smart phone

பாட்டு கேட்பதில் இருந்து, படம் பார்ப்பது, பாடம் படிப்பது என்று எல்லாமே ஸ்மார்ட் போனில் சாத்தியம் என்றாகி விட்டது. கடிகாரம், கால்குலேட்டர், கேமரா, டார்ச் லைட் என்று எல்லாமே நம் கைக்குள் ஸ்மார்ட் போன் வடிவெடுத்து வந்து விட்டது.  இல்லை என்பதே இதில் இல்லை என்று சொல்லும் அளவுக்கு ஒவ்வொரு நாளும் புதுப் புது ஆப்கள் (செயலிகள்) வந்து கொண்டிருக்கின்றன. இப்படி ஸ்மார்ட் போன்கள் குறுங்கணினி வடிவமெடுத்து வந்து கொண்டிருக்க, ஸ்மார்ட் போன் வாங்கிய பிறகு செய்ய வேண்டிய சின்னச்சின்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

  • புதிய மின்னஞ்சல் முகவரி

நீங்கள் ஆண்டிராய்டு போன் வாங்கும் பட்சத்தில், அதில் உள் நுழைவதற்கே ஜிமெயில் மின்னஞ்சல் முகவரி தேவைப்படும். நீங்கள் ஏற்கெனவே வைத்திருக்கும் மின்னஞ்சல் முகவரியை இங்கு உள்ளிட்டால், உங்கள் நண்பர்கள், உறவினர்கள் மின்னஞ்சல் முகவரிகள் ஆகியன கூகுள் நிறுவனத்தால் கண்காணிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம். எனவே, ஆண்டிராய்டு போன் வாங்கிய உடனேயே, உடனடியாக ‘டம்மியாக’ஒரு மின்னஞ்சல் முகவரியை உருவாக்கிக் கொள்ளுங்கள். அந்த டம்மி மின்னஞ்சல் முகவரியை உங்கள் ஆண்டிராய்டு போனில் கொடுத்து விடுங்கள். இப்படிச் செய்வதன் மூலம் – நீங்கள் உங்கள் உண்மையான மின்னஞ்சலில் சேர்த்து வைத்திருக்கும் நண்பர்களின் மின்னஞ்சல் முகவரிகளைக் கூகுளிற்குத் தாரை வார்க்காமல் பார்த்துக் கொள்ள முடியும்.

  • தேவையற்ற ‘ஆப்பு’கள் வேண்டாமே

கார்களை வாடகைக்கு விடும் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நிறுவனம் உபெர். தற்போது தன்னுடைய ஆண்டிராய்டு ஆப்’ மூலமாக வாடகையை உயர்த்தி லாபம் பார்த்ததாக சர்ச்சையில் சிக்கியிருக்கிறது உபெர். இந்தச் சர்ச்சை நடந்த இடம், நல்ல வேளை நம்மூர் இல்லை, இங்கிலாந்தில். தன்னுடைய் ஆப்’ மூலம் செல்போனின் பேட்டரித் தகவல்களைத் திரட்டியிருக்கிறது உபெர். பின், யார் யாருக்கெல்லாம் பேட்டரி சார்ஜ் மிகவும் குறைவாக இருக்கிறதோ அந்த வாடிக்கையாளர்களுக்கெல்லாம் கார் வாடகையை உயர்த்திக் காட்டியது உபெர் என்பது தான் இப்போது அதன் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு. ‘நாங்கள் அப்படிச் செய்யவே இல்லை’ என்று உபெர் மறுத்தாலும் சாதாரணமாக நாம் வைத்திருக்கும் ஒரு ஆப்பை எப்படியெல்லாம் நிறுவனங்கள் பயன்படுத்த முடியும் என்பதற்கு இதைவிடச் சிறந்த எடுத்துக்காட்டு தேவையில்லை.  

சிலர் ஸ்மார்ட் போன் வாங்கி விட்டோம் என்னும் ஆர்வக் கோளாறில் கூகுள் பிளே ஸ்டோரில் தட்டுப்படும் எல்லா ‘ஆப்பு’களையும் இன்ஸ்டால் செய்வார்கள். இது கட்டாயம் தவிர்க்கப் பட வேண்டிய ஒன்று. தேவையில்லாத செயலிகளை வைத்திருப்பதன் மூலம் உங்கள் செல்போனின் பேட்டரி சார்ஜ் சீக்கிரம் இறங்கி விடும் வாய்ப்பு அதிகம். எனவே, ஒரு செயலியை போனில் வைத்திருப்பதற்கு முன்னர், ஒரு முறைக்கு இரு முறை நன்றாக யோசித்து விட்டு நிறுவிக் கொள்ளுங்கள்.

‘சார்! உங்களுக்கு கிரெடிட் கார்டு வேணுமா?’, ‘மேடம், நீங்க ஏன் எங்க யுனிவர்சிட்டியில் எம்பிஏ பண்ணக்கூடாது?’ என்பன போன்ற தேவையற்ற அழைப்புகள் உங்களுக்கு வருகின்றனவா? கிட்டத்தட்ட எல்லா ‘ஆப்’புகளுமே உங்களுடைய தொடர்புகள், மெசேஜ்கள் ஆகியவற்றைப் படிக்கின்றன. எனவே, இந்தத் தேவையற்ற அழைப்புகளுக்கு, வேண்டா விருந்தாளியாக நீங்கள் வைத்திருக்கும் ஆப்புகள் கூடக் காரணமாக இருக்கலாம்.

  • பிளே ஸ்டோருக்கு மாற்றாக எஃப் டிராய்டு

நல்ல செயலிகள் மட்டும் தான் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இருக்கும் ஆப் ஸ்டோர் எஃப் டிராய்டு. கூகுள் பிளே ஸ்டோருக்குப் பதிலாக இந்த எஃப் டிராய்டு செயலியை நிறுவிக் கொள்ளலாம். கட்டற்ற மென்பொருள் எனப்படும் ஓப்பன் சோர்ஸ் செயலிகள் மட்டும் தான் இங்கு கிடைக்கும் என்பது தான் எஃப் டிராய்டின் தனிச்சிறப்பு. இங்கிருந்து நீங்கள் எடுத்துப் பயன்படுத்தும் ஒவ்வொரு செயலி பற்றிய விவரத்திலேயே அந்தச் செயலி உங்கள் தகவல்களைத் திரட்டுமா, விளம்பரங்கள் வெளியிடுமா என்பன போன்ற விவரங்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். அதைப் படித்துப் பார்த்து நீங்கள் எந்தெந்தச் செயலிகள் வேண்டும் என்று முடிவு செய்து கொள்ளலாம்.

இதே போல் கூடிய வரை கூகுள் குரோம் பிரவுசருக்குப் பதிலாக மொசில்லா பயர்பாக்ஸ் போன்ற கட்டற்ற இணையத்தை ஆதரிக்கும் பிரவுசர்களைப் பயன்படுத்தலாம். இதன் மூலமும் நம்முடைய தகவல்கள் திருடப்படுவதை ஓரளவு தடுக்க முடியும்.

  • ஆட்டோ டவுன்லோடு வேண்டவே வேண்டாம்!

‘நானும் அவனும் வாட்சப்ல பேசினோம்’, ‘எனக்கு வாட்சப்ல எக்கச்சக்க வீடியோ, போட்டோ எல்லாம் வருது’என்று சொல்வது பெருமைப்படும் விஷயமாக இருக்கலாம். ஒரே நண்பனின் போட்டோவை நாலு குருப்பில் அனுப்பி வைத்திருப்பார்கள்.  இந்தத் தேவையில்லாத வீடியோ, போட்டோவிற்கெல்லாம் நாம் எவ்வளவு கட்டி அழப் போகிறோம் என்று அடுத்த மாதம் பில் வந்தால் தான் தெரியும். எனவே, வாட்சப், டெலிகிராம் போன்ற செயலிகளை நிறுவிய உடன் மறக்காமல் செய்ய வேண்டியது ‘மீடியா ஆட்டோ டவுன்லோடு’ ஆப்சனைச் செயலிழக்கச் செய்வது தான்! இப்படிச் செய்வதன் மூலம் உங்கள் போனின் மெமரி மிச்சமாவதுடன் பில் கட்ட வேண்டிய தொகையும் மிச்சமாகும்.

இதே போல் தேவையற்ற குருப்புகளில் சேர்வதைத் தவிர்ப்பது, குருப் மெசேஜ்களுக்கு அழைப்பு ஒலி இல்லாமல் வைப்பது ஆகியனவும் உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்காமல் இருக்க உதவும்.

(கட்டுரை புதிய வாழ்வியல் மலர் 2016 ஜூன் 1-15 இதழில் வெளியானது) 

- முத்துக்குட்டி

Pin It