‘நல்ல சட்டங்களைவிட நல்ல நிர்வாகம் மிகவும் முக்கியமானது. நிர்வாகம் மோசமாக இருந்தால், நல்ல சட்டங்களும் பயனற்றதாகி விடும். இந்தியா முழுவதும் இன்றைய நிர்வாகம் பட்டியல் சாதியினர் பால் கடைப்பிடிக்கும் போக்கு -பகைமை உணர்வும், அநீதியும், வக்கிரமும் கொண்டதாகவே உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பட்டியல் சாதியினர் படும் துன்பங்களும் வேதனைகளும் கொடுமைகளும் எங்கிருந்து தோன்றுகின்றன? அரசு அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரம், ஏறத்தாழ எல்லா சந்தர்ப்பங்களிலும் பட்டியல் சாதியினரின் நலன்களுக்கு எதிராக, அவர்களைத் தங்களுக்குக் கீழாக நிலைநிறுத்தும் நோக்கத்திலிருந்துதான் தோன்றுகின்றன. எனவே, அரசுப் பணிகளில் பட்டியல் சாதியினர் இடம்பெறுவது, இப்பட்டியல் சாதியினரில் உள்ள எளிய மக்கள் நற்பயனும், நல்வாழ்வும் பெறுவதற்கு மிகவும் இன்றியமையாதது என்பதை உறுதிப்படுத்த, இதைவிட வலுவான வாதம் எதுவும் இருக்க முடியாது.’

-டாக்டர் அம்பேத்கர், 29.10.1942 அன்று கவர்னர் ஜெனரலிடம் அளித்த மனுவில்

இன்றைய மக்கள் தொகையில் ஏறக்குறைய இருபது கோடி மக்களாக இருக்கும் தலித் மக்களின் வாழ்வியல் உரிமைகளைப் பறித்த பூனா ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டு 75 ஆண்டுகள் (24.9.1932) ஆகின்றன. இத்தகையதொரு அடிமை சாசனத்தை உருவாக்கவே காந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்பதும், அதை மாமனிதர் அம்பேத்கர் தடுத்து நிறுத்தினார் என்பதும் வரலாறு. இன்று, இந்திய -அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தால் ஆட்சியே தூக்கியெறியப்படும் அளவுக்கு நாடெங்கும் நடைபெறும் விவாதங்கள் நாட்டை உலுக்குகின்றன. ஆனால், 75 ஆண்டுகளாக சொந்த நாட்டு மக்களை அடிமைகளாக வைத்திருக்கும் ஓர் ஒப்பந்தம் குறித்து, இதுபோன்ற எந்த மயிர் பிளக்கும் விவாதங்களும் நடைபெற்றதாகப் பதிவுகளே இல்லை. மக்கள் தொகையில் 5 இல் ஒரு பங்கு வகிப்போரை தீண்டத்தகாத அடிமைகளாக வைத்திருக்கும் ஒரு நாடு, ஒருபோதும் அந்நிய அடிமைத்தனத்தை எதிர்த்து வெற்றி பெற முடியாது!
‘ஆறாவது அய்ந்தாண்டுத் திட்டத்தில் பட்டியல் சாதியினருக்கு சிறப்புக்கூறு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்திற்கென 200708 ஆம் ஆண்டில் மத்திய அரசு 50,000 கோடியும், தமிழக அரசு 2,800 கோடியும் ஒதுக்கியுள்ளன. இந்தப் பணம் பட்டியல் சாதியினரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால், இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு 27 ஆண்டுகள் ஆகின்றன. இக்காலகட்டத்தில், இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட 25,000 கோடி ரூபாய் முறையாகப் பயன்படுத்தப்படவில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது’ என்று தமிழக அரசின் சமூக சீர்திருத்தத் துறை செயலாளர் கிருத்துதாசு காந்தி, மதுரையில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் குறிப்பிட்டுள்ளார் (‘தினகரன்' -18.8.07).

அரசின் திட்டங்கள், குறிப்பாக தலித் மக்களை சென்றடையாததற்கு, அரசு மற்றும் நிர்வாகத் துறையின் சாதி இந்து மனோபாவமே மிக முக்கியக் காரணம். மத்திய அரசுப் பணியிடங்களிலும், அய்.அய்.டி.களிலும் -பிற்படுத்தப்பட்ட மக்களின் பிரதிநிதித்துவம் குறித்தும், 69 சதவிகித இடஒதுக்கீடு சாதனை பற்றியும் பெருமிதம் கொள்ளும் திராவிடக் கட்சிகள், தங்களுடைய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் 19 சதவிகித இடஒதுக்கீட்டை நிரப்புவதில் தொடர்ந்து அலட்சியம் காட்டுகின்றன. கடந்த தி.மு.க. அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கையின்படியே 17,314 எஸ்.சி./எஸ்.டி. பின்னடைவுப் பணியிடங்கள் இன்றுவரை நிரப்பப்படாமல் உள்ளன. குப்பை அள்ளும் பிரச்சினையில் இருந்து டைட்டானியம் பிரச்சினை வரை, நாள்தோறும் அறிக்கைகளை அள்ளிவீசும் எதிர்க்கட்சிகளும், தோழமைக் கட்சிகளும் -தலித்துகளுக்கான 19 சதவிகித இடஒதுக்கீட்டில் மட்டும் -‘காந்தியின் குரங்கு'களாகவே காட்சியளிக்கின்றன.

தமிழ் நாட்டில் உள்ள 67 அரசு கலைக் கல்லூரிகளில் நடப்பு ஆண்டுக்கான 1000 விரிவுரையாளர் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிரப்பப்படாத 522 தலித் பின்னடைவுப் பணியிடங்கள் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. ‘புதிய தமிழகம்' நீதிமன்றத்தை நாடிய பிறகும், அரசு இதில் மவுனம் சாதிக்கிறது. இத்துறை அமைச்சர் க. பொன்முடி, 24.8.07 அன்று 2,041 விரிவுரையாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளதாகவும், அதில் எஸ்.சி./எஸ்.டி.க்குரிய பின்டைவுப் பணியிடங்களும் சேர்த்து மொத்தம் 685 பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் அறிவித்துள்ளார். இது ஒரு மோசடி. இது குறித்த எந்த அரசாணையும் வெளியிடப்படவில்லை. உண்மையில், 902 (380 + 522) இடங்கள் நிரப்பப்பட வேண்டும்.

தலித் கிறித்துவர் மற்றும் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டிற்கு மத்திய அரசைக் காரணம் காட்டும் தமிழக முதல்வர், தலித் மக்களுக்கு தன்னுடைய ஆட்சியில் நிரப்ப வேண்டிய 17,000 பின்னடைவுப் பணியிடங்களுக்கும்; அவர்களுக்கு வரவேண்டிய 25,000 கோடி ரூபாயை தர மறுப்பதற்கும் -தன்னை மட்டுமே குற்றம் சொல்லிக் கொள்ள வேண்டும். அரசியல் கூட்டணியில் தலித்துகள் பங்காளிகளாக நீடிக்க வேண்டுமெனில், நாட்டு நிர்வாகத்தில் தலித்துகளுக்குரிய நியாயமான பங்கு அளிக்கப்பட்டாக வேண்டும்.
Pin It