காவிரி நீர் வந்து
கால் நனைக்கவில்லை
காணி மண் பிளந்து
புல் முளைக்கவில்லை
புல் முளையா கழனியில்
நெல் முளையுமா என்ன?

நெல் முளையா தரிசினில்
உழவெதற்கு சொல்வாய்.
உழவில்லா ஊரினில்
உழவனுக்கு என்ன வேலை?

ஏர் களப்பை தின்ற கரையான்
குடலையும் அரிக்க தொடங்க
களப்பைப் பிடித்த கரங்களெல்லாம்
கல் பிடிக்க கிளம்பிற்று

கழனி காட்டை விட்டு
கான்கிரிட் காட்டுக்கு

பொய்த்து பொய்த்து பெய்யும்
மழையினை நம்பியும்
புவியை துளைத்துரிஞ்சும்.
ஆழ் குழாயை நம்பியும்
உழவை தொடர்கிறான்
எஞ்சிய சில பேர்
ஊருக்கு உணவளிக்க

எஞ்சிய உழவும்
எதற்கடா என்று
பன்னாட்டு பகாசுரன்
படையெடுத்து வருகிறான்

உயிர் வாயுவை கரியாக்கிய
உத்தமர்கள்
எரிவாயுவாம் மீத்தேனை
எடுக்க துடிக்கிறார்கள்

கண்ணுக்கு தெரியாமல்
காலுக்கு கீழ் துளைத்து அவன்
நச்சு வாயுக்கள்

நாலாப்புறமும் பாயப்போகுது
நன்னீரை வெண்ணீராக்கி நம்
கண்ணீரை அமிலமாக்க போகுது.
உழவுக்கு நீரில்லையென
உரக்கப் பேசி திரிகையில் உன்
காலுக்கு அடியினில்
காலனை விதைக்கிறான் இனி
குடிக்கவே நீரில்லை
குற்றமென்ன சொல்வாய்

நம் தாத்தன், பாட்டனின்
வியர்வையில் நனைந்த மண்
நம் குழந்தைக்கு இல்லையாம்
குடிபெயரப் போகிறோம்
தாய் மண் இங்கு
துகிலுரிக்கப் படுகையில்
தூங்கி கிடக்கலாகுமோ?

எழுந்து வாராய்!
ஏர் களப்பை பிடித்தவனே
நீர் பாய்ச்சியக் காணியில்
உதிரம் பாய்ச்சுவோம் அதில்
செங்கொடிகள் முளைக்கட்டும்
முளைத்த செங்கொடிகள்
விடுதலை தரும்!
மக்கள் விடுதலை தரும்!

Pin It