இந்திய அரசானது யாருக்கான அரசாங்கம்? மக்களுக்கானதா? இல்லை. பன்னாட்டு மற்றும் இந்திய் பெரு முதலாளிகளுக்கா என்று எழுகின்ற கேள்விக்கு எந்த வித சந்தேகமும் இன்றி ஒவ்வொரு முறையும் இந்த அரசு மக்களுக்கு எதிரானதே என்பதை நிரூபித்து வருகின்றது. முதன்முதலில் 1894ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் நிலங்கள் அனைத்தும் அரசிற்கே சொந்தம், எனவும் அரசு நினைத்தால் எடுத்துக் கொள்ளலாம் என்று சட்டம் இயற்றி நிலங்களின் மீதான மக்களின் மரபுரிமை பறிக்கப்பட்டது. இது அரசின் தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. உலக மயமாக்கலுக்குப் பிறகு தனியார் மயம் பெருகியது. அதன் விளைவாக தனியார் நிறுவனங்களுக்கும் அதிகளவில் நிலங்கள் மக்களிடம் இருந்து பறித்துக் கொடுக்கப்பட்டன.

ஒவ்வொரு பகுதியிலும் இவ்வாறு நிகழும் போதும் அம்மக்கள் தமக்கான உரிமைகளுக்காகப் போராடும் போதும அரசு அடக்குமுறைகளை கடடவிழ்த்து அடக்கி வந்தது. போராடும் மக்களையும் தேச விரோதிகளாகவும் தீவிரவாதிகளாகவும் சித்தரித்தது. குறிப்பாக மேற்கு வங்கத்தில் நந்திகிராம், சிங்கூரிலும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டங்களுக்குப் பிறகு 2013ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசானது சில திருத்துங்களை கொண்டு வந்தது. அதன்படி சமூகப் பாதிப்பு ஆய்வு மற்றும் விசாரணை, உணவு பாதுகாப்பிற்கான சிறப்பு ஏற்பாடு நில உரிமையாளர்கனிடம் இருந்து ஒப்புதல் பெறுதல் ஆகியன கொண்டு வரப்பட்டன. மேலும் நிலத்திற்கான இழப்பீடானது சந்தை விலையை விட நகர் பகுதிகள் என்றால் இரண்டு மடங்கும், ஊரகப்பகுதிகள் என்றால் நான்கு மடங்கும் அதிகமாக அளிக்கப்பட வேண்டும் என்றும், வெளிப்படைத் தன்மை, மறுவாழ்வு, மறு குடியமர்த்தல் பற்றிய வரையறை மேலும் நிலத்தின் உரிமையாளருக்கு மட்டுமின்றி அந்நிலத்தில் பணிபுரிந்து வந்தவர்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று இருந்தது. தனியார் நிறுவனங்களுக்கு என்றால் 80% மக்கள் ஒப்புதலும் அரசு மற்றும் தனியார் கூட்டு தேவைக்காக என்றால் 75% மக்களின் ஒப்புதலும் பெற்றிருக்க வேண்டும். நிலம் பெறப்பட்டு 5 வருடங்கள் அந்நிலத்தை எதற்கும் பயன்படுத்தாமல் இருந்தால் நில உரிமையாளர்களிடமே நிலத்தைத் திருப்பி ஒப்படைத்து விட வேண்டும் என்கிற சரத்தும் இருந்தது. என்ன வேடம் போட்டு வந்தாலும் நிலப்பறிப்புக்கு எதிராக மக்கள் போராடி வந்தார்கள்.

ஆனால், தற்போதைய மோடி அரசானது அவசர அவசரமாக இந்த சட்டங்களில் புதிதாகச் சில பகுதிகளை இணைத்து மக்கள் போராடி உருவாக்கிய கட்டுப்பாடுகள் அனைத்தையும் உடைத்தது. பன்னாட்டுப் பெரு முதலாளிகளுக்காகவும் அம்பானி அதானி போன்ற இந்தியப் பெரு முதலாளிகளுக்காகவும் இந்த அவசர சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம் 2.5 லட்சம் ஏக்கர் நிலங்களை மக்களிடம் இருந்து பறித்து முதலாளிகளிடம் அளிப்பதே இந்த அரசின் நோக்கமாகும். விவசாயம் செழிக்கும் நிலங்களைக் கூட இச்சட்டத்தால் பறிக்க முடியும். இந்தப் புதிய சட்டத்தின்படி நில உரிமையாளரிடம் எந்த ஒரு அனுமதியும் பெறத் தேவை இல்லை. அதனாலேயே இதை நிலப் பறிப்பு என்று வரையறக்கிறோம். ஐந்து முக்கிய தேவைகளுக்காக இந்நிலங்கள் எடுக்கப் படுவதாக இந்தத் தரகு அரசானது தெரிவித்துள்ளது. அதன்படி இந்திய ஒன்றியத்தின் பாதுகாப்பு தொடர்பான திட்டங்கள், கிராமப்புற கட்டமைப்பு தொடர்பான திட்டங்கள், ஏழை மக்களின் வீட்டுமனை திட்டங்கள், தொடர்பாதை, தொடர்பாதை தொடர்பான திட்டங்கள், கட்டுமானம் தொடர்பான திட்டங்கள் என்று அரசு கூறி உள்ளது.

மக்களின் வாழ்வாதாரமான விவசாய நிலங்களை அழித்து விட்டு அதில் எம்மாதிரியான திட்டங்கள் கொண்டு வந்தாலும் அது மக்களுக்கு ஒரு போதும் பயன்தரப் போவதில்லை. பழைய திட்டங்களின் முக்கிய சாராம்சமான சமூகப் பாதிப்பு ஆய்வு மற்றும் விசாரணை, உணவுப் பாதுகாப்பிற்கான சிறப்பு ஏற்பாடு, நில உரிமையாளர்களிடம் இருந்து ஒப்புதல் பெறுதல் ஆகியவற்றில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இழப்பீடானது நிலத்தின் உரிமையாளருக்கு மட்டுமே கிடைக்கும். நிலத்தின் உரிமையாளருக்கும் இழப்பீடு போதவில்லை என்றால் மட்டுமே நீதிமன்றத்திற்கு செல்ல முடியும் ஒருபோதும் நீதிமன்றம் சென்று நிலத்தைத் திரும்பப் பெற முடியாது. நீதிமன்றம் சென்று இழப்பீடு பெறுவதற்குள் அந்த விவசாயியின் வாழ்வு முடிந்துவிடும்.

பழைய சட்டத்தில் தனியார் மருத்துவமனை கல்வி நிறுவங்களுக்கு இருந்த அனுமதி மறுப்பும் கூட தளர்த்தப்பட்டுள்ளது. மேலும் 5 ஆண்டுகளுக்கு மேல் அந்நிலம் பயன்படுத்தாமல் இருந்தால் உரிமையாளர் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்ற சரத்தும் நீக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக மக்களின் நில உரிமைகள் ஆளும் இந்திய அரசால் பறிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை விவசாயமே மக்களின் உயிர்நாடியாக இருக்கின்றபோது இச்சட்டத்தின் மூலம் அதை மரணிக்கச் செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழர் தாயகத்திலேயே தமிழர்களை நிலம் இல்லாத அனாதைகளாக்க இந்த அரசு முயற்சிக்கிறது. குறிப்பாகத் தமிழகத்தில் அணு உலை நியூட்ரினோ ஆய்வு, மீத்தேன் எடுக்கும் திட்டம் போன்ற நாசகரத் திட்டங்களுக்கே இந்த நிலப்பறிப்புச் சட்டம் உதவும். நிலங்களை பறிப்பதோடு மட்டும் அல்லாமல் நம்மை நம் மண்ணிலேயே அழிக்கவும் நம்மை ஏதிலிகளாக இம்மண்ணை விட்டு விரட்டவும் இந்த அரசு முயற்சிக்கிறது.

இந்தியத்தின் இது போன்ற செயல்களை நம்மை ஆளும் திராவிட கட்சிகளும் தனக்குரிய பங்குகளை பெற்றுக்கொண்டு அனுமதித்து வருகின்றது. தாயகம் சூறையாடப்பட்ட பிறகு அரசியல்வாதிகள் வெளிநாடுகளுக்குக் குடிபெயர்ந்து விடுவார்கள். எனவே, தமிழர்களும் தமிழ்த்தேச மக்களாகிய நாம் இந்தியாவின் நிலப்பறிப்புச் சட்டத்தை முறியடித்து, இது வெறும் மண்ணல்ல எங்களை ஈன்றெடுத்த தாயகம். இதன்மீது வேறு யாருக்கும் உரிமை இல்லை. தமிழர்களுக்கும் தமிழக அரசிற்கே முற்றுரிமை என்று நிலை நாட்டுவோம். அத்தோடு, தமிழர்கள், தமிழக அரசிற்கே முற்றுரிமை என்பது இந்நிலங்களைப் பாதுகாக்கும் உரிமையும், பராமரிக்கும் உரிமையும், தமிழ்த் தேசத்திற்குள்ளே பறிமாறிக்கொள்ளும் உரிமையுமே ஆகும்.

இதை அயலவரிடம் விற்பதற்கு உரிமை இல்லை. நம் தொல்காப்பியர் சொல்வது போல், நிலமும் பொழுதும் முதற்பொருள். தமிழர் தாயகமே தமிழ்த் தேசிய இனத்தின் ஆதாரம்.

Pin It