சோஷலிஸ்டுகள் பற்றிப் பேசுவோம். சமுதாய அமைப்பின் காரணமாக எழுகின்ற பிரச்சனையை, சோஷலிஸ்டுகள் ஒதுக்கிவிட முடியுமா? அய்ரோப்பிய சோஷலிஸ்டுகளைப் பின்பற்றக் கூடிய இந்தியாவில் இருக்கின்ற சோஷலிஸ்டுகள், வரலாறு குறித்த பொருளாதார ரீதியான விளக்கங்களை இந்தியாவின் உண்மை நிலைகளுக்குப் பொருத்த எண்ணுகிறார்கள். அவர்கள், மனிதன் என்பவன் ஒரு பொருளாதார விலங்கு என்றும், மனிதனுடைய செயல் பாடுகளும் ஆசாபாசங்களும் பொருளாதார நிலைகளால் கட்டுப்படுத்தப்படுபவை என்றும், சொத்து மட்டுமே அதிகாரத்திற்கான மூல ஆதாரம் என்றும் முடிவு கட்ட எண்ணுகின்றனர்.

எனவே, அவர்கள் அரசியல் சீர்திருத்தம், சமூக சீர்திருத்தம் ஆகியவை மிகப் பெரிய மாயைகளே என்றும், சொத்தைச் சமமாகப் பங்கிடுவதன் மூலம் மேற்கொள்ளப்படும் பொருளாதார சீர்திருத்தமே - மற்ற எல்லாவிதமான சீர்திருத்தத்திற்கும் முதன்மையானதாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றனர். இந்த அடிப்படையில்தான் பொருளாதார சீர்திருத்தமே எல்லாவித சீர்திருத்தங்களுக்கும் அடிப்படை என்று சோசலிஸ்டுகள் வாதிடுகின்றனர். அவர்களின் வாதம் ஒவ்வொன்றுக்கும் ஒருவர் எதிர் வாதம் வைத்துவிட முடியும்.

சாமியார்களுக்கும் ‘பக்கிரி'களுக்கும் அடிபணிவது ஏன்?

மனிதனை இயக்கும் ஒரே உந்து சக்தி, பொருளாதார சக்தி மட்டுமே அல்ல என்று நாம் கூற முடியும். பொருளாதார அதிகாரம் மட்டுமே ஒரே அதிகாரம் என்பதை, மனித சமூகவியல் மாணவர் எவரும் ஒப்புக் கொள்ள மாட்டார். பல தருணங்களில், ஒரு தனிமனிதனின் சமூக நிலை மட்டுமே - அவரது ஆட்சியுரிமைக்கும் அதிகாரத்துக்கும் ஆதாரமாக அமைந்து விடுகிறது. ‘மகாத்மா'க்கள் சாதாரண மனிதர்களின் மேல் கொண்டிருக்கும் செல்வாக்கிலிருந்து இது நன்கு விளங்கும். இந்தியாவில் உள்ள பெரிய பெரிய பணக்காரர்கள்கூட, கையில் கால் காசுகூட இல்லாத சாதுக்களுக்கும் பக்கிரிகளுக்கும் அடி பணிந்து நடப்பது ஏன்? தரித்திர நிலையிலுள்ள கோடிக்கணக்கான இந்திய மக்கள், காசிக்கும் மெக்காவுக்கும் செல்ல - தங்களுடைய ஒரே அற்ப சொத்தான மூக்குத்தி, தோடு போன்றவற்றையும் விற்பது ஏன்?

இந்திய வரலாற்றில் மதத்திற்கே அதிகாரம்

இந்தியாவில் சாதாரண மனிதனின் மேல் ஒரு நீதிபதிக்குள்ள செல்வாக்கை விட, ஒரு சாமியாருக்குள்ள செல்வாக்கு அதிகம் அல்லவா? வேலை நிறுத்தம், தேர்தல் உள்ளிட்ட எல்லாமே மிக எளிமையாக மதச்சார்பான ஒரு திருப்பத்தை அடைய முடிகிறது. மதச்சார்பான திரிபுக்கும் ஆளாகின்றன. மதம் என்பது அதிகாரத்திற்கான ஓர் ஆதாரம் என்பதை இந்திய வரலாறு நிரூபிக்கிறது.

மனிதன் மீது மதம் கொண்டிருக்கிற அதிகாரத்தை நிறுவ இன்னொரு எடுத்துக்காட்டாக, ரோமிலுள்ள பிளபியன்களின் பிரச்சனையை எடுத்துக் கொண்டு என் கருத்தை மேலும் தெளிவுபடுத்த முயல்கிறேன். ரோமானிய குடியரசின் கீழ் இருந்த மேல்மட்ட செயற்குழுவில் தங்களுக்கும் ஒரு பங்கு வேண்டும் என பிளபியன்கள் போராடினர். பிளபியன்களின் சட்டப் பேரவையான ‘கமிட்டியா சென்சாரியாட்டா' என்ற சபையின் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிளபியன் கான்சல் ஒருவர், நியமனம் செய்யப்படுவதற்கான ஆணையைப் பெற்றார். நிர்வாகத்தை நடத்திச் செல்வதில் பாட்ரிசியன் கான்சல்கள், பிளபியன்களுக்கு எதிராக ஒருதலைப் பட்சமாக நடந்து வந்தார்கள் என எண்ணியதால், தங்களுடைய சொந்த கான்சல் தேவை என உணர்ந்தனர். ரோமானிய குடியரசு சாசனத்தின்படி, ஒரு கான்சலின் நடவடிக்கையை தடை செய்வதற்கான அதிகாரம் மற்றொரு கான் சலிடம் இருந்தது.

எனவே, பிளபியன்கள் பெரியதொரு வெற்றியை அடைந்தனர் என்பது எளிதாக விளங்கும். ஆனால், உண்மையில் அவர்கள் ஆதாயம் ஏதும் அடைந்தனரா? இல்லை என்றே சொல்ல வேண்டும். பாட்ரிசியன் கான்சலைச் சார்ந்திராமல் தனித்து செயல்படக்கூடிய உறுதியான ஒரு பிளபியன் கான்சல் ஒருவரை, ஒருபோதும் பிளபியன்களால் தேர்ந்தெடுக்க முடியவில்லை. சாதாரணமாக, பிளபியன் கான்சல் ஒருவரை பிளபியன்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்கிற சூழலில், ஒரு சரியான - திறமையான கான்சலை அவர்கள் தேர்ந்தெடுக்க முடிய வேண்டும். ஆனால், இது முடியவில்லை ஏன்? உறுதி யான ஒரு பிளபியனை தங்களுடைய கான்சலாக தேர்ந்தெடுத்திருக்க முடியும். பிளபியன்களால் முடியாமல் போனது ஏன்? மனித மனங்களின் மீது மதம் எந்த அளவுக்கு ஆட்சி செலுத்துகிறது என்பதைத்தான் இந்தக் கேள்விக் கான விடை வெளிப்படுத்துகிறது.

ரோமானிய பொதுமக்களின் மத நம்பிக்கையின்படி, டெல்பி என்னும் இடத்தில் குறி சொல்பவரால் தேவதைக்கு தொடர்புள்ளவராக அறிவிக்கப்படாத எந்த ஒரு மனிதனும் - ஓர் அதிகாரியாக தன்னுடைய அதிகாரக் கடமைகளை ஆற்ற முடியாது. டெல்பி தேவதையின் கோயில்களின் பொறுப்பாளராக இருந்த பூசாரிகள் அனைவரும் பாட்ரிசியன்களே.

பாட்ரிசியன்களுக்கு எதிரான உறுதியான ஒரு கான்சலை - தற்போது இந்தியாவில் வழங்கி வருகிறபடி ‘இனப் பற்றுள்ள' ஒரு கான்சலை - பிளபியன்கள் தேர்ந்தெடுத்த போதெல்லாம் அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட கான்சல், தேவதைக்கு தொடர்புடையவர் அல்ல என்று அறிவிப்பதே குறி கூறுவோரின் மாறாத வழக்கமாக இருந்தது. பிளபியன்கள் தங்கள் உரிமையைப் பெற முடியாமல் வஞ்சிக்கப்பட்டது இப்படித்தான். ஆனால், இங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், இவ்வாறு தாங்கள் வஞ்சிக்கப்படுவதை பிளபியன்களே அனுமதித்தனர் என்பதுதான். இப்படி பிளபியன்கள் மோசம் போனது ஏன்?

ஏனெனில், பாட்ரிசியன்களைப் போலவே பிளபியன்களும் எந்த ஒரு ஊழியரும் தன் கடமைகளை நிறைவேற்றும் பொறுப்பை எடுத்துக் கொள்ள - முன்னோடியான நிபந்தனை தேவதையின் சம்மதமே; மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவது மட்டுமே போதாது என்று உறுதியாக நம்பினர் என்பதால்தான். தேர்தலே பொதுவானது, தேவதையின் அனுமதி தேவை இல்லை என்று பிளபியன்கள் வாதாடி இருந்தால், தாங்கள் பெற்ற அரசியல் உரிமையின் முழு பயனையும் அவர்கள் அடைந்திருக்க முடியும். ஆனால், அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. தங்களுக்கு குறைந்த அளவே பொருந்தி வரக்கூடிய ஆனால், தேவதைக்கு (நிராகரிக்கப்பட்ட முந்தைய கான்சல்களைவிட) கூடுதலாகப் பொருந்தி வரக்கூடிய அதாவது பாட்ரிசியன்களுக்குக் கூடுதலாகப் பொருந்தி வரக்கூடிய கான் சலைத் தேர்ந்தெடுக்க பிளபியன்கள் சம்மதித்தனர். மதத்தை விட்டொழிப்பதற்குப் பதிலாக, தாங்கள் அரும்பாடுபட்டு வென்று அடைந்த உலகியல் ஆதாயங்களை கைகழுவினர். பணத்தைப் போலவே மதமும் அதிகாரத்துக்கான ஓர் ஊற்றுக்கண்ணாக அமைந்து விடுகிறது என்பதைத்தானே இது காட்டுகிறது?

அதிகாரத்திற்கும், ஆதிக்கத்திற்கும் அடிப்படை எது?

இன்றைய காலகட்டத்தில், அய்ரோப்பிய சமூகத்தின் அதிகாரத்துக்கான ஓர் ஊற்றுக்கண் என்கிற முறையில் சொத்து ஆதிக்கம் செலுத்துவதாக அமைந்து நிற்பதால், இந்தியாவிலும் சொத்து அவ்வாறாகவே செயல்பட்டது என்றும் அய்ரோப்பாவின் கடந்த காலத்திலும் அவ்வாறே இருந்தது என்றும் நம்பியதுதான் சோசலிஸ்டுகளின் தவறாகும். மதம், சமுதாய அந்தஸ்து, சொத்து ஆகிய எல்லாம் ஒரு மனிதன் மற்றொரு மனிதனின் உரிமைகளைக் கட்டுப்படுத்துவதற்கான அதிகாரத்துக்கும் ஆதிக்கத்துக்குமான அடிப்படைகள் ஆகும். இவற்றுள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காலகட்டத்தில் மேலோங்கி, மற்றவற்றின் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன. இதுமட்டுமே இந்த அடிப்படைகளுக்கு இடையிலான வேறுபாடு ஆகும்.

சுதந்திரம் என்பதே குறிக்கோள் என்றால், ஒரு மனிதன் மற்றொரு மனிதன் மீது கொண்டிருக்கிற ஆளுகையை அழிப்பதே சுதந்திரத்தின் பொருள் என்றால், மிக எளிதாக நமக்குத் தெரிய வருவது என்ன? பொருளாதார சீர்திருத்தம் மட்டுமே நாம் மேற்கொள்ள வேண்டிய ஒரே சீர்திருத்தம் என்று வலியுறுத்த முடியாது என்பதே ஆகும். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தில், அதிகாரத்துக்கும் ஆதிக்கத்துக்குமான அடிப்படைகளாக - சமுதாயமும் மதமும் இருந்தால், அந்தக் கட்டத்தில் நாம் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தம், சமுதாய சீர்திருத்தமும் மதச் சீர் திருத்தமுமே ஆகும்.

பொதுவுடைமை எல்லா பிரச்சினைகளையும் தீர்க்குமா?

வரலாற்றைப் பொருளாதார அடிப்படையில் விளக்கும் இந்திய சோசலிஸ்டுகளின் விளக்கத்தை இவ்வாறு மறுக்க முடியும். சொத்தை மக்களுக்கு சமமாகப் பங்கிடுவது ஒன்றே உண்மையான ஒரே சீர்திருத்தம்; அது மற்ற எல்லா சீர்திருத்தங்களுக்கும் முன்னோடியாக நடந்தேற வேண்டும் என்பது, சோசலிஸ்டுகளின் வாதம். ஆனால், இந்த வாதம் எடுபடுவதற்கு வரலாற்றைப் பொருளாதார அடிப்படையில் விளக்குவது தேவை இல்லை என நான் எண்ணுகிறேன். நான் சோசலிஸ்டுகளைக் கேட்க விரும்புவது எல்லாம், சமுதாய அமைப்பை முதலில் சீர்திருத்தி அமைக்காமல் - நம்மால் பொருளாதார சீர்திருத்தத்தைக் கொண்டுவர முடியுமா என்பதைத்தான். இந்திய சோசலிஸ்டுகள் இதுபற்றி சிந்திக்கவே இல்லை என்று தோன்றுகிறது. அவர்களுக்குத் தீங்கிழைக்க வேண்டும் என்பது என் நோக்கம் அல்ல. பிரபலமான சோசலிஸ்டு ஒருவர் சில நாட்களுக்கு முன் என் நண்பருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர் கூறுகிறார்:

"ஒரு வகுப்பினர் இன்னொரு வகுப்பினரை அடக்கி ஒடுக்குவதும், இழிவாக நடத்துவதும் ஆகிய இந்த நிலை தொடர்ந்து நீடிக்கும் வரை - இந்தியாவில் சுதந்திரமான ஒரு சமுதாயத்தை உருவாக்க முடியும் என்று நான் நம்பவில்லை. இருந்தாலும், சோசலிசக் கோட்பாட்டில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. சோசலிசத்தில் பல்வேறு வகுப்புகளுக்கும் குழுக்களுக்கும் சமத்துவம் கிட்டும் என்று நம்புகிறேன். சோசலிசம் மட்டுமே இந்தப் பிரச்சனைகளையும் இதைப் போலவே மற்ற எல்லாப் பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கான உண்மையான வழி எனவும் நான் நம்புகிறேன்.''

"பல்வேறு வகுப்பினரும் முழு சமத்துவத்தோடு நடத்தப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன்' என்று கூறிவிட்டால், பிரச்சினை தீர்ந்து விடுமா என்று சோசலிஸ்டுகளைக் கேட்க விரும்புகிறேன். நம்பிக்கையே போதும் என்று திருப்தி அடைந்து விடுகிற ஒரு சோசலிஸ்ட், சோசலிசம் என்பதில் என்னöவல்லாம் அடங்கி இருக்கிறது என்பதைக் கடுகளவுகூட புரிந்து கொள்ளவில்லை என்பதைத்தான் வெளிப்படுத்துகிறார். நீண்ட நெடுங்காலத்துக்குப் பிறகு நிறைவேறக் கூடிய வெறும் லட்சிய உருவகம் அல்ல சோசலிசம். அது நடைமுறையில் செயல்படுத்தக்கூடிய ஒரு திட்டமே ஆகும். அப்படி எனில், சோசலிஸ்டுக்கு முன் உள்ள கேள்வி, அவர் சமத்துவத்தை நம்புகிறாரா இல்லையா என்பதல்ல. அவருக்கு முன்னால் உள்ள கேள்வி, ஒரு சமூகக் கட்டமைப்பு என்கிற ரீதியிலும், கொள்கை ரீதியிலும் ஒரு வகுப்பார் இன்னொரு வகுப்பாரை அடக்கி ஒடுக்குவதும், இழிவுபடுத்துவதும் இருக்கிறது என்பதை அவர் ஒத்துக்கொள்கிறாரா? அவ்வாறே வகுப்பு வேற்றுமையை உருவாக்கும் கொடுங்கோன்மையும் அடக்குமுறையும் நீடிப்பதை அனுமதிக்கிறாரா? புரட்சிக்கு இந்திய உழைக்கும் மக்கள் ஒன்றிணைவார்களா?

சோசலிசத்தை அடைவதற்கான வழிவகைகளை ஆராய்ந்தால், நான் சொல்வதை முழுமையாக விளங்கிக் கொள்ள முடியும். அதிகாரத்தைக் கைப்பற்றும் புரட்சி ஒன்றும் இல்லாமல், சோசலிஸ்டுகள் நினைக்கும் பொருளாதாரச் சீர்திருத்தத்தை செய்துவிட முடியாது என்பது தெளிவு. அதிகாரத்தைக் கைப்பற்றுபவர் பாட்டாளியாகத்தான் இருந்தாக வேண்டும். நான் கேட்கிற முதல் கேள்வி, புரட்சிக்காக இந்தியப் பாட்டாளிகள் இணைந்து வருவார்களா? மக்களை இவ்வாறு ஒன்றிணையத் தூண்டுவது எது?

மற்ற விசயத்தில் எல்லாம் சமத்துவம் இருக்கும் போதும், தன்னோடு சேர்ந்து செயல்படும் மற்ற மனிதர்கள், சமத்துவம் - சகோதரத்துவம் - எல்லாவற்றுக்கும் மேல், நியாயம் என்கிற உணர்வுகளால் தூண்டப்பட்டே செயல்படுகிறார்கள் என்கிற உணர்வு ஏற்பட்டால் மட்டுமே, எந்த ஒரு மனிதனும் மற்றவர்களுடன் ஒன்றிணைவான் என்றே எனக்குத் தோன்றுகிறது.

புரட்சியை வெற்றிகரமாக நடத்தி முடித்த பிறகு, தாங்கள் சமத்துவமாக நடத்தப்படுவோம்; தம்மிடம் யாரும் சாதி, மத வேறுபாடு பாராட்ட மாட்டார்கள் என்று தெரியவந்தால் ஒழிய, சொத்தைப் பொதுவுடைமையாக்குவதற்கானப் புரட்சி ஒன்றில் மக்கள் சேர மாட்டார்கள். புரட்சிக்குத் தலைமை தாங்குகிற சோசலிஸ்டு, தனக்கு ஜாதியில் நம்பிக்கை இல்லை என்று வாக்குறுதி அளித்தால் மட்டும் போதாது. அந்த வாக்குறுதி என்பது மனதின் அடி ஆழத்திலிருந்து வரக்கூடியதாக, சமத்துவம் சகோதரத்துவம் என்ற உணர்வை உள்வாங்கிக் கொண்ட மனப்பான்மைக் கொண்டதாக இருக்க வேண்டும்.

பாட்டாளிகள் சாதி பார்ப்பது இல்லையா?

இந்தியப் பாட்டாளி வர்க்கம், ஏழை - பணக்காரன் என்ற வேறுபாடு ஒன்றைத் தவிர வேறு எந்த வேறுபாடும் பார்ப்பதில்லையா? சாதி அல்லது மதம், அந்தஸ்தில் மேல்கீழ் போன்ற எந்த வேறுபாட்டையும் அவர்கள் பாராட்டுவதில்லையா? இந்திய ஏழைகள் இந்த வேறுபாட்டைப் பாராட்டவே செய்கிறார்கள் என்பதே உண்மை என்றால், பணக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கையில் - பாட்டாளி வர்க்கத்தினர் ஓரணியாய்த் திரண்டு, ஒன்றுபட்டுப் போராடுவர் என்று எதிர்பார்க்க முடியுமா? பாட்டாளி வர்க்கம் தன்னை ஒன்றுபட்ட ஓர் அணியாகத் திரட்டிக் கொள்ள முடியாத நிலையில், புரட்சி எப்படி சாத்தியமாகும்?

ஒரு வாதத்துக்காக, நல்வாய்ப்பால், எதிர்பாராதபடி இந்தியாவில் புரட்சி நடந்து விடுகிறது; சோசலிஸ்டுகள் அதிகாரத்துக்கு வந்து விடுவார்கள் என்றே வைத்துக் கொள்வோம். அப்போது இந்தியாவில் நிலவுகிற சமூக அமைப்பின் காரணமாக ஏற்படும் பிரச்சனைகளை, அவர்கள் கவனிக்காமல் இருக்க முடியுமா? அந்தஸ்தால் மேல் கீழ் என்றும், தீண்டத்தக்கவர் தீண்டத்தகாதவர் என்றும் வேறுபாடுகளைக் கடைப்பிடிக்கும்படி மக்களைத் தூண்டும் தவறான எண்ணங்கள் உருவாக்கி உள்ள பிரச்சனைகளை சமாளிக்காமல் - இந்தியாவில் சோசலிச அரசு ஒரேயொரு நாள்கூட தாக்குப் பிடிக்க முடியுமா என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. வெறும் வாய்ப்பந்தல் போடுவதோடு திருப்தி அடைய முடியாது. சோசலிசத்தை திட்டவட்டமான உண்மை நிலையாக ஆக்கவே விரும்புகிறார்கள் என்றால், அவர்கள் உணர்ந்து அங்கீகரிக்க வேண்டிய உண்மைதான் என்ன? சமூக சீர்திருத்தம் என்பது, அடிப்படை யானது. அவர்கள் அதில் இருந்து தப்பி ஓடி ஒளிந்து கொண்டுவிட முடியாது என்பதுதானே அது?

எத்திசையிலும் சாதிக் கொடூரன் வழிமறிப்பான்!

இந்தியாவில் வெளிப்படையாக மேலோங்கி நிற்கிற சமூகப் பிரச்சனை, எந்த ஒரு சோசலிஸ்டும் சந்திக்க வேண்டிய ஒரு பிரச்சனை. இந்தப் பிரச்சனையைக் கவனிக்காமல் புரட்சியை வென்றடைய முடியாது. நல்வாய்ப்பால், புரட்சி நடந்து விட்டாலும்கூட, தன் குறிக்கோளை அடைய ஒரு சோசலிஸ்டு, சாதிப் பிரச்சனையோடு மல்லுக்கு நிற்க வேண்டி இருக்கும். இது என் ஆணித்தரமான கருத்து. புரட்சிக்கு முன்னால் சாதிப் பிரச்சனையைக் கையாள வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகியே தீருவார்கள். அதாவது, நீங்கள் எந்தத் திசையில் சென்றாலும் - சாதிக் கொடூரன் வந்து வழி மறிப்பான். இந்த சாதிக் கொடூரனை ஒழிக்காமல், அரசியல் சீர்திருத்தத்தையோ, பொருளாதார சீர்திருத்தத்தையோ அடையவே முடியாது.

4

எந்த நாட்டிலும் இல்லாத தொழில் பிரிவினை

இன்றும்கூட சாதிக்கு ஆதரவாளர்கள் இருந்து வருவது வருத்தம் தரும் நிலைமைதான். சாதிக்கு ஆதரவாகக் கூறப்படும் வாதங்கள் ஏராளம். "சாதி அமைப்பு என்பது தொழில் பிரிவினையின் மறுபெயரே. நாகரீகச் சமுதாயம் ஒவ்வொன்றிலுமே தொழில் பிரிவினை என்பது, தேவையான ஓர் அம்சமாக உள்ளது. எனவே, சாதி அமைப்பில் தவறேதும் இல்லை'' என்னும் வாதம் உள்ளது. இந்த வாதத்துக்கு எதிராக வலியுறுத்திக் கூறப்பட வேண்டிய முதல் செய்தி என்ன என்றால், சாதி அமைப்பு தொழில்களை மட்டும் பிரிப்பதில்லை; தொழிலாளர்களையுமே அது பிரித்து விடுகிறது. நாகரீகச் சமூ கத்திலும் தொழில் பிரிவினையானது தொழிலாளர்களை ஒரு செயற்கையான முறையில், இறுக்கமான தனித்தனி தீவுகளாகப் பிரித்து விடுவது இல்லை.

தொழிலைப் பிரிப்பது என்பது வேறு. தொழிலாளிகளைப் பிரிப்பது என்பது வேறு. சாதி அமைப்பானது தொழிலாளிகளை வெறுமனே பிரிக்கிற அமைப்பு மட்டுமல்ல. அவ்வாறு பிரிக்கப்பட்ட தொழிலாளிகளை, மேல் - கீழ் என்று ஏற்றத்தாழ்வாக - படிநிலை அமைப்பாக வகைப்படுத்தும் அமைப்பும் ஆகும். இதுபோல தொழிலாளிகளை ஏற்றத் தாழ்வாக வகைப்படுத்துகிற தொழில் பிரிவினை, வேறு எந்த நாட்டிலும் இல்லை. மூன்றாவதாக சாதி அமைப்பானது, தன் இயல்பான போக்கில் உருவானது அல்ல. அது, மனிதர்களின் இயற்கையான தன்மைகளின் அடிப்படையில் அமைந்ததும் அல்ல.

சமூக மோபாட்டுக்கும் தனிமனிதனின் மோபாட்டுக்கும் செய்யப்பட வேண்டியது என்ன? ஒருவர் தனக்கு திறமையும் ஆர்வமும் உள்ள தொழிலைத் தானே தேர்ந்தெடுத்துக் கொள்ளவும், தன் வழியில் செய்து கொள்ளவும் தக்க சூழலை உருவாக்கித் தரவேண்டும். இந்தக் கோட்பாடு, சாதி அமைப்பில் மீறப்படுகிறது. எப்படி என்றால், சாதி அமைப்பு ஒருவரது வேலையை முன் கூட்டியே நிர்ணயித்து விடுகிறது. சாதி அமைப்பில் ஒருவர் பெற்றுள்ள திறமையின் அடிப்படையில் அல்லாமல் அவரது வேலை நிச்சயிக்கப்படுகிறது.

இன்னொரு கோணத்தில் இருந்து பார்த்தால், சாதி அடிப்படையில் தொழிலை மேல் என்றும் கீழ் என்றும் பிரிப்பது நேரடியாகவே நாசகரமானது. தொழில் துறை மாறாத நிலையில் எப்போதும் இருப்பது இல்லை. அது வேகமான திடீர் மாறுதல்களுக்கு ஆளாகிறது. தொழில் துறையில் இது போன்ற மாறுதல்கள் இருந்து வருவதால், ஒவ்வொரு தனிமனிதனும் தன் வாழ்க்கைத் தொழிலை மாற்றிக் கொள்ளும் சுதந்திரம் கொண்டவனாக இருக்க வேண்டும்; மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தன்னை மாற்றி அமைத்துக் கொள்ளும் சுதந்திரம் இல்லாமல் போனால், ஒருவருக்கு தன் பிழைப்பை தேடிக்கொள்வது என்பதே முடியாமல் போகும்.

வேலையில்லா திண்டாட்டத்துக்கு சாதி அமைப்பே காரணம்

தங்கள் பரம்பரைத் தொழில் அல்லாத வேறு எந்தத் தொழிலுக்கும் ஆட்கள் ÷தவைப்படும்போது கூட - இந்துக்கள் அத்தொழிலைச் செய்வதற்கு செல்வதை சாதி அமைப்பு அனுமதிப்பது இல்லை. தன் சாதிக்கு என்று ஒதுக்கப்பட்ட தொழிலைத் தவிர வேறு புதிய தொழில்களை மேற்கொள்வதை விட, பட்டினி கிடப்பதே மேல் என்று ஓர் இந்து சும்மா இருக்கக் காரணம் என்ன? சாதி அமைப்புதான் காரணம். தொழில்களை மாற்றிக் கொள்ள சாதி அனுமதிப்பதில்லை. ஆகையால், நம் நாட்டில் நிலவுகிற வேலை இல்லா திண்டாட்டத்துக்கான ஒரு நேரடிக் காரணமாக சாதி இருக்கிறது.

தொழில் பிரிவினை என்ற முறையில் சாதி அமைப்பில் இன்னொரு பெரிய குறைபாடும் உள்ளது. சாதி அமைப்பில் ஏற்படுத்தப்பட்டு இருக்கிற தொழில் பிரிவினை, சொந்த தேர்வின் அடிப்படையில் அமைந்தது அல்ல. தனி மனித உணர்ச்சிகளுக்கோ, முன்னுரிமைக்கோ இவ்வகைப் பிரிவினையில் சிறிதும் இடம் இல்லை. இது, தலைவிதித் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. வறுமையையும் அதனால் விளையும் துன்பத்தையும்விட, ஏராளமான மக்கள் தங்களுக்கு விருப்பம் இல்லாத வாழ்க்கைத் தொழிலை மேற்கொண்டுள்ளனர் என்பதே நவீன தொழில் அமைப்பின் மிகப் பெரிய கொடுமை. சமூக மோபாட்டைக் கருத்தில் கொள்ளும் யாரும் இதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

செய்யும் தொழிலில் நாட்டம் இல்லாததற்கு என்ன காரணம்?

இதுபோன்ற தொழில்கள் எப்போதும் ஒருவனிடம் வெறுப்பையும், கெட்ட எண்ணத்தையும் தட்டிக் கழிக்கும் மனோபாவத்தையும் தூண்டிவிடும். எத்தனையோ தொழில்கள் இந்தியாவில் இந்துக்களால் இழிவானவை என்று கருதப்படுவதாலேயே, அத்தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்கள் அத்தொழில்களை வெறுக்கும்படி தூண்டுகிறது. இத்தொழில்கள் மீது இந்து மதம் அவமரியாதையையும் இழிவையும் கற்பிப்பதால், அத்தொழில்களை செய்வோர் கேவலப்படுத்தப் படுகின்றனர். இதுதான் இத்தொழில்களில் ஈடுபடுவோர் இவற்றைச் செய்யாமல் தட்டிக் கழிக்கவும், தப்பி ஓடவும் தொடர்ந்து தூண்டுகிறது.

மனிதர்களின் எண்ணமும் இதயமும் அவர்கள் செய்கின்ற வேலைமீது ஒன்றாதபோது, அத்தகைய அமைப்பில் எப்படி மோபாடு ஏற்பட முடியும்? தனிமனிதனின் இயற்கையான ஆற்றல்களையும் இயல்பான விருப்பங்களையும் சமூக விதிகளின் நிர்பந்தத்துக்கு உள்ளாக்குவதே - சாதியின் தன்மையாக இருப்பதால், பொருளாதார அமைப்பு என்ற வகையில் சாதி என்பது தீமை பயக்கக்கூடிய ஒரு நிறுவனமே.
Pin It