அன்புத் தோழரே, வணக்கம்…

கடிதம் வாயிலாக உங்களோடு உறவாட வாய்ப்புக் கிட்டியதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். தமிழக மக்களின், பொருளாதார, அரசியல் மற்றும் பண்பாட்டு பிரச்சனைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன். கடிதத்தைப் படித்து முடித்தபின் உங்கள் உணர்வுகளை நீங்களும்கூட என்னிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறேன். நல்லது தோழரே இனி விசயத்திற்கு வருவோம்.

தமிழகத்தின் முதன்மைப் பிரச்சனைகள்

‘தமிழக மக்களின் முக்கியப் பிரச்சனைகள் என்னென்ன‘ என்று கேட்டால் நீங்கள் என்ன சொல்வீர்கள், தோழரே? காங்கிரஸ் அரசாங்கம் கடைபிடித்த மக்களுக்கு விரோதமான அதே கொள்கைகளையே பாரதீய ஜனதா அரசாங்கமும் கடைபிடிப்பதால் தமிழ் மக்களின் துயரம் மேலும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.

jayalalitha cartoonதொழிலாளர் நலச் சட்டங்களில் திருத்தம், நெய்வேலி அனல்மின் நிலைய தொழிலாளர்கள் போராட்டம், நோக்கியா ஆலை மூடல் அறிவிப்பு என தொழிலாளர் வர்க்கத்தின் மீது நரேந்திர மோடி அரசாங்கத்தின் தாக்குதல்கள் தொடங்கியிருக்கின்றன.

விளை நிலங்களிலிருந்து, தமிழக விவசாயிகளை அகற்றிவிட்டு, விவசாயத்தை கார்ப்பரேட் கம்பெனிகளிடம் ஒப்படைக்கும் சதித்திட்டத்தை, மோடி அரசாங்கம் தீவிரமாக அமலாக்கி வருகிறது.

மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் மத்திய அரசு வஞ்சிப்பதால், தமிழ்நாட்டின் கிராமப்புற ஏழைகளின் அன்றாட வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்கிறது

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள சுமார் 1 கோடி இளைஞர்களுக்கு, வேலை, வெறும் கானல் நீராகவே தெரிகிறது.

காவிரிப்படுகையில் மீத்தேன் திட்டம், அனல் மின் திட்டம், கொங்கு மண்டலத்தில் எரிவாயு குழாய் பதித்தல், கடற்கரைகளில் அணுமின் நிலையங்கள், டாஸ்மாக், மணல் கொள்ளை, திருவண்ணாமலையில் இரும்புத் தாது கொள்ளை என மக்கள் விரோத செயல்கள் தொடர்கின்றன. பெண்கள் மீதான பாலியல் வன்முறை, கருத்தியல் மற்றும் பண்பாட்டுத் தாக்குதல்கள் நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. சாதி ஆதிக்கச் சக்திகள் காவல்துறையின் துணையோடு தலித் மக்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தி வருகின்றன.

கல்வி கடைச்சரக்கானது பழைய கதை, கிடைக்கின்ற கல்வியும்கூட வாழ்க்கை நடத்த உதவவில்லை. அறிவை, பண்பைக் கொடுக்கவில்லை. மனித வாழ்வை மேம்படுத்தவில்லை. மாறாக, தமிழ்ச் சமூகத்தை கருத்தியல் ரீதியாக சீரழிக்கிறது.

அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் அடித்தட்டு மற்றும் மத்தியதர மக்களின் அன்றாட வாழ்வை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

போதும் போதாதென்று சமஸ்கிருத வாரம், இந்தித் திணிப்பு போன்ற தமிழின விரோதப் போக்கும் நீடிக்கிறது.

தோழரே தமிழ்ச் சமூகம் சந்தித்துக்கொண்டிருக்கும் மொத்தப் பிரச்சனைகளும் இவ்வளவுதான் என்று கூறவில்லை. சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் மத்திய ஆட்சியாளர்களின் மக்கள் விரோதக் கொள்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். யாரும் பாக்கி இல்லை என்பதைக் காட்டவே இந்தப் பட்டியல்.

பட்டியலிட்டுள்ள பிரச்சனைகளைக் கணக்கில் கொண்டு பார்த்தால் தமிழ்நாடு ஒரு போராட்ட பூமியாகத் திகழ வேண்டும். அதுதானே சரி? ஆமாம், தற்போது அப்படித்தானே உள்ளது? உண்மைதான் சுமார் பத்து நாட்களுக்கும் மேலாக (செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 7வரை) தொடர்ந்து போராட்டங்கள்தான். அவை மக்கள் பிரச்சனைகளுக்காக அதிமுகவால் நடத்தப்பட்டு இருந்தால் பாராட்டுவோரில் நாம்தான் முதலில் இருப்போம். ஆனால் அதிமுக நடத்திய போராட்டங்கள் பல்வேறு அவதாரங்கள் எடுத்ததற்கான காரணத்தை நாடு நன்கறியும்.

193 பேர் மரணம், அனுதாபம் தேடும் முயற்சிதானே விளைவைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

இரத்தத்தின் இரத்தங்களே

இரத்தத்தின் இரத்தங்களிடம் கேட்க வேண்டிய கேள்வி இதுதான். ‘ஒரு ரூபாய் மட்டுமே மாதச் சம்பளமாக பெற்றுவந்த ஜெயலலிதா 66 கோடி ரூபாய் அளவுக்குச் சட்ட விரோதமாய் சொத்து சேர்த்த குற்றம் நிரூபணமாகியதால் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுள்ளார். வாக்களித்த மக்களின் நம்பிக்கைக்குத் துரோகம் இழைக்கும் வண்ணம், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, சட்டத்திற்குப் புறம்பாக, ஊழல் செய்தது தவறு இல்லையா?‘ என்று கேளுங்கள். ‘ஊழல் குற்றம் நிரூபிக்கப்பட்டு, தண்டனை பெற்ற ஒரு குற்றவாளியை ஆதரித்து, மக்களின் இயல்பு வாழ்க்கையைக் கெடுக்கும் வகையில் சட்டவிரோத, வன்முறைகளை நிகழ்த்துவது எப்படி நியாயம்?‘ என்று வினவுங்கள்.

தோழரே, இரத்தத்தின் இரத்தங்கள் என்போர் வேறு யாரோ அல்ல, அவர்கள் அத்தனைபேரும் நம் அன்புக்குரிய உழைக்கும் மக்கள் தான் என்பதை அவர்களுக்கு உணர்த்தத்தானே வேண்டும். நமக்கு வேறு வழியும் இல்லையே--- உரிமையோடு அவர்களிடம் ஒரு உண்மையைச் சொல்ல வேண்டும் உரக்கச்சொல்ல வேண்டும். அன்பரே ஊழல் செய்ததன் மூலம் 5 ஆண்டுகளில் ஜெயலலிதா சேர்த்த ஊழல் சொத்தின் மதிப்பே 60 கோடி ரூபாய் அப்படியானால் அந்த ஆட்சி காலத்தில், ஜெயலலிதா மூலம் வெளிநாட்டு, உள்நாட்டு முதலாளிகள் கொள்ளையடித்த பணத்தின் மதிப்பு எவ்வளவு இருக்கும் என்பதைக் கணக்குப் போட்டுப் பார்த்திடச் சொல்லுங்கள். நேர்மையான ஆட்சி அமைந்திருக்கும் பட்சத்தில் இந்த ஊழல் நடத்திருக்க வாய்ப்பில்லையே இந்த ஊழலால் யாருக்கு நட்டம்? மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசாங்கம் இருக்கும் நிலையில், ஒரு சில முதலாளிகளின் கைகளுக்குச் சென்ற அதே பெரும் பணம், நாட்டு மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்கப் பயன்பட்டிருக்கும். தமிழ்ச் சமூகம் வளர அது உதவி இருக்கும். அதாவது, சாலை போட, வீடு கட்ட, பள்ளி கல்லூரி, குடிநீர், விவசாயக் கடன், தொழிற்கடன், முதியோர், கணவனை இழந்தோர், திருமண உதவித் தொகைகள், மருத்துவ வசதி இன்னும் இதுபோன்ற பல்வேறு அடிப்படை உரிமைகளை நம் மக்கள் பெற்றிருப்பார்கள் இல்லையா? ஆக இவையெல்லாம் இன்னும் மாபெரும் மக்கள் கூட்டத்திற்கு கிடைக்காமல் போனதற்கு நடந்த ஊழல்தானே காரணம்? கோடிக்கணக்கான மக்களுக்குப் போய்ச் சேர வேண்டிய பணத்தை, விரல்விட்டு எண்ணக்கூடிய முதலாளிகளுக்கு ஜெயலலிதா தாரை வார்த்துக் கொடுத்தது துரோகம்தானே? அதனால்தான், ஜெயலலிதாவுக்கு சிறைத்தண்டனை ஏழரை கோடி தமிழக மக்களின் நல வாழ்வுக்கு மிகப்பெரும் இழப்பை ஏற்படுத்திய ஜெயலலிதா இனியும் தமிழகத் தலைவர் எனில், அது தமிழர்களுக்கு தலைக்குனிவு இல்லையா? இரத்தத்தின் இரத்தங்கள் சிந்திக்கட்டும்.

‘சரி, தோழரே இரத்தத்தின் இரத்தங்களுக்கு வேறு சில கேள்விகள் எழுவது இயல்புதானே? ஊழல் செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டதன் காரணமாக ஜெயலலிதாவுக்கு தண்டனை கொடுக்கப்பட்டுவிட்டது. ஒத்துக் கொள்கிறோம். மேற்படி ஊழலின் பின்னணியில் இருந்துகொண்டு, இந்த 66 கோடியைப்போல் 100மடங்கு ஆதாயம் அடைந்த வெளிநாட்டு, உள்நாட்டு முதலாளிகள் என்ன ஆனார்கள்? அவர்கள் மீது ஏன் வழக்குத் தொடரப்படவில்லை. அதுபற்றி ஏன் யாரும் கேள்வி எழுப்பவில்லை? பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நண்பர்களும் ஏன் இதனைக் கண்டு கொள்ளவில்லை? விடை காணப்படாத இந்த கேள்விகளுக்கு மேல், நமக்கும் ஒரு கேள்வி எழுகிறது, தோழரே மற்றவர்கள் இருக்கட்டும், ஜெயலலிதாவாவது தான் யார், யாரிடம் பணம் பெற்றுக்கொண்டு, என்ன வகையான ஆதாயங்களை அவர்களுக்குச் செய்து கொடுத்தேன், என்று சொல்லலாமே? ஏன் முடியவில்லை? அது அவ்வளவு எளிதானது அல்ல என்பது உங்களுக்குத் தெரியும். ஆம், தனது முதலாளிக்கு எதிராக, எந்த வேலைக்காரரும் செயல்பட முடியாது. மீறிச் செயல்பட்டால், அவர் அந்தப் பணியில் தொடர முடியாது. இதுதான், நிலவும் முதலாளித்துவ சமுதாய அமைப்பின் விதி தன் நலனுக்கும், இலாபத்திற்கும் வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும் எவரையும், அரசாங்கம் நடத்த முதலாளி வர்க்கம் அனுமதிக்காது. அந்த விதியின் நடைமுறையைத்தான் தமிழகத்தில் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

இந்திய ஆளும் வர்க்கம் மக்கள் நம்பிக்கையை இழந்த காங்கிரசை மத்திய ஆட்சிப் பொறுப்பிலிருந்து அகற்றிட விரும்பியது. மாற்றாக, பாரதீய ஜனதாவை அமர்த்திக்கொண்டது. கூட்டணி ஆட்சி தன் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள தடையாய் இருப்பதாய் ஆளும் வர்க்கம் உணர்ந்ததும்கூட பாரதீய ஜனதா என்ற ஒற்றைக் கட்சியை ஆட்சியில் அமர்த்த காரணமாய் அமைந்தது. அதேபோல், பலம் வாய்ந்த மாநிலக் கட்சிகள், மாநிலங்களை ஆள்வதால், மத்திய அரசாங்கத்தை மட்டும் வைத்துக்கொண்டு, இந்தியப் பெரு முதலாளிவர்க்கம், தான் விரும்பியபடி அந்த மாநிலங்களின் வளங்களைக்கொள்ளை அடிக்க முடியவில்லை. சரியாகச் சொல்லப்போனால், மோடி ஆட்சியைப் பயன்படுத்தி குஜராத்தில் கொள்ளையடித்தவர்கள், மத்திய ஆட்சி மட்டுமின்றி, ஒவ்வொரு மாநிலத்தையும், பிஜேபி ஆட்சியை அமைத்துக்கொள்ளை அடிக்கவேண்டும் என்று முடிவு செய்துவிட்டார்கள். அதன் விளைவாகவே, தற்போதைய நாடகம் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. இந்த உண்மையை இரத்தத்தின் இரத்தங்களான நம் உழைக்கும் மக்களுக்கு ‘மனதைத் தொட்டுச் சொல்லவேண்டும். தமிழ்நாட்டு வளங்கள் ஏற்கனவே, கொள்ளையிடப்பட்டு வருவதை நாமறிவோம். ஆனால், சின்னஞ்சிறிய தடைகளைக் கூட முதலாளித்துவ வர்க்கம் அகற்றிவிட்டது. இனி, அசுர வேகத்தில் தமிழக வளங்கள் சூறையாடப்படும், தடுக்கவேண்டிய தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் என்னதான் செய்கின்றன?

ஆம், தோழரே தமிழ்நாட்டை ஆளும் அதிமுக நடத்திக்கொண்டிருக்கும் போராட்டங்கள் மக்களுக்காக அல்ல ஊழல் குற்றவாளிக்காக இன்னும், சொல்லப்போனால், அவர்கள் அதை உணர்வுப்பூர்வமாக செய்கிறார்கள் என்றுகூட சொல்ல முடியாது. அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள், பல்வேறு அணிகளின் செயலாளர்கள் இடையே நடைபெறும் போட்டியின் விளைவே இப்போராட்டங்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவோ, வளங்களைக் காப்பதற்காகவோ அல்ல அதையும் அவர்களுக்குப் புரியவைக்க வேண்டும்.

திமுகவும் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள கட்சி என்பது நாம் சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை. காங்கிரஸ் பற்றிச்சொல்லவே வேண்டியதில்லை. அதை நூற்றாண்டுக்கும் மேலாக, இந்தியாவை ஆண்டு ஊழலில் உளுத்துப்போன கட்சி, பாரதீய ஜனதாவும் ஊழலுக்கு விதிவிலக்கல்ல ஏனெனில் மேற்படி 4 கட்சிகளுமே, ஏகாதிபத்திய தாராளமயம் என்ற கொள்ளையைத் தீவிரமாக நடைமுறைப்படுத்துகிறார்கள். எனவே, இவர்கள் யாரும் ஊழலுக்கு எதிராகப் போராடும் தார்மீக உரிமை அற்றவர்கள்.

தேமுதிக, பாட்டாளி மக்கள் கட்சி, மதிமுக, விடுதலைச்சிறுத்தைகள், புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி, நாம் தமிழர் போன்றவை ஏதோ ஒருவகையில் மேற்படி ஊழல் சக்திகளோடு கூட்டணி கண்டவர்கள் என்பதை எல்லோரும் அறிவர். அதேபோல், இருபெரம் கம்யூனிஸ்ட் கட்சிகளும்கூட தேர்தலைக் காரணம்காட்டி திமுக அல்லது அதிமுகவுடன் அணி சேர்ந்துள்ளன. ஒரு அய்ந்து ஆண்டில், நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி என மூன்று பொதுத் தேர்தல்களை சந்தித்து வருகிறோம். மட்டுமின்றி, இந்த மூன்று அமைப்புகளுக்கும் இடைத் தேர்தல்களும் நடக்கின்றன. ஆக அவர்களுக்கு அரசியல் என்பது தேர்தல் என்பதாகச் சுருங்கிப் போய்விட்டது.

ஊழலை ஒழிக்க என்னதான் வழி?

தோழரே ஊழலை ஒழிக்க தனி வழி ஏதும் உள்ளதா என்றால் நிச்சயமாக இல்லை. ஊழல் ஒழிப்பு என்பதும் சமுதாய மாற்றத்தில் ஒரு பகுதிதானே? அப்படியெனில் அரசியல் போராட்டத்தின் மூலம் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியும். நிச்சயமாக, உபதேசங்களின் மூலமாக சாத்தியமில்லை. அல்லது ஊழல் பேர்வழிகள் தானே வருந்தி திருந்துவர் என நம்புவதும் அறியாமையே. எனவே திமுக, அதிமுக, காங்கிரஸ், பாரதீய ஜனதா ஆகிய 4 ஊழல் கட்சிகளையும், மக்களிடம் அம்பலப்படுத்தி, அரசியல் அரங்கில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் . ஒரு வாக்கியத்தில், கடிதத்தில் எழுதிவிட்டது போலவே, அது அவ்வளவு எளிய செயலல்ல என்பது உண்மைதான், தோழரே ஆனாலும், மாற்றுக்கு அதுவே வழி இதனை எப்படிச் சொல்வது?

மேற்படி நான்கு கட்சிகளும் மேலோட்டமாகப் பார்த்தால் தனித்தனி கட்சிகள்தான். உண்மையில் இவை, ஏகாதிபத்திய, இந்திய பெரு முதலாளிகளின் கட்சிகள், எனவே, இவற்றை வீழ்த்துகிறோம் என்றால், தமிழக உழைக்கும் மக்களுக்கு விடுதலை, சமூக மாற்றம், அரசியல் மாற்றம் என்று பொருள். ஆளும் வர்க்கம் அவ்வளவு எளிதாக அதிகாரத்தை விட்டுவிட மாட்டார்கள். ஏதோ ஒரு கட்சி மட்டுமே போராடி இப்பெரும் செயலை செய்து முடித்திட இயலாது. ஆக, ஒத்த புரிதல் உள்ள சக்திகள் எல்லாம் ஓரணியாய்த் திரள வேண்டும். குறிப்பாக இந்த மாற்றணிக்கு கம்யூனிஸ்டுகள் கருவாக இருக்க வேண்டும். மொத்தத்தில் கம்யூனிஸ்டுகள், மதச்சிறு பான்மையினர், தலித்துகள், பெண்கள், இளைஞர்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தமிழ் தேசிய உணர்வாளர்கள், பகுத்தறிவாளர்கள் என அனைத்து இடது மற்றும் ஜனநாயக சக்திகளும் ஒரு அய்க்கிய முன்னணியாய் உருப்பெற வேண்டும். அதுவே, தமிழக மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் மாபெரும் சக்தியாய் அமையும். அந்தச் சக்தியே, விஷ விருட்சமாய் வளர்ந்து நிற்கும் ஊழல் சக்திகளை வீழ்த்தும். இதுவே, ஊழலை ஒழிக்க வழி.

சமூகத்தை மாற்றி அமைப்பதற்கான போராட்ட அணியே தமிழகத்தின் உடனடி தேவை. சாதி ஒழிந்த, தன்னாட்சி கொண்ட, சமத்துவ தமிழகம் காண போராடுவோம்.

- விடுதலைக் குமரன்

Pin It