சனாதன தர்மத்தை நிலைக்கச் செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என். இரவி அடிக்கடி கூறி வருகிறார். சனாதன தருமம் என்றால் நிலையான தருமம் என்றைக்கும் மறையாத, அழிவுறாத தருமம் என்று தான் பொருள்படும்.

இன்றைய இந்து மதத்தின் பழைய பெயர்களே சனாதன மதம், வைதீக மதம், ஆரிய மதம் என்பவை ஆகும். ஆங்கிலேயர்கள் இந்து மதம் என்ற பெயரைக் கொடுத்தனர்.

காசி இந்துக் கல்லூரி பண்டிதர்கள் ஒன்றுகூடி சனாதன தர்மம் என்றால் என்ன என்பதை விளக்கிக் கூறும் வகையில் மாணவர்களுக்குப் பாடநூலாக 1903-இல் “Sanatana Dharma an Advanced Text Book of Hindu Religion and Ethics” என்ற பெயரில் ஆங்கிலத்தில் வெளியிட்டனர். 1905ஆம் ஆண்டில் நாராயண அய்யர் மொழிப்பெயர்ப்பில் தமிழில் வெளியிட்டனர்.

அந்த நூலில் விரிவாக சனாதன தருமம் என்பதற்கான விளக்கங்களை அளித்துள்ளனர். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது :

“நான்கு வேதங்களை-ரிக், யசூர், சாமம், அதர்வணம்” ஆகியவற்றை வாழ்வியல் அடிப்படையாகக் கொண்டு வாழ வேண்டும்.

Sanatana dharmaஸ்மிருதிகள் மநு, நாரதர், யக்ஞவல்கியர், பராசரர் எழுதிய இந்த நான்கு ஸ்மிருதிகளைத் தரும சாத்திர சட்ட நூல்களாக ஏற்றுக்கொண்டு அதில் விதிக்கப்பட்ட தருமங்களைக் (கட்டளைகளை) செயல்படுத்த வேண்டும்.

இராமாயணம், மகாபாரதம், உள்ளிட்ட இதிகாசங்களைக் கற்று அதன்படி வாழ்வியலை அமைத்துக் கொள்ள வேண்டும்.

பதினெட்டு புராணங்களையும் படித்து அதில் கூறப் பட்டுள்ள கருத்துகளை ஏற்றுக்கொண்டு வாழ்வதுடன் அக்கருத்துகளை மக்களிடையே பரப்ப வேண்டும். வேதத்தை என்றும் நிலைத்திருக்கச் செய்ய வேண்டும். இந்த தரும நெறிமுறைகளை என்றும் அழியாமல் தலைமுறை, தலைமுறையாகப் பாதுகாத்து வர வேண்டும்.

வேதத்தில் கூறப்பட்டுள்ள யாகத்தைச் செய்வது, அதாவது விலங்குகளைத் தீயிலிட்டுக் கொன்று இந்திரனுக்குப் படைத்ததாகக் கருதி உண்பது. சோமபானம் என்ற மது வகையை இறைவனுக்குப் படைத்துவிட்டு குடிப்பது. இது தான் வேதகால வாழ்வியல் முறையாகும்.

ரிக் வேதத்திலேயே பத்தாவது மண்டலத்தில் புருஷசூக்தா என்ற தலைப்பில் நால்வருணத்தை நிலைநாட்டி விட்டனர். அதை நிலைநிறுத்துவதற்காகவே ஸ்மிருதிகளை இயற்றினர். இவையே சட்ட நூல்களாகக் கருதப்பட்டன.

ஆரியப் பார்ப்பனர்களின் உயிர்பலி யாகத்திற்கு எதிராகவும், நால்வருண பாகுபாட்டு முறைக்கு எதிராகவும் தான் புத்தர் தன் கருத்துகளை மக்களிடையே பரப்பி ஒரு புதிய சமூகத்தைப் படைத்தார். அசோகர் பவுத்த மதத்தை நாடு முழுவதும் பரப்பினார்.

அசோகனின் கொள்ளு பெயரன் பிருகரத்தரனை அவன் படையில் பணியாற்றி வந்த படைத்தலைவன் புஷ்யமித்தர சுங்கன் என்கிற பார்ப்பான் அரசனைக் கொன்றுவிட்டு தானே அரசன் என்று அறிவித்துக் கொண்டான். அவன் தான் கி.மு.185இல் முதன்முதலாக மநுநீதியைச் சட்ட நூலாக நடைமுறைப்படுத்தியவன் என்று டாக்டர் அம்பேத்கர் எழுதியுள்ளார்.

புத்த பிக்குகளின் தலைகளை வெட்டிக் கொண்டு வருபவர்களுக்கு நூறு பொற்காசுகள் அளிக்கப்படும் என்று நாடு முழுவதும் அறிவித்தான். இப்படி வன்முறையின் மூலமாகத்தான் இந்தியாவில் புத்த மதம் வீழ்த்தப்பட்டது.

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதிசங்கரர் இந்தியா முழுவதும் சென்று இந்து அரசர்களைக் கண்டு பேசி மீண்டும் சனாதன தருமத்தை நிலைநாட்டச் செய்தார். அவர் நிறுவிய சங்கர மடங்கள் அப்பணியை இன்றும் செய்து வருகின்றன.

நால்வருண தரும முறை என்னவென்றால் பிராமணன் உயர்ந்தவன்; வேதத்தை ஓதலும் ஓதுவித்தலும் அவன் தொழில் என்றும் சத்திரியன் அரசனாக இருப்பதும் நாட்டைக் காப்பதும், பார்ப்பனர்களை காப்பதும் அவன் கடமை என்பதும் வைசியன் செல்வத்தை உற்பத்தி செய்து பார்ப்பனர்களுக்குத் தானமாக அளிக்க வேண்டியது என்றும் நான்காவது வருணத்தைச் சேர்ந்த சூத்திரன் மேலே உள்ள மூன்று வருணத்தாருக்கும் சேவை செய்ய வேண்டும் என்பதற் காகவே படைக்கப்பட்டவன் என்று கூறி அவர்களை கடுமை யாக உழைக்கச் செய்தனர்.

இந்த மநு நீதியை இராமாயணம், மகாபாரதம், பகவத் கீதை உள்ளிட்ட ஆரியர்களின் புனித நூல்களின் வழியே பரப்பி வருகின்றனர்.

சனாதன தரும சாத்திரங்களின்படி சூத்திரர்களுக்கும் பெண்களுக்கும் கல்வி கற்கும் உரிமை மறுக்கப்பட்டது. ஆண்களைவிட பெண்கள் கீழானவர்கள். ஆண்களுக்குக் கட்டுப்பட்டு வாழவேண்டியவர்கள் என்று சாத்திரங்களின் மூலம் நிலைநாட்டினர்.

மநுநீதி சூத்திரர்களுக்கும், பெண்களுக்கும் எந்த உரிமையையும் வழங்கவில்லை. வருணக் கலப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக பெண்களுக்கு எட்டு வயதிற்குள் திருமணம் செய்ய வேண்டும் என மநு நீதி கட்டளை விதிக்கிறது. இதை மீறுபவர்களுக்குத் தண்டனைகளையும் அரசர்கள் மநுநீதியின்படி வழங்கியுள்ளனர்.

கணவனை இழந்த கைம்பெண்களுக்கு மறுமண உரிமை மறுக்கப்பட்டது. கணவன் இறந்தால் அவன் உடலை எரிக்கும் தீயில் மனைவியை தள்ளி சாகடிக்கச் செய்த ‘உடன்கட்டை ஏறல்’ என்ற வழக்கம் இந்தச் சனாதன தர்மத்தில், நீண்டகாலம் இருந்தது.

ஆங்கிலேயர் ஆட்சி ஏற்பட்ட பிறகு தான் சட்டங்களின் மூலம் இவற்றை ஒவ்வொன்றாக தடுத்து நிறுத்தினர். அனைவருக்குமான பொதுக் கல்வி முறையை 1835இல் கொண்டு வந்தனர்.

மெக்காலே சட்ட ஆணையத்தின் தலைவரான பிறகு 1860இல் இந்தியக் குற்றவியல் சட்டத்தையும் 1861இல் இந்தியத் தண்டனைச் சட்டத்தையும் உருவாக்கினார். அதுவரை மநுநீதியே நீதிமன்றங்களில் சட்ட நூலாக நடைமுறையில் இருந்து வந்தது.

1860இல் தான் பார்ப்பான் கொலையே செய்தாலும் அவனுக்கு மரண தண்டனை விதிக்கக்கூடாது என்ற மநுதர்மச் சட்டம் ஒழிக்கப்பட்டது.

ஒரு குலத்துக்கு ஒரு நீதியை வகுத்த மநு தர்மத்தை எரிக்க வேண்டும் என பெரியார் காங்கிரசு கட்சியில் இருக்கும்போதே 1922இல் பேசியுள்ளார். தொடர்ந்து மநுநீதியின் மோசடிகளை விளக்கிப் பேசி மக்களிடையே இருந்த உயர்வு தாழ்வுகளைக் களைந்து சமத்துவம் ஏற்பட தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார். சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படை இலட்சியம் மனிதரில் உயர்வு தாழ்வு இல்லை என்பதும் ஆணுக்கு உள்ள உரிமைகள் அனைத்தும் பெண்ணுக்கும் உண்டு என்பதுமாகும்.

இந்து சமூகத்தில் பட்டியல் சாதி மக்களைத் தீண்டாமை என்னும் சமூகக் கொடுமைக்கு ஆளாக்கி அம்மக்களை ஊருக்கு வெளியே குடியிருக்கச் செய்து மனித தன்மையற்ற முறையில் நடத்தப்படுவதற்கு காரணமாக இருந்தது இந்த மநு தர்மமே என்பதால் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் 1927 திசம்பர் 25ஆம் நாள் மகத் குளப் போராட்ட மாநாட்டில் சுமார் மூவாயிரம் பேர் முன்னிலையில் மநு நீதியை தீயிட்டு எரிக்கச் செய்தார். மனித சமத்துவத்துக்கு எதிரானதே சனாதன தருமம் அதை ஒழிக்க வேண்டும் என்று அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார். இறுதியில் இந்து மதத்தை விட்டே இலட்சக்கணக்கான மக்களுடன் பௌத்த மதத்தில் இணைந்தார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் செப்டம்பர் இரண்டாம் நாள் சென்னை காமராசர் அரங்கில் சனாதன ஒழிப்பு மாநாடு நடத்தியது. அம்மாநாட்டில் உரையாற்றிய தமிழ்நாட்டரசின் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி பேசும் போது, “கணவனை இழந்த பெண்களை நெருப்பில் தள்ளி உடன்கட்டை ஏறவைத்தது. கைம்பெண்களுக்கு மொட்டை அடித்து வெள்ளைப் புடவை உடுத்தச் சொன்னது. குழந்தைத் திருமணங்களை நடத்தி வைத்தது. இதைத் தானே பெண்களுக்கு சனாதனம் செய்தது” என்று சரியாகவே கேட்டார்.

மலேரியா, டெங்கு, கொரோனா பரவலை ஏற்படுத்தும் கொசுக்களை ஒழிப்பதுபோல் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்றார்.

உதயநிதி பேசாததைப் பேசியதாக பா.ச.க. இணையப் பரப்புரைப் பிரிவு தலைவர் அமித் மால்வியா “மக்கள் தொகையில் 80 விழுக்காடு இருக்கக் கூடிய சனாதனிகளை இனப்படுகொலை செய்வதற்கான அழைப்பு” என்று அப்பட்டமாக வன்முறையை உருவாக்கும் வகையில் உண்மைக்கு மாறாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

சனாதனத்தை இழிவுபடுத்துவதே ‘இந்தியா’ கூட்டணியின் பணி என்று பா.ச.க. தலைவர் ஜெ.பி. நட்டா பரப்புரை செய்து வருகிறார். தலைமை அமைச்சர் நரேந்திர மோடியே கூட சனாதனத்தை ஒழிக்கும் முயற்சியில் எதிர்க்கட்சிகளின் “இந்தியா” - கூட்டணி ஈடுபட்டுள்ளதாகப் பரப்புரைச் செய்து வருகிறார்.

அயோத்தி சாமியார் பரமான்ஸ் தாஸ் உதயநிதி தலையை வெட்டிக் கொண்டு வந்தால் ரூ.10 கோடி அளிக்கப்படும் என்று வெளிப்படையாக அறிவித்தார். இப்போது தொகையை ரூ.25 கோடியாக உயர்த்தி அறிவித்து உள்ளார். தமிழ் நாட்டினர் தவிர வேறு எவரும் சாமியாருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.

உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாட்டு அமைச்சர் உதயநிதி மீதும், சேகர் பாபு மீதும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

சனாதன ஒழிப்பு மாநாடு நடத்திய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பெரியாரைப் போல் சனாதனத்தின் கேடுகளை விளக்கிக் காட்டிட உச்ச நீதிமன்றத்தை மேடையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மனித சமத்துவத்துக்கு, ஜனநாயகத்திற்கு உழைக்கும் மக்களுக்கு எதிரானப் பழமைவாத போக்குக் கொண்ட சனாதன தர்மத்தை வீழ்த்துவதற்கு மிகப்பெரிய அளவில் கலாச்சாரப் புரட்சியை ஏற்படுத்த வேண்டும்.

- வாலாசா வல்லவன்

Pin It