Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒரு தலித் பெண் 2002ல் போலீஸ் காவலின் போது மரணமடைந்ததை ஒட்டிய சூழல், குற்றவாளிகள் அரசுப் பணியில் உள்ளவர்களாக இருக்கும் போது, நீதியை வென்றெடுப்பதில் உள்ள் கடும் சவால்களை நினைவூட்டுவதாகவே உள்ளது. 

ஒரு தசாப்த ஆண்டுகளுக்குப் பின் நீதி வழங்கப் பட்ட வழக்கு இது. கடந்த மாதம், ராமநாதபுரம் அமர்வு  நீதிமன்றம், காவல்துறையைச் சேர்ந்த 8 பேருக்கு,  தமிழ் நாட்டின் பரமக்குடி  காவல் நிலையத்தில் 2002ஆம் ஆண்டில்   கருப்பி என்ற ஏழை தலித் பெண்ணை  கொட்டடியில் கொலை செய்ததற்காக 10 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனையை வழங்கித் தீர்ப்பளித்தது. இது  வரலாற்று முக்கியம் வாய்ந்த தீர்ப்புரையாகும். படுகொலையானவர் அருந்ததியினர் எனப்படும், மிகவும் ஒடுக்கப் பட்ட பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் இந்தத் தீர்ப்புரை மேலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகின்றது.

பலியான கருப்பி, வயது 48, ஒரு வீட்டு வேலை செய்யம் பணிப்பெண். அவர் பணி செய்து வந்த வீட்டாரின், திருடுபோன  நகையைக் கருப்பி களவாடி விட்டதாகக் குற்றஞ்சாட்டப் பட்டார். அதற்காக, கருப்பி போலீஸ் கொட்டடியில் 6 நாட்கள் சித்திரவதை  செய்யப் பட்டு விசாரிக்கப் பட்டார். அவரது உடல், 2002 டிசம்பர் முதல் நாளில், காவல் நிலையத்தின் பின் புறமிருந்த ஒரு  டிரான்ஸ்மிஷன் டவரில் தொங்கிக் கொண்டிருப்பது தெரிய வந்தது. காவல் துறையினர், இதனை ஒரு தற்கொலை  என்றும், இது  இது காவல் நிலையத்தில் நடக்கவில்லை என்றும் வழக்கைப்   பதிவு செய்தனர்;  

மனித உரிமைகளுக்காகப் போராடிவரும் பீப்பிள்ஸ் வாட்ச் என்ற நிறுவனம், இது காவல் மரணம்  என்றும்  இதில்  சாட்சிகள் அச்சுறுத்தப் படுவதாகவும், தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் தலைவியாக இருந்த என்னிடம் மனுச்  செய்தது.   நான், உடனடியாக, கருப்பியின் குடும்பத்தாரைச் சந்திக்க வேண்டும் என்று  ராமநாதபுர மாவட்ட ஆட்சியரிடம்
தெரிவித்தேன். நான், காவல் நிலையத்திற்குச் சென்று ஆய்வு செய்தேன். அந்தச் சிறைக்  கொட்டடியிலிருந்து கருப்பி ஒருபோதும்,  தப்பித்துச் சென்று   தனக்குத் தானே தூக்கிட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டிருக்க முடியாது என்று எனக்கு  உறுதிபடத் தெரிந்தது. பின், அச்சுறுத்தலுக்கு உட்பட்டதாகச் சொல்லப் பட்ட கருப்பியின்  குடும்பத்தாரைச் சந்தித்தேன்.

எல்லோருமே "அதிகாரப்பூர்வமாக" முன்வைக்கப் பட்ட  அதே கதையைத் தான் சொன்னார்கள் - திருடியது தெரிய வந்ததால்,  கருப்பி அவமானத்திற்கும் பழிக்கும்  அஞ்சி, அவராகவே தூக்கிலிட்டுக் கொண்டார் - இதில் பாவம் போலீஸ்கார்களுக்கு  ஒன்றுமே தெரியாது - என்ற ரீதியிலான கதை அது. என்னை நம்பி அவர்கள் மனப்பூர்வமாகச் சொல்லலாம் என்று நான் கொடுத்த  உறுதிமொழிக்குப் பலனில்லை.  வழக்கமாகத் தங்களை வாட்டி வதைப்பவர்களிடமிருந்து தங்களின்  உயிருக்கு உடனடியாக ஏற்படவிருக்கும் ஆபத்தைக் கவனத்தில் கொண்டால், நான் சொன்ன உறுதி மொழி வலுவ‌ற்றதாகவே  அவர்களுக்க்த் தோன்றியிருக்க வேண்டும்.  உண்மையைக் கண்டறிவதில் இருந்த  எல்லா நம்பிக்கையும் எனக்கு அற்றுப் போனது.  கிளம்பி விடவே  தீர்மானித்திருந்தேன்.

திருப்பு முனை :

அப்புறம்தான் அந்தத்  திருப்புமுனை வந்தது. சாட்சி சொல்ல வந்தவர்களில் கடைசி ஆள் கிறிஸ்து தாள், கருப்பியின் மதினியின் கணவர். இன்னுமொரு விசாரணை இன்னும் சில நிமிடங்களில் முடிவுக்கு வரப்போகின்றது என்ற  விரக்தியில் நான் இருக்க, விசாரணை அடுத்த 2 மணித் தியாலங்களுக்குத் தொடர்ந்தது.  இது வரை சொல்லப் பட்ட  பின்னப் பட்ட  மூடி மறைத்துச் சொல்லப் பட்ட சாட்சியங்களின் ரகசிய முகத்திரையைக் கிழித்து அந்த இழிந்த கதையைச்  சொல்வதாக அமைந்தது அந்த சாட்சியம். 

கிறிஸ்து தாள் என் காலில் விழுந்தார். நான் அவர் சொல்வதைக் கேட்டு அதிர்ந்து போனேன் : "அம்மா, தயவு செய்து என்னையும், என் குழந்தைகளையும் காப்பாற்றுங்கள். நாங்கள் மாபெரும் அபாயத்தில் இருக்கின்றோம், உங்களிடம் நான் ஒரு உண்மையைச் சொல்லாவிட்டால், என் நெஞ்சு வேகாதம்மா", என்றார்.

நான் எனது முழு ஆதரவையும் அளிப்பதாக உறுதி சொன்னபின், அவர், நம்பிக்கையுடன் விவரங்களை விவரிக்கத்  தொடங்கினார்: நவம்பர் 26 2002 இரவு. கிறிஸ்து தாஸ், அவரது மனைவி ஆறுமுகம், அவர்களது மகள், எந்தவிதக் காரணமும் கூறப்படாமல், பரமக்குடி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப் பட்டனர். அங்கே அவர்கள் கருப்பி ஒரு அறையில் விலங்கிடப் பட்டு  இருந்ததைக் கண்டனர். நகை திருட்டிற்காக, அவர் கைது செய்யப் பட்டிருப்பதாக அவர்களுக்குச் சொல்லப் பட்டது.

கிறிஸ்துதாஸ், உள்ளாடை தவிர்த்த பிற ஆடைகள் களையப் பட்டு, கை விலங்கிடப்பட்டு, அவரது கால்கள், ஒரு மேஜையுடன்  சேர்த்து சங்கிலியால் இணைக்கப் பட்டது. அடுத்த நாள் காலையிலிருது, காவலர்கள், அவரைத் தொடர்ச்சியாகத் தாக்கி  சித்திரவதை செய்தனர். பின்னர் கிறிஸ்து தாசுக்குத் தெரியவந்தது என்ன வென்றால், அவரும், அவர் மனைவியும், மகளும், கருப்பியின் மருமகனும், கருப்பியை உண்மையைச் சொல்லுமாறு நிர்ப்பந்திப்பதற்காகவே அவர்கள் எல்லோரும் அங்கு வரவழைக்கப் பட்டிருக்கின்றார்கள் என்பது.

நான்கு காவலர்கள், மூன்று நாட்கள் தொடர்ந்து கருப்பியைக் கடுமையாகச் சித்திரவதை செய்ததைக் காண நேர்ந்தது  கிறிஸ்து தாசுக்கு.  கருப்பி, லத்தியால் தாக்கப் பட்டார். நகக் கண்களில் ஊசியால் குத்தப் பட்டு சித்திரவதை செய்யப்பட்டார்.  அவர் அப்பாவி என்று கதறியது எவர் காதிலும் விழவில்லை. கொடுமைப்படுத்தாதீர்கள் என்று கிறிஸ்து தாஸ் இடை மறித்த  போதெல்லாம், அவருக்கும் அடியும் உதையும் விழுந்தது.  மூன்று நாள் கொடுமைக்குப் பின் கிறிஸ்து தாஸ் குடும்பம்  விடுவிக்கப் பட்டது.

டிசம்பர் முதல் நாளன்று, கிறிஸ்து தாசும் அவர் மனைவியும் ஒரு மீன் வியாபாரி மூலமாக, காவல் நிலையத்திற்குப் பின்  ஒரு பெண்ணின் உடல் கிடந்ததையும், பின் அது மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப் பட்டிருந்ததையும் தெரிந்து  கொண்டனர். மருத்துவமனையில், அவர்கள் பயந்த படியே நடந்தது. அது கருப்பியின் உடல் தான். கிறிஸ்து தாஸ் மேலும் சொல்கையில், எனது விசாரணை நடக்கும் வரையிலும், அவரது குடும்பத்தினரை அழித்துவிடப்போவதாக, மிரட்டப் பட்டுக் கொண்டே இருந்ததாகக் குறிப்பிட்டார்.

அறிக்கைகள் :

இந்தக் கொடூரமான  கொட்டடி மரணத்தை அம்பலப் படுத்தியே தீருவது என்ற கங்கணத்துடன் நான் சென்னை திரும்பினேன்.  பிரேதப்  பரிசோதனை அறிக்கையின் நகல்கள் எனக்குக் கிடைத்தது. முதல் தகவல் அறிக்கை, ஆய்வறிக்கையும் ராமநாதபுர  ஆட்சியரால், எனக்கு அனுப்பி வைக்கப் பட்டிருந்தது. ஒரு காவல் ஆய்வாளர் உள்பட  ஐந்து காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப் பட்டிருப்பதாகவும், துணை ஆட்சியரால் ஒரு விசாரணை நடத்தப் பட்டிருப்பதாகவும், மாவட்ட ஆட்சியர்  தெரிவித்தார்.

நான் முதலாவது மற்றும் முன்றாவது அறிக்கைகளை சென்னை அரசு மருத்துவமனையின், தடயவியல் துறைத் தலைவருக்கு அனுப்பினேன் :  அவரது பதில் : வழக்கில் தொடர்புடையவர்,   Asphyxia due to acute ante mortem (AM) ல் இறந்திருக்கிறார். பல்வேறு நசுக்கல்களுக்குப்  பின் தொங்கவிடப் பட்டிருக்கிறார். நசுக்கல்கள் ஒரு நாளிலிருந்து மூன்று நாட்களுக்குள் நிக்ழந்திருக்கும். அநேகமாக காயங்கள் இடப்புறத்திலும், வலப் புறத்திலும் நபர்கள் ஏறி நின்றதால் ஏற்பட்டிருக்க வேண்டும்.

கருத்து :

மருத்துவ நிபுணரின் அந்த அறிக்கையைச் சாமானிய மொழியில் சொல்வதென்றால், "பலியானவர், மரணத்திற்கு ஒன்று முதல் மூன்று நாட்கள் வலுவான தாக்குதல்களுக்கு உள்ளாகியிருக்க வேண்டும். வலது முன் தலையில் நசுக்குதலால் ஏற்பட்ட காயம், கடும் தாக்குதலால் ஏற்பட்டு அதன் பின்னே தொங்க விடப்பட்டிருக்க வேண்டும்.

இத்தனை தகவல் வலுவுடன், நான் உள்துறைச் செயலருக்கு,  குற்றவியல் பிரிவின் குற்றப் புலனாய்வு (சிபி சிஐடி) அல்லது  மத்திய புலனாய்வுக் கழகத்தின் (சி பி ஐ) விசாரணை நடத்தக் கோரி கடிதம் எழுதி, தலைமைச் செயலருக்கு நகலிட்டு,   அனுப்பினேன். இந்தக்  கடிதமும், இதனைத் தொடர்ந்த நினைவூட்டல்களும், நீண்ட மவுனத்தையே பதிலாகப் பெற்றன.

நான் மகளிர் ஆணையத் தலைவியாக இருந்த போது , அந்த ஆணையம், ஒரு அரசியல் சாசன பூர்வமான அமைப்பாக  இருக்கவில்லை.  சாட்சியங்களை அழைக்கும் அதிகாரமோ, உறுதி மொழி ஏற்று சாட்சியமளிக்கச் செய்யும் அதிகாரமோ  பெற்றிருக்க வில்லை.  தேசிய மகளிர் ஆணையத் தலைவி பூர்ணிமா அத்வானியைத் தொடர்பு கொண்டு,  தேசிய மகளிர் ஆணையமும், மாநில மகளிர் ஆனையமுமாகச் சேர்ந்து, ஒரு கூட்டு பொது  விசாரணையை மதுரையில்  2003 அக்டோபர் 28 அன்று  நடத்தினோம்.

கருப்பி குடும்பத்ததினர், பரமக்குடியின் துணை ஆட்சியர், நிகழ்வு நடந்த போது பொறுப்பில் இருந்த காவல் அதிகாரிகள்,  உள்ளிட்ட ஏராளமான சாட்சியங்கள் சாட்சி சொன்னார்கள். கருப்பி ஆறு நாட்கள் தொடர்ந்து காவல் நிலையத்தில் வைக்கப்   பட்டு சித்திரவதை செய்யப் பட்டிருக்கின்றார் என்பதைக் கண்டறிந்தோம். பிரேத பரிசோதனை அறிக்கை, அவரது உடலில்,  இறப்பதற்கு  முன்பு ஏற்பட்ட பல காயங்களைச் சுட்டிக் காட்டியது. இதனால், போலீஸ்காரர்கள் சொன்ன தற்கொலைக் கதை நம்ப  முடியாததாகியது.  கருப்பியின் குடும்பத்திற்கு ரூ 2 லட்சம் இழப்பீடாகவும், கிறிஸ்து தாசுவுக்கும், ஆறுமுகத்திற்கும்  தலா ஒரு லட்சம்,  அவர்களைச் சித்திரவதை செய்ததற்காகவும், இழப்பீடாக வழங்கச் சொல்லி பரிந்துரைத்தோம். நான் மகளிர் ஆணைய‌த்  தலைவி பொறுப்பை  நிறைவு செய்த மார்ச் 2005 வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.

2006ஆம் ஆண்டில்,  சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், மகளிர் ஆணையத்தின் சட்ட ஆலோசகருமான, சுதா  ராமலிங்கம்,   பீப்பிள்ஸ் வாட்சைச் சேர்ந்த ஹென்றி திபேனின் சார்பில், குற்றவியல் ஒரிஜினல் மனு ஒன்றின் மூலம், வழக்கை  பரமக்குடி காவல் ஆய்வாளரிடமிருந்து, சி பி ஐக்கு மாற்றக் கோரினார்.   இரண்டு ஆன்டுகளுக்குப் பின், செப்டம்பரில், நீதியரசர் கே என் பாஷா, சி பி சி ஐ டி, இந்த வழக்கை விரைந்து விசாரிக்க  ஆணையிட்டார்:  "பலிகடாவாக்கப் பட்டவர், சொல்லொணாத் துயரங்களுக்கும், சித்திரவதைக்கும் ஆளாக்கப்  பட்டிருக்கின்றார் என்பதும், காவல் துறையினரின் அத்துமீறிய வன்முறை பிரயோகிக்கப்பட்டிருக்கின்றது என்பதும் தெள்ளத்  தெளிவாகத் தெரிகின்றது. இவ்வளவு அபரிதமான ஆதாரங்கள் பதிவு செய்யப் பட்டிருப்பதாலும், அதிலும் குறிப்பாக,  வழக்கில் குற்றஞ் சாட்டப் பட்டவர்கள் காவல் துறையைச் சேர்ந்த அதிகாரிகளாக இருப்பதாலும், இந்த நீதிமன்றம்,   நியாயமான சுதந்திரமான விசாரணை அமைப்பின் மூலம் இந்த வழக்கு விசாரிக்கப் படவேண்டியது தேவை என தீர்மானமாகக் கருதுகிறது".

அடிப்படை உரிமைகள் :

கருப்பியின் வழக்கு விசாரணை இறுதியாக பிப்ரவரி 14 2013 அன்று முடிவுக்கு வந்தது. நீதியரசர் டபிள்யூ. சதாசிவம்,  குற்றஞ்சாட்டப் பட்ட எட்டு காவலர்களில் ஐந்து பேருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டணை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.  பிற இரு  காவலர்களுக்குத் தலா, ஏழு ஆண்டுகளும், மூன்று ஆன்டுகளும் சிறைத் தண்டனை வழங்கியுள்ளார்.  அப்போதைய ஆய்வாளர் ஷாகுல் ஹமீதுவுக்கு ரூ ஒரு லட்சம் தண்டமும் விதிக்கப் பட்டிருக்கின்றது.  "கொட்டடி மரணத்தை மூடி மறைக்க, (கருப்பியின்) உடல் சிறையிலிருந்து அகற்றப் பட்டு இது ஒரு தற்கொலை என்னும்  தோற்றம் ஏற்படும் வகையில்  வி எச் எப் கோபுரத்தில்  தொங்க விடப் பட்டுள்ளதாக", தெரிவிக்கப் பட்டுள்ளது.

நான் மாண்புமிகு நீதியரசர் கே என் பாஷா, உச்சநீதிமன்றத்தில் நடந்த   டி கே பாசு  எதிர் மேற்கு வங்க அரசு என்ற வழக்கிலிருந்து மேற்கோள் காட்டிய  ஒரு மேற்கோளுடன் இதை நிறைவு செய்கின்றேன்:  "கொட்டடி மரணங்கள், சட்டத்தின் ஆட்சி நடைபெறும் ஒரு நாகரீக சமூகத்தின் மிகக் கொடிய குற்றமாகவே  கருதப் பட வேண்டும்.  அரசின் அங்கமானவர்களே, சட்டத்தை மீறுபவர்களானால், அது சட்ட அவமதிப்பை  ஏற்படுத்துவதாகவே அமையும்; அது சட்டமற்ற ஒழுங்கீனத்திற்கே இட்டுச் சென்று அரசின்மைக்கே வழி வகுக்கும். ஒரு   காவலர் கைது செய்ததால், ஒரு  குடிமகன் அடிப்படை உரிமை மறுக்கப் பட்டு உயிரிழப்பதா  ?  ..... இந்தக் கேள்விகள்,  மனித உரிமைகள் நீதிபரிபாலனத்தின் மூலத்தையே உலுக்குபவையாக உள்ளன".

கட்டுரையின் ஆங்கில மூலம் தி இந்து நாளிதழின் ஆசிரியவுரைப் பகுதியில் 28 மார்ச் 2013 அன்று வெளியானது.

[கட்டுரையாளர் வே வசந்திதேவி, தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் தலைவியாகவும், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின்  துணைவேந்தராகவும் இயங்கியவர்]. 

மொழியாக்கம் : அருள்செல்வன் செந்திவேல்

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

0 #1 p ilango subramanian 2013-04-01 01:19
இக்கட்டுரையின் ஆங்கில மூலத்தைப் படித்த போதே இதைத் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்று நினைத்தேன். எனக்கு முன்பே அதைச் செய்து விட்ட நண்பருக்கு நன்றி.
Report to administrator
0 #2 natarajan 2013-04-10 16:29
Similar atrocities are continuing in other places also.Human rights awareness and watch are the needs of the hour.
Report to administrator

Add comment


Security code
Refresh