கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- செந்தமிழ்ச் செல்வன்
- பிரிவு: தொழில்நுட்பம்
கட்டுரைத் தொடர்
கட்டுரை எண் 1
ஒரு கிடேரி (பெட்டை) கன்று பிறக்கிறது. வளர்கிறது. ஒன்னரை முதல் இரண்டு வருட வயதில் உடலளவில் பாலின முதிர்ச்சியை (Sexual Maturity) அடைகிறது. அதன் பின்னர் ஒவ்வொரு 21 நாட்களுக்கு ஒருமுறை சினைப்பருவ அறிகுறிகளை (Oestrus Signs) வெளிப்படுத்துகிறது. இதனை நுகர்ந்துக் கொண்ட காளை கிளர்ச்சியுற்று பசுவை நெருங்கும். பசுவும் காளையிடம் மன்மத ராகம் பாடி இணக்கம் காட்டும். பின்னர் பசுவும் காளையும் கனநேரத்திலேயே கலவி (Mating) புரிந்து விடும். இதை தான் பசுவை ‘காளைக்கு விடுதல்’ (Allowing Cow to be Mounted) என கிராமங்களில் சொல்வார்கள். காளைக்கு விடுவதற்காகவே சாமானியர்கள் தங்களின் பசுக்களை பண்ணையார் வீட்டுக்கு ஓட்டிச்சென்று கொல்லை புறத்தில் காலையும், மாலையும் காத்துக் கிடப்பர். ஏனெனில் பண்ணையாரிடம் மட்டும் தான் வீரியமிக்க பொலிக்காளைகள் (Breeding Bulls) இருக்கும். இந்த நிலை தான் பல நூறு வருடங்களாக இருந்து வந்தது.
காலப்போக்கில் 20ஆம் நூற்றாண்டின் மத்தியில் அறிவியலின் வளர்ச்சியால் (?) இயற்கையாக நடைபெறும் “பசு-காளை” கலவி புரிதல் தடுக்கப்பட்டு பருவத்திலுள்ள பசுவிற்கு காளையின் விந்து (Semen) மட்டும் ஊசி மூலம் செலுத்தப்பட்டது. இந்த முறையில் காளையிலிருந்து “விந்து” முறையாக (?) சேகரிக்கப்பட்டு அவற்றை ஆய்வகங்களில் பல்வேறு சோதனைகளுக்குட்படுத்தி அவற்றின் தரத்தை (Quality) உறுதி செய்து பின்னர் பசுவின் கர்பப்பையில் வல்லுநர்களால் செலுத்தப்படுகிறது. இம்முறைக்கு “செயற்கைமுறை கருவூட்டல்” (Artificial Insemination) என்று பெயர். இந்த தொழில்நுட்பம் கறவை மாடு வளர்ப்போர்களை பண்ணையார் வீட்டிற்குப் பதிலாக கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து வந்தது. ஆண்டான் – அடிமை முறை காணப்பட்ட கிராமங்களில் இது ஒரு மிக முக்கியமான ஜனநாயக நிகழ்வாகும்.

பசுவை செயற்கைமுறை கருவூட்டல் செய்தல் (Artificial Insemination of Cow)
பசு ஒவ்வொரு முறை பருவத்திற்கு வரும்போதும் ஒரே ஒரு முட்டை (Ovum / Egg) அண்டகத்திலிருந்து (Ovary) வெளிப்படும். வெளிப்பட்ட அந்த ஒரு முட்டையும், வெளியிலிருந்து ஊசி மூலம் செலுத்தப்பட்ட காளையின் கோடானுகோடி விந்தணுக்களும் கருப்பையில் (Womb) சந்திக்கிறது. அங்கு பல கோடி விந்தணுக்கள் (Sperm) ஒற்றை முட்டையை மொய்த்துக் கொண்டு முட்டை சவ்வை (Egg Membrane) துளைத்தெடுக்கும் (Drilling). அப்படி பல கோடி விந்தணுக்கள் முட்டையை துளைத்தாலும் அவற்றில் ஒன்றுக்கு மட்டுமே உள்ளே தலையை நுழைக்க (Fertilization) அனுமதி கிடைக்கும். முட்டையினுள்ளே தலையை நுழைத்த அந்த ஒற்றை விந்தணு மட்டுமே தந்தை (Sire) எனும் உறவை அதை வழங்கிய காளைக்கு பெற்றுத்தருகிறது. ஆம்! முட்டையை துளைத்து உள்ளே எட்டிப்பார்த்த அந்த ஒற்றை விந்தணு காளையின் விதையிலிருந்து (Testicle) தான் சுமந்து வந்த முப்பது ‘குரோமோசோம்களை’ (Chromosomes) முட்டையினுள்ளே கொட்டுகிறது. விந்தணுவின் காணிக்கையை பெற்றுக்கொண்ட முட்டையும் தன் பங்கிற்கு பசுவின் அண்டகத்திலிருந்து கொண்டுவந்த முப்பது ‘குரோமோசோம்களை’ தன்னுள்ளேயே கட்டவிழ்த்து விடுகிறது. இப்போது முட்டையின் ‘குரோமோசோம்களும்’ விந்தணுவின் ‘குரோமோசோம்களும்’ நெருங்கி வந்து ஒன்றையொன்று அடையாளம் கண்டு இணை இணையாக ஜோடி சேருகின்றது (Pairing of Homologous Chromosomes).
இப்படி முட்டையும், விந்தணுவும் தனித்தனியாக வெளிப்பட்டு கருப்பை நோக்கி பயணித்து, ஒன்றையொன்று சந்தித்து தாங்கள் கொண்டுவந்த குரோமோசோம்களை எதிர்கால சந்ததிகளுக்கு கொடையாக்கி சாதாரண முட்டையை சகல வல்லமையும் (Totipotential) கொண்ட ’கருமுட்டையாக’ (Zygote) உருமாற்றமடைய செய்கிறது. எல்லாம் வல்ல கருமுட்டை இப்போது கருபையில் உருண்டோடி பதமான சதைப்பரப்பில் இதமாக புதையுண்டு வேரூன்றி (Implantation) கருவாக (Embryo) வளர்கிறது. கருமுட்டை வேரூன்றி கந்துவட்டிக் கணக்காய் வளர்ந்து (Exponential Cell Division) முதிர்ந்த கருவாகவும் (Matured Embryo), பின்னர் தொப்புள்கொடி (Umblical cord) கொண்ட சிசுவாகவும் (Foetus), இறுதியாக உரோமம் உடல் கொண்ட முழு கன்றாகவும் (Calf) உருமாறி பூமியை வந்தடைகிறது. முட்டையும், விந்தணுவும் சந்தித்து ஹாய் (Hai) சொல்லி கருமுட்டை உருவான நாளுக்கும் அது பின்னர் கன்றாய் உருவெடுத்து கருப்பைக்கு பாய் (Bye) சொல்லி பூமியை வந்தடைந்த நாளுக்கும் இடைப்பட்ட இருண்ட அந்த ஒன்பது மாத கருப்பைவாச காலமே (Womb Period) பசுவின் கர்பகாலம் (Gestation Period) எனப்படுவது.
கன்றின் பாலினம் (Gender) எப்படி தீர்மானிக்கப்படுகிறது?
கர்பக்காலத்தை கடந்து பூமியை வந்தடையும் கன்று கிடாவாக (ஆண்) இருப்பதும், கிடேரியாக (பெண்) இருப்பதும் எப்படி தீர்மானிக்கப்படுகிறது? யாரால் தீர்மானிக்கப்படுகிறது? பசுவின் அண்டகதிலிருந்து வெளிப்பட்ட முட்டையும், காளையின் விதையிலிருந்து விடுபட்டு கருவறை நுழைந்து எதிர் நீச்சலிட்டு வந்த விந்தணுவும் தலா முப்பது குரோமோசோம்களை முதலீடு செய்து மொத்தம் அறுபதாகிறது. இந்த அறுபதும் தங்களுக்குள் அடையாளங்கண்டு இணை இணையாக ஜோடி சேர்ந்து முப்பது ஜோடிகளாக ஒருங்கமைந்து முட்டையை கருமுட்டையாக உருப்பெறச் செய்கிறது. இது தான் பின்னர் வளர்ந்து கன்றாக உருவெடுக்கிறது.
பொதுவாக ஒவ்வொரு முறை பசு பருவத்திற்கு வரும் போதும் ஒரே ஒரு முட்டை தான் அண்டகத்திலிருந்து வெளிப்படும். அந்த முட்டையில் உள்ள முப்பது குரோமோசோம்களில் முப்பதாவது குரோமோசோம் எப்போதுமே “X” வடிவத்தில் மட்டும் தான் இருக்கும். இது இயற்கை. இது மாறாது. நிற்க!
ஆனால் காளையால் ஒருமுறை பீச்சியடிக்கப்படும் விந்துவில் ஒரே ஒரு விந்தணு மட்டும் இருப்பதில்லை. மாறாக கோடானகோடி விந்தணுக்கள் நீந்தி திளைக்கின்றன. இது இயற்கையின் பாரபட்சம் தான். ஆனால் ஏதோ ஒரு காரணம் இருக்கக் கூடும். விந்துவிலுள்ள கோடானகோடி விந்தணுக்களில் சரிபாதியில் முப்பதாவது குரோமோசோம் “X” வடிவிலும், மீதி பாதியில் முப்பதாவது குரோமோசோம் “Y” வடிவிலும் இருக்கும். இதுவும் இயற்கையே. முட்டையிலுள்ள முப்பதாவது குரோமோசோமுக்கும் விந்தணுக்களிலுள்ள முப்பதாவது குரோமோசோமுக்கும் இடையே உள்ள இந்த அடிப்படை வேறுபாட்டை புரிந்துக்கொள்ள வேண்டும். இது தான் கருமுட்டையின் (கன்றின்) பாலினத்தை தீர்மானிக்கும் ஓர் ஒற்றை காரணியாகும். எப்படி?
எப்பொழுதெல்லாம் முட்டை ”X” குரோமோசோமை கொண்ட விந்தணுவால் கருத்தரிக்கப்படுகிறதோ அப்போது உருப்பெறும் கருமுட்டை கிடேரி (பெண்) கன்றாகவும், எப்பொழுதெல்லாம் முட்டை ”Y” குரோமோசோமை கொண்ட விந்தணுவால் கருத்தரிக்கப்படுகிறதோ அப்போது உருப்பெறும் கருமுட்டை கிடா (காளை) கன்றாகவும் பிறப்பெடுக்கிறது. அதாவது கருமுட்டையின் முப்பதாவது ஜோடி குரோமோசோம்கள் “XX” என்றமையும் போது அது பெண்ணாகவும், கருமுட்டையின் முப்பதாவது ஜோடி குரோமோசோம்கள் “XY” என்றமையும் போது அது ஆணாகவும் நிர்ணயிக்கப்பட்டு, அவை முறையே கிடேரியாகவும், கிடாவாகவும் மண்ணில் பிறக்கிறது. சுருங்கச் சொல்வதென்றால் மண்ணில் பிறக்கும் கன்றின் பாலினம் என்பது அது கருப்பையில் கருமுட்டையாய் உருப்பெறும் போதே தீர்மானிக்கப்படுகிறது. கருமுட்டையின் பாலினத்தை தீர்மானிப்பது முட்டையை கருத்தரித்த ’அந்த’ ஒற்றை விந்தணு சுமந்து வரும் முப்பதாவது குரோமோசோமே ஆகும். இதே ’கதை’ தான் மன்னிக்கவும் இதே ’உண்மை’ தான் மனிதர்களிலும் நிகழ்கிறது. இப்படி கருவின் பாலினத்தை தீர்மானிப்பது விந்தணுவாக இருக்கும் போது பெண் பிள்ளையை பெற்றெடுத்ததற்காக தாயை கரித்துக் கொட்டுவது எவ்வகையில் நியாயம்? முறையாய் பார்த்தால் தந்தை தானே பொறுப்பேற்றிற்க வேண்டும்? இது தான் ஆணாதிக்க சமூகம் என்பதோ?
கறவை பண்ணையத்தில் கிடேரி மோகம் (Female Calf – The Most Wanted in Dairy Farm)
மனிதர்களில் “ஆண்” பிள்ளைக்காகவும், மாடுகளில் “கிடேரி” (பெண்) கன்றுக்காகவும் நாம் ஏங்குகிறோம். ஏன்? வெட்கத்தைவிட்டு அம்மனமான உண்மையை சொல்வதென்றால் எல்லாம் ’பொருளாதாரத்திற்காகத்’ தானே! குறிப்பாக மாடுகளில் கிடேரி கன்று தானே பிற்காலத்தில் பாலை சுரக்கும். வருமானத்தையும் கொடுக்கும். கிடாக் கன்று பிற்காலத்தில் வேளாண் வேலைக்கு பயன்பட்டாலும் அதை தான் இன்று இயந்திரங்கள் பிடுங்கிக் கொண்டனவே. இளங்கன்றுகளை அறுத்து சமைத்து சாப்பிடலாமென்றால் காலங்காலமாக நம்மோடு ஒட்டிவந்திருக்கும் கலாச்சார கவசகுண்டலத்தையும் கழற்றியெறிய முடியவில்லை. இக்கட்டான இந்தவொரு சூழ்நிலையில் காளைக் கன்றின் மேல் நாம் விருப்பம் கொள்ளாததை புரிந்துக் கொள்ள முடிகிறது.
”இன்னும் சரியாகச் சொல்வதென்றால் இன்றைய பொருளாதாரத்திற்கு ஒவ்வாத காளைக் கன்றுகளை பெற நாம் ஏன் சினை ஊசி போடுதல், சினையை உறுதி செய்தல், கர்பகால மேலாண்மை, பேறுகால மேலாண்மை, தேவைப்படும்போது சிகிச்சை, இத்தியாதி… இத்தியாதி… என செலவினங்களை ஒரு வருட காலம் ஏற்க வேண்டும்? இவையெல்லாம் வீணான செலவு தானே? பிறக்கப்போகும் கன்று கிடா தான் என்பதை சினை ஊசி போடும்போதே தெரிந்திருந்தால் நம்மால் இந்த மனித ஆற்றல் இழப்பு, கால விரயம், பொருளாதார இழப்பு போன்றவற்றையெல்லாம் தவிர்த்திருக்கலாம் தானே? பிறக்கப்போகும் கன்றின் பாலினத்தை மனிதர்களாகிய நாம் ஏன் தீர்மானிக்கக் கூடாது? அப்படி நம்மால் தீர்மானிக்க முடிந்தால் எதிர்காலத்தில் பாலை சுரக்கும் கிடேரி கன்றுகளை மட்டுமே பிறக்கச் செய்யலாம் தானே? அப்படி செய்தால் பசுக்களின் எண்ணிக்கையை மட்டும் அடுத்தடுத்த சந்ததிகளில் அதிகரித்து பால் உற்பத்தியை பெருக்கி இரண்டாம் வெண்மை புரட்சியை நனவாக்கலாம் தானே? பால் பொழிவை கிராமங்கள் தோறும் அதிகரிக்கலாம் தானே? வருமானத்தையும் பெருக்கலாம் தானே? கத்தரி, கொத்தவரை, பூசனி, புடலையை புறந்தள்ளி பன்னீர், பாலாடை (Cheese), வெண்ணெய், நெய் என இரவு பகல் பாராமல் சுவைத்து இன்புறலாம் தானே? கட்டவுட்டிற்கும், கோயில் கருவறைக்கும் குழாய் மூலம் பால் அபிஷேகம் நடத்தலாம் தானே? வாழ்க்கை தரத்தை உயர்த்தலாம் தானே?” இப்படியெல்லாம் கனாக்கண்ட அறிஞர்களின் எண்ணத்தில் பிறந்தது தான் “விந்தணுக்களின் பாலினம் கண்டறியும் தொழில்நுட்பம்” (Sperm Sexing Technology or Semen Sexing Technology) என்பது.
பெண் விந்தணுவும் (X Bearing Sperm), ஆண் விந்தணுவும் (Y Bearing Sperm)
பெண் விந்தணுவா? வாயை பிளக்காதீர்கள். காளையால் பீச்சியடிக்கப்படும் விந்தணுக்களில் “X” மற்றும் “Y” என இரண்டு வகைகள் உள்ளதென்பதை அறிவோம். பசுவின் முட்டை காளையின் “X” வகை விந்தணுவால் கருத்தரிக்கப்படும் போது கருமுட்டை பெண்ணாகவும் (கிடேரி), அதே போன்று பசுவின் முட்டை காளையின் “Y” வகை விந்தணுவால் கருத்தரிக்கப்படும் போது கருமுட்டை ஆணாகவும் (கிடா) தீர்மானிக்கப்படுகிறது. எனவே தான் “X” வகை விந்தணுக்களை “பெண் விந்தணு” என்றும், “Y” வகை விந்தணுக்களை “ஆண் விந்தணு” என்றும் அழைக்கிறோம்.
பருவத்திலுள்ள பசுவை இயற்கையாக காளைக்கு விடும் போதும் அல்லது பருவத்திலுள்ள பசுவை செயற்கைமுறை கருவூட்டலுக்கு உட்படுத்தும் போதும் இரண்டு வகையான (”X” மற்றும் “Y”) விந்தணுக்களையும் கருப்பை பெறுகிறது. ஆகையால் அண்டகத்திலிருந்து வெளிப்பட்ட முட்டை எந்தவகை விந்தணுவால் (”X” அல்லது “Y”) வெற்றிகரமாக கருத்தரிக்கப்பட்டு கருமுட்டையாக உருப்பெறும் என்பதை நம்மால் யூகிக்க முடிவதில்லை. ஆகவே தான் மேற்குறிப்பிட்ட இயற்கை மற்றும் செயற்கை முறை கருவூட்டல் மூலம் பிறக்கும் கன்று பெண்ணாகவும் (கிடேரி) இருக்கலாம் அல்லது ஆணாகவும் (கிடா) இருக்கலாம். அதாவது கன்று கிடேரியாக இருப்பதற்கு 50% சாத்தியக்கூறும், கன்று கிடாவாக இருப்பதற்கு 50% சாத்தியக்கூறும் உள்ளது. எளிதாக சொல்வதென்றால் பசுவிலிருந்து பிறக்கப்போகும் ஒரு கன்று கிடேரியாக இருப்பதற்கும், கிடாவாக இருப்பதற்கும் சமமான சாத்தியக்கூறையே (Equal Probablity) இயற்கை வகுத்துள்ளது. இயற்கையின் இந்த கோட்பாடு தான் மனிதன் உள்ளிட்ட அனைத்து விலங்குகளிலும் ஆண்களின் எண்ணிக்கையையும், பெண்களின் எண்ணிக்கையையும் கூடுமான வரையிலும் சமமாக வைத்துள்ளன. ஆனால் நாமோ எதிர்காலத்தைப் பற்றி எண்ணாமல் நிகழ்கால ’பொருளாதார’ காரணங்களுக்காக ஒரு குறிப்பிட்ட பாலினத்திற்கு ஆதரவாகவும், மற்றவைக்கு எதிராகவும் செயல்பட எத்தனிக்கிறோம்.
பெண் மற்றும் ஆண் விந்தணுக்களை பிரித்தெடுத்தல் (Separation of X and Y Bearing Sperm)
இப்போது நம் முன் உள்ள சவால் என்னவென்றால் பிறக்கப்போகும் கன்று கிடேரியாக இருப்பதற்கான சாத்தியக்கூறை 50%லிருந்து 100%ஐ நோக்கி உயர்த்துவதே ஆகும். இதனை எப்படி சாத்தியப்படுத்துவது? இதற்கான தீர்வு பெண் மற்றும் ஆண் விந்தணுக்களை பிரித்தெடுப்பதில் தான் உள்ளது. ஆம். நம்மால் ஏதோவொரு தொழில்நுட்பத்தால் பெண் விந்தணுக்களை ஆண் விந்தணுக்களின் கலவையிலிருந்து பிரிக்க முடியுமானால் அவ்வாறு பிரித்தெடுக்கப்பட்ட பெண் விந்தணுக்களை மட்டும் பசுவின் கருவறைக்குள் அனுமதித்து பெண் கருமுட்டைகளை உருவாக்க முடியும். இந்த பெண் கருமுட்டைகள் வளர்ந்து கிடேரி கன்றாக உருப்பெற்று மண்ணில் பிறப்பெடுக்கக் கூடும். இப்படி இயற்கை அருளிய ஆண் பெண் விந்தணுக்களின் கலவையை சல்லடை கொண்டு சலித்தெடுத்து பெண் விந்தணுக்களை மட்டுமே கருவறை நுழைய அனுமதித்து அதன் மூலம் கிடேரி கன்றின் பிறப்பை உறுதிசெய்யும் தொழில்நுட்பமே “விந்தணுக்களின் பாலினத்தை கண்டறிதல்” என்பது.
எப்படி விந்துவிலிருந்து ஆண், பெண் விந்தணுக்கள் பிரித்தெடுக்கப்படுகிறது? இதிலுள்ள சவால்கள் என்னென்ன? இயற்கையாக உள்ள கிடா (ஆண்) – கிடேரி (பெண்) கன்றின் பிறப்பு விகித்தை மாற்றுவதால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன? இத்தொழில்நுட்பத்திலுள்ள அறம் மீறலுக்கான சாத்தியக்கூறு (Possibility of Violation of Ethics) என்னென்ன? என்பவை பற்றியெல்லாம் அடுத்தடுத்த கட்டுரைகளில் அறிவோம்! விவாதிப்போம்!!
- செந்தமிழ்ச் செல்வன்
- விவரங்கள்
- செந்தமிழ்ச் செல்வன்
- பிரிவு: தொழில்நுட்பம்
இன்று பொதுமக்களிடையே ஆக்ஸிடோசின் ஹார்மோன் பாலில் உள்ளதாகப் புலம்புகிறார்கள். அதற்கான வாய்ப்பே இல்லை. ஆக்ஸிடோசினின் அரைவாழ் காலம் ஒரு சில நிமிடங்களே ஆகும். மேலும் அது ஒரு பெப்டைட். ஆகவே பொதுமக்கள் பயம் கொள்ளத் தேவையில்லை.
பசுவின் மடியில் பால் எவ்வாறு உருவாகிறது? தீவனத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் எவ்வாறு பாலில் உள்ள சர்க்கரை (லாக்டோஸ்), புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளிட்ட ஊட்டச் சத்துக்களாக மாற்றப் படுகிறது? பாலில் ஊட்டச் சத்துக்களுடன், ஊட்டச்சத்துக்கள் அல்லாத வளர்சிதைமாற்ற சேர்மங்களும் (Non Nutrient Metabolic Compounds), வேறு சில உயிர்வேதிய சேர்மங்களும் (Biochemical Compounds) கலந்திருப்பதற்குக் காரணமென்ன?
பச்சைப் புற்கள், தீவனப் பயிர்கள், அடர் தீவனங்கள் போன்றவற்றை பசு உட்கொண்டு அவற்றிலுள்ள சத்துக்களை செரித்து, உட்கிரகித்து, ரத்த ஓட்டத்தில் கலந்து, மடி திசுவை (Mammary Tissue) அடைந்து, அங்கு வளர்சிதை மாற்றத்திற்கு (Metabolism) உட்பட்டு மீண்டும் ஊட்டச்சத்துக்களாக மீள் உருவாக்கம் (Resynthesis) பெற்று பாலாக மடியில் ஊற்றெடுக்கிறது. இவற்றோடு ஊட்டச்சத்துக்களல்லாத இரண்டாம் நிலை வளர்ச்சிதை மாற்ற சேர்மங்களும், வேறு சில உயிர்வேதிய சேர்மங்களும் பாலில் கழிவுப் பொருள்களாக (Waste Substances) வெளியேற்றப் படுகிறது. ஆரோக்கியமான பசுவால் இயற்கையாக சுரக்கப்படும் பாலில் இந்த வளர்ச்சிதை மாற்ற சேர்மங்களின் அளவு மிக மிகக் குறைவாகவே இருக்கும். இதைத் தடுக்க முடியாது. இது ஓர் உடற்செயலியல் இயற்கோட்பாடாகும் (Physiological Phenomenon). இவற்றால் நுகர்வோர்களுக்கு எந்தவித பாதிப்புமில்லை.
![]() |
|
பசுவிற்கு வழங்கப்படும் அடர் தீவனம், ஆக்ஸிடோசின், சிகிச்சை மருந்து போன்றவற்றிற்கும் பசு சுரக்கும் பாலுக்கும் அதை பருகும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு |
நாம் பசுவின் வளர்ச்சி, நோய் எதிர்ப்பாற்றல், இன்னும் வேறு சில காரணங்களுக்காக தீவன சேர்க்கைச் சேர்மங்களை (Feed Additive Compounds) அடர் தீவனங்களில் (Concentrate Feed) ‘அளவுக்கதிகமாக’ தொடர்ந்து சேர்க்கும்போதும், நோயுற்ற நேரத்தில் சிகிச்சைக்காக நீண்ட நாட்கள் மருந்துகளை (Medicinal Compounds) ஊசி மூலம் செலுத்தும் போதும் அவையனைத்தும் தத்தமது பணிகளை முடித்தவுடன் வளர்ச்சிதை மாற்றத்திற்குப் பின் பசுவின் உடலிலிருந்து இரண்டாம் நிலை வளர்ச்சிதை மாற்ற சேர்மங்களாக (Secondary Metabolic Compounds) மாற்றப்பட்டு கழிவுப் பொருள்களாக பாலிலும், சிறுநீரிலும் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக (More than the Permissible Level) வெளியேற்றப் படுகிறது. இந்த சூழ்நிலையில் தான் நுகர்வோர்கள் இயல்பை விட அதிகமான இரண்டாம் நிலை வளர்ச்சிதை மாற்ற சேர்மங்கள் அடங்கிய பாலையும், இறைச்சியையும் உட்கொள்ள வேண்டியிருக்கிறது. நம்மில் பெரும்பாலானோர் ‘இந்த’ பாலையும், இறைச்சியையும் தான் ஆபத்து நிறைந்ததாகக் கருதுகிறார்கள். அவர்களின் பயம் நியாயமானதே! அவற்றைப் புறம்தள்ள முடியாது!
நாம் உட்கொள்ளும் ’அந்த’ அதிகளவு இரண்டாம் நிலை வளர்ச்சிதை மாற்ற சேர்மங்கள் அடங்கிய பால் மற்றும் இறைச்சி நம் வயிற்றை அடைந்து, செரிமானமடைந்து, சிறுகுடலில் உறிஞ்சப்பட்டு, இரத்த ஓட்டத்தில் கலந்து, உடலின் அனைத்து பாகங்களுக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு ’அந்த’ இரண்டாம் நிலை வளர்ச்சிதை மாற்ற சேர்மங்கள் அனைத்தும் மீண்டும் வளர்ச்சிதை மாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டு மூன்றாம் நிலை வளர்ச்சிதை மாற்ற சேர்மங்களாக (Tertiary Metabolic Compounds) மாற்றப்படுகிறது.
மனிதர்களில் இந்த மூன்றாம் நிலை வளர்ச்சிதை மாற்ற சேர்மங்களின் விளைவுகள் என்பது இவைகளின் மூலச்சேர்மங்கள் (Original Compounds) பசுக்களில் ஏற்படுத்தும் விளைவுகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இவைகளால் ஏற்படும் விளைவுகளென்பது பெரும்பாலும் மறைமுகமானது (Indirect Effects). காலம் கடந்து ஏற்படப் போவது (Latent Effects). அன்றாடம் தொந்தரவுகளை கொடுக்காமல் என்றேனும் ஒரு நாள் ஒட்டுமொத்த விளைவாக (Cumulative Effects) உருவெடுக்கலாம். அதனால் எதிர்காலத்தில் நுகர்வோர்களுக்கு தொந்தரவுகள் (Disorders) ஏற்படலாம். மறுப்பதற்கல்ல. ஆனால் இவையெல்லாம் நாம் உட்கொள்ளும் பால் அல்லது இறைச்சியின் அளவு, உட்கொள்பவரின் வயது, உட்கொள்பவரின் மற்ற உணவுப் பழக்கவழக்கங்கள், தொடர்ச்சியாக உட்கொள்ளும் கால அளவு, உட்கொள்பவரின் நோய் எதிர்ப்பாற்றல் போன்ற பல காரணிகளைப் பொருத்தே அமைகிறது.
மேலும் நம்மில் பெரும்பாலானோர் பதப்படுத்தப்பட்ட பாலையே (Pasteurized Milk) அருந்துகிறோம். அதைப் போன்றே இறைச்சியையும் நன்கு வேக வைத்தே உண்கிறோம். ஆகவே இந்த மூன்றாம் நிலை வளர்சிதை மாற்ற சேர்மங்களால் ஏற்படப் போகும் விளைவுகளென்பதை நினைத்து பயப்படத் தேவையில்லை.
வணிகமுறை அடர் தீவன உற்பத்தியாளர்கள் அடர் தீவனத்தில் சேர்க்கை சேர்மங்களின் அளவு இந்திய தரக்கட்டுப்பாட்டு ஆணையம் (Bureau of Indian Standard) நிர்ணயித்துள்ள வரம்பிற்குள் (Standard Range) இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கால்நடை மருந்து விற்பனையாளர்கள் ஆக்ஸிடோசின் உள்ளிட்ட ஹார்மோன்களை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் (Central Drug Standard Control Organization) அறிவுறுத்தலின்படி விற்பதை உறுதி செய்ய வேண்டும். வணிகமுறை பால் உற்பத்தியாளர்கள் மருந்து குப்பிகளில் ஒட்டப்பட்டுள்ள முத்திரைச் சீட்டில் (Label) குறிப்பிட்டுள்ளபடி மருந்து செலுத்தப்பட்ட நாளிலிருந்து குறிப்பிட்ட நாட்கள் வரை (Withdrawal Period) கறக்கப்படும் பாலை நுகர்வோர் பயன்பாட்டுக்கு (Cosumer Usage) கொண்டு வராமல் அவற்றை அகற்றிவிட (Disposal) வேண்டும். பால் உற்பத்தி எனும் நீண்ட சங்கிலியில் உள்ள ஒவ்வொருவரும் நுகர்வோர்களின் குறிப்பாக குழந்தைகள் மற்றும் வயோதிகர்களின் நலத்தை கருத்தில் கொள்ள வேண்டும்.
- செந்தமிழ்ச் செல்வன்
- விவரங்கள்
- பா.மொர்தெகாய்
- பிரிவு: தொழில்நுட்பம்
இரு கருந்துளைகள் ஒன்றாகின்றன,
பிரபஞ்சமெங்கும் மகிழ்ச்சிச் சலனம்,
கருவிக்குள் சிக்குகின்றன
ஈர்ப்பலைகள்,
கிடைத்தது நோபல் பரிசு – 2017!
ஐன்ஸ்டைன் மறுபடியும் புகழப்படுகிறார்.
“அறிவியல் என்றால் என்ன?” என்ற கேள்விக்கு, சர். கார்ல் பாப்பர் கொடுக்கக்கூடிய விளக்கம் என்ன என்றால் “எதற்கெல்லாம் பொய்யாக்கப்படும் தன்மை இருக்கிறதோ (Falsifiability) அவைதான் அறிவியலே தவிர, மற்ற எல்லாமே பொய்யான அறிவியலே! (pseudo-science)” என்கிறார். குறிப்பாக கடவுள் சம்பந்தமான எதையும் நீங்கள் பொய்யாக்க முடியாது, ஆகவே அது அறிவியலே கிடையாது என்கிறார். மேலும் அவர் கூற வருவது, ஒருவர் ஒரு அறிவியல் கொள்கையை முன்வைக்கிறார் என்றால், அவர் எந்தச் சூழ்நிலைகளில் அவரின் கொள்கை பொய்யாக்கப்படும் என்ற ஒரு சூழலையும் கொடுக்கவேண்டும். அதாவது இந்தச் சூழலில் குறிப்பிட்ட சில நிகழ்வுகள் கண்டறியப்பட்டால் என் அறிவியல் கொள்கை பொய்யாக்கப்படும் என்பதைத் தெரிவிக்கவேண்டிய கட்டாயம் எந்தவொரு அறிவியலாளனுக்கும் உள்ளது என்பதே பாப்பரின் கருத்து. அந்த வகையில் ஈர்ப்பலைகளின் கண்டுபிடிப்பு திடமான அறிவியல் என்ற அடைமொழியை அடையும்.
1915-ல் பொதுவான சார்பியல் கொள்கையை ஐன்ஸ்டைன் வகுக்கிறார். இதில் சில எதிர்பார்ப்புகளை உருவாக்குகிறார். அதாவது, இந்தக் கொள்கை உண்மையானால், இவையெல்லாம் நடக்கும் என்று சில முன்னறிவிப்புகளை முன்வைக்கிறார். அதில் ஒன்றுதான் இந்த ஈர்ப்பலை (Gravitational Waves) பற்றியது. ஏற்கெனவே முன்னறிவிக்கப்பட்ட ஒன்றான ஒளியின் வளைவு (bending of light) 1919-ல் எடிங்கடன் என்பவரால் கண்டறியப்பட்டது. அது ஒரு முக்கியமான நிகழ்வு. ஏனெனில் அதுவே ஐன்ஸ்டைனின் கொள்கையை உறுதிப்படுத்தியது. 1916-ல் ஈர்ப்பலை இருக்கவேண்டும் என்று ஐன்ஸ்டைன் அறிவித்த நாளிலிருந்து அதைக் கண்டறியவும் முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டன.
ஈர்ப்பலை என்பது என்ன?
ஈர்ப்பலை என்பது ஒரு அலை. அலை என்றால் என்ன? அது மேலேறி கீழிறங்கி கால ஓட்டத்தில் ஓடும் தன்மையுடையது. அமைதியான ஒரு குளத்தில் நடுவில் ஒரு கல்லைப் போட்டால், கல் விழுந்த இடத்திலிருந்து கரையை நோக்கி செல்லும் நீரலைகள் போன்றதுதான் ஈர்ப்பலைகள். சரி! கல் விழுந்ததால் நீரலைகள் உண்டானதே, ஈர்ப்பலைகள் உண்டாக என்ன நடக்கவேண்டும்? அதற்கு ஐன்ஸ்டைனின் பொதுவான சார்பியல் கொள்கையை லேசாக உற்றுப்பார்ப்போம். 300 வருடங்களாக அசைக்கமுடியாத இடத்தில் இருந்த நியூட்டனின் கொள்கைகளை அசைத்தது ஐன்ஸ்டைனின் கொள்கைகள். நியூட்டனின் கொள்கைப்படி, வெளி (Space) என்பதும் காலம் (Time) என்பதும் தனித்தனியானது. வெளியை நாம் 3 பரிமாணங்களில் கற்பனை செய்து பார்க்கமுடியும். அதாவது நீங்கள் இந்தக் கட்டுரையை வாசித்துக்கொண்டிருக்கும் போது உங்கள் வெளி (2, 1, 0.6)-யாயும் காலம் வாசிக்கத் தொடங்கும்போது காலை 8.30-ம் வாசித்து முடிக்கும்போது காலை 8.50-ஆகவும் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அதாவது நீங்கள் உங்கள் அறையில் 2-வது மீட்டர் நீளத்திலும், 1-வது மீட்டர் அகலத்திலும் 60-வது செ.மீ உயரத்திலும் இருக்கிறீர்கள். வாசிக்கத்தொடங்கும் போதும் வாசித்துமுடிக்கும்போதும் உங்கள் வெளி மாறவில்லை, ஆனால் காலம் மாறியிருக்கிறது. ஆக, காலமும் வெளியும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதது. ஆனால் ஐன்ஸ்டைனின் கொள்கைபடி, வெளியும் காலமும் பின்னிப்பிணைந்தது. அதாவது நீங்கள் வாசிக்க ஆரம்பித்த காலத்திலிருந்து முடிக்கும் காலம் வரைக்கும் பல நிகழ்வுகள் நடந்திருக்கும். அந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றும் மறுபடியும் நிகழா தனித்தன்மை வாய்ந்தது, இதை நான்கு பரிமாணங்களில் பார்க்கவேண்டும். அந்த நிகழ்வுகளை (2, 1, 0.6, Ti) என்று நான்கு பரிமாணங்களில் குறிக்கலாம். இங்கு காலம் (T) 4-வது பரிமாணமாக வெளியோடு பிணைக்கப்பட்டுவிட்டது, மேலும் காலம் அதிகரித்துக்கொண்டே செல்லும் (Ti). இதேபோல், இன்னொருவரும் இக்கட்டுரையை வேறு இடத்திலிருந்து வாசித்துக்கொண்டிருப்பார் அல்லவா, அவருக்கான வெளி வேறு. ஆக வெளி பல்வேறு மதிப்புகளைக் கொண்டிருக்கும், கால மதிப்பும் மாறிக்கொண்டே செல்லும்.
இந்த வெளி-கால பின்னலை (Space-Time Fabric) புரிந்துகொள்ள ஒரு கற்பனை நிகழ்வை எடுத்துக்காட்டுகிறேன். தற்கொலை செய்ய முடிவெடுத்து ஒரு நபர் உயரமான கட்டடத்தில் நிற்கிறார். அவரைத் தடுத்து காப்பாற்ற முயற்சிகள் நடைபெறுகிறது. அதில் ஒன்று அவருக்குக் கீழே ஒரு வலைப்பின்னலை இறுக்கிக் கட்டியிருக்கிறார்கள். இந்த இறுக்கிக் கட்டிய வலைப்பின்னல் தொய்வின்றி இருக்கும், அந்த நபர் அந்த வலைப்பின்னலில் குதித்துவிட்டால் தொய்வோடு இருக்கும். இந்தத் தொய்வு ஏற்பட்டது அந்த மனிதரின் எடையினால் உண்டானது. அந்த வலைப்பின்னலில் அவர் விழுந்தவுடன் ஒரு சலனம் உண்டாயிருந்திருக்கும். சற்று நேரச் சலனத்திற்குப் பின் அது அடங்கியிருந்திருக்கும். இந்த வலைப்பின்னல்தான் வெளி-கால பின்னல். இந்த வெளி-கால பின்னல் ஒரு பருப்பொருள் இருக்கும் இடத்தில் தொய்வோடு இருக்கும். உதாரணத்திற்கு இந்த பிரபஞ்ச வெளி-கால பின்னலில், பூமியிருக்கும் இடத்தின் தொய்வு சிறியதாயும், சூரியன் இருக்கும் இடத்தின் தொய்வு சற்று பெரியதாயும், கருந்துளை இருக்கும் இடத்தின் தொய்வு அதிகமானதாயும் இருக்கும். அப்படி இருக்கும் கருந்துளையோடு இன்னொரு பருப்பொருள் மோதினால் வெளி-கால பின்னலில் ஒரு பெரிய சலனம் ஏற்படும், இந்தச் சலனமே ஈர்ப்பலையாக பிரபஞ்சம் முழுவதும் பரவும். பெரிய சலனமாயிருந்தால் வெகுதூரத்திலிருக்கும் வெளி-கால பின்னலிலும் உணரப்படும். சிறிய சலனமாயிருந்தால் சிறுதூரத்திற்கே அது பரவும். குறிப்பாக, பூமி அதிர்ச்சிகள் ஏற்படுத்தும் அதிர்வுகள் பெரிய பிரபஞ்சத்துக்குள் ஏற்படுத்தும் விளைவு மிக மிக மிகச் சிறியவை.
ஈர்ப்பலையை கண்டறிவது எப்படி?
ஈர்ப்பலை என்ன விளைவுகளை உண்டாக்குகிறது என்பதைத் தெரிந்துகொண்டால், கொள்கையளவில் அவற்றை நாம் எவ்வாறு கண்டறியமுடியும் என்பதையும் நாம் தெரிந்துகொள்ளலாம். ஈர்ப்பலைகளை ஏற்கெனவே நாம் பார்த்த நீரலைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். தண்ணீர் மட்டத்திற்கு சிறிது உயரத்தில் ஒரு முனையையும் தண்ணீரில் மிதப்பதுபோல் ஒரு முனையையும் வைத்திருப்பதை நினைத்துக் கொள்ளுங்கள். அலைவரும்போது தண்ணீரின் உயரம் அதிகரித்து இருமுனைகளும் தொட்டுக்கொள்ளும்போது மின்சாரம் கடத்தப்பட்டு விளக்கு எரிவதுபோல வைத்துக்கொண்டால், விளக்கு எரியும் போது அலை வந்திருக்கிறதென்று பொருளல்லவா? இதே மாதிரிதான் ஈர்ப்பலையை கண்டறியவும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
இவர்கள் வடிவமைத்திருந்தது லேசர் குறுக்கீட்டுவிளைவு ஈர்ப்பலை கண்டறிகருவி (LIGO – Laser Interferometer Gravitational Waves Observatory). இது ஒளியின் குறுக்கீட்டுவிளைவை (Interference) பயன்படுத்திக்கொள்ளுகிறது. குறுக்கீட்டுவிளைவென்றால் என்ன? இரு ஒளிக்கற்றைகள் இணையும் போது ஆக்கவிளைவும் அழிவுவிளைவும் ஏற்படும். இரு ஒளிக்கற்றைகளும் ஒரே கட்டத்தில் (Phase) இருக்கும்போது ஆக்கவிளைவும் நேரெதிர் கட்டத்தில் இருக்கும் போது அழிவுவிளைவும் ஏற்படும். உதாரணத்திற்கு இந்த ஒளிக்கற்றைகள் வெள்ளை ஒளியாயிருந்தால், ஆக்கவிளைவு வெள்ளை நிற வட்டங்களையும் அழிவுவிளைவு கருப்பு வட்டங்களையும் திரையில் உருவாக்கும். இந்த ஈர்ப்பலை கண்டறிகருவியில் லேசர் என்ற ஓர்மித்த அலைநீளம் கொண்ட ஒற்றை நிற ஒளி பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேலே உள்ள படத்தில் 3 உட்படங்கள் உள்ளன. முதலாவது (அ) Fabry-Perot என்ற லேசர் ஒளிக்குறுக்கீட்டு விளைவு கருவியும், இரண்டாவது (ஆ) அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பொருத்தப்பட்டுள்ள இரு கருவிகளும், மூன்றாவது (இ) ஈர்ப்பலையின் கண்டறிதலைப் பற்றியதான படமும் உள்ளன. படம் அ-வில், லேசர் கதிர்கள் (1064 நேனோ மீட்டர்) புறப்பட்டு பாதி பிரதிபலிக்கும் கண்ணாடியில் (பா. பி.) பட்டு பாதி எதிரொளிக்கும், மீதி ஊடுருவும். ஊடுருவிய ஒளி X-திசையில் பயணப்பட்டு X1 & X2 என்ற ஒரு கண்ணாடிகளுக்குள்ளும் முன்னும் பின்னும் எதிரொளிக்கப்பட்டு மீண்டும் பா. பி.-யை நோக்கி வரும். இன்னொரு கதிரான எதிரொளிக்கப்பட்ட ஒளியானது Y-திசையில் பயணப்பட்டு Y1 & Y2 என்ற கண்ணாடிகளால் எதிரொளிக்கப்பட்டு பா. பி-யை நோக்கி வரும். பின்னர் இந்த இரு கதிர்களும் ஒளியை அளக்கும் கருவியால் (Photo Diode) அளக்கப்படும். எதிரொளித்தக் கதிரும் ஊடுருவிய கதிரும் ஒரே கட்டத்தில் இருந்தால் ஆக்கவிளைவும் (அதாவது சிவப்பு வரியும்), இரு கதிர்களும் 90 டிகிரி கட்ட வேறுபாட்டில் இருந்தால் அழிவுவிளைவும் (கருப்பு வரி) ஏற்படும். எடுத்துக்காட்டாக, ஒளி அளக்கும் கருவியில் சிவப்ப வரி ஏற்பட்டிருக்கிறதென்று வைத்துக்கொள்வோம். இந்நிலையில் Y1-யோ அல்லது X1-யோ சற்று நகர்த்தினால் சிவப்பு வரி மங்கி கருப்பு வரியாக மாறும். முதலில் கருப்பு வரியாக இருந்திருந்தால் இந்த மாற்றத்தினால் சிவப்பு வரியாக மாறும்.
ஈர்ப்பலை பிரபஞ்சமெங்கும் பரவும் போது படம் அ-வில் அந்த வட்டம் சுருங்கி விரியும். ஆக, எதிரொளிக்கப்பட்ட கதிரும் ஊடுருவிய கதிரும் வேறு கட்டத்தில் ஒளி அளக்கும் கருவிக்குள் பதியப்படும், அதுவே ஈர்ப்பலை வந்திருப்பதற்கான ஆதாரம். இந்த இரு கதிர்களுக்கும் இடைய கட்ட மாறுபாடு பெரிய அளிவிலான பூகம்பம் வந்தாலும் ஏற்படும். ஆனால் இந்தச் சிறிய அளவிலான அதிர்வுகளால் கட்ட மாறுபாடு ஏற்படாவண்ணம் கண்ணாடிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மேலும் அந்த படத்தில் (அ), X1-க்கும் X2 இடையே உள்ள தூரம் 4 கிலோ மீட்டர். இதே தூரம்தான் Y1-க்கும் Y2-க்கும் இடையேயும். மேலும் இந்தக் கருவிகள் வாசிங்க்டனில் உள்ள ஹான்ஃபோர்டிலும் (H1) லூசியானாவிலுள்ள லிவிங்ஸ்டனிலும் (L1) பொருத்தப்பட்டு செயல்பட்டுவருகிறது. இரு இடங்களுக்கும் இடையிலான தூரம் 3002 கிலோ மீட்டர். L1-லிருந்து ஒளி புறப்பட்டால் H1-ஐ அடைய 10 மில்லி செகன்ட் ஆகும் (1 விநாடியைவிட 1000 மடங்குக் குறைவு).
நடந்தது என்ன?
2015, செப்டம்பர் மாதம் 14-ம் தேதி அவர்களுடைய நேரத்திற்கு 9.50-க்கு ஈர்ப்பலை கண்டறியப்பட்டதற்கான சமிக்ஞை கிடைக்கிறது. L1-ல் முதலில் கிடைக்கிறது (படம். இ), 10 மில்லி செகன்டுக்குப் பிறகு H1-ல் கிடைக்கிறது. இந்த ஈர்ப்பலையானது சூரியனைவிட 36 மடங்கு அதிகமான பொருண்மை (mass) கொண்ட ஒரு கருந்துளையும் இன்னொரு கருந்துளையும் (29 மடங்கு அதிகமான பொருண்மை, சூரியனைவிட) 410 மில்லியன் Pc (1 Pc = 3.1 x 1013 கிலோ மீட்டர்) தூரத்தில் ஒன்றோடொன்று மோதி ஒன்றுக்குள் ஒன்று இணைந்துகொண்டன. அவ்வாறு இணைந்துகொண்டபின்னான கருந்துளையின் பொருண்மை சூரிய பொருண்மையைவிட 62 மடங்கு அதிகம். மீதியான பொருண்மை (சூரிய பொருண்மையைவிட 3 மடங்கு அதிகமான பொருண்மை) ஐன்ஸ்டைனின் பிரபலமான விதியின் (E = mc2) அடிப்படையில் ஈர்ப்பலைகளாக பிரபஞ்சம் முழுமைக்கும் பரவியிருக்கிறது. அப்படிப் பரவிய ஈர்ப்பலைகள்தான் இந்தக் கருவி மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இந்தக் கருந்துளைகளின் மோதல் நடந்தது 130 கோடி ஆண்டுகளுக்கு முன்னர். அப்போது ஏற்பட்ட ஈர்ப்பலைகளைத்தான் கடந்த வருடம் செப்டம்பரில் கண்டறிந்தோம். இந்தக் கண்டுபிடிப்பிற்குக் காரணமாயிருந்த ரய்னர் வீய்ஸ், பாரி பாரிஷ், கிப் தோர்ன் என்ற மூவருக்கும் இந்த வருடத்திற்கான (2017) இயற்பியல் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஈர்ப்பலையால் என்ன பயன்?
ஈர்ப்பலை என்பது ஒரு ஒளி மாதிரி. தூரத்தில் இருந்து வரும் ஒளியின் மூலம் அவைகள் எங்கிருந்து வருகின்றன என்றும், எதனூடாக வருகின்றன என்றும் நாம் தெரிந்துகொள்ள இயலும். குறிப்பாக இவைகளை வைத்துத்தான் நம் பிரபஞ்சத்தின் அளவு, பிரபஞ்சத்தின் உள்ளடக்கம், அவை பிரபஞ்சத்திற்குள் எப்படிப் பரவியிருக்கின்றன என்பனவற்றை தெரிந்துகொள்ளுகிறோம். இதை வைத்துத்தான் பிரபஞ்சத்தின் வயது 137 கோடி ஆண்டுகள் என்றும், பிரபஞ்சத்தில் பெரும்பாண்மையான இடங்கள் வெற்றிடமாகத்தான் இருக்கின்றன என்றும் தெரிந்துகொள்ளுகிறோம். மேலும் 137 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பிரபஞ்சத்தின் தன்மை என்ன என்பதை ஒளியால் கண்டறிய முடியாது, ஏனெனில் ஒளியும் முற்றாக எதிரொளிக்கப்பட்டு அழிந்து போகக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. ஆகவேதான், எளிதில் எதோடும் ஒட்டி உறவாடாத நியூட்ரினோ மூலமாகவோ ஈர்ப்பலை மூலமாகவோதான் ஒளிக்கெட்டா தூரத்தில் இருப்பனவற்றை பற்றி தெரிந்துகொள்ள இயலும் என்ற எண்ணம் இருந்தது. அது இப்போது நிறைவேறியிருக்கிறது. இன்னும் வருங்காலங்களில் ஈர்ப்பலைகளைப் பற்றிய ஆராய்ச்சிகள் கூர்மைப் படுத்தப்பட்டு, தூரங்கள் ஒழித்துவைத்திருக்கும் உண்மைகள் புலப்படும். முக்கியமானதாக, முன்னர் கேட்பதற்கு அஞ்சிய கேள்விகளை இனி துணிவுடன் கேட்கலாம்!
“எளிதாக உன்னால் சொல்லமுடியவில்லை என்றால், நீ போதுமான அளவுக்குப் புரிந்துகொள்ளவில்லை என்று அர்த்தம்” என்ற இந்த ஐன்ஸ்டைனின் வார்த்தைகள், இக்கட்டுரை முழுவதும், கவனமாக உட்கொள்ளப்பட்டிருக்கின்றன.
- பா.மொர்தெகாய்
- விவரங்கள்
- மா.செ.வெற்றிச் செல்வன்
- பிரிவு: தொழில்நுட்பம்
இந்திய யூனியனில், மாட்டின் மூத்திரத்தைப் பிடித்து அதனை ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கும் வேளையில், உலகெங்கிலும் உள்ள மற்ற நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட சில அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பார்ப்போம்.
கசிவுகளை சரிசெய்யும் ரோபோ
தண்ணீர்க் குழாய்களில் ஏற்படும் நீர்க் கசிவு காரணமாக கிட்டத்தட்ட 40% நீர் வீணாக்கப்பட்டு பயன்படுத்த முடியாமல் போகிறது. இதனைத் தடுக்க சிறு அளவிளான ரோபோ இயந்திரத்தைக் கண்டுபிடித்துள்ளார்கள். ஆம், தோழர்களே, அமெரிக்கவில் உள்ள எம்.ஐ.டி கல்வி நிறுவனம், இந்த இறகுப் பந்தைவிட சற்று பெரிதாக இருக்கும் ரோபோவை (MIT Leak Detector) கண்டுபிடித்துள்ளது. மனிதன் புகவே முடியாத இடங்களில் கூட, இந்த சிறிய ரோபோவை செலுத்திவிட்டால் போதும், அது, தானாக, அடைப்பு எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்து அடைத்து விடும். சமையல் எரிவாயு அடைப்புகளைக் கூட இந்த சிறிய ரோபோ மூலம் சரி செய்யலாம் என்பது கூடுதல் சிறப்பு. மேலும், மிகச் சிறிய அளவிளான கசிவுகளைக் கூட சரிசெய்து விடலாம்.

ரோபோவின் மாதிரிப் படம்
நடமாடும் நீர் சுத்திகரிப்பு நிலையம்
வெள்ளம், நில நடுக்கம், புயல், பெரும் மழை போன்ற இயற்கை சீற்றங்களின் நிவாரணப் பணிகளின் போது, இருக்கும் மிகப்பெரிய சவால், உணவு மற்றும் குடிநீர். உணவு கிடைக்கா விட்டாலும் பராவயில்லை, குடிநீர் கிடைத்தால் போதும், அதைக் குடித்து கொண்டு சில நாட்கள் தாக்கு பிடிக்கலாம். அனால், பெருவெள்ளம் மற்றும் புயல் அடிக்கும் போது, கண் முன்னே நீர் இருந்தாலும், அதனைப் பயன்படுத்த முடியாது. கழிவுகள் மற்றும் சேறு கலந்து, குடிக்க பயன்படுத்த முடியாத அளவில் இருக்கும். இதற்கு, தற்போது ஒரு விடிவு வந்துள்ளது. இஸ்ரேலைச் சேர்ந்த ஒரு நிறுவனம், நடமாடும் கழிவு நீரை சுத்திகரிக்கும் இயந்திரத்தைக் கண்டு பிடித்துள்ளது. குட்டியானையை விட கொஞ்சம் பெரிதாக இருக்கும், இந்த இயந்திரத்தை எங்கு வேண்டுமானலும் கொண்டு செல்லலாம். ஒரு நாளைக்கு 20,000 லிட்டர் கடல் நீரையும், 80,000 லிட்டர் கழிவு நீரையும், இந்த இயந்திரத்தைக் கொண்டு உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்திருக்கும் தர அளவில் சுத்திகரிப்பு செய்யலாம்.

நடமாடும் சுத்திகரிப்பு நிலையத்தின் மாதிரிப் படம்
ஞெகிழியில்லா ஞெகிழி
பிளாஸ்டிக் எனப்படும் ஞெகிழியின் தீமைகள் மற்றும் அதனால் எற்படும் சுற்றுச் சூழல் பாதிப்புகள் குறித்து தனியாக ஏதும் சொல்ல வேண்டியதில்லை. இந்தோனேசியாவைச் சேர்ந்த அவனி என்ற நினுவனம் மட்கும் நான் ஞெகிழி அல்ல என்னும் ஞெகிழியைத் தயாரித்துள்ளது. பிளாஸ்டிக்கை போலவே இருக்கும் இந்தத் தயாரிப்பு, 3- 6 மாதங்களுக்குள் மண்ணோடு மண்ணாக மட்கி விடும், எரித்தாலும், குறைந்த அளவில் மட்டும் சாம்பலைக் கொடுக்கும். ஸ்டாரச், சமையல் எண்ணெய் மற்றும் ஆர்கானிக் ரெசின்களைக் கொண்டு இந்த பிஸாஸ்டிக் தயாரிக்கப் படுகிறது.

- மா.செ.வெற்றிச் செல்வன்
- பித்தாகரசு தேற்றமும் தொடுவானத்தின் தூரமும்
- பாக்டீரியாக்கள் – கழிவறைகள் – தொழிலாளர்கள்
- எரிபொருள் அறிவியல் அறிவோம்! ஏமாளிகளாக ஆகாமல் இருப்போம்!!
- நியூட்டனின் விதிகளும் கிணற்றின் ஆழமும்
- சூரிய சக்திச் சாலை (சோலர் சாலை) - பிரான்ஸ்
- பயர்பாக்ஸ் தரும் பயனுள்ள குறுஞ்செயலிகள்
- ஃபிரீ சாப்ட்வேர் – ஓர் அறிமுகம்
- வாட்சப்பை முந்தும் டெலிகிராம்
- Compression Test என்றால் என்ன? அது எப்படி செய்யப்படுகிறது?
- இணையத் திருவிழா
- ஸ்மார்ட் போனில் தகவல்களை ஸ்மார்ட்டாக வைத்திருக்க 8 கட்டளைகள்
- ஜெட் இன்ஜின் - மனிதனை பறக்க வைத்த இயந்திரம்
- ஸ்மார்ட் போன் வாங்கப் போகிறீர்களா?
- காரீய அமில இரண்டாம் நிலை சேமிப்பு மின்கலம்
- கியர் எப்படி வேலை செய்கிறது?
- சாட்பாட் – துணைக்கு வரும் தொழில்நுட்பம்
- கிளட்ச் (Clutch) - பயன்பாடும், செயல்முறையும்
- விமானம் பறப்பது எப்படி?
- நியூட்டனின் தலையில் ஆப்பிள் விழுந்தபோது... - சுனில் லக்ஷ்மண்
- இரத்தத்தில் ஜாதி அடையாளம் இருக்கிறதா?
