சனவரி 7, 2011 அன்று, தமிழக முதல்வரை களங்கப்படுத்தியதாகக் கூறி ‘நக்கீரன்’ வார இதழ் அலுவலகம் அதிமுகவினரால் அடித்து நொறுக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் அதிமுகவினரால் நக்கீரன் வார இதழ்கள் எரிக்கப்பட்டன. அதிமுக தொண்டர்களை ஆத்திரமூட்டும் வகையில் நக்கீரன் வெளியிட்ட செய்தி என்ன? தமிழக முதல்வர் செயலலிதா அவர்கள், மாட்டிறைச்சி சாப்பிடுபவர் என்று எம்.ஜி.ஆர். ஒரு முறை சொன்னாராம். அந்த செய்தியை நக்கீரன் வெளியிட்டிருக்கிறது. அதிமுகவினரை சினம் கொள்ளவைத்த செய்தி இது தான்.

jayalalitha_cho_500

‘எவ்வளவு தைரியமிருந்தா இப்படி இவன் எழுதுவான்?’

‘எங்கம்மா பிறப்பையே அசிங்கப்படுத்திட்டானே?’

‘எங்கம்மா பிராமின் ங்கிற செய்தி அவனுக்கு தெரியாதா?’

‘எங்கம்மா எப்படி மாட்டிறைச்சி சாப்பிடுவாங்க?’

மேற்கண்ட திருவாசக மொழிகள் நக்கீரன் அலுவலகத்திற்கு எதிரே அதிமுக மகளிரணியினர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டி. ஒரு செய்தியை இங்கு நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். இச்சம்பவம் செயலலிதா மீது நக்கீரன் தொடுத்த தாக்குதல் அல்ல. நக்கீரன் மீது செயலலிதா தொடுத்த தாக்குதலும் அல்ல. தமிழ்நாட்டிலுள்ள மாட்டிறைச்சி உண்ணும் இசுலாமியர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ‘இந்துத்துவ மனநிலை’ தொடுத்த தாக்குதல். இந்துத்துவ பொதுப்புத்தி ஒரு மனிதனை ‘பிறப்பு’ வைத்தே அளவிட வேண்டும் என்று காலகாலமாக பயிற்றுவித்து வருகிறது. அந்த வகையில் நல்ல ‘பிறப்பு’ என்பது, ஒருவனுடைய ‘தாய்’ மற்றும் ‘சாதி’யை சார்ந்தது. ஒருவனை பழிக்கவேண்டுமென்றால், அவன் ‘நல்ல அப்பனுக்கு’ பிறந்திருக்கமாட்டான் என்று திட்டுவது, ஆண் மொழியின் வக்கிர சிந்தனையைக் காட்டுகிறது. அதேபோல் ‘ஈனசாதிப்பய’ ‘பறப்புத்தி பாதிபுத்தி’ போன்ற வசவுகள் சாதியை வைத்து குணநலன்களை அளவிடும் பார்ப்பனிய மனநிலையின் வெளிப்பாடு. ஆண் மொழி, சாதிய மொழி இவை இரண்டும் பிறப்பினை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ‘பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும்’ என்கிற வள்ளுவ சிந்தனைக்கு நேர்எதிரான சிந்தனை ‘இந்துத்துவ சிந்தனை’. அந்த இந்துத்துவ மனநிலையுடன்தான் பிற்படுத்தப்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் செயலலிதாவின் பார்ப்பன புனிதம் காக்க போராடி வருகிறார்கள்.

உலகம் முழுவதும் அனைத்து விஞ்ஞானிகளும், போராளிகளும் ‘மாட்டிறைச்சி’ உண்பவர்களே. குரானில் ‘அல்பகரா’ என்கிற அதிகாரம் ‘மாடு’ பற்றிய செய்தியை சொல்கிறது. நபிகள் நாயகம், ஈசாநபி, ஜன்ஸ்டீன், காரல் மார்க்ஸ், லெனின் போன்ற தத்துவ ஞானிகள் அனைவரம் மாட்டிறைச்சி உட்கொண்டவர்கள்தான். தமிழகத்தில் இசுலாமியர்கள், ஆதிதிராவிடர்கள் என பெரும்பாலானோர் மாட்டிறைச்சி உண்பதை இயல்பாகக் கொண்டவர்கள். இடைநிலை சமூகங்கள், ‘பார்ப்பனராக’ தங்களை காட்டிக்கொள்வதற்காக, ‘மாட்டிறைச்சி’ உட்கொள்ளாததை பெருமையாக தம்பட்டம் அடித்துக்கொள்கின்றன. ‘70 வருடங்களுக்கு முன்பே மாட்டிறைச்சி உண்ணும் போராட்டம்’ நடத்திய பெரியார் பிறந்த மண்ணில், இப்படியொரு நிகழ்வு நடைபெற்றதற்காக நாம் அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

உலகம் முழுவதும் இறைச்சி உண்பவர் (Nov-veg), இறைச்சி உண்ணாதவர் (veg) என்று இரு பிரிவினர் இருப்பர். ஆனால், சாதியப்படி நிலை கொண்ட இந்தியாவில் மட்டும்தான், இறைச்சி உண்பவர், இறைச்சி உண்ணாதவர் மாட்டிறைச்சி உண்பவர் என மூன்று பிரிவினர் இருக்கின்றனர். இறைச்சி உண்ணும் பழக்கம் உடைய உழைக்கும் மக்களை இருகூறாக பிரிப்பதற்காகவே ‘மாட்டிறைச்சி’ அரசியல் பயன்படுகிறது. சாதிய அடிப்படையில் ஆராய்ந்தால், பிற்படுத்தப்பட்ட மக்களையும், தாழ்த்தப்பட்ட மக்களையும் பிரித்து வைப்பதற்காகவே இந்த ‘மாட்டிறைச்சி’ அரசியலை இந்துத்துவ சக்திகள் முன்னெடுக்கின்றன. இறைச்சி உண்ணும் வழக்கம் உடையோர்களை முழுமையாக விமர்சித்தால், இந்து முன்ணணிக்கு ஆள் சேர்க்க முடியாது என்பது நடைமுறை உண்மை.

சரி, இப்போது ‘நக்கீரன்’ சம்பவத்திற்கு வருவோம். இறைச்சி உண்ணும் பழக்கமில்லாத கன்னடத்து அய்யங்காரான செயலலிதாவை, மாட்டிறைச்சி சாப்பிடுகிறார் என்று ‘நக்கீரன்’ எழுதியிருக்கிறது. இதன் மூலம் முகத்தில் பிறந்த முதலாம் வர்ணத்தைச் சேர்ந்த செயலலிதாவை, நால்வர்ணத்திலும் அடங்காத, பஞ்சமசாதிகளுடனும், இசுலாமியர்களுடனும் ஒப்பிட்டு அவரது பிறப்பை இழிவுபடுத்திவிட்டது என்பதே அதிமுகவினர் முன்வைக்கும் குற்றச்சாட்டு. மயிலாப்பூர் கும்பல் சாலையில் இறங்காமலே அவர்களின் புனிதம் காக்க சூத்திரர்களும், பஞ்சமர்களும், போராடுகிறார்கள். சூத்திரர்களும், பஞ்சமர்களும் உயர்பதவிக்கும் வரும்போது மட்டும், தகுதி, திறமை பேசுவதும், இட ஒதுக்கீட்டிற்கு எதிராக கூக்குரலிடும் பார்ப்பன அம்பிகள், இப்போது பார்ப்பன நலனுக்காக, பஞ்சமனும், சூத்திரனும் குரல் கொடுக்கும்போது வாஞ்சையுடன் அவர்களை அழைத்துக்கொள்கிறார்கள்.

இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளாக, அடிமைகளாக இருந்தது போதாது என்று காப்பரேட் உலகிற்கு ஏற்றாற்போல் நவீன அடிமைகளாக இருக்கத் தயார் என்று அடிமைத் தமிழர்கள் சொல்கிறார்கள். ‘ஆரியமாயை’ எழுதிய அண்ணாவையும், பார்ப்பன எதிர்ப்பு அடையாளச் சொல்லாகிய ‘திராவிட’த்தையும் கட்சிப்பெயராக கொண்ட அ.தி.மு.க.வின் தொண்டர்படை மனுநீதிக் காவலர்களாக அவதாரமெடுத்திருக்கிறாhகள். ‘சுயமரியாதை’ உணர்வு கொண்ட தாழ்த்தப்பட்டவர்களும், இசுலாமியர்களும் தங்களை அவமதித்ததற்காக ‘வழக்கு’ பதிவு செய்ய வேண்டும். ஆனால், மனுதர்மத்திற்கு எதிராக செயல்பட்ட குற்றத்திற்காக, நக்கீரன் மீது, அதிமுகவினர் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளனர். பார்ப்பனர் ஒருவரை ‘பறையர்’ என்ற நிலைக்கு சாதியிறக்கம் (decastification) செய்த குற்றத்திற்காக ‘நக்கீரன்’ மீது வழக்கு தொடரவும் வாய்ப்பிருக்கிறது.

அதிமுக இதுவரை செய்த ஊழல் குற்றத்திற்கு செயலலிதாவைச் சூழ்ந்திருந்த மன்னார்குடி சூத்திரக் கூட்டம்தான் காரணம். எனவே, அவர்களை கட்சியை விட்டு விலகியவுடன் கட்சி புனிதப்படுத்தப்பட்டுவிட்டது. அதுபோலவே பார்ப்பனர் செயலலிதாவை பறையர் சாதியைப் போல் மாட்டிறைச்சி உண்பவர் என்று அவமானப்படுத்தியதைக் கண்டித்தும், இனிமேல் பார்ப்பன தர்மத்தை யாரும் தாக்காமல் இருக்கவும், மனுதர்ம அறிஞர் ‘சோ’ தலைமயில் ‘பார்ப்பனார் பாதுகாப்பு சட்ட மசோதா’ ஒன்றினை சட்டசபையில் தாக்கல் செய்யவும் வாய்ப்பிருக்கிறது. மேலும் ‘தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989’ சட்டத்தை மறுபரிசீலுனை செய்து நீக்கிவிடலாம். இதுபோன்ற காட்சிகள் அரங்கேறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. பெரியாரியவாதிகளும், தாழ்த்தப்பட்டோர் அமைப்புகளும், தமிழ்த்தேசிய வாதிகளும், இடதுசாரிகளும், மக்களின் மனுநீதி மனநிலையை விரட்ட, ‘ஈரோட்டு தடியை’ ஒரு சேர பயன்படுத்த வேண்டிய தருணம் நெருங்கி விட்டது என்பதை நாம் உணர வேண்டும்.
- ஜீவசகாப்தன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It