2000

சனவரி

செகுடந்தாளி முருகேசன்

கோவை மாவட்டம் செகுடந்தாளி கிராமத்தில். முதன்முறையாக காவல் நிலையம் சென்று புகார் கொடுத்த நபர்தான் முருகேசன். இவர் 1998 அக்டோபரில் ஒரு நாள் வேலைக்குச் சென்றுவிட்டு சோமனூரில் இருந்து திருப்பூர் வரும் பேருந்தில் பயணம் செய்து வந்துள்ளார். அதே பேருந்தில் அவரது ஊரைச் சேர்ந்த மாரப்ப கவுண்டர் என்பவரும் பயணம் செய்துள்ளார். மாரப்ப கவுண்டர் அமரும் இருக்கையின் பக்கத்தில் இடம் இருந்ததால், அந்த இருக்கையில் முருகேசன் அமரச் சென்றபோது, அவர் தலித் என்பதால் மாரப்ப கவுண்டர் முருகேசனை அமரவிடாமல் தடுத்ததுடன் – முருகேசனின் சாதிப்பெயரைச் சொல்லி இழிவுபடுத்தியுள்ளார். அன்று இரவு மாரப்ப கவுண்டருடன் சேர்ந்து எட்டுபேர் முருகேசன் வசிக்கும் சேரிக்குள் புகுந்து அவரையும், அவருடைய கர்ப்பிணி மனைவியையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இவ்வன்கொடுமை குறித்த புகாரை சாதிக்கட்டுப்பாடுகளை மீறி முருகேசன் காவல் நிலையத்தில் கொடுத்தார். இந்நிலையில் 6.11.1999 அன்று இரவு 7.30 மணியளவில் முருகேசன் சோமனூரில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது செகுடந்தாளி பேருந்து நிறுத்தத்தில் அவரை வழிமறித்து கொடூரமாகத் தாக்கி சாதி இந்துக்கள் கொன்று போட்டனர். – ச. கருப்பையா

அயோத்திதாசர்

ஆரிய மிலேச்சர்களின் வருகை, அவர்களுடைய தந்திரமிகு செயல்பாடுகள் தமிழகத்தில் ஆதி மதமாக விளங்கிய பவுத்தத்தை அவர்கள் அழித்த விவரம், அவர்கள் பூண்ட வேஷ பிராமணக் கோலம், சூழ்ச்சி, போர் ஆகியவற்றினால் ஈட்டிய வெற்றிகளின் காரணமாக அம்மிலேச்சர்கள் தமது அதிகாரத்தை நிறுவி சாதிய அமைப்பை உற்பத்தி செய்து, பூர்வத் தமிழர்களை தீண்டத்தகாதவர்களாக தாழ்த்திய கொடுமை தமிழ் இலக்கியங்களில் இருந்தும், தான் கற்றறிந்த பாலி மொழி அறிவு வழங்கிய சாட்சியங்களின் உதவியுடனும் இந்நிகழ்வுகளுக்கான ஆதாரங்களைத் தெரிந்தெடுத்து, அவற்றின்அடிப்படையில் ஒரு புதிய வரலாற்று விளக்கத்தை அறிமுகப்படுத்துகிறார் பண்டிதர் அயோத்திதாசர்.

– வ. கீதா 

பிப்ரவரி

கோலார் தங்கவயல்

உலகமயமாக்கல் கொள்கையின் ஒரு பகுதியாக, கோலார் தங்கவயல் சுரங்கத் தொழிலாளர்களின் வாழ்வியல் உரிமை முற்றிலும் அழிக்கப்பட்டு வருகிறது. சுரங்கத்திற்குள்ளேயே விபத்துக்குள்ளாகி இதுவரை 6 ஆயிரம் தொழிலாளர்கள் இறந்து போயுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தங்கவயல் தமிழ்பேசும் மக்களைக் கொண்ட பகுதி தானே என்று கர்நாடக அரசு புறக்கணிக்கிறது; அதோடு மத்திய அரசு நிறுவனம் என்பதால், மாநில அரசுக்கு எந்த அக்கறையுமில்லை. – விடுதலை க. ராசேந்திரன்

சமஸ்கிருதமயமாக்கல்

ஆங்கிலம் எப்படி ஒரு மொழியாகப் பார்க்கப்படாமல் அறிவாகப் பார்க்கப்படுகிறதோ அதைப்போல சமஸ்கிருதமும் தேவமொழியாகப் பார்க்கப்படுவதே நம்மை விமர்சிக்கத் தூண்டுகிறது. சமஸ்கிருதம் என்பது இந்தியாவைப் பொருத்தவரை, சாதி மேலாண்மையை நிலைநிறுத்த வலுவாக உதவும் ஒரு மொழியாகவே வழக்கொழிந்துபோன பின்பும் இருக்கிறது. ஆங்கில, இந்தி மொழி திணிப்புகளைவிட ஒப்பீட்டு அளவிலோ, கருத்தியல் ரீதியிலோ சமஸ்கிருதத் திணிப்பு என்பது மிக மோசமான விளைவுகளைக் கொண்டது. – அழகிய பெரியவன்

காஷ்மீரில் இதுவரை 70 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். காஷ்மீர் மக்களிடம் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி வருகிறோம். அங்குள்ள மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், 85 சதவிகித மக்கள் சுதந்திரமாக வாழ்வதையே விரும்புவார்கள். சுமார் 10 சதவிகிதம் பேர் பாகிஸ்தானையும், 5 சதவிகிதம் பேர் இந்தியாவையும் ஆதரிப்பவர்களாக இருப்பார்கள். – பர்வேஸ் இம்ரோஸ் : ‘காஷ்மீரில் இதுவரை 70 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்'

அணுகுண்டு வெடிப்புச் சோதனைக்காக செலவிடப்பட்ட பணம் சமூக நலத்திட்டங்களிலிருந்து திருப்பிவிடப்பட்டதாகும். இந்திய அரசு தனது செலவில் 50 சதவிகிதத்தை தான் வாங்கியுள்ள அந்நிய கடன்களுக்கு வட்டியாகக் கட்டுகிறது. 25 சதவிகிதத்தை ராணுவத்திற்கு செலவிடுகிறது. மீதமுள்ள 25 சதவிகிதம்தான் மற்ற செலவுகள் அனைத்திற்கும் போகிறது. – பிரபுல் பித்வாய் : ‘வாஜ்பாய் அரசு எடுத்த கோழைத்தனமான முடிவு'

மார்ச்

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்

டெல்லி திரைப்பட விழாவில் ‘பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்' திரைப்படம் திரையிடப்பட்டது. இந்துத்துவத்திற்கு எதிரான நிலைப்பாட்டை இப்படம் தெளிவாகக் கொண்டுள்ளது; அதில் வெற்றியும் பெற்றுள்ளது. ஒரு திரைப்படம் மட்டுமே அம்பேத்கரின் வாழ்வினை செறிவாகக் கொண்டு வந்துவிடாது. வெவ்வேறு நபர்களால் குறைந்தது இருபது, முப்பது படங்களõவது எடுக்கப்படும்போதுதான் அம்பேத்கர் முழுமையாக நமக்குக் கிடைப்பார். தமிழிலும் புதிதாக அம்பேத்கரைப் பற்றி பல திரைப்படங்கள் வெளிவரவேண்டும். – ஆர். ஆர். சீனிவாசன்

ஜனநாயகத்தின் வேர்

சகோதரத்துவம்தான் ஜனநாயகத்தின் வேர். அதன் நேர் எதிர் கொள்கைகளை உயிராகக் கொண்டதுதான் இந்து மதம். இந்தியாவின் அனைத்து வகைப் பிரச்சனைகளுக்கும் மூல காரணம் இந்து மதம்தான். இந்த மத அழிவில்தான் சகோதரத்துவம் தழைக்க முடியும். இன்று மதத்தை பலவீனப்படுத்த இருபெரும் வழிகளைக் கையாண்டார் புரட்சியாளர் அம்பேத்கர் : 1. பவுத்தத்தை தழுவுதல் 2. இந்திய அரசமைப்புச் சட்டம். – சங்கமித்திரை

நூற்றாண்டு தலித் குரல்

‘ஒரு நூற்றாண்டு தலித் குரல்' என்ற தலைப்பில் நூறு வயதைக் கடந்த ஒரு தலித் பெருமகனாரின் (பெருமாள்) நேர்காணலை அழகிய பெரியவன் பதிவு செய்திருக்கிறார் : ‘கிருஷ்ணசாமி, ஆதிமூலம், ஜெ.ஜெ.தாஸ், ஆம்பூர் அப்பாதுரை எல்லாம் வந்து பஞ்சாயத்து பண்ணி செத்த மாட்டை சாப்பிடக்கூடாது, மேளம் அடிக்கக்கூடாது, பறையன்னா எல்லாரும் கேலி பண்றாங்கன்னு சொல்லி கட்டுப்பாட்டை ஏற்படுத்தினாங்க. எவனாவது மிஞ்சி போனான்னா ஊரை விட்டே போடான்னு சொல்லிருவோம்.”

ஏப்ரல்

ஏழு தலித்துகள் எரித்துக் கொலை

கருநாடக கம்மாளப்பள்ளியில் 11.3. 2000 அன்று ஏழு தலித்துகள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். இப்படுகொலை குறித்து அரசின் நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை. எரிந்த குடிசைகளின் சாம்பல் மணமும் மரண ஓலமும் கிராமத்தை விட்டு இன்னும் நீங்கவில்லை. அங்குள்ள தலித் மக்களின் கண்ணீர் மட்டுமல்ல, கனலும்

தெரிக்கிறது. இப்படுகொலை தமிழ்த் தேசத்தில் நடக்கவில்லை என்பதாலோ என்னவோ, தமிழ்நாட்டு தலித் தலைவர்கள் இப்படுகொலை குறித்து குறைந்தளவு கண்டனம் கூடதெரிவிக்காதது வேதனையளிக்கிறது. – ஆசூர்ராஜ், லாரன்ஸ்

வரலாற்றுச் சுவடு

‘தலித் முரசு' 4 ஆம் ஆண்டு சிறப்பிதழை வெளியிட்டு தொல் திருமாவளவன் ஆற்றிய உரை : ‘தலித் முரசை வெகு மக்கள் இதழாகக் கொண்டு செல்ல வேண்டும். இது ‘தலித் சேனா'வின் இதழ் மட்டும் அல்ல; தலித் மக்களின் கொடுமைகளைப் பதிவு செய்கிற ஒரு பதிவேடாக விளங்கிக் கொண்டிருக்கிறது. கொடியன்குளத்தில் நிகழ்ந்ததாக இருந்தாலும், சிதம்பரத்தில், பீகாரில் தலித் மக்கள் வாக்களிக்க தடுக்கப்பட்ட நிகழ்வாக இருந்தாலும் – அத்தனை வரலாற்றுச் சுவடுகளையும் பதிக்கிற ஒரு பதிவேடாக ‘தலித் முரசு' விளங்குகிறது.”

கலாச்சார காவல் நரிகள் சரசுவதி மக்களுக்கான கலை தலித் சுப்பையா பவுத்தமும் இந்திய அரசியல் சட்டமும் சங்கமித்திரை பாசிசத்தின் பன்முகங்கள் த. அருள்எழிலன் பார்ப்பனப் பண்ணையம் கேட்பாரில்லை விடுதலை

க. ராசேந்திரன் தலித் கருத்தியலை அடை காக்காமல் விடுதலை இல்லை திருமாவளவன் தனித்து நின்று போராடுவோம் டாக்டர் கிருஷ்ணசாமி பவுத்தமும் பெண் விடுதலையும் சங்கமித்திரை

கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்டு வரும் சாதிக் கலவரங்கள், தலித் மக்களின் எழுச்சியைக் கண்டு சகிக்க முடியாத ஆணவ சாதியினரின் கோபத்தின் வெளிப்பாடுதான். முன்பு நடந்தது போல் ஆண்ட பரம்பரையினருக்கு ஆளமுடியாமல் போய்விட்டது; அடிமைகளும் ஆளப்படுவதற்கு தயாராக இல்லை. அதற்குக் காரணம் தலித் மக்களின் அமைதி கலைக்கப்பட்டதுதான். தற்பொழுது அடிக்க வரும் கையை நிறுத்தி பதிலடி கொடுக்கத் தொடங்கியுள்ளனர் தலித்துகள்.

 – பி. சாய்நாத் : ‘வறுமைக்கும் சாதியுண்டு '

‘பலதாரமணம் என்பதை வைத்து முஸ்லிம்களை மனிதர்களே இல்லை என்பது போல சித்தரிப்பவர்கள், நாள்தோறும் வரதட்சணைக் கொடுமையில் கொல்லப்படும் இந்தியப் பெண்களைப் பற்றியோ, பிறப்பிலிருந்து இறப்பு வரை பெண் குழந்தைகள் படும் துயரங்களையோ, விதவைகளின் பிரச்சனைகள் குறித்தோ பேசுவதே இல்லை.

– டீஸ்டா செடல்வாட் : ‘இந்துத்துவம் – பாசிசத்தின் இந்திய வடிவம்' 

மே

நியாயக் குரல்

‘அருந்ததியர்கள் எழுப்பும் நியாயக் குரல் : பண்டரக் கோட்டை உணர்த்தும் உண்மைகள்' என்ற தலைப்பில் ஆதவன் பதிவு செய்துள்ளார். ‘டாக்டர் கிருஷ்ணசாமி தற்பொழுது இடஒதுக்கீட்டில் அருந்ததியர் சமூகத்துக்கு தனியே பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று பேசி வருகிறார். இது ஓரளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அருந்ததியர்கள் அரசியல் மயமாவதற்கும், அமைப்பாவதற்குமான வாய்ப்புகளை வழங்க வலுவான அரசியல் சக்திகளாக மாறியுள்ள புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய இயக்கங்கள் முன்வரவேண்டும்.

இது, குறிப்பான செயல்திட்டங்களோடு இணைக்கப்பட வேண்டும்; இழிதொழில்களை செய்யும்படி அவர்களை நிர்பந்திக்கக் கூடாது; அவற்றை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்; உட்பிரிவுகளுக்கிடையிலான கலப்பு மணங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்; குடியிருப்புகளில் பேதம் பாராட்டாமல் சேர்ந்து வசிக்க முன்னுரிமை அளிக்க வேண்டும்; இட ஒதுக்கீடு போன்றவற்றில் அவரவர்க்குரிய பங்கு வலியுறுத்தப்பட வேண்டும்.

– ஆதவன்

 அம்பேத்கர் பெயர் சர்ச்சை

கட்டுக்கதை: ‘அம்பேத்கர் என்பது ஒரு பார்ப்பனரின் பெயர். இவர் டாக்டர் அம்பேத்கரின் இளமைக்காலப் பள்ளி ஆசிரியராக இருந்தார். பீம்ராவ் ராம்ஜி என்ற இயற்பெயர் கொண்ட அம்பேத்கருடன் அன்புடன் நடந்து கொண்டு, தனது வாழ்வில் உயர்வடைய உதவினார். எனவே தனது பெயரை ஆசிரியரின் நினைவாக வைத்துக் கொண்டார்.”

உண்மை : புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த ஊர் ‘அம்பாவடே'. அந்த ஊரின் பெயரை முன்னிலைப்படுத்தி ‘அம்பாவடேகர்' என்று தன் பெயரை மாற்றியமைத்துக் கொண்டார். பின்னர் இப்பெயர் மராட்டிய இலக்கணப்படி, ‘அம்பேத்கர்' எனப்பதிவு செய்யப்பட்டது (இங்கு செஞ்சியார், ஆற்காட்டார் என்ற பெயர்களுடன் ஒப்பிட்டால் ஒரு தெளிவு கிடைக்கும்). இப்பெயர் மாற்றத்திற்கு முழு காரணமானவர், அம்பேத்கரின் இளவயதில் அவரிடம் அன்பு காட்டிய ஆசிரியர் தாதா கேலுஸ்கர். இவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்; அம்பேத்கரின் தந்தை ராம்ஜி சக்பாலின் நண்பர். இதுதான் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கராக மாறிய வரலாறு. லண்டனிலிருந்து தனது ஆசிரியருக்கு அம்பேத்கர் எழுதிய கடிதத்தில், இதைக் காணலாம்.” – சோபகன் 

சூன்

புளியங்குடி படுகொலை

புளியங்குடி கிராமம், சாதிய ஒடுக்கு முறைக்குப் பெயர்போன இடமாகும். 1946இல் இந்த ஊரில் வடமலை என்ற ஒரு தலித் இளைஞர், கட்டி வைத்து மூன்று நாட்களாகத் துன்புறுத்தப்பட்டார். அவர் ராணுவத்தில் பணிபுரிந்து திரும்பியவர். அவர் மீசை வைத்திருந்தார் என்பதற்காக, அவரைக் கட்டிவைத்து வன்னியர்கள் அவரது மீசையை நெருப்பு வைத்துக் கொளுத்தியுள்ளனர். அந்த ஊரில் ஆண்கள் நல்ல உடை உடுத்தக்கூடாது; கிராப் வெட்டிக் கொள்ளக்கூடாது; பெண்கள் ரவிக்கை போடக்கூடாது; நகைகள் அணியக் கூடாது; தலித் மக்கள் பித்தளைப் பாத்திரங்களைப் பயன்படுத்தக் கூடாது; சாலையில் தலித் மக்களின் பிணத்தை எடுத்துச் செல்லக் கூடாது; தலித் தெருவுக்கு அருகில் ஓடும் ராஜன் வாய்க்காலில் இறங்கி குளிக்கக்கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடுகளை வன்னியர்கள் விதித்திருந்தனர்...

ஒரு சத்தம் கிடையாது, ஒரு கை, கால் உதைத்துப் போராடியதற்கான அடையாளம் கிடையாது. மூன்று பேரும் பக்கம் பக்கமாக அப்படியே படுத்துக்கிடக்கிறார்கள். தலை துண்டாகிக் கிடக்கிறது, கழுத்து அறுக்கப்பட்டு காந்தி, வெள்ளையன், மதியழகன் என்ற மூன்று இளைஞர்கள் புளியங்குடியில் கொல்லப்பட்டனர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்தப் பகுதிகளில் தலித் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். தெற்கு மாங்குடி, கருப்பூர், கண்டமங்கலம் எனப் பல ஊர்களிலும் வன்னியர்கள் தலித் வீடுகளை எரித்தனர். அப்போது சரியான நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று இந்நிலை ஏற்பட்டிருக்காது. – ஆதவன்

சாதிக் கலவரங்களில் ஈடுபடுபவர்களை கிராமத்தை விட்டு வெளியேற்றவேண்டும் அம்னஸ்டி இன்டர்நேஷனல் காஷ்மீர் போராளிக் குழுக்களில் இந்திய அரசின் உளவுத்துறை ஊடுறுவல் இருக்கிறது ஹர்ஷிந்தர் சிங் பவுத்தத்தில் இடைச்செருகல்கள் சங்கமித்திரை

இந்து தேசிய ஒற்றுமை பற்றி ஏறக்குறைய 80 ஆண்டுகளாகப் பேசி வரும் ஆர்.எஸ்.எஸ். இதுவரை ஒரேயொரு முறை கூட சூத்திரர், சண்டாளர் மற்றும் பழங்குடி மக்களின் உரிமைகள் பற்றிப் பேசியது இல்லை. இம்மக்களுக்கு புரோகிதத் தொழில் செய்யும் உரிமை இன்றுவரை வழங்கப்படவில்லை. பார்ப்பன ஆயுதமான சமஸ்கிருதம்

மாறுதலுக்குட்படவில்லை. – காஞ்சா அய்லையா : ‘இந்து மதம் : பாசிசத்தின் ஆன்மிக வடிவம்'

 ***

‘தேர்தல் அரசியலே சமரச அரசியல்தான். தனிப்பட்ட கொள்கைகள் என்பது தொலைநோக்குத் திட்டமாக உள்ளுக்குள் இருக்கும். மக்களுக்கான அடிப்படை உரிமைகள், ஜனநாயகப் பரவலாக்கல் இவை இரண்டையும் முன்னிறுத்தி களமிறங்க வேண்டும். இந்த குறிக்கோள் நீர்த்துப் போகாமல் விடுதலை அரசியலை நோக்கி நகர வேண்டும்.” – தொல் திருமாவளவன் : ‘தலித் ஒற்றுமை விடுதலையைப் பிரசவிக்கும்?'

 ***

சூலை

வசும்பும் கடுக்காயும்

தலித் முரசில் அம்பேத்கர் உரையும் பெரியார் உரையும் இடம்பெறுவது எப்படி என்றால், குழந்தைகளுக்கு மருந்தை அள்ளி ஒரே நாளில் கொடுத்துவிட மாட்டார்கள். குழந்தை வளர்ப்பு தெரிந்த தாய்மார்கள், ஒரு வசும்பையும் ஒரு கடுக்காயையும் கொஞ்சம் கொஞ்சமாக அரைத்துக் கொடுப்பார்கள். அப்போதுதான் குழந்தையும் நன்கு வளரும்; அதன் ஊனும் உணர்வுகளும் நன்கு தெளிவாக இருக்கும். அதேபோல்தான் தலித் முரசில் மாதத்திற்கு ஒரு முறை இந்தப் பக்கம் ஒரு வசும்பு; அந்தப்பக்கம் ஒரு கடுக்காய் என்று கொஞ்சம் கொஞ்சமாக அரைத்துக் கொடுக்கிறார்கள். நீங்கள் உங்கள் ஊனிலும் உணர்விலும் சீராக இருக்க வேண்டும் என்றால், இந்த வசும்பையும் கடுக்காயையும் சுவைத்தே ஆக வேண்டும்.

 – கிருத்துதாசு காந்தி

ஆகஸ்ட்

ஜாதி சங்கங்கள்ஒரு பார்வை

தலித் மக்கள் ஒன்றிணைவது விடுதலையை கேட்பதற்கே; அடிமை விலங்கை முறிப்பதற்கே. தங்கள் மீதான இழிவுகளையும் வன்கொடுமைகளையும் தடுத்து நிறுத்துவதற்கே. தலித் அல்லாத சாதிகள் ஒன்றிணைவது ஆதிக்கத்தையும் அதிகாரத்தையும் நிலைநாட்டுவதற்கே. இதை மெய்ப்பிக்கும் வகையில்தான் வன்னியர் சங்கமும் தேவர் பேரவையும் நிறைவேற்றிய தீர்மானங்கள் அமைந்திருக்கின்றன. ‘ஆண்ட ஜாதி அடிமையாவதா? ஒன்று திரள்வோம் சாதியாக – சங்கமாக”, ‘2006 இல் வன்னியர் ஆட்சி” என்ற முழக்கங்களுடன் நேற்று தொடங்கி இன்று புதிதாக முளைத்துள்ள முதலியார் பேரவை வரை முன்வைக்கும் கருத்துகளில் எல்லாம் ஆதிக்க மனோபாவத்தின் அப்பட்டமான குரலும் அதிகார வெறியுமே தெளிவாகத் தெரிகிறது.” – அழகிய பெரியவன்

செப்டம்பர்

வண்ணத்தில் ‘தலித் முரசு'

இம்மாத இதழிலிருந்துதான் ‘தலித் முரசு'இன் அட்டை நான்கு வண்ணத்தில் அச்சிடப்பட்டது. ‘சமூக நீதிக் கருத்தியலைப் பொருத்தவரை, அம்பேத்கரியலும், பெரியாரியலுமே நமக்கு வழிகாட்டும் தத்துவங்கள். சமூக விடுதலை, அரசியல் விழிப்புணர்வு, தமிழ்மொழி வளர்ச்சி, பெண்ணுரிமை, மனித உரிமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவற்றை அடித்தளமாகக் கொண்டு தமிழ்ச் சூழலில் ஒரு மாற்று இதழாக தலித் முரசு பரிணமித்துக் கொண்டு வருகிறது” என்று தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனித்தமிழ்நாடு

‘தனித்தமிழ்நாடு கோரிக்கை உயிர்த்தெழுமா?' என்ற தலைப்பில் விடுதலை க. ராசேந்திரன் ஒரு கட்டுரையை பதிவு செய்திருக்கிறார். ‘இந்திய வரலாற்றில் தனி நாடு கோரிக்கையை முன்னிறுத்திய மாநிலம் தமிழ்நாடு. இந்தியாவிலிருந்து தமிழ்நாடு தனிநாடாக வேண்டும் என்ற லட்சியங்களுக்கான இயக்கங்கள் இங்கே நடைபோட்டன. அந்த முழக்கங்கள் மீண்டும் தலைதூக்குமா? அது சாத்தியப்படுமா?” என்று ஆய்வு செய்கிறது.

பவுத்தப் பண்பாடு

‘நமக்கான பண்பாடு' என்ற கட்டுரையை சங்கமித்திரை எழுதியிருக்கிறார். ‘இருட்டை விரட்டிவிட்டு வெளிச்சத்தைக் கொண்டுவர முடியாது. வெளிச்சம் வந்தால் இருட்டு தானாகவே வெளியேறிவிடும். எனவே, பவுத்தம் என்ற உயரிய வாழ்வியல் நெறி எனும் ஒளி பாய்ந்தால் – பார்ப்பனியம், இந்து மதம், வர்ணம், சாதி போன்ற இருள் மறையும்.”

கொல்லிமலை சூழல் சீரழிவு

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலையின் ‘பாக்சைட்' தாதுவை வெட்டி எடுப்பதைத் தடுத்து நிறுத்தவும் கொல்லிமலை அணைக்கட்டுப் பிரச்சினை குறித்தும் சி.மா. பிரித்திவிராஜ் பதிவு செய்திருக்கிறார்.

எது நாகரிகம்?

‘உடையும் சித்திரங்கள்' தொடரில் சுப. வீரபாண்டியன் : ‘தெருக்களில் மலம் கழிக்கக்கூடாது, தெருக்களில் சண்டை போடக்கூடாது என்றெல்லாம் ‘நாகரிகம்' பேசும் நாம், தெருக்களில் மக்களை வாழவைத்திருக்கும் அநாகரிகம் பற்றி ஏன் அலட்டிக் கொள்ளவில்லை? தெருவிலேயே வாழ நேரும் ஒரு குடும்பம் தன் சண்டைகளையும் தெருவில்தானே வைத்துக் கொள்ள முடியும்? தெருவில்தானே மலம் கழிக்க முடியும்?”

தகுதி திறமை வெங்காயம் சோபகன் அவசர நிலை அறிவிக்கப்படாமல் வருகிறது ரவிக்குமார் கடலூர் : இன்னொரு பீகார்? ஜெயராணி விலங்குகளிலும் வர்ணாசிரமம் க. ராசேந்திரன் கண்டதேவி : தீர்வைத் தராத தீர்ப்பு

ஜெயராணி பத்திரிகை மனோபாவம் அ. இருதயராஜ் இறந்து போனவர்களில் ‘ஆபத்தானவர்' கவுதம சன்னா

வீரப்பனின் கடத்தல் எங்கு போய் முடியும்? ரவிக்குமார் அரசமைப்புச் சட்டத்தை மீறும் அய்.அய்.டி. ஜெயராணி பெண்களும் சமயப்பற்றும் வ. கீதா

உட்சாதி பிரிவுகள் ஆபத்தானவைதான்; தலித் அரசியலுக்கு தடை போடும்தான் என்றாலும், இன்றைய சூழலில் அது மாறுவது என்பது சாதாரண விஷயமல்ல. சாதிப்பிரிவுகளைக் கடந்து உரிமைகள் மறுக்கப்பட்ட முகங்களாகத்தான் மக்களை இணைக்க வேண்டும். புதிய தமிழகம் அதை சரியாகச் செய்கிறது. அதனால் அது வேறு யாரையும் கருத்தில் எடுத்துக் கொள்வதில்லை. – டாக்டர் கிருஷ்ணசாமி : ‘உட்சாதிப் பிரிவுகள் ஆபத்தானவை'

அக்டோபர்

போராடினால் வெற்றி

ஆந்திர மாநிலத்தின் புரட்சிப்பாடகர் கத்தாரின் பேட்டி இவ்விதழில் இடம் பெற்றுள்ளது. ‘நாங்கள் உங்கள் பிள்ளைகள், நாங்கள் உங்களுக்காகப் பாட வந்திருக்கிறோம். இந்த உலகத்தை உருவாக்கியவர்கள் நீங்கள். பண்ணையார் எப்படி உங்களை ஆள முடியும்? உணவை உருவாக்குபவர்கள் நீங்கள். ஆனால், உங்களுக்கு உணவு இல்லை. எனவே, இந்த அமைப்பை நீங்கள் தான் மாற்ற வேண்டும். இதைச் செய்ய முதலில் சங்கத்தை உருவாக்குங்கள். இந்த அமைப்பு முறையை எதிர்த்துப் போராடினால், நீங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள். இலக்கிய ஆற்றல், அமைப்பு முறையுடன் இணையும்போதுதான் அது வலிமைமிக்க ஆற்றலாக உருவெடுக்கிறது. அதற்குப்பிறகு அது வெறும் பாட்டல்ல; ஆயுதம்.”

ஆனந்தன் யார்?

ஆனந்தன் – இந்தப் பெயர் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அறியப்பட்ட பெயர். ஆனால் இந்தப் பெயருக்கான முதல் மனிதர் யார்? அவர் சிறப்பு என்ன? என்பது பலரும் அறிந்திராத செய்தி. ஆனந்தன் புத்தர் காலத்தில் வாழ்ந்தவர். புத்தரின் மறைவுக்குப் பிறகு இவர் சங்கத்தை வழிநடத்தினார். புத்தர் தமது பெரும்பாலான அறிவுரைகளை ஆனந்தனிடமே கூறியுள்ளார். புத்தர் துறவறம் மேற்கொண்ட போது அவருக்கு துணையாக ஆனந்தன் சென்றார். புத்தருக்கு பணிவிடை செய்ய வேண்டி தனது ஒட்டுமொத்த குடும்பத்தையும் புறந்தள்ளிவிட்டு, புத்தரின் நிழலாகவே ஆனந்தன் வாழ்ந்தார். புத்தரின் கருத்துகளை தம்மம் என்ற வாய் வழி நூலாகத் தொகுத்தவர் ஆனந்தன். நாலந்தா என்ற இடத்தில் மாணவர்களைத் திரட்டி கல்வி அளித்தார். நாலந்தா பல்கலைக் கழகம் உருவாக இவர் உழைப்பே அடிப்படை – சங்கமித்திரை 

நவம்பர்

தலித் பத்திரிகையாளர் பயிலரங்கு

தலித் பத்திரிகையாளர்களை உருவாக்கும் முயற்சியில் ‘தலித் முரசு' அக்டோபர் 20, 21, 22 ஆகிய மூன்று நாட்கள் சென்னையில் இதழியல் பயிலரங்கை நடத்தியது. தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் 30 பங்கேற்பாளர்கள் இதில் பங்கேற்று பயன் பெற்றனர்.

சீரழிக்கும் ஆர்.எஸ்.எஸ்.

‘சந்ததியையும் சீரழிக்கும் ஆர்.எஸ்.எஸ். என்ற அட்டைப்படக் கட்டுரையை விடுதலை க. ராசேந்திரன் பதிவு செய்திருக்கிறார்: ‘சாதி அமைப்பு முறையையும் வர்ணாசிரமத்தையும் ஆதரிப்பதே ஆர்.எஸ்.எஸ். கொள்கை என்பதை கோல்வாக்கர் தனது நூலில் வலியுறுத்தியதை (‘சிந்தனைக் கொத்து' 8 ஆவது அத்தியாயம்) இப்போதும் எதிர்ப்பு இல்லாமல் ஏற்றுக் கொண்டிருப்பது ஏன்? பெண்களை ‘சுயம் சேவக்'குகளாக அங்கீகரிக்காதது ஏன்? ஆர்.எஸ்.எஸ். விழாக்களில் பெண்கள் பங்கு பெற அனுமதி மறுப்பது ஏன்?”

டிசம்பர்

கறுப்பு அரசியல்

‘கறுப்பு அரசியல்' என்ற தலைப்பில் தொ. பரமசிவனின் கட்டுரை இடம் பெற்றது: ‘தமிழ் பேசும் பெருவாரியான மக்கள் கூட்டத்தாரின் மரபுவழி அழகுணர்ச்சி மனிதத் தோலின் நிறத்தைப் பொருத்தமட்டில் திசைமாற்றம் செய்யப்பட்டது. எதிர்நிலையில் சொல்வதானால், கறுப்பு நிறமுடைய மக்கள் அழகற்றவர்களாகவும், ஆளப்படுபவர்களாகவும் இழிவின் சின்னமாகவும் கருதப்பட்டனர். இன்றளவும் இதுவே தொடர்கதையாகி வருகிறது.

நீதித்துறைக் கதைகள்

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருப்பவர் ஏ.எஸ்.ஆனந்த். நாட்டுக்கே நீதி வழங்கக்கூடிய உயர்ந்த அதிகாரம் உள்ள மனிதர். ‘பிரம்மா'வின் முகத்தில் பிறந்ததாகக் கூறப்படும் பார்ப்பனர். இவர், தனது பிறந்த ஆண்டை 1934 என்றும், 1936 என்றும் மாற்றி மாற்றி பதிவு செய்திருக்கிறார். 1934 இல் அவர் பிறந்திருப்பாரேயானால், அவர் இப்போது ஓய்வு பெற்றிருக்க வேண்டும். இதை சட்ட அமைச்சராக இருந்த ராம்ஜெத்மலானியே சுட்டிக் காட்டினார். அதற்காக, அவர்தான் பதவி விலக நேரிட்டதே தவிர, ஆனந்த் பதவி விலகவில்லை.

 – விடுதலை க. ராசேந்திரன்

 கலை சமூகத்துக்காகத்தான் புகழேந்தி அரசமைப்புச் சட்டத்தை பிரதமர் மதிக்கிறாரா? நீதிபதி எச். சுரேஷ் நீங்கள் கேட்காதவை ஆர்.ஆர்.சீனிவாசன் பவுத்தத் தலங்களை மீட்க வேண்டும் சங்கமித்திரை பசியும் எரியும் அழகிய பெரியவன் பெரியாறு நீர் உரிமை மீட்புப் பயணம் மா. தமிழ்மணி ஆணாதிக்கச் சமூகத்தின் சர்வாதிகார ‘சினிமா' மீனா மயில்வாகனன் இந்துத்துவாவின் தலித் பற்று விஷமில்லாத நிலமும், உணவும் வேண்டி மீனாமயில் வீடு பேறு அற்றோர் அழகிய பெரியவன்

Pin It