வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?

வெயில் மிகக் கடுமையாக இருப்பதை இந்த விடுமுறை நாட்களில் நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். வெயிலின் கொடுமையைப் போக்கிக் கொள்ள பழச்சாறு மற்றும் குளிர் நீர் குடித்து, பனிக் குழைவு (அய்ஸ் கிரீம்) தின்று, குளிர்பதன அறையில் தங்கி, மலைப் பகுதிகளுக்குச் சென்று தற்காலிகமான தீர்வுகளை நாம் தேடிக் கொள்கிறோம். ஆனால், நிரந்தரமான தீர்வை நாம் எண்ணிப் பார்க்கிறோமா?

வெயிலின் கொடுமை அதிகமாக இருப்பதற்கு முதன்மைக் காரணம் மரங்கள் இல்லாததுதான். நாம் கொஞ்சம் கூட பொது நலம் கருதாமல் மரங்களை வெட்டிச் சாய்க்கிறோம். காடுகளை அழிக்கிறோம். வீட்டெதிரில் சிறிது இடம் இருந்தாலும் கடைகளைக் கட்டி வாடகை விடுகிறோமே ஒழிய, மரம் நடுவதையோ, தோட்டம் போடுவதையோ எண்ணிப் பார்க்க மறுக்கிறோம்.

விசும்பின் துளிவீழின் அல்லால்மற்று ஆங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது

திருக்குறள் என்ன சொல்கிறது பார்த்தீர்களா? மழை பெய்யாவிட்டால் புல் கூட முளைக்காது. புல்லே வாழாது என்றால் மனிதர்களும், விலங்கினங்களும் மட்டும் வாழ முடியுமா? பெரியவர்களின் உதவியுடனோ, அல்லது நீங்களே தாமாகவோ முயன்று மரக்கன்றுகளையும், செடிகளையும் உங்கள் பகுதியில் நடுங்கள். உலகிற்கு நீங்கள் செய்யும் உதவி மட்டுமல்ல இது; உங்களுக்கே நீங்கள் செய்து கொள்ளும் தலையாயக் கடமை.
Pin It