கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- பாண்டி
- பிரிவு: விண்வெளி
விண்வெளியில் நடைபெறும் அசாதாரண நிகழ்வுகள், ஒளிக் கீற்றுகள், விண்மீன்களின் சிதறல்கள் போன்றவைகள் கண நேரத்தில் நம் கண்ணில் தென்பட்டு மறைந்து போகும். நம்மால் யூகிக்க முடியாத பொருட்கள் விண்ணில் பறந்து மறைந்தால் அதுதான் யுஎஃப்ஒ. உலகில் பல்வேறு பகுதிகளில் இச் சம்பவங்கள் நடைபெற்று வந்தாலும், அமெரிக்க நிலப் பகுதிகளில் தான் இவைகள் அதிகம் தென்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதைப் பற்றி இன்னும் எளிமையாக இப்படி தெரிந்து கொள்ளலாம் என்றால், உங்களுடைய சிறுவயதுகளில் கோடை கால சமயத்தில் வீட்டின் முற்றத்தில் பாட்டியோடு அல்லது தாத்தாவோடு கதைகள் கேட்டு நீங்கள் தூங்கி இருந்தால், இந்தக் கதையையும் நீங்கள் கேட்டிருக்கலாம். அதாவது, விண்வெளியிலிருந்து உருகி வரும் நட்சத்திரங்களைக் கண்டதும் "வெள்ளி தண்ணி தாகம் எடுத்து உருகி வருது, தூ...தூ….தூ…" என மூன்று முறை நிலத்தில் துப்புவார்கள். மூன்று முறை துப்புவது மூடப் பழக்கமாக இருக்கலாம், ஆனால் நட்சத்திரம்/விண்கற்கள் உருகி வந்தது உண்மை. இதுதான் 'Unidentified Flying Object' என்கிறார்கள்.
நமது ஊர்ப் பகுதிகளில் குழந்தைகளை ஏமாற்றுவதற்காக பேய் வருகிறது பூச்சாண்டி வருகிறது என்று எப்படி சொல்கிறார்களோ, அதே போல்தான் மேற்கத்திய நாட்டு உலகத்தில் குழந்தைகளை ஏமாற்றுவதற்கு வேற்றுக் கிரகங்களிலிருந்து வரும் ஏலியன்ஸ்கள் நம்மை அவர்கள் கிரகத்துக்கு எடுத்துச் சென்று விடுவார்கள் என்று குழந்தைகளுக்கு பயம் காட்டுவார்கள்.
யுஎஃப்ஒ காணப்பட்டதாக பல நூற்றாண்டுகளாக செய்திகள் வந்து கொண்டிருந்தாலும். முதன் முதலில் யுஎஃப்ஒ தோன்றிய சம்பவத்தைக் காண நாம் இயேசு கிறிஸ்துவின் காலத்திற்குத் தான் செல்ல வேண்டும். ஆம், இயேசு கிறிஸ்து ஜெருசலேம், பெத்லகேமில் பிறந்ததாக அறியப்பட்டு, வானியலைக் கணிப்பவர்கள் அவரைக் கண்டு வழிபட்டுச் செல்ல ஜெருசலேம் நகருக்கு வருகிறார்கள். ஜெருசலேம் பகுதியை உள்ளடக்கிய யூதேயா பிரதேசத்தின் ராஜா ஹேரால்டை சந்தித்து தாங்கள் வந்ததின் நோக்கத்தை தெரிவிக்கிறார்கள்.
"கிழக்கில் நட்சத்திரம் ஒன்று உதித்ததை நாங்கள் பார்த்தோம். இயேசு கிறிஸ்து ஜெருசலேமில் பிறந்திருக்கிறார். யூதர்களின் ராஜா எங்கே? நாங்கள் அவரை வணங்க வேண்டும்" என்கிறார்கள். (பைபிளின் தமிழ் பதிப்பில் 'சாஸ்திரிகள்' என்றும், ஆங்கிலத்தில் 'Wise men' என்றும் கூறப்படுகிறது. வேல்பாரியில் வரும் பாண்டிய நாட்டின் பெருங்கணியர் திசைவேழரைப் போன்ற நபர்கள்) இந்த செய்தியைக் கேட்டு பயந்து போய் நடுங்கி இருப்பான் ஹேரால்ட். தனியாக அந்த அறிஞர்களை அழைத்து "அந்த நட்சத்திரம் தோன்றிய காலத்தை கணித்துச் சொல்லுங்கள். நீங்கள் போய் முதலில் அந்த குழந்தையைப் பாருங்கள் பின்னர் எனக்குத் தகவல் தெரிவியுங்கள்" என்பான்.
வானிலை அறிஞர்கள் அதைக் கேட்டு கிளம்பியதும் அந்த நட்சத்திரம் அவர்களுக்கு காட்சி அளிக்கும். அவர்கள் அதைப் பின் தொடர்ந்து செல்வார்கள். பெத்லகேம் நகரத்தில் வந்ததும் அந்த நட்சத்திரம் நின்று விடும். அந்த இடத்தில் இயேசு கிறிஸ்துவைக் காண்பார்கள் அந்த வானிலை அறிஞர்கள். பின்னர் அந்த நட்சத்திரம் பற்றிய செய்திகள் பைபிளில் இல்லை. ஒருவேளை அது மறைந்திருக்கும். இதுதான் முதல் யுஎஃப்ஒ சம்பவம்.
பின்நாட்களில் இதை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் அந்த நட்சத்திரம் நமது சூரிய கிரகத்திலுள்ள Venus மற்றும் Saturn என்ற இரண்டு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வந்ததாக இருக்கலாம் என்று கூறினார்கள். அது எந்த நட்சத்திரம்? அது எப்படி நகர்ந்து சென்றது? எப்படி தானாக மறைந்தது? என்று யாருக்கும் தெரியாது. அறிவியலாளர்கள் இது ஒரு தற்செயலான சம்பவம் என்கிறார்கள். இந்த நட்சத்திரம் தோன்றி மறைந்தது தான் முதல் யுஎஃப்ஒ சம்பவமாக இருக்கலாம்.
நவீன யுஎஃப்ஒ-களைப் பற்றியதான காலம் 1947 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கிறது. அமெரிக்காவின் ஐடோகோ மாகாணத்தில் வசித்து வந்த ஒரு செல்வந்தர் மற்றும் விமானி Kenneth Arnold. இவர் ஜுன் மாதம் 24 ஆம் தேதி தன்னுடைய விமானத்தில் (இரண்டு பேர் மட்டுமே பயணிக்கும் சிறிய விமானம்) Washington’s Mount Rainier அருகில் பறக்கும் போது தன்னுடைய விமானத்தின் அருகில் மூன்று பறக்கும் தட்டுகள் (flying disc or saucer) 'V' வடிவில் தன் விமானத்தைவிட மூன்று மடங்கு அதிகமாக 1700 mph வேகத்தில் பறந்து சென்றதாகத் தெரிவித்தார். இந்த யுஎஃப்ஒ கதை உடனே அந்தப் பகுதியில் பரவத் தொடங்கியது.
ஆரம்பத்தில் அமெரிக்க விமானப்படை விமானங்கள் சோதனைப் பயிற்சிக்காக அந்தப் பகுதியில் பறந்திருக்கலாம் என்றே அவர் நம்பினார். ஆனால், அப்படி ஏதும் பயிற்சிகள் அந்தப் பகுதியில் நடைபெற வில்லை என்று விமானப் படை அறிவித்தது. பின்னர் விமானப் படை அமைப்பு விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்து 'operation sign' என்ற பெயரில் இதிலிருக்கும் உண்மைகளை ஆராயத் தொடங்கினர். 1948ல் Kenneth Arnold பார்த்ததாக கூறப்படும் யுஎஃப்ஒ-களில் எந்த உண்மையும் இல்லை என அறிவிக்கப்பட்டது. கடைசி வரையில் தான் கண்டது நிஜம் என்றே தன்னுடைய நிலைப்பாட்டில் நின்றார் Kenneth Arnold.
இதே ஆண்டில் நியூ மெக்சிகோ மாகாணத்தில் உள்ள ரோஸ்வெல் (Roswell, New Mexico) என்ற கிராமத்திலிருந்து 75 மைல்கள் தொலைவிலுள்ள பொட்டல் காடுகள் சூழ்ந்த பாலைவனப் பகுதியில், ஆடுகள் மேய்த்துக் கொண்டிருந்த விவசாயி ஒருவர் வழக்கத்திற்கு மாறான உடைந்து போன பொருட்களையும், அதனுடன் வித்தியாசமான மனித உருவங்கள் போன்ற பொம்மைகளையும் தற்செயலாகப் பார்க்கிறார். உடனடியாக தகவல் அருகில் உள்ள விமானப் படை நிலையத்தில் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இதனை காலநிலை கண்டறியப் பயன்படுத்திய பலூன் ஒன்று வெடித்துச் சிதறியது எனக் கூறி அந்த இடத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். இது ஏலியன்ஸ் பயன்படுத்திய ஸ்பேஸ் கிராஃப்ட் பூமியில் தரையிறங்கிய போது வெடித்துச் (crash-landing) சிதறியது என்ற செவி வழிக் கதை அமெரிக்கா முழுவதும் பரவுகிறது. அடுத்த நாள் உள்ளூர் செய்தித்தாள் "RAAF Capture Flying saucer in Roswell region," என்று முதல் பக்க செய்தியாக இதனை வெளியிட்டு இன்னும் பரபரப்பைக் கூட்டியது. மக்கள் இன்றளவும் அந்த இடத்தில் கண்டறியப்பட்ட பொருட்கள் நமது பூமியில் உள்ள பொருட்கள் இல்லை எனவும், அவைகளெல்லாம் வேற்று கிரகத்தில் இருந்து வந்திருக்கலாம் என்றும் நம்புகின்றனர்.
1950 காலகட்டங்களில் அமெரிக்க இராணுவம் சோதனை முயற்சியாக அதிகப்படியான 'dummy troops' பொம்மை வீரர்களை உருவாக்கி வானத்திலிருந்து கீழே விழும் சோதனைகள் செய்து கொண்டிருந்தார்கள். வானத்திலிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பைலட் கீழே விழுந்தால் எப்படி பாதுகாத்துக் கொள்ளலாம் என்ற சோதனை தான் நியூ மெக்சிகோ பகுதிகளில் நடைபெற்றது. அரசாங்கம் மக்களை திசை திருப்புவதற்காக இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது என மக்களால் நம்பப்பட்டது. இன்றளவும் மக்கள் இந்தப் பகுதிக்கு வந்து 'ஏலியன்ஸ் இங்குதான் தரையிறங்கி இருக்கிறார்களா' என்று வியப்புடன் பார்த்துச் செல்கிறார்கள். மேலும் இது ராணுவத்தால் பாதுகாக்கப்படும் classified செய்யப்பட்ட பகுதியாகும்.
1997 ஆம் ஆண்டு ஜுன் மாதம் அமெரிக்கா விமானப் படை நிர்வாகம் 231 பக்க அறிக்கையில், ஏலியன்ஸ் வந்து இறங்கியதற்கான சான்று ஏதுமில்லை, case closed என அறிவித்து விட்டார்கள். இந்தப் பகுதி இப்போது ஒரு யுஎஃப்ஒ சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.
கடவுள், யுஎஃப்ஒ, ஏலியன்ஸ் இவைகளைப் பற்றி அமெரிக்க அறிவியலாளர் Carl sagen, Science Friday என்ற வானொலி நிகழ்ச்சியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் விரிவாக எடுத்துரைத்தார். "1947 ஆம் ஆண்டு நியூ மெக்சிகோ ராஸ்வெல் காட்டுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் மற்றும் ஏலியன்ஸ் வகையான பொம்மைகளை மக்கள் வேற்றுக் கிரகத்தில் இருந்து வந்ததாகவே நம்பினார்கள். ஆனால், இராணுவம் அந்தப் பொருட்களை எல்லாம் சேகரித்துக் கொண்டு ஒரு இடத்தில் வைத்து சோதனை செய்து இது ஒரு வகை பலூன் தான் என்றும், நாங்கள் அதனுள் வைத்தது சோதனைப் பொம்மைகள் தான் என்றும் கூறியது."
"யுஎஃப்ஒ என்பது கண்டுபிடிக்க முடியாத ஒரு பொருள் பறக்கிறது, அவ்வளவு தான்" என்றார் அவர்.
கடவுளைப் பற்றி அவர் கூறும்போது "கடவுள் தான் உலகைப் படைத்தார் என்பதற்கு எந்தத் தடயங்களும் இல்லை. அதனால், நான் அறிவியலை நம்புகிறேன்" என்றார்.
'Science' என்ற லத்தீன் சொல்லுக்கு அறிவு என்று பொருள் என்று கடைசியில் முடித்தார். (பேட்டி ஒலி வடிவில்; https://www.sciencefriday.com/stories/_sf_s=Ufo)
கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஏலியன்ஸ் பற்றிய வேடிக்கையான கதை ஒன்று பிரபலமாகியது. 'Area 51' என்று அழைக்கப்படும் அமெரிக்காவின் நவேடா என்ற மாகாணத்திலுள்ள ஒரு பாலைவனப் பகுதியில் ஏலியன்ஸ்களின் ஏர்கிராஃப்ட்கள் தரை இறங்குவதாக ஒரு சில மக்களால் உண்மைக்குப் புறம்பாக நம்பப்பட்டது. இந்தப் பகுதி அமெரிக்க உளவுத் துறை மற்றும் விமானப் படைக்குச் சொந்தமான பகுதி.1950ல் பனிப்போர் உச்சத்தில் இருந்த காலகட்டங்களில் இங்கு உளவு பார்க்கும் அதி விரைவு விமானங்களுக்கான ஆராய்ச்சிகள் மற்றும் சோதனைகள் நடைபெற்று வந்தன.
The Archangel-12 என்ற விமானங்கள் மணிக்கு 2000 மைல்கள் வேகத்தில் பறந்து ஆகாயத்தில் இருந்து பூமியின் படங்களை எடுத்து அனுப்பியது. இந்த விமானங்கள் வேகமாகப் பறந்ததே அந்தப் பகுதியில் வசித்த மக்களுக்கு ஏலியன்ஸ் போன்ற சிந்தனைகள் வரக் காரணமாக இருந்திருக்கலாம். கடந்த ஆண்டு ஒரு Facebook event group மூலம் 'Storm Area 51' எனப் பெயர் சூட்டி இந்தப் பகுதியில் மக்கள் கூடினார்கள். தடை செய்யப்பட்ட பகுதியில் ஏலியன்களை உள்ளே வைத்து சோதனைகள் நடைபெறுகிறது; இதனைப் பார்ப்பதற்காக ஒன்னரை மில்லியன் மக்கள் இந்த நிகழ்வில் கையொப்பமிட்டு இருந்தார்கள். 'இந்தப் பகுதிக்கு யாரும் வர வேண்டாம், இது அமெரிக்க அரசின் மிக முக்கியமான பாதுகாக்கப்பட்ட பகுதி ஆகும்' என்றது அமெரிக்க விமானப் படை.
ஏலியன்ஸ் மற்றும் UFO (unidentified flying object) இதைப் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ள உலகளவில் பல்வேறு மக்கள் ஆர்வத்துடன் இருந்தாலும், அமெரிக்காவில் வசிக்கும் ஐம்பது விழுக்காட்டினர் இவைகள் உண்மை தான் என்றே நம்புகிறார்கள்.
வழக்கமாக வாகனங்கள், வீடுகள், நிலங்கள், தொழிற்சாலைகள் வாங்கும் போது அவைகளுக்கு காப்பீடு வாங்குவது வழக்கம். தற்போதைய காலகட்டத்தில் மருத்துவத்திற்கும் காப்பீடு இன்றியமையாததாக இருக்கிறது. ஆனால், ஏலியன்ஸ் யுஎஃப்ஒ-களால் பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டால் இழப்பீடு பெற காப்பீடு செய்து கொள்கிறார்கள். இதனை 'alien abduction insurance' என்று அழைக்கிறார்கள். லண்டனைச் சேர்ந்த ஒரு தனியார் காப்பீட்டு நிறுவனம் ஐரோப்பா முழுவதும் 30,000க்கும் மேற்பட்ட காப்பீடுகளை மக்களிடம் இருந்து வாங்கியுள்ளது. ஏலியன் குறித்து நம்பிக்கை உள்ள நபராக நீங்கள் இருந்தால் அதனைப் பார்த்ததற்கான சான்று மற்றும் தடயங்களைத் தெரிவித்தால் காப்பீட்டை பெற்றுக் கொள்ளலாம்.
'Storm Area 51' - இதை அடிப்படையாக வைத்து ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு தனியார் காப்பீட்டு நிறுவனமும் புதிதாக காப்பீடுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கினார்கள்.
UFO-களைப் பார்த்தாகக் கூறப்படும் இடங்களில் முக்கால்வாசிக்கு மேல் அமெரிக்க நிலப் பகுதியில் உள்ளன. இதில் பல இடங்கள் இராணுவம் மிகவும் இரகசியமாக வைத்திருக்கும் இடங்களாகும்.
உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் 2018ல் தனது SpaceX நிறுவனத்தின் மூலம் Falcon Heavy test flight ஒன்றை சோதனைக்காக விண்ணில் ஏவினார். அதில் அவர் பயன்படுத்திய Tesla's roadster வாகனத்தில் பொம்மை வடிவில் ஒரு மனிதர் வாகனத்தை ஓட்டுவதாக அமைத்திருந்து அதனையும் சேர்த்தே விண்ணில் செலுத்தினார்கள். அந்த வாகனத்தில் பயன்படுத்திய மின்னணு சாதனங்களில் 'Made in Earth by humans' என்று எழுதி இருந்தது. ஒருவேளை வேற்றுக் கிரகவாசிகள் வந்து இதைப் பார்த்து, அவர்களுக்கு ஆங்கிலமும் தெரியும் பட்சத்தில் 'இந்த வாகனம் மனிதர்களால் உற்பத்தி செய்யப்பட்டு பயன்படுத்தப் பட்டது' என்று அவர்கள் அறிந்து கொள்வதற்காக அப்படி ஒரு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
சமீபகாலமாக உலகெங்கும் ஒவ்வொரு ஆண்டும் 3000க்கும் மேற்பட்ட யுஎஃப்ஒகள் காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 90% identified என்று ufologist-கள் கூறுகிறார்கள். அதாவது, ட்ரோன்கள், ஆளில்லா விமானங்கள், விண்மீன்கள் என்கிறார்கள். இதில் 10% மட்டுமே கண்டுபிடிக்க முடியாத பொருட்களாக இருந்துள்ளது.
கடந்த 2019ல் அமெரிக்காவில் மட்டும் 6000-க்கும் மேற்பட்ட யுஎஃப்ஒ-கள் காணப்பட்டதாக மக்களிடம் இருந்து தகவல் வந்ததாகக் கூறுகிறது ஒரு தன்னார்வ அமைப்பு. இதுவே அமெரிக்க மக்கள் எந்தளவுக்கு இதன் மீது ஆர்வத்துடன் இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. ஆனால் ஒன்று, இதனால் ஹாலிவுட்காரர்களுக்கு சயின்ஸ் ஃபிக்ஷன் படங்களின் கதைகளுக்குப் பஞ்சமே இல்லாமல் இருக்கிறது.
சரி, ஒருவேளை யுஎஃப்ஒ மற்றும் ஏலியன்கள் உண்மையாகவே இருப்பதாக இருந்தால், அதனை ufologist போன்றோர்கள் ஆராய்ச்சி செய்து அறிவிப்பார்கள். அதுவரை... ஏலியன்ஸ் நேரில் வரட்டும், அவைகளை நாமும் பார்ப்போம், அப்போது நம்புவோம்.
(தரவுகள்: https://www.livescience.com/20645-ufo-sightings.html)
- பாண்டி
- விவரங்கள்
- பாண்டி
- பிரிவு: விண்வெளி
நமது சூரிய குடும்பத்தில் கடைசி கோளாக அறியப்பட்ட புளூட்டோ என்ற சிறிய கோள் கண்டுபிடிக்கப்பட்டு 90 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 2006 ஆம் ஆண்டுக்கு முன்னர் வரை நமது அறிவியல் பாடத்திட்டத்தில் புளூட்டோ என்பது 9 ஆவது கோளாகவே அறியப்பட்டது. ஒரு கோளுக்கான எந்த ஒரு பிரத்தியேக தனித் தன்மையும் அதனிடம் இல்லையென இந்தக் கோளை ஆகஸ்ட் 2006ல் The International Astronomical Union (IAU) என்ற அமைப்பு 'dwarf planet' என அறிவித்து விட்டது.
IAU அமைப்பின் கூற்றுப்படி ஒரு கோள் என்றால் அதற்கென சிறப்பம்சங்கள் இருக்க வேண்டும். கோளுக்கான மூன்று சிறப்பம்சங்கள்: 1. சூரியனைச் சுற்றி (It is in orbit around the Sun) நீள்வட்டப் பாதையில் சுற்றி வர வேண்டும் 2. போதுமான நிறையோடு (It has sufficient mass to assume hydrostatic equilibrium) வட்ட வடிவில் இருக்க வேண்டும் 3. ஒரு ஈர்ப்பு விசையை உருவாக்கி தனது நீள்வட்டப் பாதையில் சுற்றியுள்ள பொருட்களை (It has “cleared the neighborhood” around its orbit) ஈர்பதாக இருக்க வேண்டும். அதாவது, அதன் சுற்றுவட்டப் பாதையில் இருக்கும் பிற பொருட்களை (objects) தன்னுள் ஈர்த்து அந்தப் பாதையை தனக்கு மட்டும் உரியதாக மாற்றிக் கொள்ளவது. மூன்றாவதாகக் கூறிய கோட்பாடு புளூட்டோவுக்கு இல்லாததால் இதனை 'dwarf planet' அட்டவணையில் சேர்த்து விட்டார்கள்.
புளூட்டோவுக்கு தனியாக ஒரு சுற்றுவட்டப் பாதை இருக்கிறது. ஆனால், பல நேரங்களில் பக்கத்து கோளான நெப்டியூன் சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வெளியே வந்து விடும்.
ஒன்பதாவது கோள் இருப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாக 1894 ஆம் ஆண்டே Lowell Observatory in Flagstaff, Arizona -வில் உள்ள ஆராய்ச்சிக் கூடத்தில் அதற்கான ஆராய்ச்சியை மேற்கொண்டனர். அதற்கு 'Planet X' எனவும் பெயர் சூட்டியிருந்தனர். ஆனால், 1930 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 -ல் தான் அதற்கு ஒரு முழுமையான புகைப்பட வடிவம் கிடைத்தது. அதைக் கண்டுபிடித்தாவர் விண்வெளி ஆராய்ச்சியாளர் Clyde W. Tombaugh. அப்போது அவருக்கு வயது 23. இரவு நேரத்தில் விண்வெளியைப் படமெடுத்து அதனை blink comparator என்ற இயந்திரத்தின் உதவியால் பலமுறை ஒப்பிட்டுப் பார்த்து ஒரு புகைப்பட வடிவத்தைக் கொண்டு வந்தார். அப்போது அந்தக் கண்டுபிடிப்பு உலகமுழுவதும் பரவலாக பேசப்பட்டது.
இதற்கு வேறு ஒரு புதிய பெயரை வைக்க வேண்டும் என 1000-க்கும் மேற்பட்ட பெயர்கள் பரிசீலித்து, கடைசியில் இங்கிலாந்தில் வசித்த 11 வயது சிறுமி Venetia Burney தேர்ந்தெடுத்த 'Pluto' என்ற பெயரை சூட்டினார்கள். புளூட்டோ என்றால் ரோமானிய கற்பனைக் கதைகளில் வரும் நிழல்உலகக் கடவுளின் பெயர். அறிவியலுக்கும் கடவுளுக்கும் சம்பந்தம் இல்லை. 'Pluto' என்ற பெயர் அவர்கள் பரிசீலித்த 1000 பெயர்களில் ஒரு பெயர். அவ்வளவுதான்.
மூலம்:https://www.loc.gov/everyday-mysteries/item/why-is-pluto-no-longer-a-planet/
புளூட்டோ நிலவை விட சிறியது. பார்ப்பதற்கு இதயம் போன்ற அமைப்பாகக் காட்சியளிக்கும். அதன் மொத்த ஆரம் (radius) 715 மைல்கள் (1,151 கிலோமீட்டர்). மொத்த பரப்பளவு 1400 மைல்கள் (2380 கிலோமீட்டர்). சூரியனிலிருந்து சுமார் 3.7 பில்லியன் மைல்கள் தொலைவில் உள்ளது. பூமியிலிருந்து 40 மடங்கு அதிக தொலைவில் இருக்கும் இந்தப் பகுதியை 'kuiper belt' என அழைக்கின்றனர். இதில் ஒரு நாள் என்பது 153 மணி நேரங்கள் ஆகும். அதாவது, பூமியின் 6 நாட்கள் சேர்ந்தது தான் அங்கு ஒரு நாள்.
பாறைகள் மற்றும் பள்ளத்தாக்கு நிறைந்த பகுதி. இதில், மீத்தேன் மற்றும் நைட்ரஜன் மூலக்கூறுகள் அடங்கிய வாயுக்கள் 'frost coat surface' போன்று அதிகம் காணப்படுகிறது. இங்கு வெப்பநிலை -375°F முதல் 400°F வரை இருக்கும். புளூட்டோவின் மேற்பரப்பு அதிகளவில் குளிர் நிறைந்த பகுதியாகும். புளூட்டோவுக்கு ஐந்து துணைக்கோள்கள் இருக்கின்றன. அதில் பெரியது 'Charon' ஆகும்.
ஒருவேளை நாம் புளூட்டோவில் வசிப்பதாக இருந்தால் 248 பூமியின் ஆண்டுகள் கழித்துதான் நமது முதல் பிறந்தநாள் வரும்.
Source:https://www.pri.org/file/2020-02-19/happy-birthday-pluto
- பாண்டி
- விவரங்கள்
- வெ.சீனிவாசன்
- பிரிவு: விண்வெளி
சில வாரங்களுக்கு முன்பு அனைவருடைய விவாதப் பொருளாகிப் போனது. பெரும்பாலானவர்களுடைய சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட ஒரு புகைப்படம் கருந்துளையின் சமீபத்திய முதல் படம். சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு அதீத அறிவியலாளர்களால் விவாதிக்கப்பட்ட ஒரு கருப்பொருளை, இப்பொழுது வரை நாம் வெறும் சூத்திரங்களாகவும், தேற்றங்களாகவும் காகிதத்தில் எழுதி வைக்கப்பட்ட ஒன்றை உண்மை என நிரூபித்துள்ளோம். கருந்துளையினைப் பார்த்த முதல் தலைமுறை நாமாகத் தான் இருப்போம்.
இந்த கருந்துளை பூமியில் இருந்து சுமார் 55 மில்லியன் ஒளி ஆண்டுகள் (ஒளி ஓர் ஆண்டில் பயணிக்கும் தொலைவு ஓர் ஒளி ஆண்டு எனப்படும். ஒளியின் வேகம் வினாடிக்கு 3 லட்சம் கிலோமீட்டர்கள். அதாவது அது ஓர் ஆண்டுக்கு 9.5 லட்சம் கோடி கிலோமீட்டர் பயணம் செய்யும். அது ஓர் ஒளி ஆண்டு என கொள்ளப் படுகிறது) தொலைவில் உள்ளது. மேலும் அந்தக் கருந்துளையானது நம் சூரியனின் எடையைப் போல் 60 லட்சம் மடங்கு பெரியது. இப்பொழுது யூகித்துக் கொள்ளுங்கள் அது எவ்வளவு பெரியது என்று! இந்தக் கருந்துளை ஒரு அண்டத்தின் நடுவே அமையப் பெற்றுள்ளது. அதன் பெயர் Messier 87 என சூட்டப்பட்டுள்ளது. EHT எனப்படும் Event Horizon Telescope மூலம் இது படம் பிடிக்கப் பட்டுள்ளது. வானவியலாளர்களின் நூற்றாண்டு காலக் கனவு இந்த கருந்துளை புகைப்படம். அடிப்படையில் இது ஒரு புகைப்படமே அல்ல. இது போன்ற ஒரு கருந்துளையைப் படம் பிடிக்க வேண்டுமானால் பூமியை விட பெரிய ஒரு தொலைநோக்கி / அல்லது interferometer எனப்படும் அலைவரிசையை இடைமறித்து அதில் உள்ள தகவல்களை தரவிறக்கம் செய்யும் கருவி வேண்டும். அவ்வளவு பெரிய ஒன்றை கட்டமைக்க இயலாது என்பதனால் உலகமெங்கும் எட்டு கருவிகளை நிறுவி அவற்றின் மூலம் கண்காணித்து வந்தனர். இந்தக் கருவிகளின் மூலம் நீண்ட தொலைவில் உள்ள அதீத ஈர்ப்பு விசைப் பகுதியினை ஆராய முடியும். மேலும் கருந்துளையின் முகப்புப் பகுதியில் ஒளி எப்பொழுதும் அதன் முழு வேகத்தில் இயங்கும். இப்படிப்பட்ட ஈர்ப்பு விசை வேறுபாடு கருந்துளையின் மையம் மற்றும் அதன் விளிம்பினை வரையறுக்க உதவும்.
Image credit: Katie Bouman
இந்த EHT எனப்படும் கருவியின் மூலம் நிகழ்வு பரப்பெல்லையை (EVENT Horizon) தீர்மானிக்க இயலும். மேலும் இவ்வாறு சில interferometer கருவிகளை இணைப்பதன் மூலம் புவி அளவுடைய ஒன்றிற்கான மாற்றை உருவாக்க இயலும். இதன் உதவியினால் நம் பால்வழி அண்டத்தின் நடுவில் உள்ள SgrA* கருந்துளை மற்றும் விர்கோ A அண்டத்தின் நடுவில் உள்ள M87 எனும் கருத்துளையும் ஆராயப்பட்டது. இந்தக் கருவிகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகள் சேமிக்கப்பட்டு அவை அடுத்த கட்ட சோதனைக்கு அனுப்பப்பட்டன.
Image credit: Katie Bouman
Image credit: Katie Bouman
இப்பொழுது உங்களிடம் ஏராளமான புள்ளிகளுக்கான தரவுகள் உள்ளது எனக் கொள்வோம். சிறுவயதில் விளையாடிய ‘புள்ளிகளை இணைக்கவும்’ விளையாட்டினை நினைவில் கொள்க. அதே போன்று தான் இப்பொழுது பெறப்பட்ட தரவுகளை இணைத்தால் பல வடிவிலான முடிவுகள் கிடைக்கும். அதில் நமக்கு காண்பிக்கப்பட்டது அதிக அளவில் தத்ரூபமானது.
அடுத்து வரும் கட்டுரைகளில் இன்னும் அறிவியல்பூர்வமான விளக்கங்களைப் பார்க்கலாம்.
- வெ.சீனிவாசன்
- விவரங்கள்
- வி.சீனிவாசன்
- பிரிவு: விண்வெளி
சென்ற கட்டுரையில் இன்டெர்ஸ்டெல்லர் திரைப்படத்தினில் வரும் ஐந்து பரிமாணக் கோட்பாட்டினை பற்றிப் பார்த்தோம். இந்தக் கட்டுரையில் மேலும் சிலவற்றைப் பார்ப்போம்.
அந்தப் படத்தில் பேராசிரியர் ஜான் பிராண்ட் (Professor John Brand) , கூப்பரை (Cooper) முதலில் ஒரு ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்பி, அங்கிருந்து Endurance spacecraft மூலம் தொலைதூரப் பயணத்திற்கு அனுப்புவார். பூமியில் உள்ள அனைத்துப் பயிர்களும் அழிந்து போய், சோளம் மட்டுமே மிஞ்சி இருக்கும். அதுவும் அழிவின் விளிம்பில் இருக்கும் பட்சத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான மூன்று கிரகங்களை நோக்கிய பயணம் அது. அந்த கிரகங்களை இவருக்கு முன் சென்ற அறிவியலாளர்கள் கண்டறிந்து ஜான் பிராண்ட் அவர்களுக்குத் தெரியப்படுத்துவார்கள். அந்த மூன்று கிரகங்களுக்குச் சென்று, எதில் சரியான சாத்தியக்கூறுகள் உள்ளன என்பதைக் கண்டறிய வேண்டும். அந்த மூன்று கிரகங்களும் வெகு தொலைவில் உள்ள வேறு ஒரு விண்மீன் கூட்டத்தில் உள்ள கிரகங்கள். ஆகையினால் பேராசிரியர் ஜான் அவர்களே ஒரு வழியைச் சொல்வார். அதாவது புதிதாக சனி கிரகத்தின் அருகில் ஒரு wormhole உருவாகி இருப்பதாக சொல்வார். அதனுள் சென்றால் மிக எளிதாக அந்த கிரகங்களை அடையலாம் என்பார். இப்பொழுது இங்கு நாம் காண இருப்பது - அந்த wormhole என்பது என்ன ?? அவை ஏன் உருவாகின்றன? அவை எப்படி இரு அண்ட வெளிகளுக்கு இடையே குறுக்கு வழியாக அமைகின்றன?? என்பதைத்தான்.
wormhole என்பது செய்முறையாக உறுதி செய்யப்படாத பிரபஞ்சத்தின் எந்த இடத்திற்கும் சுலபமாக செல்ல உதவும் ஒரு குறுக்கு வழியாகும். அதாவது ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் செல்ல சில நூறு அல்லது ஆயிரம் ஆண்டுகள் ஆகலாம். அவ்வாறு இருப்பின் இந்த wormhole மூலம் நாம் சில மணி நேரத்தில் கூட சென்று விடலாம் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கோட்பாடு இதனை விரிவாக விளக்குகிறது. குறுக்கு வழியில் எப்பொழுதும் ஏதாவது ஒரு பிரச்னை இருக்கும். அதுபோல இந்த wormhole ஊடே செல்லும் போதும் அதிகப்படியான கதிர்வீச்சு, எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் வெளி மண்டலத்தின் ஆபத்தான துகள்களுடனான தொடர்புகள் மிகப் பெரிய ஆபத்தாக முடியும்.
நாம் இன்று விண்ணில் காணும் நட்சத்திரங்கள் கூட மிக அதிக தொலைவில் உள்ளவை. இவ்வாறு நமது கண்ணுக்குத் தெரியாமல் இன்னும் எத்தனையோ உள்ளன. அவ்வாறு நமக்குத் தெரியும் நட்சத்திரங்களை சென்றடைய கூட நமக்கு சில நூறு வருடங்கள் அல்லது சில ஆயிரம் வருடங்கள் தேவைப்படும். அவ்வாறு உள்ள பொழுது இந்த Wormholes நமக்கு உதவியாக இருக்கும் என அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறு நாம் விவாதிப்பதற்க்கு இது மிக எளிதாக இருக்கலாம் . ஆனால் உண்மையில் இது மிகக் கடினமான செயல்கள் நிறைந்தவை. என்னுடைய முதல் கட்டுரையில் வானியில் ஆராய்ச்சியின் அடிப்படையில் நாகரிக வளர்ச்சியைப் பற்றி விவரித்து இருப்பேன். அதன் படி பார்த்தால் இந்த மாதிரியான பயணங்களுக்கு நமக்கு இன்னும் சில ஆயிரம் ஆண்டுகள் தேவைப்படும் என நினைக்கிறேன். ஏனெனில் நாம் இன்னும் மனிதனை அருகில் உள்ள செவ்வாய் கிரகத்திற்குக் கூட அழைத்துச் செல்லவில்லை. அப்படி இருக்கும் பொழுது எவ்வாறு பல லட்சம் கோடி கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்திற்குச் செல்வது?
Wormholes என்றால் என்ன?
Wormholes என்பது அண்ட வெளியில் இரு வேறு வெளி மற்றும் நேரத்தை இணைக்கும் ஒரு பாதை ஆகும். உதாரணமாக ஒரு காகிதத்தை எடுத்து, அதனை சரிபாதியாக மடித்துக் கொள்ளுங்கள். இப்பொழுது ஒரு பென்சிலை ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதி வழியாக துளை போட்டு எடுங்கள். அந்தக் காகிதத்தில் உள்ள இரு துளைகள் இரு வேறு காலம் மற்றும் வெளிப் பகுதிகளை குறிக்கும். கற்பனையாக அந்த இரு துளைகளை இணைத்தால் உருவாகும் பாதையே Wormhole என கொள்ளப்படும்.
இதையே இப்பொழுது அண்ட வெளியில் கற்பனை செய்து பாருங்கள். ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கோட்பாடு இதனை விரிவாக விளக்குகிறது. மேலும் இந்த Wormhole Einstein-Rosen bridge எனவும் அழைக்கப்படுகிறது.
அதீத ஈர்ப்பு விசை உள்ள Wormhole ன் ஒரு பக்கத்தில் குதித்து பல மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள மற்றொரு பக்கத்தில் துரிதமாக சென்று விடலாம். இந்த Wormholes என்பது கோட்பாடுகள் சார்ந்து விளக்கும் பொழுது மிக எளிதாக இருக்கும். அதுவே செய்முறையாகப் பார்க்கும் பொழுது சாத்தியமில்லாத ஒன்றாகும் ( Just for now, might be in the future).
ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கோட்பாட்டின் படி இந்த Wormhole பயணிக்கத் தகுதி இல்லாதவை அல்லது அதனின் ஊடே பயணிக்க இயலாத பாதைகள்.
உங்களால் Wormhole-ஐ உருவாக்க முடிகிறது எனக் கொள்வோம். அதனின் அதீத ஆற்றல் மற்றும் நிலையில்லா தன்மை ஆகிய காரணங்களினால் அது உடனடியாக நிலைகுலைந்து விடும். மேலும் நீங்கள் அதனுள் காலடி எடுத்து வைப்பீர்கள் எனில், உங்கள் அடுத்த காலடி ஒரு கருந்துளையினுள் இருக்கலாம்.
கடைசியாக உங்களால் ஒரு பயணிக்கக் கூடிய மற்றும் ஒரு நிலையான Wormhole ஐ உருவாக்க முடியும் எனக் கொள்வோம். ஆனால் அதன் தன்மையானது ஏதேனும் ஒரு பருப்பொருள், அதனைத் தொட்டவுடன் அதாவது அதனுள் நுழைய முற்பட்டவுடன் அதன் நிலைத்தன்மை கேள்விக்குறி ஆகி விடுகிறது.
ஆனாலும் நமக்கு இன்னும் சில வாய்ப்புகள் உள்ளன. அதாவது அறிவியலாளர்கள் இன்னமும் ஈர்ப்பு விசையையும், கற்றை இயங்கியல் கோட்பாட்டின் தன்மையையும் முழுமையாக ஆராயவில்லை. இந்த பிரபஞ்சத்திற்கு மட்டுமே அவை எவ்வாறு உருவாகின்றன எனத் தெரியும் என நாம் கொள்ளலாம். ஏனெனில் நாம் இன்னும் அதை அறிந்திருக்கவில்லை. இதுவரை Wormhole என்பது பெரு வெடிப்பின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்த பிரபஞ்சத்தின் வெளி காலமும் ஒரு தனிப்புள்ளியில் கூடி இவற்றை உருவாக்குகிறது எனப் பார்க்கப்படுகிறது.
இந்த Wormhole தேடல் இன்னமும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. எப்படியெனில் நம்முடைய பூமியின் ஈர்ப்பு விசை எப்படி நம் நட்சத்திரத்தின் ஒளியை ஈர்த்து நமக்கு வேறு ஒரு தோற்றத்தைத் தருகிறதோ அதே போன்று Wormhole அதன் ஈர்ப்பு விசையின் மூலம் தன அருகில் உள்ள நட்சத்திரத்தின் ஒளியில் சில மாற்றத்தை ஏற்படுத்தும்.
இவ்வளவு அறிவியல் முன்னேற்றத்திலும் இன்னும் நம்மால் ஒரு Wormhole கூட கண்டுபிடிக்கப்படவில்லை.
இப்பொழுது முதல் பத்திக்குச் செல்லுங்கள்... கூப்பர் மற்றும் அவருடைய குழு Wormhole பயணம் முடித்து மறுபக்கம் சென்று விட்டார்கள்.
அடுத்து என்ன என்பதை வரும் கட்டுரைகளில் காண்போம்.
(தேடல் தொடரும்...!!!)
- வி.சீனிவாசன்
- நாகரிக வளர்ச்சி - வானியல் ஆராய்ச்சியின் பார்வையில்..!!!
- கலீலியோ சில நிலவுகளைக் கண்டபோது... - சுனில் லக்ஷ்மண்
- விண்வெளி ஆய்வுகளின் பின்னணி என்ன ?
- வாயேஜர் - முடிவில்லா பயணி
- மனிதர்கள் எங்கிருந்து தோன்றினார்கள்?
- வேற்று கிரகவாசிகள்
- செவ்வாய் கிரகத்தில் மனித இனத்தின் குடியேற்றம் சாத்தியமா?
- விரிவடையும் பிரபஞ்சம் மீண்டும் சுருங்குமா?
- மா வெடிப்பு (BIG BANG) ஓர் ஆரம்பமா அல்லது தொடர்கதையா?
- வரலாற்றின் பரிமாணத்தில் பதிவான வெள்ளி மறைப்பு நிகழ்வுகள். . !
- சூரியன்
- சூரியக் குடும்பம் – சில சுவையான தகவல்கள்
- சனியின் கதை..!
- வடக்கு வானின் அன்னத்தில் இரட்டைச் சூரியன்கள்!
- வேறு கோள்களில் உங்களின் வயது?
- சுருங்கி வரும் நிலா
- சூரிய குடும்பத்தின் வயது என்ன?
- விண்வெளிப் பயணம்
- இறந்து கொண்டிருக்கும் தாய்களும், அவர்களைச் சுற்றி வரும் மகவுகளும்...!
- வெள்ளிக் கோளின் சூரியக்கடப்பு