ஸ்டெல்லா மேரீஸ்கல்லூரியில் காங்கிரஸ் தலைவர் இராகுல் காந்தி பேசியதும் அதற்கு மாணவிகளிடையே கிடைத்த ஆதரவும், பா.ஜ.க., அ.இ.அ.தி.மு.க.வினர் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது. உடனே அக்கல்லூரி நிர்வாகத்துக்கு தமிழகக் கல்லூரிக் கல்வி இயக்ககம் விளக்கம் கேட்டு மிரட்டியிருக்கிறது. தேர்தல் நடத்தை விதிகள் வருவதற்கு முன்பே ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி என்று காங்கிரஸ்தரப்பில் விளக்கம் தரப்படுகிறது. முன்னாள் தேர்தல் ஆணையரான கோபால்சாமி அய்யங்கார் என்ற பார்ப்பனர், இராகுல் காந்தி - கல்லூரி வளாகத்தில் அரசியல் பேசியது தவறுதான் என்கிறார். அதில் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் ஏதுமில்லை என்று இப்போது தேர்தல் ஆணையம் கூறிவிட்டது. சரி இருக்கட்டும்; தமிழக அரசுக்கு இதைக் கேட்கும் உரிமை இருக்கிறதா?

கல்லூரி வளாகத்தை ஆர்.எஸ்.எஸ். நடத்தும் மத நிகழ்ச்சிகளுக்கு அ.இ.அ.தி.மு.க. ஆட்சி கடந்த காலங்களில் எந்த நிபந்தனையும் இல்லாமல் திறந்து விட்டதை நினைவூட்ட விரும்புகிறோம். கல்வி வளாகத்தை மத நிகழ்வுகளுக்குப் பயன்படுத்தக் கூடாது என்பது கல்விக் கூடங்களுக்கான ஒழுங்குமுறை விதி.

கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் விவேகானந்தரின் சீடரான நிவேதிதாவின் 150ஆவது பிறந்த நாள் விழாவுக்காக இராமகிருஷ்ணா மடத்துடன் ஆர்.எஸ்.எஸ். இணைந்து இரதயாத்திரை ஒன்றை நடத்தியது. இந்த இரதயாத்திரையை ஒவ்வொரு கல்லூரி வளாகத்துக் குள்ளும் கொண்டுபோய் மாணவ மாணவிகளின் வரவேற்புக்கு ஏற்பாடு செய்தவர் பா.ஜ.க.வின் செயலாளர்களில் ஒருவரான வானதி சீனிவாசன்.

2018 பிப்ரவரி 10ஆம் தேதி சேலம் சாரதா கல்லூரியில் இந்த மத இரதயாத்திரைக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கே யாத்திரையின் ஒருங்கிணைப்பாளர் வானதி சீனிவாசன் யாத்திரையை வரவேற்று மதப் பிரச்சாரம் செய்தார்.

அதைத் தொடர்ந்து இரதயாத்திரை எங்கே வந்தது தெரியுமா? சேலம் பெரியார் பல்கலைக்கழகத்துக்கு வந்தது. இந்த யாத்திரை வரவேற்பில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று பல்கலைக் கழக நிர்வாகமே மாணவர்களுக்கு அதிகாரபூர்வமாக அழைப்பு விடுத்தது.

கல்வி வளாகத்தை இந்து மதப் பரப்புரைக்குப் பயன்படுத்துவதை எதிர்த்து சேலம் கிழக்கு, மேற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் தோழர்கள் போராட்டம் நடத்திக் கைதானார்கள்.

கல்வி வளாகத்தில் மதப் பரப்புரைக்கு ஏன் அனுமதி தந்தீர்கள் என்று அப்போது தமிழக கல்லூரி இயக்ககம் நோட்டீஸ்அனுப்ப வில்லை. மாறாக, இதற்கு ஆதரவாகவே செயல்பட்டது. பா.ஜ.க.வின் மேலிடக் கட்டளைக்கு அடிபணிந்து நின்றார்கள். இப்போது இராகுல், ஸ்டெல்லா மேரீஸ்கல்லூரி நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் அப்போது வாய் பொத்தி பதுங்கி நின்றது ஏன்? பதில் உண்டா?

தமிழ்நாட்டில் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சிகள் நடந்தபோது அதற்கு தடைவிதித்து அரசாணை போட்டவரே முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். தான் என்ற வரலாறு இவர்களுக்குத் தெரியுமா?