2008 - 2009 ஈழத்தில் உச்சகட்ட போர் நடந்து கொன்டிருந்த சூழலில் சிங்கள அரசுடன் நேரடியாக கைகோர்த்துக் கொண்டு இந்திய அரசு தமிழினப் படுகொலையில் நேரடியாக எப்படி பங்காற்றியது என்பது யாவரும் அறிந்ததே. போர் முடிந்த பிறகு அதனை உறுதி செய்யும் வகையில் கோத்தபையா ராஜபக்சே "இந்தியாவின் போரை நாங்கள் நடத்தினோம்"என்று கூறி தமிழினப் படுகொலையில் இந்தியாவின் பங்கை பறை சாற்றினான். கடந்த 30 வருடங்களாக தமிழீழ விடுதலையில் இந்தியாவின் நிலைப்பாடு விடுதலைக்கு எதிரான நிலைப்பாடாகத் தான் இருக்கிறது. அது காங்கிரசு ஆனாலும் சரி பாஜக ஆனாலும் சரி ஒரே நிலைப்பாடு தான்.

முள்ளிவாய்க்கால் படுகொலை முடிவடைந்து மூன்று வருடங்கள் கடக்க இருந்த சூழலில் 2012ல் அமெரிக்கா, ஐ.நா. மனித உரிமை அவையில் தீர்மானம் ஒன்றை முன்மொழிகிறது. கொலைகார சிங்கள அரசே நியமித்த 'கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க‌ ஆணைய குழு'வின் அறிக்கையை (LLRC) நடைமுறைப்படுத்த சொன்னது. அது நீதி கேட்டு நின்ற ஈழத்தமிழர்களுக்கு எவ்விதத்திலும் துணை செய்வதாய் இல்லை. அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை மேலும் நீர்த்துப் போகச் செய்து, பின்னர் ஆதரித்தது இந்திய அரசு.

மீண்டும் 2013ல் தீர்மானத்தை ஐ.நா. அவையில் கொண்டு வந்த‌து அமெரிக்கா. அந்த தீர்மானமும் கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைய குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்தச் சொன்னது. சர்வதேச போர்க்குற்ற விசாரணை ஒன்றே நீதியை உறுதி செய்யும் என்ற காரணத்தினால் அந்த தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வரவோ அல்லது புதியதோர் தீர்மானத்தைக் கொண்டு வரவோ வேண்டும் என்று இந்திய அரசை நோக்கி கோரிக்கைகள் எழுந்தன. ஆனால், இந்திய அரசோ அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தில் இலங்கைக்கு நெருக்கடி கொடுப்பதாக இருந்த வரிகளை அகற்றவும், மாற்றவும் வேலை பார்த்தது.

இந்திய அரசு ஒரு புதிய தீர்மானத்தையோ அல்லது மாற்றத்தையோ கொண்டு வராது என்றும் தெரிந்த‌தால் மாணவர்களின் போராட்டமும் இந்திய அரசுக்கு எதிரான போராட்டமாக மாறியது. கலைக் கல்லூரி, சட்டக் கல்லூரி, பொறியியல் கல்லூரி எனத் தொடர்ந்து ஐஐடி மாணவர்கள் வரை போராட்ட களத்தில் இறங்கினர். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இந்திய அரசு அலுவலகங்கள் முற்றுகையிடப்பட்டன. அதாவது பாஸ்போர்ட் அலுவலகம், எஸ்.பி.ஐ வங்கி, தபால் நிலையம், ரயில் நிலையம், பி.எஸ்.என்.எல் அலுவலகம் அதன் உச்சகட்டமாக ஆளுநர் மாளிகை மற்றும் இந்திய இராணுவ முகாம் முற்றுகை என்று மாணவர் போராட்டம் சென்று கொண்டு இருக்கிறது.

இந்தப் போராட்டமானது 1964 இந்தி எதிர்ப்புப் போராட்டம் எப்படி இந்திய அரசுக்கு எதிராக உருப்பெற்றதோ அதே போன்று இப்போராட்டமும் இந்திய அரசுக்கு எதிராக உருக்கொள்ளத் தொடங்கியுள்ளது. தமிழக மீனவர்கள் மீதான‌ சிங்கள இராணுவத்தின் தொடர் தாக்குதலும் அதனை இந்திய அரசு கண்டு கொள்ளாமல் இருந்தது மட்டுமல்லாமல் சிங்கள அரசை தொடர்ந்து தாங்கி பிடித்துக் கொண்டு இருப்பது என்பது மாணவர்களின் போராட்டத்தை தீவிரப்படுத்தி, தமிழினப் படுகொலையில் இந்தியாவின் நேரடி பங்கை நினைவுபடுத்துவது மட்டுமல்லாது சர்வதேச போர்க்குற்ற விசாரணையில் இந்தியாவையும் இணைக்க வேண்டும் என்ற முழக்கத்தை எழுப்ப வைத்துள்ளது.

இந்த வரலாற்றுச் சூழலில் தமிழீழ விடுதலையை முன் கொண்டு செல்வதற்கான முதற்படியான பன்னாட்டு போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கான விசாரணை, அதற்கு அடுத்த இலக்கான பொதுவாக்கெடுப்பு அடைவதற்கு இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை மாற வேண்டியது அடிப்படையான தேவையாகும். இந்தியாவின் வெளியுறவுத் துறைக் கொள்கை மாறுவதற்கு இந்தியப் பாராளுமன்றத்தில் தமிழினப் படுகொலையை அங்கீகரித்தாக வேண்டும். ஆனால் இன்று வரை அனைத்து இந்திய அளவிலான‌ தேசிய கட்சிகளும், தமிழினப் படுகொலையையோ தமிழர்களுக்கான தாயக உரிமையையோ அங்கீகரிக்கத் தயாராக இல்லை. தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க. போன்ற கட்சிகள் வாக்கு நலனுக்காக அவ்வப்போது தமிழினப் படுகொலையைப் பற்றி பேசும் போக்கு இருந்து வருகின்றது. தற்பொழுது தமிழகத்தில் எழுந்துள்ள மாணவர்கள் மற்றும் பல்வேறு பிரிவினர்களின் போராட்டத்தின் விளைவாக தி.மு.க., காங்கிரசு அணியில் இருந்து பிரிந்து நிற்கிறது. முன்பு எப்பொழுதும் இல்லாத அளவிற்கு அனைத்து இந்திய தேசிய கட்சிகளின் தமிழீழம் குறித்தான நிலைப்பாடு கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. காங்கிரசு ஆனாலும், பாஜக ஆனாலும் சரி அடுத்த தேர்தலில் தமிழீழம் குறித்தான நிலைபாடு மாறாமல் எதிர்க்கொள்ள முடியாது.

இந்த வரலாற்றுத் தருணத்தில் தமிழ்ச் சமூகத்தில் உணர்வின் அடிப்டையில் ஒட்டுமொத்த இந்திய தேசியக் கட்சிகளை நிர்பந்திக்கக் கூடிய வாய்ப்புள்ளது. இந்த சூழலில் இரண்டு மூன்று நாட்களாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.திருமுருகன் திருச்சி, தஞ்சை, கோவை, மதுரை ஆகிய ஊர்களில் கல்லூரி மாணவர்களைச் சந்தித்து 'நாம் அமெரிக்காவை எதிர்க்க வேண்டும், அமெரிக்க‌ப் பொருட்களைப் புறக்கணிப்பது, அமெரிக்க அரசை நிர்பந்தித்து அடுத்து ஐ.நாவில் கொண்டு வரும் தீர்மானத்தைப் பலப்படுத்தும்' என்று கருத்து உருவாக்கி வருகிறார்.
 
சென்னையில் 21ஆம் தேதி மாணவர் கூட்டமைப்பு சார்பில் டி.பி.ஐ. முன்பு நடைபெற்ற ஊர்வலத்தில் மே 17 இயக்கத்தைச் சார்ந்த சிபி அவர்கள் (mcc மாணவர் மற்றும் மே 17 இயக்கத்தின் நெல்லை மாவட்ட பொறுப்பாளர் லேனா குமாரின் மகன்) 40-50 மாணவர்களை kfc சிக்கன் கடையை முற்றுகையிடத் தூண்டியுள்ளார். அது நடந்தும் உள்ளது. இதன் தொடர்ச்சியாக கொக்கோ கோலா, பெப்சி மற்றும் இதர அமெரிக்கப் பொருட்களை புறக்கணிக்க கூறியுள்ளார். பல்வேறு ஊடகங்களின் வாயிலாகவும் இக்கருத்தைப் பரப்பியுள்ளார்.

இந்தியாவின் நிலைப்பாட்டைப் புறக்கணித்துவிட்டு அமெரிக்க‌ எதிர்ப்பு என்று பேசுவது இந்திய அரசுக்கு சாதகமானதாகவும், ஒட்டு மொத்த போராட்டத்தை திசை விலகச் செய்வதாகவும் அமையும். மே 17 திருமுருகன் அவர்களின் இந்த அரசியல் போக்கு இப்போராட்டத்தின் அரசியல் இலக்குக்கு ஊறு செய்யக் கூடியது; ஒட்டுமொத்தப் போராட்டத்தையும் விழலுக்கு இறைத்த நீராக மாற்றக் கூடியது.

இந்திய அரசின் நிலைபாட்டை மாற்ற நிர்பந்திக்க வேண்டிய காலகட்டத்தில் ஐ.நா. அதிகாரிகளை போர்க்குற்றவாளியாக விசாரிக்க வேண்டும் என்ற முழக்கத்துடன் ஓரிரு மாதங்களாக செயல்பட்டு வந்துள்ளார். ஐ.நா. அமைப்பு என்பது உலக ஏகாதிபத்தியத்தின் பிடியில் இருக்கும் நிறுவனமாக இருந்தபோதும் தமிழீழ விடுதலையை முன்கொண்டு செல்ல உதவக் கூடிய போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கான பன்னாட்டு விசாரணையை கொண்டு வருவதற்குரிய மையமாக இருக்கின்றது. ஐ.நா.வை நோக்கிப் போராட்டங்கள் மேற்கொள்வதென்பது மேற்குலகில் ஏதிலிகளாக வாழும் புலம்பெயர் தமிழர்களின் கடமையாக உள்ளது. ஆனால் தமிழகத்தின் கடமை என்பது இந்திய அரசின் நிலைபாட்டை மாற்றுவதும், அதனூடாக‌ ஐ.நா.வில் ஈழப் போராட்டத்திற்கு வலு சேர்ப்பதும் தானே தவிர‌ ஐ.நாவை எந்த ஒரு விதத்திலும் நிர்பந்திக்க முடியாது.

போராட்டத்தை திசை விலகச் செய்யும் வகையில் மே 17 இயக்கம் முன் வைத்துள்ள இந்தியாவைப் பாதுகாக்கும் அரசியலை முறியடிப்போம்.

மாணவர் போராட்டத்தை இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கைக்கு எதிரான போராட்டமாக வளர்த்தெடுப்போம். அதில் தான் தமிழீழ விடுதலைக்கானப் போராட்டம் வேகமெடுக்கும். இந்தியாவை அடி பணியச் செய்வோம். தமிழீழ விடுதலையை வென்றெடுப்போம்.

- அருண்சோரி, சென்னை மாவட்டச் செயலாளர், தமிழ்நாடு மக்கள் கட்சி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It