உயர்வு தாழ்வு இல்லை

எங்கள் ஊரின் மேற்கே
இருக்கின்றது ஓர் ஏரி
அங்கு தினமும் நானே
அயர்வு போக்கப் போவேன்

துணி வெளுக்கும் குப்பன்
தினமும் அங்கு வருவார்
மணிக் கணக்காய் வெளுப்பார்
மாயச் செயல் செய்வார்

செய்யும் வேலை தன்னை
சிறக்க அழகாய்ச் செய்வார்
வெய்யில் தன்னைப் பாரார்
விரும்பித் துணியை வெளுப்பார்

நல்ல உடைகள் தன்னை
நன்றாய் மனிதர் எல்லாம்
துல்லியமாக அணிய
துவைப்பார் அந்த மனிதர்

யாவர் எதைச் செயினும்
அதில் பெருமை உண்டு
தேவை அற்ற மேல் கீழ்
தொழில் எதிலும் இல்லை

வெ. நல்ல தம்பி
நூல் : ‘கண்ணே பாப்பா'

சிட்டுக் குருவி

சிட்டுக்குருவி கிட்டே வா
சேதி கேட்க இங்கே வா
ஒட்டி உறவே ஆடவா
உண்மை கேட்பேன் சொல்ல வா!

கண்ட பொருளைக் காலாலும்
கவ்வி எடுத்து மூக்காலும்
கொண்டு செல்வது ஏன் குருவி
கூடு கட்டிடவோ குருவி!

தனது கையே தனக்குதவி
தன்னம்பிக்கை தன்முயற்சி
எனப்பிறர்க்குக் காட்டிடவோ
இளமைச் சிட்டே எண்ணுகிறாய்!

- வெ. நல்ல தம்பி
நூல் : ‘கண்ணே பாப்பா'


பச்சைக்கிளியே பச்சைக்கிளியே
பறந்து வா நீ

எங்கிட்ட வரமாட்ட - நீ
என்னப் பார்த்து பயப்படறியா

நா உன்ன
ஒன்னுமே பண்ணமாட்டேன்
அந்த சிறுத்தையும் - உன்ன
ஒன்னுமே பண்ணாது

அது
உன்னைப்பார்த்தே
பயந்திடும்

- இனியன்
மழலையர் வகுப்பு
நியு ரிவர் பள்ளிக்கூடம்
கருங்குழி
Pin It