உயர் கல்வியை பெறுவதில் சிறந்த கல்வி நிறுவனம் என்று அடையாளப்படுத்திக் கொண்ட, அடையாளப்படுத்தப்பட்ட நிறுவனங்களில் அரசு மற்றும் நிறுவன ஒதுக்கீடுகளில் முறையே +2 வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களும் வசதி படைத்தோரும் சேர்க்கை பெற்றுவிட, தேர்விலும் பொருளாதாரத்திலும் சற்று பின்தங்குவோர் நிலை என்ன? தனியார் கல்லூரிகளில் சேர்க்க தகுதிக்கு அதிகமான பணத்தை கடன்வாங்கி, வீடு நிலத்தை விற்று தன் வாழ்க்கையையே அடமானம் வைக்கின்றனர் பெற்றோர்கள். தனது அறிவுநிலையைத் தாண்டி கல்வி நிலையங்களில் வசதிச் சூழலில் தம்மை இணைத்துக்கொள்ள முடியாமலும், பாடத்திட்டத்தின் கடினத்தன்மையை புரிந்துகொள்ள முடியாமலும் நான்கு ஆண்டுகளை முடித்துவிட்டு கல்லூரியை விட்டு வெளியேறும் மாணவர் கூட்டம், வெளி உலகம், வேலை வாய்ப்பு மற்றும் நல்ல நிறுவனங்களில் உயர்சம்பளம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு என இலக்கு தெரியாமல் சுற்றித் திரிந்து இறுதியில் கிடைக்கின்ற, தொடர்பே இல்லாத பணிகளில் நிரந்தரமாகிவிடுகிறார்கள். இந்தச் சூழலில் எழுந்ததுதான் சமச்சீர் கல்வி. சமம், அதற்குப்பின் தான் "சீர்.' தொடக்க கல்வியில் நான்கு வகைகளில் வழங்கப்பட்டு வந்த பாடத்திட்டத்தை ஒரே பாடத் திட்டமாக, தமிழகம் முழுவதும் வழங்கி, அறிவுத் தளத்தில் மாணவர்களிடையே ஒரு சமமான போட்டியை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் எழுந்ததுதான் "சமச்சீர் கல்வி'.

                ஒன்று மற்றும் 6-ம் வகுப்புகளில் 2010-11ல் அறிமுகம் செய்யப்பட்டு 2011-12ஆம் கல்வியாண்டில் 1 முதல் 10 வகுப்பு வரை நடைமுறைப் படுத்தப்பட இருந்த சூழலில்தான் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு, பொறுப்பேற்ற புதிய அரசு நீதிமன்றமும் கல்வியாளர்களும், பெற்றோரும் - மாணவரும் ஏற்காத பல காரணங்களைக் கூறி சமச்சீர்க் கல்வியை நிறுத்தி வைக்க முயற்சித்த போது நிகழ்ந்த நிகழ்வுகளை ஒரு தொடர்போல நாளிதழ்களில் வெளியான செய்திகளை தேதியிட்டு, அரசின் கருத்துகள், நீதிமன்றத்தின் கருத்து, அரசியல் தலைவர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஆகியோரது கருத்துகளை அவற்றின் வீச்சோடு படிப்போரை, ஒரு சிறந்த தொடர் கதையின் முடிவு எவ்வாறு இருக்கும் என்ற ஆவலை வாசகரிடையே ஏற்படுத்துவதுபோல அமைந்துள்ளது இந்த நூலின் சிறப்பு.

                அரங்கம் ஒன்றில் பேசியபோது ஒரு கவிஞர் குறிப்பிட்டார், “வாழ்க்கைக்கான பொருளாய் கல்வி இருந்ததுபோய் வழக்காடு பொருளாய் இன்று மாறி இருக்கிறது''. இதுவும் வளர்ச்சியின் குறியீடுதான் என்கிறார்கள் மான்டேக்சிங்கும் மன்மோகன்சிங்கும்.

                அனைவராலும் வாசிக்கப்படவும், பாதுகாத்து வைத்திருக்கப்படவும் வேண்டிய ஒரு நூல் இது.

 ***

தொகுப்பு: கல்விமணி, பூவிழியன்

விலை : ரூ.50-

வெளியீடு :

மக்கள் கல்வி இயக்கம்,

7, பாலையா இல்லம்,

பாரதிதாசன் நகர், கல்லூரிச்சாலை,

திண்டிவணம் - 604 001.

பேச : 94426 22930

Pin It