சென்ற கட்டுரையில் இன்டெர்ஸ்டெல்லர் திரைப்படத்தினில் வரும் ஐந்து பரிமாணக் கோட்பாட்டினை பற்றிப் பார்த்தோம். இந்தக் கட்டுரையில் மேலும் சிலவற்றைப் பார்ப்போம்.

wormholeஅந்தப் படத்தில் பேராசிரியர் ஜான் பிராண்ட் (Professor John Brand) , கூப்பரை (Cooper) முதலில் ஒரு ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்பி, அங்கிருந்து Endurance spacecraft மூலம் தொலைதூரப் பயணத்திற்கு அனுப்புவார். பூமியில் உள்ள அனைத்துப் பயிர்களும் அழிந்து போய், சோளம் மட்டுமே மிஞ்சி இருக்கும். அதுவும் அழிவின் விளிம்பில் இருக்கும் பட்சத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான மூன்று கிரகங்களை நோக்கிய பயணம் அது. அந்த கிரகங்களை இவருக்கு முன் சென்ற அறிவியலாளர்கள் கண்டறிந்து ஜான் பிராண்ட் அவர்களுக்குத் தெரியப்படுத்துவார்கள். அந்த மூன்று கிரகங்களுக்குச் சென்று, எதில் சரியான சாத்தியக்கூறுகள் உள்ளன என்பதைக் கண்டறிய வேண்டும். அந்த மூன்று கிரகங்களும் வெகு தொலைவில் உள்ள வேறு ஒரு விண்மீன் கூட்டத்தில் உள்ள கிரகங்கள். ஆகையினால் பேராசிரியர் ஜான் அவர்களே ஒரு வழியைச் சொல்வார். அதாவது புதிதாக சனி கிரகத்தின் அருகில் ஒரு wormhole உருவாகி இருப்பதாக சொல்வார். அதனுள் சென்றால் மிக எளிதாக அந்த கிரகங்களை அடையலாம் என்பார். இப்பொழுது இங்கு நாம் காண இருப்பது - அந்த wormhole என்பது என்ன ?? அவை ஏன் உருவாகின்றன? அவை எப்படி இரு அண்ட வெளிகளுக்கு இடையே குறுக்கு வழியாக அமைகின்றன?? என்பதைத்தான். 

wormhole என்பது செய்முறையாக உறுதி செய்யப்படாத பிரபஞ்சத்தின் எந்த இடத்திற்கும் சுலபமாக செல்ல உதவும் ஒரு குறுக்கு வழியாகும். அதாவது ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் செல்ல சில நூறு அல்லது ஆயிரம் ஆண்டுகள் ஆகலாம். அவ்வாறு இருப்பின் இந்த wormhole மூலம் நாம் சில மணி நேரத்தில் கூட சென்று விடலாம் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கோட்பாடு இதனை விரிவாக விளக்குகிறது. குறுக்கு வழியில் எப்பொழுதும் ஏதாவது ஒரு பிரச்னை இருக்கும். அதுபோல இந்த wormhole ஊடே செல்லும் போதும் அதிகப்படியான கதிர்வீச்சு, எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் வெளி மண்டலத்தின் ஆபத்தான துகள்களுடனான தொடர்புகள் மிகப் பெரிய ஆபத்தாக முடியும்.

நாம் இன்று விண்ணில் காணும் நட்சத்திரங்கள் கூட மிக அதிக தொலைவில் உள்ளவை. இவ்வாறு நமது கண்ணுக்குத் தெரியாமல் இன்னும் எத்தனையோ உள்ளன. அவ்வாறு நமக்குத் தெரியும் நட்சத்திரங்களை சென்றடைய கூட நமக்கு சில நூறு வருடங்கள் அல்லது சில ஆயிரம் வருடங்கள் தேவைப்படும். அவ்வாறு உள்ள பொழுது இந்த Wormholes நமக்கு உதவியாக இருக்கும் என அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறு நாம் விவாதிப்பதற்க்கு இது மிக எளிதாக இருக்கலாம் . ஆனால் உண்மையில் இது மிகக் கடினமான செயல்கள் நிறைந்தவை. என்னுடைய முதல் கட்டுரையில் வானியில் ஆராய்ச்சியின் அடிப்படையில் நாகரிக வளர்ச்சியைப் பற்றி விவரித்து இருப்பேன். அதன் படி பார்த்தால் இந்த மாதிரியான பயணங்களுக்கு நமக்கு இன்னும் சில ஆயிரம் ஆண்டுகள் தேவைப்படும் என நினைக்கிறேன். ஏனெனில் நாம் இன்னும் மனிதனை அருகில் உள்ள செவ்வாய் கிரகத்திற்குக் கூட அழைத்துச் செல்லவில்லை. அப்படி இருக்கும் பொழுது எவ்வாறு பல லட்சம் கோடி கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்திற்குச் செல்வது?

Wormholes என்றால் என்ன?

worm hole theoryWormholes என்பது அண்ட வெளியில் இரு வேறு வெளி மற்றும் நேரத்தை இணைக்கும் ஒரு பாதை ஆகும். உதாரணமாக ஒரு காகிதத்தை எடுத்து, அதனை சரிபாதியாக மடித்துக் கொள்ளுங்கள். இப்பொழுது ஒரு பென்சிலை ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதி வழியாக துளை போட்டு எடுங்கள். அந்தக் காகிதத்தில் உள்ள இரு துளைகள் இரு வேறு காலம் மற்றும் வெளிப் பகுதிகளை குறிக்கும். கற்பனையாக அந்த இரு துளைகளை இணைத்தால் உருவாகும் பாதையே Wormhole என கொள்ளப்படும்.

இதையே இப்பொழுது அண்ட வெளியில் கற்பனை செய்து பாருங்கள். ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கோட்பாடு இதனை விரிவாக விளக்குகிறது. மேலும் இந்த Wormhole Einstein-Rosen bridge எனவும் அழைக்கப்படுகிறது.

அதீத ஈர்ப்பு விசை உள்ள Wormhole ன் ஒரு பக்கத்தில் குதித்து பல மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள மற்றொரு பக்கத்தில் துரிதமாக சென்று விடலாம். இந்த Wormholes என்பது கோட்பாடுகள் சார்ந்து விளக்கும் பொழுது மிக எளிதாக இருக்கும். அதுவே செய்முறையாகப் பார்க்கும் பொழுது சாத்தியமில்லாத ஒன்றாகும் ( Just for now, might be in the future).

ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கோட்பாட்டின் படி இந்த Wormhole பயணிக்கத் தகுதி இல்லாதவை அல்லது அதனின் ஊடே பயணிக்க இயலாத பாதைகள்.

உங்களால் Wormhole-ஐ உருவாக்க முடிகிறது எனக் கொள்வோம். அதனின் அதீத ஆற்றல் மற்றும் நிலையில்லா தன்மை ஆகிய காரணங்களினால் அது உடனடியாக நிலைகுலைந்து விடும். மேலும் நீங்கள் அதனுள் காலடி எடுத்து வைப்பீர்கள் எனில், உங்கள் அடுத்த காலடி ஒரு கருந்துளையினுள் இருக்கலாம்.

கடைசியாக உங்களால் ஒரு பயணிக்கக் கூடிய மற்றும் ஒரு நிலையான Wormhole ஐ உருவாக்க முடியும் எனக் கொள்வோம். ஆனால் அதன் தன்மையானது ஏதேனும் ஒரு பருப்பொருள், அதனைத் தொட்டவுடன் அதாவது அதனுள் நுழைய முற்பட்டவுடன் அதன் நிலைத்தன்மை கேள்விக்குறி ஆகி விடுகிறது.

ஆனாலும் நமக்கு இன்னும் சில வாய்ப்புகள் உள்ளன. அதாவது அறிவியலாளர்கள் இன்னமும் ஈர்ப்பு விசையையும், கற்றை இயங்கியல் கோட்பாட்டின் தன்மையையும் முழுமையாக ஆராயவில்லை. இந்த பிரபஞ்சத்திற்கு மட்டுமே அவை எவ்வாறு உருவாகின்றன எனத் தெரியும் என நாம் கொள்ளலாம். ஏனெனில் நாம் இன்னும் அதை அறிந்திருக்கவில்லை. இதுவரை Wormhole என்பது பெரு வெடிப்பின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்த பிரபஞ்சத்தின் வெளி காலமும் ஒரு தனிப்புள்ளியில் கூடி இவற்றை உருவாக்குகிறது எனப் பார்க்கப்படுகிறது.worm hole theory 2

இந்த Wormhole தேடல் இன்னமும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. எப்படியெனில் நம்முடைய பூமியின் ஈர்ப்பு விசை எப்படி நம் நட்சத்திரத்தின் ஒளியை ஈர்த்து நமக்கு வேறு ஒரு தோற்றத்தைத் தருகிறதோ அதே போன்று Wormhole அதன் ஈர்ப்பு விசையின் மூலம் தன அருகில் உள்ள நட்சத்திரத்தின் ஒளியில் சில மாற்றத்தை ஏற்படுத்தும்.

இவ்வளவு அறிவியல் முன்னேற்றத்திலும் இன்னும் நம்மால் ஒரு Wormhole கூட கண்டுபிடிக்கப்படவில்லை.

இப்பொழுது முதல் பத்திக்குச் செல்லுங்கள்... கூப்பர் மற்றும் அவருடைய குழு Wormhole பயணம் முடித்து மறுபக்கம் சென்று விட்டார்கள்.

அடுத்து என்ன என்பதை வரும் கட்டுரைகளில் காண்போம்.

(தேடல் தொடரும்...!!!) 

- வி.சீனிவாசன்

Pin It