“முதலில், பொதுவான இந்தியப் பண்பாடு என்ற ஒன்று ஒருபோதும் இருந்ததில்லை என்பதையும் வரலாற்று ரீதியாக பார்ப்பனிய இந்தியா, பவுத்த இந்தியா, இந்து இந்தியா என மூன்று இந்தியாக்கள் – ஒவ்வொன்றும் தனக்கென சொந்தமான தனிப்பண்பாடுகளைக் கொண்டிருந்தன என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.'' – டாக்டர் அம்பேத்கர், ஆங்கில நூல் தொகுதி : 3, பக்கம் : 275
 
இந்தியாவில் 7.5 லட்சம் தலித் குடும்பங்கள் மனித மலத்தைக் கையால் அள்ளும் வேலையை செய்ய இந்து சமூகத்தாலும் அரசாலும் நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். பீகாரில் உள்ள லட்சுமண்பூரில் 58 தலித்துகள் கொல்லப்பட்ட வழக்கில் 16 ஆண்டுகள் கழித்து குற்றவாளிகள் அனைவரும் உயர் நீதிமன்றத்தால் குற்றமற்றவர்களாக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரத்தை அடுத்த முசரவாக்கத்தைச் சேர்ந்த தலித் கிறித்துவரான அன்னம்மாள் தமது நூறாவது வயதில் இறந்தார். ஒரு நூற்றாண்டுக்கு முன்பு அவர் பிறக்கும்போது இருந்த அதே ஜாதி இழிவும் கொடுமையும் அப்படியே தொடர்கிறது. அவர் உடலை பொது சுடுகாட்டில் புதைக்க முடியாமல் சாலையில் கிடத்தி கடும் போராட்டத்திற்குப் பிறகே அடக்கம் செய்யப்பட்டது ("தி இந்து' தமிழ் 15.12.2013). 
 
தருமபுரி சாதி வெறியாட்டம் கடும் கண்டனங்களை சந்தித்த பிறகும் அதே சாதியினர் திண்டுக்கல் நடுப்பட்டி மற்றும் காரியாம்பட்டியில் தலித் மக்களுக்கு எதிராக சாதி வெறியாட்டம் போட்டுள்ளனர். சாதி மறுப்பு வாழ்விணையர்களைக் கொல்லும் "கவுரவக் கொலைகாரர்'களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன. தலித் மக்களை இழிவுபடுத்தி சமூக, அரசியல் ரீதியாக அவர்களை தனிமைப்படுத்தும் தலித் அல்லாதோர் பேரவையும் ஜாதி சங்கங்களும் தங்குதடையின்றி செயல்பட்டு வருகின்றன. வாக்களிக்கும் மக்களுக்கு பணம் / அன்பளிப்பு தரப்படுவதைத் தடுத்து நிறுத்திவிட்டதாகப் பீற்றிக் கொள்ளும் தேர்தல் ஆணையத்திற்கும் நீதிமன்றத்திற்கும் எதிர்வரும் தேர்தலில் ஜாதிக் கட்சிகளின் பங்கேற்பைத் தடை செய்யும் எண்ணம்கூட இல்லை.
 
சாதி இந்து சமூகத்தின் இத்தகைய கொடுஞ்சூழலுக்கிடையில்தான் தலித் இலக்கியத்திற்கான தேவை முளைக்கிறது. தலித்துகள் மீதான இழிவை இதிகாசங்களும் புனித நூல்களும் செவ்விலக்கியங்களும்தான் சுமத்துகின்றன. அம்மக்கள் மீதான இழிவை கற்பித்த பிறகு அவர்கள் மீது வன்கொடுமைகளை ஏவுவது எளிதாகி விடுகிறது. மநு தொடங்கி, இன்றைய பாடநூல்கள் வரை இந்த அநீதி தொடர்கிறது. ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான வன்கொடுமைகளுக்கு புலே முதல் அம்பேத்கர், பெரியார்வரை எவரும் எதிர்வினையாற்றவில்லை; அதற்கு பதில் அவர்கள் இந்து கருத்து முதல்வாதத்தை முறியடிக்க ஆயுதப் புரட்சியைப் புறந்தள்ளி அறிவுப் புரட்சிக்கு வித்திட்டனர். 
 
அம்பேத்கர் குறிப்பிட்டுள்ள "பார்ப்பனிய இந்தியா' (வர்ணாசிரம தர்மம்) சமத்துவமின்மையை வலியுறுத்தும் பண்பாடு என்பதும் "பவுத்த இந்தியா' (தம்மம்; சமதர்மம் அல்ல) அதற்கு எதிரான சமத்துவத்தை வலியுறுத்தும் பண்பாடு என்பதும் தெளிவு. எல்லாருக்கும் "இந்து' நாமகரணம் சூட்டியுள்ள "இந்து இந்தியா' தான் மிகவும் ஆபத்தானது. ஏனெனில், பார்ப்பனியம் அதில் ஒளிந்து கொண்டிருக்கிறது. சேரிகள் சூறையாடப்படுவதற்கும் மதவெறி உழைக்கும் மக்களை கொல்வதற்கும் இதுதான் வழிவகுக்கிறது. சீழ் வடியும் சாதிய இந்து சமூக அமைப்பை அழித்தொழிக்கும் மருந்தாக தலித் இலக்கியம் இருக்க வேண்டும். தலித் இலக்கியத்தின் ஒவ்வொரு சொல்லும் இந்து இலக்கியத்தை வேரறுத்து சமத்துவத்தை சமைப்பதாக இருக்க வேண்டும். 
 
தலித் அல்லாதவர் எழுதினால் அது தலித் இலக்கியமாகாதா? என்றொரு கேள்வி நீண்ட நாட்களாக முன் வைக்கப்படுகிறது. ஜாதிய சமூகத்தை ஜனநாயகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ள தலித்துகள் இதை மறுக்கவில்லை. மேலும், தலித் இலக்கியம் ஜாதி இலக்கியமும் அல்ல. ஜனநாயகத்தில் பிரதிநிதித்துவம் தான் அடிப்படை. ஜாதி இருக்கும் வரை பிரதிநிதித்துவ கோட்பாடான இடஒதுக்கீடு இருக்க வேண்டும்; இடஒதுக்கீடு இருப்பதால் ஜாதி உயிர்வாழவில்லை. மாறாக, ஜாதி உயிர்வாழ்வதால்தான் பிரதிநிதித்துவம் அவசியமாகிறது. ஒரு தலித் அல்லாதவர் எவ்வளவு ஏழையாக இருந்தாலும். அவர் தலித் பிரதிநிதித்துவத்தைப் பெற இயலாது என்பது அவருக்கு இழைக்கப்படும் அநீதியும் அல்ல. இந்தியாவில் ஒருவர் மதம் மாறலாம், வர்க்கம் மாறலாம், ஆனால் ஜாதி மட்டும் மாற முடியாது என்ற அமைப்பை கேள்வி கேட்காமல், ஜாதியை பிறப்பு மட்டுமே தீர்மானிக்க அனுமதிக்கும் நாள் வரை இக்கேள்வியே அர்த்தமற்றதாகிவிடுகிறது. 
Pin It