அப்படி, இப்படி என்று ஒருவழியாக சென்ற கல்வி ஆண்டில் பொதுத் தேர்தல்கள் மன்னிக்கவும் பொதுத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு தேர்வு முடிவுகளும் வெளிவந்தாகிவிட்டது. மாநில, மாவட்ட, பள்ளி அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களின் (நிறைவாகக் கற்றவர்கள் அல்ல) நிறழ்படங்களோடு செய்திகள் (பத்தி அளவில்) விளம்பரங்கள் (பக்கம் பக்கமாக) வெளிவந்தாகிவிட்டது. இதில் தனக்குக் கொடுக்கப்பட்ட 10 மாதங்களில் படித்து அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் பற்றிய செய்திகள் புல்லுக்கும் ஆங்கே பொசித்த வகையில் ..... பெரும்பாலான செய்திகள் விளம்பரங்கள் அனைத்தும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு மட்டும்!?. இப்படியாக எல்லாம் நல்லபடியாக!! நடந்தேறியது.

ம்ம்.... சூன் மாதம் கல்வியாண்டு தொடங்கியாகி விட்டது இது போல கடந்த பல ஆண்டுகளாக கோடைக்கால மாரியம்மன் திருவிழாக்களைப்போல் தேர்வுத் திருவிழாக்கள் நடந்தேறுவதும் உண்மையிலேயே கல்வி அக்கறையுள்ள சில கல்வியாளர்கள் பெருமூச்சு விட்டு தேய்ந்து போன குரலில் "இதெல்லாம் என்ன?" என்று பொறுமுவதும் ஆக இருந்தது போய் இன்று கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், செயல்பாட்டாளர்கள், தமிழ்த்தேசியவாதிகள், உண்மையான இடதுசாரிகள், ஆகியோர் மாற்றுக் கல்விக்காக உரக்க முழக்கமிடுவது மாற்றத்தை எதிர்நோக்குபவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக உள்ளது.

இந்நிலையில் நாமும் ஒரு துரும்பைக் கிள்ளிப் போடலாமே என்று இன்றைய கல்விச் சூழல் குறித்து எழுதப் புகுந்தால், மூளைக்குள் இத்தனைநாள் குமுறிக் கொண்டிருந்த வினாக்கள் மட்டுமே பொல பொலவெனக் கொட்டின. இதற்கான விடைகளை நாம் கற்றுக் கொண்ட, கற்றுக் கொண்டிருக்கிற, இன்னும் கற்றுக் கொள்ளப் போகிறவற்றைக் கொண்டு ஒன்றிணைத்து விடைகாண முயல்வோம். இனி வினாக்கள் :

இந்த வினாக்கள் மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் இவர்களை நோக்கியதாகவும் அல்லது இவர்களிடமிருந்தே வெளிப்படுவதாகவும் எடுத்துக் கொள்ளலாம். மொத்தத்தில் இவ்வினாக்கள் அவரவர் அவர்களிடத்திலேயே கேட்டுக் கொள்ளப்பட வேண்டியவை.

1. அரசுப் பள்ளிகளாகட்டும், தனியார் பள்ளிகளாகட்டும், பத்தாம் வகுப்பு, +2 வகுப்பு தேர்வு முடிவுகளும் மதிப்பெண்களும் மட்டும் பெரியதாகப் பேசப்படுகிறது. மீதமிருக்கின்ற 1 முதல் 9 வரை மற்றும் +1 (மழலையர் வகுப்புகள் நமக்கு உடன்பாடு இல்லை ஆதலால் விட்டுவிடலாம்) வகுப்பு மாணவர்கள் அந்த பத்தாண்டுகளில் என்ன கற்றுக் கொள்கிறார்கள்? அந்தந்த நிலைகளில் அவர்களின் கற்றல் அடைவுகள் என்ன? என்பது பற்றி ஒருவருக்கும் அக்கறை இல்லையா?

2. இடைநிலை, மேல்நிலைக் கல்வியில் இறுதி ஆண்டுத் தேர்வுகள் முறையே பத்தாம் வகுப்பு +2 மட்டுமே ஒரு மாணவரின் அனைத்து வாழ்வியல் விழுமியங்களை மதிப்பீடு செய்து விடுமா?

3. இன்றைய கல்வி, கற்றல் - பகுத்தாய்தல் - மாற்றங்களை நோக்கிச் செயல்படுதல் - செயல்பாட்டு பட்டறிவைக் கொண்டு கற்பித்தல் என்ற வகையிலான உலகின் அனைத்து கல்வியாளர்களும் வரையறுத்த விதமாக அமைந்திருக்கிறதா?

4. நம் தமிழ்நாட்டில் இன்றுள்ள கல்வி முறைகள், திட்டங்கள், முதலாளித்துவ நாடுகளிலும் வலியுறுத்தப்படுகின்ற கூடுமானவரை பின்பற்றுகின்ற, பின்பற்றப்படுகின்ற ""அனைத்து குடிமக்களுக்குமான ஏற்றத்தாழ்வற்ற - பாகுபாடற்ற கல்வி'' என்ற கூறுகளை சிறிதளவேனும் கொண்டிருக்கின்றனவா?

5. நம் பாடத்திட்டங்கள் நம் நாட்டின் சமச்சீரான வளர்ச்சிக்கானதல்ல என்பது நமக்கு நன்றாகத் தெரியும் ஆனால் அவை யாருக்காக? யாருடைய பரிந்துரையின் பேரில் யாரால் வகுக்கப்படுகின்றன? யாருக்காவது வெளிப்படையாகத் தெரியுமா?

6. ஏறத்தாழ 1000 ஆண்டுகள் தமிழக வரலாற்றில் நெடுகிலான பார்ப்பனிய கல்வி முறை தொழில்புரட்சிக்குப் பிந்தைய இன்றைய பெருநிறுவனமய (கார்ப்பரேட்) சூழலிலும் தன்னை அழகாகப் பொருத்திக் கொண்டு சிறிதளவு கூட தற்சார்புச் சிந்தனையற்ற அடிமைகளை உருவாக்கி வருவது முதலாளித்துவ அறிவு சீவிகளுக்குப் புரிகிறதா?

7. தம் மக்களுக்கு கல்வி தருவது என்பது மக்கள் மைய (சனநாயக) அரசின் கடமை என்பது இங்கு நிலவக்கூடிய போலி மக்கள் மைய தரகுத் தேர்தல் முறையில் தேர்வு செய்யப்பட்ட அல்லது தேர்தல் கட்சி அரசியல் வாதிகளுக்கு கிஞ்சித்தேனும் தெரியுமா?

8. கல்வி தருவது அனைவரும் சமமாகக் கற்கும் சூழலை ஏற்படுத்தித் தருவது என்பது ஒரு மக்கள் மையக் குடியரசின் கடமை ஆனால், கல்வி இங்கு நுகர்வுப் பண்டமாக மாற்றப்பட்டு கல்வியை விற்போர் வாங்குவோர் என்ற ஒரு பெரிய கல்வி வணிக சூழலை ஏற்படுத்தி விட்டது இதுவரை ஆட்சி செய்த ஆட்சி செய்து வருகிற அனைத்து ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள்தான் என்பது மக்களுக்காவது தெரியுமா?

9. தனியார் கல்வி வணிகக் கொள்ளையருக்கும் அனைத்து தேர்தல் கட்சி அரசியல்வாதிகளுக்கும் நெருக்கமான கொடுக்கல் வாங்கல் பிணைப்பு இருப்பதும், கல்வி வணிகக் கொள்ளை நிறுவனங்கள் மேற்சொன்ன அரசியல்வாதிகள் பலரின் மேலாண்மையிலும், பங்களிப்பிலும்தான் செயல்படுகின்றன என்ற வெட்ட வெளிச்சமான உண்மை! வெகுமக்களுக்குத் தெரியுமா?! அல்லது தெரிந்தும் தெரியாதது போல் இருக்கிறார்களா?

10. இன்றைக்கு பெரும்பாலான அரசுத் தொடக்கப்பள்ளிகள் மூடக்கூடிய ஆபத்தில் இருப்பதும் இன்னும் பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டு மாணவர் எண்ணிக்கையில் 90 விழுக்காடு தனியார் வசம் சென்றுவிடும் என்பதும், மீதமுள்ள பத்து விழுக்காடு மாணவர்களுக்கு எதற்கு அரசுப் பள்ளிகள் என்று அரசு தன்னுடைய கட்டணமில்லாக் கல்வி தரும் கடப்பாட்டிலிருந்து முற்றிலும் ஒதுங்குவதற்கு ஏதுவாக பல ஆண்டுகளாகத் திட்டமிட்டுக் காய் நகர்த்தப்பட்டு, இப்போது இன்னும் வேகமாகக் கல்வி, முழுமையாக தனியார் மயத்தை நோக்கி நகர்த்தப்படுவது, குறைந்தபட்சம் அரசுப் பள்ளிகளையே நம்பியிருக்கின்ற ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மக்கள், பிழைப்புக்காகவாவது அரசுப்பள்ளிகளை நம்பியிருக்கின்ற அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஆகியோருக்குத் தெரிகிறதா?

11. ""தமிழக அரசே அரசுப்பள்ளிகளை மூடாதே'' என்று இன்று முழக்கமிடும் ஆசிரியர் சங்கங்கள் தங்களுடைய தீர்மானங்களில், துண்டறிக்கைகளில் எந்த இடத்திலாவது ""கல்வியில் தனியார் மயத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும்'' ""தனியார் கல்வி வணிகக் கொள்ளை நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும்'' என்ற முழக்கங்களை முன் வைத்துள்ளனரா?

12. பெரும்பாலான தனியார் கல்விக் கொள்ளைக் கூடங்களின் இந்நாள் தாளாளர்கள் முன்னாள் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் என்பதும் இன்றைக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் (குறிப்பாக அறிவியல், கணிதப் பாட ஆசிரியர்கள்) தனியார் பள்ளிகளின் மறைமுகப் பங்குதாரர்கள் என்பதும், தனியார் பள்ளி மாணவர்களை 100/100, 200/200 என்ற மதிப்பெண் இலக்கங்களை அடைவதில் மட்டும் உயர்வாகக் காட்டி மாநில, மாவட்ட, முதல், இரண்டாம் இடங்களைப் பிடிப்பதற்கு அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மாலை நேர, இரவு நேர உழைப்புத்தான் காரணம் என்பதும்; ஆசிரியர் சங்கங்களுக்குத் தெரியாமல் போகுமளவுக்கு ஆசிரியர் இயக்கங்கள் வெறும் மனமகிழ் மன்றங்களாக மாறிப் போயினவா?

சரி இதெல்லாம் கிடக்கட்டும்.

13. தனியார் பள்ளியில் பயிலும் மாணவ மாணவர்கள் அவர்களின் ஒப்புதலோடுதான் அப்பள்ளியில் திணிக்கப் பட்டார்களா? அல்லது உலக, தாராள தனியார் மயங்கள் நடுத்தரவர்க்கப் பெற்றோர்களிடம் ஏற்படுத்திய நுகர்வு வெறி ஏதுமறியா அவர்களின் குழந்தைகç தனியார் பள்ளிகளில் திணிக்கச் செய்ததா?

14. சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் முடமாக்கப்பட்ட ஏழை எளிய மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் பயில்கிறார்களே அவர்களுக்காவது தங்கள் கால்களை உடைத்துத் தனியார் பள்ளி ஊட்டம்மிகு மாணவர்களோடு ஓடவிடுகிறார்கள் என்பது தெரியுமா?

15. என்ன போட்டி? எதில் போட்டி? இதில் வெற்றியாளர்கள் யார்? வெற்றி என்பது எந்த வரையறைக்குட்பட்டது? வெற்றி பெற்றால் என்னவாகும்? தோற்றால் என்னவாகும்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் நடுத்தர வர்க்கப் பெற்றோர்களுக்கு விடை தெரியுமா? அல்லது தெரியாமலேயே போட்டி நிறைந்த உலகம் என்ற ஒரு மாயையை குழந்தைகள் மூளையில் திணித்து, பதின்மப் பள்ளிகள் (மெட்ரிக்) நடுவண் பாடத்திட்டப் பள்ளிகள் (சி.பி.எஸ்.இ), பன்னாட்டுப் பாடத்திட்டப் பள்ளிகள் (ஐ.சி.எஸ்.இ) என்று குழந்தைகளை மாறி மாறி அலைக்கழிக்கிறார்களா?

16. அரசுப் பள்ளிகளில போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்று பலரும் கூறுகிறார்கள். உள்கட்டமைப்பு வசதிகள், பள்ளிச்சூழல் (ளீற்rrஷ்உற்யிழிது) என்றால் என்ன? என்று இந்த அரசுகளை நிர்வகிக்கும் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள், உயர் அலுவலர்கள், ஆகியோருக்குத் தெரிகிறதோ இல்லையோ, அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் தெரியுமா?

17. தனியார் பள்ளிகளில் உள் கட்டமைப்பு வசதிகள் இருப்பதாகக் கூறுகிறார்களே அந்தப் பெற்றோருக்கும், தனியார் பள்ளி மாணவர்களுக்காவது ஒரு கல்விக் கூடத்திற்கான உண்மையான உள் கட்டமைப்பு வசதிகள் யாவை? என்பது தெரியுமா?

18. திறனூக்க வகுப்பறைகள் என்று விளம்பர மாயையில் மயங்கி விட்டில் பூச்சிகளாய் தனியார் பள்ளிகளின் வாசலில் மொய்க்கும் பெற்றோர்களுக்கு எந்த ஒரு கல்விக்கூடமாக இருந்தாலும் வகுப்பறைச் செயல்பாடுகள் திறனூக்கிகளாகத்தான் இருக்க வேண்டுமென்பது தெரியுமா? தனியார் பள்ளிகள் விளம்பரங்களில் காட்டும் வகுப்பறைகள் வெறும் மிடுக்கு வகுப்பறைகள்தான் என்பதும் மாணவரிடையே திறன்கள் வளர்வதையோ, வளர்ப்பதையோ இங்குள்ள பார்ப்பனீய, காவித் தனியார் மயம் எந்தக் காலத்திலும் அனுமதிக்கப் போவதில்லை என்பதாவது தெரியுமா?

திறனூக்கம் - விதுழிமி (கட்டுரையாளர்) மிடுக்கு - விதுழிமி (பொதுவான மொழிபெயர்ப்பு)

19. ஒரு நாட்டின் மனித வளத்தின் நாற்றங்காலான பள்ளிக் கூடங்கள் இயற்கையோடு இயைந்த, தற்சார்பு மிக்க, தனக்கேயான பாரம்பரியங்களிலிருந்து புது உலகைப் பார்க்கக் கூடிய, பிறரையும் தன் போல் பாவித்து நேசிக்கும் பண்பு நிறைந்த சிறந்த ஒப்புரவாளனாக மாணவர்களை உருவாக்கும் பணிகளைச் செய்கிறதா?

20. தானாகக் கேட்டுக் கற்றல், தனது தேவையை உணர்ந்து கற்றல் என்பதே உயிர்வாழத் தேவையான அத்தியாவசிய நடவடிக்கை என்பதை உணர்ந்து மகிழ்வோடு கற்க மாணவர்களுக்கு ஏதாகிலும், எங்காகிலும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறதா?

21. இந்த ஆங்கில வழி குழந்தைகளின் பெற்றோருக்கு மொழியறிவு என்பது வேறு, கணிதம் அறிவியல் புலங்கள் புவியியல், வரலாறு, பொருளியல், அரசியல், சமூகவியல் என்ற பல்வகையிலான துறை சார்ந்த அறிவு வேறு என்பது தெரியுமா? எடுத்துக்காட்டாய் இயற்பியல் பாடத்தை ஆங்கிலத்தில் படித்தால் ஆங்கில மொழி அறிவு வளருமா? அல்லது இயற்பியல் பாட அறிவு வளருமா? ஆங்கிலமோ இந்தியோ பிரஞ்சோ எந்த மொழியானாலும் மொழியை மொழியாகக் கற்றால் மொழி அறிவு வளருமா? அல்லது மொழியை பாடமாகக் கற்றால் மொழி அறிவு வளருமா? கணித அறிவியல் பாடங்களை ஆங்கில வழியில் நெட்டுருப்போட்டு வெறும் மதிப்பெண் பெற்றவர்களை உலகின் எந்தப் பல்கலைக் கழகங்களின் துறைசார் அறிவியல் புலங்களில் சீண்டுவார்களா? தாய்மொழி குறிப்பாகத் தமிழ்நாட்டின் தமிழ் மொழி அல்லாத பயிற்று மொழி என்பது உலகின் ஒட்டு மொத்த கல்விக் கோட்பாடுகளையும் மிதிப்பதாக ஆகாதா? எந்த நாட்டிலாவது அந்த நாட்டின், இனத்தின்; பொது மொழியை (இங்கு தமிழ் மொழி) தாய்மொழியை அல்லது வழக்கு மொழியாகவோ கொண்டிருப்பவர்கள் குறைந்த பட்சம் முதல் மொழியாகவாவது அந்த மொழியை கல்லாமல் பள்ளி கல்லூரி வாழ்க்கையை கடந்திருப்பார்களா?

இவ்வாறாகக் கேட்பதற்கு வினாக்கள் எண்ணிலடங்காதவை ஆனால், வினவுதலும் விடையளித்தலும், விடைகாணுதலும் விடைகளைச் செயல்படுத்துதலும் விளைவான பட்டாங்கினைக்கொண்டு பகுத்தாய்தலும், இடையே நிகழ்ந்த நேர்மறை, எதிர்மறை குறுக்கீடுகள், எதிர்வினைகள் ஆகியவற்றை ஒட்டி - மீண்டும் வினவுதலும்..... என்றவாறாகத் தொடர வேண்டும்... வினவுவோம் விவாதிப்போம் தொடருவோம்.

Pin It