Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

தொடர்புடைய படைப்புகள்

தலித் முரசு

 

தலித்துகளுக்கு எதிரான சாதிய பாகுபாடுகள் இன்னும் குறைந்து விடவில்லை. ஒரு தலித் சிறுவனாக இருந்து, உச்ச நீதிமன்றத்தின் தலைமைப் பதவியை அடைந்திருப்பதற்கான நெடும் பயணம், அவ்வளவு எளிதானது அல்ல. இன்றைக்கும்கூட என்னைப் போன்ற ஒரு தலித் சிறுவன் இத்தகையதொரு பதவியை அடைய வேண்டும் என்றால், அது மிகவும் கடினமானதாகவே இருக்கும். சாதி அடிப்படையிலான பாகுபாடுகள் அதிகரித்தே வருகின்றன. மேலோட்டமாகப் பார்த்தால் அது புலப்படாது; ஏனெனில், அவை இன்று மிகவும் நுட்பமான வடிவத்திலேயே வெளிப்படுகின்றன.

-கே.ஜி. பாலகிருஷ்ணன் , (உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, "டைம்ஸ் ஆப் இந்தியா'வுக்கு அளித்துள்ள பேட்டியில்)

மத்திய அரசின் கீழ் இயங்கும் மனிதவள மேம்பாட்டுத் துறையில் இடஒதுக்கீடு முறை இருப்பினும், அவை நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. இத்துறையின் கீழ் இயங்கும் மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களான அய்.அய்.டி., என்.அய்.டி., அய்.அய்.எம்., என்.சி.இ.ஆர்.டி. போன்றவற்றில் தலித் மற்றும் பழங்குடியினருக்கான உரிய பிரதிநிதித்துவம் (22.5%) மறுக்கப்படுகிறது. டிசம்பர் 2009இல் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட புள்ளிவிவரத்தின்படி, தலித் மற்றும் பழங்குடியினருக்கான பிரதிநிதித்துவம் : உதவிப் பேராசிரியர் 8.86% இணை பேராசிரியர் 2.13% பேராசிரியர் 1.04% ஒட்டுமொத்த ஆசிரியர் பணியிடங்கள் 5.06%

"நம்பர் ஒன்' கிரிமினல் துறை

மனித உரிமை பற்றி வாய் கிழியப் பேசப்படும் இந்தக் காலத்தில், திருட்டுப் பட்டம் சுமத்தப்பட்ட ஒருவரை (சென்னை தியாகராயர் நகரில் வசிக்கும் அருண்குமார்) தமிழக காவல் துறை எப்படி துன்புறுத்தி இருக்கிறது என்பதை அவரே விவரிக்கிறார் :தி. நகர் காவல் நிலையத்தில் சப்இன்ஸ்பெக்டர்கள் "நகை திருடினாயா?' என்று கேட்டனர். "இல்லை' என்றேன். உடனே என்னை நிர்வாணமாக்கி ஒரு மணி நேரம் நிற்க வைத்தனர். திருட்டை ஒப்புக் கொள்ளச் சொல்லி, என் வீட்டுக்கு அழைத்துச் சென்று, நான்கு மாத கர்ப்பிணியாக இருந்த என் மனைவி ருக்மணியையும் ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தனர். அங்கே இன்ஸ்பெக்டர் அழகேசன், சில எஸ்.அய்.கள் மற்றும் சில போலிஸ்காரர்கள் என் மனைவியை ஓடவிட்டு, மூங்கில் கொம்பால் அடித்த கொடுமையை சாகும்வரை என்னால் மறக்க முடியாது. போலிஸ் தாக்கியதில் என் மனைவிக்கு கருக்கலைப்பு ஏற்பட்டது.அதன் பிறகு என் இரண்டு கைகளையும் மேலே தூக்கச் செய்து, ஒவ்வொரு விரலிலும் நைலான் கயிறு கட்டி அதில் செங்கல்லை கட்டித் தொங்க விட்டனர். தோள் பட்டையில் லத்தியை வைத்துக் கட்டி என்னைத் துவைத்தனர். நான் மரண வேதனையை அனுபவித்தேன்.

என் கையை ஜீப்பின் பின்னால் கட்டி, கண்ணம்மாபேட்டை சுடுகாட்டுக்குள் இரண்டு முறை சுற்றி வந்தனர். உடல் முழுவதும் ஏற்பட்ட ரத்தக் காயங்களால் ஒரு கட்டத்தில் நான் உணர்விழந்தேன். என் கால் மூட்டுகளுக்கு கீழ்ப் பகுதியில் செங்கற்களை வைத்து காலின் மேல் பகுதியில் செங்கற்களால் அடித்தனர். வலியால் துடித்தேன். இரண்டு நாட்களில் எனக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. சிறுநீரில் ரத்தம் வந்தது. அதன் பிறகு மருத்துவமனையில் நான் சேர்க்கப்பட்டு, 11 நாட்கள் எனக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டது. அழுகிக் கொண்டிருந்த என் கைவிரல்களுக்கு சிகிச்சை தரப்படவில்லை. அதன் பிறகு ஸ்டான்லி மருத்துவமனையில் ஒன்பது விரல்களும் அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டன. என்னால் எந்த வேலையும் செய்ய முடியாது. கடந்த மூன்று ஆண்டுகளாக போலிசுக்கு பயந்து அமைதியாக இருந்த நான், தற்பொழுது "மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின்' தொடர்பு கிடைத்து, எனக்கு நடந்த அநீதிகளுக்கு எதிராகப் போராடி வருகிறேன்'' ("குமுதம் ரிப்போர்ட்டர்', 11.2.2010). தமிழ் நாடு போலிஸ்தான் உலகிலேயே சிறந்தது என்று சில அரசியல் வாதிகளும், காவல் அதிகாரிகளும் பீற்றிக் கொள்வது எந்த அளவுக்கு வடிகட்டின பொய் என்பதற்கு இது ஒரு சிறிய சான்று. இதுபோன்ற எண்ணற்ற கொடுமைகள் உறைந்து கிடக்கின்றன.

ஜாதியை நாள்தோறும் புனிதப்படுத்தும் இந்து கோயில்கள்

மதுரை ஒத்தக்கடை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதி உத்தங்குடி. இங்குள்ள அய்யப்பன் கோயில் தேர் பவனியின்போது, அலங்காரக் குடையை தொட்டதற்காக தலித் இளைஞர் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார். மேலும் தலித் வகுப்பைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியை (லட்சுமி) செருப்பால் அடித்து, "உனக்குப் பிறக்கப் போற குழந்தையும் நாளைக்கு எங்களுக்கு எதிராகப் பேசும்' என்று திட்டிக் கொண்டே அவரை சாக்கடையில் தள்ளி செருப்புக் காலால் மிதித்தனர் ("குமுதம் ரிப்போர்ட்டர்', 10.1.2010) சேலம் மாவட்டத்தில் உள்ள தொளசம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற சிறீ அபூர்வமாயா பெருமாள் கோயில் திருவிழாவில் பங்கேற்க தலித் மக்களுக்கு உரிமை மறுக்கப்பட்டுள்ளது. தாங்கள் அனுமதிக்கப்படாததை தட்டிக் கேட்க, அங்கு நிறுத்தப்பட்டிருந்த கோயில் பகுதிக்குள் தலித்துகள் நுழைந்தனர். இந்நிலையில் அங்கிருந்த தேர் எரிக்கப்பட்டுள்ளது. இதை தலித்துகள்தான் செய்திருப்பார்கள் என்று கருதிய சாதி இந்துக்கள், சேரிக்குள் நுழைந்து 13 தலித் வீடுகளைத் தாக்கினர் ("தி இந்து', 26.1.2010) விருதுநகர் மாவட்டத்தில் உள்ள உளுத்திமடை கிராமத்தில் கோயிலுக்குள் நுழைய முற்பட்ட ஏழு தலித்துகள் சாதி இந்துக்களால் கடுமையாகத் தாக்கப்பட்டனர். இதில் 55 வயது தலித் பெண்மணியும் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். விடுதலைச் சிறுத்தைகளின் ஒன்றியச் செயலாளர் முத்துப்பாண்டி, சனவரி 15 அன்று முனியசாமி கோயிலுக்குள் சென்றிருக்கிறார். அங்கிருந்த பூசாரி அவர்களை வழிமறித்திருக்கிறார். இதை மீறிய தலித்துகள் அரிவாள்களாலும் உருட்டுக்கட்டையாலும் தாக்கப்பட்டனர் ("தி இந்து', 19.1.2010) சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி காவல் எல்லைக்கு உட்பட்ட கிராமம் வேம்பத்தூர். இந்த கிராமத்தைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் (28), தலித் வகுப்பை சேர்ந்தவர். சாதி இந்து ஒருவரின் சாவுக்கு கொம்பு ஊத வர மறுத்ததால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, இந்த தலித் இளைஞர் கொலை செய்யப்பட்டிருக்கிறார் ("குமுதம் ரிப்போர்ட்டர்', 11.2.2010).

கோயிலில் நுழைவது தொடர்பாகவே பெரும்பாலான வன்கொடுமைகள் நடத்தப்படுகின்றன. ஆனால், மார்க்சியவாதிகள் கோயிலில் நுழைவதையே புரட்சிகர செயல்திட்டமாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு தலித் கோயிலில் நுழைவதால் எந்த வகையிலும் பண்பு மாற்றம் ஏற்படப் போவதில்லை. மாறாக, அவன் தன்னை ஓர் இந்து அடிமையாகவே வாழ்நாள் முழுவதும் கருதிக் கொள்வதற்குதான் இச்செயல்திட்டம் பயன்படும். இந்துவாக இருக்கக் கூடாது என்பது மார்க்சிஸ்டுகளின் கொள்கை அல்ல; அது அம்பேத்கரிஸ்டுகளின் கொள்கை. ஓர் இந்து, நல்ல இந்துவாக இருக்க வேண்டும் என்பது மார்க்சிஸ்டுகளின் ஆசை. ஆனால், "நல்ல' இந்து என்றோ, "கெட்ட' இந்து என்றோ ஒருவன் இருக்க முடியாது. எப்படி ஒருவன் "நல்ல முதலாளியாக' இருக்க முடியாதோ, அதே போல "நல்ல இந்து'வாகவும் ஒருவன் இருக்க முடியாது என்பதை என்றைக்குதான் மார்க்சிஸ்டுகள் புரிந்து கொள்வார்களோ? 

இழிவைத் தேடிக் கொள்ளாதே!

என்னை "இந்து' என்று அழைப்பது என்னை இழிவுபடுத்துவதாக இருக்கிறது என்று கூறுகிறார், ஓம்பிரகாஷ் வால்மீகி என்ற புகழ்பெற்ற தலித் எழுத்தாளர். ஜெய்பூரில் நடைபெற்ற இலக்கிய விழாவில் இந்திய வாழ்க்கை முறையில் ஒவ்வொரு நிலையிலும் சாதி கடைப்பிடிக்கப்படுகிறது என்று அவர் கூறியிருக்கிறார். "ஜுதான்' என்ற தன் வரலாறை எழுதியிருக்கும் வால்மீகி, “ஒரு சாதியவாதி தலித் இலக்கியத்தை எழுத முடியாது. அவர் அதை எழுதுவதற்கு முன்னால் தன்னை சாதியற்றவராக்கிக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அவரால் சரியான பார்வையை அளிக்க முடியும். எனக்கு கடவுள் தேவையில்லை. ஏனெனில் "அவர்' ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் இல்லை. கல்விக் கடவுளான சரஸ்வதியை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில், நம் மக்களுக்கு கல்வி மறுக்கப்படும்போது அவள் நம் பக்கம் இல்லை. புத்தரும் அம்பேத்கரும்தான் நம் பக்கம் இருந்தார்கள்'' என்று கூறியுள்ளார்.

1.1.1818 வரலாறு மறைத்து விட்ட வெற்றி

"பவுத்தத்திற்கும் பார்ப்பனியத்திற்கும் இடையில் நடைபெற்ற போராட்டமே இந்தியாவின் ஒட்டுமொத்த வரலாறு' என்றார் அம்பேத்கர். பார்ப்பனியத்திற்கு எதிரான போரில், 202 ஆண்டுகளுக்கு முன்பு குறிப்பிடத்தகுந்த வெற்றி ஈட்டப்பட்ட நாள் சனவரி 1. மிகுந்த வியப்புக்குரிய இந்நாள் குறித்த வரலாற்றுத் தகவல்களை பர்தீப் சிங் ஆட்ரி பதிவு செய்திருக்கிறார் : “1.1.1818 அன்று 500 பேர் மட்டுமே கொண்ட தீண்டத்தகாத போர்வீரர்கள் (மகர் ரெஜிமன்ட்) எண்ணிக்கையில் பலம் பொருந்திய 30 ஆயிரம் போர்வீரர்கள் அடங்கிய பேஷ்வா ராணுவத்தினரை முறியடித்தனர். மகாராட்டிர மாநிலத்தில் உள்ள பூனாவில் பார்ப்பன பேஷ்வா ஆட்சியாளர்கள் மிகக் கொடூரமான ஆட்சியை நடத்தி வந்தனர். இதை எதிர்த்து பிரிட்டிஷ் ராணுவத்தில் இருந்த மகர் ரெஜிமன்ட் வீரர்கள், ஒரே நாளில் பேஷ்வாக்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தனர். இப்போருக்கு இணையான ஒன்றை வரலாற்றில் குறிப்பிட முடியாது. தீண்டத்தகாத போர்வீரர்களால் நடத்தப்பட்ட இப்போர், சுயமரியாதைக்கும் மனித மாண்புக்குமானது; மநுஸ்மிருதியின் மேலாதிக்கத்திற்கு எதிரானது! பார்ப்பன ஆட்சியின் கீழிருந்த மகாராட்டிராவில் சாதி அடிப்படையிலான சமூகப் பாகுபாடுகளும் ஒடுக்குமுறைகளும் கடுமையாக இருந்தன. இவர்களின் ஆட்சியில்தான் தீண்டத்தகாத மக்கள் தங்கள் இடுப்பில் துடைப்பத்தைக் கட்டிக் கொண்டு செல்ல வேண்டும். இம்மக்களுக்கு கல்வி முற்றாக மறுக்கப்பட்டிருந்தது. கல்வி கற்க முனையும் தீண்டத்தகாத மக்கள் கொல்லப்பட்டனர். பீம கோரெகான் போர்தான் இந்த அநீதிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இப்போர் கோரெகானில் உள்ள பீமா ஆற்றங்கரையின் ஓரத்தில் நடைபெற்றது. பேஷ்வா ராணுவத்தினர் 20 ஆயிரம் குதிரைப் படையினர் மற்றும் 8 ஆயிரம் காலாட் படையினருடன் தயாராக இருந்தனர். 12 மணி நேரத்தில் தீண்டத்தகாத போர் வீரர்கள் அவர்களை வெற்றி கொண்டனர். 1851 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு இப்போரில் மடிந்த 22 மகர் வீரர்களின் நினைவாக ஒரு தூணை எழுப்பியது. அம்பேத்கர் ஒவ்வொரு ஆண்டும் கோரெகானுக்குச் சென்று இந்நினைவுத் தூணுக்கு வீரவணக்கம் செலுத்துவார். 1.1.1927 அன்று இவ்விடத்தில் மாபெரும் பொதுக்கூட்டத்தை அவர் கூட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.''

-கே.ஜி. பாலகிருஷ்ணன்

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

0 #1 pandidurai 2016-08-10 20:21
unmaiyakavae mahizchiyaga irukirathu nadikar rajini soliyathu pol nam varalarru pinnani enavenru therinthu kollamalae porattam seiya murpadikirom thiru K.G.Balakrishna n avarkalukku nanri thamathamaka padithu therinthu konden oru pakkam thukkamaga irukirathu ithu ponra kodumaikal nadakka vidamal nam porattam needikkum ungal minnanjal tharuvikirkala tholarae dalit murasu parri therinthu kolla aaval
Report to administrator

Add comment


Security code
Refresh