“சாதி” தமிழ்ச் சமூகத்தை புற்றாக அரித்துக் கொண்டிருக்கும் ஒரு வினைச்சொல். சாதியின் தோற்றம் - வளர்ச்சி - அது பரவிய நாடுகள் குறித்த ஆய்வுகளுக்குள் செல்ல விரும்பவில்லை. ஏனெனில் அது குறித்து சமூகவியல் ஆய்வாளர்கள் பலர் ஆய்ந்து தங்கள் கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்கள். அந்த ஆய்வின் அடிப்படையிலான சாதி ஒழிப்பிற்கான பயணமும் காலந்தோறும் நடந்தேறியிருக்கிறது. சாதி எதிர்ப்பின் தொடக்க காலம் சாதியத்தின் இறுக்கம் மிகுந்திருந்த காலம். சாதியத்தை அழித்தொழிக்க புரட்சியாளர் அம்பேத்கர் மேற்கொண்ட ஆய்வுப் பணிகளும் களச்செயல்பாடுகளும் இந்தியத் துணைக்கண்டம் முழுக்க பேசப்பட்ட ஒன்று. தமிழகத்தில் சாதியத்திற்கு எதிரான கலகக்குரல் சித்தர்கள் காலத்திலேயே தொடங்கிவிட்டது என்கிறார்கள்.

இப்படியாக சாதி அமைப்பிற்கு தொடர்ந்து சம்மட்டி அடி கொடுத்தும் அது செழித்து வளர்ந்து வருவதை நாம் கண்கூடாக பார்க்கிறோம். ஏனெனில் சாதி என்பது தனியாக இல்லை. அது மக்கள் மனங்களில் கோட்பாடாய் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அவர்களின் உளவியலோடு இரண்டறக் கலந்திருக்கிறது.

manual scanvenging 600இன்று விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அறிவியல் தொழில்நுட்பக் கருவிகள் பெருகிவிட்டன. அதன் பயனை ஒவ்வொரு மாந்தரும் ஒவ்வொரு நொடிப்பொழுதும் அனுபவித்து வருகிறான். அறிவியல் வாகனம் மனிதனை இன்றைய நாகரீக சமூகத்தை நோக்கி அழைத்து வந்திருக்கிறது. ஆனால் சாதி என்னும் நஞ்சு மட்டும் அறிவியலுக்கு அடங்க மறுக்கிறது. அது தீராத நோயாய் தமிழ்ச் சமூகத்தை பீடித்து ஆட்டுகிறது. அறிவியல் ஈன்றெடுத்த அற்புதக் குழந்தையான மங்கல்யான் விண்கலம் விண்ணில் ஏவப்படுகிறது. மகிழ்ந்து கொண்டாடுகிறோம். இந்திய நாட்டின் அறிவியல் வளர்ச்சியை எண்ணி ஆனந்தக் கூத்தாடுகிறோம். ஆனால் இந்த நவீன காலத்திலும் - சாதி அடிப்படையில் அமைந்த மத்திய அரசு இத்தகைய இழிதொழில்களை ஒழிக்கும் வகையில் சட்டம் இயற்றியும், உச்சநீதிமன்றம் கண்டித்த பிறகும் மனித மலத்தை மனிதனே சுமக்கும் அவலநிலை இன்னும் தொடர்கிறதே. இதை நவீனப்படுத்த முடியாதா? அறிவியல் இதற்குத் துணை செய்யதா?

நம் வீடு நாறுகிறது என்பதற்காக, தன் தலையை மலக்குழிக்குள் முக்கி அடைப்பை எடுத்து விடும்போது ஏற்படும் விபத்துக்களால் மரணமடையும் தொழிலாளர்களின் நிலையைப் பற்றி யாராவது சிந்திக்கிறோமா? இந்த சாதிய கட்டமைப்பில் கடைநிலையில் பிறந்துவிட்டார்கள் என்பதற்காக அவர்கள் மீது திணிக்கப்படும் இந்த தொழிலை நவீனப்படுத்தவும் அனைத்து சமூக மக்களுக்குமான தொழிலாக பரவலாக்கவும் மறுக்கின்றன நம்மை ஆளும் அரசுகள். இது வேறெந்த நாட்டிலும் நடக்காத நிகழ்வுகள்.

சாதி சிலருக்குப் பெருமையை தரலாம். கடைநிலையில் வாழும் இத்தகைய மக்கள் மீது அவமானமத்தை அல்லவா உமிழ்கிறது. இந்தச் சாதி சமூக எதார்த்தத்தில் இத்தகைய பாத்திரத்தை மட்டும் வகிக்கவில்லை. அது சமத்துவத்திற்கும் சகோதரத்துவத்திற்கும் நேர் எதிரான வினையை ஆற்றுகிறது. இவ்வாறான கேட்டினை விளைவிக்கும் சாதியத்தை ஒழிக்காமல் இங்கே சமதர்மத்தை நிலைநாட்ட முடியாது.

ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் இன ஒதுக்கல் பாகுபாடு என்பது வெளிப்படையாக காணத்தக்க அமைவுகளை கொண்டிருந்தது. ஆனால் சாதியம் என்பது அப்படியான தன்மை கொண்டது இல்லை. எனவே அதன் நுட்பமான ஓட்டத்தை அனுபவிப்பவர்களால்தான் மட்டுமே உணர முடியும். ஏனையோர் அதன் கொடூரத்தை அறிந்திருக்க வாய்ப்பில்லை. எனவேதான் “சாதியின் கொடூரத்தை அறியவேண்டுமா பறையனாய் வாழ்ந்து பார்” என்பதாகச் சொல்வார் கவிஞர் அறிவுமதி.

புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் சாதி முறை தேச விரோதம் என்று முழங்கிக் கொண்டிருந்த காலத்திலேயே சாதியின் பெயரால் உழைக்கும் ஒடுக்கப்பட்ட மக்களை தீண்டாமைக் கொடுமை தீயென தீண்டிய காலத்திலேயே “தீண்டாமை சாதிமுறையின் பக்கவிளைவல்ல” என்று எழுதியதோடு, சாதி அமைப்பை “சமுதாயத்தின் இயற்கை ஒழுங்கு” என வர்ணித்தார்.

காந்தியத்தின் உண்ணாநிலை அறப்போராட்டம் இந்தியத் துணைக்கண்டம் மட்டுமல்லாது பூமிப்பந்து முழுவதும் புகழ்ந்து பேசப்பட்ட ஒன்று. அவர் தன்னுடைய பொது வாழ்க்கையில் சுமார் 17 முறை அத்தகைய போராட்ட முறையை மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். ஆனால் தாண்டவமாடிய தீண்டாமையைக் கண்டித்து பல்வேறு இடங்களில் குரல் கொடுத்த அவர் அதற்காக உண்ணாநிலை அறப்போராட்டத்தை கையிலெடுக்காததன் காரணம் தெரியவில்லை. அப்படியான யுக்தியைக் கையாண்டிருந்தால் தீண்டாமை எதிர்ப்புப் போராட்டம் என்பது மக்கள்மயமாகியிருக்கக் கூடும்.

தீண்டாமை, வர்ணம் என்பதைக் குறிப்பிடும் போது வர்ணத்திற்கு நான் சொல்லும் பொருளில் மேலோர், கீழோர் என்னும் வேற்றுமைக்கு இடமில்லை என்கிறார் (யங் இந்தியா - 20.10.1927). வர்ணம் ஏற்றத்தாழ்வைக் குறிக்கவில்லை என்றால், சமத்துவத்தையா கொண்டாடுகிறது?. இது காந்தியாரின் கடைந்தெடுத்த அயோக்கித்தனமில்லையா? மட்டுமல்லாமல் சாதித் தூய்மையை பாதுகாத்துக் கொண்டே தீண்டாமையை மட்டும் வேரறுக்கும் யுக்தி எப்படி சாத்தியப்படும். இப்படிச் சொன்ன காந்தியை சாதியத்தால் ஒடுக்கப்பட்ட மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்?

காதலும் சாதியும் தங்கள் பண்பாட்டு பெருமைகளான புலங்காகிதம் அடையும் தமிழ்ச் சமூகத்தில் காதலித்த காரணத்தைச் சொல்லி அரங்கேறும் கொலைகளை தமிழர்கள் வேடிக்கை பார்க்கலாமா? ஆனால் தமிழ்ச் சமூகத்தின் எதார்த்தப் போக்கு அதுவாகத்தானே இருக்கிறது. அப்படியானால் பெருமிதமும் வீராவேசமும் வெறும் ஏட்டளவிலும் உதட்டளவிலும் மட்டும்தானா? சாதி மறுப்பு (காதல்) மணம் புரிந்தார்கள் என்ற ‘குற்றத்திற்காக’ காதலர்கள் கொலை செய்யப்படுவது ஊடகங்களில் அடிக்கடி வரும் செய்திகளாகிவிட்டது. அக்கொடூரக்கொலைகளுக்கு “கௌரவக் கொலைகள்” என்று பட்டுக்குஞ்சம் கட்டி அழகு பார்க்கின்றனர் ‘நடுநிலை’ ஊடகங்கள். இவையெல்லாம் தமிழ்ச்சமூகத்தின் பண்பாட்டுப் பெருமைகளை காப்பதற்காகவா?

தமிழகத்தில் நடந்த “கௌரவக் கொலைகளைக்” (சாதிவெறி ஆணவக் கொலை) கண்டித்து தமிழர்கள் நடத்திய போராட்டங்கள், எத்தனை இடங்களில் சட்ட ஒழுங்கிற்கு சீர்குலைவை ஏற்படுத்தியிருக்கின்றன. அரசின் இயங்குதலைக் கேள்விக்குள்ளாக்கியிருக்கின்றன. தமிழ் மண்ணில் நடந்தேறும் “கௌரவக் கொலைகள்” தமிழ்ச்சமூகத்தின் அவமானச் சின்னங்கள் இல்லையா?

சமூகத்தின் நலனுக்காக ஆரோக்கியமான தகவல்களை பகிர்ந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்ட சமூக வலைதளங்கள் இன்று தன் சாதி இளைஞர்களுக்கு சாதிவெறியூட்டும் ஊடக மையங்களாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றன. சாதிவெறியர்களின் காட்டுக்கூச்சலுக்கான வடிகாலாக அவை மாறி விட்டன. இதனைக் கண்டிக்க நாதியுண்டா?

இன்று தன் சாதியின் வரலாற்றை அறிந்து கொள்ளப் புறப்பட்ட ஒரு கூட்டம் சாதிதரும் போதையில் மயங்கி, இன்றுள்ள எதார்த்த நிலையை வசதியாக மறந்து தள்ளாட்டம் போராடுகிறது. “நாங்களெல்லாம் ஆண்ட பரம்பரை” என்று ஆர்ப்பாட்டம் செய்கிறது. தமிழகத்திலுள்ள பெரும்பாலான சாதியினருக்கு இந்நோய் தொற்றிக்கொண்டது வேடிக்கையானது. இந்துத்துவவாதிகள் விரித்த நச்சு வலையில் வீழ்ந்து, பார்ப்பனிய அடிமைத்தனத்தில் சுகம் கண்டு தமிழ்ச் சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் அணிச்சேர்க்கைக்கும் பெருந்தடையாக இருந்து வருகிறார்கள் அவர்கள். இந்துத்துவக் கும்பல்தான் தங்களை இயக்குகிறது என்பதைக்கூட உணர முடியாத அளவுக்கு பார்ப்பனியம் அவர்களின் மூளைப்பரப்பை அரித்து ஆக்கிரமித்து நிற்கிறது.

நம்மை ஆளும் அரசும் ஆட்சியாளர்களும் என்னதான் சட்டம் கொண்டு வந்தாலும் நிலவும் வன்கொடுமைகள் மட்டும் ஒழிந்தபாடில்லை. வளரும் விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்கேற்ப தீண்டாமையின் வடிவமும் மாறிவருகிறது. சில இடங்களில் மாறாமலும் இருக்கிறது.

ஆங்கிலேயர் ஆட்சியில் 1850- இல் சாதி முட்டுப்பாடுகள் ஒழித்தல் சட்டம், 1955-இல் தீண்டாமைக் குற்றங்கள் சட்டம், 1976-இல் குடியுரிமைப் பாதுகாப்புச் சட்டம். 1989-இல் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம். அதன் விதிகள் 1995-இல் வகுக்கப்பட்டது. மேலும் பல்வேறு சரத்துகளை உள்ளடக்கிய 2015 -இல் பட்டியல் - பழங்குடியினர் மீதான வன்கொடுமைகள் தடுப்புச் சட்ட திருத்தம்.

இவ்வாறாக அரசு அவ்வப்போதைய நிலைமைகளுக்கேற்ப சட்டங்கள் பல இயற்றிய பிறகும் சாதிய வன்கொடுமைகள் கட்டுக்குள் வந்துள்ளதா என்றால், இல்லை என்பதே பதிலாக இருக்கிறது. இதற்கான காரணத்திற்கும் நாம்மை ஆளும் அரசுகளைத்தான் குற்றம்சாட்ட வேண்டியுள்ளது. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தினை சரியான முறையில் அமலாக்கம் செய்ய அரசு இயந்திரம் துளியும் முயற்சிப்பதில்லை. குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்களை அதிலிருந்து மீட்டும் வகையில் நேர்மையாகப் பணியாற்ற வேண்டிய காவல்துறை பல்வேறு இடங்களில் சாதியவாதிகளுக்கு ஒத்தாசையாகவே நின்றிருப்பதுதான் வரலாறு. ஒரு வன்கொடுமைச் சம்பவத்தில் சாதிவெறியர்கள் மீது, ஒருவேளை வன்கொடுமைகள் தடுப்புச் சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டிருக்கிறது என்று வைத்துக்கொண்டால் அதற்கு எதிராக அக்குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட சாதிவெறியரிடம் புகார் பெறப்பட்டு, பாதிக்கப்பட்ட பட்டியலின மக்கள் மீதே கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து காவல்துறை தன் கடமையை ஆற்றுகிறது.

வன்கொடுமைகள் சம்பவங்களின் போது அரசு இயந்திரம் தனது பணியைச் சிறப்பாக ஆற்றினால் மட்டுமே  நாட்டில் நிலவுகின்ற வன்கொடுமைகளை முற்றாக ஒழிக்க முடியும் என்கிறார்கள் சாதிஒழிப்புக் களத்தில் போராடி வருகின்ற சமூக செயல்பாட்டாளர்கள்.

மத்திய அரசின் இத்தகைய சட்டங்கள் மட்டுமே சாதிக் கொடுமைகளை தடுத்து நிறுத்திவிடாது. மக்களின் வாழ்வியலோடு கட்டுண்டு கிடக்கும் சாதியத்தை ஒழிக்கும் நோக்கிலான செயல்திட்டத்தை மத்திய - மாநில அரசுகள் இணைந்து வகுக்க வேண்டும்.

கருப்புப் பணத்தை ஒழிப்பதாகச் சொல்லி இந்தியக் குடிமகன்கள் அனைவரையும் இன்னலுக்கு உள்ளாக்கும் இந்த அரசு, தொடர்ந்து சாதியின் பெயரால் இன்னலுக்கு ஆட்பட்டுவரும் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக, சாதியத்தை ஒழிக்கும் வகையிலான சட்டங்களை இயற்றி அதை செவ்வனே நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும். குறிப்பாக சாதிமறுப்பு மணம் புரிந்தோர்க்கு காலதாமதமின்றி உடனடியாக அரசுப்பணி வழங்க வேண்டும். பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் போது சாதியைக் கேட்பதைத் தவிர்க்க வேண்டும். மக்கள் விருப்பத்தின் அடிப்படையில் அரசு “சாதியற்றோர் பட்டியல்” என்றொரு பிரிவை உண்டாக்கி, அப்பிரிவினருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சாதி ரீதியான சிக்கலுக்கும் கொடுக்கப்படும் முக்கியத்துவமும், கவனமும் கூட தேசிய இன சிக்கலுக்குக் குவிக்கப்படுவதில்லை. தமிழ்நாட்டின் அண்டை தேசங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடகா மக்களின் தன்னெழுச்சியான செயல்பாட்டில் தேசிய இன விடுதலைக்கான கூர்மை தென்படுகிறது. அங்கு சாதிய சிக்கல்கள் அவ்வப்போது தலையெடுத்தாலும் மேலெழுந்து வரும் தேசிய இனம் சார்ந்த சிந்தனை அச்சிக்கலை பின்னோக்கித் தள்ளிவிடுகிறது.

தமிழர்களிடம் குடிகொண்டிருக்கும் சாதிவெறி நோயும், சாதிய உளவியல் பிற்போக்கும் முற்றாக ஒழிக்கப்பட்டு, சாதியத்தின் மீதான அருவெறுப்பும் கோபமும் எப்போது மேலோங்குகிறதோ, அப்போதுதான் தமிழன் உண்மையான தமிழனாக ஆவான். கிழக்குத் திசையும் தன் சுடர்முகம் காட்டும்.

- தங்க.செங்கதிர்

Pin It