சாதி மறுப்பு – தீண்டாமையொழிப்பு – சகோதரத்துவத்தை வலியுறுத்திப் பேசும் தலைவர்கள் தங்கள் உரைவீச்சின்போது வென்னியூர் கார்மேகத்தேவர் என்ற பெயரைச் சுட்டிக்காட்டிப் பேசுவதைப் பலமுறை கேட்க முடியும். தமிழ்ச் சமுதாய மக்கள் யாவரையும் சமமாகக் கருதும் அவரின் சிந்தனைப் போக்கு சமத்துவத்தை நேசிப்போரையும் சுயமரியாதை உணர்வோடு வாழ முற்படுவோரையும் கொண்டாடச் செய்வதாக அமைந்தது.

அவர் வாழ்ந்து மறைந்து அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாகியும் அந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கும், அவரைப் பற்றியறிந்த – அவரோடு நெருக்கமாக இருந்த மக்கள் இன்னும் மரியாதை நிமித்தம் ‘கார்மேகத்தேவர்' என்ற பெயரைச் உச்சரிக்க மறுத்து ‘முதலாளி’ என்றே அழைத்து வருகிறார்கள். அந்த மாமனிதனை அம்மக்கள் மிகுந்த நன்றியுணர்ச்சியோடு நினைத்துப் பார்க்கிறார்கள். அவர் குறித்துப் பேசும்போது கண்ணீர் தாரைதாரையாகக் கொட்டுவதோடு நினைவுகளும் வார்த்தைகளாக வந்து விழுகின்றன. அதில் கார்மேகத்தேவர் மீது அம்மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையும் மெல்ல வெளிப்படுகிறது.

யார் இந்த வென்னியூர் கார்மேகத் தேவர்?

karmega thevarகார்மேகத் தேவர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டைக்கு அருகிலுள்ள வென்னியூர் எனும் கிராமத்தில் 19.08.1908ல் பிறந்தார். அவரின் தந்தை ஒ.கருப்பையாத் தேவர் இளம் அகவையிலேயே பர்மாவிற்குச் சென்று கடுமையாக உழைத்ததன் காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு அதிபதியானார். அங்கு நிலபுலங்களையும் வணிகத்தையும் கவனித்துக் கொள்ள தனயன் கார்மேகத் தேவரை பர்மாவிற்கு அழைத்துச் சென்றார். கார்மேகத் தேவரின் மேலாண்மையின் கீழ் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் பிற நாட்டினரும் வேளாண்மை உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வந்தனர். அதனால் மக்கள் அவரை ‘முதலாளி’ என்று அழைக்கத் தொடங்கினார்கள். கார்மேகத் தேவரின் பரந்த சிந்தனையும் தொழிலாளர்களை அரவணைக்கும் பண்பும் அனைவரையும் ஈர்த்தது.

இரண்டாம் உலகப்போரும் அதன்பிறகு ஏற்படுத்தப்பட்ட இராணுவ ஆட்சியும் பார்மாவில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்வை ஒட்டுமொத்தமாகப் புரட்டிப் போட்டது எனலாம். தமிழர்கள் தங்கள் கடின உழைப்பால் சேர்ந்த நிலபுலங்களையும் உடைமைகளையும் அப்படியே விட்டுவிட்டு போட்டிருந்த உடுப்புகளோடு பர்மாவை விட்டு வெளியேற வேண்டிய நிர்க்கதிக்கு ஆளாக்கப்பட்டார்கள். அப்படியான நெருக்கடியானதொரு காலகட்டத்தில்தான் கார்மேகத் தேவர் சொந்த ஊருக்கு வந்து சேர்ந்தார்.

1942 –இந்தியத் துணைக்கண்டத்திலும் குறிப்பாக தமிழ்நாட்டிலும் ஆங்கிலேயருக்கு எதிராக ‘வெள்ளையனே வெளியேறு இயக்கம்’ தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. சுதந்திர தாகம் கொண்ட கார்மேகத் தேவர் மக்களைத் திரட்டிக் கொண்டு களத்தில் இறங்கினார். திருவாடானை சிறை தகர்ப்பு, தேவகோட்டை நீதிமன்றம் எரிப்பு உள்ளிட்ட சம்பவங்களில் பெரும்பான்மையாக கலகம் செய்தவர்கள் வென்னியூர்காரர்கள்தான். குறிப்பாக - திருவேகம்புத்தூர் காவல்நிலையத்தைக் கொளுத்தியது வென்னியூர் கார்மேகத் தேவர் தலைமையிலான கும்பல்தான் என்பதாக ஊகித்த ஆங்கிலேய காவல்துறை வென்னியூர் சென்று குடிசைகளைக் தீக்கிரையாக்கியது. தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த தியாகி பூச்சி என்பவரின் மாட்டை சுட்டுக் கொன்றது. இச்சம்பவங்களையொட்டி வென்னியூர் முனியப்பத் தேவர் மற்றும் சித்தூர் சிவஞானம் ஆகியோர் புதுக்கோட்டையில் தலைமறைவாக இருக்கும் தகவலறிந்து அங்கு சென்ற காவல்துறையினர் இருவரையும் கைதுசெய்து, திருமயம் ஊனையூர் காடுகளில் வைத்து துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்தனர். கார்மேகத் தேவரைப் பிடிக்க எவ்வளவே முயன்றும் ஆங்கிலேய காவல்துறையால் கண்டுபிடிக்க முடியவில்லை என்கிறார் வென்னியூரைச் சேர்ந்த முதியவர் உடையான்.

அயலகமான பர்மா மண்ணில் தமிழர்கள் சாதி, மத பேதங்களுக்கு இடமின்றி சுதந்திர உணர்வோடு வாழ்ந்ததையும் தமிழ்நாட்டில் வாழும் தமிழர்கள் சாதியச் சகதியில் சிக்குண்டு சக மனிதனையே இழிவுபடுத்தி - அடக்குமுறை செய்யும் அற்பத்தனங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கிறார். தேவகோட்டை - திருவாடானைப் பகுதிகளில் நிலவுகின்ற இத்தகைய சாதியப் பாகுபாடுகளைக் களைந்து மக்களனைவரும் சமம் என்கிற நிலையை எய்துவதற்குப் போராட வேண்டும் என்பதில் உறுதி காட்டினார். அவரின் அத்தகைய சிந்தனையும் செயல்பாடும் அப்பகுதி மக்களுக்குப் பிடித்துப் போய்விடுகிறது. அதனால் அவருக்கு மக்கள் செல்வாக்கு உயரத் தொடங்குகிறது. கார்மேகத் தேவரின் தொடர்ந்த மக்கட் பெரும்பணிக்கு அவரின் தந்தையார் சேர்ந்து வைத்த சொத்துக்கள் பேருதவி புரிந்திருக்கின்றன. வறியவர்கள் யார் வந்து கேட்டாலும் எவ்வித பிரதிபலனையும் எதிர்பார்க்காது செல்வத்தை வாரி வழங்கும் வள்ளலாகவும் வள்ளலாரின் சத்திய தர்மசாலையைப் போன்று அணையா அடுப்பை வென்னியூரில் நிறுவி, வயிற்றுப் பசியால் வாடுவோரின் பசிப்பிணி போக்கிய பெருந்தகையராகவும் விளங்கியிருக்கிறார் கார்மேகத் தேவர்.

கார்மேகத் தேவரின் இல்லச்சூழலே மனித சமத்துவத்திற்கான முன்மாதிரிக் களமாக - அனைத்து சாதியினரும் ஒன்றாக அமர்ந்து உண்ணும் சமத்துவ பீடமாக விளங்கியிருக்கிறது. அங்கு யார், எப்போது சென்றாலும் வயிறார உண்டு மகிழலாம். மதிய வேளை உணவானது நண்பகல் தொடங்கி அந்திசாயும் நேரம்வரை தொடர்ந்து கொண்டே இருக்கும். அவர் வீட்டுக்கு வரும் எவரும் உணவருந்தாமல் வெளியே செல்லக்கூடாது என்பது எழுதப்படாத விதி. ஏனெனில் சகல சாதியினரும் ஒன்றாக அமர்ந்து உண்ணும் வகையில் செய்யப்பட்டுள்ள இந்த ‘சமபந்தி பேஜனத்தை’ சாதிய உள்நோக்கத்தோடு யாரும் புறக்கணித்து விடக்கூடாது என்பதற்காகவே அந்த ஏற்பாடு. சாதிய மேலாதிக்க உளவியலோடு அவ்விடத்திற்கு யாரும் செல்லவும் முடியாது. அத்தகைய ஒப்பற்ற ஆளுமையாக விளங்கியவர் கார்மேகத் தேவர்.

ஓர் ஆண்டு அன்னதானத்திற்கான அரிசித் தேவைக்காக அவர் வயலில் மட்டுமல்லாது - அந்த ஊரில் - பக்கத்து ஊரில் என, அந்தப் பகுதியில் விளைந்த நெல்மணிகள் அனைத்தும் விலைகொடுத்து வாங்கி, மூட்டை மூட்டையாக அவரின் இல்லத்தில் ஒரு மூலையில் அம்பாரம்போல் குவித்து வைக்கப்பட்டிருக்கும்.

கார்மேகத்தேவர் தேவகோட்டை ஜில்லா போர்டு உறுப்பினராகத் தேர்வுசெய்யப்பட்டபோது தனக்கிருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களுக்கான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை முனைப்புடன் செய்து கொடுத்தார்.

தமது சொந்த ஊரான வென்னியூர் கிராம மக்கள் சாலை வசதியில்லாமல் அவதிப்பட்டதையடுத்து அதனை நிவர்த்தி செய்வதற்கான முயற்சியில் தீவிரம் காட்டினார். சருகனிக்கும் திருவேகம்புத்தூருக்கும் இடையேயுள்ள வென்னியூருக்கு சாலை அமைக்க வேண்டுமெனில் சுமார் அரை கிலோமீட்டர் தொலைவிற்கு விளைநிலங்களைக் கையகப்படுத்த வேண்டும். முதன்மைச் சாலை தொடங்கி ஊர் வரைக்கும் இருப்பது தமது சொந்த நிலமே. பிரச்சினை இல்லை. ஆனால் நடுவில் வேறொருவரின் இரண்டு சென்ட் இடம் மட்டும் சாலை அமைப்பதற்குத் தடையாய் இருந்து வந்தது. அதன் உரிமையாளர் தயங்கி நின்றார். அவரின் வாயை அடைக்க அந்த இடத்திற்குப் பக்கத்திலிருந்த தமது ஒரு ஏக்கர் நிலத்தை அதற்கு ஈடாகக் கொடுத்து தம் ஊருக்கு முழுமையான சாலையமைத்துக் கொடுத்து வென்னியூர் மக்களின் நீண்ட காலக் கோரிக்கையை நிறைவேற்றினார்.

பட்டியல் சமுதாய மக்கள் தற்போது வசித்து வரும் வென்னியூரையொட்டியுள்ள ‘காலனி’ அமைப்பதற்காக அந்நாளில் தமது நான்கு ஏக்கர் நிலத்தைத் தாரைவார்த்துக் கொடுத்தார் வென்னியூர் கார்மேகத்தேவர். அதற்கு நன்றிக்கடனாக அக்காலனிக்கு கார்மேகத் தேவர் பெயரைச் சூட்ட வேண்டும் என்ற பட்டியல் சமுதாய மக்களின் நீண்டகால முயற்சி, சரியான முன்னெடுப்பு இல்லாததால் நடைபெறாமல் போயிற்று.

நாகரிகம் தாழைத்தோங்கும் இன்றைய நாட்களில்கூட சில கோயில்களில் சாதியின் பெயரால் பட்டியல் சமுதாய மக்களுக்கு வழிபாட்டு உரிமை மறுக்கப்படும் நிலையில், இருபதாம் நூற்றாண்டின் மத்திய காலத்தில் சாதிவெறி எவ்வாறு கனன்று கொண்டிருந்திருக்கும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் வட்டத்திலுள்ள உருவாட்டி பெரிய நாயகி அம்மன் திருக்கோயிலுக்குள் சென்று வழிபட ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கு சாதி இந்துக்கள் அனுமதி மறுத்து வந்தனர். இதனையறிந்த கார்மேகத்தேவர் வென்னியூர் ஆந்தகுடி, திருவேகம்பத்தூர், சித்தானூர், உறுதிக்கோட்டை, ஒரசூர், பண்ணவயல், பள்ளமடம் உள்ளிட்ட அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த பட்டியல் சமுதாய மக்களை அழைத்துக் கொண்டு அக்கோயிலுக்குள் சென்று ஆலயப் பிரவேசப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்தார்.

அதே போன்று சாதி இந்துக்களின் எதிர்ப்புகளுக்கிடையே இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகிலுள்ள திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலுக்குள் ஒடுக்கப்பட்ட மக்களை அழைத்துச் சென்றார். “முதலாளி அனைவரையும் சமமாக நடத்தப் பாடுபட்டவர். சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்களை முதலாளி திருவெற்றியூர் கோயிலுக்குள் அழைத்துக் கொண்டு சென்றார். அன்று நாங்கள் ரொம்ப சந்தோசமாக இருந்தோம்” என்று ஆலயப் பிரவேச அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார் வென்னியூரைச் சேர்ந்த முதியவர் உடையான்.

இவ்வாறான தருணங்களில் ‘சமபந்தி போஜன’த்துக்கும் ஏற்பாடு செய்வதுண்டு. அதற்குத் தேவையான அரிசி, காய்கறிகள், புளி, மிளகாய் முதலான பொருட்களையும் பாத்திரங்களையும் வீட்டிலிருந்து எடுத்துச் சென்று, கோயிலுக்கு வெளியே வைத்து, சமைத்து அக்கோவிலுக்கு வரும் அனைவரையும் அழைத்து உண்ணச் செய்வார். இந்நிகழ்வானது சுற்று வட்டாரப்பகுதிகளில் பரவலாக வியந்து பேசப்பட்டது. இதற்கு சனாதனத்தில் ஊறிப்போன அப்பகுதி நாட்டார்களால் புழுங்கித் தீர்த்ததைத் தவிர வேறு எதிர்ப்பைத் தெரிவிக்க முடியவில்லை.

வென்னியூரைச் சுற்றி வாழும் பட்டியல் சமுதாயத்தினர் சாதி இந்துக்களின் அரம்பத்தனத்தால் பாதிக்கப்பட்டு தம்மிடம் முறையிட்ட தருணங்களிலெல்லாம் சம்பந்தப்பட்டவர்களை வரவழைத்து அவர்கள் தம் தவற்றை உணரும் வகையில் அறிவுறுத்தியும் தேவைப்படின் கடுமையாகக் கண்டித்தும், ஒடுக்கப்பட்ட மக்களின் உற்ற தோழனாக கார்மேகத்தேவர் விளங்கினார்.

கார்மேகத்தேவரின் இல்லற வாழ்க்கையானது அவ்வளவு உவப்பானதாக இல்லை. அவரின் சமத்துவக் கொள்கை அவர் பிறந்த சமுதாயத்தினருக்கு உவப்பானதாக இல்லை. எனவே வாய்ப்பு வசதியிருந்தும் அவருக்குப் பெண் கொடுக்கத் தயங்கினர். இந்நிலையில் வென்னியூருக்கு அருகிலுள்ள சிறுநல்லூரைச் சேர்ந்த மீனாட்சிக்கும் கார்மேகத்தேவருக்கும் இல்லத்தாரின் எதிர்ப்பை மீறி திருமணம் நடந்தது. அனைவரையும் சமமாகக் கருதும் கார்மேகத்தேவரின் எதார்த்தக் குணம் மீனாட்சியின் தந்தையாரும் ஆதிக்கம் மனோபாவம் கொண்ட நிலவுடைமையாளருமான சிறுநல்லூர் வேலுத்தேவருக்குப் பிடிக்கவில்லை. இருப்பினும் மணமகள் ஒத்துக் கொண்டதால் ஒரு விடிகாலைப் பொழுதில் மாட்டு வண்டியில் அழைத்து வந்து, அவ்வூர் இசுலாமியர்களின் ஒத்துழைப்புடன் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு கமலா என்கிற குழந்தை பிறந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக அக்குழந்தை தன் மூன்றாவது அகவையில் இறந்து விட்டது. அதன் பிறகு அவர்களுக்குக் குழந்தை பிறக்கவில்லை. அதனால் இரவிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணம்மாள் என்பவரை இருவீட்டார் சம்மதத்துடன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கும் குழந்தையில்லை.

சில ஆண்டுகளுக்குப் பிறகு கார்மேகத்தேவரின் உடல்நிலை திடீரென மேசமானது. அவரின் வயிறு வீங்கி படுத்த படுக்கையாக காலந்தள்ள வேண்டிய கொடூரத்திற்கு ஆளானார். இந்நிலையில் 1952ல் தமிழகத்திற்கு முதலாவது மக்களவைத் தேர்தல் வந்தது. திருவாடானை சட்டமன்றத் தொகுதிக்கு கார்மேகத் தேவரை வேட்பாளராக நிறுத்தலாம் என்ற திட்டம் காமராசருக்கு இருந்திருக்கிறது. கார்மேகத்தேவர் மருத்துவமும் வீடுமாக இருந்ததால் அதற்கான வாய்ப்பில்லாமல் போயிற்று.

இந்நிலையில் விடுதலைப் போராட்ட வீரரும் சமத்துவவாதியுமாக விளாங்காட்டூர் ‘பாலபாரதி’ செல்லத்துரையை முன்மொழிகிறார் கார்மேகத்தேவர். ஆனால் அவரை ஏற்க மறுத்து, நெய்வயல் ஆறுமுகம்சேர்வை வேட்பாளராக அறிவிக்கிறது காங்கிரஸ் கட்சி. இதில் கார்மேகத்தேவருக்கு உடன்பாடில்லை. காங்கிரஸ் கட்சி அறிவித்த வேட்பாளருக்கு எதிராக, சீர்திருத்தவாதியும் விடுதலைப் போராட்ட வீரருமான ‘பாலபாரதி’ செல்லத்துரையை சுயேச்சையாக நிறுத்தினார்கள். இரட்டை அரச இலைச் சின்னம் அவருக்கு ஒதுக்கப்பட்டது. கார்மேகத்தேவர் வீங்கிய வயிறுடன் வண்டியில் இருந்தவாறு பரப்புரையில் ஈடுபட்டார். இறுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரைத் தோற்கடித்து ‘பாலபாரதி’ செல்லத்துரை புதிய வரலாறு படைத்தார். வெளியங்குடி நடராஜத்தேவர், முப்பையூர் வேலுத்தேவர் ஆகியோர் அவரின் வெற்றிக்குப் பெரும் பாடாற்றினர்.

இந்திய சமூக அமைப்பில் நிலவும் சாதிய அடிமைத்தனங்களிலிருந்து ஒடுக்கப்பட்ட மக்களை மீட்டு, அனைவரும் சமம் என்ற ஆகச்சிறந்த நிலையை எய்துவதற்குக் கடும் போராட்டத்தை நடத்திய கார்மேகத்தேவர், கொடும் பிணிக்கு ஆளாகி தனது 45 – ஆம் அகவையில் மறைவெய்தினார்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் அவரின் வெற்றுடலைக் கண்டு தங்கள் ஆற்றாமையைச் சொல்லி அழுது தேம்பினர். சமத்துவம் - சகோதரத்துவத்துக்காக நீதிமான்கள் பலர் முன்னெடுத்த நெடும்பயணத்தில் தன்னையும் இணைத்துக்கொண்டு வரலாற்றில் நிலைபெற்றார் கார்மேகத்தேவர். இவரைப் போன்ற சமத்துவவாதிகளைக் கொண்டாடுவதென்பது சனாதனத்திற்கு எதிரான ஒருவகை அறக்கலகமே.

- தங்க.செங்கதிர்

Pin It