தனித்தனியாக
மேய்ச்சலுக்கு விடப்பட்ட
மாடுகள்
மேய்ப்பனைக் காணும்
பெருவிருப்பில்
மலையேறின.

குழலெடுத்து
மேய்ப்பன் இசைத்த
வேணுகானத்தின் நினைவில்
கடமைகள் துறந்து
கனவுகள் சுமந்து
காதங்கள் கடந்தன.

ஆலயச் சிறையிருக்கும்
மேய்ப்பனின்
அழகுத் திருவுருவை
ஆபரணக் களஞ்சியத்தைக்
காணும்
கணநேர தரிசனத்தைக்
கதை கதையாய்ச் சொன்னபடி..

கோடிகளில் மிதக்கும்
மேய்ப்பனுக்குக்
காணிக்கைகள் சுமந்தபடி..
கையிருப்புக்கு ஏற்ற
வரிசைகளில்
ஊர்ந்தபடி..

வரிசைகளின் இடைவழியில்
மந்தைகளை அடைக்கும்
பட்டிகள்.
பட்டிகள் திறக்கும்
பகவானின்
கருணைக்கு ஏங்கியபடி
இருந்து
தின்று
நாட்களைக் கழிக்க..

மேய்ப்பனின்
பெருங்கருணையில்
மேய்ந்த காலங்களை
நினைவில் சுமந்தபடி
பட்டிகளில் கண்அயரும்
மந்தைகள்.

- முனைவர் நா.இளங்கோ

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.