்திருக்கிறது. TMT என்றழைக்கப்படும் Thirty Meter Telescope ஹவாயின் Mauna Kea என்ற தீவில் கட்டமைப்பதாக இருந்தது. இது முற்றிலும் நவீன தொழில்நுட்ப முறையில் வடிவமைக்கப்பட்டது இதனை The largest optical telescope என்றும் அழைக்கிறார்கள்.
இந்த தீவுப் பகுதியில் காணப்படும் அதித வெப்பநிலை மற்றும் 13,287 அடி உயரத்தில் அமைந்த மலைப்குதிகள் தொலைநோக்கி அமைய சாதகமாக இருந்தன. சாதாரண தொலைநோக்கியை விட 12 மடங்கு அதிகம் துல்லியமாக அளவிடும் கருவியாக இருக்குமாம். இங்கு ஏற்கனவே 13 வேறுவைகயான தொலைநோக்கிகள் கட்டி முடிக்கப்பட்டு செயல்பாட்டில் இருக்கிறது. மக்களின் தொடர் போராட்டத்தினால் இதனை வேறு இடத்திற்கு மாற்ற திட்டமிட்டு இருக்கிறார்கள்.
காரணம் இங்குள்ள எரிமலை வெடிப்பு சம்பவங்கள் ஆகும். புதிய தொலைநோக்கியினால் மேலும் எரிமலைகள் வெடிக்க கூடாது என்பதும் மக்களின் நோக்கமாக இருக்கிறது. மேற்கு ஆப்பரிக்கா அருகில் உள்ள ஸ்பெயின் நாட்டின் காலனி பகுதியான Canary Islands - ல் Plan B திட்டத்தின் மூலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அறிவியல் விண்வெளி ஆராய்ச்சிகளும் நமக்கு தேவை அதேவேளையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் தேவை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
- பாண்டி
- UFO மற்றும் ஏலியன்ஸ் கதைகள்
- 90 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் புளூட்டோ
- கருந்துளை...!!!
- ஐந்து பரிமாணங்கள் - முழு விளக்கம் - 2
- நாகரிக வளர்ச்சி - வானியல் ஆராய்ச்சியின் பார்வையில்..!!!
- கலீலியோ சில நிலவுகளைக் கண்டபோது... - சுனில் லக்ஷ்மண்
- விண்வெளி ஆய்வுகளின் பின்னணி என்ன ?
- வாயேஜர் - முடிவில்லா பயணி
- மனிதர்கள் எங்கிருந்து தோன்றினார்கள்?
- வேற்று கிரகவாசிகள்
- செவ்வாய் கிரகத்தில் மனித இனத்தின் குடியேற்றம் சாத்தியமா?
- விரிவடையும் பிரபஞ்சம் மீண்டும் சுருங்குமா?
- மா வெடிப்பு (BIG BANG) ஓர் ஆரம்பமா அல்லது தொடர்கதையா?
- வரலாற்றின் பரிமாணத்தில் பதிவான வெள்ளி மறைப்பு நிகழ்வுகள். . !
- சூரியன்
- சூரியக் குடும்பம் – சில சுவையான தகவல்கள்
- சனியின் கதை..!
- வடக்கு வானின் அன்னத்தில் இரட்டைச் சூரியன்கள்!
- வேறு கோள்களில் உங்களின் வயது?
- சுருங்கி வரும் நிலா