விதைகளை அழுக விட்ட பிறகு
பசுமையை கொன்று விட்ட பிறகு
மரங்களை மண்ணிலிருந்து விரட்டி விட்ட பிறகு
சூரியப் பறவை நிலத்தை 
கொத்தி விட்டுப் பறந்த பிறகு
வேர்களை தொலைக்காமல் உன்னால் எழ முடியுமானால்...

அவிழ்த்து விடப்பட்ட பெரும் இரைச்சல்களால்
அமைதியின் கண்ணாடிக்குவளை உடைகிறது
முகமூடியணிந்த ஒருவன் இறுக மூடிய காதுகளுடன்
தன் பழைய தவளைகளை  ஏவிவிடுகின்றான்
காலத்தின் கோரைப் பற்களிலிருந்து வெளியேறும்
இரைச்சல்கள் வவ்வாள்களாய் ரத்தத்தை உறிஞ்சுகிறது
சிறு மொட்டைப் போல இப்பொழுதும்
அமைதியின் ஈரத்துடன் உன்னால் எழ முடியுமானால்...

இளமை பொழியும் மழையை
வயதான காற்று ஊதி கலைத்துவிடும் பொழுது
நெஞ்சடைக்கும் குளிர் உன் கால்களை வெட்டும் பொழுது
புல்லின் பனித்துளியில் உறங்கும்
இதயங்களை கோடாரி கேலி செய்யும் பொழுது
உன்னால் எதிர்ப்புகள் தின்னும் நாக்குகளுடன் எழ முடியுமானால்...

வா இந்தக் கவிதைக்குள் நுழைந்து கொள்
இந்தக் கவிதை உன்னைத்தான் தேடுகிறது
ஏனெனில் நீதான் இந்தக் கவிதையின் தலைப்பு.

- கோசின்ரா

Pin It