பூமியின் வெப்பநிலையை நிலவு பாதிக்கும் என்று புதிய ஆய்வுகள் கூறுகின்றன. அதன் 18.6 ஆண்டு சுழற்சி ஆராயப்பட்டபோது இந்த புதிய உண்மை கண்டறியப்பட்டது. ரீடிங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரிய எட் ஹாவ்கின்ஸ் (Prof Ed Hawkins) தலைமையில் அமைந்த ஆய்வுக் குழு இதனைக் கண்டுபிடித்துள்ளது.

முன் காலத்தில் முழுநிலவு பூமியில் குளிர்ச்சியை ஏற்படுத்தும் என்று நம்பப்பட்டது. இன்று அவ்வாறு நிகழ்வதில்லை என்று இந்த ஆய்வு கூறுகிறது. ஒவ்வொரு 18.6 ஆண்டின்போதும் நிலவின் சுற்றுவட்டப்பாதை பூமியின் பூமத்திய ரேகையைப் பொறுத்து மாற்றம் அடைகிறது. இச்சுழற்சிகள் வரலாற்றுக் காலம் முதல் அறியப்பட்டவை. நிலவு உதித்தல் மற்றும் மறைதலில் ஏற்படும் மாற்றங்களை வைத்து இதைப் புரிந்து கொள்ளலாம்.moonஇது கடலின் மேற்பரப்பில் இருக்கும் வெப்பநீர் ஆழத்தில் உள்ள குளிர்ந்த நீருடன் கலப்பதையும், கடலலைகளின் போக்கையும் பாதிக்கிறது. இது கடல் உறிஞ்சும் வெப்பத்தின் அளவைப் பாதிக்கிறது. நிலவின் இந்த சுழற்சி மாற்றங்கள் பூமியை அதிகபட்சம் 0.04 டிகிரி சி அளவிற்கு வெப்பப்படுத்தும் அல்லது குளிரச் செய்யும் என்று ஆய்வுக்கட்டுரை கூறுகிறது.

மேலோட்டமாகப் பார்க்கும்போது பூமியில் வாழும் மனிதருக்கு இது மிகச் சிறிய அளவாகத் தோன்றினாலும் காலநிலையில் இன்று நிகழ்ந்து வரும் மாற்றங்களின் தீவிரத்தைப் பொறுத்தவரை இது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியதே என்று காலநிலை விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

காலநிலை மாற்றத்தை ஆராய உதவும் மாதிரிகளை உருவாக்குவதில் இது பாதிப்பை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது. 2000ல் பூமி அசாதாரணமாகக் குளிர்ச்சி அடைந்ததற்கும், 2030களில் பூமி பகுதியளவு வெப்பமடைவதற்கும் இது காரணமாக அமையும் என்று நம்பப்படுகிறது. சாதாரண மனிதரைப் பொறுத்தவரை இது பெரிய மாற்றம் இல்லை என்றே கருதப்பட்டாலும் காலநிலை ஆய்வாளர்களைப் பொறுத்தமட்டும் பூமியில் நிகழும் ஒவ்வொரு சிறிய மாற்றமும் பூமியை பாதிக்கக் கூடியதே என்று நம்பப்படுகிறது. யார் கண்டது? அழகு நிலா நாளை ஒரு நாள் பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிலவாகவும் மாறலாம்!

மேற்கோள்: https://www.theguardian.com/science/2022/may/12/how-the-moon-influences-temperatures-on-earth

-  சிதம்பரம் இரவிச்சந்திரன்

 

Pin It