உலகத்திற்கே ஒரு விளையாட்டுத் திருவிழா இருக்கிறது என்றால் அது ஒலிம்பிக் தான். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் தங்களின் திறமையைக் காட்டி பதக்கங்களை வெல்வதுதான், ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் லட்சியமாக இருக்கிறது. தங்கள் நாட்டு வீரர்கள் பதக்கங்களை வெல்வதற்கு அந்தந்த நாடுகளும் உதவிகளை செய்கின்றன. சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடந்து முடிந்திருக்கின்றன. இந்தப் போட்டிகளில் பதக்கம் வென்று நமது நாட்டிற்குப் பெருமை சேர்ப்பதற்காக இந்திய வீரர்கள் பலர் சென்றார்கள். வில்வித்தை, துப்பாக்கிச் சுடுதல், தடகளப் பந்தயங்கள், பூப்பந்து, டென்னிஸ், ஆகிய விளையாட்டுகளில் அவர்கள் பங்கேற்றார்கள். இப்படி சென்றவர்களில் நமது நாட்டு துப்பாக்கிச் சுடும் வீரர் அபிநவ் பிந்த்ரா, முதன்முறையாக தனி நபர் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கத்தினை வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்திருக்கிறார். அவரை நாம் பாராட்ட வேண்டும்.

பொதுவாகவே இந்திய விளையாட்டு வீரர்கள் தடகளம், கால்பந்து போன்ற உடல் பலத்தினை அடிப்படையாக கொண்டிருக்கும் விளையாட்டுகளில் வெற்றி பெறுவதில்லை. பி.டி. உஷா, அஞ்சு ஜார்ஜ் போன்றவர்கள் இவர்களில் விதிவிலக்கு. கர்ணம் மல்லேஸ்வரி வலு தூக்கும் போட்டியில் கடந்த முறை வெண்கலப் பதக்கம் வென்றார். ராஜ்வர்தன் சிங் ரத்தோர், துப்பாக்கிச் சுடும் போட்டியில் சென்றமுறை வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்திய வளைக்கோல் பந்து (ஹாக்கி) வீரர்கள் 1980 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து பல தங்கப்பதக்கங்களை வென்றிருக்கிறார்கள். நாம் தற்போது பெற்றிருக்கும் தங்கப்பதக்கமே நமது வரலாற்றில் ஒலிம்பிக்கில் வாங்கிய முதல் பதக்கம்.

நமது நாடு மக்கள் தொகையில் மட்டுமல்ல, பொருளாதாரத்தில், கல்வியில், வளங்களில் சிறந்த நாடு. ஆனால், இங்கு ஒரு தங்கப்பதக்கம் வாங்குவதே பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது. ஆனால், குட்டி குட்டி நாடுகளெல்லாம் பெட்டி நிறைய தங்கப்பதக்கங்களை கொண்டு போகின்றன. இதற்கான காரணம் என்ன? இந்தியாவில் உடல் பலத்தை அதிகம் பயன்படுத்தாத கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளுக்கே மதிப்பும் மரியாதையும் தரப்படுகிறது. தேசிய விளையாட்டான ஹாக்கியைக் கூட யாரும் கண்டு கொள்வதில்லை. விளையாட்டு வீரர்களை தேர்ந்தெடுப்பதில் அரசியல், சாதி, பணம், மாநில வெறி போன்ற முறைகேடுகள் நடக்கின்றன. உண்மையிலேயே திறமையுடையவர்கள் இதனால் வாய்ப்புகளை இழக்கிறார்கள். தங்கப்பதக்கம் பெற்ற அபிநவ் ஒரு பெரும் பணக்காரரின் மகன். அவர் தங்கப்பதக்கம் வென்றதற்கு, அவரின் தந்தை 200 கோடி ரூபாய் மதிப்புள்ள நட்சத்திர உணவு விடுதியைப் பரிசாகத் தந்துள்ளார். அபிநவ் தனது சொந்த செலவில் வெளிநாட்டில் பயிற்சி எடுத்தவர். அவரிடம் பல லட்சம் ரூபாய் மதிப்பு கொண்ட விலை உயர்ந்த துப்பாக்கிகள் பல இருக்கின்றன.

ஆனால், ஒரு ஏழை விளையாட்டு வீரருக்கு இந்த வசதிகள் ஒருபோதும் கிடைப்பதில்லை. அப்படி என்றால் இந்தியா எப்படி ஒலிம்பிக்கில் தங்கங்களை அள்ளி வரும்? ஆனாலும், குழந்தைகளே இதையெல்லாம் படித்துவிட்டு மனம் சோர்ந்து விடவேண்டாம். உலக அளவில் வெற்றி பெற்றிருக்கிற ஏழை கருப்பின விளையாட்டு வீரர்கள் எல்லோருமே தங்களது திறமை விடா முயற்சி, கடும் உழைப்பு, தொடர் பயிற்சி ஆகியவற்றாலேயே வெற்றிக் கனியைப் பறித்திருக்கிறார்கள். எனவே, உங்களில் விளையாட்டு வீரர்களாக எதிர்காலத்தில் மாற விரும்புகிறவர்கள் தளராமல் பயிற்சி செய்யுங்கள்; முயற்சி செய்யுங்கள். பலன் கண்டிப்பாக உண்டு
Pin It