தேவையே புத்தாக்கத்தின் (invention) தாய் என்று கூறப்படுவது உண்டு. கண்டுபிடிப்பை (discovery) அதன் தந்தை என்று கூறலாம். மின்சாரம் பற்றி டெஸ்லா கண்டறிந்தனவற்றைப் படித்திராவிட்டால் எடிசனால் மின்விளக்கை உருவாக்கியிருக்க முடியாது. அதேபோல் சில புத்தாக்கங்கள் (எ.கா. தொலைநோக்கி, நுண்ணோக்கி) இல்லாமல் இருந்திருந்தால் நம்மால் பெரிய சில கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியிருக்க முடியாது. எனவே கண்டுபிடிப்பையும், புத்தாக்கத்தையும் தனித்தனியே வேறுபடுத்திப் பார்ப்பது பொருளற்றது. மிகச்சிறந்த விஞ்ஞானிகள் பலர் இந்த உண்மையை அங்கீகரித்தனர். ஒவ்வோராண்டும் நோபல் பரிசுகள் அறிவிக்கப்படும்போது நாம் இதைத்தான் பார்க்கிறோம்: ஓர் உள்ளார்ந்த ஆர்வத்தால் உந்தப்பட்டு அறிவியல் பயணத்தைத் தொடங்கும் விஞ்ஞானிகள் சில கண்டுபிடிப்புகளை நிகழ்த்துகிறார்கள். அவற்றில் சில கண்டுபிடிப்புகள் புதிய கருவிகள் உருவாகக் காரணமாக இருக்கும்; சில கண்டுபிடிப்புகள் புதிய கருவிகளால் விளைந்தவையாக இருக்கும். ஆனால் ஒட்டுமொத்தத்தில் அவை உலகை மாற்றியமைத்து விடும். அவ்வாறு உலகை மாற்றியமைத்த ஒரு சில கருவிகள் கண்டறியப்பட்ட கதையை இப்போது பார்க்கலாம்.

வானியல்:

galileoஇதுவரை உலகம் கண்ட விஞ்ஞானிகளிலேயே தலைசிறந்தவர் என்று கூறத் தகுதியுடையவர் கலீலியோ கலிலி. ஒரு கருதுகோளை மெய்ப்பிக்க பரிசோதனை முறையை நாடிய முதல் அறிவியல் அறிஞர் அவராகவே இருக்க முடியும். அவரது சாதனைகளில் பலவற்றை நாம் ஏற்கனவே அறிந்திருப்போம். இரு பொருட்களை உயரமான பகுதியிலிருந்து கீழே போட்டால், நிறை அதிகம் கொண்ட பொருள், நிறை குறைந்த பொருளைக் காட்டிலும் வேகமாகத் தரையை அடையும் என்ற அரிஸ்டாட்டிலின் கூற்றை ஏற்க மறுத்து அதைத் தனது பரிசோதனையின் மூலம் நிரூபித்தும் காட்டினார் அவர். மேலும் மிகச்சிறந்த திசைகாட்டியை உருவாக்கியது உள்ளிட்ட பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர்.

இரு தங்கைகள், ஒரு தம்பியுடன் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்த கலீலியோவுக்கு கடைசி வரை பணத்தின் தேவை இருந்து கொண்டே இருந்தது. கலை, ஓவியம் என்று சுற்றித் திரிந்த அவரது தம்பி, குடும்பத்துக்கு எந்த வகையிலும் உதவியாக இல்லை. இதனால் குடும்ப பாரம் முழுவதும் கலீலியோவின் தலையிலேயே விழுந்தது. மேலும் தங்கைகளின் திருமணத்தை மிகுந்த பொருட்செலவில் நடத்த வேண்டியிருந்தது. (அதிகமான வரதட்சணையும் அளிக்க வேண்டியிருந்தது). நல்லவேளையாக, அவர் சில நல்ல நண்பர்களைக் கொண்டிருந்தார். அவர்களின் உதவியால் வெனிஸ் நகரில் இருந்த படூவா பல்கலைக்கழகத்தில் கலீலியோவுக்கு ஆசிரியர் பணி கிடைத்தது. அங்கு வடிவியல், கணிதம் மற்றும் வானியலைக் கற்பித்த அவருக்கு ஓரளவு நல்ல ஊதியம் கிடைத்தது. இருப்பினும்; அவரது அனைத்துத் தேவைகளையும் அது நிறைவு செய்யவில்லை. எனவே தனது ஒவ்வொரு அறிவியல் ஆய்வின்போதும் ஏதாவதொரு புதிய கருவியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

அப்போது இத்தாலியின் பணக்காரக் குடியரசாக வெனிஸ் இருந்தது. எனவே, அரசின் தேவைக்கு புதிய கருவிகளை அளித்தால் பொருளீட்ட முடியும் என்ற எண்ணம் அவரது மனதில் இருந்தது. இவ்வாறு, இலக்கைக் குறி தவறாமல் தாக்க வேட்டைக்காரர்களுக்கு உதவும் வகையில் அற்புதமான குறிமுள்ளை உருவாக்கினார் கலீலியோ. ஆனால் அது மிக எளிய கருவியாக இருந்ததால், அதைக் கண்ட பலரும் தாங்களாகவே அதுபோன்ற ஒன்றை உருவாக்கிக் கொண்டனர். இதனால் கலீலியோவால் எதிர்பார்த்த அளவு பொருளீட்ட முடியவில்லை. அக்காலத்தில், சிறந்த ஆடிகளை (lens) உருவாக்குவதில் டச்சுக்காரர்கள் வல்லவர்களாக இருந்தனர். பொருட்களை உருப்பெருக்கிக் காட்டும் சில புதுமையான கருவிகளை அத்தகைய ஆடிகளைக் கொண்டு அவர்கள் வடிவமைத்திருப்பது கலீலியோவின் காதுக்கும் எட்டியது. இதுபோன்ற ஆடிகள் வெனிஸ் நாட்டின் வணிகக் கப்பல்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று அவர் கருதினார். எனவே, தானும் உடனடியாக அதுகுறித்த பரிசோதனைகளில் இறங்கிவிட்டார். டச்சுக்காரர்களை விடச் சிறந்த ஒரு ஆடியை உருவாக்கி அதனை வெனிஸ் நகர நீதிபதிக்குக் (Doge) கொடுப்பது அவரது எண்ணமாக இருந்தது.

ஒருநாள் டச்சு கைவினைஞர் ஒருவர் சிறந்த ஒரு ஆடியுடன் வெனிஸ் நகருக்கு வருவதாகவும், அதனை நீதிபதிக்குப் பரிசளிக்க அவர் திட்டமிட்டிருப்பதாகவும் கலீலியோ அறிந்தார். இதனால் வருத்தம் கொண்ட அவர், அதிவேகமாக ஒரே நாளில் ஒரு தொலைநோக்கியை வடிவமைத்தார் (அதன் டச்சு மாதிரியை அவர் பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.) டச்சு தொலைநோக்கி பொருட்களை மூன்று மடங்கு மட்டுமே உருப்பெருக்கிக் காட்டியது என்பதையோ, குவி ஆடிகளை மட்டுமே பயன்படுத்தியிருந்ததால் அதில் தோன்றிய பிம்பம் தலைகீழாகத் தெரிந்தது என்பதையோ அவர் அறிந்திருக்கவில்லை.

கலீலியோவின் தொலைநோக்கியில் ஒரு குழி ஆடியும், ஒரு குவி ஆடியும் பயன்படுத்தப்பட்டிருந்தன. இது பிம்பத்தை தலைகீழாக அல்லாமல், நேராகக் காட்டியது. மேலும் அவரது கருவி டச்சுக்காரருடையதை விட 4 மடங்கு அதிக உருப்பெருக்குத் திறன் கொண்டதாக இருந்தது! இறுதியில் கலீலியோ வென்றார். வெனிஸ் பல்கலை.யில் அவர் பெற்ற ஊதியமும் இருமடங்காக உயர்த்தப்பட்டது.

இதன்பிறகு கலீலியோவின் கவனம் விண்மீன்களை நோக்கிச் சென்றது. அதற்கு முன்பே கெப்ளரின் கோள்கள் குறித்த ஆய்வுகளை அறிந்திருந்த அவர், கோபர்நிகஸின் சூரிய மையக் கோட்பாட்டிலும் ஆர்வம் கொண்டிருந்தார். ஒருநாள் தனது தொலைநோக்கியால் அவர் வியாழன் கோளைப் பார்த்துக் கொண்டிருந்தபோது அதனை இரு நிலவுகள் சுற்றி வருவதை அறிந்தார்.

இது மிகச் சிறந்த கண்டுபிடிப்பாகும். அதுவரை புவி நிலையானது என்றும், அதைத்தான் கோள்கள் அனைத்தும் சுற்றி வருகின்றன என்றும் நம்பப்பட்டு வந்தது. அப்போது வலிமையாக இருந்த கிறித்தவ தேவாலயங்களும், மதகுருக்களும் இக்கருத்தையே வலியுறுத்தி வந்தனர். ஆனால் கலீலியோ இது தவறு என்றார். வியாழன் கோளை இரு நிலவுகள் சுற்றி வருவது உண்மை; அதேபோல், வியாழனும் ஏதோ ஒன்றைச் சுற்றி வருவது உண்மை. எனவே நமது புவியும் நிலையானதாக இருக்க முடியாது; அதுவும் ஒரு வட்டப் பாதையில் சுற்றிக் கொண்டுதான் இருக்கும் என கலீலியோ கூறினார்.

கோபர்நிகஸின் சூரிய மையக் கோட்பாட்டை ஆய்வு செய்த சிலர், அவரது கருதுகோள் உண்மையாக இருக்க வேண்டுமானால் வெள்ளிக் கோளானது நிலவைப் போன்ற நிலைகளைக் (Phases)கொண்டிருக்க வேண்டும் என்றனர். கலீலியோவின் தொலைநோக்கி அதுவும் உண்மை என்று காட்டியது!

தொலைநோக்கியைக் கொண்டு கலீலியோ மேற்கொண்ட இந்தக் கண்டுபிடிப்புகள் பேரண்டம் குறித்த மனித குலத்தின் அறிவை வேறொரு தளத்துக்கு எடுத்துச் சென்று விட்டன. அதேவேளையில் இக்கண்டுபிடிப்புகளால் கத்தோலிக்க தேவாலயத்தின் வெறுப்புக்கு ஆளாகி பல்வேறு பிரச்சனைகளையும் அவர் சந்திக்க வேண்டியிருந்தது. உலகின் முதல் நவீன அறிவியல் நூலாகக் கருதப்படும் கலீலியோவின் ‘Two New Sciences’ என்ற புத்தகம் மேற்கு ஐரோப்பாவில் ஒரு பெரும் புரட்சியையே நிகழ்த்தியது. ஆனால் இத்தாலியில் அந்த நூலை வெளியிட தேவாலயம் தடைவிதித்தது. இவ்வாறு, மறுமலர்ச்சியின் பிறப்பிடமான இத்தாலியிலேயே அறிவின் பரவலுக்குத் தடை விதிக்கப்பட்டது. இதனால், அறிவியல் புரட்சிக்கு தலைமை ஏற்றுச் செயல்பட்டிருக்க வேண்டிய அந்த நாடு பல்லாண்டு காலம் பின்தங்கியே இருந்தது.

வெப்ப இயக்கவியல்

மேற்கூறிய சம்பவங்கள் நடந்து இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகு உலகைப் புரட்டிப் போட்ட வேறொரு கருவியை மற்றொரு நபர் கண்டறிந்தார். அவரது பெயர் ஜேம்ஸ் வாட். ஸ்காட்லாந்து நாட்டில் ஒரு கொல்லரின் மகனாகப் பிறந்த அவர், தச்சு வேலைகளிலும் கணிதத்திலும் ஆர்வம் கொண்டிருந்தார்; பொறியியல் வல்லுநராக வேண்டும் என்று விரும்பினார்.

வணிகத்தை அறிந்து கொள்ள சில காலம் லண்டனில் தங்கி பல இடங்களில் பயிற்சி பெற்றார். பின்னர் சொந்தமாகத் தொழில் துவங்கும் எண்ணத்துடன் கிளாஸ்கோ திரும்பிய வாட் அம்முயற்சியில் வெற்றியடையவில்லை. ஏனெனில் அங்கு வணிகம் ஒரு சில குழுக்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்நிலையில், சில நண்பர்களின் உதவியால் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் அவருக்குப் பணி கிடைத்தது. வாட்டின் புதுமையான திறன்களை அறிந்த பல்கலைக்கழகம் அவருக்காகவே ‘கணிதப் பொருள் வடிவமைப்பாளர்’ என்ற பணியிடத்தை உருவாக்கி அவரை அமர்த்தியது. இதனால் எவ்வித இடர்ப்பாடுகளும் இன்றி சுதந்திரமாகத் தனது பணியில் வாட் மூழ்கினார்.

அது நீராவியை வெற்றிகொள்வதில் பலர் முனைந்திருந்த நேரம். நியூகோமென் என்பவர் இத்தகைய முயற்சிகள் அனைத்தையும் ஒன்று சேர்த்து சிறிய பாய்லர் ஒன்றை வடிவமைத்திருந்தார். அதனை சுரங்கங்களில் பயன்படுத்தி நீரை வெளியேற்ற முடியும். ஆனால் அதேபோன்ற பெரிய அளவிலான பாய்லரைச் செய்தபோது, அதற்கு அதிக நீர் தேவைப்பட்டது. மேலும் ஒரு சில நிமிடங்களில் தனது பணியையும் நிறுத்திக் கொண்டது. இயற்பியலிலும், கணிதத்திலும் நல்ல தேர்ச்சி பெற்றிருந்த ஜேம்ஸ் வாட் இந்த பாய்லரைக் கண்டபோது அவருக்கு ஒரு யோசனை பளிச்சிட்டது. நீராவியை அது வெப்பமடையும் அதே உருளையில் குளிரவிடாமல், குளிர்விக்க தனிக் கலனை பயன்படுத்தினால், அக்கருவியின் திறனை மேம்படுத்த முடியும் என்று அவர் கருதினார். அதற்காக ஒரு தனி குளிர்விப்பானை (condenser) அவர் பயன்படுத்தினார். வெற்றி கிடைத்தது.

இருப்பினும் ஜேம்ஸ் வாட்டின் இக்கருவி சுரங்கத்திலிருந்து வெளியே வர சில நாட்கள் ஆனது. இதனை வேறு சில செயல்களுக்கும் பயன்படுத்தலாம் என்று யோசனை தெரிவித்தவர் ஜேம்ஸ் போல்டன் என்பவர். தொழிலதிபரான இவர் சில நண்பர்கள் மூலம் வாட்டுக்கு அறிமுகமானார். இருவரும் இணைந்து உருவாக்கியது போல்டன்-வாட் இயந்திரம் (Engine) எனப்பட்டது.

இதன்பிறகு இருவரும் இணைந்து நீராவியைப் பயன்படுத்தி சக்கரங்களைச் சுழல வைக்கும் ஒரு அமைப்பை உருவாக்கினர். இந்த இயந்திரத்தை முதன்முதலில் பயன்படுத்தியது ஒரு மர அறுவை ஆலையாகும். இதற்காக ஒரு வினோதமான ஆட்குறைப்பு நடவடிக்கை ஆலை நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டது. ஆம். புதிய இயந்திரத்தின் வரவால் முன்பு இயந்திரமாகச் சுழன்று அப்பணியைச் செய்து வந்த 12 குதிரைகள் பணியை இழந்தன! ‘குதிரைத் திறன்’ என்ற சொல் உருவானது இதன் காரணமாகத்தான். (உருவாக்கியவர் நமது நாயகன் ஜேம்ஸ் வாட்!) இதன்பிறகு ரயில்வே, ஆலைகள் என அனைத்தும் நீராவியைப் பயன்படுத்த ஆரம்பித்தன. அதன் விளைவாகத் தோன்றிய தொழிற்புரட்சி உலகையே மாற்றியமைத்தது.

மரபியல்:

கேரி முல்லிஸ், ஜேம்ஸ் வாட்டைப் போலவே புதுமையான பொருட்களை உருவாக்குவதில் ஆர்வம் கொண்டிருந்தவர். சிறு வயதிலேயே வேதியியல் பரிசோதனைகளில் ஈடுபட்டு பொழுதைக் கழித்தவர். இதன்பின்னர் மரபியலில் ஆர்வம் கொண்டு டி.என்.ஏ. குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டார். டி-ஆக்ஸி ரிபோ நியூக்ளிக் அமிலம் என்பதன் சுருக்கமான டி.என்.ஏ. இரட்டைச் சுருள் வடிவம் கொண்ட மரபுப் பொருள் என்பது நமக்குத் தெரியும். அதில் உள்ள அமில மூலக்கூறுகள் குறிப்பிட்ட இணை மூலக்கூறுகளுடன் மட்டுமே இணைந்திருக்கும். இவ்வாறு ஒரு இழையானது மற்றொரு இழையுடன் இணை மூலக்கூறுகளால் இணைக்கப்பட்டிருக்கும்.

சிறிய டி.என்.ஏ. துண்டுகள் சிலவற்றை அவர் ஆய்வு செய்தபோது, அவை நீளமான இரட்டை இழைகளுடன் எதிரெதிர் முனைகளில் இணைசேர்வதைப் பார்த்தார். இது டி.என்.ஏ. மூலக்கூறுகளுக்கு மட்டுமே உள்ள தனித்த பண்பாகும். அதன்பின் மேலும் சில டி.என்.ஏ. துண்டுகளையும், புரத மூலக்கூறையும் அதனுடன் சேர்த்த முல்லிஸ், இந்த சிறிய டி.என்.ஏ. மூலக்கூறுகளைப் பெருகச் செய்து நகல் டி.என்.ஏவை உருவாக்க முடியும் என்று கண்டறிந்தார். இதன் விளைவாக பாலிமரேஸ் தொடர் வினைகள், டி.என்.ஏ.வை கச்சிதமாக நகலெடுக்க உதவும் டி.என்.ஏ. ஜெராக்ஸ் மெஷின் ஆகியவற்றை முல்லிஸ் உருவாக்கினார். 20 ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த புத்தாக்கமாக இக்கண்டுபிடிப்புகள் கருதப்படுகின்றன. குளோனிங் மற்றும் மரபுப் பொறியியல் ஆகிய துறைகளிலும், புதிய ஜீன்களைக் கண்டறிவதிலும் இவை பெரும் பங்கை ஆற்றுகின்றன. மேலும் தடயவியல் முதல் தொல்லியல் வரை அனைத்துத் துறைகளிலும் இவற்றின் பயன்பாடு அதிக அளவில் உள்ளது.

மனித வாழ்க்கையை மாற்றியமைத்த கண்டுபிடிப்புகளும், புத்தாக்கங்களும் அதற்கேற்ற சூழல் நிலவிய பகுதிகளிலேயே நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. புதுமையை வரவேற்று, திறமைக்கு மதிப்பளித்து, ஆர்வத்துக்கு அணை போடாமல் ஊக்கப்படுத்தி, அறிஞர்கள் தங்கள் ஆய்வுகளைச் சுதந்திரமாகச் செய்ய அனுமதிக்கின்ற சமுதாயங்கள்தான் இதுவரை இத்தகைய கண்டுபிடிப்புகளைச் சாத்தியமாக்கியுள்ளன. இனி வரும் காலங்களில் நிகழும் கண்டுபிடிப்புகளையும் அதேபோன்ற அறிவார்ந்த சமுதாயங்கள்தான் சாத்தியமாக்கும்.

(சுனில் லக்ஷ்மண், பெங்களுரில் இயங்கி வரும் ஸ்டெம் செல் பயாலஜி அண்டு ரீஜெனரேட்டிவ் மெடிசன் நிறுவனத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றி வருகிறார். செல்கள் எவ்வாறு இயங்குகின்றன என்பது குறித்த ஆய்வில் தற்போது ஈடுபட்டு வருகிறார். இக்கட்டுரை முதன்முதலாக thewire.in இணைய இதழில் வெளியானது.)

தமிழில்: நந்தா

Pin It