இந்தியாவின் கிழக்குப் பகுதிகள் மட்டுமல்ல, மேற்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளிலும் கனிம வளங்கள் சுரங்கங்களின் மூலம் சூறையாடப்பட்டு வருவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

மாவோயிஸ்டுகள் அழுத்தமாகக் கால் பதித்துள்ள இடங்கள் என்பதால், கிழக்குப் பகுதிகள் மட்டும் ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கின்றன. எதிர்ப்பு வலுவாகப் பதிந்திருக்கும் இடங்கள் மட்டுமே பேசு பொருளாகி இருக்கின்றன. ஆனால், பன்னாட்டுக் கொள்ளையர்களின் கவனம், இந்தியத் துணைக் கண்டத்தின் மூலைமுடுக்கெல்லாம் ஊடுருவியுள்ளதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 100 கீ.மீ. நீளமும் 40 கி.மீ. அகலமும் கொண்ட சிறிய நிலப்பகுதி கோவா. யூனியன் பிரதேசம் என்ற அளவில் மதிப்பிடப்பட்டு, இன்று மாநில தகுதி நிலை பெற்றிருக்கும் நிலப்பகுதி இது.

tribes_192போர்த்துகீசியர்களின் பிடியிலிருந்து 1961 டிசம்பர் 19 அன்று, இந்நிலப்பரப்பு இந்திய ஆளுகையின் கீழ் கொண்டுவரப்பட்டது. கிழக்கில் உயர்ந்த மலைப்பரப்புகளையும் மேற்கே அரபிக் கடலையும் எல்லையாகக் கொண்ட இயற்கை வனவளப் பகுதி இது. போர்த்துகீசியர்களின் காலத்திலேயே சிறிய அளவிலான சுரங்கத் தொழில் இங்கு தொடங்கி விட்டது.

இந்தியாவுடன் இணைக்கப்பட்ட பிறகு, இம்மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் முதலமைச்சரே ஒரு சுரங்க முதலாளியாகத்தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் சுரங்க உரிமையாளர்களிடமிருந்து அமைச்சர் முதல் கடைநிலை காவலர் வரை, அவரவர்க்கான பங்கு இன்று வரை தரப்பட்டுக் கொண்டிருக்கிறது. தெற்கு கோவாவில் மைனா என்ற இடத்திலும், வடக்கு கோவாவில் அதவ்பால் மற்றும் சோன்ஷி ஆகிய இடங்களிலும் அரசாங்க பள்ளிக் கூடங்களுக்கு அருகிலேயே இன்றும் சுரங்கத் தொழில் நடைபெற்று வருகிறது. கோவாவின் நடுப் பகுதியில் கொலாம்ப் எனும் உள்ளடங்கிய கிராமத்தில் செலாலிம் அணையின் நீர்ப் பிடிப்புப் பகுதியிலிருந்து அரை கி.மீ. தொலைவிலேயே புதிய சுரங்கம் தோண்டப்பட்டு வருகிறது. இம்மாநிலத்தின் சரிபாதி மக்களுக்கான குடிநீர், இப்பகுதியிலிருந்துதான் அனுப்பப்படுகிறது. இச்சுரங்கம் விரிவடையும்போது, இந்நீர்நிலைப் பரப்பு என்னவாகும் என்பதை சொல்லத் தேவையில்லை.

போர்த்துகீசியர்களின் காலத்தில் 1905 லேயே ஜப்பானிய ஆய்வாளர்களால் இரும்பு மற்றும் மாங்கனீசு தாதுக்கள் இம்மாநிலத்தில் இருப்பது கண்டறியப்பட்டு விட்டது. 1950களில் கோவாவின் சில நாடோடிக் குடும்பத்தினரால் சுரங்கத் தொழில் மிகச் சிறிய அளவில் இங்கு நடந்து கொண்டிருந்தது. அன்றைக்கே 100 டன் வரை ஏற்றுமதியும் செய்யப்பட்டது. 1970 களின் தொடக்கத்தில் அதாவது, இந்தியாவோடு இணைக்கப்பட்ட பத்து ஆண்டுகளுக்குள் 1 கோடி டன் என்ற அளவில் வளர்ந்த இத்தாதுக்களின் உற்பத்தி, இன்று 4 கோடி டன் என்ற எல்லையை அடைந்துள்ளது. அரபிக் கடலின் முகத்துவாரமான, தீபகற்ப இந்தியாவின் கடற்பகுதியான கோவாவில், 8500 கோடி டன் கனிமத் தாதுக்கள் இனிவரும் காலங்களில் தோண்டியெடுக்கப்படுவதற்காகக் கண்டறியப்பட்டுள்ளன. இதற்கென அடுத்த அய்ந்தாண்டுகளில் ஏறத்தாழ 90 ஆயிரம் கோடி அந்நிய நிதி மூலதனம் இம்மாநிலத்தில் முதலீடு செய்வதற்கென அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இச்சுரங்கங்களின் பயன்பாட்டுக்கென, 16 எரிசக்தி திட்டங்கள் தொடங்கப்படவுள்ளன. 300க்கும் மேற்பட்ட சுரங்க அனுமதிகள், நடுவண் சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக விண்ணப்பிக்கப்பட்டுள்ளன. இந்தியாவுடன் இணைக்கப்படாமலிருந்த காலகட்டத்தில் "கோவா, இந்தியாவின் முகத்தில் ஒரு மரு போல' இருப்பதாக அந்நாளைய தலைமை அமைச்சர் நேரு ஒரு முறை குறிப்பிட்டிருந்தார். அந்த மரு இந்திய (விலை) மகளின் அழகுக்கு உறுத்தலாக இருக்கிறதோ என்னவோ, அதைத் தழும்புகூட இல்லாமல் செய்வதற்கான அழகு சாதன உபகரணங்களும் (பன்னாட்டு நிறுவனங்கள்) முகப்பூச்சுகளும் (நிதிமூலதனம்) இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. விலை பேசப்படும் அழகு ஒளிருமா?

உலக வங்கி, சர்வதேச நிதியம் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் நிதி மூலதன ஒப்பந்தங்களில் வாய் பிளந்துதான், கடந்த பாரதிய ஜனதா கூட்டணி கட்சிகளின் ஆட்சியில் "இந்தியா ஒளிர்கிறது' என்ற கவர்ச்சி முழக்கம் எழுப்பப்பட்டது. கணினி யுகத்தின் தகவல் தொழிற்நுட்பப் பூங்காக்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், எந்திர மற்றும் மின்னணு பொருட்களின் மிகப்பெரும் தொழிற்நிலையங்கள் போன்றவையும் அவற்றின் வரவையொட்டி புனரமைக்கப்படும் நகர மேம்பாடு, விரிவாக்கப்படும் நெடுஞ்சாலைகள், வணிக வளாகங்கள், நவீன ரக மகிழுந்துகள், நட்சத்திர விடுதிகள், புதிய கேளிக்கைகள் ஆகியவையும் – ஒளிரும் இந்தியாவின் ஒப்பிலக்கணங்களாக ஒரு தோற்றத்தை உருவாக்கி இருக்கின்றன. முதலாளித்துவ நோக்கிலான இந்த "வளர்ச்சி' வாழ்வாதார அடிப்படைகளில் நிறைவு பெற்றிருக்கும் நடுத்தர வர்க்கத்தினர் வரை கொண்டாடப்பட்டு வருகிறது. கல்வி அறிவும் சமூக விழிப்புணர்வும் பெற்றிருக்கும் இவ்வர்க்கத்தினர், தத்தமது சமூக, பொருளாதார வளர்ச்சியோடு மட்டுமே இச்சூழலைப் பொருத்திப் பார்த்து நிறைவு கொள்கின்றனர்.

ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சி அல்லது அனைத்து சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வளர்ச்சி என்ற பரந்த நோக்கம் இவர்களின் பார்வையில் இருப்பதில்லை. தலித் மக்கள், பழங்குடியினர், பொருளாதார கீழ்நிலையில் கிடத்தப்பட்டிருக்கும் உழைக்கும் பிரிவினர் என, நாட்டின் சரிபாதி மக்களைச் சுரண்டியும் ஏமாற்றியும் உருவாக்கப்படும் நியாயமற்ற, நீதிக்குப் புறம்பான, மனிதத் தன்மையற்ற வளர்ச்சி இது என்பதை இவ்வர்க்கத்தினர் புறந்தள்ளி விடுகின்றனர். தமது சொந்த பொருளியல் நலன் என்பதற்கும், சமூக வாழ்வாதாரங்கள் என்பதற்கும் இடையிலான பாரதூர வெளிகளை இவ்வர்க்கத்தினர் தமக்கேயுரிய அயோக்கியத்தனங்களுடன் கடந்து விடுகின்றனர். இவர்களின் தனிப்பட்ட பொருளியல் நலன்களுக்கும் ஆதாரமாக இருப்பவை இந்நாட்டின் இயற்கை வளங்களே என்ற அடிப்படை அறிவோ, அக்கறையோ இவர்களுக்கு எழாதவரை, மருத்துவர் பினாயக்சென் போன்றவர்களும் எழுத்தாளர் அருந்ததிராய் போன்றவர்களும், இந்த அரசுகளாலும் இவர்களின் ஊடகங்களாலும் "தேச விரோதிகள்' என்றே அறியப்படுவர். ஆனாலும் சமூகப் பொறுப்புணர்வும், விரிந்த கல்வியறிவும் அர்ப்பணிப்பு எண்ணமும் கொண்ட மிகச்சிறு அளவேயான சிந்தனையாளர்கள், போராளிகள் மற்றும் மக்கள் பிரிவினரின் செயல்பாடுகளால்தான் இந்தியா ஒளிர்கிறதோ – இல்லையோ, இன்னும் இருளில் மூழ்காமல் தப்பிப் பிழைத்திருக்கிறது.

அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் நடுவம் இத்தகைய சமூகப் பொறுப்புணர்வுடன் சட்டீஸ்கர் மீதான விரிவான ஆய்வறிக்கையை வெளியிட்டது. இவ்வறிக்கை இந்தியாவின் நிலக்கரி இருப்பில் 16 சதவிகிதமும், இரும்புத் தாது 10 சதவிகிதமும், சுண்ணாம்புப் பாறைகள் 5 சதவிகிதமும், பாக்சைட் 5 சதவிகிதமும் மற்றும் இந்தியாவின் வைரப் படிமங்களில் மூன்றில் ஒரு பங்கும் சட்டீஸ்கரில் இருப்பதாக மதிப்பிடுகிறது. “சட்டீஸ்கரின் மக்கள் தொகையில் 35 சதவிகிதத்தினர் பழங்குடிகள்; தண்டேவாடாவிலோ இது 80 சதவிகிதம். 40 சதவிகிதம் நிலங்கள் விவசாயப் பயன்பாட்டில் இருந்தன. மீதி நிலப்பரப்பு வனக்காடுகள். 1961 இல் தேசிய கனிம வளர்ச்சிக் கழகம் இங்கு சுரங்கங்களை நிறுவியது. தொடர்ந்து நிறுவப்பட்ட தொழிற்சாலைகளின், சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்பாட்டினால் ஷாங்கினி மற்றும் தாங்கினி ஆகிய ஆறுகள் முற்றிலும் மாசடைந்து விட்டன'' எனவும் இவ்வறிக்கை கவலையுடன் சுட்டிக்காட்டுகிறது. "அறிவியல் மற்றும் தொழிற்நுட்பத்திற்கான மத்தியப் பிரதேசக் கவுன்சில்' 1997 இல் சட்டீஸ்கரில் தனது ஆய்வுகளை மேற்கொண்டு, "இரும்புத்தாது சுரங்கங்களினால் வனப்பகுதிகளின் இயற்கைச் சூழல் சீர்கெட்டு வருவதாக' நடுவண் அரசுக்கு அறிக்கை அளித்தது. மேலும், "சூழலியல் அறக்கட்டளை' என்ற அமைப்பு மத்திய சட்டீஸ்கரின் சுண்ணாம்புத் தாது நிறைந்த பகுதிகளில் உண்மை அறியும் ஆய்வு ஒன்றை சூன், 2010 இல் நடத்தியது. இந்த ஆய்வறிக்கை, “சுண்ணாம்புப் படிமங்களைக் குறி வைத்து துர்க் மற்றும் பிலாஸ்பூர் இடையே 9 பெரிய சிமெண்ட் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் 13 தொழிற்சாலைகள் இப்பகுதியில் நிறுவப்பட இருக்கின்றன.

“கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இமாமி சிமெண்ட் கம்பெனி 1600 கோடி செலவில், 40 லட்சம் டன் சிமெண்ட் உற்பத்தி செய்யக்கூடிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்காக, 406 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்தியுள்ளது. ஜிண்டால் 81 ஹெக்டேர் ஏக்கர் நிலத்திற்கு விண்ணப்பித்துள்ளது. சிறீ சிமெண்ட் நிறுவனம் 52 லட்சம் டன், 30 லட்சம் டன் உற்பத்தி செய்யக்கூடிய இரு ஆலைகளை நிறுவ உள்ளது. மொன்னட் சிமெண்ட் நிறுவனம் 30 லட்சம் டன் உற்பத்திப் பிரிவு ஆலையை ராய்ப்பூரில் 1,400 கோடி செலவில் நிறுவ உள்ளது. நாள்தோறும் சுண்ணாம்புப் பாறைகள் சிமெண்ட் உற்பத்தித் தொழிற்சாலைகளுக்காக வெடிவைத்துத் தகர்க்கப்பட்டு, கன்வேயர் பெல்ட்கள் மூலம் ஆலைகளுக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்த ஆலைகளின் வரவால் இப்பகுதி கடுமையான சூழல் சீர்கேடு அடைந்திருக்கிறது. நேரடியாகவோ, மறைமுகமாகவோ இத்தொழிலகங்களின் வளர்ச்சியில் இப்பகுதி மக்களுக்கு எவ்விதப் பயனும் பங்கும் இல்லை'' என கவலை தெரிவிக்கிறது. இத்தொழிற்சாலைகள் முறையான அனுமதியோடும் பகுதிவாழ் மக்களின் ஒப்புதல் பெற்றும் தொடங்கப்பட்டதாக மாநில அரசு தெரிவித்தது. ஆனால், பத்திரிகையாளர்களும் மக்கள் சார் பணியாளர்களும் இதை வன்மையாக மறுத்துள்ளனர். சட்டீஸ்கரில் ஏறத்தாழ 90,000 ஹெக்டேர் வனப் பகுதிகள் மிகப்பெரிய சுரங்கங்களின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றன.

2006 இல் 100 சதவிகித வெளிநாட்டு மூலதன முதலீட்டுக்கான அனுமதி வழங்கப்பட்ட பிறகே, பல ஆயிரக்கணக்கான பழங்குடி மக்கள் சட்டீஸ்கரில் தங்கள் பாரம்பரிய வாழ்விடங்களிலிருந்து துரத்தி அடிக்கப்பட்டனர். இன்னும் சரியாகச் சொல்வதானால், கடந்த 2001 டிசம்பரில் வேதாந்தாவின் ஸ்டெர்லைட் நிறுவனம் நடுவண் அரசுக்குச் சொந்தமான பாரத் அலுமினியம் கம்பெனியின் (Balco) பங்குகளை வாங்கத் தொடங்கிய போது, பழங்குடி மக்கள் மீதான தாக்குதல்களும் தொடங்கி விட்டன. “பழங்குடி மக்களின் விருப்பங்களுக்கு மாறாக, அவர்களின் நிலங்களை சுரங்கங்களுக்காக கையகப்படுத்தக் கூடாது'' என்ற 1997 இன் ஆந்திரப் பிரதேச உயர்நீதி மன்றத்தின் சமதா (Samata Judgement) தீர்ப்பை சுட்டிக்காட்டி, "பால்கோ'வின் ஊழியர்கள் நிறுவனப் பங்குகள் தனியார் மயப்படுத்தப்படுவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். ஆனால், ஆந்திரப் பிரதேசத்தின் தீர்ப்பு சட்டீஸ்கருக்குப் பொருந்தாது எனவும், அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட இயலாது எனவும் அவ்வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. பைலடிலா மற்றும் பஸ்தார் பகுதிகளில் உள்ளூர் மக்களின் எதிர்ப்பையும் மீறி, தேசிய கனிம வளர்ச்சிக் கழகத்தின் மூலம் குத்தகை உரிமை பெற்று, எஸ்ஸார் நிறுவனம் இரும்புத் தாது சுரங்கங்களை தோண்டியுள்ளது.

மேலும், சூன் 2005 இல் மாநில அரசு 7000 கோடி டன் முதலீட்டிலான இரும்பு உருக்காலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் அது செய்துள்ளது. இதே பகுதியில் டாடாவின் (கூஐகுஇO) இரும்பு மற்றும் எக்கு கம்பெனி 1000 கோடி முதலீட்டில் தனது உருக்காலையை நிறுவ உள்ளது. இதற்காக கையகப்படுத்த முனைந்துள்ள நிலப்பரப்பு ஏறத்தாழ 2000 ஹெக்டேர்கள். இது தவிர, மைன்பூர் பகுதியில் சட்டவிரோதமாக வைரப் படிமங்கள் தோண்டப்பட்டு கடத்தப்படுகின்றன. மாநில அரசோ இதைத் தடுத்து நிறுத்தி, பெரிய அளவில் சுரங்கக் குத்தகைகளைத் தாரை வார்க்க முடிவெடுத்திருப்பதாக அறிவித்துள்ளது. பாதுகாப்புச் சட்டங்கள், நீதிமன்ற முறையீடுகள், வழக்கு விசாரணைகள் அனைத்தும் தங்கள் வாழ்விடங்களுக்காகவும் சூழல் பாதுகாப்பிற்காகவும் போராடும் மக்களை திசை திருப்பும் மாய்மாலங்கள் – பித்தலாட்டங்கள் அன்றி வேறென்ன?

வன நிலங்கள், இயற்கை வளங்கள், மற்றும் நீராதாரங்களை ஆளும் வர்க்கம் எவ்வாறெல்லாம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் கள்ளச் சந்தைப் பேர்வழிகளுக்கும் சட்ட ரீதியாகவே கடத்திச் சென்று தாரை வார்க்கிறது, என்பதற்கு சிறந்ததோர் எடுத்துக்காட்டாக பொலாவரம் இந்திரா சாகர் அணைத்திட்டத்தைக் குறிப்பிடலாம். இத்திட்டம் குறித்து சுருங்கிய அளவில் முன்னரே இக்கட்டுரையில் எழுதப்பட்டிருந்தாலும், சற்றே விரிவாகவும் அறிந்து கொள்வோம். கோதாவரி ஆற்றின் குறுக்கே பொலாவரம் எனும் இடத்தில் 151 அடி உயரத்தில், 194.6 டி.எம்.சி. நீர் தேக்கக் கொள்ளளவுடனும் 960 மெகாவாட் மின் உற்பத்தி செய்யத்தக்க அளவிலும் ஆந்திர மாநில அரசால் இந்த அணைத்திட்டம் நிறைவேற்றப்பட இருக்கிறது. இத் திட்டத்திற்காக 3,731 ஹெக்÷டர் வன நிலத்தை ஒதுக்கி நடுவண் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. "அட்டவணைப் பழங்குடிகள் மற்றும் பிற வன வாழிடத்தவர் (வன உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் – 2006' இன் கீழ் ஆந்திர அரசு அளித்திருக்கும் உத்தரவாதங்களை ஏற்றுக் கொண்டு, சுற்றுச் சூழல் அமைச்சகம் இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

“இவ்வனப்பகுதியில் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் கோயா மற்றும் கொண்டா ரெட்டி பழங்குடியினரின் பண்பாட்டு சூழலியல், வாழிட உரிமைகள் கவனம் பெறாத வகையில் ஆந்திர அரசு நடுவண் அமைச்சகத்தை ஏமாற்றி அனுமதி பெற்றிருக்கிறது'' என யாக்ஷி எனும் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த மதுசூதனன் (13, செப்டம்பர் 2010 "அவுட் லுக்' வார இதழ்) குற்றம் சாட்டுகிறார். “தலித் மற்றும் பழங்குடி மக்களின் கிராம சபைகளில் ஒன்றில் கூட ஒப்புதல் பெறாமல், அனுமதி வழங்கப்பட்டிருக்கும் இத்திட்டம் அம்மக்களின் வாழ்வாதாரங்களை அழிப்பதில்தான் முடியும்'' என்கிறார் மனித உரிமை செயல்பாட்டாளரான ஜீவன்குமார் என்பவர்.

ஆந்திராவின் கம்மம் மாவட்டத்தில் 200 கிராமங்கள், மேற்கு மற்றும் கிழக்கு கோதாவரி மாவட்டங்களின் ஆற்றோரப் பகுதிகள், ஒரிசாவில் விவசாய நிலங்கள் மற்றும் வனக்காடுகள், சட்டீஸ்கரில் சிறு நிலப்பகுதி என 40,138 ஹெக்டேர் நிலம் நீரில் மூழ்கவிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால், இரண்டு லட்சம் மக்கள் இடம் பெயர வேண்டிவரும். இவர்களில் பெரும்பான்மையினர் பழங்குடிகளே. இம்மக்களின் 280 கிராமங்கள், பபிகொண்டா வனவிலங்கு சரணாலயம் ஆகியன மூழ்கவிருக்கும் நிலப்பரப்பில் உள்ளடங்கும். ரூர்கியில் இயங்கி வரும் தேசிய நீரியல் நிறுவனத்தின் ஆய்வறிக்கையை சுட்டிக்காட்டி, நீர்ப்பாசன மற்றும் சுற்றுச்சூழல் நிபுணர் பேராசிரியர் சிவாஜிராவ், “மழை வெள்ளக் காலங்களில் 20 முதல் 30 சதவிகிதம் வரை நீர்மட்டம் உயரும் ஆபத்து இருப்பதையும், பருவகால மாற்றங்கள் மற்றும் உலகம் வெப்பமயமாதல் போன்ற அம்சங்களையும் ஆந்திர அரசு கணக்கில் கொள்ளத் தவறியுள்ளது. இந்த வெள்ள அபாயச் சூழல், ஒரு குண்டு வெடிப்பை ஒத்த விளைவுகளை பிரதிபலிப்பதாக இருக்கும்'' என கவலை தெரிவிக்கிறார்.

கடந்த அக்டோபர் 2009 இல் கிருஷ்ணா நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் மட்டுமே, கர்னூல் மாவட்டம் முழுவதும் நீண்டநாட்களாக நீரில் அமிழ்ந்து கிடந்தது. பொலாவரம் அணையில் தேக்கப்படும் நீர் கிருஷ்ணா நதிக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. வெள்ளக் காலங்களில் கோதாவரியிலிருந்து பொலாவரம் அணையில் திறந்து விடப்படும் உபரி நீரையும் கிருஷ்ணா நதியே உள்ளடக்க வேண்டும் எனவும் சந்தேகங்கள் வலுக்கின்றன. அது மட்டுமின்றி, “உச்சகட்ட வெள்ளப் போக்கு நேரத்தில், களிமண்ணும் மணலும் கலந்த கோதாவரி படுகையில், அதிலும் ஆற்றின் முடிவுறு பகுதியில் கட்டப்படவிருக்கும் அணையின் கான்கிரீட் தூண்களின் உறுதித் தன்மைக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது'' என ஆசிய நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான அய்.நா. ஆலோசகர் பேராசிரியர் அனுமந்த்ராவ் தெரிவிக்கிறார்.

tribe_woman_267ஆந்திர நீர்ப்பாசனத் துறை அமைச்சரோ, “உலக நீர்வள அமைப்பிடம் ஆந்திர அரசு ஆலோசனைகளைப் பெற்றுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மேதா பட்கரை அழைத்து, இடம்பெயரும் மக்களுக்கான நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத் திட்டங்கள் குறித்து விளக்கியுள்ளோம். அவரும் இதை ஒப்புக் கொண்டுள்ளார். ஒரிசா மற்றும் ஆந்திராவில் பாதிப்புக்குள்ளாகும் மக்களுக்கு 600 கோடி ரூபாயில் மறுவாழ்வுத் திட்டங்கள் உருவாக்கப்படவிருக்கின்றன'' என, இத்திட்டத்திற்கு எதிரான அத்தனை கூற்றுகளையும் புறந்தள்ளி விட்டார் ("அவுட்லுக்' வார இதழ், 13 செப்டம்பர், 2010).

அரசியல் ரீதியாக இத்திட்டம் இன்னுமொரு பிரச்சனையை உருவாக்கியுள்ளது. கோதாவரியிலிருந்து கிருஷ்ணா நதிக்கு கொண்டு வரப்படும் இந்த நீர்வளத்தால், பயனடையப் போகும் கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்கள், தெலங்கானா தவிர்த்த ஆந்திரப் பிரதேசப் பகுதியில் இருக்கின்றன. “தெலங்கானா தனி மாநிலம் உருவாக்கப்படுமெனில், ஆந்திரா – ராயலசீமா பகுதிக்கு மட்டுமே இத்திட்டம் பயனளிக்கும். அது மட்டுமல்லாமல் தெலங்கானா பகுதிக்குத் தேவையான நீர்வளத்தையும் இது அபகரிப்பதாக இருக்கும்'' என்கிறார், தெலங்கானா கூட்டு நடவடிக்கை குழுவின் தலைவரான கோதண்டராம்.

எல்லாவற்றிற்கும் மேலாக, விஜயநகரம் மற்றும் விசாகப்பட்டிணத்தில் நிறுவப்படவிருக்கும் இரண்டு பாக்சைட் சுரங்கங்களின் தண்ணீர் தேவையை நிறைவு செய்யும் நோக்கும் இத்திட்டத்தில் மறைந்துள்ளது. விஜயநகரத்தில் பொடவரா எனுமிடத்தில் அமையப்போகும் ஜிண்டால் அலுமினிய சுத்திகரிப்பு ஆலையும், விசாகப்பட்டிணத்தில் மாகவரிபாளம் எனுமிடத்தில் அமையப்போகும் அன்ராக் அலு மினிய சுத்திகரிப்பு ஆலையும் 1 கோடியே 85 லட்சம் கேலன்கள் தண்ணீரை, நாள் ஒன்றுக்கு இந்நீர்த் திட்டத்திலிருந்து உறிஞ்சிக் கொள்ளப் போகின்றன. இது, ஆந்திராவின் இரண்டாவது பெரிய நகரமான விசாகப்பட்டிணத்தின் அரைநாள் பயன்பாட்டுக்கான தண்ணீர் அளவு என்பது குறிப்பிடத்தக்கது.

“ஆந்திராவின் கடற்கரை மாவட்டங்களுக்கு திருப்பி விடப்படும் இந்நீர்த் திட்டத்தின் உண்மையான நோக்கம், இப்பகுதியில் அமையப்போகும் தொழிற்சாலைகளை மய்யப்படுத்தியதாகவே இருக்கிறது'' என்கிறார்கள், ஆந்திராவில் ஆளும் வர்க்கத்தின் நடவடிக்கைகளை நன்கு அறிந்திருப்பவர்கள். இத்திட்டத்தின் கட்டுமான வேலைகள் தொடங்கும் முன்பாகவே, பழங்குடி மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் அரசு இறங்கிவிட்டது. எல்லாவற்றையும்விட முதன்மையானதும் இலகுவானதுமான வேலை இதுவாகத்தானே இருக்க முடியும். "பழங்குடியினர் மேம்பாட்டு ஆணையம்' என்ற அரசு சார் அமைப்பு, வனப்பகுதிகளில் பாதிப்புக்குள்ளாகும் மக்களிடம் அப் பகுதிகளிலிருந்து வெளியேறி, சமவெளிப்பகுதிகளிலும் அரசு ஒதுக்கித் தரும் இடங்களிலும் பிழைத்துக் கொள்ள இப்போதே நிர்பந்திக்கிறது.

"ஆதிவாசி சங்சேமா பரிஷத்' என்ற அமைப்பு, “ஆதிவாசிகளை அவர்கள் வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றினால், அழிந்துபோவதைத் தவிர வேறு வழியில்லை. அரசு கைநீட்டும் இடங்களில் அவர்களுக்கான வாழ்வாதாரங்கள் எதுவும் இல்லை. அங்கு அவர்கள் பிச்சைக்காரர்களாக மட்டுமே வாழ முடியும்'' என கடுமையாக தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.

முதல் அய்ந்தாண்டுத் திட்ட காலத்தில் நதிகளும் அவற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணைகளும் வேளாண்மை, குடிநீர் மற்றும் மக்களின் ஏனைய பண்பாட்டு அம்சங்களையே பெரிதும் உள்ளடக்கியிருந்தது. ஆனால், இன்றைக்கோ ஓர் அணை கட்டப்படுகிறது எனில், ஒரு நெடுஞ்சாலை விரிவுபடுத்தப்படுகிறது எனில், பாலங்கள் – பூங்காக்கள் உருவாக்கப்படுகிறது எனில், ஒரு மருத்துவமனை – ஒரு கல்வி நிறுவனம் தொடங்கப்படுகிறது என்றாலும்கூட, அவற்றில் செய்யப்படும் முதலீடு – அக்கட்டுமானங்களுக்கான நோக்கம் – அத்திட்டங்களின் பின்னுள்ள பொருளியல் நலன்கள் ஆகிய அனைத்தும் சந்தேகத்திற்குரியனவே. மக்களின் பயன்பாட்டுக்கானவை என அறிவிக்கப்படும் இவற்றின் பின்னணியில் மலிந்து கிடக்கின்றன ஊழலும் அரசியல் சதித் திட்டங்களும். பன்னாட்டு முதலாளிகளும், உள்ளூர் வணிகத் தரகர்களும், அரசியல் குண்டர்களும் கூட்டிணைந்து "மக்கள் நலத் திட்டங்கள்' என்ற பதாகையின் கீழ் செழித்து வளர்கின்றனர். பொலாவரம் அணைக்கட்டுத் திட்டமும்கூட, அத்தகைய ஒன்றே என்பதைப் புரிந்து கொள்ள பலருக்கும் இன்னும் காலம் தேவைப்படலாம். ஆனால், அதற்குள் இந்தியாவின் தொல்குடி மக்களுக்கோ ஒண்டுவதற்கு ஒரு மாட்டுத் தொழுவமும் இருக்காது.

சட்டீஸ்கரில் உள்ள இந்திராவதி ஆற்றின் வளம் கொழிக்கும் பசுமை நிறைந்த, துராகவான் நிலப் பகுதியிலிருந்து 12,000 க்கும் மேற்பட்ட தொல்குடி மக்களை மாநில அரசு இடம் பெயர்க்கத் திட்டமிட்டுள்ளது. நடுத்தர வயதுள்ள மாடியா எனும் விவசாயியின் 35 ஏக்கர் பண்ணைத் தோட்டம், டாடாவின் இரும்பு உருக்காலைக்காக பலவந்தமாக விலை பேசப்பட்டுள்ளது. “இந்த நிலத்திற்குப் பதிலாகத் தரப்படும் பணத்தை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வது?'' என்று கேள்வியெழுப்புகிறார், நிலத்தைப் பறிகொடுத்த அவ்விவசாயி. காலனிய ஆதிக்கவாதிகளிடமிருந்து தருவிக்கப்பட்ட சட்டதிட்டங்கள் இப்பழங்குடியினரின் வாழ்விடங்களை, விளைநிலங்களை – உரிமைகளை ஏன் அபகரித்துக் கொள்கின்றன என்பது குறித்து நாம் அறிந்து கொண்டோம். எப்படி அபகரித்துக் கொள்கின்றன என்பதற்கும் ஒரு அத்தியாயம் எழுத வேண்டுமல்லவா?

பீகார், ஜார்கண்ட், ஒரிசா, சட்டீஸ்கர் மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் பெயரளவில் பேசப்படும் – பழங்குடிகளின் தன்னாட்சி அதிகாரத்தை அங்கீகரிக்கும் – பஞ்சாயத்து ராஜ் (பழங்குடியினப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்ட) சட்டம் (1996), அரசமைப்புச் சட்டத்தின் முற்போக்கான ஒரு துண்டுப்பகுதி எனலாம். கடந்த 2006 இல் நடுவண் பஞ்சாயத்து ராஜ் அமைச்சராக மணி சங்கர் (அய்யர்) பொறுப்பிலிருந்த போது, பிரதமர் அலுவலகத்தின் வழிகாட்டுதலின்படி, டாக்டர். வர்கீஸ் குரியனின் தலைமையில் அரசு ஆதரவில் இயங்கும் தன்னார்வ அமைப்பான "கிராமப்புற மேலாண்மை நிறுவனம்' ஆனந்த் (IRMA)துடன் பஞ்சாயத்து ராஜ் சட்ட நடைமுறை குறித்து ஆய்வறிக்கை தயாரிப்பதற்கான ஓர் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அய்.ஆர்.எம்.ஏ. நிறுவனம், 2008 இல் தனது அறிக்கையை தயாரித்து முடித்தது. அந்த அறிக்கை திருப்தியளிக்க வில்லையென சொல்லப்பட்டு, பஞ்சாயத்து ராஜ் (பழங்குடியினர் விரிவு) சட்டத்தை உள்ளடக்கி மறு ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் 24, 2010 அன்று பஞ்சாயத்து ராஜ் நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மன்மோகன் சிங் அந்த அறிக்கையை வெளியிட்டார்.

பிரச்சனை என்னவென்றால், "பஞ்சாயத்து ராஜ் (பழங்குடியினர் விரிவு) சட்டம், இடதுசாரி தீவிரவாதம் மற்றும் அரசு நிர்வாகம், என்ற தலைப்பிலான 45 பக்க அத்தியாயம் இவ்வறிக்கையிலிருந்து நீக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டதே. இந்த அத்தியாயம் நீக்கம் செய்யப்பட்டிருப்பதை "தெகல்கா' வார இதழ் (10 சூலை, 2010) அம்பலப்படுத்தியது. இப்பகுதி "தெகல்கா' இணையதளத்திலும் (www.tehelka.com) வெளியிடப்பட்டது. மாவோயிஸ்டுகளின் பிடியிலுள்ள தண்டேவாடா வனப் பகுதிகளைச் சுட்டிக்காட்டி, “பஞ்சாயத்து ராஜ் (பழங்குடியினர் விரிவு) சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய இப்பகுதிகள், பாதுகாப்பற்ற நிலையிலும் சட்ட விதிகள் முறிக்கப்பட்ட நிலையிலும் அரசியல் அமைப்பின் வரையறைக்குள் நீதியைத் தேடி நிற்கின்றன'' என, அவ் ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. நீக்கப்பட்ட அத்தியாயத்தின் "இந்தியப் பழங்குடியின மாவட்டங்களில் எதிர்நோக்க வேண்டிய கவனங்களும் சவால்களும், என்ற இத்துணைத் தலைப்பு, 76 மாவட்டங்கள் தீவிரவாதத்தின் பாதிப்புக்குள்ளான மாவட்டங்கள் எனவும், அவற்றில் 32 மாவட்டங்கள் பஞ்சாயத்து ராஜ் (பழங்குடியினர் விரிவு) சட்டப் பகுதிகள் எனவும் வகைப்படுத்தியுள்ளது. மேலும், "தவறான நிர்வாகம், உள்நாட்டு வன்முறை மற்றும் விரோத மனப்பான்மை' என பழங்குடி மக்களுக்கு எதிராக நடுவண் அரசு, மாநில அரசுகள் மற்றும் காவல் படைகள் ஆகியன செயல்படுவதையும் சுட்டிக் காட்டுகிறது.

– அடுத்த இதழில் 

Pin It