மரிச்ஜாப்பிக்கு வந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தீண்டத்தகாத அகதிகள் அளித்த அறிக்கை

மார்ச் 22, 1979

பெறுநர்

சிறீபிரசன்னபாய் மேத்தா,

வீடற்ற மரிச்ஜாப்பி அகதிகள் மீது காவல் துறை நடத்திய துப்பாக்கிச் சூடு, மனிதாபிமானமற்ற துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை ஆணையத்தின் தலைவர்

மதிப்பிற்குரிய அய்யா,

முப்பதாயிரம் மரிச்ஜாப்பி அகதிகளின் சார்பில், பின்வரும் செய்திகளை தங்களின் கனிவான பார்வைக்கு வைக்கிறோம். கடந்த 12 – 15 ஆண்டுகளாக, நாங்கள் சராசரி மனித வாழ்நிலைக்கு குறைவான முறையில் – மணா பகுதிகளில் அமைக்கப்பட்ட பல்வேறு அகதி முகாம்களில், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளின் கண்காணிப்பில் வாழ நிர்பந்திக்கப்பட்டுள்ளோம். அகதி முகாம் அதிகாரிகள், மாநில காவல் துறை, துணை ராணுவப் படைகள் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினராலும் நாங்கள் கடுமையாகத் தாக்கப்பட்டோம்; கொடூரமாகத் துன்புறுத்தப்பட்டோம். காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டினால் பலரை இழந்தோம். எங்களது துயரங்களுக்கும், நீண்டநாள் கோரிக்கைகளுக்கும் தீர்வு கிடைக்கும் வகையில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறோம்.

marichjhapi_237ஆனால் நாளுக்கு நாள், நாங்கள் கைது செய்யப்படுவது தொடர்கிறது. எங்களது இளம் பெண்கள் உள்ளூர் அதிகாரிகள், துணை ராணுவப்படை மற்றும் காவல் துறையினரால் பாலியல் வன்முறைகளுக்கு ஆளாகியுள்ளனர். எங்கள் மீதான ஒடுக்குமுறையை அவர்கள் அனுமதித்தார்கள். இப்போதுகூட, ஏராளமான அகதிகள் சிறையில் உள்ளனர்; தண்டகாரண்யா பகுதி நீதிமன்றங்களில் பலர் மீது வழக்குகள் உள்ளன.

மறுவாழ்வு முகாம்களில் – அது தண்டகாரண்யா அல்லது வேறு சில மாநிலங்களில் அமைக்கப்பட்டதாக இருந்தாலும் – நாங்கள் ஆடு, மாடுகளைப் போல – உயிர் வாழ்வதற்கு சிறிது பாதுகாப்பே உள்ள கொட்டடிகளில் வாழ வேண்டியிருக்கிறது.

தண்டகாரண்யாவில் –

1. 4 அல்லது 5 கிலோ மீட்டர் தொலைவிற்குள் 3 முதல் 5 ஏக்கர் அளவிலான நிலங்கள், 4 அல்லது 5 குடியிருப்பு மனைகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு அகதி குடும்பத்திற்கும் வழங்கப்பட்டன. அந்த நிலங்கள் விவசாயத்திற்கு பயனற்றவையாகவும், நீர்ப்பாசன வசதியின்றியும் இருந்தன.

2. அகதிகள் மறுவாழ்வு முகாம்களிலிருந்து அரசு அலுவலகங்கள், சந்தைகள், மருத்துவமனைகள், ரேஷன் கடைகள் 15 முதல் 20 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தன.

3. தானிய வகைகள், ரேஷன் பொருட்கள், மருந்து பொருட்கள் தொடர்ச்சியாக வழங்கப்படவில்லை. புதிதாக அங்கு குடியேறியவர்களுக்கு இது பெரும் துன்பத்தைக் கொடுத்தது. எங்களுக்கு வழங்கப்பட்ட குறைந்தளவு நிவாரண உதவித் தொகையும் அந்த துன்பத்தை அதிகப்படுத்துவதாக இருந்தது.

4. உள்ளூர் அதிகாரிகளின் மோசமான நடவடிக்கைகளும், குறைந்தளவிலான பாதுகாப்பும், பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் தாக்குதல்களும் மறுவாழ்வு முகாம்களிலிருந்து 1978 பிப்ரவரி முதல் எங்களை வெளியேறச் செய்தன. பலமுறை டெல்லியில் முறையிட்டும், எங்களது துயரங்களுக்கும், கோரிக்கைகளுக்கும் எந்தத் தீர்வும் கிடைக்காததாலேயே அந்த முடிவை எடுக்க நேர்ந்தது.

பிரிவினைக் காலத்திலிருந்து கிழக்கு வங்காள அகதிகளை சுந்தர்பான் பகுதிகளில் மீள்குடியேற்றம் செய்ய இடதுசாரிகள் முன்னணி கோரி வந்தது. மேற்கு வங்காளத்திற்கு வெளியே – காவல் துறையின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக – இடதுசாரிகள் நடத்திய கூட்டங்களில், அகதிகளை ஆற்றுப்படுத்தும் விதமாக – அவர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால், சுந்தர்பான் பகுதிகளில் குடியேற்றுவதாகக் கூறினார்கள். தற்போதைய முதல்வர் ஜோதிபாசுவின் அறிவுறுத்தலின் பேரில், தற்போது மாநில அமைச்சராக இருக்கும் திரு. ராம் சாட்டர்ஜி அவர்களும், பார்வர்ட் பிளாக் கட்சியின் செயலாளர் திரு. அசோக் கோஷ் அவர்களும் பல மாநிலங்களில் இருந்த அகதிகளின் நிலையை நேரில் கண்டறிந்தனர். நல்ல முறையில் அவர்களை மீள்குடியேற்றுவதாக உறுதியளித்தனர்.

அதன் பேரிலேயே தண்டகாரண்யாவிலிருந்து வெளியேறிய அகதிகள் ஹசனாபாத்தில் கூடி, அகதிகள் தொடர்பான அரசின் கொள்கைகளையும் திட்டங்களையும் தெரிந்து கொள்வதற்காகவும், வாழ்வதற்கும் வேலை செய்தவற்கும் வழி தேடி – அங்கு இரண்டு மாதங்கள் முகாமிட்டு வாழ்ந்தோம். அதன் பின்னர் குமிர்மாரியில் 15 – 20 நாட்கள் தங்கியிருந்தும் உள்ளூர் நிர்வாகத்திடமிருந்து எந்த தகவலும் வராத நிலையில், நாங்கள் பாக்னா, மரிச்ஜாப்பி பகுதிகளில் நுழைந்தோம்.

அங்கு புதிய வாழ்க்கையைத் தொடங்கினோம். எங்களுக்கு தேவையான வீடு, பள்ளிக்கூடங்கள், கடைகள், சாலைகள், மருத்துவமனைகள், குழாய் கிணறுகளை நாங்களே அமைத்துக் கொண்டோம். எங்களது வருமானத்திற்கு தேவையான வழிமுறைகளையும் நாங்களே கண்டறிந்தோம். பீடித் தொழிற்சாலை, அடுமனைகள், மரவேலைக் கூடங்கள் மற்றும் நெசவுக் கூடங்களை அமைத்தோம். 150 மைல் தொலைவுக்கு சுமார் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தடுப்பு அணைகள் கட்டி, ஆண்டுக்கு 20 கோடி ரூபாய் வருமானம் தரக்கூடிய மீன்பிடித் தொழில் செய்யத் தொடங்கினோம். இது, எங்களை சொந்தக் காலில் நிற்க செய்திருக்கும். ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் உப்புத் தண்ணீர் உள்ளே பாயாதவாறு தடுத்து –மழைத் தண்ணீரால் கழுவப்பட்டால், இந்த நிலங்கள் ஏராளமான பயிர் வகைகளும், காய்கறிகளும் விளையக்கூடியதாக மாறும்.

மரிச்ஜாப்பி நிலங்களை 6 ஆயிரம் குடும்பங்களுக்கிடையே பகிர்ந்து கொண்டு – குடியிருப்புகள், கிராமங்களாக வாழத் தொடங்கினோம். கூட்டுத் திட்டத்தில் ஏறக்குறைய 1000 குடும்பங்கள் தங்களுக்கான வீடுகளைக் கட்டிக் கொண்டு வாழ்ந்து வந்தனர்.

மரிச்ஜாப்பியில் குடியேறி அய்ந்து மாதங்கள் முடிவடைந்தநிலையில், 1978 ஆகஸ்ட் 20 அன்று மேற்கு வங்க அரசு 30 படகுகளில் ஏராளமான காவல் துறையினரை அனுப்பி, எங்களை மீண்டும் தண்டகாரண்யா பகுதிக்கு கொண்டு செல்ல முயன்றது. இது, அகதிகள் மீதான தாக்குதலுக்கு இட்டுச் சென்றது. சி.பி.எம். தொண்டர்களின் துணையுடன் அகதிகளின் 43 படகுகள் காவல் துறையினரால் அடித்து நொறுக்கப்பட்டன. காவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரு சிறுவர்கள் பலியானார்கள். தாக்குதலுக்கு பயந்து, மரப் பலகைகளும், மரக்கரியும் ஏற்றப்பட்டிருந்த 157 படகுகளை விட்டுவிட்டு தப்பியோடினர். படகுகளுடன் சேர்த்து அவற்றின் மொத்த மதிப்பு ரூபாய் மூன்றரை லட்சமாகும்.

1978 நவம்பர் முதல் வாரத்தில், "அகதிகளை மேற்கு வங்க அரசு இடையூறுக்குள்ளாக்கக் கூடாது' என்று "ஆனந்த பஸார்' பத்திரிகை செய்தி வெளியிட்டது. ஆனால், 1979 ஆம் ஆண்டு சனவரி 25 அன்று மீண்டும் மரிச்ஜாப்பி நோக்கி மேலும் அதிக எண்ணிக்கையிலான காவல் துறையினருடன் விரைந்த மேற்கு வங்க அரசு, மார்ச் 31 ஆம் தேதிக்குள் அகதிகள் அனைவரையும் தண்டகாரண்யாவிற்கு மீண்டும் அனுப்பிவிடும் திட்டத்துடன் செயல்படத் தொடங்கியது. மரிச்ஜாப்பி ஆற்றைச் சுற்றிலும் 144 தடையுத்தரவைப் பிறப்பித்தது. அருகிலுள்ள பகுதிகளிலிருந்து மரிச்ஜாப்பி தீவினுள் உணவுப் பொருட்கள், தண்ணீர் மற்றும் மருந்து பொருட்கள் கொண்டு செல்லப்படுவதைத் தடை செய்தது. மரிச்ஜாப்பி தீவுப் பகுதி முற்றிலும் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டது.

30 படகுகளிலும், எல்லைப் பாதுகாப்புப் படையினரின் இரண்டு எந்திரப் படகுகளிலும் வந்திருந்த காவல் துறையினர், சனவரி 29 அன்று காலையிலிருந்தே தங்களுடைய அடக்குமுறைகளைத் தொடங்கிவிட்டனர். கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினர். வீடுகளிலிருந்து மக்களை இழுத்துவந்து கைது செய்தனர்; வீடுகளுக்கு தீ வைத்தனர். தானியங்கள், துணிகள், தங்க நகைகள், ரொக்கப் பணம் மற்றும் சமையல் பாத்திரங்களைக் கொள்ளையடித்தனர். மூன்று இளம்பெண்கள் உட்பட பெண்களையும் மானபங்கப்படுத்தினர். உணவு தானியங்களையும், இன்றியமையாத பொருட்களையும் சுமந்திருந்த அகதிகளின் படகுகளை மூழ்கடித்தனர். நீரில் மூழ்கிய அகதிகள் மீண்டும் கரை சேராதவாறு கடுமையாகத் தாக்கினர்.

ஏழு நாட்களுக்கும் மேலாக நீடித்த கடுமையான தாக்குதல்களால், பட்டினிச் சாவு நேரிடுமோ என்று அஞ்சிய பெண்கள், பக்னா ஆற்றைக் கடந்து, அருகிலுள்ள கிராமங்களிலிருந்து உணவுப் பொருட்களையும், தண்ணீரையும் கொண்டு வர முயன்றனர். ஆனால், நடு ஆற்றில் அவர்களுடைய படகுகளை சுற்றி வளைத்த காவலர்கள் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினர். படகுகளை மூழ்கடித்து, தண்ணீரில் தத்தளித்த பெண்களை கடுமையாகத் தாக்கினர். பெண்கள் அடித்துக் கொல்லப்படுவதைப் பார்த்த மறு கரையிலிருந்த அகதிகளும், உள்ளூர் ஆட்களும் படகுகளில் அவர்களைக் காப்பாற்ற விரைந்தனர். இது, காவல் துறையினரை மேலும் கோப மூட்டியது. கண்மூடித்தனமாக அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்த தொடங்கினர். இதில் 15 அகதிகளும், 2 உள்ளூர் ஆட்களும் கொல்லப்பட்டனர். பூட்ஸ் கால்களால் மிதிக்கப்பட்டும், துப்பாக்கி கட்டையால் தாக்கப்பட்டும் பலர் காயமடைந்தனர். ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.

நாளுக்கு நாள் தீவினைச் சுற்றி கெடுபிடி அதிகரிக்கப்பட்டது. காணுமிடங்களில் எல்லாம் அகதிகள் ஈவிரக்கமின்றி துன்புறுத்தப்பட்டனர். சுமார் ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். அதில் உணவுப் பொருட்கள் மற்றும் காய்கறிகளைக் கொண்டு சென்றதற்காக 500 பேர் கைது செய்யப்பட்டனர். பட்டினியாலும், உண்பதற்கு தகுதியில்லாத பொருட்களை உண்டதாலும் 375 பேர் இறந்தனர். 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர். உணவுப் பொருட்களும், இன்றியமையாத பொருட்களும் அடங்கிய

4 லட்சத்து 15 ஆயிரத்து 142 ரூபாய் மதிப்பிலான படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மரிச்ஜாப்பி அகதிகள் குறித்து மேற்கு வங்க முதல்வர் தெரிவித்த சில கருத்துகளுக்கு, நாங்கள் கடுமையான மறுப்பைத் தெரிவிக்கிறோம்.

1. நாங்கள் மரிச்ஜாப்பியில் எந்தவொரு இணை அரசையும் நடத்தவில்லை. இந்த உலகில் வாழ்வதற்கு எந்தவொரு இடமும் அற்ற, எவருடைய ஆதரவுமில்லாத ஏழைகள் நாங்கள். எங்கள் நிலையை தொடக்கத்திலிருந்து கவனித்து வரும், எந்தவொரு அரசுப் பிரதிநிதியுடனும் பேசுவதற்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம். நாங்கள் இந்தியக் குடிமக்கள். இந்திய சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்கிறோம்.

ஆதரவில்லாத, வீடில்லாத ஏழை அகதிகள் ஓர் இணை அரசை நடத்துவது சற்றும் சாத்தியமில்லாத ஒன்று. அந்நிய சக்திகளுடன் இணைந்து நாங்கள் இணை அரசை நடத்துவதாக ஜோதிபாசு கூறுவது, எங்களை மரிச்ஜாப்பி மண்ணிலிருந்து அகற்றுவதற்காகத்தான். அவருடைய குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது.

2. நாங்கள் ஒருபோதும் "தாய்நாடு' கோரிக்கையை வைக்கவில்லை. தாய்நாடு என்பதற்கான அர்த்தம்கூட எங்களுக்குத் தெரியாது. தாய்நாடு தொடர்பாக நாங்கள் பேசியதோ, எழுதியதோ கிடையாது. வங்காள தேசத்திலிருந்து ஒருவரையும் நாங்கள் அழைத்து வரவில்லை.

மேலே கூறிய எங்கள் நிலையின் அடிப்படையில், "உத்பாஸ்டு உன்யான்ஷிப் சமிதி'யும், வீடற்ற, ஆதரவற்ற பசியால் வாடும் அகதிகளும் தங்களிடம் பின்வரும் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

எங்களுடைய கோரிக்கைகள் :

1. மரிச்ஜாப்பி தீவு "ரிசர்வ் பாரஸ்ட்' இல்லையாதலால், அதைச் சுற்றிலும் ஏற்படுத்தப்பட்டுள்ள காவல் தடுப்பரண்களையும், 144 தடை உத்தரவையும் உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும்.

2. காவல் துறையினரின் அடக்குமுறை மற்றும் துப்பாக்கிச் சூடு தொடர்பாக, உடனடியாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். காவல் துறையினரால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், சேதமான படகுகள், வீடுகள், கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

3. வளமான எதிர்காலம் இருக்கும் என்று நம்பி, எங்களுடைய வாழ்நாள் சேமிப்பையும் ஏராளமான உயிர்களையும் இழந்து நாங்கள் மிகவும் நேசிக்கும் மரிச்ஜாப்பிக்கு வந்தோம். இங்கு முறையான மீள்குடியேற்றம் நடைபெற வேண்டும் என்பதுதான் எங்களுடைய அடிப்படையான கோரிக்கையாகும்.

4. பல்வேறு வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பெண்கள் உள்ளிட்ட அகதிகள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்வதோடு, அவர்கள் மீதான வழக்குகளையும் எந்த நிபந்தனையுமின்றி திரும்பப் பெற வேண்டும்.

இப்படிக்கு,

ராய்கரன் பரோய், பொதுச் செயலாளர்

உத்பாஸ்டு உன்யான்ஷிப் சமிதி நேதாஜி நகர், மரிச்ஜாப்பி குமிர்மாரி 24 பர்கனாஸ், மேற்கு வங்காளம்

****

கடுமையான அடக்குமுறைகள் தொடர்ந்து கொண்டிருந்தபோது, 1978 ஆகஸ்ட் 20 அன்று இரவு 9.10 மணிக்கு அப்போதைய இந்தியப் பிரதமர் மொரார்ஜி தேசாய்க்கு "நிகில் பங்கா நாகரிக் சங்கா' அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ். சாட்டர்ஜி, ஒரு தந்தி அனுப்பினார். அதன் நகல் சரண் சிங் எம்.பி., சக்தி சர்க்கார் எம்.பி. மற்றும் சிலருக்கு அனுப்பப்பட்டது.

“பிரதமர் அவர்களே,

மரிச்ஜாப்பி அப்பாவி அகதிகள் மீதான – தங்களது பெயரிலான – திட்டமிட்ட படுகொலைகளைத் தங்களது கவனதிற்குக் கொண்டு வருகிறோம். தயவு செய்து நிலைமையின் உண்மைத் தன்மையை கருத்தில் கொண்டு, எந்த அரசியல் நிர்பந்தமும் இல்லாமல், அந்த மக்களை சுதந்திரமாக அவர்களுக்கான குடியேற்றங்களை அமைப்பதற்கு கருணையுடன் அனுமதிக்க வேண்டும்.

ஏறக்குறைய 10 ஆயிரம் பேர் அவர்களுக்கான குடிசைகளையும், உள்ளூர் பொருளாதாரத்தை வளப்படுத்தும் மீன்பிடி துறைகளையும் அமைத்துள்ளனர். தங்களுடன் நெருக்கமான உறவு பேணும் இடதுசாரி முன்னணி அரசு, உண்மை நிலையைப் புறக்கணித்து அவர்களைக் கொடூரமாக அந்த இடத்திலிருந்து அகற்றும் வேலையில் இறங்கியுள்ளதாகத் தெரிகிறது.

நாளை உடனடியாக இதை நிறுத்த வேண்டும் என்று உங்களைக் கோருகிறோம். ஒட்டுமொத்த வாங்காளிகளின் இதயங்களுக்கு மதிப்பளிக்க வேண்டுகிறோம்.

சாட்டர்ஜி

பொதுச் செயலாளர், நிகில் பங்கா நாகரிக் சங்கா

Pin It