‘பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடிப்பவர்களை, அபகரிப்பாளர்களை நடுரோட்டில் தூக்கிலிட வேண்டும்’ என்று போபர்சு பீரங்கி ஊழல் தொடர்பாக ஒரு பேட்டியின் போது தோழர் விநோத் மிஸ்ரா கோபமாக பேசினார்.

மரண தண்டனையை எதிர்ப்பவர்கள் கூட இத்தகைய சமூக குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என்பதில் மாறுபடமாட்டார்கள்.

உலகத்தின் ஏழைகளில் மூன்றில் ஒருவர் இருக்கும் இந்தியா போன்றதொரு நாட்டில் இப்படி பொதுச் சொத்துகளைக் கொள்ளையடிப்பதைக் கடும்குற்றமாகவே கருதவேண்டும்.

இந்த கோணத்தில் பார்த்தால் செல்வி ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை மிக மிக குறைவே.

ஜெயாவின் சிறைத் தண்டனையைத் தொடர்ந்து அவருக்கு ஆதரவும்,அனுதாபமும் மக்களிடம் கூடியுள்ளது. அவரின் அடிவருடிகள் சாலையெங்கும் ஆக்கிரமித்து நடத்தியப் போராட்டங்களோடு,அவர்களின் சுவர் விளம்பரங்கள் அவர்கள் இந்த கைதை எப்படி புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதை தெளிவுபடுத்துகிறது.

‘அம்மாவை உடனே விடுதலை செய்தால் தமிழக முதல்வர், இல்லையேல் அவர் கர்நாடக முதல்வர்’ போன்ற நகைச்சுவை சுவரொட்டிகளுக்கு இடையில் தூக்கலாக இருந்தன மூன்று விசயங்கள்.

முதலாவது...

காவிரித்தாய்க்கு கர்நாடகத்தான் தண்டனை அளிப்பதா? என்று காவிரி பிரச்சனையில் ஜெயலலிதா உறுதியாக நின்று உரிமையை நிலைநாட்டினார்(?) எனவே கர்நாடகத்து நீதிபதி தண்டனை அளித்துள்ளார் என்று ஒரு பிரிவினர்..

இரண்டாவது...

அம்மாவுக்கு தண்டனை அளிக்க சதி செய்த இராசபக்சேவைத் தூக்கிலிடுவோம். இலங்கைப் பிரச்சனையில் அம்மா தமிழர்களுக்காக போராடியதால் இராசபக்சே இங்குள்ளவர் களோடு சேர்ந்து சதி செய்து அம்மாவுக்கு தண்டனை அளித்து விட்டான் என்றொரு பிரிவினர்.

மூன்றாவது...

‘1,76,000 கோடி சுருட்டிய கருணாநிதியே! எங்கள் அம்மாவுக்கு தண்டனை வாங்கித் தர என்ன யோக்கியதை இருக்கு உனக்கு?’ என்று கருணாநிதி தான் இதற்கெல்லாம் காரணம் என்று மற்றொரு பிரிவினர்.

இந்த ஆதரவு முழக்கங்கள் எதுவுமே சுப்பிரமணிய சுவாமியின் கட்சியான பா.ச.க வை விமர்சிக்கவேயில்லை என்றது ஓர் அதிர்ச்சியான உண்மை. இத்தனை ஆதரவு முழக்கங்களுக்கு இடையிலும் சில ஊடகங்களும் பத்திரிக்கைகளும் தொடர்ந்து ஒரு விசயத்தைச் சித்தரிக்க முனைப்போடு செயல்படுகின்றன.

‘ஒரு சிலர் நீதி துறையில் ஊழல் செய்யலாம். ஆனால் இந்திய நீதித்துறை சுதந்திரமாக இயங்குகிறது. எனவே எவ்வளவு பெரியவராக இருந்தாலும் நீதித்துறை சரியான தீர்ப்பு வழங்கும் என்ற ஒரு மாயையை பரப்பி வருகின்றன. இந்த மாயையைக் கொஞ்சமும் வெட்க மின்றி வெளியிட்டுள்ளார் சி.பி.எம்-ன் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்.

‘சட்டத்தின் முன் அனைவரும் சமம். சனநாயகத்தின் அடிப்படை இது தான்’ என்றார் . எந்த அளவுக்கு சி.பி.எம். வர்க்க அரசியலிருந்து விலகி சென்றுவிட்டது என்பதற்கு இதைவிட வேறு சாட்சியம் இருக்க முடியுமா?

லெனின் திரும்ப திரும்ப ஒரு விசயத்தைச் சுட்டிக் காட்டுகிறார். அரசும் அதன் நீதி,நிர்வாகத் துறைகளும் வர்க்கங்களைத் தாண்டி சுதந்திரமாக செயல்படுகின்றன என்ற மாயையைப் பரப்ப ஆளும்வர்க்கங்கள் முயற்சித்து கொண்டே இருக்கும். நாம் இந்த மாயையை தொடர்ந்து அம்பலபடுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்று லெனின் வலியுறுத்தியது ஜி.ராமகிருஷ்ணனுக்கு நினைவில் இருக்க வாய்ப்பில்லை.

ஜி.ராமகிருஷ்ணன் சொல்வது போல் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றால் மோடி இப்போது சிறையில் அல்லவா இருக்க வேண்டும்? ஆனால் அதையும் மீறி இந்த அரசு மற்றும் அதன் நீதிமன்றங்கள் முன் அனைவரும் சமம் என்று அவர் கூறுவது யாரைத் திருப்திப்படுத்த என்பதை அவர்தான் கூற வேண்டும்.

இந்தியாவின் மிக முக்கியமான மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு தண்டனை கொடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்றால் அவர் போன்ற உள்ளூர் ஆளும் வர்க்கத் தலைமையையும் மீறி ஒரு சக்தி பலமாகச் செயல்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

பிராந்திய கட்சிகள் வளர்வது நாட்டுக்கு நல்லதல்ல என்று மன்மோகன்சிங்கே கூறினார். நாட்டுக்கு நல்லதல்ல என்றால் இந்தியா முழுமையும் தங்கு தடையின்றி கொள்ளையடிக்கும் அம்பானிக்கும், டாட்டாவுக்கும் நல்லதல்ல என்று பொருள். அதைத்தான் மோடி அமுலாக்கி வருகிறார். மாநிலக் கட்சிகள் ஒவ்வொன்றாக தாக்கி அழிக்க வருகிறார். இதற்கு அவர்களின் நெருங்கிய சகாக்கள் சிவ சேனையும் அ.தி.மு.க.வும்கூட விதிவிலக்கில்லை என்பது நிரூபணமாகியுள்ளது. விரைவில் அகாலிதளமும் இந்த பட்டியலில் சேர்ந்துவிடும். அரியானா தேர்தல் பரப்புரையின்போது ‘சிறையில் இருப்பவர்களின் ஆதரவு எங்களுக்குத் தேவையில்லை’ என்று மோடி கூறியது சௌதாலாவையும் லல்லுவையும் மட்டும் குறிக்கவில்லை. ஜெயலலிதாவையும் சேர்த்துத்தான் என்று ஊடகங்கள் ஒப்புக் கொண்டுள்ளன. ஜெயாவின் கைது இந்திய அரசியலில் நடந்துவரும் ஒரு திருப்பத்தை சுட்டிக் காட்டுகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.

அடையாள அரசியலில் ஒன்றாக இருந்த பா.ஜ.க., சிவசேனா, அ.தி.மு.க. ஆகிய அனைத்தும் வர்க்க அரசியல் மென்மேலும் கூர்மையடைய தங்கள் உண்மையான உருவத்தைக் காட்டத் தொடங்கியுள்ளன. இந்த மாநிலம் தழுவிய கட்சிகள் எல்லாம் ஏதோ மக்களுக்காக நின்றன என்பது போன்ற மாயையை முதலில் உடைக்க வேண்டும். மோடியின் ‘சூதாட்ட முதாலிகளின் அரசியலைத்தான் சிவ சேனாவும், அ.தி.மு.க. வும் அந்தந்த மாநிலங்களில் அமுலாக்கிக் கொண்டிருக்கின்றன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. 1980 க்கு பிறகு அசுர வேகத்தில் வளர்ந்த சூதாட்ட முதலாளிகள், அரசியல் அரங்கிலும் தங்களைத் தீர்மான கரமாக நிலைநாட்ட முயல்கின்றனர்.

இந்தியாவெங்கும் ஒரே கட்சி, ஒரே ஆட்சி என்பதை உருவாக்கத் தீவிரமாக முயல்கின்றனர். ஜெர்மனியின் பின்னடைவுக்கு அடிப்படைக் காரணம் பல கட்சிகள் இருப்பதுதான் என்று கூறிய இட்லர் தங்களது கட்சியைத் தவிர பிற கட்சிகள் அனைத்தையும் தடை செய்தான் என்பது வரலாறு. மோடி இதை இந்திய வடிவில் செய்ய நினைக்கிறார்.

இந்து- இந்தி- இந்தியா. ஒரே கட்சி - ஒரே ஆட்சி. வருங்கால அரசியல் என்பது இது நடக்குமா? நடக்காதா? என்பதை ஒட்டியே நடைபெறும்.

நம்மைப் பொறுத்தவரை மோடி வகையறாக்களின் இந்த கொடுங்கனவை அ.தி.மு.க. உள்ளிட்ட பிராந்திய சுரண்டல் சக்திகளின் தலைமையில் எதிர்ப்பதா? அல்லது இடதுசாரி சனநாயக சக்திகளின் துணிச்சலான முன்முயற்சியில் தலைமையை உருவாக்குவதா? என்பதைப் பற்றியே அதிகம் கவனம் செலுத்த வேண்டும். சி.பி.ஐ.யும், சி.பி.ஐ(எம்)மும் முதல் தெரிவைத்தான் மேற்கொள்ளும் என்ற சூழலில் நாம் இரண்டாவது தெரிவை விரும்புகிறோம்.

யுத்தத்தின் கோடுகள் வரையப்பட்டுள்ளன. யுத்தம் தொடர்கிறது.

Pin It