சுயமரியாதை வாழ்வுக்காகவும் சமூக சமத்துவத்திற்காகவும் போராடி, ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்து, இளம் வயதிலேயே சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாள்: 11.9.1957 ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் எங்கோ ஓர் மூலையில் விதைக்கப்பட்டிருந்த – நீறுபூத்த நெருப்பாயிருந்த இத்தியாக வாழ்வு, இன்று தமிழகம் தழுவிய அளவில் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் பாடமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

2007ஆம் ஆண்டு இம்மானுவேல் சேகரனின் 50 ஆம் நினைவு வீரவணக்க ஆண்டாக ஒடுக்கப்பட்ட மக்களால் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வின் மக்கள் எழுச்சியைக் கண்டு வெம்பிக் கொண்டிருந்த சாதிவெறிக் கூட்டம், அதே ஆண்டு அக்டோபரில் பசும்பொன் முத்துராமலிங்கத்தின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தை, தன் வன்மத்தை வெளிப்படுத்திக் கொள்ளப் பயன்படுத்திக் கொண்டது.

இவ்விழாவில் கலந்து கொள்ள அப்போதைய காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த கிருஷ்ணசாமி, முதுகுளத்தூர் செல்லும் சாலையில் தடையை மீறி சென்றபோது, தேவர் சாதி வெறியர்களுக்கும் தலித் மக்களுக்கும் ஏற்பட்ட மோதலின் நடுவில் சிக்கிக் கொண்டு காயமடைந்தார். இந்நிகழ்வு காட்டுத் தீயாய் பரவ, ஒரு சில மணி நேரத்திலேயே முதுகுளத்தூரில் வசித்து வந்த வின்சென்ட் என்ற தலித் ஆசிரியர் அவரது வீட்டின் அருகிலேயே சாதி வெறியர்களால் வெட்டிச் சாய்க்கப்பட்டார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மறுநாளே மரணமடைந்தார். வின்சென்ட் படுகொலையில் உசுப்பேறிய சாதி வெறியர்கள் முத்துராமலிங்கம் நூற்றாண்டு நிகழ்வுக்கு வரும் வழிகளில், தலித் மக்கள் பலவீனமாக வசிக்கும் பகுதிகளில் வேன், லாரி, கார்களில் வந்து கூட்டமாக இறங்கி தாக்கியும், கல்வீசியும் தங்கள் கொண்டாட்டத்தை நிறைவு செய்தனர்.

நீறுபூத்த நெருப்பாகச் சாதிப் பகைமை எப்போதும் கனன்று கொண்டிருக்கும் மாவட்டமாக ராமநாதபுரம் இருக்கிறது. இதை உறுதி செய்யும் விதமாக, கடந்த ஆண்டு வின்சென்ட் படுகொலைக்குப் பழிதீர்க்கும் வகையில் முதுகுளத்தூர் பகுதியில் மறவர் சாதியைச் சேர்ந்த ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த ஆண்டு எவரும் எதிர்பார்த்திராத நிலையில், செப்டம்பர் 9 அன்று வீரம்பல் கிராமத்தைச் சேர்ந்த அறிவழகன் என்ற இளைஞர், முதுகுளத்தூரில் சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இவர் 2007ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட வின்சென்ட் மனைவியின் உடன்பிறந்த சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்த இழப்புகள். செப்டம்பர் 11 அன்று நடக்கவிருந்த இம்மானுவேல் சேகரனின் 52ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை சீர்குலைக்க, சாதி வெறியர்களால் திட்டமிடப்பட்டதே இப்படுகொலை நிகழ்வு என்பதை, தொடர்ந்து நிகழ்ந்த சம்பவங்கள் உறுதி செய்தன.

பரமக்குடி நோக்கி அணிதிரண்டு வந்த ஒடுக்கப்பட்ட மக்களின் வாகனங்கள் மானாமதுரைக்கும் பார்த்திபனூருக்கும் இடையில் காவல் துறையால் அடித்து நொறுக்கப்பட்டு, இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உசிலம்பட்டியில் இது போலவே, சாதி வெறியர்களால் தடுத்து நிறுத்தப்பட்ட தலித் மக்கள் பலத்த தாக்குதலுக்கு உள்ளாயினர். இதைக் கண்டித்து தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட தலித் மக்களின் மீது, காவல் துறையும் தன் பங்குக்கு வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டது. இத்தாக்குதல்களில் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் தலித் மக்கள் 29 பேர் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கின்றனர். 70க்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் புனையப்பட்டுள்ளன.

அறிவழகன் படுகொலையைக் கண்டித்தும் அவரது உடலை வாங்க மறுத்தும், செப்டம்பர் 10 அன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஒடுக்கப்பட்ட மக்களின் அமைப்புகளும் புரட்சிகர இயக்கங்களும் போராட்டம் நடத்தின. மாலை 5 மணிவரை நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் பசுபதி பாண்டியன், முருகவேல் ராஜன், அண்ணாமலை (மள்ளர் இலக்கியக் கழகம்), ஆற்றலரசு (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி), இளம்பரிதி (ஒடுக்கப்பட்டோர் விடுதலை முன்னணி) உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

அறிவழகன் படுகொலைக்கு எவ்விதக் கண்டனமும் நிவாரணமும் அறிவிக்காத நிலையிலும், செப்டம்பர் 11 அன்று பல்வேறு இடங்களில் சாதி வெறியர்கள் மற்றும் காவல் துறையால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளைக் கண்டித்தும், செப்டம்பர் 24 அன்று மதுரை தலைமை அஞ்சல் அலுவலகம் அருகில் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடந்தது. தியாகி இம்மானுவேல் பேரவை, ஒடுக்கப்பட்டோர் விடுதலை முன்னணி, மள்ளர் நிலம், தமிழர் விடுதலைப் புலிகள், தமிழ்ப் புலிகள், வன்கொடுமைக்கு எதிரான வழக்குரைஞர் மய்யம் ஆகிய அமைப்புகள் இந்நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தனர்.

எந்வொரு ஒடுக்குமுறையையும் தம்மக்களின் விடுதலையை முன்னெடுக்க எதிர்கொள்வோம் என்ற சூளுரை இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏற்கப்பட்டது. இம்மானுவேல் சேகரன் எனும் விதையிலிருந்து உருப்பெற்று, ஒடுக்கப்பட்ட மக்கள் அணையாது காக்கும் இத்தகைய எழுச்சியே, சாதி ஒழிப்பையும் சமூக விடுதலையையும் முன்னெடுக்கும் நெருப்பாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.

– நம் செய்தியாளர்

Pin It