கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

Tamil Nadu schoolஅன்னச்சத்திரம் ஆயிரம் வைத்தல்

ஆலயம் பதினாயிரம் நாட்டல்

அன்னயாவினும் புண்ணியம் கோடி

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்

என்றார் பாரதி.

தேடு கல்வியிலாத் தோரூரைத்

தீக்கு இரையாக மடுத்தல்''

என்று கல்விக்கூடம் இல்லாத ஊரைத் தீயிட்டுக் கொளுத்துங்கள் என்று பொங்கி எழுந்தவரும் அவரேதான். ஆனால் இன்றையத் தமிழகத்தின் நிலைமை என்ன? எழுத்தறிவு விகிதம் 80.33. அதிலும் பெண்களின் எழுத்தறிவுவிகிதம் 73.44 மட்டுமே. எனவேதான் பிச்சை எடுத்தாவது பள்ளிகளைக் கட்டிப் படிக்க வரும் குழந்தைகளுக்கு மதியம் உணவும் தருவேன் என்றார் பெருந்தலைவர் காமராஜர். அதிகக் குழந்தைகளைப் பள்ளிக்குக் கொண்டு வந்தவர் என்ற பெருமையும் அவரையே சாரும்.

கல்வி உரிமைச்சட்டமும் புதியகல்விக் கொள்கையும்:

14 வயது வரையில் அனைத்துக் குழந்தைகளுக்கும் தரமான கல்வி தரவேண்டும் என்ற நோக்கத்தில்தான் 2009 இல் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின் 16 ஆவது பிரிவில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு முடிவில் வாரியப் பொதுத்தேர்வு நடத்தவேண்டும் என்று குறிப்பிட்டாலும் இதையே 30 (1) இல் வேறுவிதமாகக் குறிப்பிடப்பட்டுள்ளதோடு 30(4) 1 இல் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளின் இறுதியில் வழக்கமான ஒரு தேர்வு நடத்தப்பட வேண்டுமெனவும், (2) அதில் தோல்வியுறும் மாணவர்கட்கு உடனடி மறுதேர்வு நடத்தப்படவேண்டுமெனவும் (3) உடனடித் தேர்விலும் தோல்வியுற்றோர் அதேவகுப்பில் நிறுத்தம் செய்யப்பட வேண்டுமெனவும் (4) நிறுத்தம் செய்யப்படுவதும் நிறுத்தமின்றி மேல்வகுப்புக்கு அனுப்புவதும் அந்தந்த மாநில அரசுகளின் முடிவுக்கு உட்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உட்பிரிவு 1 இல் குறிப்பிட்டுள்ளது போல தற்பொழுதும் ஆண்டுத் தேர்வு நடத்தப்பட்டுக் கொண்டுதான் உள்ளது. பிறகு ஏன் அவசர அவசரமாகப் பொதுத்தேர்வு ஆணையைத் தமிழ்நாடு அரசு பிறப்பித்தது என்பதுதான் கல்வியாளர்களின் கவலையாக உள்ளது.

மேலும் உட்பிரிவு 4 இல் நிறுத்தம் செய்வதும் செய்யாததும் மாநிலங்களின் விருப்பம் என்று குறிப்பிட்டிருந்தாலும் முதல் 3 ஆண்டுகளுக்கு மட்டும் நிறுத்தம் இல்லாத் தேர்ச்சி என தமிழக அரசின் முடிவின் உள்ளர்த்தம் என்ன என்பதும் புரியாமல் இல்லை. புதிய கல்விக் கொள்கையும்கூட வரைவு அறிக்கையாகத்தான் உள்ளதே தவிர இன்னும் சட்டமாகவில்லை என்பதே உண்மை.

தமிழக அரசு மட்டும் குழந்தைகளுக்குப் பொதுத்தேர்வு நடத்துவதில் இவ்வளவு அவசரம் காட்டுகிறது என்பதுதான் புரியாத புதிராக உள்ளது. மத்திய அரசுக்கு மிகவும் விசுவாசமாக உள்ளோம் என்பதைக் காட்டப் பிஞ்சுக் குழந்தைகளைப் பலிகடா ஆக்குவது ஏற்றுக் கொள்ளத் தக்கதன்று.

தோல்வி முத்திரை

எல்லோரும் படித்து விட்டால் எங்களுக்கு யார் ஓட்டு போடுவார்கள்? எங்களுக்கு யார் கொடி பிடிப்பார்கள்? ஆகவே அனைவருக்கும் கல்வி என்று ஒருபக்கம் கூறிவிட்டு உண்மையில் அவர்களைப் படிக்கவிடாமல் செய்வது அரசின் நோக்கமா என்ற ஐயம் மேலிடுகிறது.

கல்வி குழந்தைகளின் அடிப்படை உரிமை. 14 வயது அதாவது எட்டாவது வகுப்புவரை இடைநிறுத்தம் இல்லாக் கல்வியை எல்லாருக்கும் அளிக்க வேண்டும் என்ற ‘கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் 2009' என்பது ஒரு கண்துடைப்பு நாடகமா? பத்து வயதுக் குழந்தைக்கு ஒரு பொதுத்தேர்வு என்ற அச்சத்தை உண்டாக்கி அதில் தோல்வியுற்றால் ‘பெயில்' என்ற முத்திரை அக்குழந்தையின் உள்ளத்தில் குத்தப்படும். ‘பெயிலான நீ படிச்சது போதும்'' எனக்கூறி அப்பனும் ஆத்தாளும் அந்தக் குழந்தையைப் பள்ளிக்கு அனுப்பமாட்டார்கள். குழந்தை தொடக்கக் கல்விகூட இல்லாமல் முடங்கிவிடும். ஏழை, கிராம விவசாயத் தொழிலாளர்களின்

குழந்தைகள் குறிப்பாகப் பெண் குழந்தைகள் நிலைமை என்னவாகும்? கல்வியளிக்கும் சூழலில் சமத்துவம் இல்லையாம். ஆனால் சமமானத் தேர்வாம்! அம்மா ஆட்சியில் 5 வயதில் பொதுத்தேர்வு இல்லையாம்! ஆனால் அம்மாவின் வழி நடக்கும் ஆட்சியில் பொதுத்தேர்வாம்! படிப்பில் இடைநிறுத்தம் ஏற்பட வழிவகுக்கும் திட்டத்துக்கு ஏன் இவ்வளவு அவசரமோ?

அனைவருக்கும் தேர்ச்சி என்பது அப்படியே மேல்வகுப்புக்கு அனுப்புவது என்பது அல்ல பொருள். அந்தந்த வகுப்புக்குரிய தகுதியை உளவியல் ரீதியாக உண்டாக்குவது என்பதே அதன்பொருள். ஒன்றுமறியாப் பிஞ்சுக் குழந்தைகட்கு சூழலுக்கு ஏற்ற கல்வி தராமல் மண்டுக் குழந்தைகள் என்னும் மகுடஞ் சூட்டி வீட்டுக்கு அனுப்ப வேண்டாம் எனில் 5, 8 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அறிவிப்பினை உடனே அரசு திரும்பப் பெற வேண்டும்.

தேர்வின் மீது அச்சமும் வெறுப்பும்

10, 12 ஆம் வகுப்புக்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் 201718 ஆம் ஆண்டிலிருந்து 11 ஆம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு கொண்டு வரப்பட்டது.

ஆண்டுதோறும் தேர்வு என்பதில் மாணவரின் பதற்றம் அதிகமானது. பொதுத்தேர்வு நடைபெறும் ஆண்டுகளுக்கு இடையே ஓராண்டு இடைவெளி இருந்தது. மாணவரிடையே பதற்றத்தைக் குறைக்க வாய்ப்பு அளித்தது. ஆனால் 3 ஆண்டுகள் தொடர்ந்து பொதுத் தேர்வினைச் சந்திப்பதால் மாணவர்கட்குப் பொதுத்தேர்வின் மீது ஓர் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியதோடு தேர்வின் மீதிருந்த ஆர்வத்தையும் குறைத்தது.

பொதுத்தேர்வைப் பற்றிய ஒரு குறைந்த பட்சப் புரிதல்கூட இல்லாத வயதில் இப்படிப்பட்டத் தேர்வு அவசியமானதா என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

மனஅழுத்தம்

பொதுத்தேர்வு என்றாலே பெற்றோருக்கு ஏற்படும் மனஅழுத்தம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பெற்றோரின் மனஅழுத்தமும் தாக்கமும் குழந்தைகள் மீதுதான் சுமத்தப்படும். மேலும் தேர்வில் விடை அளிக்கமுடியாத ஒரு வினாவுக்குச் சற்றுநேரத்தில் குழந்தை சரியாகப் பதில் கூறும்.

இது குழந்தைகளின் இயல்பான நிலையாகும். தேர்வுபயத்தில்கூட விடையைக் குழந்தை மறக்கக்கூடும். குழந்தைகளுக்குத் தேர்வு நோக்கில் பாடம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை. குழந்தைகள் என்ன புரிந்திருக்கிறார்கள் எனக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியருக்குத் தெரிந்திருந்தாலே போதுமானதாகும்.

திறன்வளர்ச்சி

பொதுத்தேர்வு என்றவுடனே குழந்தைகள் படிப்பில் மட்டுமே நாட்டம் செலுத்தும். சிறப்பு வகுப்புக்களுக்கு அனுப்பப் பெற்றோர் ஆசைப்படுவர். பாடத்தைப் புரிதலைவிட விடைகளை மனப்பாடம் செய்யக் குழந்தைகள் தூண்டப்படுவர். செய்முறைப் பயிற்சி, திறன் வளர்ப்புப் பயிற்சி போன்றவை இருக்காது. இசை, நாட்டியம், ஓவியம் போன்றவற்றில் ஆர்வமுள்ள குழந்தைகளுக்கு வாய்ப்பு மறுக்கப்படும்.

குழந்தைகளின் கல்வி நலன்

எனவே, அரசு 5, 8 ஆம் வகுப்புக்களுக்கு பொதுத்தேர்வு என்பதை விலக்கிக் கொண்டு பள்ளிச் சூழ்நிலை குழந்தைகளுக்கு ஆர்வமூட்டும் வகையில் அமையுமாறு ஏற்படுத்திக் கொடுப்பதிலும் போதுமான தகுதிபெற்ற ஆசிரியர்களைப் பணியமர்த்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

இன்றைய காலக்கட்டத்தில்கூட கழிவறை இல்லாத பள்ளிகள் அதிலும் குறிப்பாகப் பெண்குழந்தைகள் பயிலும் பள்ளிகள் உள்ளதாக அறிகிறோம். பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்காத பல பள்ளிகள் உள்ளன. இவற்றை எல்லாம் போக்குவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.

கல்வியில் முன்னேறிய நாடான பின்லாந்தில் 10க்கு மேற்பட்ட வயதில்தான் பள்ளிகளில் கல்வி தொடங்குகிறது. செய்முறைக்கு முன்னுரிமை தரப்படுகிறது. அங்கு தேர்வுமுறை எளிதாக்கப்பட்டிருக்கிறது.

இவற்றையெல்லாம் பார்த்து வந்த பின்னும் தமிழகக் கல்வி அமைச்சர் குழந்தைகள் கல்வி நலனில் அக்கறை செலுத்தாமல் மத்திய அரசின் முரணான கல்விக் கொள்கைக்குத் துணை போக வேண்டாமே !

- முனைவர் முருகையன் பக்கிரிசாமி