gandhi ambedkhar 400

திரு.காந்தி தீண்டப்படாதோரின் ரட்சகர் என்று அவர்கள் மனத்தில் பதியவைக்க காங்கிரஸ்காரர்கள் ஒருபோதும் தயங்கு வதில்லை. திரு. காந்தி உண்மையிலேயே ஒரு ரட்சகர்தான் என்று அகில இந்தியாவிலுள்ள காங்கிரஸ்காரர்கள் நம்புவது மட்டுமல்ல, அவர்தான் தீண்டப்படாதோரின் ஒரே பாதுகாவலர் என்று அம் மக்களை நம்பவைப்பதற்கும் முனைந்து ஈடுபடுகின்றனர்.

இதற்கு சான்று என்ன என்று கேட்டால், தீண்டப்படாதோருக்காக சாகும் வரை உண்ணாவிரதமிருக்க பிரதிக்கினை மேற்கொண்டவர்கள் திரு. காந்தியைத் தவிர வேறு யாரேனும் இருக்கின்றார்களா என்று அவர்கள் திருப்பிக் கேட்கின்றனர்.

புனா ஒப்பந்தத்தின்படி தீண்டப் படாதோருக்கு என்னென்ன அரசியல் உரிமைகள் கிடைத்திருக்கின்றனவோ அவை எல்லாம் காந்தியின் அயராத, சளையாத முயற்சியால் கிட்டியவையேயாகும் என்று சிறிதளவும் மனச்சான்றின் உறுத்தலின்றி தீண்டப்படாதோரிடம் அவர்கள் கூறுகின்றனர்.

இத்தகைய கட்டுப்பாடான, திட்டமிட்ட பிரசாரத்திற்கு ஓர் உதாரணமாக ராய் பகதூர் மேகர்சந்த் கன்னா (பிரீபிரஸ் ஜர்னல், 14-4-45) கூறியதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

1945 ஏப்ரல் 12ஆம் தேதி பெஷாவரில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் கழகத்தின் சார்பாக நடைபெற்ற ஒரு கூட்டத்தில் அவர் பின்கண்டவாறு பேசினார்:

“மகாத்மா காந்திதான் உங்களுடைய மிகச் சிறந்த நண்பர். உங்களுக்காக அவர் உண்ணாவிரதம்கூட மேற்கொண்டு, புனா ஒப்பந்தத்தைச் சாதித்தார். இந்த புனா ஒப்பந்தம்தான் உங்களுக்கு வாக்குரிமையை வாங்கித் தந்தது. ஸ்தல ஸ்தாபன அமைப்புகளிலும் சட்டமன்றங்களிலும் உங்களுக்குப் பிரதி நிதித்துவத்தைப் பெற்றுத் தந்தது. உங்களில் சிலர் டாக்டர் அம்பேத்கருக்குப் பின்னால் ஓடிக்கொண்டிருப்பது எனக்குத் தெரியும்; அவருக்கு வால் பிடித்து வருவதை நான் அறிவேன்.

ஆனால் டாக்டர் அம்பேத்கர் யார்? பிரிட்டிஷ் ஏகாதிபத்திய வாதிகளின் சிருஷ்டி அவர்; அவர்களது கையாள் அவர்; இந்தியா துண்டாடப்படவும், அதன் மூலம் பிரிட்டிஷார் தொடர்ந்து ஆட்சிபீடத்தில் ஒட்டிக்கொண்டிருக்கவும் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு அவர் ஆதரவளித்து வருகிறார்; அவர் களது கரங்களைப் பலப்படுத்தி வருகிறார். வேஷம் போட்டு நாடகமாடும் போலித் தலைவர்களையும் உங்களுடைய உண்மையான நண்பர்களையும் பிரித்து இனம் காணுவது உங்கள் நலன்களுக்குத்தான் நன்மை என்பதை உங்கள் கவ னத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.”

ராய் பகதூர் மேகர்சந்த் கன்னாவின் பேச்சை இங்கு நான் குறிப்பிடுவதைக் கண்டு, அவர் ஏதோ நமது கவனத்திற்குரிய பெரிய மனிதர் என்று தவறாக எடைபோட்டு விடாதீர்கள். ஏனென்றால் இந்திய அரசியலில் இந்த ஆளைப் போன்ற கடைந்தெடுத்த கயமைத் தனம் கொண்ட வேறு நபர் எவரையும் காணமுடியாது. அவர் புரிந்த சித்துகள் கொஞ்சநஞ்சமல்ல; அவர் ஆடிய ஆட்டங்கள் அற்ப சொற்பமல்ல.

ஒரே ஆண்டில், அதிலும் வெகுதொலைவில் அல்ல 1944 அவர் வெவ்வேறு மூன்று நாடகப் பாத்திரங்களை அற்புதமாக நடித்துக் காட்டியிருக்கிறார். அவர் முதலில் இந்துமகாசபையின் செயலாளராகத் தமது பணியைத் தொடங்கினார்; பிறகு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கையாளாக எடுபிடியாக மாறினார்; பின்னர் வெளிநாடுகள் சென்று பிரிட்டிஷ் மக்களுக்கும் அமெரிக்க மக்களுக்கும் இந்தியாவின் போர் முயற்சிகள் குறித்துப் படாடோப மாகப் பிரசாரம்; இப்போது அடுத்த அவதாரம் எடுத்திருக்கிறார்; மேற்கு எல்லைப்புற மாகாணத்தின் காங்கிரஸ் ஏஜெண்டாக மாறியிருக்கிறார்.

ராய் பகதூர் கன்னா போன்றவர்கள் என்ன செய்வார்கள், ஏது செய்வார்கள் என்று தெரியாது; எதுவும் நீண்டகாலம் நீடிக்காது; டிரைடன் மொழியில் கூறுவதானால் அமாவாசை போய் பௌர்ணமி வருவதற்குள்ளாக அவர்கள் செய்யாதது எதுவுமே இருக்காது; ஒரு சமயம் வேதியல் வல்லுநர்களாக இருப்பார்கள்; இன்னோரு சமயம் ‘பிடில்’ வாசிக்கப் புறப்பட்டு விடுவார்கள்; மற்றொரு சமயம் பழுத்த ராஜதந்திரியாகத் தூள் பரப்புவார்கள்; இறுதியாக கோமாளிகளாகக் காட்சியளிப்பார்கள். இத்தகையவர்களின் கருத்துகள் இகழ்ச்சிக்கும் ஏளனத்துக்குரியவையே ஆகும். அப்படியிருக்கும்போது ராய் பகதூர் கன்னாவை இங்கு நான் ஏன் குறிப்பிட வேண்டும் என்று கேட்கலாம்.

தீண்டப்படாதோரை ஏமாற்றுவதற்கு, வஞ்சிப்பதற்கு திரு. காந்தியின் நண்பர்கள் எத்தகைய கீழ்த்தரமான, அபத்த பிரச்சாரத்தைச் செய்து வருகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டவே இங்கு கன்னா வைப் பற்றிக் குறிப்பிட்டேன் : (இத்தகைய பிரசாரத்திற்கு மற்றோர் உதாரணமாக பேராசிரியர் .ஆர். வாடியா என்ற பார்சி கனவான் செய்து வந்த பிரசாரத்தை கூறலாம். பேராசிரியர் வாடியாவின் கருத்துகளைக் கடுமையாக விமர்சித்து. ராஸ்த்-ரஹபா என்ற பெயரில் பம்பாயிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த வார இதழில் திரு. .ஜே. சஞ்சானாஅர்த்தமும் அனர்த்தமும்என்ற தலைப்பில் அக்டோபர் 29 முதல் 1945 ஏப்ரல் 15 வரை பல தொடர் கட்டுரைகளை எழுதினார்.)

இத்தகைய ஓர் அப்பட்டமான பொய்மை தீண்டப்படாதோரில் எத்தனை பேர் ஏற்றுக்கொள்வார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் இந்தச் சந்தர்ப்பத்தில் நாஜிகளின் சித்தாந்தம் ஒன்றை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். சாமானிய மனிதனின் அறிவுத் திறத்தால் நுணுகி ஆராய முடியாத ஒரு பொய்யை தயக்கமின்றிக் கூறுங்கள்; அது எவ்வளவு பெரிய பொய்யாக இருந்தாலும் அதையே மீண்டும் மீண்டும், திரும்பத் திரும்பக் கூறினால் அது மெய்யாகி விடும்; அப்படியே ஒருக்கால் உண்மை என்று அது உடனடியாக ஏற்றுக்கொள்ளப்படாவிட்டாலும், உங்கள் பிரசாரத்திற்கு இலக்கான வர்களிடம் அது படிப்படியான பிடிப்பை ஏற்படுத்தி, இறுதியில் அதனை ஒப்புக்கொள்ளச் செய்துவிடும். இதுதான் நாஜிகளின் சித்தாந்தம். இந்தச் சித்தாந்தத்தைத்தான் திரு. காந்தியின் நண்பர்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், தீண்டப்படாதோர் இயக்கத்தில் திரு. காந்தி ஆடிவரும் நாடகத்தை அம்பலப்படுத்துவதும், இந்த மாய பிரசார வலையில் விழுந்து விடாதபடி தீண்டப்படாதோரை எச்சரிப்பதும் எனக்கு அவசிய மாகிறது.

I

தீண்டப்படாதோர் இயக்கத்தில் திரு. காந்தி ஆற்றிவந்திருக் கும் பங்கை நாம் ஆராய முற்படும்போது, தீண்டாமை என்பது ஒரு தீமை, ஒரு கொடுமை என்பதை திரு. காந்தி எப்போது முதல் தடவை யாக உணர்ந்து கொண்டார் என்பதை நிச்சயித்துக் கொள்வது உசித மாக இருக்கும். இது விஷயத்தில், திரு. காந்தியே வாய்மொழியாகக் கூறியதை இங்கு மேற்கோள் காட்டினால் போதும். 1921 ஏப்ரல் 14, 15 தேதிகளில் ஆமதாபாத்தில் ஒடுக்கப்பட்ட இனத்தவர்களின் மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டுக்குத் தலைமை வகித்து உரையாற்றும் போது திரு. காந்தி கூறியதாவது:

“அப்போது எனக்கு பன்னிரண்டு வயதுகூட நிரம்பவில்லை. அச்சமயம்தான் தீண்டாமை குறித்த கருத்து என் மனத்தில் உதித்தது. தீண்டப்படாதாரான உக்கா என்ற தோட்டிதான் எங்கள் வீட்டிலுள்ள மலசல கழிவிடங்களைச் சுத்தம் செய்வது வழக்கம். அவனைத் தொடக்கூடாது என்று நான் தடைசெய்யப் பட்டிருந்தேன். அவனைத் தொகுவதில் என்ன தவறு என்று நான் அடிக்கடி என் தாயிடம் கேட்பேன். அப்படியே தற்செயலாக உக்காவை தொட்டுவிடும்போது, உடனே குளிக்க வேண்டும் என்று என்னிடம் கூறுவார்கள்.

இயல்பாகவே இந்த ஆணைக்கு நான் கீழ்ப்படிந்தாலும், சிரித்துக் கொண்டே என் ஆட்சேபத் தைத் தெரிவிக்காமல் விடமாட்டேன்; தீண்டாமையை மதம் அனுமதிக்கவில்லை, அப்படி அது அனுமதிப்பதும் சாத்திய மில்லை என்று விவாதிப்பேன். எனினும் பெற்றோருக்கு மதிப்பும் மரியாதையும் தரும் மிகவும் கடமை உணர்ச்சியும் கீழ்ப்படித லுமுள்ள குழந்தையாகவே வளர்ந்து வந்தேன். தீண்டாமை விஷயத்தில் அவர்களுடன் எனக்கு அடிக்கடி சச்சரவுகள் ஏற்படுவது உண்டு. உத்காவைத் தீண்டுவது பாபம் என்று கூறுவது முற்றிலும் தவறு என்று என் தாயிடமே வாதிட்டேன்.

“நான் பள்ளிக்கூடத்தில் படித்து வந்தபோது, ‘தீண்டப் படாதோரை’ அடிக்கடி தீண்ட நேரிடும். ஆனால் இதை என் பெற்றோரிடமிருந்து ஒருபோதும் மறைக்க மாட்டேன்; உண்மையை அப்படியே சொல்லிவிடுவேன். அப்போது என் தாய் என்ன சொல்லுவார் தெரியுமா? ‘பரவாயில்லை. அந்த வழியே போகும் ஒரு முசல்மானைத் தொட்டால் இந்தத் தீட்டு போய்விடும்’ என்று கூறுவார். தாயிடம் எனக்குள்ளா மதிப்பு, மரியாதை, பயபக்தி காரணமாக நானும் அப்படியே செய் வேன். ஆனால் இதனை ஒரு சமயக் கடமையாக, சடங்காகக் கருதி ஒருபோதும் செய்ததில்லை. சிறிது காலத்திற்குப் பிறகு நாங்கள் போர்பந்தரில் போய்க் குடியேறினோம். அங்குதான் சமஸ்கிருதத்துடன் எனக்கு முதல் முதலில் பரிச்சயம் ஏற்பட்டது. அப்போது இன்னமும் நான் ஆங்கிலப் பள்ளியில் சேர்க்கப்படவில்லை.

என் சகோதரரும் நானும் ஒரு பிராமணர் பொறுப்பில் விடப்பட்டோம். அவர் எங்களுக்கு ராம் ரக்ஷா வையும், விஷ்ணு பஞ்சாரையும் போதித்தார். ‘ஜலே விஷ்ணு’ ’ஸ்தலே விஷ்ணு’ (பகவான் நீரிலும் இருக்கிறார், நிலத்திலும் இருக்கிறார் என்பது இதற்குப் பொருள்) என்ற சுலோகங்கள் இன்னமும் என் நினைவிலிருந்து அகலவில்லை. அந்நாட் களில் ஒரு மூதாட்டி எங்கள் வீட்டருகே வசித்துவந்தான். அப்போதெல்லாம் நான் பெரும் ‘பயங்கொள்ளி’யாக இருந்து வந்தேன். விளக்குகள் அணைந்து இருள் சூழ்ந்துவிட்டால் போதும், பேய், பிசாசு பயம் என்னைப் பிடித்துக் கொள்ளும். அப்போது இந்தப் பெருமாட்டி எனது அச்சங்களைப் போக்கு வதற்கு ஒரு யோசனை தெரிவித்தார்.

என்னை பயம் பீடிக்கும் போதெல்லாம் ராம ரக்ஷா சுலோகங்களை முணுமுணுத்தால் போதும், கெட்ட ஆவிகள் எல்லாம் பறந்தோடிவிடும் என்று கூறினார். நானும் அவ்வாறே செய்தேன்; இதற்கு நல்ல பயன் கிடைத்ததாகவே தோன்றிற்று. ‘தீண்டப்படாதோரை’த் தீண்டுவது ஒரு பாவம் என்பதைக் குறிக்கும் ஒரு சுலோகம் ராம் ரக்ஷையில் இருக்கும் என்று என்னால் ஒருபொதும் நம்ப முடியவில்லை. அச்சமயம் அதன் பொருளை என்னால் புரிந்துகொள்ள முடிய வில்லை; அல்லது மிகவும் தவறாகப் புரிந்துகொண்டிருக்கக் கூடும். எனினும் எல்லா வகையான பேய் பிசாசுகளைப் பற்றிய அச்சத்தையும் அகற்றும் ராம்ரக்ஷையால் ‘தீண்டப்படாதோரை’ தீண்டும் பயத்தையும் விரட்டியடிக்காமல் இருக்க முடியாது என்று நம்பினேன்.

“எங்கள் குடும்பத்தில் ராமாயணம் ஆசார முறைப்படி படிக்கப்படுவது உண்டு. லாதா மகாராஜ் என்ற ஒரு பிராமணர் தான் அதைப் படித்துக் காட்டுவது வழக்கம். அவரைத் தொழு நோய் பீடித்திருந்தது; ராமாயணத்தை ஒழுங்காகப் படித்து வந்தால் தொழுநோய் குணமாகிவிடும் என்று அவர் திடமாக நம்பினார். உண்மையில் அவர் குணமடையும் செய்தார். தற்காலத்தில் ‘தீண்டப்படாதவர்’ என்று கருதப்படும் ஒருவர் தான் ராமபிரானை தமது படகில் வைத்து கங்கையைக் கடக்கச் செய்தார் என்று கூறும் ராமாயணம் மாசுபட்ட ஆத்மாக்கள் என்று கூறி மனித ஜீவன்களை ‘தீண்டத்தகாதவர்களாக’ நடத்தப் படுவதை எப்படி ஆதரிக்க முடியும் என்று எனக்குள் நினைத்துக் கொண்டேன்.

மாசடைந்தோரைப் புனிதப்படுத்துபவர்’ என்பன போன்றெல்லாம் துதித்துப் பகவானைப் போற்றுகிறோம். இது எதைக் காட்டுகிறது? இந்து மதத்தில் பிறந்த எவரையும் தீட்டுப்பட்டவர், தீண்டப்படாதவர் என்றெல்லாம் பழிப்பது, ஒதுக்குவது மகாபாவம், பேய்த்தனமான செயல் என்பதையே இது காட்டுகிறது. அன்று முதல் இது மிகக் கொடிய பாவம் என்று திரும்பத் திரும்பக் கூறுவதில் நான் என்னும் சளைத்ததே இல்லை, சலித்ததே இல்லை. அந்த பன்னிரண்டு வயதில் இது ஒரு பற்றுக்கோளாக, ஒரு மெய்ம்மையாக என்னுள் உரு வெடுத்துவிட்டது என்று பாசாங்கு செய்ய நான் விரும்ப வில்லை. எனினும் அச்சமயம் தீண்டாமையை ஒரு பாபமாகக் கருதினேன் என்று நிச்சயமாக என்னால் கூறமுடியும். வைஷ்ண வர்களும் வைதிக இந்துக்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இதையெல்லாம் கூறுகிறேன்”.

குருட்டுத்தனமான சமயப்பற்று கொடிகட்டிப் பறந்துவந்த அந்த நாட்களில், அதுவும் மிக இளமைப் பருவமான 12 வயதில் தீண்டாமை ஒரு சாபக்கேடு என்பதை திரு. காந்தி உணர்ந்திருந்தார் என்பது உண்மையிலேயே சுவையான விஷயம் என்பதில் ஐய மில்லை. ஆனால் இந்தத் தீமையை, அனாசாரத்தை ஒழித்துக்கட்ட திரு. காந்தி என்ன செய்தார் என்று அறிய தீண்டப்படாதோர் விரும்பு கின்றனர். சென்னையைச் சேர்ந்த தாகூர் அண்ட் கோ என்ற வெளி யீட்டாளர்கள் 1922ல் திரு. காந்தியின் வாழ்க்கை வரலாறு பற்றி யங் இந்தியா என்ற தலைப்பில் 30 தொகுதியை வெளியிட்டிருந் தனர். திரு. காந்தி பொதுவாழ்க்கையில் ஈடுபட்ட காலம் முதல் மேற்கொண்ட முக்கிய நடவடிக்கைகளின் ஒரு பகுதியை அத்தொகுதி யிலிருந்து கீழே தந்துள்ளோம்:

“மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி 1869 அக்டோபர் 2 ஆம் தேதி பிறந்தார். அவர் பனியா சாதியைச் சேர்ந்தவர்; போர்பந்தர், ராஜ்கோட் மற்றும் இதர சில கத்தியவார் சமஸ்தானங்களின் திவானாக இருந்த கரம்சந்த் காந்தியின் புதல்வர்; அவர் கத்திய வார் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார்; பின்னர் லண்டன் பல்கலைக் கழகத்திலும் இன்னர் டெம்பிளிலும் படித்தார். லண்டனிலிருந்து திரும்பியதும் பம்பாய் உயர்நீதி மன்றத்தில் ஒரு வழக்குரைஞராகப் பதிவுசெய்து கொண்டார். ஒரு வழக்கில் வாதாடும் பொருட்டு முதலில் நேட்டாலுக்கும் பின்னர் டிரான்ஸ்வாலுக்கும் சென்றார். நேட்டால் உச்ச

நீதிமன்றத்தில் ஒரு வழக்குரைஞராகத் தம்மைப் பதிவு செய்து கொண்டார். அங்கேயே தங்கிவிடத் தீர்மானித்தார். 1894ல் நேட்டால் இந்திய காங்கிரசை நிறுவினார். 1895ல் இந்தியா திரும்பினார். நேட்டால் மற்றும் டிரான்ஸ்வால் இந்தியர்களின் சார்பாக ஒரு கிளர்ச்சியை மேற்கொண்டார். பிறகு டர்பனுக்குத் திரும்பினார். அங்கு போய் இறங்கியதும் ஒரு வெறிகொண்ட கூட்டத்தால் தாக்கப்பட்டார்; மரணத்திலிருந்து நூலிழையில் தப்பினார்; 1899ல் பிரிட்டிஷ் போயர் போரின்போது, காய மடைந்தோரைப் போர்க்களத்திலிருந்து அப்புறப்படுத்தும் இந்திய ஆம்புலன்ஸ் படை ஒன்றைத் தலைமை தாங்கி நடத்தினார்.

உடல்நலம் பெறும் பொருட்டு 1901ம் மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பினார். தென்னாப்பிரிக்க இந்தியர்களுக்குள்ள சிரமங்கள் குறித்து இந்தியர்களின் கருத்தை திரு. சேம்பர்லேனிடம் எடுத் துரைக்கும் பொருட்டு மீண்டும் தென்னாப்பிரிக்கா திரும்பி னார். டிரான்ஸ்வால் உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பதிவு செய்துகொண்டார்; டிரான்ஸ்வால் பிரிட்டிஷ் இந்திய சங்கத்தை நிறுவி கௌரவ செயலாளராகவும், தலைமை சட்ட ஆலோசகாராகவும் இருந்தார்.

1903ல் இந்தியன் ஒப்பீனியன் என்ற பத்திரிக்கையைத் தொடங்கினார்; ‘போனிக்ஸ்’ குடியேற் றத்தை நிறுவினார். 1906ல் நடைபெற்ற ஸ்தல கலகத்தின்போது, காயம் பட்டோரை இட்டுச் செல்லும் தூக்குப்படுக்கை படை ஒன்றை தலைமைதாங்கி நடத்தினார்; 1906 ஆம் வருட ஆசியர் - எதிர்ப்புச் சட்டத்தை எதிர்த்து கிளர்ச்சி மேற்கொண்டார்; இந்தச் சட்டத்தை ரத்து செய்யும்படி வலியுறுத்தவதற்காக இங்கிலாந் துக்கு தூது சென்றார்; இந்த சட்டத்திற்கு எதிராக சாத்வீக எதிர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது; ஜெரனல் ஸ்மட் சுக்கும் திரு. காந்திக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடை பெற்று சமரசம் ஏற்பட்டது. சட்டத்தை ரத்து செய்ய தாம் வாக்குறுதி அளிக்கவில்லை என்று ஸ்மட்ஸ் மறுத்தார். இதனைத் தொடர்ந்து மீண்டும் சாத்வீக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. சட்டத்தை மீறி இருமுறை கைதானார். இந்தியர்களின் கட்சியை பிரிட்டிஷ் பொதுமக்களிடம் எடுத்துரைப்பதற்காக மீண்டும் 1909ல் இங்கிலாந்து சென்றார்; 1911ல் இடைக்கால உடன்பாடு ஏற்பட்டது.

திரு. கோகலே தென்னாப்பிரிவுக்கு வருகை புரிந்தார். 1911 ஆம் வருட உடன்பாட்டைச் செயல்படுத்த அரசாங்கம் மறுத்ததனால் சாத்வீக எதிர்ப்புப் போராட்டத்தை மீண்டும் மேற்கொண்டார். 1914 இறுதி உடன்பாடு ஏற்பட்டது.

இங்கிலாந்து சென்றார்: 1914-ல் இந்திய – ஆம்புலன்ஸ் படை ஒன்றை உருவாக்கினார்.”

இந்த வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பிலிருந்து என்ன தெரி கிறது? 1894ல் நேட்டால் இந்திய காங்கிரசை நிறுவிய திரு. காந்தி தமது பொது வாழ்க்கையைத் தொடங்கினார் என்பது தெளிவாகிறது. 1894 முதல் 1915 வரை அவர் தென்னாப்பிரிக்காவில் இருந்தார். இந்த காலகட்டத்தில் தீண்டப்படாதோரைப் பற்றி அவர் ஒருபோதும் எண்ணிப் பார்த்ததில்லை; உத்காவைப் பற்றி விசாரித்தறியவும் இல்லை.

திரு. காந்தி 1915ல் இந்தியா திரும்பினார். அப்போதேனும் தீண்டப்படாதோர் விஷயத்தில் கவனம் செலுத்தினாரா? அக்கறை காட்டினாரா? இது விஷயமாக மேலே குறிப்பிட்ட வாழ்க்கை வர லாற்றுக் குறிப்பிலிருந்து மேற்கோள் காட்டுகிறோம். அது கூறுவ தாவது:

“1915ல் இந்தியா திரும்பினார்; ஆமதாபாத்தில் சத்தியாக் கிரக ஆசிரமத்தை நிறுவினார். 1917ல் சாம்பிரான் தொழிலாளர் பிரச்சினைக்குத் தீர்வு காணுவதிலும், கய்ரா பஞ்ச நிவாரணப் பணிகளிலும், 1918ல் ஆமதாபாத் பஞ்சாலைத் தொழிலாளர் போராட்டத்தைத் தலைமை தாங்கி நடத்துவதிலும் பங்கு கொண்டார்; 1918ல் படைக்கு ஆட்சேர்ப்பு இயக்கம்; ரௌலட் சட்டத்திற்கு எதிராகக் கிளர்ச்சி; 1919ல் சத்தியாக்கிரக இயக்கத்தைத் தொடங்குதல்; டில்லி செல்லும் வழியில் கோசியில் கைது செய்யப்பட்டு பம்பாய்க்குத் திருப்பி அனுப்பப்படல்; 1919ல் பஞ்சாப் குழுப்பங்கள், அதிகார வர்க்கத்தின் அட்டூழியங்கள்; பஞ்சாப் படுகொலைகள், அக்கிரமங்கள் பற்றிய காங்கிரஸ் விசாரணைக்குழுவில் உறுப்பினர்; கிலாபத் இயக்கத் தில் பங்குகொள்ளுதல், மேமாதம் ரீடிங் பிரபுவிடம் பேட்டி; 1921ல் நடைபெற்ற காங்கிரஸ் மகாசபைக் கூட்டத்தில் காங்கிரசின் ஒரே நிர்வாகப் பொறுப்பாளராக நியமனம். 1922 பிப்ரவரியில் சட்டமறுப்பு இயக்கம்; சௌரி சௌரா கலங்கள் காரணமாக 1922 பிப்ரவரியில் சட்டமறுப்பு இயக்கம் நிறுத்தம்; 1922 மார்ச்சில் கைது செய்யப்பட்டு, விசாரணைக்குப் பின்னர் ஆறு ஆண்டுகால வெறுங்காவல் தண்டனை விதிக்கப்படல்.”

இந்தக் குறிப்பில் சில முக்கிய விஷயங்கள் விட்டுப் போய்விட்டன. இவை திரு. காந்தியின் வாழ்க்கையில் முக்கியமான இடத்தைப் பெறுபவை. அவற்றை இங்கு தருகிறோம்:

“பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திலிருந்து இந்தியா விடுதலை பெறுவதற்காக இந்தியா மீது ஆப்கானிஸ்தானின் படை யெடுப்பை ஆதரிக்கத் தயாராக இருப்பதாக அறிவித்தல்; 1920ல் பர்தோலி நிர்மாணப்பணி திட்டத்தை நாட்டின் முன்வைத்தல்; சுயராஜ்யத்தைப் பெறுவதற்கு நாட்டைத் தயாரிக்கும் பொருட்டு 1921ல் திலகர் சுயராஜ்ய நிதியைத் தொடங்கி 1 கோடி 25 லட்சம் ரூபாய் வசூலித்தல்.

இந்த ஐந்தாண்டுகளில் காங்கிரசை ஒரு செயலூக்கமிக்க அமைப்பாக மாற்றுவதிலும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து அதனைத் துவம்சமாக்கக் கூடிய ஒரு வெல்லற்கரிய போர் எந்திரமாக உருவாக்குதிலுமே முழுமூச்சாக ஈடுபட்டிருந்தார். கிலாபத் பிரச் சினையில் மிகுந்த ஆர்வம் காட்டினார்; முஸ்லீம்களை பெரும் எண் ணிக்கையில் காங்கிரசில் இணைப்பதே இதன் நோக்கம்; இந்தக் குறிக்கோளோடு கிலாபத்துக்கு ஆதரவாக இந்துக்களை அணி திரட்டு வதற்கு தம்மால் முடிந்த அனைத்தையும் செய்தார்.

மற்றபடி, இந்த காலகட்டத்தில் தீண்டப்படாதோருக்காக திரு.காந்தி என்ன செய்தார்? இது விஷயத்தில் காங்கிரசார் பர்தோலி திட்டத்தைச் சுட்டிக்காட்டுவார்கள் என்பது நிச்சயம். தீண்டப்படா தோரின் நிலையை மேம்படுத்துவது, அவர்களது வாழ்க்கையை வலுப்படுத்துவது பர்தோலி திட்டத்தில் ஒரு அம்சமாக இடம் பெற்றி ருந்தது என்பது உண்மையே. ஆனால் அந்தத் திட்டம் என்ன வாயிற்று? அதற்கு நேர்ந்த கதி என்ன? இதைத் தெரிந்து கொள்வதே இங்கு முக்கியம். இரத்தினச் சுருக்கமாகக் கூறுவதென்றால் பர்தோலி திட்டம் தீண்டாமையை ஒழித்துக்கட்டுவதற்கான ஒரு திட்டமல்ல ( விவரங்களுக்கு இயல் II பக்கம்.).

டிஸ்ரேலி வருணித்தது போன்று இத்திட்டம் பண்டைய அமைப்பு களையும் தற்கால முன்னேற்றங்களையும் இணைத்துச் சீர்செய்யும் ஒரு முயற்சியே தவிர வேறல்ல. நாட்டில் தீண்டாமை நிலவி வருவதை இந்தத் திட்டம் பகிரங்கமாக ஒப்புக்கொண்டது; தீண்டப்படாதோருக்கு தனிக் கிணறுகளையும் தனிப் பள்ளிக்கூடங்களை யும் அமைத்துத் தருவதைத் தவிர வேறு எந்த உருப்படியான நட வடிக்கைகளுக்கும் அது வகை செய்யவில்லை. தீண்டப்படாதோரின் முன்னேற்றத்திற்கு ஒரு திட்டம் வகுக்க நியமிக்கப்பட்ட துணைக் குழுவின் லட்சணம் பற்றியோ சொல்லவே வேண்டியதில்லை.

தீண்டப்படாதோர் பற்றி எக்காலத்திலும் எத்தகைய ஆர்வமும் அக்கறையும் கரிசனமும் காட்டப்படாதோரே பெரும்பாலும் குழு உறுப்பினர்களாக இருந்தனர்; இவர்களில் சிலர் தீண்டப்படாதோர் மீது வெறுப்பும் பகைமையும் கொண்டவர்கள் என்று கூடச் சொல்ல வேண்டும். தீண்டப்படாதோருக்காக ஏதேனும் கணிசமாக, உருப் படியாக செய்யவேண்டும் என்ற உண்மையான ஆர்வம் கொண்ட ஒரே ஒருவர் இந்தக் குழுவில் இருந்தார். அவர்தான் சுவாமி சிரத்தா னந்தர். அவரும் நிர்ப்பந்தம் காரணமாக பதவி விலகவேண்டிய தாயிற்று. இது மட்டுமல்ல, குழு தனது பணியைச் செய்வதற்கு அற்பத் தொகையே ஒதுக்கப்பட்டது. இத்துடன் நிற்கவில்லை. குழு ஒரு முறை கூடக் கூடாமல் கலைக்கப்பட்டது.

தீண்டப்படாதோரைக் கைதூக்கி விடும் பணியை இந்துமகாசபைதான் சிறந்த முறையில் செய்ய முடியும் என்று கூறி பொறுப்பு அதன் தலையில் சுமத்தப்பட்டது. குறிப்பிடபட்டிருந்த பணியில் திரு. காந்தி எத்தகைய ஆர்வமும் அக்கறையும் காட்டவில்லை. இதற்கு மாறாக அவர் செய்தது என்ன? நியாயமாக சுவாமி சிரத்தானந்தர் பக்கம் அவர் உறுதியாக நின்றிருக்க வேண்டும்; அதற்குப்பதிலாக சுவாமி சிரத்தானந்தரை எதிர்க்கும் பிற்போக்குவாதிகளுக்கே அவர் பச்சைக்கொடி காட்டினார். இத்தனைக் கும் தீண்டப்படாதோருக்காகப் பெரிதாக எதுவும் சாதிக்கப்படு வதைக் கடுமையாக எதிர்ப்பவர்கள் அவர்கள் என்பது திரு. காந்திக்கு மிக நன்றாகத் தெரியும். இவைதான் 1921ல் பர்தோலி திட்டம் சம்பந்தமாக திரு. காந்தி சாதித்த மாபெரும் சாதனைகள்!

சரி போகட்டும். 1922க்குப் பிறகுதான் திரு. காந்தி என்ன செய்தார்? ஆரம்பத்தில் குறிப்பிட்ட வாழ்க்கைக் குறிப்பிலிருந்து நாம் முன்னர் பிரசுரித்த பகுதி 1922 ஆம் ஆண்டு சம்பந்தப்பட்டது. இந்த வாழ்க்கையை குறிப்பை காலத்திற்கொப்ப ஆக்குவதற்குப் பின்கண்ட விவரங்களையும் சேர்த்துக் கொள்வது அவசியம்:

“1924ல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்; அவர் சிறை  யிலிருந்தபோது காங்கிரசில் இரு தரப்பினர் தோன்றி, ஒரு தரப்பினர் சட்டசபைத் தேர்தல்களில் போட்டியிட வேண்டுமென்று வலியுறுத்தினர். இன்னொரு தரப்பினர் நிர்மாணத்திட்டத் தில் முற்றிலுமாக ஈடுபட வேண்டும் என்று வாதிட்டனர். சிறையிலிருந்து வெளிவந்த திரு. காந்தி இவர்களிடையே சமரசம் செய்துவைத்தார்; 1929ல் பரிபூரண சுதந்திரமே இந்தியாவின் அரசியல் குறிக்கோள் என்று பிரகடனம் செய்யப்பட்டது; 1930ல் திரு. காந்தி ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங் கினார்; 1931ல் வட்டமேசை மாநாட்டில் காங்கிரஸ் சார்பில் கலந்துகொள்ள லண்டன் சென்றார். 1932ல் சிறைவைக்கப்பட்டார்.

மாட்சிமை தங்கிய மன்னர்பிரான் அரசின் வகுப்புத் தீர்ப்பை எதிர்த்து சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவ தாக அறிவித்தார்; 1933ஆம் வருடப் புனா ஒப்பந்தத்தால் அவர் உயிர் காப்பாற்றப்பட்டது. தீண்டப்படாதோரின் ஆலயப் பிரவேசத்துக்கு ஆதரவாக இயக்கம் ஆரம்பிக்கத் திட்டமிட்டார். அரிஜன சேவா சங்கத்தை நிறுவினார்; 1934ல் காங்கிரஸ் உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார்; 1942ல் ‘இந்தியாவை விட்டு வெளியேறு’ இயக்கத்தைத் தொடங்கத் திட்டமிட்டார்; ஆனால் கைது செய்யப்பட்டார்; 1944ல் உண்ணாவிரதம் மேற் கொண்டார். விடுதலை செய்யப்பட்டார்; 1944ல் வேவல் பிரபு வுடன் கடிதப் போக்குவரத்து நடத்தி வந்தார்; 1942 ஆகஸ்டு 8 தீர்மானத்தை விளக்கி தொடர்ந்து அறிக்கைகள் வெளியிட்டார்; 1945ல் கஸ்தூரிபாய் நிதி திரட்டுவதில் மும்முரமாக ஈடுபட் டிருந்தார்.”

தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தை மேலும் தீவிரப்படுத்து வதற்கும் அதனைப் பயனுறுதியுடையதாக்குவதற்கும் 1924 ஆம் ஆண்டு அவருக்கு மற்றொரு அரிய வாய்ப்பினை அளித்தது. ஆனால் திரு. காந்தி செய்தது என்ன?

1922க்கும் 1944க்கும் இடைப்பட்ட ஆண்டுகள் காங்கிரஸ் அரசியல் வரலாற்றில் தனி முக்கியத்துவம் வாய்ந்தவை. 1920 செப்டம் பரில் கல்கத்தாவில் நடைபெற்ற விசேட மாநாட்டில் ஒத்துழை யாமைத் திட்டத்தை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது. சட்டசபைப் பகிஷ்காரம், அந்நியத்துணிகள் பகிஷ்காரம் முதலியவை அத்திட்டத் தில் அடங்கியிருந்தன. ஒத்துழையாமைத் தீர்மானம் அறிவுத்துறை யைச் சேர்ந்த தலைவர்களால் எதிர்க்கப்பட்டது; பிபின் சந்திர பால்,சி.ஆர். தாஸ் , லாலா லஜபதி ராய் ஆகியோர் இவர்களில் முக்கியமான வர்கள்; எனினும் அவர்களது கடுமையான எதிர்ப்புக்கிடையேயும் தீர்மானம் ஏற்கப்பட்டது. காங்கிரசின் வருடாந்தர மாநாடு 1920 டிசம்பரில் நாகபுரியில் நடைபெற்றது. ஒத்துழையாமை குறித்த தீர்மானம் மீண்டும் விவாத்ததிற்கு வந்தது. இதில் விந்தை என்ன வென்றால் முன்னர் எதிர்த்த சி.ஆர். தாஸே ( காங்கிரசின் அதிகாரபூர்வமான வரலாற்றாசிரியரான திரு. பட்டாபி சீதாரமையா இதுபற்றி கூறியிருப்பதாவதுதிரு. சி.ஆர். தாஸ் கிழக்கு வங்கத்திலிருந்தும் அசாமிலிருந்தும் சுமார் 250 பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு குழுவை மாநாட்டிற்கு அழைத்து வந்திருந்தார்; அவர்கள் மாநாட்டுக்கு வந்து திரும்புவதற்கான செலவை தாமே ஏற்றுக்கொண்டார்; கல்கத்தாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்வதற்கு தமது பையிலிருந்து ரூ. 36,000 செலவிட்டார். அவருடைய ஆட்களுக்கும் அவரை எதிர்க்கும் ஜிதேந்திரலால் பானர்ஜியின் ஆட்களுக்கும் இடையே ஒரு சிறிய கைகலப்புக் கூட நடைபெற்றது, காங்கிரஸ் வரலாறு, பக்கம். 347.)

இத் தீர்மானத்தை முன்மொழிந்தார். லாலா லஜபதிராய் வழிமொழிந்தார்; தீர்மானம் ஏற்கப்பட்டது. இதன் விளைவாக 1921 ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்க ஆண்டாகத் திமிலோகப்பட்டது. 1922 மார்ச் 19 ஆம் தேதி திரு. காந்தி இராஜதுரோகக் குற்றம்சாட்டப்பட்டு விசாரிக்கப்பட்டு ஆறு ஆண்டு சிறைவாசம் விதிக்கப்பட்டார்.

திரு. காந்தி சிறைக்குள் தள்ளப்பட்டதுமே சி.ஆர். தாஸ் தமது பழைய நிலைக்கு மீண்டும் திரும்பி, சட்டமன்றப் பகிஷ்கரத்தைக் கைவிடவேண்டுமென்று கோரத் தலைப்பட்டார்; அதற்காக ஓர் இயக்கத்தையும் தொடங்கி னார்; வித்தல்பாய் பட்டேல், பண்டித மோதிலால்நேரு, பண்டித மாளவியா போன்றோரும் அவருடன் சேர்ந்துகொண்டனர். இந்த முயற்சியை திரு. காந்தியின் ஆதரவாளர்கள் கடுமையாக எதிர்த் தனர்; கல்கத்தாவில் ஏற்கப்பட்டு நாகபுரியில் உறுதிசெய்யப் பட்ட ஒத்துழையாமைத் தீர்மானத்தில் இம்மியளவு மாற்றத்தை அனுமதிக்கக்கூட அவர்கள் தயாராக இல்லை.

இது காங்கிரசில் பிளவை உண்டுபண்ணிற்று. நோய்வாய்ப்பட்டதன் காரணமாக 1924ல் திரு. காந்தி உரிய காலத்திற்கு முன்னரே விடுதலை செய்யப் பட்டார். சிறையிலிருந்து வெளியே வந்தபோது, சட்டசபைப் பகிஷ் கார விஷயத்தில் காங்கிரஸ் இரண்டு போரிடும் முகாம்களாகப் பிரிந்திருப்பதைக் கண்டார். ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி வீசிக் கொண்டிருந்தனர்; சிண்டுபிடித்துக் கொண்டிருந்தனர். இந்த சண்டை நீடித்தால் காங்கிரஸ் பெரிதும் பலவீனப்பட்டு விடும் என்பது திரு. காந்திக்குத் தெரியும்; எனவே, இருதரப்பினரின் பூச லுக்கு ஒரு முடிவு கட்ட விரும்பினார். எந்தத் தரப்பும் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை.

அறிக்கைகளும் எதிர்அறிக்கைகளும் தூள் பறந்தன. முடிவில், திரு. காந்தி தலையிட்டு, இரு முகாம்களுக்கும் இடையே சமாதானத்தை ஏற்படுத்த சில யோசனைகளைத் தெரிவித்தார். இரு தரப்பினராலும் அவை ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்த யோசனைகள் இரு தரப்புகளையும் திருப்திப்படுத்தும் முறை யில் அமைந்திருந்தன. சட்டசபைப் பிரவேசத்தை ஆதரிப்போரை மகிழ்விக்க ஒரு திட்டத்தை முன்வைத்தார்; அதாவது சட்டசபைப் பிரவேசத்தை காங்கிரஸ் நடவடிக்கைகளின் ஒரு சட்டபூர்வமான பகுதியாக ஏற்றுக்கொள்ளவேண்டுமென்றும், சட்டசபைப் பிரவே சத்தை எதிர்ப்போர் அதற்கு எதிரான தமது பிரசாரத்தை நிறுத்தி விட வேண்டுமென்றும் கூறினார்.

இதேபோன்று, சட்டசபைப் பிரவேசத்தை எதிர்ப்போராது மனத்தை குளிரவைக்கவும் பின்கண்ட வாறு பிரரேபித்தார்: காங்கிரசில் உறுப்பினராகச் சேர்வதற்கு ஒரு புதிய அடிப்படையைக் கொள்ளவேண்டும்; அதாவது (1) வருடம் நான்கணா செலுத்தினால் உறுப்பினராகலாம் என்பதற்குப் பதிலாக, தமது கையால் ராட்டையில் 2,000 கஜம் நூல் நூற்பவரே காங்கிரஸ் உறுப்பினராக முடியும்; இதைச் செய்யத் தவறினால் காங்கிரஸ் உறுப்பினராக இருப்பதற்குத் தகுதியற்றவராகிவிடுவார்; (2) அந்நியத் துணிப் பகிஷ்காரம், அரசாங்க நீதிமன்றங்கள் பகிஷ்காரம், பள்ளிக் கூடங்கள், கல்லுரிகள் பகிஷ்காரம், பட்டம் பதவிகளைத் துறத்தல் போன்றவை அமைப்புக்குள் எந்த ஒரு பதவியும் வகிப்பதற்கு ஒரு தகுதியாகக் கருதப்படும்; பகிஷ்காரக் கோட்பாடில் நம்பிக்கை இல்லாத, தமது சொந்த வாழ்க்கையில் இந்தப் பகிஷ்காரங்களைக் கடைப்பிடிக்காத எவரும் காங்கிரசில் எந்த ஒரு பதவிக்கும் போட்டி யிடும் வேட்பாளராகத் தகுதி பெற முடியாது.

திரு. காந்தி தமது தீண்டாமை எதிர்ப்பு இயக்கத்தைத் தீவிரப்படுத்துவதற்கு, முன்கொண்டு செல்லுவதற்கு இப்போது அவருக்கு ஓர் அருமையான வாய்ப்பு இருந்தது. காங்கிரசில் உறுப் பினராவதற்கு ஓர் இந்து விரும்பினால் தாம் தீண்டாமையைக் கடைப்பிடிப்பவனல்ல என்பதை நிரூபிக்க வேண்டும். தீண்டப்படாத ஒருவனை தனது வீட்டில் வேலைக்கமர்த்திக் கொள்வதன் மூலம் இதை மெய்ப்பிக்க வேண்டும்; இதைத் தவிர வேறு எந்த சான்றும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று அவர் திட்டவட்டமாகக் கூறியிருக்கமுடியும்.

இத்தகைய ஒரு யோசனை ஒன்று காரியசாத்திய மற்றதல்ல; ஏனென்றால் கிட்டத்தட்ட ஒவ்வொருவரும் தமது இல் லத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆட்களை வேலைக்கமர்த்திக் கொண் டிருப்பதை இன்று சர்வசாதாரணமாகப் பார்க்கிறோம். காங்கிரசில் சேருவதற்கு நூல் நூற்பதையும், பகிஷ்கார நடவடிக்கைகளை மேற் கொள்வதையும் இந்து ஏற்கும்படிச் செய்ய திரு. காந்தியால் முடியு மானால், ஓர் இந்து இல்லத்தில் ஒரு தீண்டப்படாதவனை வேலைக் கமர்த்திக் கொள்வதையும் காங்கிரசில் உறுப்பினராகச் சேருவ தற்கு ஒரு தகுதியாக ஏற்றுக்கொள்ளும்படி அவரால் செய்திருக்க முடியும். ஆனால் திரு. காந்தி அதைச் செய்யவில்லை.

1924க்குப் பிறகு 1930 வரை ஒரு பரிபூரண சூன்ய நிலை நிலவீயதையே காண்கிறோம். திரு. காந்தி தீண்டாமையை ஒழிப்ப தற்கு எத்தகைய செயலூக்கமிக்க நடவடிக்கைகளை எடுத்துக் கொண்ட்தாகவோ அல்லது இந்த காலகட்டத்தில் தீண்டப்படா தோருக்கு அனுகூலம் செய்யும் எந்த நடவடிக்கைகளிலும் அவர் தம்மை ஈடுபத்திக் கொண்டதாகவோ தெரியவில்லை. இவ்வாறு திரு. காந்தி செயலற்றுப்போயிருந்தபோது, தீண்டப்படாதவர்கள் சத்தியாக்கிரக இயக்கம் என்ற ஓர் இயக்கத்தைத் தொடங்கினர். பொதுக் கிணறுகளிலிருந்தும், பொதுக் கோவில்களிலிருந்தும் தண்ணீர் எடுப்பதற்குத் தங்களுக்குள்ள உரிமையை நிலைநாட்டுவதே இந்த இயக்கத்தின் குறிக்கோள்.

பம்பாய் ராஜதானியைச் சேர்ந்த கொலாபா மாவட்டத்தில் மஹத் எனும் நகரில் அமைந்திருக்கும் சௌதார் குளத்தில் ஒரு சத்தியாக்கிர இயக்கம் நடைபெற்றது. பொது நீர் நிலைகளிலிருந்து தண்ணீர் எடுப்பதற்கு தீண்டப்படாதவர்களுக் குள்ள உரிமையை உறுதிசெய்வதே இந்த சத்தியாக்கிரகத்தின் நோக்கம். இதேபோன்று, ஆலயப்பிரவேசம் செய்வதற்கு தீண்டப் படாதோருக்குள்ள உரிமையை நிலைநாட்ட பம்பாய் ராஜாதானி யைச் சேர்ந்த நாசிக் மாவட்டம் நாசிக் நகரிலுள்ள காலாராம் ஆலயத்திலும் சத்தியாக்கிரக இயக்கம் நடத்தப்பட்டது. இத்தகைய இதர பல சிறு சத்தியாக்கிரக இயக்கங்களும் நடத்தப்பட்டன.

எனினும் மேலே கூறிய இரண்டு சத்தியாக்கிரகங்கள்தான் தீண்டப் படாதோரும் அவர்களுடைய எதிராளிகளான சாதி இந்துக்களும் தங்களுடைய முயற்சிகளை ஒன்றுகுவித்த பிராதன சத்தியாக்கிரகங்களாகும். அவர்கள் எழுப்பிய பேரொலியும் இரைச்சலும் இந்தியா வெங்கணும் எதிரொலித்தன. தீண்டப்படாதோர் இனத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் இந்த சத்தியாக்கிரகங்களில் ஆர்வத்தோடு, உணர்ச்சி பீறிட பங்கெடுத்துக்கொண்டர். இந்த இனத்தின் ஆடவரும் பெண்டிரும் இந்துக்களால் இகழப்பட்டனர்; அவமதிக்கப்பட்டனர்; நையப்புடைக்கப்பட்டனர்; பலர் படுகாயமுற்றனர். அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாக சாக்குப் போக்குக் கூறி சிலர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த சத்தியாக்கிரக இயக்கம் ஆறு ஆண்டுக்காலம் நடைபெற்றது. 1935ல் நாசிக் மாவட்டம் இயோலாவில் அது முடிவுக்கு வந்தது. இந்துக்கள் தங்களுக்கு சமத்துவ சமூக உரிமைகள் வழங்க உடும்புப் பிடிவாதமாக மறுப்பதால் இந்து அரவணைப்பிலிருந்து வெளி யேறுவது என்று தீண்டப்படாதவர்கள் முடிவுசெய்தனர். இந்த சத்தி யாக்கிரக இயக்கத்துக்கும் காங்கிரசுக்கும் எத்தகைய சம்பந்தமும் இல்லை; ஒட்டும் இல்லை உறவும் இல்லை. இந்த இயக்கம் தீண்டப்படாதவர்களால், தீண்டப்படாதவர்களின் தலைமையில், தீண்டப்படாதவர்களின் பணத்தைக் கொண்டு நடைபெற்றது. எனினும் திரு. காந்தி தங்களுக்கு தார்மீக ஆதரவாவது அளிப்பார் என்று தீண்டப்படாத மக்கள் உறுதியாக நம்பினர்.

இதனைப் பெறு வதற்கான பலமான ஆதாரமும் இருந்தது. தங்களை வறுத்திக் கொள் வதம் மூலம் எதிராளியின் உள்ளத்தை நெக்குருகச் செய்வதே இந்த இயக்கத்தின் உள்ளுறை சாரம். இந்த ஆயுதத்தை உருவாக்கித் தந்த வரே திரு. காந்திதான். பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து சுயராஜ் யத்தை வெல்வதற்கு இந்த ஆயுதத்தை ஏந்தித்தான் அவர் காங் கிரசை வழிநடத்திச் சென்றார். எனவே, பொதுக் கிணறுகளிலிருந்து தண்ணீர் எடுப்பதற்கும், பொது இந்து ஆலயங்களில் பிரவேசிப் பதற்கும் தங்களுக்குள்ள நியாயமான உரிமையை நிலைநாட்டும் பொருட்டு தாங்கள் நடத்தும் சத்தியாக்கிரக இயக்கத்திற்கு, அறப் போருக்கு, புனித உரிமைப் போருக்கு திரு. காந்தி முழு ஆதரவு அளிப்பார் என்றே தீண்டப்படாதவர்கள் எதிர்பார்த்தனர்; இது முற்றி லும் இயல்பே; நியாயமும்கூட; ஆனால் திரு. காந்தி இந்த சத்தியாக் கிரக இயக்கத்திற்குத் தமது ஆதரவை அளிக்க மறுத்துவிட்டார். அதுமட்டுமல்ல. குதிரை குப்புறத் தள்ளியது மட்டுமன்றி குழியை வேறு தோண்டிய கதையில், அவர் இந்த இயக்கத்தை கடின மொழியில் வன்மையாகக் கண்டிக்கவும் செய்தார்.

மனிதர்கள் செய்யும் தவறுகளைக் களைவதற்கு, திருந்துவதற்கு இரண்டு நவீன ஆயுதங்கள் இருப்பதை இந்தத் சந்தர்ப்பத் தில் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். அந்த ஆயுதங்களை உருவாக்கி சீர்செய்து, செம்மைப்படுத்தி, பண்படுத்தியபெருமை தம்மையே சேரும் என்று திரு. காந்தி உரிமை கொண்டாடுகிறார். இவ்விரு ஆயுதங்களில் முதலாவது ஆயுதம் சத்தியாக்கிரகம். அர சியல் அநீதிகளை, பழிச்செயல்களை, அக்கிரமங்களை, தவறு களைத் துடைத்தெறிய திரு. காந்தி இந்த சத்தியாக்கிரக ஆயு தத்தை பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் பன்முறைப் பயன்படுத்தி யிருக்கிறார்.

ஆனால் கிணறுகளையும் ஆலயங்களையும் தீண்டப்படாதோருக்குத் திறந்துவிடப்படுவதற்கு இந்துக்களுக்கு எதிராக சத்தியாக்கிரக ஆயுதத்தை திரு. காந்தி ஒருமுறைகூடப் பயன்படுத்த வில்லை. உண்ணாவிரதம் இருப்பது திரு. காந்தியின் பாசறையிலுள்ள மற்றொரு படைக்கலாம். திரு. காந்தி மொத்தம் 21 உண்ணாவிரதங் களை மேற்கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இவற்றில் சில உண்ணாவிரதங்கள் இந்து – முஸ்லீம் ஒற்றுமைக்காக நடத்தப்பட்ட டவை; பல உண்ணாவிரதங்கள் ஆசிரமவாசிகள் செய்த தவறுகளுக்கு கழுவாய் தேடுவதற்கு நிகழ்த்தப்பட்டவை; இவற்றில் ஒரு உண்ணா விரதம் மிகவும் சுவையான சூழ்நிலையில் நடைபெற்றது.

திரு. பட்டவர்த்தன் என்பவர் ஒரு சிறைக் கைதி; சிறைக்கூடத்தில் துப்புரவுப் பணியை அதாவது தோட்டி வேலையைச் செய்ய தன்னை அனுமதிக்க வேண்டும் என அவர் அரசைக் கேட்டுக்கொண்டார்; ஆனால் பம்பாய் அரசாங்கமோ இதற்கு அனுமதி மறுத்த உத்தர விட்டது; இந்த ஆணையை எதிர்த்து தான் திரு. காந்தி உண்ணா விரதம் மேற்கொண்டார். இதில் விந்தை என்னவென்றால் இந்த 21 உண்ணாநோன்புகளில் ஒன்றைக்கூட அவர் தீண்டாமையை அகற்றுவதற்காக மேற்கொள்ளவில்லை என்பதுதான். இவை யாவும் கவனத்திற் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்.

1930ல் வட்டமேசை மாநாடு நடைபெற்றது. ஆனால் திரு. காந்தி 1931ல் நடைபெற்ற இரண்டாவது வட்டமேசை மாநாட்டு நடவடிக்கைகளில்தான் பங்குகொண்டார். சுயாட்சி பெறும் இந்தியா வுக்கு ஓர் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் உயிர்நாடி யான பிரச்சினையில் மாநாடு மிகுந்த கவனம் செலுத்திற்று. இந்தியா ஒரு சுயாட்சி பெற்ற நாடாக இருக்க வேண்டுமென்றால் அதன் அர சாங்கம் மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் மக்கள் அரசாங்கமாக இருக்க வேண்டுமென்ற கருத்து மாநாட்டில் ஒருமனதாகத் தெரிவிக்கப்பட்டது.

உண்மையிலேயே மக்களால் நடத்தப்படும் ஓர் அரசாங்கம் மக்களது அரசாங்கமாக, மக்களுக்கான அரசாங்கமாக இருக்கும் என்பதை அனைவருமே ஏற்றுக்கொண்டனர். ஆனால் இதில் ஒரு பிரச்சினை குறுக்கிட்டது. பல்வேறு சமூகங்களையும் வகுப்புகளையும் பெரும்பான்மையினரையும் சிறுபான்மையினரை யும் கொண்ட ஒரு நாட்டில் ஓர் அரசாங்கத்தை மக்களால் நடத்தப் படும் அரசாங்கமாக எப்படி ஆக்குவது என்பதே அந்தப் பிரச்சினை. இவர்கள் எல்லாம் வெறும் சமூகவேறுபாடுகளால் மட்டுமன்றி, கடுமையான சமூகப் பகைமையாலும் மிகவும் உணர்ச்சிவசப்பட் டிருப்பவர்கள். இத்தகைய சூழ்நிலைமையில், சட்டமன்றங்களும் நிர்வாக சபைகளும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தின் அடிப்படை யில் அமைக்கப்பட்டாலன்றி, இந்தியாவில் மக்களால் நடத்தப்படும் ஓர் அரசாங்கத்தை உருவாக்குவது சாத்தியமல்ல என்ற கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தீண்டப்படாதோரின் பிரச்சினை மாநாட்டில் பூதாகரமாக எழுந்து நின்றது. அது முற்றிலும் புதியதோர் அம்சத்தையும் பெற்றது: அதாவது விஷயம் இதுதான்: தீண்டப்படாதோரை இப்பொது போன்றே எப்போதும் இந்துக்களின் தயவை, கருணையை, அருள் பாலிப்பைச் சார்ந்திருக்கும்படி விட்டுவிடுவதா? அவர்கள் கதி அதோகதியாகட்டும் என்று கைகட்டிக்கொண்டு சும்மா இருப்பதா? அல்லது வகுப்புவாரிப் பிரதிந்தித்துவக் கோட்பாட்டை அவர்களுக் கும் விஸ்தரித்து, அவர்கள் தம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்கு வழி வகை செய்ய வேண்டுமா? தங்கள் எதிர்காலம் இந்துக்களின் கையில் ஒப்படைக்கப்படுவதை, இன்னமும் ஆண்டாண்டுக்காலம் அவர் களை அண்டிஒண்டி அவர்களது நிழலில் நிற்கவேண்டிய அவல நிலையை தீண்டப்படாதோர் மிக வன்மையாக எதிர்த்தனர்; இதர சிறுபான்மையினருக்குத் தரப்படும் அதே பாதுகாப்பை தங்களுக்கும் வழங்கவேண்டுமென்று உரிமை முழுக்கமிட்டனர்.

தீண்டப்படா தோரின் இந்த வாதத்தை எல்லோருமே ஏற்றுக்கொண்டனர். இது நியாயமானதாகவும் தருக்கவியல் ரீதியானதாகவும் கருதப்பட்டது. இது சம்பந்தமாக் பின்வருமாறு வாதிக்கப்பட்டது. இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும், இந்துக்களுக்கும் சீக்கியகளுக்கும் உள்ள வேறு பாட்டை இந்துக்களுக்கும் தீண்டப்படாதோருக்கும் இடையேயான வேறுபாட்டுடன் ஒப்பிடும்போது ஒன்றுமே இல்லை எனலாம். அந்த அளவுக்கு இந்துக்களுக்கும் தீண்டப்படாதோருக்கும் இடையே உள்ள பிளவு மிக ஆழமானது, விரிவானது; மலைக்கும் மடுவுக்கு முள்ள பிளவு இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையேயான பிளவு சமயச் சார்புடையது, சமூக சார்புடையது அன்று, ஆனால் அதேசமயம் இந்துக்களுக்கும் தீண்டப்படாதோருக்குமிடையே உள்ள வேறுபாடோ சமயச் சார்பும் அத்துடன் சமூகச் சார்பும் கொண்டது.

இந்துக்களுக்கும் முஸ்லீமகளுக்கும் இடையே உள்ள பிள்வால் ஏற்படும் பகைமை முஸ்லீமகளுக்கு அரசியல் பேரிடர் அல்லது நாசம் எதையும் விளைவித்து விடாது; ஏனென்றால் இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையேயான உறவு எசமான், அடிமை உறவின்பாற்பட்டதல்ல. அது வெறும் மனஸ்தாபத்தை அடிப்படையாகக் கொண்டதே ஆகும். ஆனால் அதேசமயம் இந்துக் களுக்கும் தீண்டப்படாதோருக்கும் இடையேயான பிளவே நிச்சயம் தீண்டப்படாதோருக்கு விநாசகரமான அரசியல் விளைவை ஏற் படுத்தவே செய்யும்; ஏனென்றால் அவர்களுக்கு இடையே நிலவும் உறவு எசமான், அடிமைக்கிடையே உள்ள உறவாகும்.

எங்களுக்கும் இந்துக்களுக்கும் இடையேயான இடைவெளியை சமூக இயக்க நிகழ்வுமூலம் நிரப்ப காலம் காலமாக எவ்வளவோ பெருமுயற்சி கள் எடுத்துக்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றன; ஆனால் அந்த முயற்சிகள் அனைத்தும் படுதோல்வியே கண்டன; அவை வெற்றி பெரும் வாய்ப்பில்லை; நம்பிக்கை இல்லை; இந்நிலையில், ஆட்சி அதிகாரம் இந்து பெரும்பான்மையினருக்கு மாற்றப்படும்போது, முஸ்லீம்களுக்கும் ஏனைய சிறுபான்மையினருக்கும் அளிக்கப்படும் அதே வகையான பாதுகாப்பு எங்களுக்கும் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு தீண்டப்படாதவர்கள் வாதிட்டனர்.

தீண்டப்படாதோரின் இந்தக் கோரிக்கைக்கு ஆதரவளித்து, இந்துக்களின் கொடுங்கோன்மைக்கும் ஒடுக்குமுறைக்கும் அடக்கு முறைக்கும் எதிராக அவர்களது எதிர்ப்பு வலிமையைப் பலப்படுத்து வதன் மூலம் தீண்டப்படாதோர்பால் தமக்குள்ள பரிவையும் ஒருமைப்பாட்டு உணர்வையும் வெளிப்படுத்த திரு. காந்திக்கு இங்கு அரியதோர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் அந்த வாராது வந்த வாய்ப்பை எப்போதும் போல் கைநழுவவிட்டுவிட்டார். திரு. காந்தி அவர்களிடம் அனுதாபம் காட்டுவதற்குப் பதிலாக, அவர்களைத் தோற்கடிப்பதற்கு தமது சக்திக்குட்பட்ட அனைத்தை யும் செய்தார்.

தீண்டப்படாதோரைத் தனிமைப்படுத்தும் நோக்கத் தோடு, முஸ்லீம்களுடன் ஓர் உடன்பாடு செய்து கொண்டார். அப்படி யும் அவர்களைத் தம்பக்கம் இழுக்க அவரால் முடியவில்லை. இப்போரில் அவர் சாகும்வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டார்; முஸ்லீம்களுக்கும் ஏனைய சிறுபான்மயினருக்கும் அளிக்கப்படும் அதே அரசியல் உரிமைகளை தீண்டப்படாதோருக்கும் வழங்குவதென தாங்கள் செய்த முடிவைத் திரும்பப் பெற்றுக் கொள்ளும்படி பிரிட்டிஷ் அரசாங்கத்தை நிர்ப்பந்திப்பதே அவரது இந்த உண்ணாவிரதத்தின் நோக்கம். உண்ணாவிரதம் தோல்வியுற்ற போது திரு. காந்தி ஓர் ஒப்பந்தம் செய்துகொள்ளும் கட்டாயத்துக்கு ஆளானார். அதுதான் புனா ஒப்பந்தம் என்பது. தீண்டப்படாதோரின் அரசியல் உரிமைகளை இந்த ஒப்பந்தம் ஏற்றுக்கொண்டது. இந் நிலையில் திரு. காந்தி வாளாயிருப்பாரா? அவர்களது அரசியல் உரிமைகளை பயனற்றதாக்குவதற்கு, செல்லாக்காசாக்குவதற்கு கீழ்த் தரமான, அருவருக்கத்தக்க தேர்தல் உத்திகளைக் கையாளும்படி காங்கிரசைச் தூண்டிவிட்டு வஞ்சம் தீர்த்துக் கொண்டார்.

1933ல், திரு. காந்தி இரண்டு இயக்கங்களைத் தொடங்கினார். முதலாவது ஆலயப்பிரவேச இயக்கம். இது சம்பந்தமான இரண்டு நடவடிக்கைகளை தாமே நேரடியாகப் பொறுப்பேற்று மேற் கொண்டார். ஒன்று குருவாயூர் ஆலயப்பிரவேசம். மற்றது திரு. ரங்க அய்யரின் ஆலயப்பிரவேச மசோதாவை மத்திய சட்டசபையில் நிறைவேற்ற முயற்சி எடுத்துக்கொள்வது. குருவாயூர் கோவிலின் தர்மகத்தா அக்கோவிலை ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் தீண்டப் படாதோருக்குத் திறந்துவிடவில்லை என்றால் தாம் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக திரு. காந்தி ஆடம்பர ஆர்ப் பாட்டமாக அறிவித்தார்.

குருவாயூர் ஆலயத்தின் கதவுகள் தீண்டப்படாதோருக்குத் திறந்துவிடப்படாமல் இன்னமும் மூடிக்கிடக் கின்றன. ஆனால் திரு. காந்தியோ உண்ணாவிரதமிருக்கும் தமது வாக்குறுதியைக் காப்பாற்றாமல் ஆடிக்காற்றில் ‘அம்போ’ வென்று பறக்கவிட்டுவிட்டார். இதில் வியப்புக்குரிய விஷயம் என்னவென் றால், நோன்புறுதி மேற்கொண்டு இப்போது பதிமூன்று ஆண்டுகளாகியும், தீண்டப்படாதோருக்குக் கோவிலைத் திறந்துவிட அவர் எந்த நடவடிக்கையும் எடுத்துக்கொள்ளவில்லை என்பதுதான். ஆலயப்பிரவேச மசோதாவைக் கொண்டு வருவதற்கு அனுமதி யளிக்கும்படி கிட்டத்தட்ட கவர்னர்-ஜெனரலை நிர்ப்பந்திக்கும் அளவுக்கு திரு. காந்தி சென்றார்; ஆனால் கதை வேறுவிதமாகி விட்டது; பொறுக்குக் கமிட்டிக்கு மசோதாவை அனுப்பும் கட்டம் வந்தபோது மத்திய சட்டமன்றத்திலுள்ள காங்கிரஸ் கட்சி அதனை ஆதரிக்க மறுத்துவிட்டது. மசோதா இந்துக்களின் மனத்தைப் புண் படுத்தும் முறையில் இருப்பதாகவும், இத்தகைய மசோதாவுக்கு ஆதரவளித்தால் இந்துக்கள் காங்கிரசைத் தோல்வி காணச் செய்து பழிதீர்த்துக் கொள்வார்கள் என்றும் காங்கிரஸ் கட்சி அச்சம் கொண்டது. எனவே, திரு. ரங்க அய்யர் பெருத்த ஏமாற்றத்துக்கு உள்ளாகும் வகையில் காங்கிரஸ் அவரை கைகழுவி விட்டு, மசோதாவைக் ஆழக்குழி தோண்டி புதைத்துவிட்டது. திரு. காந்தி இதைப் பற்றி எல்லாம் எவ்வகையிலும் கவலைப் படவில்லை. இன்னும் சொல்லப்போனால் காங்கிரஸ் கட்சியின் போக்கை நியாயப்படுத்தும் அளவுக்குக் கூடச் சென்றார்.(விவரங்களுக்கு இயல் IV பார்க்க.)

1933ல் திரு. காந்தி தொடங்கிய மற்றொரு இயக்கம் அகில இந்தியாவிலும் கிளைகள் கொண்ட ஹரிஜன சேவா சங்கத்தை நிறுவியதாகும். இந்த சங்கத்தை நிறுவுவதற்கு மூன்று நோக்கங்கள் இருந்தன. முதலாவது நோக்கம் இந்துக்கள் தீண்டப்படாதோர்பால் பரந்து விரிந்த மனோபாவமும் பரிவும் கொண்டர்கள் என்பதை யும், அவர்களது மேம்பாட்டுக்காக மிகுந்த அறச்சிந்தனையோடு பணத்தை வாரி வழங்கி ஆதரவுக் காட்டுவார்கள் என்பதையும் மெய்ப் பிப்பதாகும்.

இரண்டாவது நோக்கம் தீண்டப்படாதோர் தமது அன்றாட வாழ்வில் எதிர்ப்படும் எத்தனை எத்தனையோ இன்னல்களில் அவர்களுக்கு உதவிக்கரம் காட்டுவதாகும். மூன்றாவது நோக்கம் அரசியல் விஷயங்களில் மனவேறுபாடு கொண்ட இந்துக் கள் குறித்து தீண்டப்படாதோரின் மனத்தில் நம்பிக்கையைத் தோற்று விப்பதாகும்.

ஆனால் இந்த மூன்று குறிக்கோள்களில் எதுவுமே நிறைவேறவில்லை. எடுத்த எடுப்பில் சங்கத்திற்கு இந்துக்கள் மொத்தம் சுமார் 8 லட்சம் ரூபாய் நன்கொடை அளித்தனர். பொது அரசியல் காரியங்களுக்கு அவர்கள் வழங்கிய கோடிக்கணக்கான ரூபாய்களுடன் ஒப்பிடும்போது இது மிகமிக அற்பத் தொகையாகும். இதற்குப்பிறகு நிதி வறண்டுவிட்டது. இப்போது சங்கம் அரசாங்க மானியங்களையோ, அல்லது திரு. காந்தியின் கையொப்பங்களை விற்பனை செய்வதால் கிடைக்கும் வருமானத்தையோ அல்லது தீண்டப்படாதோரின் பாலுள்ள பரிவினாலன்றி திரு. காந்தியை மகிழ்விக்கும் நோக்கத்தோடு சில செல்வந்த வணிகர்கள் அளிக்கும் நன்கொடைகளையோதான் நம்பியிருக்கிறது. சங்கக்கிளைகளுக்கு ஆண்டுதோறும் மூடுவிழா நடத்தப்பட்டுவருகிறது.

சங்கம் நாளுக்கு நாள் துரிதமாகச் சுருங்கி வருகிறது; வெகுவிரையில் அது சுற்றுவரையில்லாத ஒரு வெறும் வட்டமாக மட்டுமே இருக்கும். இந்துக்கள் சங்கத்திடம் ஆர்வம் இழந்தது மட்டுமே திரு. காந்தி இந்த நடவடிக்கைகளில் வருந்தத்தக்க அம்சமல்ல. எவருடைய நல னுக்காக, நன்மைக்காக இந்த சங்கம் தொடங்கப்பட்டதாகக் கூறப் பட்டதோ, அந்தத் தீண்டப்படாதோரின் நல்லெண்ணத்தையும், ஒத்துழைப்பையும் அது பெறத்தவறிவிட்டது. இதற்குப் பல காரணங்கள் உண்டு.

சங்கத்தின் பணி சம்பந்தா சம்பந்தமின்றி அமைந் திருக்கிறது. அது எவரையும் கவரவில்லை. தீண்டாதோருக்கு உதவி யும் ஒத்துழைப்பும் தேவைப்படும் மிக அவசரமான பணிகளை அது புறக்கணிக்கிறது. சங்கம் தனது நிர்வாகத்தில் தீண்டத்தகதோர் எவரையும் சேர்த்துக் கொள்ளவில்லை. தீண்டப்படாதோர் ஏதோ பிச்சைக்காரர்களாக, தானம் தர்மம் பெறுவோர்களாகவே நடத்தப் படுகின்றனர். இதனால் சங்கத்திடம் தீண்டப்படாதோர் எத்தகைய ஆர்வமும் காட்டுவதில்லை. இந்துக்களால் உள்நோக்கத்தோடு உரு வாக்கப்பட்ட ஓர் அந்நிய அமைப்பு என்றே அதனைக் கருதுகின்றனர்.

இந்துக்களையும் தீண்டப்படாதோரையும் இணைக்கும் ஒரு பாலமாக சங்கத்தை அவர் கட்டி வளர்ந்திருக்கமுடியும்; அதற்கு அவருக்கு ஒரு நல்ல வாய்ப்பு இருந்தது. சங்கத்தின் வேலைத் திட் டத்தை மேம்படுத்தியும், அதன் பணியில் தீண்டப்படாதோரைப் பங்கேற்கச் செய்தும் அதனை மிகவும் செயலூக்கமிக்க, ஆற்றல் மிக்க ஓர் அமைப்பாக மாற்றியிருக்க முடியும். ஆனால் திரு. காந்தி இவ்வாறு எதுவும் செய்யவில்லை. அதனை நலிவுறவும் மெலிவுறவும் செய்தார். அநேகமாக அவரது ஆயுட்காலத்திற்குள்ளேயே அது அழித் தொழிந்துபோகும்.(விவரங்களுக்கு இயல் V பார்க்க.)

திரு. காந்தியின் தீண்டாமை எதிர்ப்பு இயக்கத்தையும், அவரது பேச்சுக்களையும், செய்லகளையும் பற்றிய இந்த மதிப்பீடு வாசகரை வியப்புக்கும், குழப்பத்துக்கும், திகைப்புக்கும் உள்ளாக்கினால் அதில்  ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. வாசகர் தனது மனத்திலுள்ள குழப்பத்தைத் தெளிவுபடுத்திக் கொள்வதற்கு பின்கண்ட ரீதியில் சில கேள்விகளைக் கேட்பது முற்றிலும் இயல்பானதே:

(1) 1921ல் திலகர் சுயராஜ்ய நிதிக்கு திரு. காந்தி 1 கோடி 35 லட்சம் நிதி வசூலித்தார். தீண்டாமை ஒழிக்கப்பட்டாலொழிய சுயராஜ்யம் பெறுவது சாத்தியமில்லை என்று அடிக்கடி வலியுறுத்தி யும் வந்தார். அப்படியிருக்கும்போது தீண்டப்படாதோரின் ஆக்க  நலத்துக்காக கேவலம் அற்பத்தொகையான ரூ.43,000 மட்டுமே வழங்கப்பட்டபோது, அவர் ஏன் ஆட்சேபிக்கவில்லை?

(2) 1922ல் பர்தோலி நிர்மாணத்திட்டம் வகுக்கப்பட்டது. தீண்டப்படாதோர் நிலையை மேம்படுத்துவது அத்திட்டத்தில் ஒரு முக்கியமான அம்சம். இது சம்பந்தமான விவரங்களைத் தயாரிப்? பதற்கென ஒரு குழு நியமிக்கப்பட்டது. ஆனால் இந்தக்குழு செயல் படவே இல்லை. விரைவிலேயே அது கலைக்கப்பட்டது; தீண்டப் படோதோரைக் கைதூக்கிவிடுதல் சம்பந்தமாக நிர்மாணத்திட்டத் தில் இடம் பெற்றிருந்த பகுதியும் கைகழுவப்பட்டது. காங்கிரஸ் காரியக் கமிட்டி இக்குழுவை இவ்வாறு மாற்றந்தாய் போக்குடனும், கருமித்தனமாகவும், பிசினாறித்தனமாகவும் நடத்தியதை திரு. காந்தி ஏன் ஆட்பேசபிக்கவில்லை? ஏன் எதிர்ப்புக் குரல் எழுப்பவில்லை? மற்றொரு குழுவை அவர் ஏன் நியமிக்கவில்லை? தீண்டப்படா தோரின் நல்வாழ்வுக்கான பணி முக்கியத்துவம் அல்லாததுபோல் அதனைக் கைவிட திரு. காந்தி ஏன் அனுமதித்தார்?

(3) சுயராஜ்ய இயக்கத்தை ஆரம்பிக்கபோதே சுய ராஜ்யம் பெறுவதற்கு கீழ்க்கண்ட ஐந்து நிபந்தனைகளை திரு. காந்தி வலியுறுத்தினார். அ. இந்து-முஸ்லீம் ஒற்றுமை; ஆ. தீண்டாமையை ஒழித்தல் இ. கையால் நூற்று கையாலேயே நெய்த கதரை அனைவரும் அணிதல்; ஈ. பரிபூரண அகிம்சை; உ. முழு ஒத்துழையாமை. திரு. காந்தி இந்த நிபந்தனைகளை விதிதத்துடன் நில்லாமல், இவற்றை நிறைவேற்றப்பட்டாலொழிய சுயராஜ்யம் சாத்தியமில்லை என்பதை யும் இந்தியர்களுக்கு வலியுறுத்தி வந்தார். 1922ல் இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்காக உண்ணா விரதம் மேற்கொண்டார். கையால் நூல் நூற்பதை காங்கிரஸ் உறுப்பினராவதற்கு அடிப்படைத் தகுதியாக 1924ல் நிர்ணயித்தார். இதே திரு. காந்தி, தீண்டாமையைக் கைக்கொள் ளாமையை காங்கிரஸ் உறுப்பினராவதற்கான அடிப்படைத் தகுதி யாக 1924லோ அல்லது அதற்குப் பின்னரோ ஏன் நிர்ணயிக்க வில்லை?

(4) திரு. காந்தி தாம் மிகவும் நேசிக்கிற பல்வேறு நோக்கங் களுக்காக எத்தனையோ முறை உண்ணாவிரதமிருந்திருக்கிறார்? இதே திரு. காந்தி தீண்டப்படாதோருக்காக ஏன் ஒருமுறைகூட உண்ணாவிரதம் மேற்கொள்ளவில்லை?

(5) தவறுகளைக் களைவதற்காகவும், சுதந்திரம் பெறு வதற்காகவும் திரு. காந்தி சத்தியாக்கிரகம் என்னும் ஆயுதத்தை உருவாக்கி, பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிராக அதனைப் பயன் படுத்தி இருக்கிறார். பொதுக் கிணறுகளையும், கோவில்களையும், இதர பொது இடங்களையும் பயன்படுத்திக்கொள்ளும் உரிமையை தீண்டப்படாதோருக்கு இந்துக்கள் மறுத்து வருகின்றனர். இவ்வாறு அடம்பிடிக்கும், அநீதி இழைக்கும் இந்துக்களை எதிர்த்து தீண்டப் படாதோருக்கு ஆதரவாக திரு. காந்தி ஏன் ஒருமுறைகூடச் சத்தியாக் கிரகத்தை ஆரம்பிக்கவில்லை?

(6) பொதுக்கிணறுகளையும் ஆலயங்களையும் பயன் படுத்திக் கொள்வதற்கு இந்துக்களுக்கு எதிராக தீண்டப்படாதோர் திரு. காந்தியின் வழியைப் பின்பற்றி 1929 முதல் சத்தியாக்கிரகம் செய்து வந்துள்ளனர். அவர்களது சத்தியாக்கிரகத்தை திரு. காந்தி ஏன் எதிர்க்க வேண்டும்?

(7) ஜமோரின் மன்னர் குருவாயூர் ஆலயத்தை தீண்டப் படாதோருக்குத் திறந்துவிடவில்லை என்றால் உண்ணாவிரதம் இருப்பேன் என்று திரு. காந்தி அறிவித்தார். கோவில் திறந்துவிடப் படவில்லை. திரு. காந்தி தாம் அறிவித்தபடி ஏன் உண்ணாவிரதம் இருக்கவில்லை?

(8) மத்திய சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சி சார்பாக ஆலயப் பிரவேச மசோதா கொண்டு வருவதற்கு கவர்னர் – ஜெனரல் அனுமதி தரவில்லை என்றால் பயங்கரமான விளைவுகள் ஏற் படும் என்று 1932ல் திரு. காந்தி பிரிட்டிஷ் அரசாங்கத்தை எச்சரித்தார். ஆனால் மத்திய சட்டசபைக்கு புதிய தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட தால், மசோதாவிற்கான ஆதரவை காங்கிரஸ் விலக்கிக் கொண்டது; திரு. ரங்க அய்யர் தமது மசோதாவைக் கைவிட வேண்டியதாயிற்று. ஆலயப் பிரவேசத்தில் திரு. காந்தி மெய்யார்வமும் அக்கறையும் கொண்டவராக இருக்கும் பட்சத்தில், காங்கிரஸ் கட்சியின் இந்தச் செயலை அவர் ஏன் ஆதரித்தார்? தீண்டப்படாதோரின் ஆலயப் பிரவேசமா, தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றியா எது முக்கியம்?

(9) தீண்டப்படாதோருக்குள்ள இடர்ப்பாடு அவர்களுக் குக் குடிஉரிமைகள் இல்லாதிருப்பதில் அடங்கியிருக்கவில்லை என்பது திரு. காந்திக்குத் தெரியும். தீண்டப்படாதோர் இந்த உரிமை களைப் பயன்படுத்துவதற்குத் துணிந்தால் அவர்கள் கடுமையான விளைவுகளைச் சந்திக்க சேரும் என்ற இந்துக்களின் அச்சுறுத்தலிலும் சதியிலும்தான் அவர்களது இடுக்கண் அடங்கியுள்ளது. இந்நிலைமையில் தீண்டப்படாதோரைப் பாதுகாப்பதற்கான உண்மையான வழி அவர்களது குடிஉரிமைகளைப் பாதுகாக்கக் கூடிய ஏதேனும் ஓர் அமைப்பை உருவாக்குவதே ஆகும். தீண்டப் படாதோரை வெறித்தனமாகத் தாக்குகின்ற அல்லது அவர்களுக்கு எதிராக சமூக, பொருளாதார பகிஷ்காரத்தைக் கையாண்டு, அதன் மூலம் அவர்கள் தங்களது குடி உரிமைகளைப் பயன்படுத்த இயலாத வாறு தடுக்கின்ற இந்துக்களை குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் கடமையை இந்த அமைப்பு செய்யும். ஹரிஜன சேவா சங்கத்தின் குறிக்கோள்களில் ஒன்றாக திரு. காந்தி ஏன் இதைக் கைக்கொள்ள வில்லை?

(10) திரு. காந்தி அரங்கில் நுழைவதற்கு முன்னர் தீண்டப் படாதோரின் மேம்பாட்டிற்காக சாதி இந்துக்கள் தாழ்த்தப்பட்டோர் சேவைக் கழகத்தை அமைத்திருந்தனர். இதற்கு வேண்டிய நிதியை இந்துக்களே வழங்கினார். எனினும் இந்துக்களும் தீண்டப்படாதோரும் அடங்கிய கூட்டுக் குழுமங்களால்தான் கழகத்தின் விவகாரங்கள் அனைத்தும் நிர்வகிக்கப்பட்டன. அப்படியிருக்கும்போது ஹரிஜன சேவா சங்கத்தின் நிர்வாகப் பொறுப்பிலிருந்து தீண்டப்படாதோரை திரு. காந்தி ஏன் விலக்கி வைத்திருக்கிறார்?

(11) திரு. காந்தி தீண்டப்படாதோரின் உண்மையான நண்பர் என்றால் அரசியல் பாதுகாப்புகள்தான் தங்களைப் பாது காத்துக் கொள்வதற்கு மிகச் சிறந்த சாதனம் என்று தீர்மானித்துக் கொள்ள தீண்டப்படாதோரை அவர் ஏன் விடவில்லை? தீண்டப் படாதோரைத் தனிமைப்படுத்தி அவர்களை முறியடிப்பதற்காக முஸ்லீம்களுடன் உடன்பாடு செய்து கொள்ளும் அளவுக்கு அவர் ஏன் சென்றார்? வகுப்புத் தீர்ப்பின் மூலம் தீண்டப்படாதோருக்கு கிட்டக் கூடிய அனுகூலத்தைப் பறிக்கும் நோக்கத்தோடு திரு. காந்தி ஏன் சாகும்வரை உண்ணாவிரம் இருக்கப்போவதாக அறிவித்தார்? இத்தகைய தீவிர நிர்ப்பந்த முறையை அவர் ஏன் கைக்கொண்டார்?

(12) புனா ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு விட்ட பிறகு தீண்டப்படாதோரிடம் நம்பிக்கை வைக்கும் வகையில் திரு. காந்தி ஏன் நடந்து கொள்ளவில்லை? தீண்டப்படாதோருக்கு ஒதுக்கப்பட் டுள்ள இடங்களுக்கு இந்துக்களின் கைப்பொம்மைகளாக இருக்கக் கூடிய தீண்டப்படாத வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கச் செய்து, தீண்டப்படாதோரின் அரசியலைப் பாழ்ப்படுத்தாதீர்கள் என்று காங்கிரசுக்கு அவர் ஏன் அறிவுரை கூறவில்லை?

(13) புனா ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட பிறகு திரு. காந்தி அந்த ஒப்பந்தத்தின்படி நடந்துகொண்டு, காங்கிரஸ் மந்திரிசபை களில் தீண்டப்படாதோரின் பிரதிநிதிகளையும் சேர்த்துக் கொள்ளும் படி காங்கிரஸ் தலைமையை ஏன் பணிக்கவில்லை?

(14) ஷெட்யூல்டு வகுப்பைச் சேர்ந்த திரு. அக்னிபோஜை டாக்டர் கரே தமது மத்திய மாகாண அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டபோது, அமைச்சராக இருப்பதற்கு அவருக்கு எல்லாத் தகுதிகளும் இருந்தபோதிலும், அந்த நியமனத்தை திரு. காந்தி ஏன் ஏற்கவில்லை? ஷெட்யூல்டு வகுப்புகளைச் சேர்ந்தவர்களிடையே இத்தகைய உயர்ந்த அபிலஷையைத் தோற்றுவிப்பதை தாம்? எதிர்ப்பதாக திரு. காந்தி கூறினாரா?

 III

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் திரு. காந்தி அளிக்கக்கூடிய பதில் என்ன? திரு. காந்தியின் நண்பர்கள் அளிக்கக்கூடிய விளக் கங்கள் யாவை? திரு. காந்தியின் தீண்டாமை எதிர்ப்பு இயக்கத்தில் இத்தனை மாற்றங்களும் திடீர் திருப்பங்களும், முரண்பாடுகளும் எதிர்மறைகளும், தாக்குதல்களும் சரண்டைதல்களும், முன்னேற் றங்களும் பின்வாங்கல்களும் இருப்பதைக் கொண்டு பார்க்கும் போது, இந்த இயக்கம் முழுவதுமே ஒரு மர்மக் கதையாகத் தோன்று கிறது. அதன் பயனிறைவுடைமையில் ஒரு சிலரே நம்பிக்கை வைத்துள்ளனர்; இந்த இயக்கத்துக்குப் பின்னால் போதிய மெய் யுறுதிப்பாடும், அக்கறையும், ஆர்வமும், நேர்மையும் இல்லை என்று பலர் கருதுகின்றனர். எனவே இதற்கு விளக்கம் தேவை. திரு. காந்தியின் குறிக்கோள்களையும் முறைகளையும் வாசகர் தெளிவாகப் புரிந்து கொள்வதற்காக இல்லாவிட்டாலும், நேர்மை யானவர், வாய்மைமிக்கவர் என்று அவர் பெற்றிருக்கும் புகழின் பொருட்டாவது திரு. காந்தியும் அவருடைய நண்பர்களும் முன்கூறிய கேள்விகளுக்குப் பதிலளிக்க, விளக்கம் தர முன்வர வேண்டும்.

இக்கேள்விகளுக்கு திரு. காந்தியும் அவருடைய நண்பர் களும் என்ன பதிலளிப்பார்கள் என்று தெரிந்து கொள்வது சுவையான விஷயம் என்பதில் ஐயமில்லை. இந்தப் பிரச்சினைகளில் ஆர்வமும் அக்கறையும் கொண்டுள்ள ஒவ்வொருவரும் இப்பதில்களை எதிர் பார்ப்பது இயல்பே. எனினும் அவர்களுடைய பதில் இப்படித்தான் இருக்கும் என்று அனுமானித்து, அதனைப் பரிசீலிக்க நான் விரும்ப வில்லை. அவர்கள் தங்களுக்கு விருப்பமான முறையில் தங்கள் பதில்களை வடிவமைத்து, தங்களுக்கு விருப்பப்பட்ட நேரத்தில் அவற்றை வெளியிடலாம். இதற்கிடையே, திரு. காந்தியையும் அவ ருடைய தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தையும் பற்றி தீண்டப்படா தோர் என்ன சொல்கிறார்கள் என்று கேட்கலாம். திரு. காந்தியின் தீண்டாமை ஒழிப்பு இயக்கம் பற்றி தீண்டப்படாதோர் என்ன கருத்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறுவது அப்படி ஒன்றும் சிரமமான தல்ல.

திரு. காந்தியை நேர்மையானவர் என்று தீண்டப்படாதோர் கருதுகிறார்களா? ‘இல்லை’ என்ற எதிர்மறையான பதிலே இதற்குத் கிடைக்கும். காந்தியை நேர்மையானவராக அவர்கள் கருதவில்லை. எப்படி அவர்கள் கருத முடியும்? பர்தோலித் திட்டத்தைச் செயல் படுத்த 1921ல் நாடு முழுவதுமே ஆர்த்தெழுந்தபோது, எழுச்சியுற்ற போது அத்திட்டத்தின் ஓர் அம்சமாக விளங்கிய தீண்டாமை எதிர்ப்புப் பற்றி முற்றிலும் பாராமுகமானவராக, கவலையற்றவராக இருந்த ஒரு மனிதரை நேர்மையானவர் என்று அவர்கள் எப்படிக் கருதமுடியாது? ரூ. 1 கோடி 25 லட்சம் கொண்ட சுயராஜ்ய நிதியி லிருந்து தீண்டப்படாதோர் நலனுக்காக ரூபாய் 43 ஆயிரம் மட்டுமே ஒதுக்கப்பட்டபோது, நீண்டகாலமாகப் புறக்கணிக்கப்பட்டு வந்த ஒரு லட்சியத்தின் விஷயத்தில் இவ்வளவு கஞ்சத்தனமாக நடந்து கொண்ட போக்கை எதிர்த்து எத்தகைய ஆட்சேபக் குரலும் எழுப்பாத ஒரு மனிதரை நேர்மையானவர் என்று எப்படிக் கருத முடியும்? தீண்டாமையை ஒழித்துக்கட்டும் கடமையை இந்துக்களை ஏற்கக் செய்வதற்கு 1924ல் அரியதோர் வாய்ப்புக் கிட்டியபோது, அதற் கான அதிகாரமும் அதனைச் செயல்படுத்தும் சந்தர்ப்பமும் இருந்தும் கூட எதுவும் செய்யாது இருந்துவிட்ட ஒரு மனிதரை நேர்மையானவர் என்று எப்படிக் கருதமுடியாது? அப்போது இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தால் மூன்று காரியங்கள் நிறைவேறியிருக்கும். காங்கிரஸ்காரர்களின் தேசியத்தை அக்னிப் பரீட்சைக்கு உட்படுத்தி யிருக்கும். தீண்டாமையை அகற்றுவதற்குத் துணைபுரிந்திருக்கும்.

தீண்டாமை என்பது ஒரு பெரும்கேடு, இந்து மதத்திற்கு ஏற்பட் டுள்ள ஓர் இழுக்கு, பழி என்றெல்லாம் காந்தி இதயசுத்தியோடு தான், வாய்மையோடுதான் பேசி வருகிறார் என்பது மெய்ப்பிக்கப் பட்டிருக்கும்.

பின் ஏன் திரு. காந்தி இதைச் செய்யவில்லை? தீண் டாமையை அகற்றுவதைவிட ராட்டையில் நூல் நூற்கும் இயக்கத்தைப் பரப்புவதில்தான் திரு. காந்தி அதிக ஆர்வம் கொண்டிருக் கிறார், அக்கறை கொண்டிருக்கிறார் என்பதை இது காட்டவில் லையா? தீண்டாமையை ஒழித்துக் கட்டுவது என்பது திரு. காந்தியின் திட்டத்தில் மிகவும் அற்பமான அம்சம். இன்னும் சொல்லப்போனால் அதற்குக் கடைசி இடம்கூட தரப்படவில்லை என்பதை இது காட்ட வில்லையா? தீண்டாமையானது இந்து மதத்தின்மீது படிந்துள்ள ஒரு கறை, தீண்டாமையை அகற்றாமல் சுயராஜ்யம் பெறமுடியாது என்று திரு. காந்தி விடுத்த அறிக்கைகள் யாவும் உள்ளத்தின் அடி ஆழத்திலிருந்து வெளிவராத பொருளற்ற வெற்றுச் சொற்கள் என்பதை இது காட்ட வில்லையா? தீண்டப்படாதோருக்கு குருவாயூர் ஆலயம் திறந்துவிடப்படவில்லை என்றால் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக பிரதிக்கினை செய்துவிட்டு, கோவில் மூடப்பட்டுவிட்ட பிறகும் கூட உண்ணாவிரதத்தை ஆரம்பிக்காத ஒரு மனிதரின் நேர்மையை எப்படி நம்ப முடியும்? ஆலயப் பிரவேச மசோதா கொண்டு வருவதற்குத் தூண்டுதலாக இருந்துவிட்டு, பிறகு அம்மசோதாவைக் கைவிடுவதில் உடந்தையாக இருந்த ஒரு மனிதரை நேர்மை யானவர் என்று அவர்கள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? தீண்டப் படாதோருக்குக் கோவில்களைத் திறந்துவிடுவதற்கு சகல முயற்சி களையும் எடுத்துக் கொள்ளாமல், தீண்டப்படாதோருக்குக் கதவு கள் திறக்கப்படாத ஒரு கோயிலுக்கு நான் செல்ல மாட்டேன் என்று கூறுவதோடு தமது கடமை முடிந்துவிட்டதாகக் கருதும் ஒரு மனிதரது நேர்மையை அவர்கள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? எல்லாவற்றுக்கும் உண்ணாவிரதம் இருக்கத் தயாராக இருக்கின்ற ஆனால் தீண்டப்படாதோருக்காக மட்டும் உண்ணாவிரதம் இருக்க எந்தக் கட்டத்திலும் முன்வராத ஒரு மனிதரது நேர்மையை எப்படி அவர்கள் நம்பமுடியும்?

எதற்கேனும் சரி, எவரை எதிர்த்தேனும் சரி சத்தியாக்கிரகம் செய்ய சித்தமாக இருக்கின்ற ஆனால் தீண்டப் படாதோரின் பொருட்டு இந்துக்களை எதிர்த்து மட்டும் சத்தியாக் கிரகம் செய்ய விரும்பதாக ஒரு மனிதரது நேர்மையை எப்படி அவர்கள் நம்பமுடியும்? தீண்டாமையைப் பற்றி நீண்ட நெடும் உபதேசங்கள் செய்வதோடு நின்றுகொண்டு அதற்கு மேல் எதுவும் செய்ய ஆர்வ மில்லாத ஒரு மனிதன் நேர்மையை எப்படி அவர்கள் நம்ப முடியும்?

திரு. காந்தியை நேர்மையானவராகவும் வாய்மை தவறாத வராகவும் அவர்கள் கருதுகிறார்களா? அவர்கள் திரு. காந்தியை நேர்மையாளராகவும் வாய்மை தவறாதவராகவும் கருதவில்லை என்பதே இதற்குப் பதில் சுயராஜ்ய இயக்கத்தின் ஆரம்பத்தில், பிரிட்டிஷாருடன் சேர வேண்டாம் என்று தீண்டப்படாதோரிடம் திரு. காந்தி கூறினார்.

கிறித்தவ மத்த்தையோ வேறு எந்த மதத் தையோ தழுவ வேண்டாம் என்றும் அவர்களுக்கு அவர் அறிவுரை கூறினார். இந்து மதத்திலேயே அவர்களுக்கு விமோசனம் கிட்டும் என்றும் உறுதியளித்தார். சுயராஜ்யம் பெற வேண்டுமென்றால் தீண்டாமையை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று அவர் இந்துக்களுக் குப் போதனை செய்தார். அப்படியிருந்தும் 1921ல் திலகர் சுயராஜ்ய நிதியிலிருந்து தீண்டப்படாதோரின் நலனுக்காக மிக அற்பத் தொகையே ஒதுக்கப்பட்டது; அது மட்டுமல்ல தீண்டப்படாதோரின் மேம்பாட்டுக்காகப் பாடுபடுவதற்கென்று நியமிக்கப்பட்ட குழுவும் கலைக்கப்பட்டது. அப்போது திரு. காந்தி என்ன செய்தார்? இதை எதிர்த்து சுண்டு விரலையாவது அசைத்தாரா? ஆட்சேபக்குரல் எழுப்பினாரா?

திலகர் சுயராஜ்ய நிதியான ரூ. 1 கோடி 25 லட்சம் திரு. காந்தி யின் பொறுப்பில் இருந்தது. இந்தத் தொகையில் ஒரு கணிசமான பகுதி தீண்டப்படாதோரின் நலனுக்காக ஒதுக்க வேண்டும் என்று திரு. காந்தி ஏன் வலியுறுத்தவில்லை? இதில் திரு. காந்தி முற்றிலும் அக்கறையில்லாமல் இருந்தார் என்பது சர்ச்சைக்கு இடமற்றது. இதில் வேதனைக்கும் விந்தைக்குமுரிய விஷயம் என்னவென்றால், தமது அக்கறையின்மையை நியாயப்படுத்தி தந்த விளக்கமே ஆகும். சுயராஜ்யத்தை அடையப் பெறுவதற்கு ஓர் இயக்கத்தைக் தொடங்குவதற்குத் திட்டமிடுவதில் மும்முரமாக ஈடுபட்டிருப் பதால் தீண்டப்படாதோரின் நலனுக்குப் பாடுபடுவதற்குத் தமக்கு அவகாசமில்லை என்று அவர் சமாதானம் கூறினார்,.

இந்த நொண்டிச் சமாதானம் கூறியதற்காக அவர் வெட்கப்படாதது மட்டுமல்ல, தீண்டப்படாதோரின் நலனில் அக்கறை காட்டாததை நியாயப்படுத் தும் ஒரு விளக்கத்தையும் அளித்தார். தீண்டப்படாதவர்களின் நல னில் கவனம் செலுத்தாமல், இந்தியாவின் அரசியல் லட்சியத்துக்குத் தம்மை முழுக்க முழுக்க அர்ப்பணித்துக் கொண்டதில் தவறு ஏதுமில்லை, முழுமை என்பதில் பகுதியும் அடங்கும், இந்துக்கள் பிரிட்டிஷாரின் அடிமைகளாக இருப்பதால் அடிமைகள் அடிமை களை விடுவிடுக்க முடியாது என்று வாதிட்டார். ‘அடிமைகளின் அடிமை’, ‘பெரியதில் சிறியதும் அடங்கும்’ என்பன போன்ற வாசங்கள் வியக்கத்தக்க வாதத்திறமையை வெளிப்படுத்துபவை யாக இருக்கலாம்.

ஆனால் நாடின் செல்வம் அதிகரித்து விட்ட தால், எல்லோரது செல்வமும் அதிகரித்து விட்டது என்று வாதிப் பதைப் போன்றதுதான் இதுவும்; இதில் துளிவும் உண்மை இருக்க முடியாது. ஆனால் இங்கு திரு. காந்தியின் வாதத் திறமையைப் பற்றி நாம் ஆராய்ந்து கொண்டிருக்கவில்லை. அவரது வாய்மையைத் தான், நேர்மையைத்தான் இங்கு சோதித்துக் கொண்டிருக்கிறோம். தமக்குள்ள பொறுப்பைத் தட்டிக் கழித்து, ஏதோ உப்பு சப்பில்லாத ஒரு சமாதானம் கூறுவதோடு திருப்தியடையும் ஒரு மனிதனுடைய நேர்மையை நாம் ஏற்றுக் கொள்ள முடியுமா? திரு. காந்தி தங்க ளுடைய லட்சியத்தை உறுதியோடு ஆதரித்து நிற்பவர் எனத் தீண்டப் படாதவர்கள் நம்ப முடியுமா?

அரசியல் சட்டப் பாதுகாப்புகள் விஷயத்தில் திரு. காந்தி தங்கள் பாலும், முஸ்லீம்கள் மற்றும் சீக்கியர்கள் பாலும் நடந்து கொண்ட முறையைக் கொண்டு பார்க்கும்போது அவர்கள் திரு. காந்தியை எவ்வாறு நேர்மையாளராக, கண்ணியமிக்கவராகக் கருத முடியும்?

அரசியல் சட்டப் பாதுகாப்புகள் விஷயத்தில் ஷெட்யூல்டு வகுப்பினருக்கும் இதர சிறுபான்மையினருக்கும் இடையே தாம் பாகுபாடு காட்டுவதை நியாயப்படுத்தும் பொருட்டு திரு. காந்தி மற்றொரு வாதத்தை முன்வைப்பது வழக்கம். முஸ்லீம்களையும் சீக்கியர்களையும் சிறுபான்மையினராக தாம் அங்கீகரித்ததற்கு வர லாற்று ரீதியான காரணங்கள் உண்டு என்பதுதான் அந்த வாதம். அந்தக் காரணங்கள் என்ன என்பதை அவர் ஒருபோதும் விளக்கிக் கூறியதில்லை. முஸ்லீம் களும் சீக்கியர்களும் பழைய ஆளும் வகுப் பினர்களின் எச்சமிச்சப் பகுதியினர் என்பதைத் தவிர இதற்கு வேறு வரலாற்றுக் காரணங்கள் ஏதும் இருக்க முடியாது.

எல்லா சிறுபான்மை யினரையும் சமத்துவ அடிப்படையிலேயே நான் பாவிப்பேன், இத் தகைய தருக்க முரணான, பொருத்தமற்ற கருத்துகளுக்கு எத்தகைய மதிப்பும் அளிக்க மாட்டேன் என்றுதான் அவர் நியாயமாக வலி யுறுத்தி இருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் இத்தகைய சிறு பிள்ளைத்தனமான, ஜனநாயக விரோத வாதங்களுக்கு அடிபணிந்து விட்டதைக்கூட எவரும் பொருட்படுத்த மாட்டார்கள். ஆனால் இங்கு ஒரு கேள்வி எழுகிறது; இத்தகைய வாதத்தை ஏற்றுக் கொள்வது ஷெட்யூலடு வகுப்பினரின் கோரிக்கையை எதிர்ப்பதிலிருந்து திரு.  

காந்தியை எவ்வாறு தடுத்திருக்க முடியும்? வரலாற்றுக் காரணங் களைத் தவிர வேறு எந்தக் காரணங்களுக்கும் தாம் கட்டுப்பட் டிருக்கவில்லை என்று திரு. காந்தி ஏன் தம்மைக் கருதிக்கொள்ள வில்லை? முஸ்லீம்கள் விஷயத்தில் வரலாற்றுக் காரணங்கள் தீர் மானமானவை என்றால் தீண்டப்படாதவர்கள் விஷயத்தில் தார்மிக காரணங்கள் தீர்மானமானவை என திரு. காந்தி ஏன் நினைக்க வில்லை? வரலாற்றுக் காரணங்கள் என்ற வாதம் போலியான, பொய்யான வாதம் என்பதுதான் உண்மை. இது ஒரு வாதமே அல்ல. தீண்டப்படாதவர்களின் கோரிக்கையை ஏற்காததற்கு இது ஒரு சாக்கு போக்கே தவரை வேறல்ல.

பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் பிரச்சினையை எதிர்கொள்ள நேர்ந்தபோது திரு. காந்தி அடைந்த கடுவெறுப்பை யும் சீற்றத்தையும் போல் வேறு எப்போதும் அவர் அடைந்ததில்லை என்றே கூறலாம். அப்பிரச்சினையை மறக்கவும் உதாசீனம் செய்ய வுமே அவர் விரும்பினார். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகள் இவற் றில் எதையும் செய்ய அவரை விடவில்லை. பல சந்தர்ப்பங்களில் இப்பிரச்சினையை அவர் கையாள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட் டது. கடைசியாக இப்பிரச்சினையை 1939 அக்டோபர் 21 ஆம் தேதி கையாண்டார். “பெரும்பான்மை என்னும் கற்பனை” என்ற தலைப் பில் ஹரிஜன இதழில் அவர் எழுதிய தலையங்கத்தின் வடிவத்தில் இது அமைந்திருந்தது....

இந்தக் கட்டுரையில் அவர் கொடிய விஷத் தைக் கக்கியிருந்தார்; இந்தப் பிரச்சினையை அடிக்கடி எழுப்பு வோரை எள்ளி நகையாடியிருந்தார். அந்தக் கட்டுரையில் முஸ்லீம் கள் சிறுபான்மையினர் என்பதை வன்மையாக மறுத்தார். சீக்கியர் கள் சிறுபான்மையினர் என்பதை மறுத்தார். இந்தியக் கிறித்தவர்கள் சிறுபான்மையினர் என்பதையும் மறுத்தார். ஒடுக்கப்பட்ட வகுப் பினர்கள் என்ற அர்த்தத்தில் அவர்கள் சிறுபான்மையினர் அல்ல வென்றும், எண்ணிக்கை அடிப்படையில் மட்டுமே அவர்கள் சிறு பான்மையினர் என்றும் வாதிட்டார். அதாவது அவர்கள் சிறுபான்மை யினரே அல்ல என்பதே இதற்குப் பொருள். ஷெட்யூல்டு வகுப் பினரைப் பற்றி திரு. காந்தி என்ன சொல்லுகிறார்? தாங்கள் ஒரு சிறு பான்மையினர் என்ற அவர்களது வாதத்தை அவரால் மறுக்க முடியுமா? திரு. காந்தியின் வாய்மொழி வார்த்தைகளையே இங்கு மேற் கோள் காட்டுகிறேன். திரு. காந்தி பின்வருமாறு கூறினார்:

“இந்தியா சுதந்திரமடைவதால் தங்கள் உரிமைகள்  அபாயத்துக்குள்ளாகக் கூடிய உண்மையான சிறுபான்மை  யினர் என்று எவரும் இந்தியாவில் இல்லை என்பதை நிரூபிக்க நான் நெடுகிலும் முயன்று வந்திருக்கிறேன். தாழ்த்  தப்பட்ட வகுப்பினரைத் தவிர தன்னைத்தானே கவனித்துக் கொள்ள இயலாத எந்தச் சிறுபான்மையினருமே  இல்லை.”

ஷெட்யூல்டு வகுப்பினர் சிறுபான்மையினர் என்ற சொல்லின் உண்மையான அர்த்தத்தில் சிறுபான்மையினர் என்பதையும். இந்து பெரும்பான்மையினரால் ஆளப்படும் ஒரு சுதந்திர இந்தியாவில் தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்ள இயலாத ஒரே சிறு பான்மையினர் என்பதையும் இங்கு திரு. காந்தி ஒப்புக் கொள்வதைப் பார்க்கிறோம். ஆனால் உள்ளத்தில் இத்தகைய மெய்மையைக் கொண் டிருந்த போதிலும் தீண்டப்படாதவர்களுக்கு எத்தகைய அரசியல் பாதுகாப்புகள் அளிப்பதையும் தாம் ஏற்க முடியாது என்று திரு. காந்தி மிகவும் கடுமையான முறையில் அடம் பிடித்தார். இத்தகைய ஒரு மனிதரை நேர்மையானவர், வாய்மை மிக்கவர் என்று தீண்டப் படாதவர்கள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

தங்களுக்கு அரசியல் பாதுகாப்புகள் அளிக்கப்பட வேண்டு மென்ற தீண்டப்படாதவர்களின் கோரிக்கைகளை வட்டமேசை மாநாட்டில் திரு. காந்தி எதிர்த்தார். தீண்டப்படாதவர்களின் குறிக் கோளை முறியடிக்க அவர் தம்மால் முடிந்த அனைத்தையும் செய் தார். அவர்களது கோரிக்கைகளுக்குப் பின்னால் உள்ள வாத வலிமை யைப் பலவீனப்படுத்துவதற்கும், அவர்களைத் தனிமைப்படுத்து வதற்கும் முஸ்லீம்களை தமது பக்கம் ஈர்ப்பதற்கு அவர்களது பதி னான்கு அம்சக் கோரிக்கைகள் முழுவதையும் ஏற்க முன்வந்தார். சிறுபான்மையினர் துணைக்குழுக் கூட்டத்தில் பேசும்போது திரு. காந்தி பின் வருமாறு கூறினார்: “குழு தனது அங்கீகாரத்தை அளிக்கு மானால் தீண்டப்படாதவர்கள் கோரிக்கையை எதிர்க்க நான் யார்.

”ஷெட்யூல்டு வகுப்பினரின் கோரிக்கைகளை எதிர்ப்பதற்குப் பிரதியாக முஸ்லீம்களின் பதினான்கு அம்சக்கோரிக்கை முற்றிலு மாக ஏற்பதற்கு முன்வந்து சிறுபான்மை குழுவின் முடிவை முறி யடிப்பதற்கு திரு. காந்தி முயன்றார்; இது திரு. காந்தி செய்த மிகப் பெரிய தவறாகும்!! இதில் அவர் மிகவும் சூட்சுமான சூழ்ச்சி முறை யைக் கையாண்டார். ஒன்று, தங்களது பதினான்கு அம்சக் கோரிக்கை களை ஏற்க திரு. காந்தி முன்வந்ததை ஏற்று, தீண்டப்படாதவர் களின் கோரிக்கைக்கு அளிக்கும் ஆதரவை அவர்கள் திரும்பப் பெற வேண்டும் அல்லது தீண்டப்படாதவர்களுடன் சேர்ந்து கொண்டு தமது பதினான்கு அம்சக் கோரிக்கைகளை இழக்க வேண்டும் என்ற மிகக்  கடினமான சோதனையை முசல்மான்கள் முன் அவர் வைத்தார். முடிவில் திரு. காந்தியின் சூழ்ச்சி படுதோல்வி அடைந்தது; முஸல் மான்கள் தங்கள் பதினான்கு அம்சக் கோரிக்கைகளை இழக்கவும் இல்லை, தீண்டப்படாதவர்களும் தங்கள் குறிக்கோளில் தோல்வி யடையவும் இல்லை. எனினும் இந்த நிகழ்ச்சி திரு. காந்தியின் நய வஞ்சகத்துக்கு ஒரு கண்கண்ட சாட்சியாக அமைந்துள்ளது.

ஒருவர் மற்றவருக்கு அளித்த வாக்குறுதியை மீறும்படி பண்பற்ற முறையில் தூண்டும் ஒரு மனிதரை, ஒருவரை நண்பர் என்று அன்போடு, பரி வோடு அழைத்துவிட்டு பின்னர் அவர் முதுகில் குத்துவதற்குத் திட்ட மிடும் ஒருவரை வேறு எந்த முறையில் வருணிக்க முடியும்? இத் தகைய ஒருவரை நேர்மையானவர், நாணயமானவர் என்று தீண்டப் படாதவர்கள் எப்படிக் கருத முடியும்?

வகுப்புத் தீர்ப்பு சம்பந்தப்பட்ட முடிவை பிரிட்டிஷ் பிரத மரின் மத்தியஸ்தத்துக்கு திரு. காந்தி விட்டுவிட்டார். தீண்டப் படாதோரை முறியடிக்க திரு. காந்தி எவ்வளவோ முயற்சி எடுத்துக் கொண்டபோதிலும் மன்னர் பிரான் அரசாங்கம் அவர்களது அர சியல் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டது. மத்தியஸ்த நடவடிக்கை யில் ஓர் உடைந்தையாளர் என்ற முறையில் அந்த தீர்ப்பை ஏற்கக் கட்டுப்பட்டிருந்தார்.

ஆனால் திரு. காந்தி அதனை மீறினார்; இதன் பொருட்டு சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தார். திரு. காந்தி தமது சாகும்வரை உண்ணா விரதத்தின் மூலம் இந்தியா வையும் வெளி உலகையும் அதிர்ச்சியுறச் செய்தார். புதிய அரசிய லமைப்பில் தீண்டப்படாதவர்களுக்கு அரசியல் சட்டப் பாதுகாப்பு கள் அளிக்க பிரிட்டிஷ் பிரதமர் தமது தீர்ப்பில் முன்வந்திருந்தார்; இந்த அரசியல் சட்டப் பாதுகாப்புகளைத் திரும்பப்பெறும்படி பிரிட்டிஷ் அரசாங்கத்தை நிர்ப்பந்திப்பதே இந்த உண்ணா விரதத் தின் நோக்கம். திரு. காந்தியின் சீடர்களில் ஒருவர் இந்த உண்ணா விரதத்தை காவியப்புகழ்பெற்ற உண்ணா விரதம் என்று வான ளாவப் புகழ்ந்தார்.

இந்த உண்ணா விரதம் ஒரு வீரகாவியம் என்று ஏன் வருணிக்கப்பட்டது என்று தெரியவில்லை. இதில் வீரத்துக்கு எந்த இடமும் இல்லை. வீரத்துக்கு எதிரானதைத்தான் இதில் பார்க் கிறோம். இதனை ஒரு வெறும் சாகசச் செயல் என்றுதான் கூற வேண் டும். தாம் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாகப் பய முறுத்தினால் தீண்டப்படாதவர்களும் பிரிட்டிஷ் அரசாங்கமும் அதிர்ந்து போய் விடுவார்கள், அஞ்சி நடுநடுங்குவார்கள், கோரிக் கைக்கு இணங்கி விடுவார்கள் என்று நினைத்தே திரு. காந்தி இந்த முடிவுக்கு வந்தார். ஆனால் இந்த வெற்று வேட்டை அம்பலப்படுத்த பிரிட்டிஷ் அரசாங்கமும் சரி, தீண்டப்படாதவர்களும் சரி தயா ராகவே இருந்தனர்; அதைச் செயலிலிம் காட்டினர். அளவுக்கு மீறி விளையாடி விட்டதை திரு. காந்தி உணர்ந்த கணமே அவரது வீரம் எங்கோ ஓடி ஒளிந்து கொண்டது.

தீண்டப்படாதவர்களுக்கான பாதுகாப்புகள் முற்றிலுமாக விலக்கிக் கொள்ளப்பட்டாலொழிய, உரிமைகள் ஏதுமின்றி, அங்கீகாரம் ஏதுமின்றி நிராதரவான நிலை மைக்கு அவர்கள் தள்ளப்பட்டாலொழிய சாகும்வரை உண்ணா விரதம் இருக்கும் தமது முடிவை மாற்றிக் கொள்ள முடியாது என்று கம்பீரமாக் ஆரம்பித்த மனிதர் இப்போது “எனது உயிர் உங்கள் கைகளில்தன் இருக்கிறது, என்னைக் காப்பாற்றுவீர்களா? என்று சோகம் ததும்ப பிரலாபித்தார். புனா ஒப்பந்தம் எப்படியேனும் கையெழுத்திடப்பட வேண்டுமே என்று அவர் துடித்து துடிப்பு அந்த மாவீரர் தமது வீரத்தை இழந்துவிட்டார் என்பதையும், தமது மானத் தையும் உயிரையும் காப்பாற்றிக் கொள்ள மிகவும் ஆவலோடு இருக் கிறார் என்பதையும் தெள்ளத் தெளிவாகப் புலப்படுத்திற்று; இந்தப் புனா ஒப்பந்தம் திரு. காந்தி கோரியபடி பிரதமரின் வகுப்புத் தீர்ப்பை அடியோடு ரத்து செய்துவிடவில்லை, மாறாக வேறுபட்ட அரசியல் சட்டப் பாதுகாப்பு முறையைத்தான் அது வழங்கிற்று.

இந்த உண்ணாவிரதத்தில் உயர்நோக்கம் ஏதுமில்லை, அது அருவருக்கத்தக்க, தகாத செயலாகும். இந்த உண்ணா விரதம் தீண்டப் படாதவர்களின் நலனுக்காக நடத்தப்படவில்லை. உண்மையில் அவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட உண்ணாவிரதமேயாகும்; பிரத மரின் வகுப்புத் தீர்ப்பின்படி தமக்குக் கிட்டவிருந்த அரசியல் சட்டப் பாதுகாப்புகளை இழக்கவும், இந்துக்களின் தயவில் வாழவும் நிராதரவான மக்களை மிக மோசமான முறையில் ஒப்புக் கொள்ள நிர்ப்பந்திக்க உண்ணாவிரதமாகும். இதனை கொடுமையிலும் கொடுமையான அவக்கேடான செயல் என்றே கூற வேண்டும். இப்படிப் பட்ட மனிதரை தீண்டப்படாதவர்கள் நேர்மையானவராக, நாணய மானவராக எப்படிக் கருத முடியும்?

சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்அ அவர் புனா ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார். அரசியல் சட்டப் பாதுகாப்புகள் தீண்டப்படாதவர்களுக்கு தீமையே விளைவிக்கும் என்று திரு. காந்தி உண்மையிலேயே நம்பினார் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் ஒரு நேர்மையான, நியாயமான மனிதர் தீண்டப்படாதவர்களின் அர சியல் கோரிக்கைகளை எவ்வாறு எதிர்க்க முடியும்? அவர்களைத் தோற்கடிப்பதற்காக முஸ்லீம்களைப் பயன்படுத்திக் கொள்ள எவ்வாறு தயாராக இருக்க முடியும்? சாகும்வரை உண்ணாவிரதம் ஆரம் பித்த அவர் இறுதியில், இந்தக் கோரிக்கைகளை எதிர்ப்பதில் அர்த்த மில்லை, அந்த எதிர்ப்பு வெற்றி பெறாது என்று அவற்றை எவ்வாறு ஏற்றுக் கொள்ளா முடிந்தது? உண்மையில் புனா ஒப்பந்தத்திற்கும் வகுப்புத் தீர்ப்புக்கும் அதிக வித்தியாசமுமில்லை என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். தீண்டப்படாதவர்களுக்கு தீமை பயக்கக் கூடியவை என்று ஒரு சமயம் அவரே வருணித்த கோரிக்கைகளை ஒரு நேர்மையான, கண்ணியமான மனிதர் எப்படி ஏற்றுக் கொண் டார்? தீங்கு விளைவிக்கக்கூடியவை என்று ஒரு சமயம் அவரே கருதிய தீண்டப்படாதவர்களின் கோரிக்கைகளை தீங்கற்றவை என்று ஒரு நியாயமான, நேர்மையான மனிதர் எப்படி ஏற்றுக் கொண்டார்?

தீண்டப்படாதவர்கள் திரு. காந்தியை தங்களுடைய நண்பராகவும் தோழராகவும் ஏற்றுக் கொள்கின்றனரா? இதற்குப் பதில் ‘இல்லை’ என்பதாகத்தான் இருக்க முடியும். அவரை அவர்கள் தங்க ளுடைய நணபராகக் கருதவில்லை. எப்படி முடியும்? தீண்டப்படாத வர்களின் பிரச்சினை ஒரு சமூகப் பிரச்சினை என்று திரு.காந்தி நேர்மையாக, உண்மையாகக் கருதலாம். ஆனால் தீண்டாமை என்பது சாதி அமைப்பு முறையின் ஒரு வெளிப்புற வடிவமே ஆகும்; ஆதலால் சாதி அமைப்பு முறையை ஒழித்துக் கட்டாமல் தீண்டாமைக்கு முடிவுகட்டும் பேச்சுக்கே இடமில்லை; அப்படியிருக்கும் போது திரு. காந்தி சாதி அமைப்பு முறையை அப்படியே வைத்துக் கொண்டு தீண்டாமையை மட்டும் அகற்றிவிடலாம் என்று கூறு கையில் அவரைத் தம்முடிடைய நண்பராக தீண்டப்படாதவர்கள் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? தீண்டப்படாதவர்களின் பிரச் சினைக்கு சமூக இயக்க நிகழ்வுகள் மூலம் தீர்வு காணமுடியும் என திரு. காந்தி எதார்த்தமாகவே நம்புவதாக இருக்கலாம்.

ஆனால் அரசியல் வழிமுறைகளைப் பயன்படுத்துவது சமூக வழிமுறையால் கிட்டும் பலன்களை எவ்வகையிலும் பாதிக்காது. அதற்குப்பதில் பிரச்சினை யின் தீர்வைத் துரிதப்படுத்த உதவும் என்று எல்லோருமே ஏற்றுக் கொள்ளும்போது அரசியல் வழிமுறைகளைப் பயன்படுத்துவதை சீற்றத்தோடு, மூர்க்க வெறியோடு எதிர்க்கும் ஒரு மனிதரை தீண்டப் படாதவர்கள் எப்படித் தங்கள் நண்பராகப் பாவிக்க முடியும்? தீண்டப்படாதவர்கள் ஆட்சிப்பீடத்துக்கும் அதிகாரத்துக்கும் வரு வதை விரும்பாத ஒரு மனிதரை தீண்டப்படாதவர்கள் எப்படித் தங்க ளுடைய நண்பராகக் கருதமுடியும்? அரசியல் பாதுகாப்புகள் குறித்த சர்ச்சையில் திரு. காந்தி பின் கண்டவழிகளில் எதையேனும் ஒன்றைப் பின்பற்றி இருக்கலாம். அவர் தீண்டப்படாதவர்களின் தீவிர ஆதர வாளராக மாறியிருக்கலாம். அவ்வாறான நிலைமையில் அரசியல் பாதுகாப்புக்கான அவர்களது கோரிக்கைகளை வரவேற்பதோடு, அவற்றை அவர்கள் முன்வைப்பதற்கு முன்னதாக அவரே மனமுவந்து அவற்றைப் பிரரேபித்திருக்கலாம். அவ்வாறு பிரரேபிப்பதோடு நில் லாமல் அவற்றுக்காக போராடியும் இருக்கலாம்.

தீண்டப்படாதவர்கள் சட்ட மன்ற உறுப்பினர்களாகவும், அமைச்சர்களாகவும், உயர் அதிகாரிகளாகவும் ஆவதற்கு இந்தப் பாதுகாப்புகள் வகை செய்வதைக் கண்குளிரக் காண்பதைவிட தீண்டப்படாதவர்களின் உண்மையான ஆதரவாளருக்கு மிகுந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் தரக்கூடியது வேறு என்ன இருக்க முடியும்? உண்மையில் திரு. காந்தி தீண்டப்படாதவர்களின் நலன்களுக்குப் பாடுபடுபவராக இருந்தால், அவர் போராட வேண்டியவை இந்தப் பாதுகாப்புகளை அவர்களுக் குப் பெற்றுத் தருவதற்காகத்தான். இரண்டாவதாக, தீண்டப்படாத வர்களின் ஆதரவாளராக இருக்க அவர் விரும்பவில்லை என்றால், அவர்களது தோழனாக இருந்திருக்க முடியும்.

அவர்களுக்குத் தமது தார்மிக, பொருளாயத ஆதரவை நல்கி அவர்களுக்கு உதவி இருக்க முடியும், மூன்றாவதாக, திரு. காந்தி தீண்டப்படாதவர்களின் ஆதர வாளராகவும் இன்னும் சொல்லப்போனால் அவர்களது தோழனாக வும் கூட இருக்க விரும்பவில்லை என்றால், இதுவரை பெரிதும் பிரகடனப்படுத்தப்பட்டு வந்ததுபோல, வெகுவாக விளம்பரப் படுத்தப்பட்டு வந்தது போல் தீண்டப்படாதவர்களிடம் தாம் காட்டும் அனுதாபத்தோடு நின்று கொண்டு அவர்களுடைய நண்பராக இருந் திருக்க முடியும், இங்கும், ஒரு நண்பர் என்ற முறையில், நலம் பயக்க்க்கூடிய நடுநிலைப் போக்கைக் கடைப்பிடித்திருக்க முடியும், பாதுகாப்புக் கோரிக்கைகளுக்காகப் போராட விட்டாலும் அந்தக் கோரிக்கைகள் ஏற்கப்படுவதற்கு அனைத்து உதவிகளையும் செய் திருக்க முடியும்.

நலம் பயக்கக் கூடிய நடுநிலைமையைப் கடைப்பிடிக்க இயலாவிட்டாலும் கண்டிப்பான நடுநிலைமைப் போக்கை, அந்தச் சொல்லின் கறாரான அர்த்தத்தில் அவர் பின்பற்றியிருக்க முடியும்; வட்டமேசை மாநாடு பாதுகாப்புகளைத் தரத் தயாராக இருக்கும் பட்சத்தில் அவற்றை ஏற்றுக் கொள்ளும்படியும், இதற்கு தாம் உதவவோ அல்லது முட்டுக்கட்டைப் போடவோ போவ தில்லை என்றும் அவர் தீண்டப்படாதவர்களிடம் கூறியிருக்க முடியும். இந்த நேரிய வழிகளை எல்லாம் கைவிட்டுவிட்டு திரு. காந்தி தீண்டப்படாதவர்களின் பகிரங்கமான பகைவராகத் தம்மைக் காட்டிக் கொண்டார். இத்தகைய ஒரு மனிதரை தீண்டப்படாதவர்கள் எப்படி தங்களுடைய நண்பராகவும் தோழராகவும் கருத முடியும்?

 ("தீண்டப்படாதவர்களுக்கு காங்கிரசும் காந்தியும் சாதித்தது என்ன?" - தொகுதி 16, இயல் 10)

Pin It