அன்பார்ந்த மாணவச் செல்வங்களே,

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதன்மைத்துவம் வாய்ந்ததொரு வரலாற்றுச் சிறப்புமிக்கப் போராட்டத்தை நடத்தி வரும் அன்பார்ந்த மாணவர்களே, வணக்கம்!

உலகத் தமிழ் அமைப்பானது ஐக்கிய அமெரிக்காவில் ஒருங்கிணைக்கப்பட்ட ஓர் இலாப நோக்கற்ற அமைப்பாகும். 1991 ஆம் ஆண்டு உலகத் தமிழ் அமைப்பு தொடங்கப்பட்ட காலந்தொட்டு, தமிழர் எங்கு வாழ்ந்தாலும் அவர்களின் நியாயமான உரிமைகளுக்காக இயன்றவரை குரல் கொடுத்து வருகின்றது.

தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை அனைத்து ஈழத் தமிழர்களிடமும் நடத்தவும், சுதந்திரமானதொரு பன்னாட்டுப் புலனாய்வை மேற்கொள்ளவும், ஐ.நா. பாதுகாப்பு அவையில் இவற்றைத் தீர்மானமாகக் கொண்டுவரவும் வலியுறுத்தித் தமிழகச் சட்டமன்றத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது மாணவக் கண்மணிகளின் ஒப்பற்றப் போராட்டத்திற்குக் கிடைத்த குறுகியகால வெற்றியாகும். அதேபோன்று சிங்கள மட்டைபந்து ஆட்டக்காரர்கள் யாரும் தமிழ் நாட்டில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொள்ள இயலாத சூழலை உருவாக்கியதும் மாணவர்களின் தன்னலமற்றப் போராட்டத்தின் விளைவே. மாணவர்கள் அனைவரும் ஆற்றிவரும் ஒப்பற்ற ஈகத்திற்கும், உறுதியானப் போராட்டத்திற்கும் உலகத் தமிழ் அமைப்பும், கீழே கையொப்பமிட்டுள்ள ஏனைய அமைப்புகளும் தமது உளமார்ந்த பாராட்டுகளைத்  தெரிவித்துக்கொள்கின்றன. மேன்மேலும் எண்ணிலடங்கா வெற்றிகளை இப்போராட்டம் நிகழ்த்திக்காட்டும். அது தமிழீழம் விடுதலை காணும் வரை உறுதியோடுத் தொடர வாழ்த்தி வேண்டுகிறோம்.

இதுபோன்ற உறுதியானதொரு  தீர்மானமும், இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளும் இந்திய நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட வேண்டும். மேலும் அடுத்தடுத்த ஐ.நா. கூட்டத்தொடரில் இதே தீர்மானத்தை இந்திய அரசே முன்மொழிந்து அனைத்து நாடுகளின் உதவியோடு  நிறைவேற்ற வேண்டும். அதுவரை மாணவர்களின் இப்போராட்டம் இந்திய அரசை நோக்கி ஒற்றுமையுடன் தொய்வின்றித் தொடரவேண்டும். மாணவர்கள் தங்களது  கோரிக்கைகளை இந்திய அரசை நோக்கி உறுதியுடன் முன்வைக்க வலியுறுத்துகிறோம். இந்திய அரசின் அயலுறவுக்கொள்கையில் மாற்றம் கொண்டுவரக்கூடிய, பொறுப்பும் ஆற்றலும் திறனும் மாணவகளின் ஒன்றுபட்ட நீடித்தப் போராட்டத்திற்கு மட்டுமே உள்ளது.

ஐ.நா. அவையையும், அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலை நாடுகளையும் ஈழத் தமிழர் நலன் சார்ந்து முடிவெடுக்க வலியுறுத்தி, பற்பல புலம் பெயர் இயக்கங்கள் வலிமையுடன் போராடி வருகின்றன. அவர்கள் தங்களின் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க வெற்றியை ஈட்ட இயலும் என்ற நம்பிக்கையுடன் செயல்படுகின்றனர். ஆனால் அவர்களின் அனைத்து முன் முயற்சிகளுக்கும் முட்டுக்கட்டையாக இருப்பது, இந்திய அரசின் தமிழர் வெறுப்பு அரசியல் நடவடிக்கைகளே. கட்டமைக்கப்பட்ட அறுபது ஆண்டு கால இனப்படுகொலையில் இருந்து ஈழத் தமிழினத்தைக் காக்க, இந்திய அரசின் அயலுறவுக் கொள்கையை மாற்றும் வல்லமை தாய்த் தமிழகத்தில் உள்ளவர்களிடம், அதிலும் குறிப்பாக மாணவர்களிடத்தில் மட்டுமே உள்ளது.

ஆதலால் மாணவர்கள் இந்திய அரசின் அயலுறவுக் கொள்கையை மாற்ற முழு மூச்சாகப் போராட வேண்டும், இல்லையேல் இந்திய நடுவண் அரசால் ஒட்டுமொத்தத் தமிழர்களின் உழைப்பும், ஈகையும் விழலுக்கு இறைத்த நீர் போல் வீணாகிவிடும். மாணவர்களால் இயலாதது எதுவும் இல்லை என்பதற்கு வரலாற்றில் பல சான்றுகள் உள்ளன. இப்போராட்டம் இந்தியா முழுமையும் நாடு தழுவிய அளவில் விரிவுபடுத்த முயல  வேண்டும். உங்களின் ஒப்பற்றப் போராட்டம் ஈழ விடுதலை வரலாற்றில் முன்னுரையில் பொன்னெழுத்துகளால்  பதியப்படும். ஈழத்தமிழினம் உள்ளளவும் மாணவப் போராட்டத்தை நினைவில் நிறுத்திப் போற்றுவர்.

இறுதியாக, உயர்ந்த நோக்கத்திற்காகப் போராடும் மாணவர்களை மனிதத் தன்மையற்ற முறையில் கொடூரத் தாக்குதல் நடத்திய பேராயக் (காங்கிரசு) கட்சியை மிக வன்மையாகக் கண்டிக்கிறோம்.

"எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே" எனும் பாவேந்தரின் கூற்றுக்கிணங்க மாணவர்கள் அடுத்தடுத்த போராட்ட உத்திகளைத் திறம்பட வகுத்து அறவழியில் ஒற்றுமையுடன் இறுதிவரைப் போராட வேண்டும் என அன்புரிமையோடு வலியுறுத்துகிறோம். ஈழம் விடுதலை பெற, மாணவர் போராட்டம் வெற்றி பெற எமது வாழ்த்துகள்.

மிக்க அன்புடன்,

செல்வன் பச்சமுத்து

தலைவர், உலகத் தமிழர் அமைப்பு

கீழ்க்கண்ட அமைப்புகளும் இக்கடிதத்தை மேலொப்பமிட்டுள்ளன.

· அமெரிக்கத் தமிழர் அரசியலவை (www.ustpac.org)

· வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (FeTNA – www.fetna.org)

· இலங்கைத் தமிழ்ச் சங்கம் (www.sangam.org)

· PEARL (www.pearlaction.org)

· அமைதிக்கான வட கலிபோர்னிய அமைப்பு (www.ncpeaceaction.org)

Pin It