மதம் என்பது அதீத சக்தியிலிருந்து தோன்றியது அல்லது மந்திரத்திலேயே அது அக்கறை கொண்டுள்ளது என்று கருதுவதைப் போன்ற பெரிய தவறு வேறெதுவும் இருக்க முடியாது. பழங்குடிச் சமூகம் மந்திரத்தைக் கடைப்பிடிக்கிறது, அமானுஷ்ய சக்தி (பேய், பிசாசு) என்பதில் நம்பிக்கை வைக்கிறது, குலமரபுச் சின்னங்களை வணங்குகிறது என்பது உண்மையே. ஆனால் இவைதான் மதம் என்றோ, மதத்தின் ஆதாரமாக அமைந்துள்ளன என்றோ எண்ணுவது தவறான தாகும். இத்தகைய கண்ணோட்டத்தைக் கொள்வதென்பது, தற்செயலான ஒன்றை கோட்பாடு என்ற நிலைக்கு உயர்த்துவதாகும்.

பழங்குடி மதத்தின் முதன்மை அம்சம் வாழ்க்கை, மரணம், பிறப்பு, திருமணம் போன்ற மனித வாழ்வின் அடிப்படை அம்சங்களாகும். மந்திர தந்திரம், அமானுஷ்ய சக்தி, குலமரபுச் சின்னம் போன்றவை இறுதியானவை அல்ல. அவை வழிமுறை மட்டுமே. வாழ்க்கை மற்றும் அதைப் பாதுகாப்பது என்பவை மட்டுமே முடிவானவையாகும்.

பழங்குடிச் சமூகமானது மந்திர தந்திரம், அமானுஷ்ய சக்தி போன்றவற்றை கடைப்பிடித்து அதனுடைய நலன் கருதி செய்யப்பட்டதல்ல. ஆனால் வாழ்வைப் பாதுகாக்கவும், தீயசக்திகள் வாழ்விற்கு தீங்கிழைத்துவிடாமல் அவற்றை விரட்டுவதற்காகவும்தான். அறுவடை, பஞ்சம் போன்றவற்றைத் தொடர்ந்து மதச்சடங்குகள் போன்றவை நடத்தப்படுவது ஏன்? பழங்குடிச் சமூகத்திற்கு தந்திரம், அமானுஷ்ய சக்தி, குலமரபுச் சின்னங்கள் ஏன் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றன? அவை அனைத்தும் வாழ்க்கையைப் பாதுகாப்பதை பாதிக்கின்றன என்பதே ஒரே விடையாகும். வாழ்க்கைப் போக்கும், அதைப் பாது காப்பதுமே முக்கிய நோக்கமாக அமைகின்றன.

வாழ்க்கை என்பதும் அதைப் பாதுகாப்பது என்பதும்தான் பழங்குடிச் சமூகத்திலிருந்த மதத்தின் முக்கிய அம்சமும், மய்யக் கருத்துமாகும். மந்திர தந்திரம் இருந்த இடத்தை இன்று கடவுள் எடுத்துக் கொண்டதால் அது, மதத்தில் கடவுளுக்குள்ள இடமானது வாழ்வைப் பாதுகாப்பதற்கான வழி என்ற அம்சத்தையும், மதத்தின் குறிக்கோள் மற்றும் அதற்காகவே அர்ப்பணித்துக் கொள்வது என்ற அம்சத்தையும் மாற்றி விடாது. மதத்தை தனிநபருடைய தனிப்பட்ட விஷயம் என்றோ, தனிநபர் மட்டுமே தொடர்புடையது என்றோ கருதுவது தவறானதாகும் என்ற அம்சத்தைக் குறித்து கவனத்தை ஈர்ப்பது அவசியம். முன் சொன்ன விவாதங்களும் இதற்கு முழு ஆதரவு அளிக்கின்றன. சொல்லப்போனால், பின்னால் குறிப்பிடுவது போல மதம் என்பது தனிநபருடைய, தனிப்பட்ட, தனிநபர் மட்டுமே தொடர்புடையதாக மட்டுமே இருந்தால், அது ஆபத்தாகக் கருதப்படாவிட்டாலும் உண்மையிலேயே கெடுதல் செய்வதாகும்.

மதம் என்பது, தனிநபருடைய இயல்பான தன்மையில் உள்ளடங்கியுள்ள சிறப்பான மத உள்ளுணர்வை மலரச் செய்வதுதான் என்று கருதுவதும் அதேபோன்று தவறானதுதான். மதம் என்பது மொழியைப் போன்று சமூகத்தன்மை வாய்ந்ததாகும் என்பதுதான் சரியான கண்ணோட்டமாகும். ஏனென்றால், இவ்விரண்டுமே சமூக வாழ்க்கைக்கு இன்றியமையாதவை. தனிநபர் அதைப் பெற்றிருக்க வேண்டும்; அதில்லாமல் அவன் சமூக வாழ்வில் பங்கேற்க முடியாது. மதம் என்பது முக்கியமாக சமூகம் தொடர்புடையதாக இருப்பதால், அது சமூகத்தன்மை கொண்டது என்று சொல்லும்போது இயல்பாகவே ஒரு கேள்வி கேட்கத் தோன்றும். மதத்தின் நோக்கம் என்ன, அதன் செயல்பாடு என்ன என்ற கேள்வி எழும்...

முன்சொன்ன விவாதமானது, மதம் என்பது ஒரு சமூக அம்சம் என்பதை சுட்டிக்காட்டுவதற்காக நடத்தப்பட்ட போதிலும், மதம் என்பது ஒரு திட்டவட்டமான சமூக நோக்கத்தையும், அதே போன்று திட்டவட்டமான சமூக செயல்பாட்டையும் கொண்டுள்ளது. ஒரு நபர் ஒரு மதத்தை ஏற்றுக் கொள்வதாக இருந்தால், அந்த மதம் ஏற்கனவே ஏற்றுக்கொண்ட நோக்கங்களை எந்த அளவிற்கு நிறைவேற்றியுள்ளது என்று கேள்வி கேட்கும் உரிமை முறையானது என்று கூறுகிறது. இக்காரணத்தினால்தான் கிறித்துவ மதத்தைவிட மெய்விளக்கக் கோட்பாடு என்ற கருத்து உயர்வானது என்று அதை ஏற்றுக் கொள்வதற்கு முன்னால் அந்தக் கருத்தைக் கொண்டிருந்தவர்களிடம் பெல்போர்டு பிரபு கேட்ட கேள்வி நியாயமானது. அவர் சுருக்கென்று இவ்வாறு கேட்டார் :

‘அன்றாட வாழ்க்கைத் தேவைகளுக்காக அல்லல்பட்டு போராடிக் கொண்டிருக்கின்ற தெளிவற்ற மக்கள் கூட்டத்திற்கு மெய்விளக்கக் கோட்பாடு என்ன சொல்லவிருக்கிறது? ‘மனித சமூகம்' என்ற மகத்தான நாடகத்தில் அவர்களுக்குரிய பங்கை யோசிப்பதற்குக்கூட ஓய்வோ, விருப்பமோ இல்லாத, ஆனால் தன்னுடைய நலனையும், முக்கியத்துவத்தையும் காண வியப்படையும் அவர்களுக்கு என்ன சொல்லவிருக்கிறது? இவ்வுலகை உருவாக்கிய அவனது பார்வையில் எந்த மதிப்பையும் பெறமுடியாத அல்லது இந்த உலகியல் அமைப்புமுறை ஒன்றுமில்லாததாக நொறுங்கி விழுந்த பிறகு, தனது செயற்பாட்டால் எத்தகைய விளைவுகளையும் ஏற்படுத்த இயலாத அற்பமான எந்த மனித உயிருமே இல்லை என்று அது அவர்களுக்கு உத்தரவாதம் அளிக்குமா? இழப்பு ஏற்பட்டவர்களுக்கு அது ஆறுதல் கூறுமா? பலவீனமானவர்களுக்கு பலம் தருமா? பாவச் செயலைப் புரிந்தோருக்கு மன்னிப்பு தருமா? கடுஞ்சுமையால் களைத்துப் போனவர்களுக்கு ஓய்வு தருமா?''

(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 5, பக்கம் : 408)

Pin It