அரசுப் ஆதிதிராவிடர் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவதற்கு காரணம் என்ன என்று திமுக தலைவர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் ஆதிதிராவிடர் மானிய கோரிக்கையின் போது கேள்வி எழுப்பினார். அதற்கு ஆதிதிராவிடர் துறையின் கீழ் அப்பள்ளிகள் இயங்கும் நிலையையும், மாணவர்கள் சேர்க்கை குறைவிற்கான காரணத்தையும் முழுமையாக அறியாமல் அரசு பள்ளிகள் அதிகம் துவக்கப்பட்டதால், மாணவர்கள் அங்கு அதிகம் சேர்ந்ததால், அரசு ஆதிதிராவிட பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது என, அமைச்சர் ராஜலட்சுமி கூறுயுள்ளது பற்றி அத்துறை ஆசிரியர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

dalit schoolதமிழகத்தில் அரசு பள்ளிகள் 18 வகை நிர்வாகங்களின் கீழ் செயல்படுகின்றன. அவற்றில் ஒன்று ஆதிதிராவிடர் பள்ளிகள் தமிழகத்தில் 8,400 அரசு உதவிபெறும் பள்ளிகள் உட்பட, 40 ஆயிரம் பள்ளிகள், அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. மற்ற பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன், மெட்ரிக் என, தனியார் பள்ளிகளாக, தனி இயக்குனரக கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த பள்ளிகளில், மாநிலம் முழுவதும், 5.60 லட்சம் பேர் படிக்கின்றனர்.

அரசு பள்ளிகளை பொறுத்த வரை, அரசின் பல்வேறு துறைகள் மூலம் நிர்வாகம் செய்யப்படுகிறது. அதாவது, பள்ளிக்கல்வித் துறை, நகராட்சி, மாநகராட்சி, பஞ்சாயத்துகளுக்கான ஊரக வளர்ச்சித் துறை, கள்ளர் மறுசீரமைப்பு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சிறுபான்மையினர் நலத்துறை, வனத்துறை, சமூகநலத் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் கன்டோன்மென்ட் என, பல்வேறு துறைகளின் நிர்வாகத்தில் செயல்படுகின்றன. மாணவர் சேர்க்கை, ஆசிரியர்கள் நியமனம், உள்கட்டமைப்பு மேம்பாடு, பள்ளி நிர்வாகம் போன்றவற்றில், பல்வேறு விதிகள் தனித்தனியாக வகுக்கப்படுகின்றன.

தமிழகத்தில் பல்வேறு துறைகள் அரசு பள்ளிகளை செயல்படுத்தினாலும் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளே மோசமாக உள்ளது.இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியில் குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வி துளிர் விட ஆரப்பித்தது.அதை தொடர்ந்து அயோதிதாச பண்டிதர் தாழ்த்தப்பட்ட மக்களுக்குக்காக பஞ்சமர் பள்ளிகளை தோற்றுவித்து கல்விகற்று தந்தார்,அதனை தொடர்ந்து அப்பள்ளிகள் தொழிலாளர் பள்ளிகள்,ஹரிசன பள்ளிகள்,பின்னர் அவைகள் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள் என காலத்திற்கு ஏற்றார்போல அதன் பெயர்களும் மாறின.

தமிழ் நாடு ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் 1430 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.கல்வித்துறை பெறுத்தவரையின் அனைத்து அலுவலர்களும் கல்வித்தொடர்பான பயிற்சிகள் பெற்றவர்கள்.ஆனால் ஆதிதிராவிடர் பள்ளிகளை பொறுத்தவரையில் இதன் அமைப்பு கல்வித்துறைகையின் அமைப்பு தலைக்கீழாக உள்ளது. இப்பள்ளிகளை மாவட்ட அளவில் கட்டுப்படுத்தும் அலுவலராக மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலருக்கு கீழ் நான்கு வட்டங்களை சேர்த்து ஒரு தனிவட்டாசியர் உள்ளார்.இப்பள்ளிகள் மாவட்ட அளவில் 10 ல் இருந்து 25 பள்ளிகள் உள்ளன.விழுப்புரம் ,மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் மட்டும் 90 முதல் 115 பள்ளிகள் வரை உள்ளன.மற்ற மாவட்டங்களில் விரல் விட்டு எண்ணும் அளவிற்கு சொற்ப அளவே உள்ளன.தனிவாட்டாசியர்கள் தான் இப்பள்ளிகளை கட்டுப்படுத்தும் அலுவலர்கள் இவர்தான் நான்கு வட்டாரங்களில் உள்ள ஆசிரியர்களுக்கு சம்பளம் மற்றும் பண பயன்களை வழங்க வேண்டும்.அதாவது பள்ளிகள் ஒரு மூலையில் இருக்கும் தனிவட்டாட்சியர் அலுவலகம் பள்ளியிலிருந்து 80 கி.மி தொலைவில் இருக்கும்.ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் முழுவதும் நிர்வாக பயிற்சி பெற்ற அலுவலர்களே தவிர கல்வி தொடர்பான எந்த பயிற்சியும் அவர்கள் பெறவில்லை.இவர்கள் எப்படி அசிரியர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்க முடியும் என்பது இன்றளவும் கேள்விக்குறியாகவே உள்ளது.அவர்கள் வருடம் முழுவதும் வருவாய்த்துறை தொடர்புடைய திட்டங்களை செயல்படுத்தவே நேரங்கள் ஓடிவிடுவதால் துறையின் கவனிப்பில்லாமல் பள்ளிகள் இயங்குகின்றன. பல பள்ளிகள் இன்றும் ஓராசிரியர் பள்ளிகளாகவே உள்ளது.

ஆசிரியர்களின் நிலை:

இத்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியகள் போல எளிதில் வேறு பள்ளிக்கு மாறுதலாக முடியாது.மாவட்ட அளவில் குறைவான பள்ளிகளே உள்ளதால் இவர்கள் ஓரே பள்ளியில் 10 ஆண்டுமுதல் 15 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும்.இவர்கள் கல்வித்துறைப்பள்ளிகளுக்கு மாறுதலில் செல்ல முடியாது.பதவி உயர்வு வாய்ப்பு குறைவு. என மன உளச்சளோடு பணி செய்கின்றனர்.மேலும் இவர்கள் விடுதியிலும் காப்பளராகவும்,பெண் ஆசிரியர்கள் காப்பாளினியாகவும் பணி செய்யலாம் என்ற நிலை உள்ளதால் பல ஆசிரியர்கள் விடுதியில் பணியாற்ற சென்று விடுகின்றனர்.கல்வித்துறை ஆசிரியர்கள் முழுவதும் பள்ளியிலே பணியாற்றுவதால் அவர்கள் சிறப்பாக செயல்பட முடிகிறது.ஆனால் இத்துறை ஆசிரியர்கள் சில ஆண்டுகள் பள்ளியிலும் பல ஆண்டுகள் விடுதியிலும் பணி செய்வதால், கல்விகற்பிக்கும் முறையில் பெரிய இடைவெளி காணப்படுகிறது.உதரணமாக முழுமையான மற்றும் தொடர் மதிப்பிட்டு முறை 2013ல் நடைமுறைக்கு வந்ததது.அந்த காலக்கட்டத்தில் ஆசிரியர்களுக்கு இந்தமுறையில் எப்படி பாடம் நடத்த வேண்டும் எனவும் பயிற்சிகள் அளிக்கப்பட்டது.இந்தபயிற்சியினை பெறாத ஆசிரியர் 2017 ஆண்டில் பள்ளிக்கு ஆசிரியராக விடுதியில் இருந்து மாறுதலாகி வருகிறார்.அவர் பள்ளியில் எந்த முறையில் கற்பிப்பார்.அவர் பயிற்சி வழங்கிய காலக்கட்டதில் விடுதியில் பணியாற்றினார்.அவர் அந்த பயிற்சியினை முழுமையாக அறிந்திருக்க முடியுமா? அவர் எப்படி கற்பிக்க முடியும்? போன்ற கேள்விக்கு ஆதிதிராவிடர் துறை அமைச்சர் தான் விளக்கம் அளிக்க வேண்டும்.

அரசு இப்பள்ளிகளை ஆதிதிராவிடர்களின் நலனுக்காவே துவங்கியதென்றால் தமிழ் நாட்டில் 12620 கிராமங்கள் உள்ளன.அந்தனை கிராமங்களிலும் ஆதி திராவிடர்கள் வசிக்கின்றனர்.கிராமங்கள் தோறும் நலப்பள்ளிகளை துவங்கியிருக்க வேண்டும்.1430 கிராமங்களில் மட்டும் தான் ஆதிதிராவிட பள்ளிகள் உள்ளன, மற்ற கிராமங்களில் கல்வித்துறைப்பள்ளிகள் தான் உள்ளது அப்பள்ளிகளில் படிக்கும் 70% மாணவர்கள் ஆதிதிராவிட மாணவர்களே எனபது தெளிவாகிறது .ஒரு காலக்கட்டத்தில் கல்வி கற்பிப்பதில் தீண்டாமை இருந்திருக்கலாம் ஆனால் தற்போது அந்த நிலை மாறி விட்டது. ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு என்ற நிலை வந்த பிறகு ஆசிரியர் வேலை கிடப்பதே குதிரைக்கொம்பாக மாறி விட்ட நிலையில் நான் ஆசிரியரான பின்பு ஒரு குறிப்பிட்ட பிரிவு மாணவர்களுக்குதான் கல்வி கற்பிப்பேன் என் யாரும் கூற முடியாது. இதனையெல்லாம் அறிந்த சிலர் இந்த பள்ளிகளை கல்வித்துறையோடு இணைத்தால் "கப்பல் கவிழ்ந்து விடுவதுப்போல" ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் அபார வளர்ச்சி சரிந்துவிடுவதுபோல எதிர்ப்பு தெறிவிகின்றனர்.விடுதிகளில் கொள்ளையடிக்கும் சில பிற்போக்கு சக்திகள் தங்கள் பொருளாதாரம் பாதிக்கப்படும் என பயந்து எழிலகத்தில் உள்ள ஆதிதிராவிடர் அலுவலகத்தினை முற்றுகை போராட்டம் நடத்திகின்றனர்.விடுதியில் பணியாற்ற விரும்புவர்கள் கடைசிவரை விடுதியிலே பணி செய்ய வேண்டும் .

ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு நன்மை செய்ய வேண்டுமென அரசு நினைத்தால் ஆதிதிராவிடர் பள்ளிகளை கல்வித்துறையோடு இணைத்துவிட வேண்டும்.சமத்துவம் பிறக்க சம உரிமைக்காக போராடுகிறார்கள்,சாதி ஒழிய வேண்டுமென போராடுகிறார்கள்,சாதி கலப்பு திருமணமனம் வேண்டுமென போராடுகிறார்கள்.ஆனால் ஆதிதிராவிடர் பள்ளிகள் ஒரு பொதுவான கல்வி முறையொடு இணைந்தால் அதற்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் இத்துறையில் உள்ளவர்கள். மேலும் இத்துறையில் நடக்கும் பல்வேறு ஊழல்களுக்கும் இத்துறையின் அதிகாரிகள் தான் காரணமாகவும் உள்ளனர். இத்துறையின் கீழ் உள்ள பள்ளிகளுக்கு ஒவ்வொரு வருடமும் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்குவதாக கூறுகின்றனர். ஆனால் எத்தனையோ பள்ளிகள் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் உள்ளதை காணமுடிகிறது. இத்துறைக்கு ஒதுக்கப்படும் நீதி வேறு துறைகளுக்கு செலவிடப்படுவதாக குற்றச்சாட்டுகளை பலர் கூறி வருகின்றனர். மேலும் விடுதியில் ஒரு மாணவனுக்கு தொள்ளாயிரம் வரை உணவு கட்டணமாக அரசு வழங்குகிறது. இதில் நல்ல வருமானம் உள்ளதால் பல இடங்களில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலரின் உதவியோடு விடுதிகளில் போலியான மாணவர்களை கணக்கு காட்டி இதற்கு ஒதுக்கப்படும் நிதியை சுருட்டி விடுகின்றனர். பெரும்பாலன ஆசிரியர்கள் இத்துறையில் எண்பதுகளில் பணியமர்த்தபட்டவர்களாக உள்ளதால் மற்ற பள்ளி ஆசிரியர்களைப் போல சிறப்பாக செயல்பட முடியவில்லை.இத்துறையின் வீழ்ச்சிக்கு உண்மையான காரணங்களை அறியாமல் எதிர்கட்சியினர் கேட்கும் கேள்விகளுக்கு சம்பந்தமில்லா காரணங்களை கூறுவதை விட அதற்கான தீர்வுகளை அரசு அறிய வேண்டும்.

இத்துறையினை முழுமையாக பள்ளி கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் கீழ் கொண்டு வர அரசு நடவடிக்கை வேண்டும்.

- தர்மராஜ்

Pin It